Tuesday, March 17, 2009

31-32. ஸ்பெய்னில் வெளியேற்றப்பட்ட யூதர்கள். யூதர்களும் துருக்கி உதுமான் அரசும்.பகுதி.31-32

31] ஸ்பெய்னில் (SPAIN) வெளியேற்றப்பட்ட யூதர்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 31

அவ்வப்போது நடுவில் கொஞ்சம் இடைவெளி இருந்தது என்றபோதும் சுமார் நூற்றைம்பது ஆண்டுகால யுத்தம் என்பது சாதாரணமல்ல. பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய (கி.பி. 1095) சிலுவைப்போர்கள், கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில்தான் (கி.பி. 1250) ஒரு முடிவுக்கு வந்தன.

ஜெருசலேத்தை மைய இலக்காக வைத்து நடத்தப்பட்ட இந்த யுத்தங்களால் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவும் பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமடைந்தது.

திறமையற்ற சுல்தான்களின் மோசமான ஆட்சி ஒரு காரணம்தான் என்றாலும் தொடர் யுத்தங்கள், தேசங்களின் பொருளாதாரத்தை எத்தனை நாசமாக்கும் என்பதை விவரிக்கவே முடியாது. இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து அரபு தேசங்கள் எப்படி மீண்டன என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

அது நவீனகாலம் அல்ல. எண்ணெயெல்லாம் கண்டறியப்பட்டிருக்கவில்லை.
மன்னராட்சி நடந்துகொண்டிருந்த காலம்தான். கஜானாவை நிரப்புவதென்றால் வரிப்பணம் ஒன்றுதான் ஒரே வழி. இந்த மாதிரி போர்க்காலங்களில் மக்களின் தலைமீது ஏகப்பட்ட வரிச்சுமை விழும். கட்டித்தான் தீரவேண்டியிருக்கும்.

வேறு வழியே இல்லை. புதிய வேலை வாய்ப்புகள் என்றெல்லாம் மக்கள் சிந்தித்துக்கூடப் பார்க்காத காலம். விவசாயப் பொருளாதாரம்தான் அடிப்படை. படித்தவர்கள் என்றால் ஆசிரியர்களாக இருப்பார்கள். படிக்காதவர்கள் விவசாயம் பார்ப்பார்கள். வேறு எந்தத் துறையிலும் அன்றைய மத்திய ஆசியா பெரிய வளர்ச்சி கண்டிருந்ததாகச் சொல்லமுடியாது.

தவிர, சிலுவைப்போர்கள் முடிந்துவிட்டதே என்று மூச்சு விட்டுக்கொண்டிருக்கவும் அப்போது அவகாசம் இல்லை. உடனே மங்கோலியப் படையெடுப்பு ஆரம்பமாகிவிட்டது. மாதக்கணக்கில் முற்றுகை, அவ்வப்போது மோதல் என்று அது ஒரு பக்கம் கலீஃபாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தது.

பாலஸ்தீன் முஸ்லிம்கள் தங்கள் சரித்திரத்திலேயே மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்த காலம் அது.

அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல், சிலுவைப்போர் வீரர்கள் போய்விட்டார்கள் என்பதுதான். மீண்டுமொரு யுத்தம் என்று ஏதும் வருமானால், அதற்கு முன்பாகக் கொஞ்சம் வளமை சேர்த்து வைத்துவிட மிகவும் விரும்பினார்கள். கொஞ்ச நஞ்ச காலமா?

கி.பி. 1099 தொடங்கி 1187 வரை சிலுவைப்போர் வீரர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது ஜெருசலேம்.

சலாவுதீன் என்றொரு சுல்தான் மட்டும் துணிவுடன் அவர்களை எதிர்க்க முன்வராவிட்டால் இந்தச் சுதந்திரம் சாத்தியமில்லை. நூறாண்டுகால அடிமை வாழ்விலிருந்து மீண்டெழக் கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. சரித்திரத்தின் அத்தனை பக்கங்களிலும் விடாப்பிடியாக அவர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த யூதர்கள் அப்போது எங்கே போய்விட்டார்கள்?

ரொம்ப சரி. ஜெருசலேத்தை கிறிஸ்துவர்கள் கைப்பற்றிய நாளாகவே மாற்று மதத்தவர்களுக்கு அங்கே ஆபத்துதான். மாற்று மதத்தவர் என்றால் யூதர்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களும்கூடத்தானே?

கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தார்கள். குப்பையை அள்ளிப் போடுவதுபோலப் பிணங்களைக் குவித்து மொத்தமாக எரித்தார்கள். கொடுமைதான். நரகம்தான். தாங்கமுடியாத அவலம்தான். ஆனால் ஒருத்தர் என்றால் ஒருத்தர் கூடவா மிச்சமில்லை? எங்கேதான் போய்விட்டார்கள் இந்த யூதர்கள்?

மிக, மிக முக்கியமான கேள்வி இது. நம்புவது மிகவும் சிரமம் என்றாலும் சரித்திரம் சுட்டிக்காட்டும் மிகப்பெரிய உண்மை இது.

சிலுவைப்போர் வீரர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பாலஸ்தீனிலிருந்து அத்தனை யூதர்களும் இடம் பெயர்ந்து போய்விட்டார்கள்!

அப்படித் தப்பிப்போன யூதர்களில் சுமார் ஐயாயிரம் பேரை கிறிஸ்துவர்கள் பல்வேறு நாடுகளில் வெட்டிக்கொன்றது உண்மையே என்றாலும், மிச்சமுள்ள யூதர்கள் ஒளிந்து வாழ்ந்து உயிர் பிழைத்துவிட்டதும் உண்மை.

கட்டக்கடைசியாக ஜெருசலேத்திலிருந்து தோல்வியுடன் திரும்பிய சிலுவைப்படையினர், வழியில் பெய்ரூத்தில் பதுங்கியிருந்த முப்பத்தைந்து யூதக்குடும்பங்களை மொத்தமாகக் கொன்று வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

வேறு சில நூறு யூதர்களை அடிமைகளாக அவர்கள் ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் சில சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

யூதர்களின் இந்த அழிவு, தலைமறைவு, நாடோடி வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதுபவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் தொடுவதில்லை.

நெருக்கடி மிக்க அந்த நூற்றைம்பது ஆண்டு காலத்தில் ஏன் அவர்கள் பாலஸ்தீனின் விடுதலைக்காக அரேபியர்களுடன் இணைந்து போரிடவில்லை என்பதுதான் அது!

விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சிறு கைகலப்புச் சம்பவங்களின்போது, தற்காப்புக்காக யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து கிறிஸ்துவர்களைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஹெய்ஃபா (பிணீவீயீணீ) என்ற இடத்தில் நடந்த ஒரு சண்டையில் சில நூறு யூதர்கள், முஸ்லிம்களுடன் சேர்ந்துகொண்டு கிறிஸ்துவர்களை எதிர்த்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆனால், மாபெரும் யுத்தங்கள் நடந்த காலங்களிலெல்லாம் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு யூதர்களின் மீது முதல் முதலாக வெறுப்புத் தோன்றியதன் ஆரம்பக் காரணம் இதுதான்.

உமர் தொடங்கி, சலாவுதீன் வரையிலான இஸ்லாமிய ஆட்சியாளர்களில் பெரும்பாலானோர் மதத்துவேஷம் இல்லாதவர்களாகவே அப்போது இருந்திருக்கிறார்கள்.

யூதர்கள் முஸ்லிம்கள் இரு தரப்பினருமே ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள் என்கிற புராண நம்பிக்கையின் அடிப்படையிலும், இரு தரப்பினருமே உருவமற்ற ஒரே இறைவனை வணங்குபவர்கள் என்கிற ஆன்மிகக் காரணத்தின் அடிப்படையிலும் ஒற்றுமையாக வாழவேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு பெரும் நெருக்கடி என்று வரும்போது எதிர்த்து நின்று சமாளிக்கத் தோள் கொடுக்காமல், சொந்த சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்பொருட்டுக் காணாமல் போய்விட்ட யூதர்களை, அங்கேதான் அரேபியர்களுக்குப் பிடிக்காமல் போனது.

இது மிக முக்கியமானதொரு தருணம். சிலுவைப்போர் காலத்தில் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து ஒரு பக்கத்தில் நின்றிருப்பார்களேயானால் பின்னால் மூண்ட பெரும்பகையின் வீரியம் கணிசமாகக் குறைந்திருக்கக் கூடும். ஒரு வேளை அந்த நெருக்கடி நேர ஒற்றுமை நிரந்தர ஒற்றுமையாகக்கூட மலர்ந்திருக்க முடியும்.

(ஸ்பெயினில் யூதர்கள் அமைதியாக வாழ்ந்த காலம் என்பது முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி புரிந்த காலம்தான் என்று அத்தனை யூத சரித்திர ஆய்வாளர்களும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.)

ஆனால் இது எதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சுருக்கமாகச் சொல்வதென்றால் நெருக்கடி நேரத்தில் யூதர்கள் ‘காணாமல் போய்விட்டார்கள்’. கொஞ்சம் விரித்துச் சொல்லுவதென்றால், குறைவான மக்கள்தொகை கொண்ட சமூகம் மேலும் சிறுத்துவிடாதிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கை அது.

கி.பி. 1210-ல் யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிடும் என்கிற சூழ்நிலை உருவானபோதுதான் முதல் முதலில் சுமார் முந்நூறு யூதர்கள் பாலஸ்தீனுக்குத் திரும்பி வருகிறார்கள்.

அவர்களும் கூட, குடும்பத்துடன் திரும்பி வந்தவர்கள் அல்லர். மாறாக, மத குருக்கள், சட்ட நிபுணர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் அடங்கிய ஒரு ஆய்வுக் குழுவாகவே அவர்கள் பாலஸ்தீனுக்கு வந்தார்கள்.

யூதர்கள் அங்கே விட்டுச்சென்ற நிலங்களைத் திரும்பப் பெற்று, மீண்டும் யூதர்களை அங்கே குடியமர்த்த முடியுமா, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை ஆராய்வதற்காக அவர்கள் வந்தார்கள்.

ஏனெனில், அன்றைய சூழ்நிலையில் ஐரோப்பாவில் கிறிஸ்துவ ஆட்சியாளர்களின் கீழே யூதர்கள் வாழ்வது சாதாரணமான காரியமாக இல்லை.

காரணமே இல்லாமல் யூதர்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள்.

ஒரு நாடு, இரண்டு நாடுகள் என்றில்லை. எங்கெல்லாம் கிறிஸ்துவம் தழைத்ததோ, அங்கெல்லாம் யூதர்கள் அவதிப்படத் தொடங்கினார்கள். அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் எங்குமே கிடைக்கவில்லை. சுய தொழில் செய்யவும் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன.

ஒரு பெட்டிக்கடை வைப்பது கூட மாபெரும் பிரச்னையாக இருந்தது. கிறிஸ்துவர்கள் வாழும் வீதிகளில் யூதர்கள் வாடகை கொடுத்துக்கூடத் தங்கமுடியாது. கிறிஸ்துவ உணவகங்களில் அவர்கள் உணவருந்த முடியாது. (தனியாக ஓட்டல் நடத்தலாமா என்றால் அதுவும் கூடாது!)

ஐரோப்பாவெங்கும் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவும் யூதர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகவும் நடத்தப்பட்டதாக பொதுவாகச் சொல்லுவார்கள்.

உண்மையில் யூதர்களை அங்கே கிறிஸ்துவர்கள், ‘மக்களாகவே’ நடத்தவில்லை என்பதுதான் சரி.

எத்தனை நூற்றாண்டுகள் கழிந்திருந்தாலும் ஆதிகாலத்து வன்மமும் விரோதமும் அன்றைக்கு அடிக்கடி நினைவுகூரப்பட்டன. ஒரு இயேசுநாதரை யூதர்கள் கொன்றதற்காக ஒட்டுமொத்த யூத இனமுமே அழிவதுதான் சரி என்பதுபோன்ற கருத்தாக்கம் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது.

ஆனால், இதுமட்டுமே காரணம் அல்ல. தமக்குக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்புகளைக்கூட யூதர்கள் அன்று மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒரு யூதருக்கு, ஒரு சிறு கடை வைத்துப் பிழைக்க வாய்ப்புக் கிடைத்து விட்டதென்றால் நிச்சயம் அவருக்குத் தெரிந்த இன்னொரு பத்திருபது பேருக்காவது வேலை வாய்ப்பு உறுதியாகிவிடும்.

கவனத்துக்கு எட்டாமலேயே அடுத்த சில காலத்துக்குள் அந்தப் பிராந்தியத்தில் இருபது யூதக்கடைகள் எப்படியோ தோன்றிவிடும்.

ஒரே ஒரு யூதருக்கு ஏதாவது பெரிய உத்தியோகம் கிடைத்துவிட்டால் போதும். தமது திறமையால், வேலையைத் தக்கவைத்துக்கொள்வதோடு கூட, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அலுவலகத்திலேயே எப்படியாவது இன்னும் சில யூதர்களை அவர் ஏதாவதொரு பணியில் அமர்த்திவிடுவார்.

ஒருவர், பத்துப்பேர், நூறுபேர் என்றில்லை. ஒட்டுமொத்த யூத குலத்தின் இயல்பு இது.

திறமையிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் நிகரற்றவர்களாக இருந்தார்கள்.

அதைக்கொண்டு தமது சொந்த சமூகத்தினரை முன்னேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பொருளாதார ரீதியில் கொஞ்சம் மேம்பட்ட தரத்தில் இருந்த அத்தனை யூதர்களும் அந்தந்த தேசத்து ஆட்சியாளர்கள் மட்டத்தில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு தமது சமூகத்தினரின் நலனுக்காக ரகசியமாக நிறைய காரியங்களைச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்காகக் கணக்கு வழக்கில்லாமல் கையூட்டுத் தரவும் அவர்கள் தயங்கியதில்லை.

வேண்டியதெல்லாம் யூதர்களுக்குத் தனியாக ஒரு குடியிருப்புப் பகுதி. உழைத்துப் பிழைத்துக்கொள்ள அனுமதி. தொல்லைகள் ஏதுமிருக்காது என்கிற உத்தரவாதம். அவ்வளவுதான்.

தனிக் குடியிருப்பு என்பது தவிர, மற்றவை எல்லாமே நியாயமான கோரிக்கைகள்தாம். ஆனாலும் அதற்கே அவர்கள் கையூட்டுத் தரவேண்டிய நிலைமை அன்றைக்கு இருந்தது. வாங்குவதற்கும் ஆட்கள் இருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இது பெரும்பான்மை கிறிஸ்துவர்களுக்கு எப்போதும் பிரச்னையாக இருந்தது. இதனாலேயே ஒரு யூதரையும் பிழைக்கவிடக் கூடாது என்று ஒட்டுமொத்த ஐரோப்பாவும் கருதத் தொடங்கியது.

யதார்த்த காரணங்களுக்குப் புராதன காரணங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, யூதர்களுக்கு எதிரான வன்முறையை அவர்கள் கட்டவிழ்த்துவிடத் தொடங்கினார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் ஐரோப்பாவில் வாழ்வது மிகவும் சிரமம் என்கிற நிலைமை முதல் முதலில் உருவானது. எந்த ஊரில், எந்த நாளில், எந்தக் கணத்தில் முதல் கொலை விழும் என்கிற கேள்வி தினமும் அங்கே இருந்தது.

கி.பி. 1492-ல் முதல் முதலில் மிகப்பெரிய அளவில் யூதர்களை வெளியேற்றத் தொடங்கியது ஸ்பெயின். மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் யூதர்கள் அப்போது அங்கே வசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அத்தனை பேரையும் நிற்கவைத்துப் பட்டியல் தயாரித்து, ஒருவர் மிச்சமில்லாமல் தேசத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்று அப்போது ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த மன்னர் ஃபெர்டினாண்ட் ( உத்தரவிட்டார்.

அதிகக் கால அவகாசம் இல்லை. உயிர்பிழைக்க வேண்டுமென்றால் ஊரைக் காலி செய்வது தவிர வேறு வழியில்லை.

காலம் காலமாக உழைத்துச் சேர்த்த சொத்து சுகங்கள் அத்தனையையும் அப்படியே விட்டுவிட்டு யூதர்கள் ஸ்பெயினை விட்டுப் புறப்பட்டார்கள்.

சுமார் தொண்ணூறாயிரம் பேர் அப்போது துருக்கி ஒட்டாமான் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். சுமார் இருபத்தைந்தாயிரம் பேர் ஹாலந்துக்குப் போனார்கள்.

இருபதாயிரம் பேர் மொராக்கோவுக்கு. பத்தாயிரம் பேர் பிரான்ஸுக்கும் இன்னொரு பத்தாயிரம் பேர் இத்தாலிக்கும். ஒரு ஐயாயிரம் பேர் மட்டும் இன்னொரு ஐரோப்பிய தேசத்துக்குப் போவது எப்படியானாலும், ஆபத்துதான் என்று தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து அட்லாண்டிக் கடல் தாண்டி வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் போய்ச் சேர்ந்தார்கள்.

இவர்களுள் மத்திய ஆசியாவுக்கு முஸ்லிம் தேசங்களுக்கு வந்தவர்கள்தான் அதிகம். அங்கேதான் பாதுகாப்பு அதிகம் என்பது அவர்களது நம்பிக்கை!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 மார்ச், 2005

32] யூதர்களும் துருக்கி உதுமான் அரசும்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 32

ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து, போர்ச்சுகலும் யூதர்களை விரட்டியடிக்க முடிவு செய்தது.

அதாவது, கி.பி. 1497-ம் ஆண்டு. இதெல்லாம் பின்னால் மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் செய்யப்போகிற மாபெரும் விரட்டல்கள், மிகப்பெரிய இனப்படுகொலைகளுக்கு ஒரு சிறு முன்னோட்டம் மாதிரி நடைபெற்ற சம்பவங்கள். யூத வெறுப்பு என்பது, தொட்டுத்தொட்டு காட்டுத்தீ மாதிரி தேச எல்லைகளைக் கடந்து ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்த சமயம்.

எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வுடனேயே யூதர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அந்தச் சமயத்திலும் அவர்கள் மொத்தமாக, குழுக்கள் குழுக்களாகத்தான் இருந்தார்கள். அதாவது, எந்த ஒரு இடத்திலும் ஒரு தனி யூதக்குடும்பத்தைப் பார்த்துவிடமுடியாது!

மாறாக, ஒரு யூதக்குடும்பம் உங்கள் கண்ணில் தென்படும் இடத்தில் குறைந்தது ஐம்பது குடும்பங்கள் வசிக்கின்றன என்பதே அர்த்தம்.

கஷ்டங்களை அவர்கள் சேர்ந்தேதான் அனுபவித்தார்கள். திட்டங்கள் தீட்டப்படும்போதும் ஒருமித்த முடிவாகத்தான் எதையுமே செய்தார்கள். ஒரு தவறான முடிவை எடுக்க நேர்ந்தால்கூட தனியாக எடுக்க விரும்பாத இனம் அது.

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலிலிருந்து புறப்பட்ட யூதர்களில் பெரும்பாலானோரை அரபு தேசங்களுக்கே அனுப்புவது என்று யூத குருமார்களின் சபைதான் முதலில் தீர்மானித்தது.

அந்தத் தேசங்களில் வாழ்ந்து வந்த மொத்த யூதர்களையும் கணக்கிட்டுப் பிரித்து, வேறு வேறு தேசங்களுக்கு அனுப்பினாலும், ‘மிக முக்கியமான நபர்கள்’ என்று அடையாளம் காணப்பட்ட அத்தனை பேரையும் அரபு தேசங்களுக்கே அனுப்பினார்கள்!

மிக முக்கியமான நபர்கள் என்றால், யூத குலத்துக்கு, அந்தக் காலகட்டத்தில் மிக முக்கியத் தேவை என்று கருதப்பட்ட நபர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், சட்ட நிபுணர்கள், ராஜதந்திரிகள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இப்படி. ஒரு நெருக்கடி நேர்ந்திருப்பதால் வேறு வேறு தேசங்களுக்குப் போக நேரிடுகிறது.

போகிற இடங்களில் எல்லாம் பிரச்னையில்லாமல் வாழ முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. குறைந்தபட்சம், இனக் காவலர்கள் என்று கருதப்படுகிறவர்களாவது ஓரளவு பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பதற்காகவே அவர்களை அரபு தேசங்களுக்கு அனுப்பினார்கள் என்று பெரும்பாலான யூத சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மிகவும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

அரேபியர்களுடன் தான் யூதர்களுக்குப் பிரச்னை. அதுவும் ஜெருசலேமை முன்வைத்த பிரச்னை. நடுவில் கிறிஸ்துவர்கள் கொஞ்சகாலம் அந்த நகரை உரிமை கொண்டாடிவிட்டுத் திரும்பிப் போயிருக்கிறார்கள்.

மீண்டும் ஜெருசலேம் யூதர்களின் நகரம்தான் என்கிற கோரிக்கை அல்லது கோஷம் எழத்தான் போகிறது. இது யூதர்களுக்கு மட்டுமல்லாமல், அரேபிய முஸ்லிம்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்த விஷயம்.

ஆனபோதிலும் அவர்கள் மத்தியில் போயிருப்பது, கிறிஸ்துவ தேசங்களுக்குப் போவதைக் காட்டிலும் நல்லது என்று யூத குருமார்கள் கருதினார்கள்!

கான்ஸ்டாண்டிநோபிள் என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்தான் அன்றைக்கும் ஒட்டோமான் பேரரசின் தலைநகரமாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் உலகின் மிக முக்கிய நகரங்களுள் ஒன்றாகக் கருதப்பட்ட நகரம் அது. இன்றைய பாரீஸ் நகரம் போலக் கலைகளின் தாயகம். உலகக் கவிஞர்கள், ஓவியர்கள், மாபெரும் சிந்தனையாளர்கள் எல்லாரும் ஏதாவது மாநாடு கூட்டுவதென்றால் கான்ஸ்டாண்டிநோபிளில் நடத்தலாம் என்றுதான் முதலில் சொல்லுவார்களாம்.

அந்தளவுக்கு ஒட்டோமான் சுல்தான்கள், கலையை வளர்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.கலைகள் வளரும் இடத்தில் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துவத்துக்கும்கூட உரிய இட ஒதுக்கீடு இருந்தே தீரும். அந்த வகையில், ஐரோப்பா துரத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு கான்ஸ்டாண்டிநோபிள் இருகரம் நீட்டி வரவேற்பும் அடைக்கலமும் தந்துகொண்டிருந்தது அப்போது.

கான்ஸ்டாண்டிநோபிளில் மட்டுமல்ல; அல்ஜியர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா, திமஷ்க் என்று அழைக்கப்பட்ட டெமஸ்கஸ், ஸ்மிர்னா, ஸலோனிகா என்று ஒட்டோமான் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு நகரங்களில் யூதர்களுக்கான தனிக் குடியிருப்புப் பகுதிகள் உருவாயின.

கொஞ்சம் இழுபறியாக இருந்த பாலஸ்தீன், 1512-ம் வருடம் முழுவதுமாக துருக்கிப் பேரரசரின் ஆளுகையின் கீழ் வந்துவிட்டது.

இதில் அதிகம் சந்தோஷப்பட்டது, முஸ்லிம்களைக் காட்டிலும் யூதர்களே ஆவார்கள்.

பாலஸ்தீனிலும் யூதக்குடியிருப்புகளை மீண்டும் உருவாக்கித்தர அவர்கள் சுல்தானிடம் கோரிக்கை வைத்தார்கள். முன்னதாக, ஏற்கெனவே சுமார் முந்நூறு பேர் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்று சிலுவைப்போர்கள் முடிந்த சூட்டிலேயே பாலஸ்தீனுக்கு வந்து இழந்த இடங்களை மீண்டும் பெறுவது தொடர்பான ஏற்பாடுகளை ஓரளவு செய்து முடித்துவிட்டுத் தகவல் தந்திருந்ததால், அவர்கள் நம்பிக்கையுடன் சுல்தானிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்கள்.

அப்போது துருக்கியின் சுல்தானாக இருந்தவர் பெயர், பயஸித். (Bayazid 2). மனமுவந்து குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யூதர்களேயானாலும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் தம் கடமை என்று நினைத்தார் அவர். ஆகவே, யூதர்கள் பாலஸ்தீனுக்குச் செல்வதில் தமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.

எத்தனை நூற்றாண்டுகள்! பரவசத்தில் துள்ளிக்குதித்தார்கள் யூதர்கள்.

மீண்டும் பாலஸ்தீன். மீண்டும் ஜெருசலேம்! (ஆனால் பெரும்பாலான யூதர்கள், பாலஸ்தீனில் கலிலீ (Galilee) என்கிற இடத்தில்தான் - இன்று இது சிரியா-குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக்கொள்ள முடிந்தது என்று தெரிகிறது.)

சிலுவைப்போர்கள் ஆரம்பித்த சூட்டில் தப்பிப்பிழைக்கப் புறப்பட்டுப் போன யூதர்கள், மீண்டும் தம் பிறந்த மண்ணை தரிசிக்கும் ஆவலில் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்து குழுக்களாக மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.

நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் என்பது, பொதுவாகவே மிகப்பெரிய காலகட்டம். அத்தனை இடைவெளிக்குப் பிறகு ஒரு தலைமுறை தனது பூர்வீக இடத்தை நோக்கி வரும்போது நியாயமாக, ஒரு புதிய இடம், புனித இடம், நமது முன்னோர்கள் இருந்த இடம் என்கிற உணர்ச்சி வேண்டுமானால் இருக்கலாமே தவிர, தாமே வாழ்ந்த மண்ணுக்குத் திரும்பி வந்தது போல உணர முடியுமா!

உலகில் வேறெந்த சமூகமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படி உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால் யூதர்கள் அப்படித்தான் இருந்தார்கள்! யூதர்களின் சமூகத்தில் புதைந்திருக்கும் ஏராளமான ரகசிய ஆச்சர்யங்களுள் ஒன்று அது!

எத்தனை தலைமுறைகள் மறைந்தாலும், எந்த ஆட்சிகள் மாறினாலும், என்னதான் தாங்க முடியாத சூழல் தகிப்புகளுக்கு உட்பட நேர்ந்தாலும் ஜெருசலேம் என்று சொல்லிவிட்டால் போதும். எந்த நாட்டு யூதரும் அந்த திசை நோக்கி வணங்குவார். அவர்களது ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளையணு மட்டுமல்ல; ஜெருசலேம் அணுவும் பிறக்கும்போதே சேர்ந்து உதித்துவிடும் போலிருக்கிறது.

பெற்றோர் முதல் மத குரு வரை எத்தனையோ பேர் சொல்லிச்சொல்லி வளர்த்துக்கொண்ட ஊர்ப்பாசம் ஓரளவு என்றால், ஜெருசலேத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட யுத்தங்களின் சத்தம் எக்காலத்திலும் அவர்களின் மனக்காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். அது தங்கள் மண், தங்கள் மண் என்று தினசரி ஒரு தியானம் போலச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.

சரித்திரத்தில், எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர்களாகவே கூட விட்டு ஓடியிருக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் அந்த நகரை விட்டு நிரந்தரமாகப் பிரிவது என்று சிந்தித்துப் பார்த்ததே கிடையாது.

அவர்கள், இறைவனின் விருப்பத்துக்குரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜெருசலேம் நகரம், இறைவனும் இறைத்தூதர்களும் குடிகொண்ட பூமி. இந்த எண்ணம்தான். இது ஒன்றுதான். இதைத்தவிர வேறு எதுவுமே கிடையாது!

1512-ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கி, யூதர்கள் பாலஸ்தீனுக்கு வரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு யூதக்குடும்பமும் சிறிய அளவில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டன. அல்லது சிறு பண்ணைகளை நிறுவி ஆடு, மாடுகள் வளர்க்கத் தொடங்கினார்கள்.

கொஞ்சம் வசதி மிக்கவர்கள் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டார்கள். இந்த சுய தொழில்கள் பரவலாக பாலஸ்தீனில் வாழவந்த அத்தனை யூதர்களாலும் மேற்கொள்ளப்பட்டவை. முதல் சில ஆண்டுகளில் ஏதோ செய்து பிழைக்கிறார்கள் என்பதற்கு மேல் யாருக்கும் அதைப்பற்றிப் பெரிதாக சிந்திக்கத் தோன்றவில்லை.

ஆனால் நான்கைந்து வருடங்கள் கழிந்ததும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிலும் காய்கறி, எண்ணெய் வித்துக்கள், பால், பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்ற பொருள்களின் முழு விற்பனையாளர்கள் யூதர்களாகவே இருந்தார்கள்!

அரேபியர்களோ, கிறிஸ்துவர்களோ இந்த வியாபாரங்களில் மருந்துக்குக்கூட இல்லை!

யூதர்களை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். வாழ்வின் மீது அவர்களுக்கு உள்ள தீவிரமா, தமது இருப்பை நியாயப்படுத்தத்தான் இப்படிக் கடுமையாக உழைக்கிறார்களா, அல்லது தமது இருப்பை உறுதிப் படுத்திக்கொள்வதற்காகத் தான் இப்படி எடுக்கும் அத்தனை பணிகளிலும் ஏகபோக அதிபதிகளாவதற்குப் பாடுபடுகிறார்களா? எது அவர்களை இத்தனை தீவிரமாகச் செயல்பட வைக்கிறது என்பதற்கு இன்றுவரை விடை இல்லை.

ஆனால் ஒன்று உறுதி. ஒரு யூதர் ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறார் என்றால், அதில் மற்றவர்களைக் காட்டிலும் அவருக்குத்தான் வெற்றியின் சாத்தியங்கள் அதிகம் தென்படும். ஏதாவது செய்து தன்வசப்படுத்திக்கொள்வது என்கிற வழக்கம், யூதர்களின் தனி அடையாளமாகக் காணப்பட்டு, காலப்போக்கில், யூத மதத்தின் இயல்பாகவே அது சித்திரிக்கப்படத் தொடங்கிவிட்டது!

உண்மையில் மதத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது, அந்த இனத்தவர்களின் இயல்பு. அப்படியே காலம் காலமாகப் பழகிப் போய்விட்டார்கள்.

பெரும்பாலான யூதக்குடும்பங்கள் சிரியாவில்தான் குடிபெயர முடிந்தது என்றாலும் ஓரளவு யூதர்கள் இன்னும் கீழே இறங்கி ஜெருசலேம் வரையிலும் வந்து வாழவே செய்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஜெருசலேத்துக்குக் குடிவந்த யூதர்கள், நான்கு யூத தேவாலயங்களையும் (Synagogues) புதிதாக அங்கே கட்டினார்கள். (மிகச் சமீபகாலம் வரை இந்தப் பதினாறாம் நூற்றாண்டு யூத ஆலயங்கள் இருந்தன.

1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன் மண்ணில் உருவானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போது இந்த யூத தேவாலயங்கள் முஸ்லிம் போராளிகளால் இடிக்கப்பட்டன. இந்த விவரங்கள் பின்னால் வரும்.)

இழந்த செல்வம், செல்வாக்கு, நிலங்கள் போன்றவற்றைத் தங்கள் சொந்த மண்ணில் மீண்டும் பெறுவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஒட்டோமான் அரசு எந்தத் தடையும் செய்யவில்லை.

யூத சரித்திரத்தில், அவர்கள் கவலையின்றித் தூங்கிய காலங்களில் இதுவும் ஒன்று!

இந்தக் காலகட்டத்தில்தான் யூதர்கள் தமது புராதன புராணக் கதைகளை, தொன்மையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பேரிலக்கியங்களை, மத நூல்களை மீட்டெடுக்கும் முயற்சியையும் ஆரம்பித்தார்கள்.

அது ஒரு மிகப்பெரிய கதை. யூதர்களின் புனித மதப்பிரதிகளான தோரா (Tora), தால்மூத் (Talmud) உள்ளிட்ட சில அதிமுக்கியமான விஷயங்கள் அனைத்தும் புராதன ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டவை. அதாவது சுமார் நாலாயிரம் வருடப் புராதன மொழி. சரித்திரம் முழுவதும் உயிர் வாழ்வதற்காகவும், பிழைப்பு நடத்துவதற்காகவும் உலகின் பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயர்ந்து தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து இறந்த யூதர்கள், தமது ஹீப்ரு மொழியைக் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தார்கள். எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ, அந்தந்த தேசத்தின் மொழியே யூதர்களின் மொழியாக இருந்தது.

ஆனால் ஹீப்ரு முழுவதுமாக அழிந்துபோய்விட்டது என்று சொல்வதற்கில்லை. மிகச்சில ஆசார யூதர்கள் விடாமல் அம்மொழியைப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள்தான். ஆனாலும் எண்ணிக்கையில் அத்தகையவர்கள் மிகவும் குறைவு.

மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவந்த ஹீப்ரு மொழி, தன் பழைய முகத்தை இழந்து, அந்தந்தப் பிராந்திய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளாகி, வேறு வடிவமெடுத்திருந்தது அப்போது.

இதனால், அந்தத் தலைமுறை யூதர்களுக்குத் தம் புராதன மத நூல்களை, புராண இதிகாசங்களைப் படித்து அறிவது இயலாத காரியமாக இருந்தது. ஆனால், அவர்கள் தம் தொன்மங்களைத் தெரிந்துகொண்டே தீரவேண்டும் என்று யூத மதகுருக்கள் மிகத்தீவிரமாக எண்ணினார்கள்.

அதற்கான முயற்சிகளை முதலில் விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னால் நிகழவிருக்கும் யூதகுலத்தின் மாபெரும் எழுச்சிக்கு அந்த மொழிப்புரட்சிதான் முதல் வித்தாக அமையப்போகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 மார்ச், 2005
*************************************************

தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம்.

அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: