Friday, April 3, 2009

89.90.கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை. புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்.பகுதி.89-90

அராஃபத் இதனை ஒப்புக்கொண்டிருந்தால், பாலஸ்தீனியர்களே அவரைக் கொன்றிருக்கக்கூடும்.
------------------------------------------------------------------------------
89] கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 89

மம்மூத் அப்பாஸை ஏற்றாலும் ஏற்போம், அராஃபத்தை ஏற்கமாட்டோம் என்று இஸ்ரேல் ஒற்றைக்காலில் நின்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்துவிடுவது நல்லது.

மம்மூத் அப்பாஸ் என்பவர், மக்கள் தலைவர் அல்லர்.

அராஃபத் உயிருடன் இருந்த காலத்தில், ஒரு தேர்தலில் அவர் தனித்து நின்றால் ஒரு ஓட்டு விழுமா என்பது, சந்தேகம்தான்.

அவர் அராஃபத்தின் சகா. அல் ஃபத்தாவின் ஆரம்பகாலம் முதல், உடன் இருந்து வருபவர். ஓரளவு மிதவாதி என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

அராஃபத்துக்குப் பதிலாக இன்னொருவர் வந்துதான் தீரவேண்டுமென்றால், அது யாராக இருக்கலாம் என்று சொல்வதற்குக் கண்டிப்பாக, பாலஸ்தீனியர்கள் யோசிக்கவே செய்வார்கள்.

ஏனெனில், அவர்களுக்குத் தலைவர் என்றால், அராஃபத் ஒருவர்தான்.

அராஃபத்தே ஒருவரைக் கைகாட்டி, 'இவர்தான் இனிமேல்' என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதில், அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை.

மாறாக, தங்களுக்குத் தலைவராக வரப்போகிறவரை இஸ்ரேல் சிபாரிசு செய்கிறது என்பதை, பாலஸ்தீனியர்களால் ஜீரணிக்கக்கூட முடியவில்லை.

இது இஸ்ரேல் அரசுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், அராஃபத்தை விலக்கிவிட்டு இன்னொருவர் வந்தால்தான் அமைதி என்று அவர்கள் அடம் பிடிக்குமளவுக்கு, அப்படியென்ன அராஃபத் மீது வெறுப்பு?

காரணம் இருக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக பில் க்ளிண்டன் இருந்தபோது, 2000_ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் யோசனையுடன், இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

கேம்ப் டேவிட் என்கிற இடத்தில் சுமார் இரண்டு வார காலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பாலஸ்தீன் அத்தாரிடி சார்பில் யாசர் அராஃபத்தும் இஸ்ரேலின் சார்பில், அப்போதைய இஸ்ரேலியப் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்கும் கலந்துகொண்டார்கள்.

ஓஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தை நல்ல விளைவுகளைத் தரும் என்று எதிர்பார்த்து பொய்த்துப்போன காரணத்தால், இம்முறை மிகக் கவனமாகத் திட்டங்கள் தயாரித்து வைத்திருந்தார் பில் க்ளிண்டன்.

இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த ஐந்தாண்டுகளில் (அதாவது 2005_ம் இந்த ஆண்டு!) பாலஸ்தீன் பிரச்னைக்கு சுமுகமானதொரு நிரந்தரத் தீர்வு கண்டுவிடமுடியும் என்பது அவரது கணக்கு.

அமெரிக்காவுக்கு, பாலஸ்தீன் மீது அப்படியென்ன அக்கறை? என்கிற கேள்விக்கு, ஒரே ஒரு பதில்தான். அன்றைய தேதியில், மத்தியக் கிழக்கு நாடுகள் எது ஒன்றுடனும் அமெரிக்காவுக்குச் சுமுக உறவில்லை.

எங்காவது ஓரிடத்திலாவது நல்லது நடப்பதற்கு, தான் காரணமாக இருப்பது, தனிப்பட்ட முறையில் தன்னுடைய இமேஜை உயர்த்துவதற்கும் அமெரிக்க தேசத்தின் மதிப்பை மத்தியக் கிழக்கில் அதிகரிப்பதற்கும் பயன்படும் என்று க்ளிண்டன் நினைத்தார். அதனால்தான் கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.

க்ளிண்டனின் திட்டம் என்ன?
92 சதவிகித மேற்குக்கரை நிலப்பரப்பிலிருந்தும், 100 சதவிகிதம் காஸா பகுதியிலிருந்தும், இஸ்ரேலிய ராணுவம் விலக்கிக்கொள்ளப்படும்.

பாலஸ்தீன் அத்தாரிடி ஆள்வதற்காக, இஸ்ரேல் அளித்துள்ள தற்போதைய மேற்குக்கரைப் பகுதி மற்றும் காஸாவுடன் இன்னும் ஓரிரு நகரங்களை ஆளும் உரிமையும், பாலஸ்தீன் அத்தாரிடிக்கு வழங்கப்படும்.

மேற்குக்கரைப் பகுதியின் எல்லையோரம் அமைந்துள்ள இஸ்ரேலியக் குடியிருப்புப் பகுதிகளில், எட்டு சதவிகிதம் நிலப்பரப்பு இஸ்ரேலுடன் இணையும்.

அப்பகுதி, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி எல்லைக்குள் வராது.

அதாவது, இஸ்ரேலியக் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளை இஸ்ரேலே ஆளும். பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சிக்குட்பட்ட பிற பகுதிகளில், வசிக்கும் யூதர்கள், படிப்படியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள்.

தற்சமயம் பாலஸ்தீனியர்கள் நுழையவே முடியாதபடி இருக்கும் கிழக்கு ஜெருசலேத்தின் ஒரு பகுதியை, பாலஸ்தீன் அத்தாரிடி, தனது தலைநகராக அறிவித்துக்கொள்ள உரிமை வழங்கப்படும்.

அதேசமயம், ஜெருசலேம் முழுவதுமாக, பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தம் என்றும் ஆகிவிடாது.

மற்ற மதத்தவர்களும் அங்கே வசிக்கலாம். வழிபாட்டுச் சுதந்திரம், அனைவருக்கும் பொதுவானதாக, நிலைநிறுத்தப்படும்.

பாலஸ்தீன் அகதிகள் என்கிற பெயரில், மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி வசித்து வருவோர் தாயகம் திரும்பும் விஷயத்தில், இஸ்ரேல் சிலவற்றை விட்டுக்கொடுக்கும்.

அவர்கள் பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பகுதிகளுக்கு வருவதில், தடையிருக்காது. சர்வதேச அளவில் ஒரு குழு அமைத்து, அகதிகள் தேசம் திரும்பும் விஷயத்தில், உறுதியானதொரு முடிவை விரைவில் எடுக்கலாம்.

க்ளிண்டனின் அமைதித் திட்டத்தின் சாரம் இதுதான். இதனை ஈஹுத் பாரக் முன்னிலையில் யாசர் அராஃபத்திடம் படித்துக்காட்டி, 'என்ன சொல்கிறீர்கள்?' என்று, க்ளிண்டன் கேட்டார்.

அராஃபத் சிறிது நேரம் யோசித்துவிட்டு , 'மன்னிக்கவும். ஒப்புக்கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டார்.

ஈஹுத் பாரக் அதிர்ச்சியடைந்தார். இத்தனை கூடுதல் அதிகாரங்கள் உரிமை வழங்கும் திட்டம் ஒன்றை, க்ளிண்டன் கொண்டுவருவார் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.

இஸ்ரேலிய மக்களுக்கு, தான் என்ன பதில் சமாதானம் சொல்லமுடியும் என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அராஃபத், முற்றிலுமாக இத்திட்டத்தை நிராகரித்துவிட்டதில் க்ளிண்டன், பாரக் இருவருக்குமே தீராத அதிர்ச்சி, வியப்பு.

'உங்கள் மக்களையும் நிலப்பரப்பையும் மிக மோசமான ஒரு சூழலுக்கு நீங்கள் தள்ளியிருக்கிறீர்கள்' என்று, பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் க்ளிண்டன்.

அராஃபத் பதிலே சொல்லவில்லை. கைக்குட்டை அளவு நிலப்பரப்பை அளித்துவிட்டு, கனவை விலைபேசும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை, ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போதே அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

பாலஸ்தீன் அத்தாரிடி என்கிற அமைப்பை ஏன்தான் உருவாக்க ஒப்புக்கொண்டோமோ என்று வருந்திக்கொண்டிருந்தவருக்கு, இந்த அமைதி ஒப்பந்தத்தில் மகிழ்ச்சி கொள்ளத்தக்க எந்த ஓர் அம்சமும் கண்ணில் படாமல் போனதில் வியப்பில்லை.

அராஃபத் இதனை ஒப்புக்கொண்டிருந்தால், பாலஸ்தீனியர்களே அவரைக் கொன்றிருக்கக்கூடும்.

ஏனெனில், சுதந்திர பாலஸ்தீன் என்கிற ஒற்றை கோரிக்கையைத் தவிர, வேறு எது ஒன்றையுமே நினைத்துப்பார்க்கும் நிலையில், யாருமே இல்லை என்பதுதான் உண்மை.

தனிப்பட்ட முறையில் அராஃபத்துக்கேகூட, சதவிகிதக் கணக்குகளில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டிருந்தது. கிடைத்தால் முழு பாலஸ்தீன். இல்லாவிட்டால் முழுமையான போராட்டம். இந்த இரண்டைத் தவிர, இன்னொன்றைச் சிந்திக்கக்கூடாது என்பதில், அவர் தெளிவாக இருந்தார்.

அதனால்தான் க்ளிண்டனின் அமைதித்திட்டத்தை, ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டார் அராஃபத்..

ஈஹுத் பாரக்குக்குக் கடும் கோபம். பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு, அராஃபத்தைக் கிழிகிழி என்று கிழித்து எடுத்து வறுத்துவிட்டார்.

'என்ன மனிதர் இவர்! எதைச்சொன்னாலும் 'நோ, நோ' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவரிடம் எப்படி அமைதிப்பேச்சு சாத்தியம்?

பேச்சுவார்த்தையில் அவருக்கு ஆர்வமே இல்லை. முன்வைக்கப்பட்ட திட்டம் எது ஒன்றையும் பரிசீலிக்காமலேயே மறுப்புத் தெரிவித்துக்கொண்டே வந்தார். நாங்கள் பொறுமையின் எல்லைக்கே போய்விட்டோம். ரசாபாசமாக எதுவும் நடந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அமைதி காத்தோம்' என்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், ஈஹுத் பாரக் சொல்லியிருக்கிறார். (ஏப்ரல், 2001)

பாரக்கின் கருத்துப்படி, அராஃபத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஒரே நோக்கம்தான். பூரண சுதந்திரம் உள்ள முழுமையான பாலஸ்தீன். அதாவது இஸ்ரேல் என்றொரு தேசமே கூடாது. நிலப்பரப்பு முழுவதும் பாலஸ்தீன்தான்.

'நாங்கள் நடைமுறைச் சாத்தியமுள்ள யோசனைகளை முன்வைக்கிறோம். அவர்கள் நடக்கவே முடியாத விஷயத்துக்காகப் போராட நினைக்கிறார்கள்' என்றார் பாரக்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற தினங்களுள், ஒருநாள் மாலை உலாவப் போயிருந்த பாரக், எதிரே அராஃபத் வருவதைப் பார்த்து, புன்னகை செய்தார்.

அன்றுதான் டெம்பிள் மவுண்ட் என்று யூதர்களால் அழைக்கப்படும், பைத்துல் முகத்தஸ் வளாகத்திலுள்ள உமர் மசூதி குறித்துப் பேசியிருந்தார்கள்.

கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியை, பாலஸ்தீன் அத்தாரிடி தனது தலைநகரமாக அறிவித்துக்கொள்ள, அனுமதி அளிப்பது பற்றிய பேச்சுவார்த்தை அது.

கூட்டத்தில், அராஃபத் 'நோ' சொல்லிவிட்டு எழுந்து போயிருக்க, இந்த மாலைச் சந்திப்பின்போது, பாரக் மீண்டும் அந்தப் பேச்செடுத்தபோது, 'அங்கே கோயிலே இருந்தது கிடையாது. நீங்கள் ஏன் திரும்பத்திரும்ப அதை 'டெம்பிள் மவுண்ட்' என்று குறிப்பிடுகிறீர்கள்?' என்று கேட்டதாக, பாரக் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார்.

'மிஸ்டர் அராஃபத், சாலமன் தேவாலயம் அங்கேதான் இருந்தது என்பது, யூதர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில், நானும் அதை நம்புகிறேன். அகழ்வாராய்ச்சிகள் ஏராளமான சான்றுகளைத் தருகின்றனவே' என்று, பில் க்ளிண்டன் சொல்லியிருக்கிறார்.

அராஃபத் புன்னகை செய்தார். 'அகழ்ந்தது யூதர்கள். அறிவித்தது, யூத அரசு. கிடைத்தது என்னவென்று இதுவரை வேறு யாருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்?

கிழக்கு ஜெருசலேத்தில் நீங்கள் எங்களுக்குப் பங்கு கொடுப்பதென்றால், பைத்துல் முகத்தஸ் முழுமையாக பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதென்றால் மட்டுமே சம்மதம்.'

பாரக்கின் கோபம் மேலும் அதிகரித்ததற்கு, இது மிக முக்கியக் காரணம்.

ஏனெனில், கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு பகுதியை அரேபியர்களுக்கு விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருந்தாரே தவிர, மசூதி வளாகத்தை விடுவிப்பது பற்றி, நினைத்துக்கூடப் பார்க்கவில்லை அவர்.

அப்படிச் செய்தால், இஸ்ரேலியர்கள் அவரைப் பதவியிலிருந்து இறக்குவது மட்டுமல்ல,. கட்டிவைத்து எரித்தே விடுவார்கள்.

இது இப்படி இருக்க, 'இட்ஸாக் ராபின் காலத்தில் நடைபெற்ற ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில் கண்டிருந்தபடி, இஸ்ரேல் என்கிற தேசத்தை பாலஸ்தீனியர்களும், பாலஸ்தீன் என்கிற 'அமைப்பை' இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு, அமைதிக்கான அடுத்தக் காலை எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான், என்னுடைய விருப்பம்' என்று சொன்ன பாரக், அராஃபத்துக்கு அந்த எண்ணம் துளிக்கூட இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

உண்மையில், நிஜமாகவே அமைதி தரக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நிராகரிக்கும் மனநிலையில், அராஃபத் அப்போது இல்லை. ஆனால் அமைதிச் சூழல் ஏற்படுத்துவதுபோலத் தோற்றம் காட்டி, அடிமடியில் கைவைக்கக்கூடிய திட்டங்களைத்தான் அவர் எதிர்த்தார்.

ஒரு நல்ல வாய்ப்பு பறிபோய்விட்ட கோபம், பில் க்ளிண்டனுக்கு. அராஃபத் இருக்கும்வரை ஒரு கல்லைக்கூட நகர்த்தி வைக்க முடியாது என்கிற கடுப்பு, ஈஹுத் பாரக்குக்கு.

ஆகவே, அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு முழுமுதல் காரணம் அராஃபத்துதான் என்று திரும்பத்திரும்ப அத்தனை ஊடகங்களிலும் பேசிக்கொண்டே இருந்தார்.

இந்தச் சம்பவம்தான் இஸ்ரேலியர்கள் மத்தியில் அராஃபத் மீது, மிகக் கடுமையான வெறுப்பைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.

தமது மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் விதமாகத்தான் ஈஹுத் பாரக்குக்கு அடுத்து வந்த ஏரியல் ஷரோன், 'அராஃபத்தை நீக்கிவிட்டு வேறொருவரைப் பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராக நியமியுங்கள்' என்று, கோஷமிடத் தொடங்கினார்.

இதுவேதான் அராஃபத்தின் சரிந்துகிடந்த இமேஜை பாலஸ்தீனியர்கள் மத்தியில், மீண்டும் மிக உயரத்தில் தூக்கி நிறுத்தவும் காரணமாக அமைந்தது.

90] புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 90

கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை முயற்சி அடைந்த தோல்வி, பில் க்ளிண்டனுக்குத் தனிப்பட்ட முறையில் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கியது.

அவரது அரசியல் எதிரியாக, எப்போதும் எதுடா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு, விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஜார்ஜ் புஷ், இந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வியை ஒரு மிகப்பெரிய சரிவாக முன்வைத்து, அமெரிக்காவெங்கும் க்ளிண்டனுக்கு எதிரான அதிருப்தி அலையை உருவாக்குவதில், மிகவும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

வேறு பல காரணங்களுக்காகவும் க்ளிண்டனின் மீதிருந்த மதிப்பு சரியத் தொடங்கியிருந்த நேரம்.

தோதாக, ஒரு மிக முக்கியமான சர்வதேசப் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, உருப்படியான தீர்வு எதுவும் காண முடியாமல் போனது, மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்கும் என்று புஷ் குற்றம் சாட்டினார்.

தான் பதவிக்கு வந்தால், கண்டிப்பாக பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு சுமுகத் தீர்வு காணமுடியும் என்று அடித்துச் சொன்னார்.

ஆனால், பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள், பாலஸ்தீன் விஷயத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கான நேரம் கூடிவரவில்லை என்றுதான் அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பிரச்னையை முழுமையாக யாருமே புரிந்துகொள்ளவில்லை என்று திரும்பத்திரும்ப எழுதியும் பேசியும் வந்தார்கள். புஷ், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாகத் தன்னால் ஒரு சரியான தீர்வை முன்வைக்க முடியும் என்று அடித்துச் சொன்னார்.

அது என்ன தீர்வு?
அதையெல்லாம் ஜெயித்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான், உண்மையில் அவர் அப்போது நினைத்தார். வாக்குறுதிகள் அளிப்பதில் பிரச்னை என்ன?

தாராளமாக என்ன வேண்டுமானாலும் அள்ளி வழங்கத் தடையே இல்லை.

ஆட்சிக்கு வந்தபின் நிதானமாகப் பார்த்துக்கொண்டால் போகிறது.
ஆனால், புஷ்ஷின் ஆலோசகர்கள், மற்ற விஷயங்கள் போல் பாலஸ்தீன் பிரச்னையில் அலட்சியம் காட்டவேண்டாம் என்று திரும்பத்திரும்ப வலியுறுத்தியதன் விளைவாக, பாலஸ்தீன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் திட்டம் ஒன்றை புஷ் வகுத்தார்.

முன்னதாக, அமெரிக்கத் தரப்பில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, உதவாமல் கிடந்த ஒன்றிரண்டு பழைய திட்டங்களை (டெனட் ப்ளான் என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டம். மிட்ஷெல் ரிப்போர்ட் என்றொரு அறிக்கை போன்றவை. இவை அனைத்துமே முன்னர் பார்த்த தாற்காலிகத் தீர்வுகளிலேயே, சில மாற்றங்களை மட்டும் சொல்லும் திட்டங்கள். குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இவற்றில் கிடையாது.)

தூசு தட்டி எடுத்து மறுபரிசீலனை செய்து பார்த்து, எதுவுமே நல்ல விளைவுகளைத் தரக்கூடியவை அல்ல என்று உறுதி செய்து தூக்கிப் போட்டுவிட்டுத்தான், புஷ் தனது திட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தார்.

தனது திட்டம் என்னவென்பதை முதலில் சொல்லாமல், 2002-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பாலஸ்தீன் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டார்.

'என்னிடம் ஒரு திட்டம் தயார். கண்டிப்பாக உங்கள் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய திட்டம் இது. அரசியல் லாபங்கள் எதையும் பாராமல் முழுக்க முழுக்கப் பாலஸ்தீன் அமைதி என்பதை மட்டுமே நோக்கமாக வைத்து வரையப்பட்ட திட்டம்.

ஆனால், இந்தத் திட்டம் என்னவென்பதை என்னால் யாசர் அராஃபத்துடன் உட்கார்ந்து பேசமுடியாது. தீவிரவாதத்தின் நிழல் கூடப் படியாத ஒருவரை, உங்கள் தலைவராக முதலில் தேர்ந்தெடுத்தீர்களென்றால் அவருடன் உட்கார்ந்து நான் பேசுகிறேன். அவர் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும். என்னுடைய சாய்ஸ், மம்மூத் அப்பாஸ். என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

இந்தப் பகிரங்க வேண்டுகோளெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனுடன் கலந்து பேசிவிட்டுச் செய்யப்பட்டதுதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அராஃபத் அப்போது வீட்டுச் சிறையில் இருந்தார். எப்போது அவர் விடுவிக்கப்படுவார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று, ஏற்கெனவே இஸ்ரேல் மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்தது.

மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தினசரி நூற்றுக்கணக்கான பாலஸ்தீன் போராளிகள் கைது செய்யப் பட்டுக்கொண்டிருந்தார்கள். நாடெங்கும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த அரேபியர் பகுதிகளையும் நிர்மூலப்படுத்திவிட்டுத்தான் இஸ்ரேல் ஓயும் என்று உலகமே எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க அதிபர் வெளியிட்ட இந்தப் 'புதிய திட்ட' அறிவிப்பு,

பாலஸ்தீனியர்கள் மத்தியில் சட்டென்று ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது.
ஒருவேளை, உருப்படியாக ஏதேனும் இருக்குமோ?

ஆனால் அராஃபத், பதவி விலகினால்தான் வாயையே திறப்பேன் என்கிறாரே? இது உண்மையா அல்லது அராஃபத்தை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் சதியா?

இது ஒரு சந்தேகம். இன்னொரு சந்தேகம், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவந்த யாசர் அராஃபத், உண்மையிலேயே பாலஸ்தீன் மக்களின் நலனை நினைப்பவரா, அல்லது - இஸ்ரேல் சொல்வதுபோல - பதவி ஆசை உள்ளவர்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு.

உண்மையில், அராஃபத்துக்கும் அப்போது வேறு வழியில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அல் அக்ஸா மசூதி மீட்புக்கான தற்கொலைப் படைப்பிரிவு ஒன்று ஆயுதங்கள் வாங்குவதற்காக, இருபதாயிரம் டாலர் தொகையை, அராஃபத் வழங்கியதற்கான ஆதாரங்கள், தன்னிடம் இருப்பதாக அப்போது இஸ்ரேல் அறிவித்தது.

அராஃபத் தாமாக முன்வந்து அதை ஒப்புக்கொள்ளாவிட்டால், மக்கள் மத்தியில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயார் என்றும் ஷரோன் அறிவித்தார்.

நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கவே, வேறு வழியில்லாமல் அராஃபத், மம்மூத் அப்பாஸை பாலஸ்தீன் அத்தாரிடியின் பிரதமராக அறிவிக்க வேண்டிவந்தது.

இது நடந்தது 2003-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி.
அமெரிக்கா இதை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதியது.

ஜார்ஜ் புஷ் உடனடியாக மம்மூத் அப்பாஸை வாஷிங்டனுக்கு அழைத்தார். மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக, சர்வதேச மீடியா முன் தெரிவித்தார்.

ஜூலை 25-ம் தேதி மம்மூத் அப்பாஸ் வாஷிங்டனுக்குப் போனார். புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாள் இடைவெளியில் புஷ், ஏரியல் ஷரோனை அழைத்து 29-ம் தேதி பேசினார்.

இரு தலைவர்களுடன் தனித்தனிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு, அனைவரும் சேர்ந்து பேசுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்தார்.

தனது 'ரோட் மேப்'பை முன்வைத்துப் பேச்சுவார்த்தையை புஷ் தொடங்கினார்.
பாலஸ்தீன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வரைந்தளித்த 'ரோட் மேப்' (Road Map), மூன்று கட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது.

ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில், சாத்தியமாகிவிடக்கூடிய திட்டம் அல்ல அது. பொறுமையாக, நிதானமாக, அக்கறையுடன் ஏற்றுப் பரிசீலிக்கும் பட்சத்தில், நீண்டநாள் நோக்கில் நிரந்தர அமைதிக்கான சாத்தியங்களை, அது அவசியம் வழங்கும் என்று ஜார்ஜ் புஷ் சொன்னார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமான ஜார்ஜ் புஷ்ஷின் அந்த 'ரோட் மேப்' குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம், முன்பே சொன்னதுபோல், மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட வேண்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன் என்கிற இரு தனித்தனி தேசங்களுக்கான அவசியத்தையும் சாத்தியத்தையும் முன்வைத்து வரையப்பட்டது.

'ஒவ்வொரு கட்டப் பணியையும் ஒழுங்காகச் செயல்படுத்துகிற பட்சத்தில், 2005-ம் ஆண்டுக்குள் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுவிடலாம்' என்று புஷ் சொன்னார்.

இது 2005-ம் ஆண்டு. கிட்டத்தட்ட முடியப்போகிற ஆண்டும் கூட. இப்போதும் பாலஸ்தீன் பிரச்னை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை மனத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை அணுகுவது நல்லது:

முதல் கட்டம் : தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, பாலஸ்தீன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பது, உபயோகமான புதிய அமைப்புகளை நிறுவிப் பணிகளைத் துரிதப்படுத்துவது.

இதில் பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்புகள் இவை:
தீவிரவாதத்தை எல்லா வகையிலும் தடுத்து நிறுத்துவது. அதற்கான வெளிப்படையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்ய, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் திட்டமிட்ட, வெளிப்படையான செயல்பாடு தேவை.

புதுப்பிக்கப்பட்ட பாலஸ்தீன் பாதுகாப்புப் படையினரும் இஸ்ரேலிய ராணுவமும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

பாலஸ்தீன் என்கிற தேசத்தை உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரதியை, உடனடியாக உருவாக்க வேண்டும். (கண்டிப்பாக ஜனநாயக தேசமாக மட்டுமே அது அமையும்.)

புனரமைப்புக்கான பணிகளைத் திறமையாகவும் துரிதமாகவும் செய்யக்கூடிய புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

அதிகார மாற்றங்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும். சட்டச் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனடியாக மேற் கொள்ளப் படவேண்டும்.

இஸ்ரேல் அரசின் பொறுப்புகள் இவை :
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள், குடியிருப்புகளை இடிப்பது போன்ற காரியங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
செப்டம்பர் 28, 2000-ம் ஆண்டு தொடங்கி, நிறுவப்பட்ட அத்துமீறிய குடியிருப்புகளை படிப்படியாகக் காலி செய்து, அங்கே குடியமர்த்தப்பட்ட யூதர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.

பாலஸ்தீன் அதிகாரிகள், அமைச்சர்கள், இஸ்ரேலுக்குள் சுலபமாக வந்து போக, அனுமதி வழங்க வேண்டும்.

மனித உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், நிலைமை சீராக உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மார்ச் 2001-க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட, அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.

குடியேற்றம் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும், அப்படி அப்படியே நிறுத்திவிட வேண்டும். அரபுப் பிரதேசங்களில் புதிய யூதக் குடியேற்றங்கள் அமைப்பதோ, இருக்கும் குடியேற்றப் பகுதிகளில் அதிக மக்களைச் சேர்ப்பதோ, அவர்களது இருப்பைச் சட்டபூர்வமாக்க முயற்சிகள் மேற்கொள்வதோ கூடாது.

இவை சரியாக நடைபெறுகிற பட்சத்தில், பாலஸ்தீனின் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்டனுடன் இணைந்து, பாதுகாப்புப் பணிகளை அமெரிக்க ராணுவம் முன்வந்து ஏற்றுக்கொள்ளும்.

பாலஸ்தீன் தீவிரவாதிகளுக்குப் பிற அரபு தேசங்கள் வழங்கி வரும் ஆதரவு, முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். அமைதிக்கான விருப்பம் உள்ள அத்தனை தேசங்களும் இதனை மனமுவந்து செய்யத்தான் வேண்டும்.

புதிய தேசமாக உருக்கொள்ளப்போகிற பாலஸ்தீனின் தொழில் வளர்ச்சிக்காகத் தனியார்துறை ஊக்கப்படுத்தப்படும். இதற்கு சர்வதேச அளவில் நன்கொடை திரட்டப்பட வேண்டும்.

இதுதான் ஜார்ஜ் புஷ்ஷின் 'ரோட் மேப்' விவரிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகள். இன்னும் இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. அவை அடுத்த இதழில்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 அக்டோபர், 2005
**********************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: