Thursday, March 19, 2009

59.60 அரபுக்களின் ஒற்றுமையின்மை-யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத.. பகுதி.59-60.

59] அரபுக்களின் ஒற்றுமையின்மை-யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத..
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 59

இஸ்ரேல் உருவான மறுதினமே யுத்தமும் ஆரம்பமாகிவிட்டபடியால், இஸ்ரேலின் அரசியல் அமைப்பு, ஆட்சி முறை போன்ற விவரங்களை உடனடியாக நம்மால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் மிக முக்கியமான விஷயம் இது. மத்தியக்கிழக்கு என்று சொல்லப்படும் மாபெரும் நிலப்பரப்பின் 99.9 சதவிகிதத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை வேறு; 0.1 சதவிகித நிலப்பரப்பே கொண்ட இஸ்ரேலின் அரசியல் அமைப்பு முற்றிலும் வேறு.

இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. தோன்றிய தினத்திலிருந்தே அப்படித்தான். ஆனால் நம்முடையதைப் போன்ற ஜனநாயகம் அல்ல அது. வரையறுக்கப்பட்ட ஜனநாயகம். கிட்டத்தட்ட அமெரிக்க ஜனநாயகத்துடன் நெருக்கமாக அதை ஒப்பிடமுடியும். ஒரே ஒரு வித்தியாசம், அமெரிக்காவில் அதிபருக்குத்தான் அதிகாரங்கள். இஸ்ரேலில் பிரதமருக்கு. அந்த ஒரு விஷயத்தில் இந்திய ஜனநாயகம் மாதிரிதான். ஆனால் மற்ற அம்சங்கள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவைப் போலவேதான்.

1948-ம் வருடம் மே மாதம் 14-ம் தேதிதான் இஸ்ரேல் பிறந்தது என்றபோதும் அந்த வருடம் மார்ச்சிலேயே ஆட்சி எப்படி இருக்கவேண்டும், என்ன மாதிரியான நிர்வாக அமைப்பை நிறுவவேண்டும் என்று யூதர்களின் சமூகத் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்திருந்தார்கள்.

அரபு தேசங்களுக்கு நடுவில் அமையும் தேசமாக இருந்தபோதும், அந்த தேசங்களின் அரசியல் அமைப்புச் சாயல் ஏதும் தன்னிடம் இருந்துவிடக் கூடாதென்பதில் இஸ்ரேல் ஆரம்பம் முதலே மிகத் தெளிவாக இருந்தது.

மார்ச் மாதம் முதல் தேதி முதன்முதலில் மக்கள் மன்றம் என்றொரு அதிகாரபூர்வ அமைப்பை நிறுவினார்கள். யூதர்களின் தேசியக் கமிட்டியிலிருந்து இந்த மக்கள் மன்றத்துக்குப் பிரதிநிதிகளை நியமித்தார்கள்.
இந்த மக்கள் மன்றம்தான், இஸ்ரேல் உருவானதும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தளித்தது.

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை 'நெஸட்' (Knesset) என்று குறிப்பிடுவார்கள். ஹீப்ரு மொழியில் 'நெஸட்' என்றால் சட்டம் இயற்றும் இடம் என்று பொருள். இதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.

ஆரம்பகாலத்தில் நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தன. கிட்டத்தட்ட மன்னராட்சி போலவே தோற்றமளிக்கும்படியான அதிகாரங்கள். பிறகு இந்த அதிகாரங்களில் கொஞ்சம் நீதிமன்றத்துக்குப் போனது. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் பிரதம மந்திரியின் வசம் தஞ்சம் புகுந்தது.

ஒரு சம்பிரதாயத்துக்காக அதிபர் என்றொருவரை இஸ்ரேல் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது தவிர!

இஸ்ரேலில் ஒரு கட்சி ஆட்சி என்கிற வழக்கம் என்றைக்குமே இருந்ததில்லை. எப்போதும் ஜேஜே என்று குறைந்தது பதினைந்து இருபது கட்சிகளாவது சேர்ந்துதான் நாடாளுமன்றத்தை வழி நடத்தும். ஒரு கட்சி நாடாளுமன்றத்துக்குள் நுழையவேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1.5 சதவிகிதமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

கூட்டணி அரசு என்றாலும் உறுதிமிக்க கூட்டணியாகத்தான் எப்போதும் இருக்கும். ஏனெனில் கட்சி வேறுபாடுகள் இருப்பினும் யூத இனம் என்கிற ஓரம்சத்தால் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுவார்கள். இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பிணைப்பு!

நம் ஊரில் செய்வதுபோல நினைத்துக்கொண்டாற்போல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பிரதமரைக் கவிழ்ப்பதெல்லாம் இஸ்ரேலில் முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் தர்ணா நடத்தினாலும் நடக்காது. அதிபரே விரும்பினாலும் பிரதமரை மாற்ற முடியாது!

வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்று நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கலாம்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இந்தக் காரியத்தை ஆத்மசுத்தியுடன் செய்தால், பிரதமர் தனியாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கப் போரடித்து தானாகவே ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்!

இஸ்ரேலின் இந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இப்படி நடந்திருக்கிறது. 2000-வது வருடம் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக் (Ehud Barak) பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டிருக்கிறார்.

மற்றபடி இஸ்ரேலில் ஒரு பிரதமரை மாற்றுவது என்பது, அமெரிக்காவில் அதிபரை மாற்றுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம்.

இம்மாதிரியான ஏற்பாடு எதற்காக என்றால், சர்வதேச அளவில் தன்னை யாரும் சரிவர அங்கீகரிக்காத நிலையில், உள்நாட்டிலும் எப்போதும் குழப்பம் சூழ்ந்தவண்ணமே இருந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான். என்னதான் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றாலும் அக்கம்பக்கத்தில் தோழமையுடன் ஒரு புன்னகை செய்யக்கூட இஸ்ரேலுக்கு யாரும் கிடையாது.

பெரும்பாலான ஆசிய தேசங்களும் இஸ்ரேலின் பாலஸ்தீன விரோத நடவடிக்கைகளை முன்னிட்டுத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே தான் இருக்கின்றன. தனித்து நின்று போராடி வாழ்ந்தாக வேண்டிய இருப்பியல் நெருக்கடி இஸ்ரேலுக்குத் தொடக்ககாலம் முதலே இருந்து வருவதால், ஆட்சிமுறையில் இப்படியான சில இரும்புத்தனங்களைச் செய்துகொண்டார்கள்.

ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்துவிட்டால், என்ன ஆனாலும் அவர் சொல்பேச்சு கேட்பது என்பதுதான் இஸ்ரேலியர்களின் இயல்பு. தவறு செய்கிறாரென்று தெரிந்தாலும் தமக்குள் பேசிக்கொள்வார்களே தவிர, பொதுவில் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.

அரசாங்கம் அங்கே மீடியாவை மிகவும் போஷாக்குடன் வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாகப் பத்திரிகைகள், நாளிதழ்கள். யூதப் பத்திரிகைகள் அங்கே இழுத்து மூடப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது. ஓடாத பத்திரிகைகள்கூட நூலக ஆர்டரின் பேரில் உயிர்வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். சுமார் 25 தினசரிப் பத்திரிகைகள் இஸ்ரேலில் இருக்கின்றன. அவற்றுள் 11 ஹீப்ரு மொழிப் பத்திரிகைகள். நான்கு அரபுமொழிப் பத்திரிகைகள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹங்கேரியன், ருமேனியன், ரஷ்யன், ஜெர்மன் மொழிப் பத்திரிகைகள் தலா ஒன்று.

பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து இஸ்ரேலில் வாழத் தொடங்கிய யூதர்கள்தான் என்பதால், அந்தந்த தேசத்து மொழிகளில் ஒரு பத்திரிகையாவது இருக்கவேண்டுமென்று திட்டமிட்டு, இஸ்ரேல் அரசாங்கமே உதவி செய்து ஆரம்பித்துவைத்த பத்திரிகைகள் இவை. ஹீப்ரு மொழியின் சிதைந்த பேச்சு வழக்கு மொழியான இட்டிஷ் மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை உண்டு.

தேசம் உருவான தினம் முதல் இன்றுவரை இஸ்ரேலில், அரசுக்கும் பத்திரிகைகளுக்குமான உறவு மிக அற்புதமான நிலையிலேயே இருந்துவருவது ஓர் உலக ஆச்சர்யம். எந்த ஒரு இஸ்ரேல் தினசரியும் அரசைக் கடுமையாக விமர்சிக்காது. அதே சமயம் கட்சிப் பத்திரிகை போலத் துதி பாடுவதும் கிடையாது. செய்தியை, செய்தியாக மட்டுமே வழங்குவது என்பது இஸ்ரேல் பத்திரிகைகளின் பாணி. தன் விமர்சனம் என்று எதையும் அவை முன்வைப்பதே இல்லை பெரும்பாலும்!

Yedioth Aharonoth என்கிற ஹீப்ரு மொழி செய்தித்தாள்தான் இஸ்ரேலில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை. மொத்தம் மூன்று லட்சம் பிரதிகள்.
பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட அங்கே மிக நல்ல உறவு உண்டு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று இதுவரை எந்தப் பத்திரிகை மீதும் எந்தக் காலத்திலும் யாரும் தொடுத்ததில்லை.

இஸ்ரேல் நீதிமன்றங்கள் பற்றிச் சொல்லவேண்டும். அங்கே இருவிதமான நீதி அமைப்புகள் செயல்படுகின்றன. ஒன்று சிவில் நீதிமன்றங்கள். இன்னொன்று, மத நீதிமன்றங்கள். சிவில் நீதிமன்றங்களில் வழக்கமான வழக்குகள் மட்டும் ஏற்கப்படும். திருமணம், திருமண முறிவு உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள், மதம் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும்.

குடும்ப கோர்ட் என்று இங்கே சொல்லப்படுவது போலத்தான். ஆனால் இஸ்ரேலில் குடும்பப் பிரச்னைகள் நீதிமன்றங்களுக்கு வருமானால் மிகவும் அக்கறையெடுத்து கவனிக்கப்படும். இஸ்ரேலில் வாழ்பவர்கள் மட்டும்தான் என்றில்லை. உலகெங்கும் வசிக்கும் யூதர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் இஸ்ரேலில் இயங்கும் நீதிமன்றங்களை அணுக முடியும்.

அடுத்தபடியாக இஸ்ரேல் ராணுவம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கொண்ட முதல்நிலைப் படை. நான்கு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொண்ட ரிசர்வ் ராணுவப்படை. விமானப்படையில் முப்பத்திரண்டாயிரம் பேர். கப்பல் படையில் பத்தாயிரம் பேர்.

இன்றைய தேதியில் வெளியில் தெரிந்த இஸ்ரேல் ராணுவத்தின் பலம் இதுதான். ஆனால் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் 1957 முதலே அவர்களிடம் இதே பலம்தான் இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும்.

ஆள்பலம் குறைவானாலும் இஸ்ரேல் தன் வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பிரும்மாண்டமானவை. உலகெங்கும் எங்கெல்லாம் மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தனது படையினரை அனுப்பி, தொடக்க காலத்தில் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

பின்னால் இஸ்ரேலே பல தேசங்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தேசமாகிவிட்டது. இது விஷயத்தில் அமெரிக்காவின் உதவி மிகவும் குறிப்பிடப்படவேண்டியதொரு அம்சமாகும்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவற்றைப் பயன்படுத்துவதில் பயிற்சி, போர்க்காலங்களைச் சமாளிக்கும் நிர்வாகத் திறன் பயிற்சி, ஒற்றறியும் கலையில் பயிற்சி, உளவு நிறுவனங்களை அமைத்து, கட்டிக்காத்து, வழிநடத்துவதற்கான பயிற்சி என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.

இஸ்ரேல் தன் பங்குக்குத் தொழில் நுட்பத்துறையில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி, அத்தேசத்தின் ஆயுத பலத்தை மிகவும் நவீனப்படுத்தியது.

அமெரிக்காவுக்கு ஒரு சி.ஐ.ஏ. மாதிரி இஸ்ரேலுக்கு ஒரு மொஸாட். உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவு நிறுவனம் என்று சொல்லப்படும் மொஸாட், இஸ்ரேலின் இரண்டாவது அரசாங்கம். நிழல் அரசாங்கம்.

இத்தனை வலுவான பின்னணியை வைத்துக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் பலம் இவை எதுவுமே இல்லை.

மாறாக, யூதர்கள் என்று இனத்தால் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்கிற பெருமித நினைவுதான் இஸ்ரேலை இன்றளவும் உயிர்பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இன்றுவரை ஆதரிக்கும் அமெரிக்கா, நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகமே திரண்டு இஸ்ரேலை எதிர்க்கலாம். மீண்டும் அவர்கள் ஊர் ஊராக ஓட வேண்டி நேரலாம். என்ன ஆனாலும் இஸ்ரேல் மக்களை முற்றிலுமாக அழித்துவிடவே முடியாது. இன்னும் ஆயிரம் ஹிட்லர்கள் தோன்றினாலும் முடியாது.

காரணம், யூதர்களின் ஒற்றுமை அப்படிப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியடிக்கத் தெரியும் அவர்களுக்கு. இதுதான், இது ஒன்றுதான்.

இந்த ஒற்றுமை அரேபியர்களிடம் இல்லாததுதான் பாலஸ்தீனின் அவலநிலைக்கு ஆதாரக் காரணம்.

பாலஸ்தீன் அரேபியர்களுக்காகப் பரிதாபப்படலாம், கண்ணீர் சிந்தலாம். கவலை தெரிவிக்கலாமே தவிர, யாராலும் உருப்படியாக எந்த உதவியும் செய்யமுடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். அரபுக்களிடையே ஒற்றுமை கிடையாது.

இது இஸ்ரேலுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களின் ஒற்றுமைக் குறைபாடு உயிருடன் இருக்கும்வரை தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை யூதர்கள் அறிவார்கள்.

யூதர்களின் இந்த மனோபாவத்தை, அரேபியர்களின் இந்த இழிநிலையை உணர்வுபூர்வமாக அறிந்து, அறிவுபூர்வமாகச் சிந்தித்து, உருப்படியான ஒரு வழியைக் காட்ட 1948-ல் ஒரே ஒரு நபர்தான் இருந்தார்.

அவர் அப்போது தலைவரெல்லாம் இல்லை. பதினெட்டு, பத்தொன்பது வயது இளைஞர். எகிப்தில் பிறந்த பாலஸ்தீன்காரர். கெய்ரோவில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்.

அவர் பெயர் முகம்மது அப்துல் ரெஹ்மான் அப்துல் ரவூஃப் அரஃபாத் அல் குதா அல் ஹுஸைனி. (Mohammed Abdel Rahman Abdel Raouf Arafat Al Qudua Al Husseini).

சுருக்கமாக அரஃபாத். பின்னால் ஒரு நட்சத்திரமானபோது யாசிர் அரஃபாத் என்று அழைக்கப்பட்டவர்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 ஜூன், 2005

60] யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத..
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 60

நல்ல, குளிர் மிகுந்த இரவு. வீட்டில் அத்தனை பேரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். துளி சப்தம் இல்லாத சாலையில் எங்கோ தொலைவில் ஒரே ஒரு நாய் மட்டும் ஒரு முறை குரைத்தது. குரைக்கத் தொடங்கிய அந்த நாயின் குரல், ஆரம்பத்திலேயே அடங்கிப்போனது, அரை உறக்கத்தில் இருந்த அந்தச் சிறுவனுக்கு வியப்பளித்தது. நாய் குரைக்கத் தொடங்கினால் ஒரு நிமிடமாவது நீடிக்காதோ? இதென்ன, ஆரம்பத்திலேயே ஓய்ந்துவிட்டது?

அவன் ஒருமுறை புரண்டு படுத்தான். வீதியில் யாரோ நடப்பது போல் இருந்தது. ஒருவரா? இரண்டு பேரா? இல்லை. நிறைய காலடிச் சப்தங்கள் கேட்கின்றன. எப்படியும் பத்துப் பேராவது இருக்கலாம். அவன் நேரம் பார்த்தான். மணி நள்ளிரவைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன.
இந்த இரவில், இத்தனை குளிரில் வீதியில் யார் போகிறார்கள்? ஒரே மாதிரி பூட்ஸ் சத்தம். அதுவும் இந்த பூட்ஸ் சத்தம் சாதாரண மக்கள் அணிந்து நடக்கும்போது கேட்கும் சத்தமல்ல. இது ராணுவப்படை பூட்ஸ். அப்படியென்றால்?

கடவுளே! இன்றைக்கு எந்த வீட்டைக் குறி வைத்திருக்கிறார்கள்?

அந்த ஐந்து வயதுச் சிறுவனுக்கு அச்சம் மிகுந்தது. போர்வைக்குள் மேலும் ஒடுங்கிப் படுத்து இழுத்து தலை வரை போர்த்திக்கொண்டான். சில விநாடிகள் கழித்து, பூட்ஸ் சத்தம் நின்றுவிட்டது. மிகவும் அமைதியாக இருந்தது.
இல்லையே, இப்படி இருக்கக்கூடாதே? பூட்ஸ் சத்தம் நின்ற கணத்தில் அழுகைச் சத்தமும் ஓலச் சத்தமும் அல்லவா கேட்கும்? அதானே வழக்கம்? என்ன நடக்கிறது இன்றைக்கு?

அதற்குமேல் அவனால் படுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. பூனை போல் சத்தமின்றி எழுந்து பின்புறப் படிக்கட்டுக் கதவைத் திறந்து, வீட்டின் மேல்கட்டுக்குப் போனான். ஓசைப்படாமல் ஜன்னலைப் பாதி திறந்து வெளியே பார்த்தான்.

முதலில் தவறாக ஏதும் தெரியவில்லை. இருளில் சாலையும் உறங்கித்தான் கிடந்தது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தபோது, வீதியின் முனையில், நடுச்சாலையில் ஒரு நாய் விநோதமாகக் கால்களைப் பரப்பிக் கிடப்பதைக் கண்டான். சற்றுமுன் குரைக்கத் தொடங்கிய நாய். இன்னும் கவனித்துப் பார்த்ததில் அந்த நாயைச் சுற்றிலும் ஈரம் படர்ந்திருந்ததும் அவனுக்குப் புலப்பட்டது.

அப்படியென்றால்? நாய் குரைக்கத் தொடங்கியதும் கொன்றுவிட்டார்களா?

அதிர்ச்சியில் அவனுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டது. அப்படியே பார்வையை நகர்த்தி வீதி முழுவதையும் பார்த்தான். ஒரு கணம்தான். அவனுக்கு உயிரே போய்விடும்போலிருந்தது.

ராணுவப் படையினர் அன்றைக்கு அவனது வீட்டைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர். வீட்டு வாசலில் சுவரோடு சுவராக அணிவகுத்திருந்த கால்களைப் பார்த்துத் திடுக்கிட்டான் அந்தச் சிறுவன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்படியே சுவரோடு சரிந்து விழுந்தான்.

சில விநாடிகளில் ராணுவத்தினரின் வேட்டை தொடங்கிவிட்டது.
முதலில் கதவை இடித்தார்கள். திறக்கப்படாத கதவைப் பிறகு துப்பாக்கிகளின் பின்பகுதியால் தட்டி உடைத்து உள்ளே நுழைந்தார்கள். விளக்கைக்கூட அவர்கள் போடவில்லை. படுத்துக் கிடந்தவர்களைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினார்கள்.

அலறிக்கொண்டு எழுந்தவர்களை அறைந்து வீழ்த்தினார்கள். டேபிள் கவிழ்க்கப்பட்டது. கண்ணாடிச் சாமான்கள் தூக்கி எறியப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அந்த வீட்டில் நூற்று நாற்பது வருடப் பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. சுவருக்கு அழகு தரும் மிகப்பெரிய கடிகாரம். அதை ஒரு வீரன் பார்த்தான்.

உடனே பிடுங்கி எடுத்து வீதியில் வீசி உடைத்தான். பாத்திரங்களைத் தூக்கி அடித்தார்கள். தடுக்க வந்த பெண்களையும் தூக்கி வீதியில் வீசினார்கள். பெட்டிகள், படுக்கைகள், அனைத்தையும் உடைத்துக் கிழித்து வீசியெறிந்தார்கள்.

மாடி அறையில் பதுங்கியிருந்த சிறுவன் சத்தங்கள் மூலமே இவை அனைத்தையும் உணர்ந்தான். உரக்க அழக்கூட முடியவில்லை அவனால். அவர்கள் தம் வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது வீட்டில் எத்தனை உயிர்கள் மிச்சம் இருக்கும் என்பதே அவனது கவலையாக இருந்தது. மாமாவை விட்டு வைப்பார்களா? அத்தை உயிர் பிழைப்பாளா? அவர்களது குழந்தைகள்?

ம்ஹும். எதுவும் நிச்சயமில்லை. இன்றைக்கு இந்த வீடு என்று குறி வைத்தவர்கள், முழுக்க அழித்தொழிக்காமல் திரும்பமாட்டார்கள்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அவசியம் கண்விழித்திருப்பார்கள். ஆனால் எழுந்து வந்து உதவி செய்ய யாருக்கும் துணிச்சல் இல்லை. துப்பாக்கி வைத்திருக்கும் ராணுவத்தினர். அவர்களிடம் என்ன செய்துவிட முடியும்?

முக்கால் மணி நேரம் அந்தக் கலவரம் அங்கே நடந்தேறியது. வீட்டில் இருந்த அத்தனை பேரும் - அந்த ஒரு சிறுவனைத் தவிர தாக்கப்பட்டிருந்தார்கள். உயிர் இருக்கிறதா, இல்லையா என்பது கூடத் தெரியவில்லை.

இறந்திருப்பார்கள் என்று நினைத்து, வந்த படை ஒரு வழியாகத் திரும்பிப் போனதும் அவன் மெல்ல படியிறங்கிக் கீழே வந்தான்.

மாமாவின் மூக்கருகே கை வைத்துப் பார்த்தான். நல்ல வேளை. சுவாசம் இருக்கிறது. அவனுக்கு நிம்மதி பிறந்தது. திரும்பி வீட்டைப் பார்த்தான். அது சீரடைய எப்படியும் பல மாதங்கள் பிடிக்கும் என்று தோன்றியது. உட்கார்ந்து ஓவென்று அழத் தொடங்கினான்.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத், தன் ஞாபகத்தில் இருக்கும் முதல் சம்பவமாக வருணித்த காட்சிதான் மேலே சொன்னது.

அந்தச் சிறுவன் அவர்தான். அது, ஜெருசலேத்தில் உள்ள அவரது மாமா வீடு. நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியவர்கள், அப்போது பாலஸ்தீனைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் படையினர். அராஃபத்துக்கு அப்போது வயது ஐந்து.

அந்த ஐந்தாவது வயது தொடங்கி, தம் வாழ்நாள் முழுவதும் அவர் சுமார் பத்தாயிரம் கலவரங்களைக் கண்ணெதிரே பார்த்திருக்கிறார்.

பல லட்சம் உயிர்கள் பலியாவதைக் கண்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார்.

ஆயிரமாயிரம் மக்கள் அகதிகளாக, இருக்க இடமின்றிப் பாலைவனங்களில் அலைந்து திரிந்ததைக் கண்டு ரத்தக்கண்ணீர் விட்டிருக்கிறார். ஒரு துண்டு ரொட்டிக்காகத் தம் இனத்து மக்கள் பல மைல்கள் நடந்து, பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறார்.

பாடப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடங்களுக்குப் போகவேண்டிய குழந்தைகள், நாட்டுத்துப்பாக்கி ஏந்தி போர்க்களம் காணவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதன் ஆதாரக் காரணம் என்னவென்று சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் அராஃபத்துக்குள் இருந்த போராளி கண் விழித்தான்.

அவருக்குள் இருந்த தலைவன் சீற்றம் கொண்டான்.

வேறு வழியே இல்லாமல்தான் அராஃபத் துப்பாக்கி ஏந்தினார். இறக்கும்வரை ஏந்திய துப்பாக்கியை அவரால் இறக்கி வைக்கவே முடியவில்லை.

பாலஸ்தீனப் போராட்டத்தின் மிக முக்கிய அத்தியாயம், யாசர் அராஃபத். அவரைப் பற்றிப் பார்க்கும்போது முதலில் நாம் கவனித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய விஷயம், அராஃபத் பாலஸ்தீனில் பிறந்தவர் இல்லை என்பது!

அராஃபத், எகிப்தில் கெய்ரோவில் பிறந்தவர். அவரது தந்தை அங்கே ஒரு சுமாரான துணி வியாபாரி. தாய் வழியில்தான் பாலஸ்தீனத் தொடர்பு அவருக்கு வருகிறது. அராஃபத்தின் அம்மாவின் பூர்வீகம் ஜெருசலேம். இதை ஒரு முக்கியக் குறையாகச் சுட்டிக்காட்டி, அராஃபத்துக்கு பாலஸ்தீனம் மீது உண்மையிலேயே அக்கறை கிடையாது; சம்பாதிப்பதற்காகத்தான் அவர் போராளியானார் என்று குற்றம்சாட்டுவோர் உண்டு.

பின்னாளில் அவரது சொத்துகள் என்று கணக்கெடுக்கப்பட்டவற்றைச் சுட்டிக்காட்டி, 'அப்போதே சொன்னோமே கேட்டீர்களா' என்று கேலி செய்தோரும் உண்டு.

ஆனால், இஸ்லாத்தில் தந்தையைக் காட்டிலும் தாய்வழி உறவுக்குத்தான் மதிப்பு அதிகம். தாய்வழிப் பூர்வீகம்தான் அந்தக் காலத்தில் பாலஸ்தீனில் முக்கிய உறவுத் தொடர்புச் சங்கிலியாக அறியப்பட்டது.

அந்த வகையில் அராஃபத்தின் பூர்வீகம் ஜெருசலேம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஜெருசலேத்தில் பிறந்தவர் அல்லர்; எகிப்தில்தான் பிறந்தார் என்பதிலும் சந்தேகமும் இல்லை.

அராஃபத்துக்கு ஐந்து வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். ஆகவே குழந்தை தாய்மாமன் வீட்டில் வளர்வது நல்லது என்று உறவினர்கள் முடிவு செய்து அவரை ஜெருசலேத்துக்குக் கொண்டுவந்து விட்டார்கள். அப்படி வந்தபோதுதான் முன்னர் நாம் பார்த்த அந்த நள்ளிரவுக் கலவரச் சம்பவம் நடந்தது.

சுமார் நான்கு வருடங்கள்வரை அராஃபத், மாமா வீட்டில், ஜெருசலேத்தில் இருந்தார். அதாவது ஒன்பது வயது வரை. அந்த நான்கு வருட காலமும் அவருக்கு ஜெருசலேம் நகரம் ஒரு வினோதமான பிராந்தியமாகவே தெரிந்தது. திடீர் திடீரென்று குண்டுகள் வெடிக்கும். திடீர் திடீரென்று கடையடைப்பு நடக்கும். எதிர்பாராத நேரங்களில் ராணுவ அட்டகாசம் ஆரம்பமாகும்.

ஒரு பக்கம், புனித பூமி என்று கண்மூடி, கையேந்தித் தொழுதுகொண்டு, இன்னொரு பக்கம் அச்சத்துடன்தான் அங்கே வாழமுடியும் என்கிற நிலைமை, சிறுவன் அராஃபத்துக்குப் புரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. வாழ்க்கை என்பது போராட்டம்.

உணவுக்காக, உறைவிடத்துக்காக, ஊருக்காக என்று மட்டுமில்லை. வாழ்வதென்பதே போராட்டம்தான் என்று அவருக்குத் தோன்றியது.

தன்னால் முழு அக்கறை செலுத்திப் பள்ளிப் பாடங்களைப் படிக்க முடியாது என்றும் நினைத்தார். பாதுகாப்புக்கு ஒரு குறுவாளாவது இல்லாமல் வெளியே போகமுடியாது என்கிற நிலைமையில், பாடங்கள் எப்படி ஏறும்?

மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் அராஃபத். எப்போதாவது கெய்ரோவில் உள்ள தமது மூத்த சகோதரிக்குக் கடிதங்கள் எழுதுவார். ஜெருசலேத்தில் தன்னால் சமநிலையுடன் வாழமுடியவில்லை என்று அக்கடிதங்களில் மிகவும் வருத்தப்படுவார். இங்கே மக்கள் படும் பாடுகளைப் பார்த்தால் நாளெல்லாம் உட்கார்ந்து கதறித் தீர்க்கலாம் போலிருக்கிறது என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இதனை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்ட அராஃபத்தின் சகோதரி, தன் தந்தையிடம் சொல்லி, அராஃபத்தை கெய்ரோவுக்கே அழைத்துக்கொண்டுவர ஏற்பாடு செய்துவிட்டார். அராஃபத்துக்கு உண்மையில் ஜெருசலேத்தை விட்டுப் போவதில் விருப்பம் இல்லை.

வாழ்வது சிரமம் என்று நினைத்தாரே தவிர, ஓடிவிட நினைக்கவில்லை. ஆனால், அவரது தந்தை திடீரென்று ஒருநாள் வந்து அவரை மீண்டும் கெய்ரோவுக்கே அழைத்துப் போய்விட்டார்.

கெய்ரோவில் அராஃபத் தன் மூத்த சகோதரியின் பராமரிப்பில் வளரத் தொடங்கினார். ஏனோ அவருக்குத் தன் சகோதரியைப் பிடித்த அளவுக்கு அப்பாவைப் பிடிக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
யாசர் அராஃபத்தின் தந்தை ஒரு சரியான வியாபாரி. வியாபாரம் ஒன்றைத்தவிர அவருக்கு வேறு எதிலும் நாட்டம் கிடையாது.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் அவர் எண்ணிக் கவலைப்படுகிறவர் இல்லை. தன் தொழில், தன் பணம், தன் சந்தோஷம் என்று மட்டுமே நினைக்கக் கூடியவர் என்பதால்தான் அராஃபத்துக்கு அவரைப் பிடிக்காமல் போனது என்று சிலர் சொல்கிறார்கள்.

வேறொரு சாரார் கருத்துப்படி அராஃபத்தின் தந்தைக்குப் பல வீடுகள் உண்டு. அதாவது பல மனைவிகள். இதுவும் சிறுவன் அராஃபத்தின் மனத்தை மிகவும் பாதித்தது; அதனால்தான் அவர் தன் தந்தையை வெறுத்தார் என்போரும் உண்டு. தன்னுடைய அம்மா இறந்தது பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல், அப்பா பல பெண்களுடன் வாழ்கிறாரே என்கிற வெறுப்பு அவருக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

மூன்றாவது காரணம், அவரது அப்பா ஒரு முசுடு என்பது. குழந்தை என்று அன்பாகத் தூக்கி ஒரு முறை கூடக் கொஞ்சாதவர் என்பதால் பிறந்ததிலிருந்தே அராஃபத்துக்குத் தந்தைப் பாசம் இல்லாமலேயே போய்விட்டது என்று சொல்கிறார்கள்.

என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1952-ல் அராஃபத்தின் தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்குக்குக்கூட அராஃபத் போகவில்லை. அந்தளவுக்கு அவருக்குத் தமது தந்தையுடன் உறவு நிலை சரியாக இருந்ததில்லை என்பது மட்டும் தெரிகிறது.

அராஃபத் முதல் முதலாகத் தமது பதினாறாவது வயதில் ஒரு துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தார். அப்போது அவர் கெய்ரோவில் படித்துக்கொண்டிருந்தார். மனம் முழுக்க ஜெருசலேத்திலும் உடல் மட்டும் கெய்ரோவிலுமாக வாழ்ந்துகொண்டிருந்த அராஃபத்துக்கு அப்போது ஒரு சுமாரான உள்ளூர் புரட்சிக் குழுவுடன் தொடர்பு ஏற்பட்டது.

பாலஸ்தீனில் பிரிட்டிஷ் ராணுவத்தை விரட்டுவதற்காகப் போராடிக்கொண்டிருந்த அரேபியர்களுக்கு ஆயுத உதவி செய்வதற்கென்று உருவான குழு அது.

எகிப்திலிருந்த ஆயுத வியாபாரிகளிடமிருந்து கழித்துக் கட்டப்பட்ட துப்பாக்கிகளை வாங்கி, அவற்றைச் சரிசெய்து, பழுதுபார்த்து, ஜெருசலேத்துக்குக் கடத்துவது அவர்கள் வேலை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 ஜூன், 2005
**********************************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: