Tuesday, March 17, 2009

37-38.ரஷ்யாவில் கொல்லப்பட்ட யூதர்கள்.ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு.பகுதி.37-38.

37] ரஷ்யாவில் கொல்லப்பட்ட யூதர்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 37

ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னர் கேதரின் காலத்தில் யூதர்கள் அங்கே இடம் பெயர்ந்தும் தேசமெங்கும் பரவியும் வாழ முடிந்ததென்றாலும் அது நீடித்த சௌகரியமாக அவர்களுக்கு அமையவில்லை.

மன்னர் எதிர்பார்த்தபடி யூதர்களின் படையைக் கொண்டு துருக்கி சுல்தானை வெல்ல முடியாதது மட்டுமல்ல இதன் காரணம். அரசியல் காரணங்களைக் கருத்தில் எடுக்காத சாதாரணப் பொதுமக்களுக்கு யூதர்களைப் பிடிக்காமல் போய்விட்டது.

யூதர்கள் என்றால் கிறிஸ்துவத்தின் முதல் எதிரிகள் என்கிற அடிப்படைக் காரணம்தான் இங்கும் பிரதானம் என்றாலும், அதற்கு மேலும் சில காரணங்கள் இருந்தன.

ரஷ்யாவின் மண்ணின் மைந்தர்களான கிறிஸ்துவர்களை, அங்கு குடியேறிய யூதர்கள் மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அப்போது மிக பலமாகக் கிளம்பியது.

உண்மையில் நம்பமுடியாத குற்றச்சாட்டு இது. யூத மதத்தில், மத மாற்றம் என்பது அறவே கிடையாது. சரித்திரத்தின் எந்தப் பக்கத்திலும் அவர்கள் யாரையும் மதம் மாற்ற முயற்சி செய்ததாகத் தகவல் இல்லை. ஆனால், ரஷ்யக் கிறிஸ்துவர்கள் இப்படியொரு குற்றச்சாட்டைத்தான் பிரதானமாக முன்வைத்தார்கள்.

இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று யூதர்கள் தரப்பில் தொடர்ந்து போராடிப் பார்த்தார்கள். மன்னர் கேட்டாலும் மக்கள் விடுவதாக இல்லை. வேறு வேறு வகைகளில் யூதர்கள் அங்கே வாழ்வதற்கு நெருக்கடி தர ஆரம்பித்தார்கள்.

ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்தபோது (கி.பி. 1795-ல் இது நடந்தது. ரஷ்யாவுக்கு எதிராக போலந்து நாட்டு மக்கள் தொடர்ந்து புரட்சி செய்து துண்டுதுண்டாகப் பிரிந்துகொண்டிருந்தார்கள்.

இந்தக் குறிப்பிட்ட வருடம் நடந்த பிரிவினையின்போது மொத்தமாக போலந்து துண்டானது. துண்டாகும்போதே லித்துவேனியாவையும் சேர்த்துக்கொண்டு பிரிந்தது. இந்தக் கோபத்தில் ரஷ்யா தனது வரைபடங்களிலிருந்து போலந்தை ஒரேயடியாகத் தூக்கிவிட்டது!)

அங்கெல்லாம் பரவி வசித்துக்கொண்டிருந்த யூதர்கள், பிரிவினையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிறைய நிலங்களை வளைத்துப் போட்டார்கள்.

குறிப்பாக போலந்து ரஷ்ய எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படாத இடங்களிலெல்லாம் அவர்கள் மைல் கணக்கில் நிலங்களை வளைத்திருந்தார்கள்.

இது ரஷ்ய விவசாயிகளுக்கு மிகவும் கோபமூட்டியது. அவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காரணம், அத்தனை ரஷ்ய அதிகாரிகளுமே யூதர்களிடம் லஞ்சம் வாங்கியிருந்ததுதான்!

தேசம் உடையும் சோகத்தைக் காட்டிலும், இந்த ஊழல் நாற்றமும் அதற்கு வித்திட்ட யூதர்களின் குயுக்தியும் ரஷ்யர்களை மிகவும் பாதித்தது. ஒட்டுமொத்த கிறிஸ்துவ ரஷ்யாவும் திரண்டு எழுந்து யூதர்களுக்கு எதிரான கலகங்களைத் தொடங்கி வைத்தது.

இன்னும் சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால், சகிப்புத்தன்மைக்குப் பேர் போன ரஷ்யர்கள், பின்னாளில் ஏன் அத்தனை உக்கிரமாக யூதர்களை ஓட ஓட விரட்டினார்கள் என்பதற்கு வேறொரு காரணமும் கிடைக்கிறது.

ஜார் மன்னர்கள் ஆண்டபோதும் சரி, பின்னால் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டு கம்யூனிசம் வந்தபோதும் சரி, அதற்குப் பின்னால் சோவியத் யூனியன் என்கிற இரும்புக்கோட்டையே உடைந்து சிதறி, பல துண்டு தேசங்களானபோதும் சரி, ரஷ்யர்களின் தேசப்பற்று கேள்விக்கு அப்பாற்பட்டது.

இன அடையாளங்களால் பிரிந்திருந்தாலும் தாங்கள் ரஷ்யர்கள் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டு. ஒவ்வொரு ரஷ்யரும் தமது தேசத்துக்குத் தனிப்பட்ட முறையில் கடமைப்பட்டிருப்பதாக எப்போதும் உணர்வார்.

ஆனால், யூதர்களால் அவர்கள் ரஷ்யாவிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும் அப்படியொரு தேசிய அடையாளத்தை விரும்பி ஏற்க முடியவில்லை.

நீங்கள் யார்?’ என்று எந்த ரஷ்யரிடம் கேட்டாலும் ‘நான் ஒரு ரஷ்யன்’ என்றுதான் சொல்லுவார். அதே ரஷ்யாவில் வசிக்கும் யூதரிடம் ‘நீங்கள் யார்’ என்று கேட்டால் ‘நான் ஒரு யூதன்’ என்றுதான் சொல்லுவார்!

ரஷ்யாவின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த ஒரே மொழி, ஒரே மதம் என்கிற விஷயத்துடன் யூதர்களால் எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியவில்லை.

வாழ்க்கைப் பிரச்னைக்காக அவர்கள் ரஷ்ய மொழி பேசினார்களே தவிர, அதைத் தங்கள் மொழியாக ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

வாழப்போன கிறிஸ்துவ ரஷ்யாவில் ‘உங்களை விட நாங்கள்தான் மதத்தால் உயர்ந்தவர்கள்’ என்கிற தம்பட்டத்தையும் நிறுத்திக்கொள்ளவில்லை.

இது பெரும்பான்மை கிறிஸ்துவர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. தேசிய உணர்வே இல்லாத ஒரு கூட்டத்தை எதற்காகத் தாங்கள் வாழவைக்க வேண்டும் என்கிற கேள்வி அவர்களிடம் இருந்தது.

இன்னொரு காரணமும் இதற்கு உண்டு. அப்போது ரஷ்யா, தீவிர நில உடைமை தேசம். ஜமீந்தார்கள் அங்கே அதிகம். எல்லா ஜமீந்தார்களும் கிராமங்களில் வசித்துக்கொண்டு ஏகபோக விவசாயம் செய்து ஏராளமாகச் சம்பாதித்து, முறைப்படி வரியும் லஞ்சமும் செலுத்தி வந்தார்கள்.

போலந்துப் பிரிவினையை ஒட்டி ஏராளமான நிலங்களை வளைத்துப் போட்ட யூதர்கள், அப்போது பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே இருந்தார்கள்.

நகரங்களில் தாங்கள் வசித்துக்கொண்டு, கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளைப் பார்த்துக்கொள்ள தம் சுற்றத்தாரையும் நண்பர்களையும் குறிப்பாக, எல்லாருமே யூதர்கள் அங்கே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இது, தினக்கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த எளிய ரஷ்ய விவசாயிகளை மிக அதிகமாக பாதித்தது. தங்கள் கிராமங்களில் தங்களுக்கு வேலைவாய்ப்பு அறவே கிடையாது என்றால் அவர்கள் எங்கே போவார்கள்?

அதிகாரிகளிடம் போக முடியாது. யாரும் காது கொடுத்துக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. யூத முதலாளிகளான ஜமீந்தார்களிடமே நியாயம் கேட்கலாம் என்றால் அவர்களும் கிராமப்புறங்களின் பக்கமே வரமாட்டார்கள்.

திடீர் திடீரென்று பெரிய பெரிய வாகனங்களில் மொத்தமாக யூத வேலையாட்கள் கிராமங்களுக்கு வந்து இறங்குவார்கள்.

சொல்லிவைத்தமாதிரி வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். உள்ளூர் விவசாயிகள் வரப்போரம் நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

இதில் இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. பல இடங்களில் நகர்ப்புறங்களிலிருந்து ஆட்கள் கிராமங்களுக்கு தினசரி காலை வந்து வேலை பார்த்துவிட்டு மாலை ஆனதும் வண்டியேறி மீண்டும் டவுனுக்குப் போய்விடுவார்கள். ஆபீஸ் உத்தியோகம் மாதிரி!

இது பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதுமே நடைமுறையில் இருந்திருக்கிறது!

அலெக்சாண்டர்-1 என்னும் ஜார் மன்னர் பதவி ஏற்ற பிறகுதான் (கி.பி. 1802 - 1825) நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியது. மக்களின் மனமறிந்து நடந்துகொள்வது முக்கியம் என்று கருதிய இந்த மன்னர், பதவியேற்றதும் முதல் வேலையாக கிராமப்பகுதிகளில் வேலைக்குப் போன யூதர்களையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லையோர யூத நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பமாயின.

யூதர்கள் தரப்பில், அநியாயமாகத் தங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டதே தவிர, அதன் பின்னணிக் காரணங்கள் எதுவுமே உலகுக்கு எடுத்துக்காட்டப்படவில்லை. எல்லா தேசங்களிலும் யூதர்களைத் துரத்துகிறார்கள், ரஷ்யாவும் துரத்த ஆரம்பித்திருக்கிறது என்று மட்டுமே உலகம் நினைத்தது.

உண்மையில், முந்தைய மன்னர் கேதரின் காலத்தில் கிடைத்த சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவில் யூதர்கள் மிக வலுவாகக் காலூன்றியிருந்த அளவுக்கு வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை என்று சொல்லவேண்டும். பெரும்பாலான ரஷ்ய விவசாயிகளுக்கு அப்போது கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது என்பது அவர்களுக்குப் பெரிய சாதகமாக இருந்திருக்கிறது.

ஆனால் அலெக்சாண்டர்-1ன் காலத்தில் ஆரம்பித்த யூத விரட்டல் நடவடிக்கைகள் மிக விரைவாக சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. முதலில் கிராமங்களிலிருந்து யூதர்களை விரட்டினார்கள்.

பிறகு சிறு நகரங்களிலிருந்து விரட்ட ஆரம்பித்தார்கள்.எங்கெல்லாம் யூதர்கள் வசிக்கிறார்களோ (அவர்கள் எப்போதும் மொத்தமாகத்தான் வசிப்பார்கள் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) அங்கெல்லாம் போய் அடித்து விரட்ட ஆரம்பித்தார்கள்.

இதையெல்லாம் அரசாங்கம் முன்னின்று செய்யவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஊரிலிருந்தும் யூதர்களை விரட்டியடிப்பது தங்கள் தேசியக் கடமை என்றே ரஷ்யர்கள் அப்போது நினைத்தார்கள்! முதலில் அரசாங்கம் இதனை ஆதரிப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பெரிய அளவில் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மாறாக, யூதர்களைப் பாதிக்கும் விதத்தில் சிலபல சட்டத்திருத்தங்கள், நில வரையறைகள் கொண்டுவரப்பட்டன. வரிகளும் அதிகரிக்கப்பட்டன. யூதர்கள் தங்களுக்கென்று தனியே பள்ளிக்கூடங்கள் நடத்திக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

ரஷ்ய அரசுத்துறை அதிகாரிகளுக்கு இந்த வகையில் கொஞ்சம் வருத்தம்தான். ஏனெனில் நீண்ட நெடுங்காலமாக அவர்கள் யூதர்களிடமிருந்து கையூட்டுப் பெற்று வந்திருக்கிறார்கள்.

திடீரென்று யூத எதிர்ப்பு அலை அடிக்க ஆரம்பித்துவிட்டதில் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பு ஆனார்கள். அதேசமயம் மக்களின் எழுச்சியுடன் தாங்கள் ஒத்துப்போகாத பட்சத்தில் பதவிக்கே ஆபத்து வரக்கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

வேறு வழியில்லாமல்தான் இந்த நிர்ப்பந்தங்களை அவர்கள் யூதர்களின்மீது திணித்தார்கள் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

சுமார் ஐம்பது வருடங்கள். அதற்குக் கொஞ்சம் மேலே கூட இருக்கலாம். இம்மாதிரியான சிறு சிறு பிரச்னைகளும் பயமும் ரஷ்ய யூதர்களைக் கவ்விக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டாமா?
வந்தது.

1881-ம் ஆண்டு அலெக்சாண்டர்-2 என்ற ஜார் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். (அலெக்சாண்டர்-1-க்குப் பிறகு நிக்கோலஸ்-1 என்பவர் மன்னரானார். நிக்கோலஸுக்குப் பிறகு இந்த அலெக்சாண்டர்-2, 1855-ல் மன்னராகியிருந்தார்.) என்னவோ உப்புப்பெறாத அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற படுகொலை அது.

ஆனால் விதி, அந்தக் கொலைச்சதியில் யூதர்கள் ஈடுபட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிவிட்டது.

அது உண்மையா, இல்லையா என்று விசாரிக்கக்கூட யாரும் அப்போது தயாராக இல்லை. ஒரு ரஷ்யச் சக்கரவர்த்தியின் படுகொலைக்கு, வந்தேறிகளான யூதர்கள் காரணமாக இருக்கக்கூடும் என்கிற வதந்தியே போதுமானதாக இருந்தது. (இன்று வரையிலும் இது தீராத சந்தேகம்தான். யூதர்கள்தான் இக்கொலைச்சதியில் ஈடுபட்டார்களா, வேறு யாராவதா என்பது தீராத விவாதப்பொருளாகவே இருக்கிறது.)

ஒட்டுமொத்த ரஷ்யாவும் கொதித்தெழுந்துவிட்டது.

எலிசபெத் க்ரேட் என்கிற இடத்தில்தான் முதல் கலவரமும் முதல் கொலையும் விழுந்தது. வருடம் 1881. தீ போல ரஷ்யாவின் தென் மாகாணங்கள் அனைத்திலும் ஒரு வாரத்தில் பரவிவிட்டது.

பார்த்த இடத்திலெல்லாம் யூதர்களை வெட்டினார்கள். தப்பியோடியவர்களையெல்லாம் நிற்கவைத்துக் கொளுத்தினார்கள். முழுக்கக் கொல்லமுடியவில்லை என்றால் கை, கால்களையாவது வாங்கினார்கள்.

யூத வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், சமூக நிறுவனங்கள் எதுவுமே மிச்சமில்லை. ரத்தவெறி தலைக்கேறிவிட்டிருந்தது ரஷ்யர்களுக்கு.
தப்பித்து ஓடக்கூட முடியாமல் சிக்கிக்கொண்ட பல்லாயிரக்கணக்கான யூதர்கள் அப்போது நடுச்சாலைகளில் வெட்டுப்பட்டு இறந்துபோனார்கள்.

அவர்களது பிணங்களை எடுத்துப்போடக் கூட யாரும் முன்வரவில்லை!

இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய மன்னரே (புதிதாகப் பொறுப்பேற்றிருந்த அலெக்சாண்டர்-3) ரகசிய உத்தரவிட்டதாக பிறகு சொன்னார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 மார்ச், 2005

38] ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 38

யூத இனத்தை முழுவதுமாக அழிக்கவும் முடியாது; அவர்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்திருந்தது.

கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதிலுமே யூதக் களையெடுப்பு ஒரு செயல்திட்டமாகவே வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதிலும் ஒவ்வொரு தேசத்திலும் வெட்ட வெட்ட, அவர்கள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள்.

ஆயிரம் யூதர்கள் ஓரிடத்தில் கொல்லப்பட்டபோது பக்கத்து ஊரில் புதிதாக இன்னொரு இரண்டாயிரம் யூதர்கள் வந்து வாழ ஆரம்பிப்பார்கள். லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டபோது இன்னொரு லட்சம் பேர் எங்கிருந்தாவது வந்து சேர்வார்கள்.

யோசித்துப் பார்த்தால் ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு என்பது அருவருப்பூட்டக்கூடிய விதத்தில் வளர்ந்து பரவியிருந்திருக்கிறது.

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு யூதர், இயேசு என்னும் இன்னொரு யூதரைக் கொன்றார் என்பதற்காக யூத குலத்தையே வேரோடு அழிக்க நினைத்து எத்தனை படுகொலைகளைச் செய்திருக்கிறார்கள்!

அது ஒரு காரணம். எத்தனை நெருக்கடி நேர்ந்தாலும் யூதர்கள் மனம் தளராமல் மீண்டும் அழிவிலிருந்து மேலேறி வந்து வாழத் தொடங்கிவிடுகிறார்களே என்கிற எரிச்சல் இன்னொரு காரணம்.

ஆனால் ஓர் இனத்தையே அழிக்குமளவுக்கு இவையெல்லாம் ஒரு காரணமாக முடியுமா?

உண்மையில், ஐரோப்பாவில் யூதர்கள் சந்திக்க நேர்ந்த கொடுமைகள்தான் அவர்களை மேலும் பலவான்களாக, மேலும் புத்திசாலிகளாக, வாழ்வின் மீது மேலும் மேலும் காதல் கொண்டவர்களாக மாற்றியது என்று சொல்லவேண்டும்.

பள்ளிகள் தடைசெய்யப்பட்டபோது, அவர்கள் வீட்டிலிருந்தே படித்தார்கள். யூத தேவாலயங்கள் உடைக்கப்பட்டபோது, அவர்கள் மறைவிடங்களுக்குப் போய் பிரார்த்தனையைத் தொடர்ந்தார்கள். வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டபோது வீட்டில் இருந்தபடியே வியாபாரங்களைக் கவனித்தார்கள்.

வீடுகளும் உடைக்கப்பட்டபோது நாடோடிகளாகச் சென்று எங்காவது வெட்டவெளிகளில் கூடாரம் அடித்துத் தங்கி வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.

எல்லாமே எல்லை மீறும்போதுதான் அவர்கள் அதிகாரிகளை வளைத்துப்போட்டு, தமக்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

உலக சரித்திரத்தில் யூதர்களைக் காட்டிலும் அதிகமாக லஞ்சம் கொடுத்தவர்கள் கிடையாது.

எதற்கு, எதனால் என்பதெல்லாம் முக்கியமே இல்லை. எல்லாவற்றுக்கும் கொடுத்தார்கள். வாங்குவதற்கு ஆட்கள் இருந்த இடங்களிலெல்லாம் அவர்கள் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பத்து, இருபதில் தொடங்கி, பல லட்சங்கள், கோடிகள் வரை கொடுத்தார்கள். அரசாங்கமும் மக்களும் அவர்களுக்குத் தராத பாதுகாப்பை அந்த லஞ்சப்பணம்தான் கொடுத்து வந்திருக்கிறது, சரித்திரமெங்கும்.

அருவருப்பானதுதான். வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். ஆனாலும் அவர்களுக்கு வேறெந்த வழியும் இல்லாமல் போனதற்கு ஐரோப்பிய கிறிஸ்துவர்களே காரணமாயிருந்தார்கள்.

வசதிகளுக்காக லஞ்சம் தருவது உலகெங்கும் இருக்கும் நடைமுறை என்றாலும், வாழ்வதற்கே லஞ்சம் தரக்கூடிய சூழ்நிலையில்தான் யூதர்கள் இருந்தார்கள். இதற்காகவே அவர்கள் நிறையச் சம்பாதிக்க நினைத்தார்கள். பிசாசுகள் போல் உழைத்தார்கள்.

புதிது புதிதாக இன்றைக்கு உலகம் கடைப்பிடிக்கும் எத்தனையோ பல நூதன வியாபார உத்திகளெல்லாம் யூதர்கள் தொடங்கிவைத்தவைதான்.

இன்றைக்கு எம்.எல்.எம். என்று சொல்லப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் இந்தியாவில்கூட பிரபலமாக இருக்கிறது.

இதெல்லாம் பதினேழாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் கண்டுபிடித்துவிட்ட விஷயம். இப்படியரு பெயரை அவர்கள் தரவில்லையே தவிர, ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் அவர்கள் எம்.எல்.எம் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குப் பணமாற்றம் செய்வது, ஹவாலா போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு நிறையச் சம்பாதித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு பைசாவையும் மிக முக்கியமாகக் கருதிய இனம் அது.

வர்த்தகத்தில் நேர்மை என்பது அவர்கள் ரத்தத்தில் பிறந்த விஷயம்.

வர்த்தகம் தடைப்படாமல் நடப்பதற்குத்தான் லஞ்சம் கொடுப்பார்களே தவிர, மக்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள்.

போலிச் சரக்குகளை விற்பது, சரக்குப் பதுக்கல், திடீர் விலையேற்ற நடவடிக்கைகள் இவையெல்லாம் ஐரோப்பாவில் பரவலாகிக் கொண்டிருந்தபோதுகூட, எந்த ஒரு யூதக் கடையிலும் நம்பிப் போய் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு சிறு ஏமாற்றம் கூட இருக்காது!

இவை ஒருபுறம் இருக்க, பத்தொன்பதாம் நூற்றாண்டில் யூத குலத்தில் சில மகத்தான சாதனையாளர்கள் உதிக்க ஆரம்பித்தார்கள். எந்தத் துறையில் இருக்கிறார்களோ, அந்தத் துறையின் மிக உயர்ந்த இடத்தை அடையக்கூடியவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

பொதுவாக யூதர்களுக்கு இழைக்கப்பட்ட எந்த ஒரு கொடுமையும் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை.

இந்தச் சாதனையாளர்களை வளைத்து, அரவணைத்து அவர்களின் வெற்றிக்காக உழைக்கக்கூடியதாக இருந்தது யூதகுலம்.

சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒரு சாதனை செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம் என்றால் நமது குடும்பம் நம்மை ஊக்கப்படுத்தலாம், உற்சாகப்படுத்தலாம்.

ஒருவேளை மாநில அரசு கவனித்து ஏதாவது உதவலாம். சாதனை செய்யப்பட்ட பிறகு தேசம் கொண்டாடலாம், பெருமைப்படலாம். ஆனால், ஒரு சாதனையாளர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்து, அந்த இனத்திலுள்ள அத்தனை பேருமே தோள்கொடுக்க முன்வருவார்களா?

யூதர்களிடம் மட்டும்தான் அது சாத்தியம். ஒரு யூதர் அரசியல்வாதியாக வருகிறார் என்றால் ஒட்டுமொத்த யூதர்களும் அவரை மட்டுமே ஆதரிப்பார்கள், சுத்தமாகப் பிடிக்காது என்றால் கூட. யாராவது ஒரு யூதர் கல்லூரிப் பேராசிரியர் ஆகிறார் என்றால் அங்குள்ள அத்தனை யூதர்களும் அவருக்குப் பின்னால் திரண்டு நிற்பார்கள்.

ஒருவர் அறிவியலில் முன்னேறுகிறார் என்றால், அவரது ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு யூதக் குடும்பமும் மாதம் தவறாமல் பணம் அனுப்பும். ஒரு யூத எழுத்தாளரின் புத்தகம் வெளியாகிறதென்றால், சந்தேகமில்லாமல் அந்தக் காலகட்டத்தில் எத்தனை படித்த யூதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பிரதிகள் விற்றே தீரும்.

மேலோட்டமான பார்வைக்கு இவற்றின் வீரியம் சட்டென்று புரியாது. யூதர்கள் தமக்காகவோ, தமது குடும்பத்தினருக்காகவோ கவலைப்பட்டதில்லை. மாறாக, தமது இனத்துக்காக மட்டுமே சரித்திரம் முழுவதும் கவலைப்பட்டு, உழைத்து வந்திருக்கிறார்கள். உலகில் வேறெந்த ஒரு இனமும் இப்படி இருந்தது கிடையாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்தவுடனேயே ஐரோப்பாவின் மேற்கு தேசங்களில் யூதர்களின் செல்வாக்கும் வாழ்க்கை நிலையும் நம்பமுடியாத அளவுக்கு உயரத் தொடங்கியிருந்தது.

ஆங்காங்கே இனப்படுகொலைகள், ஊரைவிட்டுத் துரத்தல் போன்ற காரியங்கள் நடந்துகொண்டிருந்தன என்றபோதும் யூதர்களின் அந்தஸ்தும் அதற்குச் சமமாக வளரத்தொடங்கியிருந்தது.

காரணம், ஐரோப்பிய மறுமலர்ச்சி. பலதேசங்களில் ஜனநாயகம் வரத் தொடங்கியிருந்தது அப்போது. பொருளாதாரக் கெடுபிடிகள் தளர்த்தப்படத் தொடங்கின. வர்த்தகம் சுலபமாகத் தொடங்கியிருந்தது.

ஜனநாயகம் எங்கெல்லாம் முளைவிட்டதோ, அங்கெல்லாம் யூதர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிறு சிறு உள்ளூர்த் தேர்தல்கள் முதல் மாகாண சட்டசபை, தேசியத் தேர்தல்கள் வரை அவர்கள் போட்டியிட ஆரம்பித்தார்கள்.

தேர்தல்களில் போட்டியிடும் யூதர்களுக்காக உலகெங்கிலுமிருந்த யூதர்கள் உதவி செய்ய ஆரம்பித்தார்கள்.

யூத வர்த்தகர்கள் கணக்கு வழக்கில்லாமல் பணம் கொடுத்தார்கள். பணம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தவர்கள், துண்டேந்தி வசூல் வேட்டை நடத்தி உடலுழைப்பைத் தந்தார்கள்.

தேர்தல் தோல்விகளால் அவர்கள் துவளவில்லை. மாறாக, வாழப்போன தேசங்களில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அதையும் ஒரு சாதக அம்சமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

1848-ம் ஆண்டு யூதர்கள் தமது சரித்திரத்திலேயே முதல் முறையாக தமது பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்.

இது நடந்தது பிரான்ஸில். இதனைத் தொடர்ந்து 1860-ம் ஆண்டு ஹாலந்தில் ஒரு யூதர் அமைச்சரானார்.

1870-ல் இத்தாலியில். எல்லாவற்றுக்கும் சிகரமாக 1868-ம் ஆண்டு பெஞ்சமின் டி’ஸ்ரேலி என்ற யூதர் பிரிட்டனின் பிரதமராகவே ஆகுமளவுக்கு அங்கே யூதர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது!

ஆங்கிலேயர்களால் ஜீரணிக்கவே முடியாமல் போனது.

தம்மாலானவரை அவர்கள் யூதர்களை அவமானப்படுத்தி கார்ட்டூன்களும் கேரிகேச்சர்களும் போட்டுப்பார்த்தார்கள்.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய பிரச்னை இதுதான் என்றே சொன்னார்கள். ஆனாலும் யூதர்கள் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. பெஞ்சமின் டிஸ்ரேலியே தம்மைக் குறித்த கேலிச்சித்திரங்களை ரசித்துப் பாராட்டக்கூடியவராக இருந்தார்!

பின்னால் 1878-ல் பிஸ்மார்க், “பெஞ்சமினை ஒரு யூதராகப் பார்க்காதீர்கள், மனிதராகப் பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டதும் பிரிட்டன் அரை மனத்துடன் அதற்குச் சம்மதித்ததெல்லாம் சரித்திரம்.

யூதர்களின் விடாமுயற்சிக்கு பெஞ்சமின் டிஸ்ரேலியின் இந்த வெற்றி ஒரு மகத்தான உதாரணம்.

பெஞ்சமின் டிஸ்ரேலியின் முன்னோர், இத்தாலியைச் சேர்ந்தவர்கள். (உண்மையில் எந்த யூதரும் இப்படிச் சொல்வதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்! ‘எங்கள் முன்னோர் பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள்’ என்றே அவர்கள் சொல்லுவார்கள்.)

அங்கிருந்து இடம் பெயர்ந்து ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள், பதினைந்தாம் நூற்றாண்டில் அகதிகளாக பிரிட்டனுக்கு ஓடிவந்தவர்கள்.

பெஞ்சமினின் குடும்பத்தினர் அத்தனைபேரின் பெயருடனும் ‘இஸ்ரேலி’ என்கிற துணைப்பெயர் ஒட்டிக்கொண்டிருக்கும்.

அன்றைக்கு இத்தாலியில் வாழ்ந்த அத்தனை யூதர்களுக்குமே இந்தத் துணைப்பெயர் உண்டு. பெஞ்சமின் மட்டும் கொஞ்சம் ஸ்டைலாக பெயரை மாற்றிக்கொண்டார். அது பின்னால் டிஸ்ரேலி என்றே ஆகிவிட்டது!

பெஞ்சமினின் தந்தை ஐஸக் இஸ்ரேலி, லண்டனில் இருந்த ஒரு யூத தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவரை கிறிஸ்துவராக மாற்றுவதற்கு நிறையப்பேர் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாறவில்லை. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தமது குழந்தைகளுக்கு மட்டும் ‘ஒரு பாதுகாப்புக் கருதி’ ஞானஸ்நானம் செய்விக்க அவர் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

பெஞ்சமின் உட்பட அவரது சகோதரர்களுக்கு அப்படியாக ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெஞ்சமின் ஒரு யூதராகவே வாழ்ந்தவர்.

அரசியலில் நுழைவதற்கு முன்னால் சிறுகதைகள், நாவல்களெல்லாம் எழுதிப்பார்த்திருக்கிறார். கிறிஸ்துவர் அல்லாத யாரும் பிரிட்டனின் பாராளுமன்றத்துக்குள் நுழைய முடியாது என்கிற சூழல் இருந்த காலத்தில் அவர் அந்த ஞானஸ்நானத்துக்குச் சம்மதிக்காதிருந்தால், பாராளுமன்ற உறுப்பினராகவோ, பிரதம மந்திரியாகவோ ஆகியிருக்கவே முடியாது என்பதையும் பார்க்க வேண்டும்.

பிரிட்டன் என்றில்லை. இன்னபிற ஐரோப்பிய தேசங்களிலும் இப்படியான நிலைமைதான் அன்று இருந்திருக்கிறது.

அடிமைகள் போலவும் நாடோடிக் கும்பல்கள் போலவுமே கருதப்பட்ட யூதர்கள், ஒரு வீடுகட்டி உட்கார்ந்ததோடு மட்டுமல்லாமல், தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வெற்றியும் பெறத்தக்க வகையில் உயர்வதற்கு அந்த விலையைக் கொடுத்தே தீரவேண்டியிருந்தது.

ஆனால் யாரும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே மதம் மாறியதில்லை. எல்லாமே வாழ்க்கைக் காரணங்களுக்காகத்தான். அதாவது உயிருடன் வாழ்வது என்கிற அடிப்படைக் காரணம்.

பிறகு, கொஞ்சம் வசதியாக வாழலாமென்கிற இருப்பியல் காரணம். இதற்கு மேற்பட்ட வர்த்தக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கவே செய்தன என்றாலும், ஐரோப்பிய தேசங்களில் கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களின் எண்ணிக்கை எப்படியும் பல லட்சங்களைத் தாண்டவே செய்கிறது.

ஜெர்மனியில் அப்படித்தான் ஒரு யூதக்குடும்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவத்துக்கு மாறியது. அப்படி மாறியதன்மூலம் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் கொஞ்சம் உயரலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படியன்றும் பிரமாதமாக உயர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், அந்த யூதக் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவத்துக்கு மாறிய குழந்தைகளுள் ஒன்று பிற்காலத்தில் மானுட குலத்துக்கே நன்மை செய்யக்கூடியவராக மலர்ந்தார். தமது யூத, கிறிஸ்து அடையாளங்கள் அனைத்தையும் துறந்து, ஒரு மனிதனாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட அவர் பெயர் காரல் மார்க்ஸ்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 ஏப்ரல், 2005 .
--------------------------------------------------------

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம்.
அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: