Friday, April 17, 2009

99.100. பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே. The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை பகுதி 99.100.

99] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 99.

எல்லா பாலைவனங்களிலும் எப்போதாவது ஒருநாள் மழை பொழியத்தான் செய்யும் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

பாலஸ்தீன் சுதந்திரம் என்பதும் சாத்தியமானதே.

அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் இன்று பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலியத் தொழில் நுட்பங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இனச் சண்டையை இன்னும் தொடர்வது அத்தேசத்தின் மிகப்பெரிய அவமானமே.

பாலஸ்தீன் போராளி இயக்கங்களுடன் போரிடுவதற்காக இஸ்ரேல் செலவிடும் தொகை எத்தனை என்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்.

ஆண்டு வரவு செலவுக் கணக்கில் சராசரியாக நான்கில் ஒரு பங்கை அவர்கள் இதற்குச் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறியதும் பெரியதுமாக எத்தனை யுத்தங்கள், எவ்வளவு இழப்புகள்?

பாலஸ்தீனின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி விட்டு, மேற்குக் கரைப் பகுதிகளையும் காஸாவையும் முற்றிலுமாக அவர்கள் வசம் அளித்து விட்டு இஸ்ரேல் விடைபெற்றுக்கொண்டு,விட்டால், அத்தேசத்தின் வளர்ச்சி சதவிகிதம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதைச் செய்ய அவர்களைத் தடுப்பவை என்னென்ன என்பதைத்தான் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஆனால், இதனைச் செய்துதான் ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் வந்தே தீரும் என்றொரு கணிப்பு இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யூதர்களுக்கு இருந்த இருப்பியல் சார்ந்த பிரச்னைகளும் பதற்றங்களும் இப்போது அறவே இல்லை. உலகம் ஒரு பெரிய கிராமமாகிவிட்ட சூழ்நிலையில் அவர்களால் எங்கு போயும் தமது இருப்பை ஸ்தாபித்துக்கொள்ள முடியும்.

மத, இன அடையாளங்கள் பின்தள்ளப்பட்டு, திறமை இருப்பவன் பிழைத்துக்கொள்வான் என்கிற பொதுவான சாத்தியத்தில் உலகம் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இனச் சண்டைகளில் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்க, யூதர்கள் விரும்பமாட்டார்கள்.

ஆனால், இந்த மனமாற்றம் ஓரிரவில் வரக்கூடியதல்ல.

கொஞ்சம் கொஞ்சமாக வரும். வந்தே தீரும். அதுவரை அமைதி காக்கவேண்டிய அவசியம் பாலஸ்தீனியர்களுக்கும் இருக்கிறது.

தொடர் யுத்தங்களால் இதுவரை தாங்கள் சாதித்ததென்ன என்று அவர்களும் யோசித்துப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளலாம் என்று அராஃபத் முடிவு செய்த பிறகுதான், ஓரிரு நகரங்களாவது அரேபியர்கள் ஆள்வதற்குக் கிடைத்தன.

அதே அமைதிப் பேச்சுகளை மம்மூத் அப்பாஸ் முன்னெடுத்துச் சென்றதன் விளைவாகத்தான் இன்றைக்கு மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளிலிருந்து யூதக் குடியிருப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஆயுதப் போராட்டம் இதுவரை சாதித்தது என்ன?

ஆண்டவனும் ஆண்டவர்களும் கைவிட்ட நிலையில் ஆயுதத்தைத்தான் நம்பவேண்டும் என்று அம்மக்கள் கருதியதைக் குறை சொல்லமுடியாது. ஆனால், ஆயுதங்களைக் காட்டிலும் பேச்சுவார்த்தைகள் வலிமைமிக்கவை என்பதை சரித்திரம் தொடர்ந்து நிரூபித்து வந்திருப்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

இருபத்தோறாம் நூற்றாண்டில் ஆயுதப் போராட்டம் சாதிக்கக்கூடியவையாக உலகில் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு முன்னால் அங்கே நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் அப்பாஸுக்கு இருக்கிறது.

அது ஒன்றுதான் இளைஞர்களை ஆயுதமேந்தவிடாமல் தடுக்கும். ஒரு புதிய தேசத்தைக் கட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. தேசம் பிறக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் இந்த விஷயத்தில் மட்டும் அப்பாஸ் இஸ்ரேலையே ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படலாம், தப்பில்லை.

ஐம்பது ஆண்டுகளில் பாலஸ்தீன் அரேபியர்கள் எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டார்களோ, அதே அளவு போராட்டங்களை இஸ்ரேலும் சந்தித்திருக்கிறது. அதனால் இஸ்ரேலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறதா?

இல்லை அல்லவா? பாலஸ்தீனியர்கள் மட்டும் ஏன் இன்னும் மத்தியக் கிழக்கின் நோஞ்சான் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்?

இஸ்ரேல் ஒரு தேசம்; பாலஸ்தீன் ஒரு கனவு என்று இதற்குப் பதில் சொல்லலாம்.

ஆனால் கனவு நனவாகப்போகிற நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனத்தில் கொண்டு இனியாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள பாலஸ்தீனியர்கள் மனத்தளவில் தயாராகவேண்டும்.

பாலஸ்தீனுக்கு உதவுவதை உலக நாடுகள் அனைத்தும் தமது கடமையாக நினைத்துச் செயல்பட்டாக வேண்டும். ஒரு நூறு பன்னாட்டு நிறுவனங்கள் பாலஸ்தீனில் ஒரே சமயத்தில் கிளை திறந்தால் நடக்கக்கூடிய நல்லவற்றைச் சற்று யோசித்துப் பாருங்கள். இதற்கு ஏன் யாரும் முயற்சி எடுக்கவில்லை?

ஜெருசலேம். இதனை விலக்கிவிட்டு பாலஸ்தீன் பிரச்னை குறித்துப் பேசவே முடியாது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவு உண்மை ஜெருசலேம் குறித்த பிரச்னையைத் தீர்க்கவும் முடியாது என்பது.

ஐ.நா.வின் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இந்நகரைப் பாதுகாக்கப்படவேண்டிய, புராதன நகரமாக சிறப்பு கவனத்துக்குட்பட்ட சுற்றுலாத்தலமாக, மும்மதத்தவரும் வந்து வணங்கிவிட்டுச் செல்லக்கூடிய வழிபாட்டுத் தலமாக, அனைவருக்கும் பொதுவான தொல்லியல் நகரமாக ஆக்கி, பராமரிப்புப் பொறுப்பை நிரந்தரமாக ஐக்கிய நாடுகள் சபையே ஏற்பது ஒன்றுதான் வழி.

இஸ்ரேலோ, புதிதாக மலரவிருக்கும் பாலஸ்தீனோ, பக்கத்து தேசமான ஜோர்டனோ வேறெந்த தேசமோ ஜெருசலேத்தைச் சொந்தம் கொண்டாடினால் எப்போதும் பிரச்னைதான். இதில் கிழக்கு ஜெருசலேம், மேற்கு ஜெருசலேம் என்கிற பிரிவினைகள் கூடப் பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடியதுதான்.

ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்வி இருக்கும் வரை பாலஸ்தீனுக்கு அமைதி கிடையாது. மனத்தளவில் அனைவரும் உணர்ந்த இந்த உண்மையைச் செயல் அளவிலும் கடைப்பிடிக்க இரு தரப்பினரும் தயாராகிவிட்டால், பாலஸ்தீன் சுதந்திரம் கைக்கெட்டும் தூரம்தான்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 நவம்பர், 2005

100.The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை.
நிலமெல்லாம் ரத்தம்-பா.ரா-நிறைவுரை 100.

களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு:

உதவிய நூல்களின் பட்டியல்:
1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)
2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.
3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)
4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.
5. The Politics of Dispossession - Edward Said
6. Peace and its Discontents - Edward Said
7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings
8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)
9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre
10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)
11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)
12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem
14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)
15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)
16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)
17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)
18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)
19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)
20. State of Palestine, Esam Shashaa21. Palestine Refugees, Esam Shashaa22. In the arms of a Father, Haneen al - Far23. UN Report, Intifada, United Nations Publication24. Ancient History of Palestine, Abu Sharar

சில சொற்கள்:
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகள், ஏராளமான இணையத்தளங்களின் தகவல் உதவிகள் இல்லாமல் இத்தொடர் சாத்தியமாகியிருக்க முடியாது.

நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்து தந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி.
(மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.

சென்னை இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பும் சமரசம் மாத இதழின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன் அவர்களும் சில முக்கியமான புத்தகங்களை வழங்கி உதவினார்கள்.

எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான வாசக அன்பர்கள் பாலஸ்தீன் தொடர்பாகத் தம்மிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் சிறு வெளியீடுகளையும் இந்த ஒரு வருடகாலமும் எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்த அன்புக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வாசகர்கள் ஏ. ஜாகீர் மற்றும் தூளான்; சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வாசகர் வெங்கடேசன், ஊட்டி ரன்னிமேடு பகுதியைச் சேர்ந்த வாசகர் தேவசகாயம், கோவையைச் சேர்ந்த முகம்மது கனி ஆகியோரின் ஆர்வத்தைத் தனியே குறிப்பிட விரும்புகிறேன்.

பாலஸ்தீன் பிரச்னை தொடர்பாக இதுகாறும் இந்தியாவில் வெளியாகியுள்ள அத்தனை பத்திரிகைக் குறிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகளையும் எங்கெங்கிருந்தோ தேடி நகலெடுத்து எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தவர்கள் இவர்கள்.

இந்தத் தொடர், சர்வதேசத் தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கில், ரிப்போர்ட்டரில் வெளியானவுடனேயே ஒவ்வொரு வாரமும் பிரதியெடுத்து, தட்டச்சு செய்து, ரிப்போர்ட்டருக்கு நன்றி சொல்லித் தனது பிரத்தியேக வலைப்பதிவில் வெளியிட்டுவந்த தைவானைச் சேர்ந்த ரிப்போர்ட்டர் வாசகர் கிறிஸ்டோபர் ஜான் (http://christopher_john.blogspot.com/) அவர்களுக்கு என் அன்பு.

இந்தப் பணி இந்த அளவில் சாத்தியமானதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் புரிந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்வமுடன் வாசித்து, அவ்வப்போது கடிதங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும்.
பா. ராகவன்.
*******************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(97-98). (99.100.

யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.

Monday, April 13, 2009

97.98. இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?பகுதி 97-98.

97] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 97.

ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜனவரி 9_ம் தேதி பாலஸ்தீன் அதிபர் தேர்தல் நடக்கத்தான் செய்தது; மம்மூத் அப்பாஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை ஏதும் வரவில்லை.

ஹமாஸின் கோபம், அர்த்தமில்லாததல்ல. எங்கே மீண்டும் தமது மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களோ என்கிற பதைப்பில் வந்த கோபம் அது.

ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியினரும் பிற போராளி இயக்கங்களும் 'தேர்தல் முதலில் ஒழுங்காக நடக்கட்டும்; மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று ஹமாஸ் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தியதன் விளைவாக, தேர்தல் நடந்தது.

வெற்றிபெற்ற கையோடு, அப்பாஸ், ஹமாஸ் உள்ளிட்ட அத்தனைப் போராளி இயக்கங்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார். தயவுசெய்து துப்பாக்கிகளைக் கீழே போடுங்கள். யுத்தத்தை நிறுத்துங்கள். இஸ்ரேலியப் படையிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவது என்னுடைய பொறுப்பு. அதேபோல், பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுவதற்கும் நானே பொறுப்பு.

இந்தக் கோரிக்கை இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை.

போராளிகளிடம் அப்பாஸ் கெஞ்சுகிறார் என்று விமர்சித்தது. கைது செய்து உள்ளே தள்ளுங்கள் என்று கத்தியது.

அதுமட்டுமல்லாமல், அல் அக்ஸா தற்கொலைப் படையினர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுடன் அப்பாஸ் இருப்பது போன்ற பழைய புகைப்படங்களைத் தேடியெடுத்து, அப்பாஸ் தீவிரவாத இயக்கங்களுடன் வைத்திருக்கும் தொடர்பு கவலையளிக்கிறது என்று பேசினார் ஏரியல் ஷரோன்.

ஷரோனின் இந்தப் புதிய கவலைக்கு அமெரிக்காவிலிருந்து காலின் பாவெல் பக்கவாத்தியம் வாசித்தார்.

அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, தீவிரவாதிகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்காதீர்கள் என்றார் அவர்.

சொல்லிவைத்தமாதிரி ஜனவரி 13_ம் தேதி காஸா முனையில் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. ஆறு யூதர்கள் பலியான அந்தச் சம்பவத்தைக் காரணமாக வைத்து, ஏரியல் ஷரோன் மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

'இனி எக்காரணம் கொண்டும் பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தை இல்லை. தீவிரவாதத்தை அப்பாஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தினாலொழிய அமைதிப்பேச்சு சாத்தியமில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியுடனான அத்தனை தொடர்புகளையும் அப்படி அப்படியே நிறுத்தி வைக்கிறோம்' என்று சொல்லிவிட்டார்.

இதெல்லாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவை!

அதிபராகத் தேர்வான மம்மூத் அப்பாஸ், இன்னும் ஒரு நாள்கூட பாராளுமன்றம் சென்று, நடவடிக்கை எதையும் தொடங்கியிருக்கவில்லை அப்போது!

அதற்குள் உறவை முறித்துக்கொள்ள ஒரு சாக்கு.

தான் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, போராளி இயக்கங்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்த அப்பாஸுக்கு இன்னும் அதற்கான பதில் கூட வரவில்லை.

அவரது கோரிக்கை, ஹமாஸ் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்களின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா என்பது கூடச் சந்தேகமே. (அத்தனை தலைவர்களும் சிரியாவில் இருந்தார்கள்.

தேர்தலில் வென்றதற்கு மறுநாள் மாலை அதாவது, பத்தாம்தேதி மாலை அப்பாஸ் அறிக்கை வெளியிட்டார். பதிமூன்றாம் தேதி இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடைபெற்றது.

ஒருவேளை இது முன்னமேயே திட்டமிடப்பட்டிருக்கலாம். அல்லது அப்பாஸின் அறிக்கைக்குப் பிறகே கூடத் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். சரியான விவரம் தெரியவில்லை.)

ஒரு வார அவகாசம் கூடத் தராமல் உறவு முறிவு என்று அறிவித்தால், என்ன அர்த்தம்?

ஆனாலும் அப்பாஸ் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் உடனடியாக மேற்கொண்டார். பாலஸ்தீன் அத்தாரிடியின் காவல் துறையினரை, மொத்தமாகத் திரட்டி காஸாவுக்கு முதலில் அனுப்பினார்.

அங்குள்ள யூதக் குடியிருப்புகளுக்கு வலுவான காவல் ஏற்பாடுகளை முதலில் செய்துவிட்டு, போராளி இயக்கங்களின் ராக்கெட் தாக்குதலுக்குத் தடுப்பு அரண்கள் ஏற்படுத்தி, ராக்கெட் எதிர்ப்பு பீரங்கிகளையும் அங்கே கொண்டு நிறுத்தச் சொன்னார்.

இவற்றைச் செய்த கையோடு போராளி இயக்கங்களின் தலைவர்களுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். தயவுசெய்து அமைதி காக்கவேண்டும். எனக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். ஏதாவது நல்லது நடக்குமா என்றுதான் நானும் பார்க்கிறேன்.

உங்கள் ஒத்துழைப்புடன்தான் எதுவுமே சாத்தியம் என்று கெஞ்சினார். இஸ்ரேல் என்ன கிண்டல் செய்தாலும், எத்தனை அவமானப்படுத்தினாலும் இயக்கங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பாலஸ்தீனில் அமைதி இல்லை என்பது அப்பாஸுக்குத் தெரியும்.

அப்பாஸின் இந்த முயற்சிகள் ஓரளவு பலனளித்தன என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த அளவுப் பலன் என்றால், ஏரியல் ஷரோன் கொஞ்சம் இறங்கிவந்து, 'ஆமாம், நீங்கள் அமைதிக்கான முயற்சிகளை எடுக்கத்தான் செய்கிறீர்கள், உங்களுடன் உட்கார்ந்து பேசலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு.

2005 பிப்ரவரி 8_ம் தேதி எகிப்தில் உள்ள ஷாம் அல் ஷேக் (Sharm al Sheikh) என்கிற இடத்தில் அந்தப் பிரசித்தி பெற்ற அமைதி மாநாடு நடைபெற்றது.

எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக், ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் ஏரியல் ஷரோனும் மம்மூத் அப்பாஸும் கைகுலுக்கிக்கொண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

இதனை அமைதி ஒப்பந்தம் என்று சொல்வதைக் காட்டிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பாலஸ்தீன் தரப்பில், அனைத்துப் போராளி இயக்கங்களும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் என்று அப்பாஸும், அதே போல, பாலஸ்தீனிய இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை இனி தாக்குதல் நடத்தாது என்று ஏரியல் ஷரோனும், ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தார்கள்.

இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்தவர், எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக்.

மறுநாளே உலகெங்கும் உள்ள நாளிதழ்கள் இந்தச் சம்பவத்துக்கு சிறப்பிடம் கொடுத்து, முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து சந்தோஷப்பட்டன.

ஒரு வழியாக, பாலஸ்தீனுக்கு அமைதி வந்துவிட்டது என்று இனிப்பு கொடுத்துக் கொண்டாடினார்கள். ஏரியல் ஷரோனும் அப்பாஸும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துவிட்டு, முபாரக்குடன் கைகுலுக்கிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

உண்மையில் நடந்தது என்னவென்பது, கடந்த எட்டு மாதகால சம்பவங்களைக் கவனமாகப் பின்பற்றி வரும் அனைவருக்குமே தெரியும்!

பாலஸ்தீன் போன்ற சிக்கல் மிக்க பிராந்தியத்தில், போராளி இயக்கங்களைக் கலந்தாலோசிக்காமல் அரசாங்கங்கள் எடுக்கும் எந்த முடிவாலும் பிரயோஜனமில்லை என்பதுதான், அத்தேசத்தின் கடந்த ஐம்பதாண்டுகால சரித்திரம் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளைத் தீவிரவாத இயக்கங்கள் என்று இடதுகையால் ஒதுக்கிவிட்டு, நாமாக ஒரு முடிவெடுக்கலாம் என்று நினைப்பது, உண்மையிலேயே முட்டாள்தனமானது.

ஏனென்றால், அந்த அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அங்கே ஆளும் வர்க்கத்தினருக்குக் கிடையாது என்பதை, நம்பமுடியாவிட்டாலும் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.

மேற்படி போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தவுடனேயே இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹமாஸ், 'இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய ராணுவமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நாங்கள் எதற்காக இதைப் பொருட்படுத்த வேண்டும்?' என்று கேட்டது.

ஏரியல் ஷரோன் இதனை உடனடியாக மறுத்தாலும் பின்னர் நடந்த சம்பவங்கள், இதைத்தான் உண்மை என்று நிரூபித்தன. ஒரு பக்கம் இஸ்ரேல் அரசு எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் நடைபெறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, காஸாவில் சில குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படும்.

இங்கே மேற்குக்கரைப் பகுதியில், வழியோடு போகும் யாராவது நாலு பாலஸ்தீனியர்களை, இழுத்து வைத்துக் கட்டி உதைத்துக் கைது செய்துகொண்டு போய்விடுவார்கள். அந்தச் செய்தி வந்த மறுகணமே இந்தச் செய்தியும் சேர்ந்து வரும்!

இந்த அபத்தங்கள் தலைவர்களுக்குத்தான் உறைக்கவில்லையே தவிர, ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே இப்படித்தான் நடக்கும் என்று ஹமாஸ் சொல்லிவிட்டது!

ஹாஸன் யூஸுஃப் என்கிற ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், 'அப்பாஸின் போர் நிறுத்த அமைதி நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. கூடியவரை ஒத்துழைப்பு அளிக்கத்தான் பார்ப்போம்.

ஆனால், பாலஸ்தீனியர்கள் மீது எங்கெல்லாம் தாக்குதல் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்காது' என்று சொன்னார்.

அப்படித்தான் தொடங்கியது. மூன்று மாதங்கள். மே, ஜூன் மாதங்களில் 'புதிய ஏற்பாடு'களெல்லாம் ஒதுக்கிவைக்கப்பட்டு, பழையபடி இருதரப்பிலும் அடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

பழையபடியே, ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, பழையபடியே ஆக்கிரமிப்புகள் செய்துகொண்டு, பழையபடியே தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தி, பழையபடியே பஸ் குண்டுகள் வைத்து..
அராஃபத் இறந்தால் அமைதி என்று சொன்ன இஸ்ரேல் இப்போது என்ன சொல்கிறது?

இதைத்தான் உலகம் கேட்டது. இஸ்ரேலின் உயிர்த்தோழனான அமெரிக்காவே கேட்டது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கேட்டது. அத்தனை முஸ்லிம் தேசங்களும் கேட்டன.

அமைதிக்காக மாநாடு கூட்டி டிபன் காபி கொடுத்து, கைகுலுக்கி அனுப்பிவைத்த ஹோஸினி முபாரக் கேட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலில் நடக்கப்போகிற பொதுத்தேர்தல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌனக் கேள்வியும் இதுதான். என்ன செய்யப்போகிறார்கள்?

ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். ஆனால், நிரந்தரத் தீர்வுக்கெல்லாம் இப்போது சாத்தியமில்லை. அதாவது விருப்பமில்லை. ஆகவே, தாற்காலிகமாக அமைதியைக் கொண்டுவருவதற்கு ஷரோன் ஓர் உபாயம் செய்தார்.

பழைய ஒப்பந்தங்களை எடுத்து, தூசி தட்டிப் படித்துப் பார்த்தார். தனக்கு உடனடியாக நல்லபெயர் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய காரியம் எதுவாக இருக்கும் என்று யோசித்தார்.

வேறு வழியில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியின் அதிகார எல்லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் யூதக் குடியிருப்புகளையெல்லாம் காலி செய்துவிடுகிறோம் என்று அறிவித்துவிட்டு, வேலையை ஆரம்பித்தார்.

அபாரமான முடிவுதான். அமைதிக்கான மிகப்பெரிய முயற்சியும் கூட. சந்தேகமே இல்லை.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தச் செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்துக்கொண்டும் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்திருப்பீர்கள்.

இந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனில் போராளி இயக்கங்களின் தாக்குதல் நடவடிக்கைகளும் கணிசமாகக் குறைந்திருப்பதையும் கவனித்திருக்கலாம்.

திடீரென்று, இஸ்ரேல் இப்படியொரு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

பல்லாண்டுகளாக ஓரிடத்தில் வசித்துக்கொண்டிருக்கும் தமது மக்களை, அது அத்துமீறிய குடியேற்றமே என்றபோதிலும், அப்படிச் செய்ததும் இஸ்ரேல் அரசுதான் என்ற போதிலும் - வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஊரை காலிபண்ணிக்கொண்டு போகச் சொல்லுமளவுக்கு,

இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? உண்மையிலேயே அமைதியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்களா? சுதந்திர பாலஸ்தீன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறதா? இத்தனை ஆண்டுகாலப் போராட்டமெல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறதா?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 நவம்பர், 2005

98] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 98

மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் 1977_ம் ஆண்டு தொடங்கி நிறுவப்பட்ட அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை இஸ்ரேல் இப்போது காலி செய்ய முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றதையும், அனைத்துத் தரப்பினரும் ஏரியல் ஷரோனைப் பாராட்டுவதையும் பார்த்தோம்.

அரேபியர்கள் வாழும் பகுதிகளில் வசித்து வந்த யூதர்கள் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன்மூலம், அரேபியர்களின் நிலப்பகுதி அவர்களுக்கே சொந்தம் என்பதாக இஸ்ரேல் ஒப்புக் கொள்வதாகிறது.

அமைதி நடவடிக்கை இதே ரீதியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகருமானால், காஸா பகுதியில் எப்போதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலிய ராணுவம், அடுத்தபடியாக முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

காஸாவை ஒட்டிய கடல் எல்லைகளும் பாலஸ்தீன் அத்தாரிடியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு அடுத்தபடியாக வந்து சேரும்.

அதற்குமேல் ஒன்றுமில்லை. பூரண சுதந்திரம்தான்.

அவ்வளவுதானா? இதனை நோக்கித்தான் இஸ்ரேல் போய்க்கொண்டிருக்கிறதா? என்றால், இப்போதைக்கு பதில் 'இல்லை' என்பதுதான்.

குடியேற்றங்களைக் காலி செய்வதென்று இஸ்ரேல் எடுத்த முடிவு தாற்காலிக நடவடிக்கைதான்.

இஸ்ரேலில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிற சூழ்நிலையில் பாலஸ்தீன் போராளி இயக்கங்களைச் சற்றே அமைதிப்படுத்தி வைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது.

மிக அதிக விலை கொடுத்துத்தான் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், எப்போது தேவைப்பட்டாலும் பாலஸ்தீன் எல்லைக்குள் திரும்பவும் தனது அதிகார மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் செய்யப்பட்ட காரியம்தான் இது.

ஏனெனில் முப்பது நாற்பது வருடங்களாக, ஒரே இடத்தில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்களை, நாற்றைப் பிடுங்கி நடுவது போலப் பிடுங்கிக்கொண்டுபோய் வேறிடத்தில் வாழச் சொல்லுவதென்பது யூதர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியே தீரும்.

இதற்கான அரசியல் நியாயங்கள் ஏரியல் ஷரோனுக்கு இருக்கலாம். இஸ்ரேல் மக்களுக்கு இதில் எந்த நியாயமும் தெரிவதற்கு நியாயமில்லை!

அரசாங்கம்தான் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துக் கொண்டுபோய் மேற்குக் கரையிலும் காஸாவிலும் குடிவைத்தது. அதே அரசு இப்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றி, குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கியும் இருக்கிறது.

பாலஸ்தீனியர்களின் அமைதிக்காகத் தங்கள் அமைதி பறிபோவதை யூதர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்.

போராளி இயக்கங்கள் அமைதி காத்து, இஸ்ரேல் பொதுத்தேர்தல் வேண்டுமானால் பிரச்னையில்லாமல் நடக்கலாம். ஆனால், இஸ்ரேலியர்கள் அடுத்து அமையப்போகும் அரசை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக ஷரோன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கும் ஒரே பதில்தான். முன்னரே நாம் பார்த்துவிட்ட பதிலும் கூட. அராஃபத்துக்குப் பிறகு அமைதி!

அதை நிரூபிப்பதற்காகச் செய்யப்பட்ட காரியமே தவிர வேறில்லை.
என்றால், பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான வடிவங்களில் அங்கே உலவிக்கொண்டிருப்பது பிரச்னை ஒன்றுதானே தவிர, அமைதி அல்ல. சமகாலம் நமக்குத் தெரிகிறது. சரித்திரத்தைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். புராணங்கள் கதை வடிவில் கிடைக்கின்றன. எந்தக் காலத்திலும் பிரச்னை மட்டும் ஒன்றுபோலவேதான் இருந்துவந்திருக்கிறது.

தலைவர்கள் மாறலாம், ஆட்சி மாறலாம், அதிகாரம் மாறலாம். அவ்வப்போது அமைதி ஒப்பந்தங்கள் அரங்கேறலாம். நிரந்தரத் தீர்வு என்கிற மாபெரும் கனவு நனவாவதற்கு எதுதான் தடையாக இருக்கிறது?

முதலாவது காரணம், இஸ்ரேலிய ஆட்சியாளர்கள். அடிப்படையில் அவர்களுக்கு பாலஸ்தீனை ஒரு சுதந்திர தேசமாக வாழவிடுவதில் விருப்பம் இல்லை.

அரேபியர்களால் யூதர்களுக்கு எப்போதும் ஆபத்துதான் என்பது அவர்களது கருத்து. அடக்கிவைத்திருக்கும் வரைதான் ஜீவித்திருக்க முடியும் என்பது யூதர்கள் தமக்குத்தானே வகுத்துக்கொண்டுவிட்ட சித்தாந்தம்.

சரித்திரம் முழுவதும் ஒதுங்க ஓரிடமில்லாமல் தேசம் தேசமாக ஓடிக்கொண்டிருந்த இனம் அது.

எத்தனையோ போராடி, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து, பிச்சை எடுத்து, கெஞ்சிக் கூத்தாடி, படாதபாடு பட்டு 1948_ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற ஒரு யூத தேசத்தை அவர்கள் தமக்குத் தாமே உருவாக்கிக்கொண்டார்கள்.

அப்படி உருவானதற்கு அவர்கள் பாலஸ்தீன் அரேபியர்களைத்தான் களப்பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது.

ஆயிரம் அமைதி பேசினாலும் இந்த அடிப்படைப் பகை இரு தரப்புக்கும் எந்தக் காலத்திலும் மனத்திலிருந்து அழியப்போவதில்லை.

ஆகவே, இப்போது பாலஸ்தீனுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் நிரந்தர அண்டைநாட்டுச் சண்டை என்றாகிவிடும். தவிரவும் சுதந்திரமடைந்த பாலஸ்தீன், பிற அரபு தேசங்களுடன் இணைந்து இஸ்ரேலைத் தாக்கலாம்.

சுதந்திரம், தனி நாடு என்கிற சந்தோஷம், ஒரு தேசத்து மக்களுக்கு எத்தனை மானசீக பலம் தரும் என்பதற்கு இஸ்ரேல் பிறந்தபோது கண்ட மாபெரும் வெற்றிகளே சாட்சி. அந்த வாய்ப்பைத்தான் அவர்கள் இப்போது பாலஸ்தீனுக்குத் தருவதற்குத் தயங்குகிறார்கள்.

அடுத்தபடியாக பாலஸ்தீனுக்கு சுதந்திரம் என்று பேசினால், ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். குறிப்பாக அந்த மசூதி வளாகம்.

பாபர் என்கிற ஒரு மன்னர் கட்டிய மசூதியை இங்கே இடித்துவிட்டு இன்று வரையிலும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் சிக்கல்களை எண்ணிப் பார்க்கலாம்.

ஜெருசலேத்தில் இருக்கும் மசூதி பாபரைப்போல் ஒரு மன்னர் தொடர்புடையது அல்ல.

இஸ்லாத்தைத் தோற்றுவித்தவரான முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தமுள்ளது.

ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் அது ஒரு புனிதத்தலம். மெக்காவில் உள்ள க'அபாவுக்கு அடுத்தபடியாக ஜெருசலேம் மசூதிதான் அவர்களுக்கு.
அப்படிப்பட்ட தலத்தை இடித்து அகழ்வாராய்ச்சி செய்து அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சாலமன் மன்னர் கட்டிய கோயில் இருக்கிறதா என்று பார்க்க நினைப்பதை எந்த முஸ்லிமாலும் சகித்துக்கொள்ளமுடியாது.


இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் உருப்படியாக ஓர் ஆதாரமும் அகப்படாத நிலையில் தொடர்ந்து அங்கே இஸ்ரேலிய அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நினைப்பது அரசியலே அல்லாமல் வேறல்ல. உயிரை விடாமல் நின்றுகொண்டிருக்கும் ஓர் உடைந்த ஒற்றைச்சுவர்தான் யூதர்களின் ஆதாரம். அந்தச் சுவர் சாலமன் மன்னர் எழுப்பிய ஆலயத்தின் சுற்றுச்சுவர் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடையாது. ஆகவே ஜெருசலேம் ஒரு நிரந்தரப் பிரச்னை பூமியாகிறது.

இந்நிலையில் ஒருவேளை பூரண சுதந்திரமே கிடைத்தாலும் ஜெருசலேம் அல்லாத சுதந்திரத்தை முஸ்லிம்கள் மனமுவந்து ஏற்பது சாத்தியமே இல்லை.


ஜெருசலேத்தை மையமாக வைத்து அடுத்தபடியாக யுத்தம் ஆரம்பமாகும். சொல்லப்போனால் இதுவரை நடந்தவற்றைக் காட்டிலும் உக்கிரமடையவும் வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவது தடை, போராளி இயக்கங்களின் செயல்பாடு. நவீன உலகில் இன்று ஆயுதப்போராட்டங்கள் வெற்றி அடைவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.

ஆயுதம் தாங்கியவர்களை உலகம் எப்போதும் அச்சத்துடன் மட்டுமே பார்க்கும். நெருங்கிப் பேசத் தயங்குவார்கள். போராளிகளை விலக்கிவிட்டு, அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தவே பெரும்பாலான அரசுகள் விரும்புகின்றன.

பாலஸ்தீன் போன்ற தேசத்தில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தாலுமே கூட தொடர்ந்து அதையே ஏன் செய்துவருகிறார்கள் என்று யோசித்துப் பார்க்கலாம்.

தாற்காலிகமாகவாவது இயக்கங்கள் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு உடன்பட்டால் ஓரளவு நியாயமான பலன்களை எதிர்பார்க்க முடியும்.

யாசர் அராஃபத் அமைதிக்குப் பச்சைக்கொடி காட்டிய அதே சந்தர்ப்பத்தில் ஹமாஸும் அவருக்குத் தோள் கொடுத்திருந்தால் நிலைமை வேறு விதமாகியிருக்கும்.

ஹமாஸ் ஓர் அரசியல் இயக்கமல்ல என்பதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. பாலஸ்தீனைப் பொறுத்தவரை அரசியல் தொடங்கி அமைதி வரை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி அது. ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்?

பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வு காணத் தடையாக இருக்கும் மூன்றாவது அம்சம், அரபு நாடுகளின் ஒற்றுமையின்மை. சற்று யோசித்துப் பாருங்கள்.

இஸ்ரேல் என்பது மிகச் சிறியதொரு தேசம். யூத இனம் என்பது ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணிக்கையே கொண்ட மக்களால் ஆனது. அவர்களால் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் பல கோடிக்கணக்கான மக்களுடன் உலகின் இரண்டாவது பெரிய மதம் என்கிற பெயருடன் விளங்கும் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களால் ஏன் தமது இன மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை?

உலகில் வசிக்கும் முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோர் மத்தியக் கிழக்கில்தான் இருக்கிறார்கள். மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் தவிர மற்ற அனைத்து தேசங்களுமே இஸ்லாமிய தேசங்கள்தான். அவர்கள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு காண முடியாதா?

அமைதித் தீர்வைக் கூட விட்டுவிடலாம். 1948 தொடங்கி எத்தனை யுத்தங்கள் அங்கே நடந்திருக்கின்றன! எந்த ஒரு யுத்தத்திலும் ஏன் பாலஸ்தீனியர்களால் வெற்றி பெற முடியவில்லை? சகோதர தேசங்கள் எல்லாம் அப்போது என்ன செய்துகொண்டிருந்தன?

அரபு தேசங்களின் கூட்டமைப்பு இருக்கிறது. அடிக்கடி கூடி மாநாடு நடத்தி இதுநாள் வரை என்ன சாதித்தார்கள் என்று ஏன் தமக்குத் தாமே அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை?

உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்தில் அவர்களுக்கு விருப்பமாவது இருக்கிறதா இல்லையா?

இதற்கான சரியான காரணம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. சொன்னால் வலிக்கும் என்றாலும் சொல்லாமல் இருக்க முடியாது.

மற்ற அனைத்து அரபுதேசங்களுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்கு பாலஸ்தீன் ஒரு ஏழை நாடு. அங்கே பெட்ரோல் கிடைப்பதில்லை. இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

மேலும் ஆண்டுக்கணக்கில் போராட்டத்தில் வாழ்க்கையைக் கழித்த மக்கள். அடிப்படை வசதிகள் கூட கிடையாது. விவசாயம் செத்துவிட்டது. கல்வியறிவு சதவிகிதம் குறைவு. வேலை வாய்ப்புகள் குறைவு.

தொழில் தொடங்கி நடத்தும் சாத்தியங்கள் குறைவு. வெளிதேசத் தொழில் நிறுவனங்கள் பாலஸ்தீனில் முதலீடு செய்வதென்பதும் மிக மிகக் குறைவு.

வசதி வாய்ப்புகளற்ற, தினசரி யுத்தம் நடக்கிற ஒரு தேசம் அது.

சொந்த இனமே என்றாலும் ஆதரவு தெரிவித்துவிட்டுப் பின்னால் யார் அரவணைத்து வளர்ப்பது என்கிற பதுங்கல் மனப்பான்மை அனைத்து அரபு தேசங்களுக்கும் உண்டு.

இதனாலேயே பாலஸ்தீன் பிரச்னைக்கும் தமக்கும் தொடர்பில்லாதது போல அவர்கள் காலம் காலமாக நடந்துகொண்டு வருகிறார்கள்.

பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் உள்ள நான்காவது தடை, அகதிகள். 1948_ம் ஆண்டு தொடங்கி இன்று வரை பல லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழ வழியில்லாமல் மத்தியக் கிழக்கு முழுவதும் அகதிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரம் என்று வருமானால் அத்தனை பேரும் பாலஸ்தீனை நோக்கித்தான் வந்து சேருவார்கள்.

இந்த ஐம்பதாண்டுகளாகப் பெருகியுள்ள மக்கள் தொகைக்குக் கிட்டத்தட்ட சம அளவில் அகதிகளின் எண்ணிக்கையும் இருக்கும். சுதந்திர பாலஸ்தீனின் எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பு கனம் தாங்காமல் தள்ளாடும்.

ஆகவே எல்லைகளில் ஊடுருவல் நடக்கும். அது சண்டைக்கு வழி வகுக்கும்.

பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இஸ்ரேலின் பாதுகாப்புக்குக் கேடு என்று இஸ்ரேல் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இன ரீதியில் ஒன்றானவர்களைத் தேசிய அடையாள ரீதியிலும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க அனுமதிப்பது தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம் என்று இஸ்ரேல் கருதுகிறது.

ஐந்தாவது தடை, விவரிக்கவே அவசியமில்லாத ஈகோ பிரச்னை. இது இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல் யூத மக்களிடத்திலும் ஆழமாக வேரோடியிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

ஐம்பதாண்டு காலமாக பாலஸ்தீன் அரேபியர்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த ஆணவம், அத்தனை சுலபத்தில் அவர்களை விட்டு இறங்க மறுக்கிறது.

யுத்தமும் இழப்புகளும் பழக்கமாகிவிட்டபடியால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் மனோபாவம் மட்டுமே மேலோங்கியிருக்கிறது.

சரித்திரம் தங்களுக்குத் துரோகம் இழைத்ததை இன்று வரை மறக்காத யூதர்கள், சகோதர அரேபியர்களுக்குத் தாங்கள் இழைப்பதும் துரோகம்தான் என்பதை எண்ணிப் பார்க்க மறுக்கிறார்கள்.

இந்தக் காரணங்களால்தான் ஆயிரம் முறை அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாலஸ்தீன் பிரச்னை இன்றுவரை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 நவம்பர், 2005
*************************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

Wednesday, April 8, 2009

95.96.ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர் காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு.பகுதி 95-96.

அராஃபத் என்றொரு மனிதர் பாலஸ்தீனில் தோன்றாமல் போயிருந்தால், இன்றைக்கு நாம் பேசுவதற்கு 'பாலஸ்தீன்' என்றொரு பொருள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
******************************************************
95] ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 95

குறையில்லாத மனிதர்கள் இல்லை. ஓர் அரசியல்வாதியாக யாசர் அராஃபத்தின் சரிவுகளை, சறுக்கல்களைப் பார்க்கும் அதே சமயத்தில், ஒரு போராளியாக அவர் நின்று சாதித்தவை எதுவும் நினைவிலிருந்து தப்பவே தப்பாது.

அராஃபத் என்றொரு மனிதர் பாலஸ்தீனில் தோன்றாமல் போயிருந்தால், இன்றைக்கு நாம் பேசுவதற்கு 'பாலஸ்தீன்' என்றொரு பொருள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய பாலஸ்தீனியர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குச் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி, போராடச் சொல்லிக்கொடுத்து, தானே தலைமை தாங்கி, நெறிப்படுத்தி,

பாலஸ்தீன் பிரச்னையை முதல்முதலில் சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் சென்று, போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, விடாமல் அமைதி முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து வந்தார்.

அவரது பாணி கொஞ்சம் புதிர்தான். ஆனாலும், அவரது அரசியல் பாணிதான் இஸ்ரேல் விஷயத்தில் எடுபடக்கூடியதாக இருந்தது. அல்லாதபட்சத்தில், ஒட்டுமொத்த பாலஸ்தீன் மக்களையும் 'பாலஸ்தீன் அகதிகளா'க்கி உலகெங்கும் உலவவிட்டிருப்பார்கள்.

அராஃபத் என்கிற ஒரு நபருக்குத்தான் இஸ்ரேலிய அதிகாரிகள் பயந்தார்கள்.

ஏரியல் ஷரோன் அஞ்சியதும் அவர் ஒருவருக்குத்தான். அராஃபத்தைக் கொன்றுவிட்டால் தன்னுடைய பிரச்னைகள் தீரும் என்றேகூட அவர் கருதி, வெளிப்படுத்தியிருக்கிறார்.

அராஃபத் மீது அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அடிக்கடி அவரது வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தி, அவரை வீட்டுச் சிறையில் வைத்து, வெளியே ராக்கெட் தாக்குதல் நடத்தி எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அச்சமூட்டிப் பார்த்தார்கள். அவராக எங்காவது ஓடிப்போனால்கூடத் தேவலை என்று நினைத்தார்கள்.

அசைந்துகொடுக்கவில்லை அவர். போராளி இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தார் என்கிற ஒரு குற்றச்சாட்டைத் தவிர, அராஃபத் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டினார்கள். அதில் சந்தேகமென்ன?

அவர் சர்வாதிகாரிதான். ஒரு போராளி இயக்கத் தலைவர், ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுக்கும்போது, ஜனநாயகவாதியாக எப்படிக் காலம் தள்ளுவார் என்று எதிர்பார்க்கலாம்?

அவரது அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள், அவருக்கு அப்படியொரு தோற்றம் அளித்ததை மறுக்கமுடியாது. ஆனால் அராஃபத், ஒருபோதும் தன்னை ஒரு ஜனநாயக அரசியல்வாதியாகச் சொல்லிக்கொண்டதில்லை.

எப்படி அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாகவும் சொல்லிக் கொள்ளவில்லையோ, அப்படி!

அரசுப்பணத்தை, அவர் தமது சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டார், மனைவி பேரில் நிறைய சொத்து சேர்த்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் கிடையாது.

பலபேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால், உறுதியான ஆதாரங்கள் எதற்கும் இல்லை என்பதும் உண்மை. அராஃபத்தின் வீட்டில் பலமுறை சோதனையிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், அங்கிருந்து போராளி இயக்கங்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள், அனுப்பிய பணத்துக்கான ரசீது போன்றவற்றைத்தான் கைப்பற்றினார்களே தவிர, கோகோகோலா நிறுவனத்திலோ, மொபைல் போன் நிறுவனத்திலோ அவருக்கு இருந்ததாகச் சொல்லப்பட்ட பங்குகளுக்கான பத்திரங்களை அல்ல.

இதெல்லாம் பாலஸ்தீனியர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனாலும், அவர்கள் அராஃபத் மீது மனத்தாங்கல் கொண்டதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. தொடர்ந்து மீடியா அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவது பற்றிய எரிச்சல், தள்ளாத வயதில் அராஃபத் செய்துகொண்ட திருமணம்,

பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்புக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த அவரது விநோதமான மௌனம் என்று பட்டியலிடலாம்.

முக்கியக் காரணம், இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு என்கிற ஒரு விஷயத்தை அவர்தான் ஆரம்பித்துவைத்தார் என்பது. இது பாலஸ்தீனியர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒரு விஷயம்.

அமைதிப் பேச்சுக்கு இஸ்ரேல் லாயக்கில்லாத ஒரு தேசம் என்பது, அவர்களின் தீர்மானமான முடிவு. அராஃபத், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது அவர்களுக்கு வேறுவிதமான சந்தேகங்களைக் கிளப்பிவிட்டது.

ஒரு பக்கம் அவரது சொத்துகள் பற்றிய பயங்கர வதந்திகள் வர ஆரம்பிக்க, மறுபக்கம் அவர் இஸ்ரேலுடன் அமைதி பேசிக்கொண்டிருக்க, எங்கே தங்கள் தலைவர் விலைபோய்விட்டாரோ என்று, அவர்கள் மனத்துக்குள் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

இதுதான் பிரச்னை. இதுதான் சிக்கல். நடுவில் சிலகாலம் அராஃபத்தின் இமேஜ் நொறுங்கியதற்கான காரணம் இதுதான்.

ஆனால், உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்த அராஃபத்தை இஸ்ரேல் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, மேற்குக்கரை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடத்தி, குடியிருப்புகளை நாசம் செய்து, சளைக்காமல் ராக்கெட் வீசித் தாக்கத் தொடங்கியபோதே, அராஃபத் மீது அவர்களுக்கு அனுதாபம் பிறந்துவிட்டது.

தங்கள் தலைவர் உயிருக்கு ஆபத்து என்கிற எண்ணம் எப்போது அவர்களுக்கு முதல்முதலில் தோன்றியதோ, அப்போதே பழைய கசப்புகளை மறந்து அவரைக் காப்பாற்ற முடிவு செய்து, ஒட்டுமொத்த பாலஸ்தீனியரும் போராட்டத்தில் குதித்தனர்.

அராஃபத் மீதான அவர்களின் அன்பு எத்தகையது என்பதற்கு மற்றெந்த உதாரணத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் அவரது மரணம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.

செப்டெம்பர் 2004_லிலேயே அராஃபத்தின் உடல்நலன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டிருந்தது. அவருக்கு என்ன பிரச்னை என்பது பற்றி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

வயதான பிரச்னைதான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மையில், ரத்தம் சம்பந்தமான சில கோளாறுகள் அவருக்கு இருந்தன.

நரம்புத்தளர்ச்சி நோயும் இருந்திருக்கிறது. அக்டோபர் மாத இறுதியில் அவரது உடல்நிலை முற்றிலும் சீர்குலைந்து சிகிச்சைக்காக அவர் பாரீசுக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதே பாலஸ்தீனியர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் ரமல்லாவை விட்டு நகராமல் இருந்த அராஃபத், இப்போது பாரீசுக்குத் 'தூக்கிச் செல்லப்படுகிறார்' என்று கேள்விப்பட்டபோதே, அவர்களால் என்ன நடக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

தாங்கமுடியாமல் அப்போதே வீதிக்கு வந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். தங்களை அநாதைகளாக்கிவிட்டுத் தங்கள் தலைவர் போய்விடப்போகிறார் என்கிற அச்சத்தில் அவர்கள் அழுதார்கள். இனி யார் தங்களுக்கு மீட்சியளிப்பார்கள் என்று கையேந்தித் தொழுதார்கள்.

ஆனால், அராஃபத்தை பாரீசுக்கு அழைத்துச் சென்றபோதே, தலைவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

சிகிச்சை எதுவும் அவருக்கு மறுவாழ்வு அளிக்காது என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது.

பாரீசில் உள்ள பெர்ஸி ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பேச்சு கிடையாது. மூச்சு மட்டும் லேசாக வந்து கொண்டிருந்தது. கோமா நிலைக்கு அவர் போய்க்கொண்டிருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

அதிலிருந்து மீள முடியுமா என்று தெரியாது என்றும் சொன்னார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் இந்தப் போராட்டம் இருந்தது. ஒரு கட்டத்தில் இனி அவரை மீட்கவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட,

பாலஸ்தீன் அரசியல்வாதிகள், தங்கள் கணவரைக் கொன்றுவிட முடிவு செய்துவிட்டதாக, பாரீசில் இருந்த அராஃபத்தின் மனைவி சுஹா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கருணைக்கொலை குறித்த பேச்சுக்கள் எழுந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதெல்லாம் யூகங்கள்தான். உறுதியாக அப்படி யாரும் பேசியதற்கான ஆதாரங்கள் கிடையாது.

தவிரவும் அராஃபத் போன்ற ஒரு மக்கள் தலைவர் விஷயத்தில் அவரது அமைச்சர்கள் அப்படியெல்லாம் அதிரடி முடிவு எடுத்துவிடவும் மாட்டார்கள். ஒருவேளை டாக்டர்களே அதைச் சிபாரிசு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள். இதற்கும் ஆதாரம் கிடையாது.

மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு, நவம்பர் 11_ம் தேதி (2004) அதிகாலை 4.30 மணிக்கு யாசர் அராஃபத் இறந்துவிட்டதாக பெர்ஸி ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்கள்.

அவரது வாழ்க்கையைப் போலவே, அவரது மரணமும் கேள்விக் குறிகளுடன்தான் இருக்கிறது!

உண்மையில் அவர் முன்பே இறந்திருக்க வேண்டும்; சமயம் பார்த்து அறிவிப்பதற்காகத்தான் காலம் கடத்தினார்கள் என்று பலமான வதந்தி எழுந்தது.

பாலஸ்தீனிலிருந்து அவரை பாரீசுக்கு அழைத்துச் சென்றபோதே அவர் இறந்திருக்கக்கூடும் என்று கூட ஒரு வதந்தி உண்டு.

சொத்து விவரங்கள் குறித்த இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவும், பாலஸ்தீன் அத்தாரிடியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த ஒருமித்த முடிவுக்கு வருவதற்காகவுமே இந்தக் காலதாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் சொன்னார்கள். எல்லாம் வதந்திகள்!

அராஃபத்தின் மரணச் செய்தியை மேற்குக் கரையில் அவரது உதவியாளர் தயெப் அப்துற்றஹீம் என்பவர் அறிவித்தார்.

கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் கதறினார்கள். நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்கள். பாலஸ்தீன் நகரங்களில் வசித்த ஒவ்வொரு தாயும் தன்னுடைய மகன் இறந்ததாகக் கருதி அழுதார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சகோதரர் இறந்துவிட்டதாக நினைத்துத் தேம்பினார்கள். ஒவ்வொரு ஆண்மகனும் தன் ஆத்மாவைத் தொலைத்து விட்டதாகக் கருதிக் கதறினார்கள்.

எப்பேர்ப்பட்ட இழப்பு அது!

பாலஸ்தீன் என்கிற ஒரு கனவு தேசத்தின் முகமாக அல்லவா இருந்தார் அவர்?

பாலஸ்தீன் மக்களிடையே சுதந்திரக் கனலை ஊதி வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவரல்லவா அவர்? ஆயிரம் தோல்விகள், லட்சம் குற்றச்சாட்டுகள், கோடிக்கணக்கான அவமானங்கள் பட்டாலும் தன் மௌனத்தையே தன் முகவரியாகக் கொண்டு, போராட்டம் ஒன்றைத் தவிர வேறொன்றைச் சிந்திக்காமலேயே வாழ்ந்து மறைந்தவரல்லவா அவர்?

அற்பமாக ஆயிரம் குற்றச்சாட்டுகள் முன்வைத்து ஒருவரது பெயரைக் கெடுக்கலாம். என்ன செய்தாலும், ஐம்பதாண்டு காலமாகப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, பாலஸ்தீனின் தந்தை என்கிற பெயரைப் பெற்றவரை அந்த மக்களின் மனத்திலிருந்து முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட முடியுமா என்ன?

அராஃபத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் படர்ந்திருந்த சோகம், இன்னுமொரு நூற்றாண்டு காலத்துக்கு நம் கண்களை விட்டு நகரப்போவதில்லை என்பது நிச்சயம். அவர்கள் கதறலை தொலைக்காட்சியில் பார்த்தோமே? மறக்கக்கூடியதா அந்தக் காட்சி?

ஆனால், அராஃபத்தின் மரணச் செய்தி வெளியானவுடனேயே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பாலஸ்தீன் பிரச்னை இனி மிக விரைவில் சுமுக நிலையை நோக்கி நகரும். விரைவில் தீர்வு காணப்படும்' என்று சொன்னார்.

இதன் அர்த்தம், அராஃபத் ஒருவர்தான் அமைதிக்குத் தடையாக இருந்தார் என்பதுதான்!

அதாவது அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ராபினுடன் இணைந்து பெற்ற அராஃபத்!

துப்பாக்கி ஏந்திய கரங்களில் ஆலிவ் இலை ஏந்தி ஐ.நா. சபைக்குச் சென்று உரையாற்றிய அராஃபத்!

தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை; தமது மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்காதா என்கிற ஒரே எதிர்பார்ப்புடன் ஓஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, தமது சொந்த மக்களாலேயே இழித்துப் பேசப்பட்ட அராஃபத்!

போராளி இயக்கங்களுக்கு உதவி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் அமைதிக்கான கதவுகளையும் எப்போதும் திறந்தே வைத்திருந்த அராஃபத்!

ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை விவரத்தை அறிந்த அத்தனை பாலஸ்தீனியர்களும் மௌனமாக மனத்துக்குள் துடித்தார்கள்.

இப்படிக்கூடவா ஒரு மனிதர் இருக்க முடியும்? ஒரு மாபெரும் தலைவரின் மரணத் தருணத்தில் கூடவா வன்மம் காட்டமுடியும்?

இந்தச் சம்பவம்தான் ஹமாஸை அப்போது பலமாகச் சீண்டியது. அராஃபத் இறந்துவிட்டார். இனி அமைதி திரும்பிவிடும் என்று அமெரிக்க அதிபர் சொல்கிறார்.

ஆமாம், அப்படித்தான் என்று ஏரியல் ஷரோன் பதில் பாட்டு பாடுகிறார். பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா?

அன்றைய தினமே ஹமாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டது. 'இஸ்ரேல் மீதான எங்கள் புனிதப்போரை அராஃபத்தின் மரணம் இன்னும் தீவிரப்படுத்துகிறது. தாக்குதல் தொடரும். இன்னும் வலுவாக.''

மூன்றே வரிகள். வெலவெலத்துவிட்டது இஸ்ரேல்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 அக்டோபர், 2005

96] காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 96

யாசர் அராஃபத்தின் மரணம், சர்வதேச அளவில் உருவாக்கிய கவன ஈர்ப்பு மற்றும் துக்கத்தைத் தாண்டி மூன்று முக்கிய விளைவுகளுக்குக் காரணமானது.

முதலாவது, அராஃபத்துக்குப் பிறகு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மம்மூத் அப்பாஸ், எப்பாடுபட்டாவது பாலஸ்தீனில் அமைதியைக் கொண்டுவந்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டது;

இரண்டாவது, அராஃபத்தான் அமைதிக்கு வில்லனாக இருக்கிறார் என்று தொடர்ந்து பேசிவந்த இஸ்ரேல், இனி ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்கிற சர்வதேச நெருக்கடிக்கு உள்ளானது;

மூன்றாவது, அராஃபத் இறந்ததும் அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் ஆற்றிய உரைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகளால் சீண்டப்பட்ட ஹமாஸ், தமது ஆயுதப் போராட்டத்தை முன்னைக்காட்டிலும் பன்மடங்கு தீவிரப்படுத்த முடிவு செய்தது.

முதல் இரண்டு விளைவுகளுக்கும் இந்த மூன்றாவது விளைவு, பெரும் எதிரி. மம்மூத் அப்பாஸோ, இஸ்ரேலிய அரசோ ஹமாஸைக் கட்டுப் படுத்துவதென்பது, இயலாத காரியம்.

தவிரவும் ஹமாஸ் தனது இரண்டு பெரும் தலைவர்களை அப்போதுதான் ராக்கெட் தாக்குதலுக்கு பலிகொடுத்திருந்தது. அந்தக் கோபமும் உடன் சேர்ந்திருந்தது.

ஆகவே, எந்த ராக்கெட் தாக்குதலில் தனது தனிப்பெரும் தலைவர்களை இழந்தார்களோ, அதே ராக்கெட் தாக்குதல் மூலம் இஸ்ரேலை நிலைகுலையச் செய்வது என்று, ஹமாஸ் முடிவு செய்தது. கஸம் (Qassam) என்னும் தனது பிரத்யேக ராக்கெட்டுகளை ஏவி, இஸ்ரேலிய இலக்குகளை அழிக்கத் தீர்மானித்தது.

இந்தக் கஸம் ராக்கெட்டுக்கு ஒரு சரித்திரம் உண்டு. ஒரு போராளி இயக்கம், தனக்கென தனியொரு ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக ராக்கெட்டுகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்று, உலகுக்கு முதல் முதலில் செய்து காட்டியது ஹமாஸ்தான்.

மேலோட்டமான பார்வைக்கு கஸம் ராக்கெட்டுகள் மிகச் சாதாரணமானவை. ராக்கெட் வடிவ வெளிப்புறம்; உள்ளே அடைக்கப்பட்ட வெடிமருந்துகள் என்பதுதான் சூத்திரம். ஆனால், இதில் மூன்று விதமான ராக்கெட்டுகளை அவர்கள் தயாரித்தார்கள்.

குறுகிய இலக்குகளைத் தாழப் பறந்து தாக்கும் ரகம், சற்றே நீண்டதூர இலக்குகளைத் தாக்கவல்ல ரகம், வேகம் அதிகரிக்கப்பட்ட, நடுவே திசைமாற்றிச் செலுத்தத்தக்க தானியங்கி ரகம் ஒன்று.

ஆனால், இந்த மூன்று வித ராக்கெட்டுகளுக்கும் விளக்கப் புத்தகமோ, தயாரிப்புக் கையேடோ கிடையாது. ஹமாஸின் மிகச் சில மூத்த நிபுணர்களுக்கு மட்டுமே இந்த ராக்கெட்டுகளை உருவாக்கத் தெரியும். அதுகூட 2004_ம் ஆண்டுக்குப் பிறகுதான்.

அதற்கு முன், கஸம் ராக்கெட்டை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநர் அட்னான் அல் கௌல் (Adnan al – Ghoul) என்பவருக்கு மட்டும்தான் அந்த ராக்கெட் சூட்சுமம் தெரியும்.

ஒரே ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, பல்லாண்டு காலம் ஆராய்ச்சி செய்து, ஹமாஸுக்கென்று பிரத்யேகமாக இந்த ராக்கெட்டை உருவாக்கித் தந்தவர் அவர்.

2004_அக்டோபரில் அவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்படுவதற்கு மிகச் சில வாரங்கள் முன்னர்தான் எதற்கும் இருக்கட்டும் என்று ராக்கெட் தொழில்நுட்பத்தை ஹமாஸின் சில மூத்த பொறியியல் வல்லுநர்களுக்கு அவர் கற்பித்திருந்தார்!

கஸம் ராக்கெட்டுகளை ஹமாஸ், பெரும்பாலும் காஸா பகுதிகளில்தான் பயன்படுத்தியது. அந்த ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையும் காஸாவில்தான் இருந்தது.

மேற்குக் கரைப் பகுதிக்குத் தரை மார்க்கமாக, அதை எடுத்துச் செல்வதில் இருந்த பிரச்னைகள் காரணமாக, கஸம் ராக்கெட்டுகள் காஸாவின் பிரத்யேக ஆயுதமாகவே கருதப்பட்டு வந்தது.

அட்னான் அல் கௌல், எப்படியாவது காஸாவில் ஏவினால் டெல் அவிவ் வரை போய் வெடிக்கக்கூடிய விதத்தில் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவிட வேண்டும் என்றுதான் இறுதிவரை பாடுபட்டார். ஆனால், அது நடக்கவில்லை.

ஹமாஸின் கஸம் உருவாக்கிய 'பாதிப்பில்' பாலஸ்தீனில் உள்ள பிற போராளிக்குழுக்களும் தமக்கென பிரத்யேகமான ராக்கெட் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ளப் பெரும்பாடு பட்டன. கஸம் போல, முற்றிலுமாக சுதேசி தொழில்நுட்பத்தில் தயாரிக்க முடியவில்லை.

என்றாலும், அவர்களும் ஓரளவு பலன் தரத்தக்க ராக்கெட்டுகளைத் தமக்கென உருவாக்கவே செய்தார்கள்.

உதாரணமாக, பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் போராளி இயக்கம், ஒரு ராக்கெட்டை உருவாக்கி, அதற்கு அல் கட்ஸ் (Al -quds) என்று பெயரிட்டது.

பாப்புலர் ரெஸிஸ்டண்ட் கமிட்டி அமைப்பு, அல் நஸ்ஸர் (Al -Nasser) என்றொரு ராக்கெட்டைத் தனக்கென தயாரித்துக்கொண்டது. ஃபத்தா அமைப்பினர், கஃபா (Kafah) என்றொரு ராக்கெட்டைப் பயன்படுத்தினர். டான்ஸிம் அமைப்பினர், ஸெரயா (Seraya) என்கிற ராக்கெட்டைப் பயன்படுத்தினர்.

ஒரு தாக்குதல் நடந்துமுடிந்தபிறகு, தாக்குதலைச் செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய, இந்தப் பிரத்யேக ராக்கெட்டுகள்தான், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினருக்கு உதவி செய்தன.

ஹமாஸின் 'கஸம்' ராக்கெட்டுகள், குறைந்தபட்சம் 5.5 கிலோ எடையும் அதிகபட்சம் 90 கிலோ எடையும் உள்ளவை. இந்த ராக்கெட்டுகள், மூன்றிலிருந்து பத்து கிலோ வெடிபொருள்களைச் சுமந்து சென்று வெடிக்கச் செய்யவல்லவை.

அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் தூரம் வரை இவை பறந்து சென்று தாக்கும். பிற இயக்கங்களின் ராக்கெட் தொழில்நுட்பம், கஸம் ராக்கெட்டுடன் ஒப்பிடக்கூட முடியாதவை. அதிகபட்சம் அந்த ராக்கெட்டுகள் சில நூறு மீட்டர்கள் வரை மட்டுமே பறக்கும்.

அராஃபத் இறந்த மறுதினமே ஹமாஸ் தன்னுடைய யுத்தத்தைத் தொடங்கிவிட்டது. நஹல் ஓஜ் (NahalOz) , க'ஃபர் தரோம் (K'far Darom) என்ற இரு இஸ்ரேலிய இலக்குகளைக் குறிவைத்து, நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீச ஆரம்பித்தார்கள்.

இதில், கஃபர் தரோம் பகுதியில் இருந்த ஒரு கிண்டர்கார்டன் பள்ளிக்கூடம், மிகக் கடுமையான சேதத்துக்கு உள்ளானது. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நகரின் மின்சாரத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வந்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற நிலைமை.

இஸ்ரேல் ராணுவத்தால், ஹமாஸின் இந்த அசுரத் தாக்குதலைத் தடுக்கமுடியவில்லை.

எங்கிருந்து ராக்கெட்டுகள் வருகின்றன என்று திசையைத் தீர்மானிப்பதே பெரிய பிரச்னையாக இருந்தது. முதல் முறையாக ஹமாஸ் வீரர்கள், தாம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல், நாலாபுறங்களிலிருந்தும் ராக்கெட்டுகளை மட்டும் சலிக்காமல் செலுத்திக்கொண்டே இருந்தார்கள்.

பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகப் பொறுப்பேற்று, இருபத்துநான்கு மணி நேரம் கூட ஆகியிராத நிலையில், மம்மூத் அப்பாஸ், ஹமாஸின் இந்தக் கோபத் தாண்டவத்தைக் கண்டு மிகவும் கவலை கொண்டார்.

அராஃபத்தின் மரணம் நிகழ்ந்த சூட்டோடு பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடிந்தால்தான் உண்டு; இல்லாவிட்டால், இன்னும் பல்லாண்டுக் கணக்கில் இது இழுத்துக்கொண்டேதான் போகும் என்று அவர் நினைத்தார்.

ஆகவே, அமெரிக்கா முன்னர் போட்டுக்கொடுத்த ரோட் மேப்பின் அடிப்படையிலேயே, அமைதிக்கான சாத்தியங்களை மீண்டும் உட்கார்ந்து பேசி, இரு தரப்புக்கும் சம்மதம் தரத்தக்கத் தீர்வை நோக்கி நகருவதே, தனது முதல் பணி என்று அவர் உத்தேசித்திருந்தார்.

ஆனால், ஹமாஸின் உக்கிரதாண்டவம், இந்த அமைதி முயற்சி அத்தனையையும் நடுவீதியில் குவித்துவைத்து போகிக் கொண்டாடிக் குளிர்காய்ந்துவிடும் போலிருந்தது.

ஆகவே, அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, அராஃபத்தின் இறுதி ஊர்வலம் நடந்ததற்கு மறுநாளே, அப்பாஸ் சிரியாவுக்குப் பறந்தார்.

சிரியாவின் எல்லைப்பகுதியில் முகாம் அமைத்துத் தங்கியிருந்த ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்து, 'தாக்குதலை தயவுசெய்து நிறுத்துங்கள்' என்று, காலில் விழாத குறையாகக் கெஞ்சினார். ஆனால், ஹமாஸ் அதற்கு செவிசாய்க்கவில்லை.

'' 'பிரச்னைக்கு அமைதித்தீர்வு' என்று இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்த அராஃபத் மறைந்துவிட்டார். அமைதி ஏற்படாததற்குக் காரணமே அராஃபத்தான்' என்று, அமெரிக்க அதிபர் சொல்லுகிறார்.

அத்தகைய அயோக்கியர்களுடன் நீங்கள் என்ன அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப்போகிறீர்கள்? இதுவரை செய்துகொண்ட உடன்படிக்கைகள், எப்போதாவது நீண்டநாள் நோக்கில் பலன் தரத்தக்கதாக இருந்திருக்கின்றனவா? அவர்களுக்காக நீங்கள் ஏன் வந்து எங்களிடம் கெஞ்சுகிறீர்கள்?''

கேள்விகள் அனைத்துமே நியாயமானவைதான் என்பது அப்பாஸுக்குத் தெரிந்திருந்தது.

ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒருவர், இது நியாயம் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

அமைதி நடவடிக்கை எது ஆரம்பமாவதென்றாலும் முதல் படி போராளி இயக்கங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் போராளிகளைக் கைது செய்வதாகவும் மட்டுமே இருக்கும்.

இது ஹமாஸ் தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், தாக்குதலை நிறுத்தக்கோரி வந்த அப்பாஸ் மீது, அப்போது அவர்களுக்குக் கோபம் மட்டுமே வந்தது. 'தயவுசெய்து போய்விடுங்கள்' என்றுதான் சொன்னார்கள். வேறு வழியில்லாமல், அப்பாஸ் தோல்வியுடன் திரும்ப வேண்டியதாகிவிட்டது.

அப்பாஸ் வந்து போனதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12_ம் தேதி ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கான ஆயத்தங்களை உடனடியாகச் செய்தது. காஸா முனையில், எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள ரஃபா என்கிற இடத்தில் ஒரு சுரங்கப்பாதையில் 1.5 கிலோ எடையுள்ள வெடிபொருள்களைக் கொண்டு சேர்த்து, அருகிலுள்ள இஸ்ரேலிய ராணுவ முகாமைத் தாக்கும் எண்ணத்துடன் வெடிக்கச் செய்தார்கள்.

மூன்று வீரர்கள் பலி. அதைக்காட்டிலும் பெரிய பாதிப்பு, அந்தச் சுரங்கமே நாசமாகிவிட்டது. பல கட்டடங்கள் கடும் சேதத்துக்குள்ளாயின. குண்டுவெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் மீள்வதற்குள்ளாகவே, துப்பாக்கித் தாக்குதலையும் தொடங்கி, கண்ணில் பட்ட அத்தனை வீரர்களையும் சுடத் தொடங்கினார்கள். பலியானது இரண்டுபேர்தான் என்றாலும், ஏராளமானவர்கள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாயினர்.

ஹமாஸ், இந்தத் தாக்குதலை ஃபத்தா அமைப்புடன் இணைந்து மேற்கொண்டதாகப் பின்னால் தெரியவந்தது.

'யாசர் அராஃபத் இறக்கவில்லை. அவர்கள்தான் 'கொன்று'விட்டார்கள். அதற்குப் பழிதீர்க்கவே இத்தாக்குதலை நிகழ்த்தினோம்' என்று அபூ மஜாத் என்கிற ஃபத்தாவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நிலைமை, மேலும் மோசமடையத் தொடங்கியது. ஹமாஸின் கோபம் ஏனைய பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கும் பரவ, ஒரு முழுநீள யுத்தம் தொடங்குவதற்கான அத்தனை சாத்தியங்களும் மிக வெளிப்படையாகத் தென்பட ஆரம்பித்தன.

மம்மூத் அப்பாஸ் கவலை கொண்டார். காரணம், 2005_ம் ஆண்டு ஜனவரி பிறந்ததுமே (9_ம் தேதி) பாலஸ்தீன் அத்தாரிடிக்குப் பொதுத்தேர்தல் திட்டமிடப்பட்டிருந்தது.

தாற்காலிக அதிபராக இருந்த மம்மூத் அப்பாஸை, முறைப்படி தேர்தல் மூலமே பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராக நியமித்து, பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்கு இருந்தது.

ஆனால், தேர்தல் ஒழுங்காக நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஒரு பக்கம் ஹமாஸைச் சமாதானப்படுத்தி அவர்களையும் ஜனநாயக அரசியலுக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்க,

இன்னொரு பக்கம் 'கைதாகி சிறையில் இருந்த பல பாலஸ்தீன் போராளிகளை விடுவித்தால்தான் உங்களுக்குக் காது கொடுக்கவாவது செய்வோம்' என்று ஹமாஸ் முரண்டுபிடிக்க, இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கிக்கொண்டிருந்தார் அப்பாஸ்.

அமைதி என்று இனி எப்போது பேசுவதாக இருந்தாலும், இதுவரை கைது செய்த அத்தனை போராளிகளையும் விடுவித்துவிட்டுத்தான் பேசவேண்டும் என்று தீர்மானமாகச் சொன்னது ஹமாஸ்.

அந்த விஷயத்தில், ஏதாவது ஏமாற்று வேலை செய்யலாம் என்று நினைத்தால், காஸாவில் யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் என்று எச்சரித்தார்கள்.

மீறி தேர்தல் நடக்குமானால், ஹமாஸ் சார்பில் யாரையாவது போட்டியிட வைப்போம் என்றும் எச்சரித்தார்கள்.

ஹமாஸ் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துவிட்டதாக அர்த்தமில்லை இதற்கு. சாலையில் நடந்துபோகும் எந்தப் பரதேசியையாவது பிடித்து, ஹமாஸ் தன்னுடைய ஆதரவு அவருக்குத்தான் என்று சொல்லி தேர்தலில் நிற்கவைத்தாலும், காஸாவில் அவருக்குத்தான் ஓட்டு விழும்! எதிர்த்து நிற்பது மம்மூத் அப்பாஸாகவே இருந்தாலும் டெபாசிட் கிடைக்காது!

காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு அத்தகையது. மேற்குக்கரையில் இது சாத்தியமில்லை என்றாலும், காஸாவில் மட்டும் தேர்தல் சீர்குலைந்தாலும் போதுமே?

அது ஓர் உழக்குதான். சந்தேகமில்லாமல் உழக்குதான். அதற்குள் கிழக்கு ஒரு சாராரிடமும் மேற்கு இன்னொரு சாராரிடமும் இருந்ததுதான் விஷயம்.
என்ன செய்யலாம் என்று யோசித்தார் அப்பாஸ்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 அக்டோபர், 2005

***************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )

( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(
.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

Tuesday, April 7, 2009

93.94. யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள். சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம். பகுதி 93-94

உலகில் வேறெந்த தேசமும் அம்மாதிரி செய்யாது. ஈராக், ஆப்கன் பிரச்னைகளில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் எப்படியோ, அப்படித்தான் இது.

93] யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 93

ஓர் அமைதி முயற்சி, ஒரு மாதகாலம் கூட உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்றால், அந்த தேசத்தின் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

யாசர் அராஃபத்தை ஒழிப்பதே தனது இலக்கு என்று இஸ்ரேல் அறிவித்த மறுகணமே பாலஸ்தீனில் பழையபடி முழுவேகத்தில் போராட்டம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அக்டோபர் 4, 2003 அன்று ஹைஃபாவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், (மேக்ஸிம் ரெஸ்டாரண்ட் என்று பெயர்) ஒரு தற்கொலைப்படைப் போராளி புகுந்து, குண்டு வெடிக்கச் செய்ததில், 21 யூதர்கள் தலத்திலேயே கொல்லப்பட்டார்கள்.

வெகுண்டெழுந்த இஸ்ரேல் அரசு, ஈரான் மற்றும் சிரியாவின் ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இணைந்து, இந்தத் தாக்குதலைச் செய்ததாகக் குற்றம் சாட்டியது.

இதற்குப் பதில் நடவடிக்கையாக, சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஐன் - ஸஹிப் (Ein Saheb) என்கிற இடத்தில் அமைந்திருந்த ஒரு போராளிகள் பயிற்சி முகாமின் மீது, இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலைத் தொடங்கியது. விஷயம் தீவிரமாவதன் தொடக்கம் இது.

ஏனெனில், பாலஸ்தீனுக்குள் இஸ்ரேல் என்ன செய்தாலும், அது உள்நாட்டு விவகாரம். சிரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதென்பது, வலுச்சண்டைக்குப் போகிற காரியம்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் உண்மையிலேயே தீவிரவாதப் பயிற்சி முகாம்தானா, அதைச் சிரியா அரசு ஆதரிக்கத்தான் செய்கிறதா என்றெல்லாம் அடுத்தடுத்து ஏகப்பட்ட கேள்விகள் வரும்.

ஒருவரையொருவர் வன்மையாகக் குற்றம் சாட்டிக்கொண்டு இறுதியில் மோத ஆரம்பித்தால், மீண்டும் ரணகளமாகும். கொள்கையளவில் அனைத்து அரபு தேசங்களும் பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு ஆதரவளித்து வருவதும் உதவி செய்து வருவதும் உண்மையே என்றாலும், திடீரென்று இப்படி எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்துவதென்பது, அதுநாள் வரை அமெரிக்கா மட்டுமே செய்து வந்த ஒரு அத்துமீறல் நடவடிக்கை.

உலகில் வேறெந்த தேசமும் அம்மாதிரி செய்யாது. ஈராக், ஆப்கன் பிரச்னைகளில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் எப்படியோ, அப்படித்தான் இது.

அண்டை தேசத்துடன் ஒரு பிரச்னை என்றால், முதலில் முறைப்படி தனது குற்றச்சாட்டை அனுப்பவேண்டும். பதில் வருகிறதா என்று பார்க்கவேண்டும். பதிலில் நியாயம் இருக்கிறதா என்பது அடுத்தபடியாக. தன்னிடம் உரிய ஆதாரங்கள் இருக்கிறதென்றால் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்குமேல் சர்வதேச எல்லைகளை மதித்து நடக்கும் தார்மீகக் கடமை... இத்தியாதிகள். எதுவுமே உதவாது என்கிற நிலை வருமானால் மட்டுமே, யுத்தம்.

ஆனால், இஸ்ரேல் எடுத்த எடுப்பில் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் நடத்த விமானப்படைப்பிரிவு ஒன்றை அனுப்பிவைக்க, சிரியா கோபம் கொண்டது. இன்னும் தீவிரமாகப் போராளிகளுக்கு உதவி செய்யத் தொடங்கியது.

ஆயுதங்கள், பணம், மருந்துப்பொருள்கள், எரிபொருள் என்று என்னென்ன தேவையோ, அனைத்தையும் ரகசிய வழிகளில் அனுப்ப ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சிரியா ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த பாலஸ்தீன் போராளி இயக்கங்கள், தமது தாக்குதல்களை இன்னும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தன.

போராளி இயக்கங்களுக்கு உதவிகள் வரும் வழி, பெரும்பாலும் மேற்குக் கரைப் பகுதியில் இல்லை. காஸா வழியாகத்தான் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் வந்து சேரும். கடல் பக்கத்தில் இருக்கிற சௌகரியம் என்பது ஒரு புறமிருக்க, இயற்கையிலேயே காஸா, போராளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதொரு பகுதி. மறைவிடங்கள் (குகைகள், சுரங்க வழிகள்) அங்கே ஏராளம். தவிர, மக்களும் உயிரைக்கொடுத்து அவர்களை அடைகாப்பார்கள்.

இதை நன்கறிந்த இஸ்ரேல் ராணுவம், தனது கவனத்தை, காஸாவின் மீது குவித்தது. முதலில், என்னென்ன பொருள்கள் கடத்திவரப்படுகின்றன என்று ஒரு பட்டியல் தயார் செய்தார்கள். ஆயுதங்கள் முதலாவது. அடுத்தது அந்நியச் செலாவணி.

மூன்றாவதாக, போதைப் பொருள்கள். நான்காவதாக, துணிமணிகள். இவை பெரும்பாலும் எகிப்திலிருந்துதான் வந்துகொண்டிருந்தன. இப்போது சிரியாவிலிருந்தும் வரத் தொடங்கியதில், இஸ்ரேல் ராணுவம் விழித்துக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தது.

காஸா முழுவதும் சல்லடை போட்டுத் துளைத்து, மொத்தம் தொண்ணூற்று இரண்டு சுரங்க வழிகளை இடித்து ஒழித்தார்கள். இவற்றில் பெரும்பாலானவை எகிப்திலிருந்து வரும் சுரங்கப்பாதைகள். எப்போது இத்தனை சுரங்கப்பாதைகளை அமைத்தார்கள், எத்தனை ஆயிரம் பேர் இதற்காகப் பாடுபட்டிருக்கவேண்டும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, வியப்பின் உச்சிக்கே போனார்கள், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். அதுவும் ஒரு ஈ, காக்கைக்குத் தெரியாமல் வேலைகள் நடந்திருக்கின்றன!

நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்துக்குச் சுரங்கம் அமைப்பதென்பது, பெரிய, பெரிய அரசாங்கங்களே நினைத்தாலும் அத்தனை சுலபத்தில் சாத்தியமாகக் கூடியதல்ல. பாலஸ்தீன் போராளிகளுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டல்ல. கிட்டத்தட்ட நூறு சுரங்கங்கள்!

இப்படிச் சுரங்கங்களைக் கண்டறிந்து அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி கிராம மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியதும் நடந்தது.

இது குறித்துக் கேள்வி எழுந்தபோது, 'அந்த வீடுகளெல்லாம் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் பதுங்கு இடங்களாக இருந்தவை. அதனால்தான் அழித்தோம்' என்று, ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டார், ஷரோன்.

உண்மையில் தீவிரவாத வேட்டை என்கிற பெயரில் காஸா பகுதி மக்களிடையே நிரந்தரமானதொரு அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களாகவே இடத்தை காலிபண்ணிக்கொண்டு போவதற்காகச் செய்யப்பட்ட காரியமே அது.

எந்த நேரத்தில், எந்தக் கிராமத்தில் ராணுவம் நுழையும் என்றே சொல்லமுடியாது. திடீரென்று ஊரைச் சுற்றிலும் ராணுவ ஜீப்புகள் வலம் வரும். மக்கள் வீடுகளை அடைத்துக்கொண்டு உள்ளே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

ராணுவம் நுழையும்போது முதலில் ஒரு எச்சரிக்கை விடுப்பார்கள். மக்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும். மீறி யார் இருந்தாலும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை.

இப்படியே ஆயிரக்கணக்கான அரேபியர்கள் ஊரை காலிபண்ணிக்கொண்டு, அகதிகளாக வெளியேற வேண்டிய நிலைமை உண்டானது. காஸாவின் தெற்குப்பகுதி கிராமங்கள், ஒருசில நகரங்கள் இந்த வகையில் கிட்டத்தட்ட முழுமையாகக் காலியாகிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். இது நடந்தது 2004-ம் ஆண்டு தொடக்கத்தில்.

இந்தச் செயல், போராளி இயக்கத்தவர்களை மிகுந்த கோபம் கொள்ளச் செய்ய, கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக இறங்க ஆரம்பித்தார்கள்.

டெல் அவிவ் நகரில் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.

ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கோபம் வந்தது. தனது அமைதித்திட்டம் நாசமானது மட்டும் காரணமல்ல. ஏரியல் ஷரோனின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட அனைத்துத் தேசங்களின் கெட்ட அபிப்பிராயத்தையும் ஒருங்கே பெற ஆரம்பித்திருந்தன.

இதென்ன காட்டாட்சி என்று எல்லோரும் ஏக காலத்தில் இஸ்ரேலைப் பார்த்து வெறுப்புடன் பேசத்தொடங்கியிருந்தார்கள்.

இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல; ஈராக் விவகாரத்தால் உலகளவில் அமெரிக்காவின் இமேஜ் மிகவும் மோசமாகிக்கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவையும் கணிசமாகப் பாதிக்கவே செய்யும் என்று நினைத்த புஷ், உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு இருப்பதாக, ஏரியல் ஷரோனை எச்சரித்தார்.

முந்தைய நாள் வரை 'ரோட் மேப்' போட்டுக்கொடுத்த திட்டங்களை அப்படியே அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்து வந்தவர்போல, காஸாவிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரும் அறிவித்தார்.

இதனை ஒரு 'பப்ளிசிடி ஸ்டண்ட்' என்று கிண்டலடித்தன, இஸ்ரேல் எதிர்க்கட்சிகள்.

ஒருவேளை இது நடக்குமானால், தாம் ஆதரிப்பதாக இஸ்ரேல் தொழிற்கட்சி சொன்னது. ஆனால், ஷரோனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தீவிர வலதுசாரிக் கட்சியான மஃப்தால் (Mafdal) மற்றும் தேசிய யூனியன் (National Union) போன்ற சில கட்சிகள், 'ஒருவேளை ஷரோன் அப்படிச் செய்வாரேயானால் கண்டிப்பாகத் தாங்கள் அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவோம்' என்று பகிரங்கமாக மிரட்டத் தொடங்கின.

இதில் ஆச்சர்யப்படத்தக்க அம்சம் என்னவெனில், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தம் ஏற்படக் காரணமாயிருந்தவரும், இஸ்ரேல் அரசின் மிக மூத்த அரசியல் ஆலோசகருமான யோஸி பெய்லின் (Yossi Beilin) என்பவரே ஷரோனின் இந்த வாபஸ் அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்ததுதான்!

பெய்லின் இதற்குச் சொன்ன காரணம், 'இரு தரப்புக்கும் பொதுவாக ஏதாவது ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல், யூதர்களைக் காஸாவிலிருந்து வாபஸ் பெறுவதென்பது, அங்கே மீண்டும் தீவிரவாதம் பெருகத்தான் வழி செய்யும்.''
எத்தனை ஒப்பந்தங்கள்! எத்தனை அமைதி முயற்சிகள்!

எல்லாமே அந்தந்த சந்தர்ப்பங்களின் சூட்டைத் தணிப்பதற்காகச் செய்யப்பட்டவைதானே தவிர, நிரந்தரமான அமைதியை நோக்கி ஒரு கல்லைக்கூட யாரும் எடுத்து நகர்த்தி வைக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆக, ஏரியல் ஷரோனின் இந்த அறிவிப்பும் வெளிவந்த வேகத்திலேயே உயிரை விட்டது.

ஒட்டுமொத்தத் தேசமும் திரண்டு தனக்கு எதிராகத் தோள்தட்டிவிடுமோ என்கிற அச்சத்தில் உடனடியாக, வாபஸ் பெறுவதாகச் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொண்டு, ஏதோ இரண்டு தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பதிலாகச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, காஸா பகுதியில் முன்னைக்காட்டிலும் தீவிரமாகத் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கத் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டார் ஷரோன்.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு காஸாவிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகளைக் காலி செய்ய உத்தரவிடுவதாகச் சொன்னவர், சட்டென்று பின்வாங்கியதற்கான வலுவான காரணம் வேண்டுமல்லவா?

ஆகவே, இம்முறை தனது ராணுவத்துக்குப் பலமான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கணிசமான அளவில் அங்கிருந்து போராளிகளைக் கைது செய்யவேண்டும்.

மீடியாமுன் அவர்களை நிறுத்தி, தலை எண்ணச் சொல்லி, தான் பின்வாங்கியதன் காரணம் சரிதான்; காஸாவில் இன்னும் தீவிரவாதம் தழைக்கத்தான் செய்கிறது என்று நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தார்.

அதன்படி இரவு பகலாக இஸ்ரேல் ராணுவம் காஸாவில் சல்லடை போட்டுத் தேடத்தொடங்கியது. நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இதனால் வீடிழந்துப் போனார்கள். கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவின் சௌகரியத்தில் ராணுவம் நகரெங்கும் ரணகளப்படுத்தியது. மூலை முடுக்கெல்லாம் தேடி, மொத்தம் எழுபது ஹமாஸ் போராளிகளைக் கைது செய்து இழுத்துவந்தார்கள்.

இந்த நடவடிக்கையின்போதுதான் அவர்களுக்கு ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.

எத்தனை அவசரப் பணி இருந்தாலும், என்னதான் நெருக்கடி இருந்தாலும் அவர்கள் ஒருநாள் தவறாமல் தொழுகைக்கு மசூதிக்குச் செல்வார்கள் என்பது தெரிய வந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான்.

உடனே இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் ஒரு திட்டம் தீட்டியது. நம்பகமான சில ஏஜெண்டுகளை, காஸாவில் உள்ள அத்தனை மசூதி வளாகங்களிலும் உலவ விட்டு, யார், யார் எப்போது எங்கே வருகிறார்கள்? என்று கண்காணித்தது.

அப்படித்தான் ஹமாஸின் தலைவர் ஷேக் முகம்மது யாசின் எப்போது எந்த மசூதிக்குத் தொழுகைக்கு வருவார் என்கிற விவரம் அவர்களுக்குக் கிடைத்தது.

வாரக்கணக்கில் கண்காணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகசியமாகப் பலப்படுத்திக்கொண்டு, தொலைவிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி, மசூதியை விட்டு சக்கர நாற்காலியில் அவர் வெளியே வந்தபோது கொலை செய்தார்கள். (மார்ச் 22, 2004)

இதுபற்றிய விவரங்களை முன்பே பார்த்திருக்கிறோம். யாசின் படுகொலைக்குப் பிறகு, ஹமாஸின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்ற அபித் அல் அஜிஸ் ரண்டிஸி என்பவரையும், இதேபோல் தொழுகை முடித்து வந்த சமயத்தில் ஹெலிகாப்டரிலிருந்து குண்டுவீசிக் கொன்றதையும் பார்த்திருக்கிறோம்.

ஓர் உச்சகட்ட யுத்தம் தொடங்கிவிட்டதாகவே பாலஸ்தீனியர்கள் நினைத்தார்கள்.

அந்த ஆண்டின் மே மாதம் தொடங்கியபோது, காஸா நகரம் முழுவதும் மயானபூமி போலக் காட்சியளித்தது. யுத்தம், யுத்தம், யுத்தம் என்று அந்த ஒரு சத்தத்தைத் தவிர அங்கே வேறெதுவுமே கேட்கவில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 அக்டோபர், 2005

94] சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 94

யுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆட்சி இன்னொரு பக்கம் இருந்துதானே ஆகவேண்டும்?

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, எப்படி இஸ்ரேல் _ பாலஸ்தீன் பிரச்னை புதுப்பரிமாணம் பெற்று, ஓயாத யுத்தத்துக்கு வழிவகுத்ததோ, அதேபோல, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி முறை குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் வரத்தொடங்கின.

பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கையை முன்வைத்து, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் போராடிக்கொண்டிருந்தாலும், கிடைத்த இடத்தில் (மேற்குக்கரை மற்றும் காஸா) அவர்கள் நடத்திய ஆட்சி, அத்தனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

முதலில், அதிகார மையம் எது என்பதிலேயே குழப்பம் இருந்தது. அராஃபத் உடம்புக்கு முடியாமல் இருந்தாலும் அவர்தான் அதிபர்.

பிரதமர் மூலம்தான் ஆட்சி நடக்கவேண்டும் என்று நிபந்தனை இருந்தாலும் அதிபரைக் கேட்காமல் பிரதமர் எதுவும் செய்யமுடியாது.

ஆண்டு பட்ஜெட்டில், செய்யவேண்டிய பணிகள் என்று பட்டியலிட்டு ஒதுக்கப்படும் தொகையில், பெரும்பகுதி எங்கு போகிறது என்று யாருக்குமே தெரியாத சூழ்நிலை.

அல்லது, தெரிந்தும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை. வருடம்தோறும் பெரிய தொகை ஒன்று, அல் ஃபத்தாவின் தற்கொலைப் படைப்பிரிவான அல் அக்ஸா மீட்புப் படைக்குப் போய்க்கொண்டிருப்பதாக அனைவருமே ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அராஃபத் இதை முற்றிலுமாக மறுத்தாலும், ஒரு கட்டத்தில் அனைவருக்குமே இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதுபோலாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், 2003-ம் ஆண்டின் இறுதியில், பிரசித்திப் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) அந்த ஆண்டின் உலகின் மாபெரும் பணக்காரர்கள் பட்டியலில் அராஃபத்தைச் சேர்த்திருந்தது!

இது, கிண்டலுக்குச் செய்யப்பட்டது என்று யாரும் கருதிவிடமுடியாதபடி, அராஃபத்தின் சொத்து மதிப்பு மொத்தம் முந்நூறு மில்லியன் டாலர் என்று சொன்னதுடன் நிறுத்தாமல், எந்தெந்த இனங்களில் அவர் சொத்துச் சேர்த்திருக்கிறார் என்றொரு பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. இது, ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களையும் அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ஏனெனில், பாலஸ்தீன் அரேபியர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வறுமைக்கோட்டுக்குக் கீழேயே பல தலைமுறைகளாக வசித்து வருபவர்கள். ஆயிரம், லட்சம், கோடி என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

இந்நிலையில், தமக்காக இரவு பகல் பாராமல், சொந்த லாபங்களைக் கருதாமல், உணவு உறக்கத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர், இத்தனை சொத்துச் சேர்த்திருக்கிறார் என்று, ஒரு பிரபல பத்திரிகை புள்ளி விவரத்துடன் செய்தி வெளியிட்டால்?

மக்களுக்காக ஒதுக்கப்படும் பணமெல்லாம் மக்களைப் போய்ச்சேருவதில்லை என்று, தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், அந்தப் பணமெல்லாம் போராளி இயக்கங்களுக்குத்தான் போவதாக அவர்கள் நம்பி, அமைதிகாத்து வந்தார்கள்.

அதுவும் இல்லை; அத்தனை பணமும் அராஃபத்தின் பிரான்ஸ் மனைவியிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரியவந்தால்?

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இஸ்ரேலிய உளவுத்துறையும் அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து ஓர் 'ஆராய்ச்சி'யை மேற்கொண்டு, அராஃபத்தின் சொத்து மதிப்பு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் என்று ஒரு கணக்கை வெளியிட்டது.

இதற்குத் தோதாக, ஐ.எம்.எஃப் என்கிற (International Monitary Fund) ராட்சஸ நிதி நிறுவனம் ஒன்று, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆண்டு பட்ஜெட்டில், கூடுதலாக எட்டு சதவிகித நிதி (அதாவது சுமார் 135 மில்லியன் டாலர்) ஒவ்வொரு ஆண்டும் வேண்டியிருக்கிறது; ஆனால், இப்பணம் எங்குபோகிறது என்பது அராஃபத் ஒருவரைத் தவிர, வேறு யாருக்கும் தெரியவில்லை என்று ஓர் அறிக்கை வெளியிட்டது.

இதெல்லாம் தவிர, ரமல்லாவில் நிறுவப்பட்ட கோகோ_கோலா நிறுவனத்தின் ப்ளாண்ட் ஒன்றில் அராஃபத் ரகசியமாக, கணிசமாக முதலீடு செய்திருக்கிறார் என்றும், டுனிஷியாவைச் சேர்ந்த செல்போன் கம்பெனி ஒன்றிலும் அவர் பங்குகள் வைத்திருக்கிறார் என்றும், அமெரிக்கா மற்றும் கேமன் தீவுகளில், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் அவருக்குக் கணிசமான பங்குகள் இருக்கின்றனவென்றும் பல்வேறு தரப்புகளிலிருந்து புள்ளிவிவரங்கள் வந்துகொண்டே இருந்தன.

இதெல்லாம், பாலஸ்தீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. தள்ளாத வயதில், உடல்நலம் சரியில்லாமல் அராஃபத் தனது ரமல்லா மாளிகையை விட்டு வெளியே கூடப் போகமுடியாமல் இருந்த சமயம் அது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்முன் எடுத்துச் சென்று, பதில் பெறக்கூட சாத்தியமற்ற நிலை.

ஆனால், இந்தப் பண விவகாரம் மட்டும்தான் பாலஸ்தீன் அத்தாரிடியின் குறையா என்றால், அதுவும் இல்லை. வேறு பல விஷயங்களிலும் பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சிமுறை, முகம்சுளிக்கச் செய்யக்கூடியதாக இருந்திருக்கிறது.

உதாரணமாக, விமர்சனங்களைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்வது என்கிற குணம், பாலஸ்தீன் ஆட்சியாளர்களிடம் இருந்ததில்லை. யார் விமர்சித்தாலும் உடனடியாக அவர் கைதுசெய்யப்படுவது, வாடிக்கையாக இருந்தது.

முஆவியா அல் மஸ்ரி என்பவர், பாலஸ்தீன் ஆட்சி மன்றக் குழுவில் ஓர் உறுப்பினர். அராஃபத் மீது இவருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன.

அவரது நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாக இல்லை என்பது அதில் முதன்மையானது. பண விவகாரங்களில் அராஃபத்தை அதிகம் நம்பமுடியாது என்று, அடிக்கடி சொல்லிவந்தவர் இவர்.

ஒரு சமயம், இவர் ஒரு ஜோர்டன் தினசரிப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்த விஷயங்களைப் பற்றி 'மனம் திறந்து' பேசிவிட, மறுநாளே ஃபத்தாவைச் சேர்ந்த சிலர், ஒரு குழுவாக அவரைச் சூழ்ந்துகொண்டு, கல்லால் அடித்து வீழ்த்தி, மூன்று முறை சுட்டார்கள்!

இதெல்லாம், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் செய்யும் செயல்கள்தானே தவிர, பாலஸ்தீன் அத்தாரிடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுவது வழக்கம்.

ஆனால், ஒருமுறை இருமுறை அல்ல. பலமுறை இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் பாலஸ்தீனில் நடைபெற்றிருக்கின்றன.

அடுத்தபடியாக, பத்திரிகைச் சுதந்திரம். பாலஸ்தீனியர்களின் துயரமோ, அவர்களின் அர்ப்பணிப்புணர்வுடைய போராட்டமோ சந்தேகத்துக்கு இடமில்லாதவை. அதில், அராஃபத்தின் பங்களிப்பு கணிசமானது என்பதிலும் சந்தேகம் கிடையாது.

ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில், எந்தப் பத்திரிகையோ, தொலைக்காட்சியோ பாலஸ்தீன் அத்தாரிடியை விமர்சிக்கும் நோக்கில், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதியோ, பேசியோவிட்டால் போதும். மறுநாள் அவர்கள் செயல்பட முடியாது. பத்திரிகை வெளிவரமுடியாதபடி செய்துவிடுவார்கள்.

'எங்கள் துயரங்களை எழுதுங்கள்; எங்களை விமர்சிக்காதீர்கள்' என்பது பாலஸ்தீன் அத்தாரிடியின் சுலோகன் போலவே இருந்தது.

செப்டம்பர் 11, 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது, அல்கொய்தா அமைப்பு தாக்குதல் நடத்தி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதத்தில், பாலஸ்தீன் வீதிகளில் மக்கள் ஆடிப்பாடிப் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள்.

உலகமே பதைத்துக்கொண்டிருந்தபோது, இப்படியா ஓர் அழிவுச் சம்பவத்தைக் கொண்டாடுவார்கள் என்கிற வியப்புடன், கிறி செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர், அக்காட்சிகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார்.

இதைப் போராளி இயக்கத்தவர்கள் சிலர் பார்த்து, உடனடியாக அவரைக் கடத்திக்கொண்டுபோய்விட்டார்கள். அந்தச் செய்தியாளர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாத நிலையில், பாலஸ்தீன் அத்தாரிடியின் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவல், இரண்டுநாள் கழித்துத் தெரியவந்தது.

அவரை விடுவிக்கும்படி செய்தி நிறுவனம் கேட்டதற்கு, 'சம்பந்தப்பட்ட வீடியோ படம் ஒளிபரப்பப்படுமானால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை' என்று பாலஸ்தீன் அத்தாரிடியின் கேபினட் செகரட்டரி, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம், யாசர் அராஃபத் கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சியில் குறிப்பிடவேண்டிய இன்னொரு அம்சம், தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு. இதுகுறித்து, ஏற்கெனவே பார்த்துவிட்டோம் என்றபோதும் குறைகளின் பட்டியலில் இதுவும் மிக முக்கியமானதென்பதால், இந்த இடத்தில் சேர்த்தாக வேண்டியிருக்கிறது.

ஜனநாயக ரீதியில் ஆட்சி நடத்துவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, உள்ளுக்குள் மிகத் தீவிரமாகப் போராளி இயக்கங்களை ஆதரித்தும் உற்சாகப்படுத்தியும் நிதி உதவி செய்துகொண்டும் இருந்ததுதான், யாசர்அராஃபத் தலைமையிலான அரசின்மீது நம்பிக்கை வராமல் செய்ததற்கு மிக முக்கியக் காரணம்.

பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் எத்தனை முக்கியமானவை, அவை இல்லாவிட்டால், பாலஸ்தீன் மக்களால் இந்தளவுக்குக்கூட மூச்சு விட்டுக் கொண்டிருக்க முடிந்திருக்காது என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால், மேலுக்கு சமாதானமும் ஜனநாயகமும் பேசிக்கொண்டு, உள்ளுக்குள் இந்த இயக்கங்களை ஆதரிப்பது என்கிற இரட்டை நிலைப்பாட்டை அராஃபத் எடுத்தது மிகப்பெரிய தவறாகிப் போனது. ஒன்று, ஹமாஸ் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களுடன் பேசி, அவர்களையும் அராஃபத் அமைதி வழிக்குத் திருப்பியிருக்க வேண்டும்.

அல்லது அந்த இயக்கங்களுடனான தொடர்புகளை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவுமில்லாவிட்டால், தமது பழைய போராளி முகத்தையே இறுதிவரை கழற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த மூன்று வழியிலும் செல்லாமல், புதிதாக ஒரு பாதையை அவர் தேர்ந்தெடுத்ததனால்தான், மேற்கத்திய நாடுகள் இன்றுவரையிலுமே கூட பாலஸ்தீனியர்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றன.

தமது இறுதிக்காலத்தில் அராஃபத், ஃபத்தாவின் தற்கொலைப் படைப்பிரிவான அல் அக்ஸா மார்டைர்ஸ் ப்ரிகேடுக்கு (Al aqsa Martyrs' Brigade) ஏராளமான பொருளுதவி செய்திருக்கிறார்.

2003_ம் ஆண்டின் இறுதியில், பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவுப் பத்திரிகையாளர்கள், இது விஷயமாகத் தோண்டித்துருவி ஆராய்ச்சி செய்ததன் பலனாக, இந்த இயக்கத்துக்கு ஃபத்தாவின் மூலம் மாதம் தவறாமல் 50,000 டாலர் தொகை போய்ச்சேர அராஃபத் ஏற்பாடு செய்திருந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த இயக்கத்தின் ஆயுதத் தேவைகள், மருத்துவத் தேவைகள், பணத்தேவைகள் என்னென்ன என்று பட்ஜெட் போட்டு, லெட்டர்ஹெட்டில் எழுதி அராஃபத்துக்கு அனுப்புவதும், அராஃபத் அவர்கள் கேட்கும் பணத்துக்கு அனுமதி அளித்துக் கையெழுத்துப் போட்டு அனுப்புவதும், பலகாலமாக நடந்துவந்திருப்பதை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள், தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்கள்.

ஒரு கட்டத்தில், அல் அக்ஸா தற்கொலைப் படையினருக்கும் ஃபத்தா இயக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதாகக் கூட ஒரு வதந்தியை திட்டமிட்டுப் பரப்பப் பார்த்தார்கள். (இதில் பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளுக்குக் கணிசமான பங்குண்டு.)

ஆனால், மார்ச் 14, 2002 அன்று யு.எஸ்.ஏ. டுடேவுக்கு பேட்டியளித்த அல் அக்ஸா தற்கொலைப் பிரிவின் தலைவர், தாங்கள் யார் என்பதை மிகத்தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்.

'நாங்கள் அல் ஃபத்தாவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், ஃபத்தாவின் பெயரில் நாங்கள் இயங்குவதில்லை. ஃபத்தாவின் ஆயுதப் பிரிவினர் நாங்கள். எங்களுக்கு ஃபத்தாவிலிருந்துதான் உத்தரவுகள் வரும். எங்களுக்கு யாசர் அராஃபத்தைத் தவிர, வேறு யாரும் கமாண்டர்கள் கிடையாது.''

இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகு, யார் என்ன செய்யமுடியும்?

பிரதமர் மம்மூத் அப்பாஸுடன் கருத்து வேறுபாடு, அடிக்கடி அவரை மட்டம் தட்டுதல், வெறுத்துப்போய் அவரே பதவி விலகும் அளவுக்குச் சூழ்நிலையை மோசமாக்கியது, போராளி இயக்கங்களுக்கு உதவும் பணியில் மும்முரமாக இருந்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடத் தீர்த்து வைக்காமல் இருந்தது,

பாலஸ்தீன் பள்ளிக்கூடப் பாட நூல்களில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை இருட்டடிப்புச் செய்து, இஸ்ரேல் மீது விரோதம் வளர்க்கும் விதமான வரிகளை திட்டமிட்டுச் சேர்த்தது (எழுபதுகளில் பாகிஸ்தான் பள்ளிகளில் இந்த வழக்கம் உண்டு. பள்ளிப்பாட நூல்களில் for Enemy என்று எழுதி எதிரே ஓர் இந்தியரின் படம் வரையப்பட்டிருக்கும்!),

தொழில் வளர்ச்சிக்கு, விவசாய வளர்ச்சிக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் தீட்டாமல் விட்டது என்று பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சிக்காலக் குறைகளைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டேதான் போகும்.

ஆனால், இதையெல்லாம் காரணமாக வைத்து, பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு வேட்டுவைக்க நினைக்கமுடியாது.

ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாக சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்; கல்வியிலோ பொருளாதாரத்திலோ வளர்ச்சி காணாத இனம்,

தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கும் இனம், யுத்தம் என்பதை தினசரிக் கடமையாக எண்ணியே செயல்பட்டுக்கொண்டிருந்த இனம்,

உதவி செய்வதற்கு ஒருவர் கூட முன்வராத நிலையில், தனக்குத் தெரிந்த வழிகளில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் இனம் என்கிற ரீதியில் கருணையுடன்தான் பார்த்தாக வேண்டும்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 அக்டோபர், 2005

************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)