Tuesday, March 31, 2009

83.84 .அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்.ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்.பகுதி 83-84.

83] அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 83.

இயேசுவைச் சிலுவையில் அறைந்து, கொல்ல உத்தரவிட்ட ஏரோது மன்னனின் காலத்தில், அதாவது கி.மு. 63-ல் இரண்டாவது முறையாகப் புதுப்பித்துக் கட்டப்பட்ட சாலமன் ஆலயத்தின் எச்சங்களைத் தேடி, கி.பி. 1967-லிருந்து யூதர்கள் அல் அக்ஸா மசூதி வளாகத்தில், அகழ்வாராய்ச்சி செய்து வருவதைப் பார்த்தோம்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடகாலத்து மிச்சங்களை இன்றும் அவர்கள், தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் உடைந்த சுவர்தான் அவர்களது ஆதாரம்.

மேற்கொண்டு வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அல் அக்ஸா பள்ளிவாசலின் தாழ்வாரம், இஸ்லாமியர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதாக இல்லை; உள்ளே இருக்கும் தூண்களும் மாடங்களும், பண்டைய ரோமானிய கட்டடக் கலைப் பாணியில் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள்.

அகழ்வாராய்ச்சியில் பல்வேறு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வப்போது தகவல் வந்துகொண்டே இருக்கும். ஆனால், அந்த இடத்தில் தான் சாலமன் தேவாலயம் இருந்திருக்கமுடியும் என்பதற்கான உறுதியான ஓர் ஆதாரம், இன்றுவரை பெறப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்தக் காரணங்களால் அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டு, அங்கே ஒரு யூத தேவாலயம் எழுப்பவேண்டுமென்கிற தங்கள் விருப்பத்தை விட்டுக்கொடுக்க, யூதர்கள் தயாராக இல்லை.

ஜெருசலேமே யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தான் என்பதால், அவ்வப்போது ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலமும், இதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

1967 _ யுத்தத்தில் இஸ்ரேல் வென்ற உடனேயே, மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாயின என்று, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

அதோடு இன்னொரு காரியத்தையும் அவர்கள் செய்தார்கள். அந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, ஷலோமாகரன் என்கிற யூத மத குரு ஒருவர், ஒரு சிறு படையைத் (அரசாங்கப்படைதான்) தன்னுடைய பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துகொண்டு, அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு வந்து, அங்கே யூத முறைப்படியான பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ஷலோமாகரன், தனது சொந்த முடிவின்பேரில்தான் இந்தப் பிரார்த்தனையைச் செய்தார் என்று இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது, அரசு அனுமதியின்றி நடந்திருக்கச் சாத்தியமில்லை என்பது மிகவும் வெளிப்படை.

முஸ்லிம்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அப்போதுதான் அவர்கள் யுத்தத்தில் தோற்றுத் துவண்டிருந்தார்கள். ஜெருசலேம் நகரை விட்டு அவர்கள் முற்றிலுமாக நீங்குவதற்குள், மசூதி அவர்கள் கையைவிட்டுப் போய் விடும் போலிருந்தது.

தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போராளி இயக்கத்தவர்கள் யாரும், அப்போது அங்கே இல்லை. ஒரு முழுநாள் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின் தொடர்ச்சியாக, மசூதி விரைவில் இடிக்கப்பட்டு, அங்கே பழைய சாலமன் ஆலயம் மீண்டும் எழுப்பப்படும் என்கிற நம்பிக்கையை யூதர்களுக்கு விதைத்துவிட்டு, வீடுபோய்ச் சேர்ந்தார், அந்த மதகுரு. (அவரது அந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்காக, அந்த வருடம் முழுவதும் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில், அவருக்குப் பாராட்டுக்கூட்டங்கள் நடந்தனவாம்.)

ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்க, அதில் நம்பிக்கை இல்லாத சில தீவிர யூதர்கள் மசூதியை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பது, தீவைத்து எரிப்பது, புல்டோசர்களைக் கொண்டுவந்து இடிப்பது என்று, பல்வேறு உத்திகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள்.

மசூதி வளாகத்தில், எந்தவிதமான அத்துமீறல்களையும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் அரசு சொன்னாலும், 1969-ம் ஆண்டு ஒரு தீவைப்புச் சம்பவம் அங்கே நடக்கத்தான் செய்தது. மனநிலை சரியில்லாதவன் என்று, பின்னால் இஸ்ரேல் நீதிமன்றம் சான்றிதழ் அளித்துவிட்ட அஸுயி டெனிஸ் என்கிற ஒரு யூதத் தீவிரவாதி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தான்.

கணிசமான சேதம். அந்தப் பகுதியில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகப் போராடி, இந்தத் தீயை அணைத்தார்கள். இறுதிவரை தீயணைப்பு வண்டிகள் எதுவும் வரவேயில்லை.

அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலையில், முஸ்லிம்கள் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அல் அக்ஸா மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழவைத்து, மசூதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தார்கள்.

இதில் வினோதம் என்னவென்றால், முற்றிலும் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மசூதிக்கு, அப்போது முஸ்லிம்கள் யாரும் போய்வரமுடியாது.

கேட்டால், அகழ்வாராய்ச்சிப் பணிகளைக் காரணம் சொல்லிவிடுவார்கள்.

அகழ்வாராய்ச்சிக்காரர்கள் எப்போது தோண்ட ஆரம்பித்து, எப்போது வீட்டுக்குப் போனாலும், உடனே யாராவது மசூதியைத் தகர்க்க வந்துவிடுவார்கள்.

மசூதிக்கு வெளியே கண்விழித்துக் காவல் காத்து நிற்கவேண்டியது மட்டும், முஸ்லிம்கள்.

யூத மதகுரு ஷலோமாகரன், முதல் முதலில் அல் அக்ஸாவுக்குச் சென்று, யூத மதச் சடங்குகளை நிறைவேற்றிவிட்டு வந்ததன் தொடர்ச்சியாக, அடுத்த நான்கைந்து வருடங்களில் மொத்தம் மூன்று முறை, இதே போன்ற முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் முஸ்லிம் இளைஞர்கள், அவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

இதனால், யூதர்கள் இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நீண்டநாள் இழுத்தடித்த இந்த வழக்கில், 1976-ம் வருடம் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

'இப்போது மசூதி இருக்கிறதென்றாலும் எப்போதோ தேவாலயம் இருந்த இடம்தான் அது என்று யூதர்கள் நம்புவதால், அவர்களும் அங்கே பிரார்த்தனையில் ஈடுபடத் தடையில்லை' என்பது தீர்ப்பு.

கவனிக்கவும். அகழ்வாராய்ச்சித் துறையினர் தமது முடிவுகளை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அங்கே இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய யூத தேவாலயம் இருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.

பிரச்னைக்குரிய இடத்தில் இரு சமயத்தவரும் பிரார்த்தனை செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் உள்நோக்கம், மிக வெளிப்படையானது.

யூதர்கள் ஒரு மாபெரும் கலவரத்தை உத்தேசிக்கிறார்கள் என்று அலறினார்கள், அரேபியர்கள்.

காது கொடுத்துக் கேட்க யாருமில்லாத காரணத்தால், அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு அடிக்கடி யூதர்கள் வரத் தொடங்கினார்கள்.

இதனால் எந்தக் கணமும் அங்கே மதக்கலவரங்கள் மூளும் அபாயம் ஏற்பட்டது.

சமயத்தில், வம்புக்காகவே நூற்றுக்கணக்கான யூதர்கள் (பெரும்பாலும் இந்த அணிகளில் காவல்துறையினரே இருந்ததாக முஸ்லிம்களின் சில இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.)

மொத்தமாக மசூதிக்குள் நுழைந்து, யூத மதச் சடங்குகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். நாள்கணக்கில்கூட இந்தச் சடங்குகள் நீள்வதுண்டு. அப்போதெல்லாம், அகழ்வாராய்ச்சித் துறையினர் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இம்மாதிரியான தருணங்களில், அந்தப் பகுதியில் கலவரம் மூள்வது சாதாரணமாகிப்போனது.

முஸ்லிம்கள், யூதர்களைத் தாக்குவார்கள். பதிலுக்கு யூதர்கள் முஸ்லிம்களைத் தாக்குவார்கள்.

கடைகள் உடனடியாக மூடப்படும். கற்கள் பறக்கும். பாட்டில்களில் அடைத்த பெட்ரோல், வானில் பறந்து சுவரில் மோதி வெடிக்கும். எப்படியும் ஓரிருவர் உயிரை விடுவார்கள். பலர் காயமடைவார்கள். கிட்டத்தட்ட, இது ஒரு தினசரி நடவடிக்கையாகிப் போனது.

புனிதமான நகரம் என்று வருணிக்கப்படும் ஜெருசலேம், உலகின் ஆபத்து மிகுந்த நகரங்களில் ஒன்றாக ஆகிப்போனது.

இதில் உச்சகட்ட சம்பவம் ஒன்று உண்டு. அல் அக்ஸா மசூதி வளாகத்தின் அருகே, ஒரு பள்ளிக்கூடம் உண்டு. யூதர்களின் மதப் பள்ளிக்கூடம் அது. திடீரென்று அந்தப் பள்ளிக்கூடத்தை வெடிமருந்துக் கிடங்காக மாற்றி விட்டார்கள்.

ஒரே இரவில் லாரிகளில் வெடிபொருள்களைக் கொண்டுவந்து, அங்கே நிரப்பினார்கள். ஒரு சிறு வெடிவிபத்தை 'உண்டாக்கினால்' கூடப் போதும். மசூதி இருந்த இடம், அடையாளம் தெரியாமல் உருக்குலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.

இதனால் கலவரமடைந்த முஸ்லிம்கள், உடனடியாக அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் வெடிபொருள்களை அப்புறப்படுத்தக் கோரி, போராட்டத்தில் இறங்கினார்கள்.

இந்தப் போராட்டத்தை, ஒரு கலவரமாகக் கணக்கில் எடுத்துக்கொண்ட இஸ்ரேல் காவல்துறை, கலவரத்தை அடக்குவதான பெயரில், மசூதியின் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்த ஆரம்பித்தது.

இதில் மசூதியில் பல பகுதிகள் சேதமாயின. ஒரு சில உயிர்களைப் பலி வாங்கி, சில கதவு ஜன்னல்களை நாசப்படுத்தி, சுமார் எட்டு மீட்டர் பரப்பளவுக்கு மசூதிச் சுவரையும் இடித்துத் தள்ளியதுடன், இந்தக் கலவர அடக்கல் நடவடிக்கை, ஒரு முடிவுக்கு வந்தது.

பள்ளிக்கூட வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளித்துவிட்டு ஒதுங்கிப்போனார்கள். (பிறகு அந்த குண்டுகள் எப்போது அப்புறப் படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளிக்கூடம் இருந்த திசையிலிருந்து, மசூதியை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஆனால் சேதமில்லை.)


1982-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் பள்ளிவாசல் தகர்ப்பு முயற்சிகள், புதுப்பரிமாணம் பெற்றன. குறைந்தது வாரம் ஒருமுறையாவது, அந்தப் பகுதியில் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற ஆரம்பித்தது.

வாகனங்களில் வந்து இறங்கி மசூதியை நோக்கி குண்டு வீசுவது தவிர, இரவு நேரங்களில் ரகசியமாக, அத்துமீறி உள்ளே புகுந்து, வெடிகுண்டுகளை வைத்துவிட்டுப் போவதும் நடந்திருக்கிறது. ஷிப்ட் முறையில் முஸ்லிம்கள் விழித்திருந்து, இந்தச் சம்பவங்கள் அசம்பாவிதங்களாகி விடாமல் தடுப்பதற்காகக் காவலில் ஈடுபட்டார்கள்.

அப்படிக் காவலில் ஈடுபட்டவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. 1982-ம் ஆண்டு தொடங்கி 86 வரையிலான காலகட்டத்தில், அல் அக்ஸா காவல் பணியில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் இளைஞர்களில் மொத்தம் 23 பேர், யூதர்களின் தாக்குதலுக்கு பலியாகியிருக்கிறார்கள். (முஸ்லிம்கள் திருப்பித்தாக்கியதில், இதே சந்தர்ப்பங்களில், இதே காலகட்டத்தில் 16 யூதர்களும் பலியாகியிருக்கிறார்கள்.)

இதில், கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக்கொண்டு, ராணுவம் உள்ளே புகுந்ததன் விளைவாக இறந்தவர்கள் தனி. உண்மையில் கலவரக்காரர்களைக் காட்டிலும், ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையினால்தான் மசூதி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பல பகுதிகள் இடிந்து சின்னாபின்னமாயின.

82-ம் வருடம் பிப்ரவரி மாதம் லெஸர் என்கிற யூதர் ஒருவர், தனது உடம்பெங்கும் ஜெலட்டின் குச்சிகளைக் கட்டிக்கொண்டு, மனித வெடிகுண்டாக, பகிரங்கமாக அல் அக்ஸாவுக்குள் நுழைந்தார்.

முஸ்லிம்கள் கடுமையாகப் போராடி, அவரை அப்புறப்படுத்தினார்கள். இந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பில், அடுத்த வருடமே தீவிர யூதர்கள் அடங்கிய குழுவினர் (சுமார் ஐம்பது பேர் கொண்ட குழு), இதேபோல் மனித வெடிகுண்டுகளாக ஒரு நாள் அதிகாலை மசூதிக்குள் நுழைந்தார்கள்.

அதிகாலைப் பிரார்த்தனைக்காக அந்தப் பக்கம் வந்த சில முஸ்லிம்கள், அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்று தடுக்க, அப்போது எழுந்த களேபரத்தில் அத்தனை பேருமே மடிந்துபோனார்கள்.

நல்லவேளையாக, மசூதி தப்பித்தது.

1984-ம் ஆண்டு ஒரு யூத மதகுரு, மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மசூதியின் மேலே ஏறி, அங்கே யூத தேசியக் கொடியைப் பறக்கவிட்டார்.

இந்தச் சம்பவம் மிகப்பெரிய கலவரத்துக்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த யூத மதகுரு, மனநிலை சரியில்லாதவர் என்று இஸ்ரேலிய நீதிமன்றம் சொல்லிவிட்டதைக் கண்டித்து, உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கோபக்குரல் எழுப்பினார்கள்.

ஜெருசலேம் முழுவதும் வசித்துவந்த முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்க, போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று நகரமே ரணகளமானது. இருபது பேர் இறந்தார்கள். அறுபத்தியேழு பேர் படுகாயமடைந்தார்கள்.

1990-ம் ஆண்டு சாலமன் ஆலயத்தை, மசூதி வளாகத்தில் எழுப்பியே தீருவோம் என்று, அடிக்கல் நாட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. தடுக்கப்போன சுமார் இருநூற்றைம்பது முஸ்லிம்கள், வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தக் கலவரங்களின் உச்சமாக, 2000-ம் ஆண்டு செப்டெம்பரில் சில முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன.

27-ம் தேதி டேவிட் பிரி (David Biri) என்கிற யூத மதகுருவைச் சில முஸ்லிம்கள் சேர்ந்து கொன்றார்கள். இது, இன்னொரு இண்டிஃபதாவின் ஆரம்பம் என்று இஸ்ரேல் உளவுத்துறை முடிவு செய்துவிட்டது.

இந்தச் சம்பவம் நடந்த இருபத்துநான்கு மணி நேரத்துக்குள், இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மேற்குக்கரை நகரமான கல்கில்யாவில் நடைபெற்றது.

இஸ்ரேலிய காவல்துறையினருடன் இணைந்து, ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியக் காவலர் ஒருவர், தமது சக யூதக் காவலர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

எப்படியும் கலவரம் மூளத்தான் போகிறது என்று எதிர்பார்த்த, அப்போதைய இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ஏரியல் ஷரோன், அரசியல் காரணங்களை உத்தேசித்து, அல் அக்ஸா மசூதிக்கு ஒரு விசிட் செய்தார்.

இது மிகப்பெரிய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது.

தீவிர யூதரான ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவதை ஜெருசலேம் நகரத்து முஸ்லிம்கள் விரும்பவில்லை.

ஏற்கெனவே பிரச்னைகள் மலிந்த பிராந்தியம் அது. ஏரியல் ஷரோன் அங்கே வரும்பட்சத்தில் நிச்சயம் விபரீதம் நடக்கும் என்று நினைத்தவர்கள், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளே விடமாட்டோம் என்று வழிமறித்து நின்றார்கள்.

ஏரியல் ஷரோன் மசூதிக்குள் நுழைவதற்கு, இஸ்ரேலிய காவல்துறை பாதுகாப்பு அளித்தது. ஷரோன் மசூதிக்குள் நுழைந்தார். வெளியே கலவரம் வெடித்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 செப்டம்பர், 2005.

84] ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 84

ராணுவத் தளபதியாக உத்தியோகம் பார்த்திருந்தாலும் அடிப்படையில் ஏரியல் ஷரோன், எப்போதுமே அரசியல்வாதிதான். பிரதமராவதற்கு முன்பு, அவரது அரசியல் எப்படி இருந்தது என்பதை, ஒரு வரியில் விளக்கிவிடலாம்.

அவர் இஸ்ரேலின் லாலு பிரசாத் யாதவ். அதிரடிகளுக்குப் பெயர்போனவர். ஜனநாயக சௌகரியத்தில் நினைத்துக்கொண்டால் பேரணி, ஊர்வலம் என்று அமர்க்களப்படுத்திவிடுவது, அவரது இயல்பாக இருந்தது.

பெரிய அளவில் - மிகப்பெரிய அளவில் ஓர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, அவர் தீட்டிய திட்டம்தான், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவது என்பது.

அதன்மூலம் யூதர்களின் நன்மதிப்பை அழுத்தந்திருத்தமாகப் பெறுவது, அதை அடிப்படையாக வைத்தே இஸ்ரேலின் பிரதமராகிவிடுவது என்கிற அவரது கனவு, அச்சுப்பிசகாமல் பலித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனால், அன்றைக்கு அந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பு, பாலஸ்தீன் சரித்திரத்தில் அழிக்கமுடியாததொரு மாபெரும் கறையாகிப்போனதும் உண்மை.

ஏரியல் ஷரோன், அல் அக்ஸாவுக்கு வருகை தரத் திட்டமிட்டிருந்த தினத்தில், ஒட்டுமொத்த ஜெருசலேம் மக்களும் அந்தப் பிராந்தியத்தில் நிறைந்து குவிந்துவிட்டார்கள்.

ஏற்கெனவே, அரசுக்கு விண்ணப்பித்து, 'முறைப்படி' அனுமதி பெற்றுத்தான் அவர் அந்தத் 'தீர்த்தயாத்திரை'யை மேற்கொண்டிருந்தார். ஆகவே, முன்னதாகவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மூன்று அரண்கள் போல் நகரக் காவல் படையினர், துணை ராணுவப் படையினர், மொஸாட் உளவுப் பிரிவின் சிறப்புக் காவல் அதிகாரிகள் மசூதியைச் சூழ்ந்து காவல் காக்க, ஏரியல் ஷரோன் அங்கே வந்து சேர்ந்தார்.

இறங்கியவருக்கு, முதலில் கிடைத்தது ஒரு கல்லடி. எங்கிருந்து எப்படிப் பறந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்யவெல்லாம் நேரமில்லை. ஒரு கல். ஒரே ஒரு கல். அவ்வளவுதான். சரியாக அவரது காலடியில் வந்து விழுந்தது.

நகத்தில் பட்டிருக்குமோ என்னவோ. ஆனால், தாக்குதல் ஆரம்பமாகி விட்டதாக, காவல்துறையினர் தற்காப்பு யுத்தத்துக்கு ஆயத்தமாக, அதுவே போதுமானதாக இருந்தது.

நிறையப்பேர் கறுப்புக்கொடி காட்டினார்கள். ஷரோனுக்கு எதிராக கோஷமிட்டார்கள். தடுப்புகளை மீறி வந்து, அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள்.

ஆனால், காவல்துறையினர் யாரையும் அருகே நெருங்க விடவில்லை. இது, முஸ்லிம்களின் கோபத்தை மிகவும் கிளறிவிட்டது. வன்மத்தை நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டி, தொலைவில் நின்றபடியே பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்கள்.

'நான் வம்பு செய்ய வரவில்லை; அன்பை விதைக்கவே வந்தேன்' என்று கவித்துவமாகப் பேசி கைதட்டல் பெற்றுக்கொண்டார் ஏரியல் ஷரோன்.

அவரது வருகையின் உண்மையான நோக்கம், அன்பு விதைப்பதெல்லாம் இல்லை. அல் அக்ஸா மசூதி வளாகம் யூதர்களுக்குச் சொந்தமானதுதான்; நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மசூதியை இடித்துவிட்டு, நமது தேவாலயத்தைக் கட்டிவிடலாம் என்று சொல்லாமல் சொல்லுவதுதான்!

ஜெருசலேம் முழுமையாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை, யூதர்களுக்குப் புரியவைப்பதற்காகத்தான் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டார்.

ஏரியல் ஷரோன் என்கிற ஒரு மனிதர், சுமார் பதினைந்து நிமிடங்கள் நடத்திய, அந்த ஓரங்க நாடகத்துக்குப் பாதுகாவலர்களாக வந்திருந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தம் ஆயிரத்து இருநூறு.

பார்வையாளர்களான பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபத்தைந்தாயிரம் பேர்.

ஷரோன் வந்து திரும்பும்வரை அதாவது, அந்தப் பதினைந்து இருபது நிமிடங்கள் வரை, அங்கே எந்த விபரீதமும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

காவலர்கள் மிகத் திறமையாகச் செயல்பட்டு, ஒரு எறும்புகூடக் கிட்டே வரமுடியாதபடிதான் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால், அவர் திரும்பிய மறுகணமே ஜெருசலேம் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது.

அடிபட்ட புலிகளாக ரகசியமாகக் கூடிப் பேசினார்கள், முஸ்லிம்கள்.

புனிதமான அல் அக்ஸா மசூதி வளாகத்தை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதற்காகவே, ஏரியல் ஷரோன் அங்கு வந்து போனார் என்பதில், அவர்களுக்கு இரண்டாவது கருத்தே இல்லை.

ஆதிக்க சக்திக்கும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தினருக்கும், காலம் காலமாக நடந்து வரும் யுத்தத்தின் அடுத்த பரிமாணம், அந்தக் கணத்தில் நிகழலாம் என்பது போலச் சூழல் மோசமடைந்துகொண்டிருந்தது.

முஸ்லிம்கள், எந்தத் தலையை முதலில் உருட்டப்போகிறார்கள் அல்லது எந்தக் கிராமத்தில் புகுந்து, தீவைக்கப்போகிறார்கள் என்பதுதான் கேள்வி.

பதில் எப்போது கிடைக்கும் என்று உலகமே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அது நடந்தது..

முதல் உயிரை யூதர்களே பறித்தார்கள்.

எப்படியும் முஸ்லிம்கள் தாக்கத்தான் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில், தாங்களே முந்திக்கொண்டால், சேதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்த ஜெருசலேம் நகர யூதர்கள், அங்கிருந்த முஸ்லிம் குடியிருப்புகளின்மீது, சற்றும் எதிர்பாராவிதமாகத் தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள்.

கற்கள் பறந்தன. தீப்பந்தங்கள் பாய்ந்து சென்று பற்றிக்கொண்டன. கதவுகள் இடித்து உடைக்கப்பட்டு, வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. தப்பியோடியவர்களைப் பிடித்து இழுத்து, கழுத்தை அறுத்தார்கள். சிலர் கைத்துப்பாக்கியால் சுட்டார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எல்லாம் நடந்தது. அரை நாள் பொழுதுதான். கலவர மேகம் சூழ்ந்தது தெரியும். முஸ்லிம்கள் தமது கலவரத்தை எங்கிருந்து தொடங்குவார்கள் என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது, யூதர்கள் அதனை ஆரம்பித்துவைத்ததோடு மட்டுமல்லாமல், அன்று இரவுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை ரத்தம் சொட்டச்சொட்டத் தலைதெறிக்க ஓடவைத்தார்கள்.

அப்புறம் நடந்ததுதான், மேலே சொன்ன தீவைப்பு இத்தியாதிகள்.

இத்தனை நடந்தபோதும், காவலர்கள் யாரும் அங்கே வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். எல்லாம் முடிந்து நகரமே மயானபூமியாகக் காட்சியளித்தபோதுதான், முதல் போலீஸ் வண்டி வந்து நின்றது.

பதினேழு நிமிடங்கள் பிரதான மார்க்கெட்டில் ஒப்புக்கு ஒரு விசாரணை நடந்தது.

கொதித்துவிட்டது முஸ்லிம் உலகம். அன்றிரவே தீர்மானித்து, மறுநாள் காலையே தமது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாகக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். இங்கே மேற்குக் கரையில் ஒரு பேரணி. அங்கே காஸாவில் ஒரு பேரணி.

தோதாக அன்றையதினம், முஹம்மத் அல் துரா என்கிற பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு துப்பாக்கிச் சண்டையின் குறுக்கே போய் மாட்டிக்கொண்டுவிட, சிறுவன் பலியாகிப் போனான்.

இதுவும், முஸ்லிம்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும், வெகுண்டெழச் செய்த சம்பவம் அது.

இதன் தொடர்ச்சியாகத்தான், சாதாரண கண்டனப் பேரணியாகத் தொடங்கிய அந்த 'அல் அக்ஸா இண்டிஃபதா', ஒரு மாபெரும் கலவர ரகளையின் தொடக்கப்புள்ளி ஆனது.

எங்கிருந்துதான் முஸ்லிம்களுக்குக் கற்கள் கிடைத்தனவோ தெரியவில்லை. பேரணியெங்கும் கற்களே பறந்தன. கண்ணில் பட்ட அத்தனை இஸ்ரேலியக் காவலர்களையும் அடித்தார்கள். துரத்தித் துரத்தி அடித்தார்கள்.

பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிப் பற்றவைத்துத் தூக்கித் தூக்கி வீசினார்கள். யூதக் கடைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. போகிற வழியிலெல்லாம், முத்திரை பதித்துக்கொண்டே போனார்கள்.

இத்தனைக்கும், முஸ்லிம்கள் தரப்பில் இழப்புகள் அம்முறை மிக அதிகமாக இருந்தது.

இண்டிஃபதா தொடங்கிய முதல் ஆறு தினங்களிலேயே, சுமார் அறுபத்தைந்து பேரை இஸ்ரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொன்றிருந்தார்கள். இவர்கள் தவிர, சுமார் 2,700 பேர் நடக்கக்கூட முடியாத அளவுக்குக் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

வீதியெங்கும் ரத்தக் கறையுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் விழுந்துகிடந்த காட்சிகளை, சர்வதேச மீடியா கர்ம சிரத்தையுடன் ஒளிபரப்பியது.

அக்டோபர் 12-ம் தேதி இரண்டு இஸ்ரேலிய போலீஸார், சிவிலியன் உடையில் ரமல்லா நகருக்குள் புகுந்தார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள், உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

இந்தச் சம்பவம், மேற்குக் கரையில் ஒப்புக்குக் காவலர்கள் என்கிற பெயருடன், பொழுதுபோக்கிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கு, மிகுந்த சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கின. அவர்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கே பணியில் இருந்த இஸ்ரேலியக் காவலர்கள் அத்தனை பேரையும் சுட்டுக்கொன்று, பிணங்களைத் தாங்களே தூக்கி வந்து வீதியில் வீசி எறிந்தார்கள்.

தற்செயலாக, அந்தப் பக்கம் படமெடுத்துக்கொண்டிருந்த ஒரு இத்தாலி டி.வி. குழுவினர், இந்தக் காட்சியைப் படமெடுத்து ஒளிபரப்பிவிட, ஒட்டுமொத்த யூதகுலத்தவரும், பாலஸ்தீன் அரேபியர்களை ஒழித்துக்கட்ட, வரிந்துகட்டிக்கொண்டு, களத்தில் குதித்தனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் அபாயம் தெரியவரவே, இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி புரியும் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில், விமானத் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.

இந்தக் களேபரங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வந்தது. வருடம் 2001, பிப்ரவரி மாதம்.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஹுத் பாரக், புகழ்பெற்ற மக்கள் தலைவர். எப்படியும் அவர் தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் நம்பமுடியாதபடி லிகுத் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏரியல் ஷரோன் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

எல்லாம், அவர் அல் அக்ஸா மசூதிக்குள் புகுந்து நடத்திய அரசியல் நாடகத்தின் விளைவு. யூதர்களின் தேவதூதரே அவர்தான் என்பது போல், திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டது அப்போது.

யூதர்கள் இழந்த தம் சாலமன் தேவாலயத்தை மீண்டும் கட்டவேண்டுமென்றால், ஜெருசலேத்தை அவர்கள் நிரந்தரமாகத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றால், ஏரியல் ஷரோனை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே முடியும் என்று பிரசாரம் செய்யப்பட்டிருந்தது.

ஷரோனும் மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். 'எனக்கு யார் மீதும் அனுதாபங்கள் ஏதுமில்லை. இஸ்ரேல் மக்களுக்காக மட்டுமே நான் குரல் கொடுப்பேன், போராடுவேன்.''போதாது? பிரதமராகிவிட்டார்.

மே மாதம் 7-ம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. நடந்துகொண்டிருந்த சம்பவங்களுக்கெல்லாம், சிகரமானதொரு சம்பவம்.

பாலஸ்தீன் அத்தாரிடி பொறுப்பில் இருந்த காஸா பகுதியின் கடல் எல்லைக்குள் 'சந்தோரினி' என்றொரு கப்பல் வந்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலை இஸ்ரேலியக் கடற்படை அதிகாரிகள், சுற்றி வளைத்துச் சோதனை போட்டார்கள்.

ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அதிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும், 'Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP - GC)' என்கிற அமைப்பின் தலைவரான அஹமத் ஜிப்ரில் என்பவரின் ஆர்டரின் பேரில், காஸா துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்த ஆயுதங்கள்.

அவற்றின் மொத்த மதிப்பு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று, மதிப்பிட்ட அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

காஸா துறைமுகத்துக்குச் சற்றுத்தள்ளி ஒதுக்குப்புறமான கடல் பகுதியில் கப்பலை நிறுத்தி, படகுகள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளிடம் சேர்ப்பிக்க, உத்தரவு இருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

மிகவும் வெளிப்படையாகச் சொல்லுவதென்றால், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரானதொரு முழுநீள யுத்தத்துக்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதே இதன் பொருள்.

இதை பாலஸ்தீனியர்களேகூட நம்பமாட்டார்கள்.

அராஃபத், என்றைக்கு பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகி, மேற்குக் கரை நகரங்களையும் காஸாவையும் ஆளத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே தமது போராளி முகத்தைக் கழற்றி வைத்துவிட்டார் என்பதுதான், பாலஸ்தீனியர்களின் பிரதானமான குற்றச்சாட்டு.

ஆனால், இந்த விஷயத்தில் இஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள் சொன்ன தகவல், முற்றிலும் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது?

இஸ்ரேல் வேறு ஏதாவது சதித்திட்டம் தீட்டுகிறதா என்ன? யாருக்கும் அப்போது புரியவில்லை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 செப்டம்பர், 2005
**********************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)
****************************************************

Monday, March 30, 2009

81.82. ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணம்?அல் அக்ஸா மசூதியின் பின்னணி. பகுதி.81-82..

இந்த இடத்தை முன்வைத்துத்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான பிரச்னை ஆரம்பித்தது.
***********************************************
81] ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணம்?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 81

பாலஸ்தீன் விடுதலைப் போராட்ட சரித்திரத்தில், ஓஸ்லோ ஒப்பந்தம் மிக முக்கியமானதொரு கட்டம்.

ஏனெனில் அமைதியை உத்தேசித்துச் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு தரப்பிலும் மக்கள் மத்தியில், மிகப்பெரிய அதிருப்தியையே உண்டாக்கியது.

இப்படி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதற்காக, இஸ்ரேலியப் பிரதமராக இருந்த இட்ஸாக் ராபினை ஒரு யூதரே கொலை செய்தார் (1995).

அடுத்து வந்த பொதுத்தேர்தலில், யூதர்கள் மிகக் கவனமாக பழைமைவாத யூதரான பெஞ்சமின் நெதன்யாஹுவை (Benjamin Netanyahu)ப் பிரதமராக்கி உட்காரவைத்தார்கள். ஒருபோதும் அவர், அரேபியர்களுக்கு எந்த அதிகாரத்தையும் தரமாட்டார் என்கிற நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது.

மறுபுறம், அரபுகள் தரப்பில் யாசர் அராஃபத் மீது உண்டான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி, அரேபியர்கள் யூதர்களின்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும், பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் தன்னுடைய ராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்றும் ஏற்பாடாகியிருந்தது.

எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் நீங்களாக எப்படி ஒப்பந்தத்தை ஏற்கலாம் என்று அராஃபத்தைக் கேட்டார்கள், பாலஸ்தீனிய அரேபியர்கள். குறிப்பாக, அங்குள்ள விடுதலை இயக்கங்கள் அனைத்துமே, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகத்தான் இருந்தன.

அராஃபத் தன் சக்திக்கு உட்பட்ட அளவில் ஒவ்வொரு இயக்கத்தையும் அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பார்த்தார். தினசரி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கும் விளக்கமளித்தார். கேட்கத்தான் ஆளில்லாமல் போய்விட்டது.

"யூதர்கள் மீது அரேபியர்கள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று எழுதிக்கொடுத்துக் கையெழுத்துப் போட்டீர்கள் அல்லவா? இதோ பாருங்கள்," என்று அன்று தொடங்கி, கலவரங்களும் தாக்குதல்களும் நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்க ஆரம்பித்தன.

ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய அரசு சம்மதித்ததன் அடிப்படைக் காரணமே, ஹமாஸ் உள்ளிட்ட போராளி இயக்கங்களின் செயல்பாடுகளை அராஃபத் முயற்சி எடுத்து முடக்கிவைக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால் எந்தவிதமான பேச்சுவார்த்தை சமரசங்களுக்கும் இயக்கங்கள் ஒத்துழைக்கத் தயாராக இல்லாத காரணத்தால், பாலஸ்தீன் முழுவதும் படிப்படியாக வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது.

இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி செப்டம்பர் 1993 தொடங்கி, செப்டம்பர் 2000 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 256 இஸ்ரேலியர்களை அரேபியர்கள் கொன்றிருக்கிறார்கள். இதற்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை.

திடீரென்று கலவரம் மூளும். கண்ணில் பட்டவர்கள் மீது கற்கள் வீசப்படும். தப்பியோடினால் துப்பாக்கிச் சூடு. விழுந்த உடல்கள் உடனடியாக ஜோர்டன் நதியில் வீசி எறியப்படும்.

கட்டுப்படுத்தவே முடியவில்லை. மக்களின் கோபம் எல்லையற்றுப் பொங்கிக்கொண்டிருந்தது. அராஃபத் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பாலஸ்தீன் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தக் கூட்டங்களிலும் கற்கள் பறக்க ஆரம்பித்தன. (உண்மையில் கற்கள் பறந்த சம்பவம் மிகக் குறைவு. அழுகிய பழங்கள்தான் அதிகம் பறந்தன.)

அராஃபத்தின் கவலை என்னவெனில், இப்படிக் கலவரம் அதிகரித்துக் கொண்டே போனால், ஒப்பந்தப்படி இஸ்ரேலிய ராணுவம் வாபஸ் ஆவது தள்ளிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் மீண்டும் பழைய குருடி கதவைத் திறக்க வந்துவிடுவாள். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் இட்ஸாக் ராபின் படுகொலை செய்யப்பட்டு, பெஞ்சமின் நெதன்யாஹு இஸ்ரேலின் பிரதமராக ஆனார். இந்தப் புதிய பிரதமரின் நடவடிக்கைகள் அராஃபத்துக்கு மேலும் கவலையளித்தன.

நெதன்யாஹு பதவியேற்றவுடனேயே யூதர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இருந்த யூதக் குடியிருப்புகளை அதிகப்படுத்தத் தொடங்கினார்.

இதன் அர்த்தம் என்னவெனில், எக்காரணம் கொண்டும் அந்த இரு பகுதிகளையும் இஸ்ரேல், அரேபியர்களுக்குத் தத்துக் கொடுத்துவிடாது என்பதை உறுதிப்படுத்துவதுதான்.

ஏற்கெனவே 1967 யுத்தத்தை அடுத்து, இப்பகுதிகளில் யூதக் குடியிருப்புகள் கணிசமாக உருவாக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் இங்கே இடம் பெயர்ந்து வந்து, அரேபியர்களின் மத்தியில் வாழ ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் புதிதாகவும் பல்லாயிரக் கணக்கானோரை இப்பகுதிகளுக்கு அனுப்பி அழகு பார்த்தது இஸ்ரேல்.

இது அரேபியர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் உண்டாக்கி, அடிக்கடி கலவரங்களில் இறங்கத் தூண்டியது.

"பார்த்தீர்களா, உங்கள் ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணத்தை?" என்று அராஃபத்தைக் கேட்டார்கள்.

அராஃபத்தால் பதில் சொல்ல முடியவில்லை.

காரணம், அரேபியர்கள் தாக்குதலில் ஈடுபடாமலிருக்கும் பட்சத்தில் இஸ்ரேல் ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கப்படும் என்றுதான் ஒப்பந்தத்தில் இருந்ததே தவிர, அரேபியர்கள் வாழும் இடங்களில் யூதக் குடியிருப்புகளை நிறுவுவது குறித்து, அதில் ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அது கூடாது என்றோ, சரியென்றோ இருவிதமாகவும் ஒப்பந்தத்தில் ஏதும் இல்லாத காரணத்தால், வழக்கப்படி விருப்பமான நேரத்தில், விருப்பமான அளவில், குடியேற்றங்களை அமைப்பது என்கிற புராதனமான வழக்கத்துக்குப் புத்துருவம் கொடுத்துவிட்டார் நெதன்யாஹு.

ஓஸ்லோவினால் உண்டாகியிருந்த வெறுப்பை இந்த ஏற்பாடு, யூதர்கள் மத்தியில் சற்றே தணிக்கத் தொடங்கிய அதே சமயம், அரேபியர்கள் முழு வீச்சில் கலவரங்களில் இறங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

பாலஸ்தீன் அத்தாரிடி சார்பில் அதிபராக அராஃபத்தும் அவரது நியமன உறுப்பினர்களாக ஒரு சிறு அமைச்சரவையும் பொறுப்பேற்றிருந்தபோதும், அவர்களுக்கு ஆட்சி செய்வதில் அனுபவம் இல்லாத காரணத்தால், நிறைய நிர்வாகக் குளறுபடிகள் ஏற்பட்டன.

குறிப்பாக, பணத்தை ஒழுங்கான விகிதத்தில் பிரித்து, செலவு செய்யத் தெரியாத காரணத்தால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். மறுபக்கம் மக்கள், போராட்டம்தான் முழு நேரத் தொழில் என்று முடிவு செய்து விட்டிருந்தபடியால் வர்த்தக மையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் எப்போதாவதுதான் திறந்திருக்கும் என்கிற நிலைமை உண்டானது.

வேலையில்லாப் பிரச்னை அதிகரித்து, ஏராளமான அரபு இளைஞர்கள் புதிதாகத் துப்பாக்கி ஏந்த ஆரம்பித்தார்கள். இவர்களுக்குக் கொம்பு சீவி விடும் பணியைப் போராளி இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. (அராஃபத் பதவிக்கு வந்த முதல் வருட இறுதியில் மக்கள் வாழ்க்கைத் தரம் 30% குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் 51% அதிகரித்ததாக ஒரு புள்ளி விவரம் இருக்கிறது.)

இவை அனைத்துமே ஓஸ்லோ ஒப்பந்தத்தின் விளைவுதான் என்று தீவிரமாக நம்பினார்கள் அரேபியர்கள். அது மட்டுமல்லாமல், ஓஸ்லோ ஒப்பந்தத்தின் போதே எழுதப்படாத ஒப்பந்தமாகப் புதிய குடியேற்றங்களுக்கும் அராஃபத் சம்மதம் தெரிவித்திருப்பார் என்று சந்தேகித்து, அத்தகைய புதிய குடியேற்றங்களால் தங்கள் விளை நிலங்களும் வாழும் இடங்களும் பறிபோகின்றன என்றும் குற்றம்சாட்ட ஆரம்பித்தார்கள்.

ஆனால், இந்தக் குடியேற்றங்கள், அராஃபத் முற்றிலும் எதிர்பாராதது. உண்மையிலேயே இரு தரப்பு அமைதியை இஸ்ரேல் விரும்புவதாகத்தான் அவர் நம்பினார்.

அதன் ஆரம்பப் புள்ளியாகத்தான் ஓஸ்லோ உடன்படிக்கையை அவர் பார்த்தார். ஆனால், இஸ்ரேல் தனது வழக்கமான குடியேற்றத் திருவிழாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, யூதர்களைச் சமாதானப்படுத்தியதில் உண்மையிலேயே அவருக்கு அதிர்ச்சிதான்.

ஆனால் எப்படி எடுத்துச் சொன்னால் இது புரியும்?

மக்கள் யாரும் புரிந்துகொள்ளும் மன நிலையில் இல்லை.

தாங்கள் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவே கருதினார்கள். ஏதாவது செய்து தங்கள் எதிர்ப்பை மிகக் கடுமையான முறையில் பதிவு செய்ய மிகவும் விரும்பினார்கள். இது மட்டும் நடந்தால், பிறகு சரிசெய்யவே முடியாத அளவுக்குப் பிரச்னை பூதாகாரமாகிவிடும் என்று அராஃபத் அஞ்சினார்.

ஆகவே, மக்களின் கவனத்தைத் திசைமாற்றவும், யூதக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தவும் வேறு வழியே இல்லாமல், தானே இரண்டாவது இண்டிஃபதாவுக்கான அழைப்பை விடுக்கத் தீர்மானித்தார்.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது உண்மை. ஆனால் தொடர்ந்து நடைபெறும் காரியங்கள் எதுவும் அமைதியை முன்னெடுத்துச் செல்வதாக இல்லை என்று அறிவித்துவிட்டு, அரேபியர்களின் உணர்ச்சியை இஸ்ரேல் மதிக்கத் தவறுவதாகப் பேசினார்.

இது, சூடேறிக்கொண்டிருந்த பாலஸ்தீனைப் பற்றியெரியச் செய்யும் விதமான விளைவுகளை உண்டாக்க ஆரம்பித்தது. 1996-ம் ஆண்டில் மட்டும் இஸ்ரேலில், சுமார் முப்பது குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

அவற்றுள் டெல் அவிவில் வெடித்த பஸ் வெடிகுண்டு ஒன்று பத்தொன்பது பேர் உயிரைக் குடித்தது, மிக முக்கியமானது. மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஏப்ரலில் காஸா பகுதியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு ஆறு யூதர்கள் பலியானார்கள்.

மீண்டும் மே மாதம் டெல் அவிவில் ஒரு பஸ்ஸில் வெடிகுண்டு வெடித்து, முப்பது பேர் பலி. அந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக ஜெருசலேமில், அதே பாணி தற்கொலைத் தாக்குதலுக்கு ஐந்து பேர் பலி.
என்ன நடக்கிறது என்றே புரியாத சூழல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, ராணுவ நடவடிக்கை மிகவும் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு கருதினார்.

ஆனால் அரேபியக் குடியிருப்புகளில் ராணுவம் புகுமானால் விளைவு எந்த மாதிரியும் ஆகலாம். ஒரு முழுநீள யுத்தத்துக்கான சாத்தியமே அப்போது தெளிவாகத் தெரிந்ததால் சற்றே நிதானம் காட்டலாம் என்று மொஸாட் சொன்னது.

ஹமாஸ், மிகத் தீவிரமாகச் செயல்பட்ட நேரம் அது. தினசரி குண்டுகள் வெடிப்பது என்பதை ஒரு கடமை போலச் செய்தார்கள்.

பெரும்பாலும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், பாலங்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில்தான் அவர்கள் குண்டுவைத்தார்கள். பத்து அல்லது பன்னிரண்டு சாதாரண குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு, ஒரு பெரிய தற்கொலைத் தாக்குதல் நடத்துவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஹமாஸின் இந்தத் தீவிர நடவடிக்கைகள், அரேபியர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டாக்கியது.

ஒருவேளை தங்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போவதே ஹமாஸ்தானோ என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். நடப்பது எதுவுமே நல்லதுக்கல்ல என்பது மட்டும் அராஃபத்துக்குப் புரிந்தது.

பி.எல்.ஓ.வை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடுவதற்கு முன்னால், ஏதாவது செய்தால்தான் உண்டு என்று நினைத்தார்.

மிகவும் யோசித்து, சாதகபாதகங்களை அலசி ஆராய்ந்து, கடைசியில்தான் அந்த முடிவை எடுத்தார். இன்னொரு இண்டிஃபதா.

பாலஸ்தீனின் இரண்டாவது மக்கள் எழுச்சி என்று சரித்திரம் வருணிக்கும் இந்த இண்டிஃபதாவுக்கு "அல் அக்ஸா இண்டிஃபதா" என்று பெயர்.

அதாவது அல் அக்ஸா மசூதியை மீட்பதற்கான மக்கள் போராட்டம். சந்தேகமில்லாமல் இதனைத் தொடங்கியவர் அராஃபத் தான். ஆகவே இதன் விளைவாகப் பெருகிய மாபெரும் ரத்த வெள்ளத்துக்கும் அவரேதான் பொறுப்பு.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8 செப்டம்பர், 2005

82] அல் அக்ஸா மசூதியின் பின்னணி.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 82

இந்தச் சரித்திரத்தின், மிக ஆரம்ப அத்தியாயங்களில் தொட்டுக்காட்டிய, ஒரு மிக முக்கியமான பிரச்னையின் வாசலில், இப்போது நிற்கின்றோம்.

உள்ளே சென்று, விரிவாக அலசி ஆராயவேண்டிய விஷயம் அது.

அல் அக்ஸா மசூதி. அதனை மீட்பதற்காக பாலஸ்தீனியர்கள் தொடங்கிய 'அல் அக்ஸா இண்டிஃபதா'வைப் பார்ப்பதற்கு முன்னால், அம்மசூதியின் பின்னணியைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் ஆணிவேர், இந்த இடத்தில்தான் இருக்கிறது. சற்று நெருங்கிப் பாருங்கள். பற்றி எரியும் இந்த நெருப்பின் வெப்பம்தான், பாலஸ்தீனை ஆயிரமாண்டுகளாக வாட்டிக்கொண்டிருக்கிறது.

ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது.

ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ முடியும். முகம்மது நபியின் பாதம் பட்ட பூமி இதுவென்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. அவரது விண்ணேற்றத்துடன் தொடர்புடைய நிலம் இது.

இந்த அல் அக்ஸா பள்ளிவாசலுக்குச் சற்றுத்தள்ளி, இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது. அதன் பெயர் மஸ்ஜித் ஏ உமர். கலீஃபா உமர் கட்டிய பள்ளிவாசல் இது.

இந்த அல் அக்ஸா மற்றும் மஸ்ஜித் ஏ உமர் ஆகிய இரு பள்ளி வாசல்களையும் இணைத்த வளாகத்தை, முஸ்லிம்கள் 'பைத்துல் முகத்தஸ்' என்று அழைப்பார்கள்.

இந்த இடத்தை முன்வைத்துத்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான பிரச்னை ஆரம்பித்தது.

அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான், யூதர்களின் புராதனமான புனிதத்தலமான சாலமன் தேவாலயம் இருந்தது என்பது இஸ்ரேலியர்களின் வாதம்.

அதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, அந்தப் பள்ளிவாசலின் ஒருபக்கச் சுற்றுச் சுவராக இன்னமும் மிச்சமிருக்கும் அந்த உடைந்த சுவர். (Wailing wall எனப்படும் அழுகைச் சுவர். சாலமன் ஆலயம் இருந்ததன் அடையாளம், இந்தச் சுவர்தான் என்பது யூதர்களின் கருத்து. இந்தச் சுவரில் முகத்தைப் புதைத்து அழுதபடியே யூதர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.).

யூதர்களின் வாதம் என்னவெனில், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் முகம்மது நபி விண்ணேறிய சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அல் அக்ஸாவுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள Dome of the Rock எனப்படும், மஸ்ஜித் ஏ உமர் பள்ளிவாசல் இருந்த இடத்திலிருந்துதான் முகம்மது விண்ணேற்றம் செய்தார் என்பது.
படம்: மஸ்ஜித் அல் அக்ஸா]


தங்களுடைய இக்கருத்தை அழுத்தம் திருத்தமாக உலக மக்கள் மத்தியில் பதியச் செய்வதற்காக, Dome of the Rock ஐயே-அல் அக்ஸா என்று குறிப்பிடுவது யூதர்களின் வழக்கம்.

அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டுத் தங்கள் தேவாலயத்தை மீண்டும் அங்கே எழுப்புவதற்குத் தொல்பொருள் துறையின் உதவியை அவர்கள் நாடினார்கள்.

உண்மையில் அல் அக்ஸா வேறு, Dome of the Rock வேறு. இரண்டும் பைத்துல் முகத்தஸ் என்கிற ஒரே வளாகத்தில் இருக்கும், இரு வேறு மசூதிகள்.

அயோத்தி மாதிரியேதான். யூத தேவாலயங்கள் - சாலமன் ஆலயமே ஆனாலும் சரி; எப்படியானாலும் மசூதிகளின் காலத்துக்கு முற்பட்டவைதான்.

ஏனெனில், இஸ்லாத்தின் தோற்றமே காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஆனால், மசூதி இருக்கும் ஓரிடத்தில்தான் தங்களது புராதன ஆலயம் இருந்தது என்று நிறுவுவதற்கு, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் பல விபரீதங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

ஆதாரங்களில் தெளிவில்லாதது அவற்றுள் முதலானது. அணுகுமுறையில் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது அடுத்தது. பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க நினைத்தது மூன்றாவது.
புராண, சரித்திர காலங்கள் தொடங்கி மிகச் சமீபத்தில் 1967-ம் ஆண்டு வரை இந்த மசூதி வளாகம், முஸ்லிம்களின் வசம்தான் இருந்திருக்கிறது.


பாலஸ்தீன் யூதர்களை மொத்தமாக விரட்டியடிக்கும் தமது அரசியல் நோக்கத்துக்கு வலு சேர்ப்பதற்காகவே, இஸ்ரேலிய அரசு அல் அக்ஸா மசூதி விஷயத்தைக் கையில் எடுத்து, அங்கேதான் சாலமன் தேவாலயம் இருந்தது என்று தொடர்ந்து பிரசாரம் செய்து, மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட ஆரம்பித்தது.

பிரச்னையைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வசம் அளித்துவிட்டு, 'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் தோண்டிப் பாருங்கள்' என்று அனுமதியும் அளித்தது.

ஒரு மசூதி இருக்கிறது. மக்கள் அங்கே தினசரி தொழுதுகொண்டிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் தவிர உலகெங்கிலுமிருந்து ஜெருசலேத்துக்கு யாத்திரை வரும் முஸ்லிம்கள் அத்தனை பேரும் அந்த மசூதிக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். (முஸ்லிம் உலகின் மூன்றாவது மிக முக்கியமான வழிபாட்டுத்தலம் அது.)

இறைத்தூதருடன் தொடர்புடைய ஒரு நினைவுத் தலம் அது. அப்படிப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்க்க அனுமதி அளிப்பது என்றால், என்ன அர்த்தம்?

1967-ம் ஆண்டு யுத்தத்தின்போது ஜெருசலேம் நகரை முழுமையாக யூதர்கள் கைப்பற்றியபிறகுதான், இதெல்லாம் ஆரம்பமானது.

யுத்தத்தில் வெற்றி கண்ட மறுநாளே, இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. முதலில் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில் பதினான்கு மீட்டர் நீள, ஆழத்துக்குத் தோண்டினார்கள்.

அடுத்த ஒன்றரை ஆண்டு கால இடைவெளியில், அந்த இடத்தில் சுமார் எண்பது மீட்டர் நீளத்துக்குத் தோண்டி ஓர் அகழி போல் ஆக்கிவிட்டார்கள். பள்ளிவாசலின் மேற்குப் பகுதி வழியே, யாருமே உள்ளே போகமுடியாதவாறு ஆகிவிட்டது.

யுத்தத்தில் அரேபியர்கள் தோற்றிருந்ததால், ஜெருசலேம் நகரில் இருந்த முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

ஆகவே, அல் அக்ஸாவில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது.

உள்ளம் பதைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அவர்கள் இருந்தார்கள்.

1970-ம் ஆண்டு இந்த அகழ்வாய்வுப் பணியின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பமாயின. இம்முறை பள்ளிவாசலின் தென்மேற்கு மூலையிலிருந்து தோண்ட ஆரம்பித்தார்கள்.

அங்கிருந்து மேற்குத் திசை வாசல் வரை தோண்டிக்கொண்டே போனார்கள். இப்படி அகழ்வாய்ந்தபோது, மிகப் புராதனமான சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. (அடக்கஸ்தலம் என்பார்கள்.)

அவை, முகம்மது நபியின் தோழர்களாக விளங்கிய சிலரின் கல்லறைகள் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை.

இதற்கு ஆதாரமாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுவது இதுதான்:
யூதர்களின் அகழ்வாராய்ச்சியில் தட்டுப்பட்ட ஒரு குறிப்பிட்ட கல்லறையில், அது முகம்மது நபியின் தோழர்களுள் ஒருவரான உபாதா இப்னு அல் ஸாமித் என்பவருடையது என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் இருந்திருக்கிறது!

இதே போல இன்னொரு கல்லறையில், ஷத்தாத் இப்னு அவ்ஸ் என்கிற வேறொரு நபித்தோழரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும், கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

கல்லறைகளைக் கண்டுபிடித்ததோடு, யூதர்கள் நிறுத்தவில்லை. அதையும் உடைத்துப் பார்த்ததில் உள்ளே உடல்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், விஷயம் பெரிதாகிவிடக்கூடாது என்று, அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

தோண்டப்பட்ட அந்த இடங்களில் யாரும் வந்து பார்த்துவிடாமலிருக்க, அந்தப் பகுதியைச் சுற்றிலும், மேலும் பதின்மூன்று மீட்டர் சுற்றளவுக்கு மிகப்பெரிய அகழியைத் தோண்டிவிட்டார்கள்.

இந்தச் சம்பவமெல்லாம், எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. துல்லியமான ஆதாரங்கள் ஏதும், அப்போது வெளியாகவில்லை.

ஆனால், பள்ளிவாசலின் நுழைவாயிலுக்கு அருகே தோண்ட ஆரம்பித்து, சுமார் பத்து மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானபோது, விஷயம் வெளியே வந்துவிட்டது. இது நடந்தது 1976-ம் ஆண்டில்.

அந்த இடத்தின் அடிவாரம் வரை யூதர்கள் தோண்டிக்கொண்டே போக, எப்படியும் மசூதி இடிந்து விழத்தான் போகிறது என்று செய்தி பரவிவிட்டது.

துடித்து எழுந்தார்கள், முஸ்லிம்கள். உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி, பைத்துல் முகத்தஸ் வளாகமே வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது; அங்கே யூத ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவது சட்டவிரோதம் என்று ஆதாரங்களைக் காட்டி, படாதபாடுபட்டு ஆய்வை நிறுத்தினார்கள்.

நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் வழக்கு இழுத்தடித்தது. வழக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, 1981-ம் ஆண்டு யூதர்கள் மீண்டும் பள்ளிவாசலைத் தோண்டத் தொடங்கினார்கள். இம்முறை அவர்களுக்கு, ஒரு சுரங்கப்பாதை அங்கே இருந்தது தெரியவந்தது.

கி.பி. 636-ம் ஆண்டு கலீஃபா உமர் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில், எதற்காக ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இப்போது இல்லை.

ஒரு சாரார் கருத்துப்படி, உமர் இந்தப் பள்ளிவாசலைக் கட்டிய காலத்தில் சுரங்கம் எதையும் அமைக்கவில்லை. மாறாக, கி.பி 690 - 691 ஆண்டுக் காலகட்டத்தில், அப்துல் மாலிக் இப்னு ஹிஷாம் என்பவர் அல் அக்ஸா மசூதியை விரிவுபடுத்தி, மேலும் அழகூட்டி, செப்பனிட்டபோதுதான் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில், இந்தச் சுரங்கப்பாதையை அமைத்தார் என்று சொல்கிறார்கள்.

கி.பி. 1099-ம் ஆண்டு ஜெருசலேம் நகரைக் கிறிஸ்துவர்கள் கைப்பற்றியபோது பள்ளிவாசலையும் கைப்பற்றி, சுரங்கத்தை அடைத்துவிட்டார்கள்.

பின்னால் சார்லஸ் வார்ன் என்கிற ஒரு பிரிட்டிஷ் அகழ்வாய்வாளர், இந்த மூடிய சுரங்கத்தைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. (இது நடந்தது கி.பி.1880-ம் ஆண்டு.)

பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் மண்மூடிக் கிடந்த இந்தச் சுரங்கம்தான், 81-ம் ஆண்டு யூதர்களின் அகழ்வாய்வின்போது அகப்பட்டது.

செய்தி, மீடியாவுக்குப் போய்விட்டபோது, யூதர்கள் தரப்பில் 'இந்தச் சுரங்கப்பாதை சாலமன் ஆலயத்தின் ஒரு பகுதி. ஆலயக் கட்டுமானத்திலேயே சுரங்கமும் இருந்தது' என்று சொல்லப்பட்டது.

ஆனால், சாலமன் தேவாலயம் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தரும் எந்த ஒரு ஆவணமும் கோயில் எழுப்பப்பட்டபோது, சுரங்கம் இருந்தது பற்றிய குறிப்பு எதையும் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், யூதர்களின் அகழ்வாய்வின் விளைவாக, அல் அக்ஸா மசூதி இருந்த வளாகம் மிகப்பெரிய அகழி போலானதுதான் மிச்சமே தவிர, தேவாலயம் ஏதும் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இது மிகவும் இயல்பானது. சாலமன் ஆலயம் கட்டப்பட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நவீன காலத்தில் ஆதாரம் தேடி, இருக்கிற மசூதியை இடித்துப் பார்ப்பது என்பது வீண் வேலை.

இது யூதர்களுக்குத் தெரியாததில்லை. ஆனால், அந்த ஓர் உடைந்த சுவர் மீது, அவர்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இக்காரியத்தை எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் அவர்களைச் செய்யவைத்தது.

தவிரவும், அல் அக்ஸா மசூதியை முன்வைத்து முஸ்லிம்கள் ஜெருசலேம் நகரைச் சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்கிற எண்ணமும் இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று.

இப்படித் தோண்டித்தோண்டி மண் எடுத்ததின் விளைவாக, இன்றைக்கு அல் அக்ஸா பள்ளிவாசலின் அடித்தளம் மிக அபாயகரமான நிலையில் காணக்கிடைக்கிறது.

பள்ளிவாசலின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிகின்றன. மண் வாசனையே இல்லாமல் வெறும் கற்களின் மீது நிற்கிறது கட்டடம். ஒரு சிறு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட, மசூதி இடிந்து விழுந்துவிடும் அபாயம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 11 செப்டம்பர், 2005

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

Thursday, March 26, 2009

79.80.பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத். அன்றைக்கு யாசர் விதைத்ததுதான். பகுதி 79-80.


சதாம் உசேன். -யூதர்களின் குயுக்தி வெளிப்பட்டது.அராஃபத் இஸ்ரேலின் வலையில் விழுந்தது உண்மை என்றாகிவிட்டது.

------------------------------------

79] பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்.79

ஓஸ்லோ ஒப்பந்தப்படி காஸாவையும் ஜெரிக்கோவையும் முதலில் ஓர் ஐந்தாண்டு காலத்துக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, அரேபியர்களுக்குக் கிடைக்கும். தன்னாட்சி அதிகாரம் என்கிற பெயரில் அது வருணிக்கப்பட்டாலும், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பின் குறுநில ஆட்சியாளர்களாக அரேபியர்கள் இருக்கலாம், இயங்கலாம்.

பதிலுக்கு யாசர் அராஃபத் என்ன செய்யவேண்டும்?

இதில்தான் யூதர்களின் குயுக்தி வெளிப்பட்டது.

பி.எல்.ஓ.வை அரேபியர்களின் ஒரே அரசியல் முகமாகத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதன்படி யாசர் அராஃபத்தை பாலஸ்தீனிய அரேபியர்களின் ஒரே தலைவராகத் தாங்கள் அங்கீகரிப்பதாகவும், ஓஸ்லோ ஒப்பந்தத்தையொட்டி அமெரிக்காவில் வைத்து அராஃபத்திடம் சொன்னார், இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ராபின்.

இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட அத்தனை மதவாத இயக்கங்களையும் இஸ்ரேலிய அரசு முற்றிலுமாக ஒழித்துக்கட்ட விரும்புகிறது என்பதும், அதற்கு பி.எல்.ஓ. உதவி செய்யவேண்டும் என்பதுமாகும்.

ஏற்கெனவே ஹமாஸை வைத்து பி.எல்.ஓ.வை ஒழிக்க முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோற்றவர்கள் இஸ்ரேலியர்கள்.

இப்போது பி.எல்.ஓ.வை ஓர் அரசியல் இயக்கமாக அங்கீகரித்து அவர்களைக் கொண்டு ஹமாஸ் உள்ளிட்ட மதவாத இயக்கங்களை ஒழிக்க விரும்பினார், இஸ்ரேலியப் பிரதமர்.

அதற்காகத்தான் யூதர்களே யாரும் எதிர்பாராத வகையில் காஸா மற்றும் ஜெரிக்கோ ஆட்சி அதிகாரத்தை யாசர் அராஃபத்துக்கு விட்டுக்கொடுக்க முன்வந்தார்.

இதற்கு எப்படி அராஃபத் ஒப்புக்கொள்ளலாம் என்பதுதான் பாலஸ்தீனிய அரேபியர்களின் கேள்வி.

இதனை முன்வைத்துத்தான் அராஃபத் இஸ்ரேலிய அமெரிக்க சூழ்ச்சியில் விழுந்து, விலை போய்விட்டார் என்று பேச ஆரம்பித்தார்கள்.

உண்மையில் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு அராஃபத் ஒப்புக்கொண்டதற்கு வேறு சில நுணுக்கமான காரணங்கள் உண்டு.

தன்னாட்சி அதிகாரம் ஓரிடத்துக்கு வழங்கப்படுகிறதென்றால், அந்த இடத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனியே நிதி ஒதுக்கியாகவேண்டும்.

இஸ்ரேல் அரசுதான் அதைச் செய்துதரவேண்டும். அதுதவிர, ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தவுடன் தமக்கு உதவக்கூடிய அயல்தேசங்களிடம் கேட்டும் நிதியுதவி பெற்று அடிப்படை வசதிகளைக் கணிசமாக மேம்படுத்தலாம்.

காஸா, ஜெரிக்கோ பகுதிகளில் பாலஸ்தீனியன் அத்தாரிடி ஆட்சியமைக்கும் பட்சத்தில், மிகக்குறுகிய காலத்தில் அந்தப் பகுதிகளை சிறப்பாக மேம்படுத்தி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிசெய்யும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் உடனடியாக கவனம் பெற முடியும். அதை வைத்தே பாலஸ்தீன் விடுதலையை துரிதப்படுத்தலாம்.இதுதான் அராஃபத்தின் திட்டம்.

இதையெல்லாம் இஸ்ரேலும் யோசிக்காமல் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு அராஃபத்தின் வாயிலிருந்து ஒரு சொல் வரவேண்டியிருந்தது.

'இஸ்ரேலை அங்கீகரிக்கிறோம்' என்று பி.எல்.ஓ.வின் சார்பில் அவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகிவிடும்.

எந்த அரபு தேசமும் அதுகாறும் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் இருந்த நிலையில், பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவரே அதை முன்மொழிய வேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் விருப்பம்.

அதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மேற்சொன்ன காஸா மற்றும் ஜெரிக்கோ பகுதிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் என்று ஒரு சிறு ரொட்டித்துண்டை வீசியது இஸ்ரேல்.

அராஃபத் இந்த வலையில் விழுந்தார்.

காஸா பகுதி நிர்வாகத்தை பாலஸ்தீனியன் அத்தாரிடியிடம் ஒப்படைப்பதை ஒட்டி 2.7 பில்லியன் டாலர் பணத்தை இஸ்ரேல் தரவிருக்கிறது என்று எழுதியது ஒரு பிரபல அரபு தினசரிப் பத்திரிகை.

அதிகாரபூர்வமாக இந்த எண்ணிக்கை குறித்து, இரு தரப்பு முக்கியஸ்தர்களும் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றபோதும், தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட இந்தத் தொகை பற்றிய மறுப்பு ஏதும் வெளிவரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதுதவிர மேற்குக் கரை நகரமான ஜெரிக்கோவுக்காகத் தனியே 800 மில்லியன் டாலர் தொகையையும் ஒதுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் செய்தி வெளியானது.

2.7 பில்லியன், 800 மில்லியன் என்பதெல்லாம் மிகப்பெரிய தொகை. அரேபியர்களுக்காக இந்தத் தொகையை இஸ்ரேல் ஒதுக்குகிறது என்பது நம்பவே முடியாத உண்மை.

இத்தனை பெரிய தொகை ஒதுக்கப்படுகிறதென்றால், அவர்கள் தரப்புக்கு ஏதோ பெரிதாக லாபம் இல்லாமலா செய்வார்கள்?

இந்தச் சந்தேகம்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கும் போராளி இயக்கங்களுக்கும் மேலோங்கி இருந்தன.

அராஃபத் எப்படி இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியலாம்?

கேவலம் இரண்டு நகரங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காகவா இத்தனை ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்? என்றால், அரேபியர்களின் அகண்ட பாலஸ்தீன் கனவு அவ்வளவுதானா?

கோபம். கடும் கோபம். குமுறிக் குமுறித் தணிந்துகொண்டிருந்தார்கள்.

அராஃபத்தை அவர்களால் முற்றிலும் நிராகரிக்கவும் முடியவில்லை. அவரது இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.

அராஃபத், இஸ்ரேலிய அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு அரேபியர்களை ஏமாற்றிவிட்டார் என்று கூடச் சில தரப்பினர் மிகக் காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் இது அடிப்படையில்லாத சந்தேகம். அராஃபத்தின் நோக்கம், இந்தத் தாற்காலிக ஏற்பாட்டினாலாவது பாலஸ்தீன் மக்களின் துயர் துடைக்கக் கொஞ்சம் நிதி கிடைக்குமே என்பதுதான்.

இஸ்ரேல் ஒதுக்கும் நிதி மட்டுமல்ல. எல்லாம் நல்லபடியாக நடந்து, காஸா, ஜெரிக்கோ பகுதியின் நிர்வாகம் பாலஸ்தீன் அத்தாரிடி வசம் வந்துவிடுகிற பட்சத்தில், ஒப்பந்தத்தில் கூறியிருந்தபடி இஸ்ரேல் என்கிற தேசத்தை யாசர் அராஃபத் அங்கீகரிக்கும் பட்சத்தில், பல்வேறு அரபு தேசங்களும் அமெரிக்காவும் ஸ்காண்டிநேவியா அரசுகள் சிலவும் பாலஸ்தீனுக்கு நிறையக் கடனுதவி செய்வதற்கான சாத்தியங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன.

கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை வாழ்க்கைத் தரம் என்று அனைத்து அம்சங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த பாலஸ்தீன அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி உண்டாக்க, இது ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று அராஃபத் நினைத்தார்.

அதனால்தான் இறங்கிவந்து இஸ்ரேலுடன் கைகுலுக்கவும் இஸ்ரேலை அங்கீகரிக்கவும் கூடத் தயாரென்று அறிவித்தார்.

ஒரு போராளி இப்படிச் செய்வதைச் சகிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல்வாதி செய்வதாக யோசித்துப் பார்த்தால் அராஃபத் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

அவர் தன்னை முதன்மையாக ஒரு போராளியாக முன்னிறுத்திவந்ததுதான் இங்கே பிரச்னையாகிவிட்டது.

போயும் போயும் இஸ்ரேலுடன் எப்படி அராஃபத் கைகுலுக்கலாம் என்கிற கோபம்தான், அவரை ஓர் ஊழல்வாதியாகப் பேசவும், எழுதவும் வைக்கும் அளவுக்கு அரேபியர்களைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு போனது.உண்மையில் அராஃபத் ஊழல் செய்தார் என்பதற்கு இன்றுவரை யாராலும் வலுவான ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை.

சில சந்தேகங்கள் இருந்தன. யூகங்கள் இருந்தன. முணுமுணுப்புகள் இருந்தன. ஏராளமான கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் கூட இருந்தன.

பாலஸ்தீனியன் அத்தாரிடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அராஃபத் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரு நகரங்களின் ஆட்சிப் பணிகளை மேற்கொண்டபோது, அனைத்துப் பணத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டார், கணக்கு வழக்கு விவகாரங்களில் வெளிப்படையான அணுகுமுறை இல்லை என்றெல்லாம் குறை சொன்னார்கள்.

அவர் ஒரு சர்வாதிகாரிபோல் நடந்துகொள்கிறார் என்றும் சொன்னார்கள்.

ஆனால் யாராலும் எதையும் ஆணித்தரமாக நிரூபிக்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் இவற்றால் மட்டுமே அராஃபத் செய்தது முழு நியாயம் என்றும் ஆகிவிடாது.

பல லட்சக்கணக்கான பாலஸ்தீனிய அரேபியர்கள் 1948 யுத்தத்தைத் தொடர்ந்து, அகதிகளாக சிரியாவுக்கும் ஜோர்டனுக்கும் எகிப்துக்கும் இன்னபிற தேசங்களுக்கும் போய் வசிக்க வேண்டிவந்தது நினைவிருக்கும்.

அவர்களுக்கெல்லாம் இருந்த ஒரே நம்பிக்கை, என்றைக்காவது இழந்த தாயகம் மீண்டும் கிடைக்கும்; அப்போது இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெறலாம் என்பதுதான்.ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி அராஃபத் நடந்துகொள்ளத் தொடங்கியதன் விளைவு என்னவெனில், அவர்களின் கனவு தகர்ந்துபோனது.

இஸ்ரேல்தான் அதிகாரமுள்ள தேசம். பாலஸ்தீன் அத்தாரிடி என்பது, இஸ்ரேலின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட ஓர் உள்ளாட்சி அமைப்பு. தனியாட்சி அதிகாரம் என்று சொல்லப்பட்டாலும், எந்தக் கணத்திலும் இஸ்ரேல் அதை ரத்து செய்யும் தகுதியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் பாலஸ்தீனியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான பி.எல்.ஓ., இஸ்ரேலின் இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு செயல்பட ஆரம்பித்து விட்டதும், பாலஸ்தீனியர்களின் சுதந்திர தாகத்தைத் தணிக்கக்கூடிய இயக்கம் என்று வேறு எதுவுமே இல்லாமல் ஆகிவிட்டது.

ஹமாஸைத் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.

அவர்கள் குண்டுவைக்கலாமே தவிர, இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழு யுத்தம் நடத்த முடியுமா என்பது சந்தேகமே.

அப்படியே நடத்தினாலும் எந்த தேசமும் உதவிக்கு வராது. ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு யார் உதவி செய்ய வருவார்கள்?

ஆக, நோக்கம் எத்தனை உயர்வானதாகவே இருந்தாலும், அராஃபத் இஸ்ரேலின் வலையில் விழுந்தது உண்மை என்றாகிவிட்டது.

இஸ்ரேலை அவர் அங்கீகரிக்கவும் செய்துவிட்டார்.

இதற்குமேல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இண்டிஃபதாவைத் தொடருவது?

இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். இண்டிஃபதா உக்கிரமாக நடைபெற்று வந்த காலத்தில் மொத்தம் சுமார் பதினான்காயிரம் அரேபியர்களை இஸ்ரேலியக் காவல்துறை சிறைப்பிடித்து அடைத்து வைத்திருந்தது.

ஓஸ்லோ ஒப்பந்தப்படி அரேபியர்களின் தன்னாட்சி உரிமையை அவர்கள் அங்கீகரிப்பது உண்மையென்றால், நல்லுறவின் அடையாளமாக முதலில் அவர்களை விடுவிப்பது குறித்தல்லவா பேசியிருக்கவேண்டும்?

ஆனால் அந்தப் பதினான்காயிரம் பேரின் கதி என்னவென்று கடைசிவரை சொல்லவே இல்லை.

அராஃபத்தும் அது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை என்பது மிகவும் உறுத்தலாகவே இருந்துவந்தது.

செப்டம்பர் 9, 1993 அன்று அராஃபத் ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டார்.

இஸ்ரேலை அங்கீகரித்து வெளியிடப்பட்ட முதல் அறிக்கை அது. ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் மனத்துக்குள் குமுறிக் குமுறித் தணிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்துதான் செப்டம்பர் 13-ம் தேதி வாஷிங்டன் நகரில் பில் க்ளிண்டன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

காஸாவையும் மேற்குக்கரையின் சில பகுதிகளையும் பாலஸ்தீனியன் அத்தாரிடியிடம் ஒப்படைப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் அறிவித்தார்.

உடனடியாக பாலஸ்தீனியன் அத்தாரிடியின் தலைவராக யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரமல்லாவில் இருந்தபடி அவர் ஆட்சி புரிவார் என்றும் அறிவிக்கப்பட்டது.ஒரு சில பாலஸ்தீனியன் அத்தாரிடி முக்கியஸ்தர்கள், இந்த அமைதி உடன்படிக்கை, நீண்டநாள் நோக்கில் பலன் தரத்தக்கது என்று பக்கம் பக்கமாகப் பேசியும் எழுதியும் வந்தபோதும், பெரும்பாலான பி.எல்.ஓ.வின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கே இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்தது.

ஒப்பந்தம் முடிவானவுடனேயே பி.எல்.ஓ.வின் செயற்குழு உறுப்பினர்களான மஹ்மூத் தார்விஷ் என்பவரும் ஷாஃபிக் அல் ஹெளட் என்பவரும் தமது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து வேறு சில முக்கிய பி.எல்.ஓ. தலைவர்களும் விரைவில் ராஜினாமா செய்யவிருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராஜினாமா செய்த மஹ்மூத், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 'அராஃபத் மிகவும் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். பாலஸ்தீனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர் கையாளும் விதம் அச்சமூட்டும்விதத்தில் இருக்கிறது. யாராலுமே கணக்குக் கேட்கவும் முடியவில்லை, எதுவும் வெளிப் படையாகவும் இல்லை' என்று சொன்னார்.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த மறுகணமே நிதி விவகாரங்களில் குற்றச்சாட்டு எழுந்ததில் அராஃபத் மிகவும் மனம் உடைந்துபோனார்.

பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு இந்த ஏற்பாடே பிடிக்கவில்லை என்பதிலும் அவருக்கு வருத்தம்தான்.

அமைதியின் தொடக்கமாக ஓஸ்லோ ஒப்பந்தத்தை அவர் கருதினார். அதன் வழியே எப்படியாவது 1967 யுத்தத்துக்கு முன்னர், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கென்று இருந்த நிலப்பரப்பை முழுவதுமாக மீட்டு, ஒரு சுதந்திர பாலஸ்தீனை நிறுவுவதே அவரது கனவாக இருந்தது.அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தத் தயாராக இல்லை.

உள்நாட்டில் அராஃபத்தின் செல்வாக்கு கணிசமாகச் சரியத் தொடங்கிய அதே சமயம், அமைதிக்கான நோபல் பரிசை அவர் ஷிமோன் பெரஸ் மற்றும் இட்ஸாக் ராபினுடன் பகிர்ந்துகொள்வார் என்று ஸ்வீடிஷ் அகடமி அறிவித்தது.

இது நடந்தது 1994-ம் ஆண்டு.

பாலஸ்தீனியர்கள் இன்னும் கோபம் கொண்டார்கள். நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆரம்பித்தது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 1 செப்டம்பர், 2005

80] அன்றைக்கு யாசர் விதைத்ததுதான்..
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 80.

இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு. மற்ற எந்த அரபு தேசமும் செய்ய முன்வராதவகையில் இஸ்ரேலை அங்கீகரிப்பது. அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ஒப்பந்தத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்தது. நார்வேயில் அமைதி ஒப்பந்தம். மீண்டும் அமெரிக்காவில் அதை உறுதிப்படுத்துவது. இதெல்லாம் நடந்து முடிந்தவுடனேயே அமைதிக்கான நோபல் பரிசு.

அதையும் இஸ்ரேலியர்கள் இரண்டு பேருடன் பகிர்ந்துகொண்டது.என்ன இதெல்லாம்? செய்வது யார்? யாசர் அராஃபத்தா? பாலஸ்தீனிய அரேபியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்று வருணிக்கப்பட்டவரா?

எப்படி அவரால் இப்படியொரு அரசியல் முகம் கொள்ள முடிந்தது? எதனால் அவர் இப்படி மாறிப்போனார்? இஸ்ரேல் கிடக்கட்டும், அமெரிக்காவுடன் எப்படி அவரால் தோழமை கொள்ள முடிந்தது? ஏன் இதனைச் செய்தார்? ஒரு ஜிகாத் போராளி செய்யக்கூடியவையா இதெல்லாம்?

இதுதான் பாலஸ்தீனியர்களுக்குப் புரியவில்லை.

இதன் காரணமாகத்தான் அராஃபத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கவும், கண்டபடி பேசவும் ஆரம்பித்தார்கள்.

அரஃபாத்தின் இந்த நடவடிக்கைகளை சறுக்கல் என்று வருணித்தார்கள்.

'ஒரு பரிசுத்தமான போராளி, விலைபோய்விட்டார்' என்று பேசவும் ஏசவும் தொடங்கினார்கள்.

ஆனால், சற்றே கண்ணைத் திறந்து, நடந்த அனைத்தையும் நடுநிலைமையுடன் பார்க்க முடியுமானால் அராஃபத் சறுக்கவில்லை என்பது புரியும்.

செய்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாகத்தான் அவர் இவற்றையெல்லாம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பது புரியவரும்.

இதைக்கூடத் தனக்காக அல்லாமல் பாலஸ்தீனிய அரேபியர்களுக்காகத்தான் அவர் செய்தார் என்பதும் கவனத்தில் ஏறும்.

1991-ம் ஆண்டு மத்தியக் கிழக்கில் ஒரு புயல் வீசியது. புயலின் பெயர் சதாம் உசேன். ஈராக்கின் அதிபர்.

சதாம் உசேனுக்கு ஏறக்குறைய ஹிட்லரின் மனோபாவம் அப்படியே இருந்தது அப்போது. குறிப்பாக, நாடு பிடிக்கிற விஷயத்தில். ஈராக்குக்கு அண்டை நாடான குவைத்தின் எண்ணெய்ச் செழுமை, அதனால் உண்டான பணச்செழுமை ஆகியவற்றால் கவரப்பட்ட சதாம், எப்படியாவது குவைத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று தாம் பதவிக்கு வந்த நாளாக நினைத்துக்கொண்டிருந்தார்.

1991-ம் ஆண்டு அது நடந்தது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதற்கு குவைத்தின் சில கொள்கை முடிவுகள்தான் காரணம் என்று சதாம் குற்றம் சாட்டினார்.

ஒரே நாள். ஒரே இரவு. ஈராக் படைகள் குவைத்துக்குள் புகுந்தன. வீசிய புயலில் குவைத் கடலுக்குள் மூழ்காதது வியப்பு.

குவைத்தின் அமீராக இருந்தவர் உயிர் பிழைக்க சவுதி அரேபியாவுக்கு ஓடிப்போனார்.

ஆதரவற்று இருந்த குவைத்தை அப்படியே எடுத்து விழுங்கி, 'இனி இந்தத் தேசம் ஈராக்கின் பத்தொன்பதாவது மாநிலமாக இருக்கும்' என்று அறிவித்தார் சதாம் உசேன்.

நவீன காலத்தில் இப்படியொரு ஆக்கிரமிப்பை யாருமே எதிர் பார்த்திருக்கவில்லை.

ஒட்டுமொத்த மத்தியக்கிழக்கும் அச்சத்தில் ஆழ்ந்தது. சதாம் அச்சம். எங்கே தம்மீதும் பாயப்போகிறாரோ என்கிற கவலை.

மத்தியக் கிழக்கை ஒரு ஐரோப்பாவாகவும், தன்னையொரு ஹிட்லராகவும் கருதிக்கொண்டு இன்னொரு உலக யுத்தத்துக்கு வழி செய்துவிடுவாரோ என்கிற பயம்.

இந்தச் சம்பவத்தை மற்ற அரபு தேசங்களைக் காட்டிலும் அமெரிக்கா மிகத் துல்லியமாக கவனித்து ஆராய்ந்தது. எப்படியாவது மத்தியக்கிழக்கில் தனது கால்களை பலமாக ஊன்றிக்கொண்டு, எண்ணெய்ப் பணத்தில் தானும் கொழிக்க முடியுமா என்று சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது அது.

மேலும் பரம்பரையாக எண்ணெய் எடுக்கும் தொழிலில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வாக்கர் புஷ்தான் அப்போது அமெரிக்காவின் அதிபராக ஆகியிருந்தார்.

ஆகவே, அத்துமீறி குவைத்தை ஆக்கிரமித்த ஈராக் மீது உடனடியாக போர் அறிவித்தது அமெரிக்கா. குவைத் அப்போது, இப்போது, எப்போதும் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் அமெரிக்கா போர் அறிவிக்க, இன்னொரு பக்கம் ஐக்கிய நாடுகள் சபையும் ஈராக்கின் இந்த அத்துமீறலைக் கடுமையாக எதிர்த்ததுடன் அல்லாமல் ஈராக்குக்கான சர்வதேச உதவிகளுக்கும் தடை போட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தது.

அநேகமாக உலகம் முழுவதுமே சதாமுக்கு எதிராகத் திரண்டு நின்ற நேரம் அது.

அப்படியென்றால் உலகம் முழுவதுமே அமெரிக்க ஆதரவு நிலை எடுத்ததா என்றால் இல்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் குவைத்தை விழுங்கிய ஈராக் மீது ஒரு சர்வதேச வெறுப்பு ஏற்பட்டிருந்தது என்பது உண்மை.

அந்த வெறுப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும், குவைத்துக்கு மறுவாழ்வு அளிப்பதன்மூலம் மத்தியக்கிழக்கில் தன்னுடைய வேர்களைப் படரவிடவும் அமெரிக்கா திட்டம் தீட்டியது.

இப்படியொரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில், சம்பந்தமே இல்லாத பாலஸ்தீனிய விடுதலை இயக்கமும் அதன் தலைவரான யாசர் அராஃபத்தும் சதாம் உசேனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

யாசர் அராஃபத், சதாம் உசேனைச் சந்தித்த புகைப்படம் வெளியாகி சர்வதேச மீடியாவைக் கலக்கியது.

இது, பி.எல்.ஓ.மீது உலக நாடுகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபத்தையும் சுத்தமாக வழித்துத் துடைத்துக் கழுவிக் கவிழ்த்துவிட்டது.

உலகத்தின் பார்வையில் அன்றைய தேதியில் பி.எல்.ஓ.ஒரு போராளி இயக்கம்தான். அரசியல் முகமும் கொண்டதொரு போராளி இயக்கம்.

ஆனால் சதாம் உசேன் என்பவர் ஒரு சாத்தானாக மட்டுமே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது.

இன்றைக்கு அத்துமீறி குவைத்தில் நுழைந்தவர், நாளை எந்த தேசத்தை வேண்டுமானாலும் அப்படி ஆக்கிரமிக்கக்கூடும் என்கிற சந்தேகத்தில் எப்படியாவது சதாமின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்று அத்தனை பேருமே நினைத்தார்கள்.

தம்மால் முடியாத ஒரு காரியத்தை அமெரிக்கா செய்ய முன் வருகிறதென்றால், அதற்கு உதவி செய்யமுடியாவிட்டாலும் ஒதுங்கி நின்று வழிவிடுவதே சிறந்தது என்று அனைத்துத் தலைவர்களும் நினைத்தார்கள்.

இதன்மூலம் அமெரிக்கா எப்படியும் சிலபல லாபங்களைப் பார்க்காமல் விடாது; இன்றைக்கு ஈராக்கிடமிருந்து காப்பாற்றி அளிக்கும் குவைத்தை நாளை அமெரிக்காவே கபளீகரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதுவரை கூட மத்தியக்கிழக்கின் தலைவர்கள் யோசித்துவிட்டார்கள்.

ஆனால், சதாம் உசேன் என்கிற பொது எதிரி முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் அத்தனை பேருமே கருதியதால்தான் பேசாமல் இருந்தார்கள்.

அதுவும் அப்போது அமெரிக்க அதிபர் புஷ் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள்.

நேரடியாக அமெரிக்கப் படைகளை ஈராக்கில் கொண்டுவந்து நிறுத்தாமல், 'உங்கள் படைகளை ஈராக் எல்லையில் அணிவகுத்து நிறுத்துங்கள்' என்று சவுதி அரேபிய அரசுக்குக் கட்டளை இட்டது அமெரிக்கா.

'இது உங்கள் பிரச்னை; நான் உதவி செய்யமட்டுமே வருகிறேன்' என்று சொல்லாமல் சொல்லும் விதம் அது.

அதன்படி சவுதி அரசுதான் தன்னுடைய ராணுவத்தை முதல் முதலில் ஈராக்குக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தியது.

அப்புறம்தான் அமெரிக்கப் போர் விமானங்கள் வந்து சேர்ந்து வானில் வாணவேடிக்கை காட்ட ஆரம்பித்தன.

இப்படியொரு இக்கட்டான தருணத்தில் பி.எல்.ஓ. தனது தார்மீக ஆதரவை சதாம் உசேனுக்கு அளித்ததற்கு என்ன காரணம் என்று யாருக்குமே புரியவில்லை.

யாசர் அராஃபத்தின் நோக்கம் விளங்கவில்லை.

ஒருவேளை அவர் இப்படி நினைத்திருக்கலாம்: ஈராக்கின் அதிபர் சதாம் உசேன், மத்தியக் கிழக்கின் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்துகொண்டிருக்கிறார். அமெரிக்காவையே எதிர்க்கும் அளவுக்கு அவரிடம் வல்லமை இருக்கிறது என்னும்போது அவரது நட்பைப் பெறுவது பாலஸ்தீன் விடுதலையைத் துரிதப்படுத்த உதவக்கூடும்.இது ஒரு காரணம்.

இன்னொரு காரணம், சகோதர முஸ்லிம் தேசங்கள், அனைத்தும் ஒரு யுத்தம் என்று வரும்போது சதாமை ஆதரிக்கத்தான் விரும்பும் என்று யாசர் அராஃபத் தப்புக்கணக்குப் போட்டது.

போயும் போயும் அமெரிக்காவுக்கு ஆதரவாக எந்த அரபு தேசமும் இருக்காது, இயங்காது என்று அவர் மனப்பூர்வமாக நம்பினார்.

அராஃபத்தின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல் இது.

மதச் சார்பற்ற இயக்கமாகத் தன்னுடைய பி.எல்.ஓ.வை வழிநடத்தியவர், ஈராக் விஷயத்தில் முஸ்லிம் தேசங்கள், அமெரிக்காவை ஆதரிக்காது என்று மதத்தை முன்வைத்து யோசித்தது வியப்பே.

அந்தச் சறுக்கலுக்குக் கொடுத்த விலைதான் பாலஸ்தீன் விடுதலை என்கிற அவரது முயற்சிக்கு ஏற்பட்ட பலமான பின்னடைவு.

ஐ.நா.வே கைவிட்டுவிடும் சூழ்நிலை ஏற்பட்டது.

எந்த ஒரு தேசமும் அப்போது அராஃபத்தின் நியாயங்களை யோசிக்கத் தயாராக இல்லை.

உலக நாடுகள் அனைத்தும் கேவலம், சதாமைப் போயா இந்த மனிதர் ஆதரித்தார்! என்று அருவருப்புடன் பார்க்கத் தொடங்கின.

மதம் கடந்து, அரசியல் கடந்து, ஒழிக்கப்படவேண்டியதொரு சர்வாதிகாரியாக மட்டுமே சதாம் உசேனை உலகம் பார்க்கிறது என்பதை அராஃபத் அவதானிக்கத் தவறிவிட்டார். அதற்கான விலைதான் அது!

இன்னும் எளிமையாகப் புரிய ஓர் உதாரணம் பார்க்கலாம். ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்த ஆதரவையும் அனுதாபத்தையும் எண்ணிப்பாருங்கள்.

புலிகளுக்குத் தமிழகம் ஓர் இரண்டாம் தாயகமாகவே இருந்துவந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.

ஆனால், அந்தப் படுகொலைக்குப் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாகிப் போனதல்லவா?

அதுவரை விடுதலை இயக்கமாகவே அறியப்பட்டுவந்த விடுதலைப் புலிகளை, ஒட்டுமொத்த இந்தியாவும் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதன் காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?

செயல். ஒரு செயல். ஒரே ஒரு செயல். அதன் விளைவுகளுக்கான விலைதான் அது.

இதே போன்றதுதான் அன்றைக்கு பி.எல்.ஓ.வுக்கு ஏற்பட்ட நிலைமையும்.

சதாம் உசேனை குவைத் யுத்தத்தின் போது அராஃபத் ஆதரித்துவிட்டதன் பலனாக பாலஸ்தீன் விடுதலைக்காக அதுவரை அவர் வகுத்துவைத்த அத்தனை திட்டங்களையும் உலகம் நிராகரித்துவிட்டது.

எந்த ஒரு தேசமும் எந்த ஓர் அமைப்பும் பி.எல்.ஓ.வுக்கு ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கத் தயங்கியது.

தனது ஆயுதப் போராட்டத்தைத் தாற்காலிகமாகவாவது ஒதுக்கிவைத்துவிட்டு, அமைதிப் பேச்சுகளில் கவனம் செலுத்தி, ஏற்பட்டுவிட்ட அவப்பெயரைத் துடைத்துக்கொண்டால்தான் விடுதலைப் போராட்டத்தில் ஓர் அங்குலமாவது முன்னேற முடியும் என்று அராஃபத் முடிவு செய்தார்.

அதனால்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அவர் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வந்தார்.

நார்வேயின் அமைதி ஏற்பாட்டுக்குச் சம்மதம் சொன்னார். பெரிய லாபமில்லாவிட்டாலும் ஓஸ்லோ உடன்படிக்கைக்கும் ஒத்துழைக்க முடிவு செய்தார்.

அமெரிக்க அதிபருடன் கை குலுக்கினார். அத்தனை காரியங்களையும் ஆத்மசுத்தியுடன் செய்தார்.

இந்த விவரங்களை பாலஸ்தீனிய அரேபியர்கள் சிந்தித்துப் பார்க்க மறந்ததன் விளைவுதான் அராஃபத்தை துரோகி என்றும், விலை போய்விட்டவர் என்றும், பதவி ஆசை பிடித்தவர் என்றும் வசைபாடவைத்தன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் அராஃபத் கடுமையான பதில்களை ஒருபோதும் தந்ததில்லை. புரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள் என்று மௌனமாக மன்றாடியதைத் தவிர, அவர் வேறெதுவும் செய்யவில்லை.

குவைத் யுத்தத்தில் அவர் சதாமை ஆதரித்தது ஒரு விபத்து. சந்தேகமில்லாமல் விபத்து.

அதுபற்றிய வருத்தம் அராஃபத்துக்கு இறுதி வரை இருந்திருக்கிறது. தனது சறுக்கலை அவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால், அதன் விளைவுகள் தனது தேசத்தின் விடுதலையைப் பாதித்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அவர் ஓஸ்லோ உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டார் என்பதைத்தான் பாலஸ்தீனியர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

இஸ்ரேலுடன் நல்லுறவு வேண்டாம்; குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் அளவுக்காவது சுமாரான உறவு இருந்தால்தான் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பது அராஃபத்தின் நம்பிக்கை.

ஏனெனில், இஸ்ரேலை ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று இதர பாலஸ்தீனிய இயக்கங்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்ததைப் போல் அவர் செய்யவில்லை.

இஸ்ரேலை ஒழிப்பதென்பது வெறும் மாய யதார்த்தம் மட்டுமே என்பதை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார்.

இங்கேதான் ஒரு போராளிக்கும் அரசியல் விற்பன்னருக்கும் உள்ள வித்தியாசம் வருகிறது.

அராஃபத் ஒரு போராளியாக மட்டும் இருந்திருப்பாரேயானால் அவரும் அந்தக் கற்பனையான இலக்கை முன்வைத்துக் கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் சுட்டுக்கொண்டேதான் இருந்திருப்பார்.

அவர் ஒரு ராஜதந்திரியாகவும் இருந்ததால்தான் அமைதிக்கான வாசல்களை அவரால் திறந்துவைக்க முடிந்தது.

அன்றைக்கு அவர் விதைத்ததுதான் இன்றைக்கு காஸாவிலிருந்தும் மேற்குக் கரையிலிருந்தும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேலிய அரசே வெளியேற்றும் அளவுக்குப் பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது.

அராஃபத் இறந்ததனால்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியிருக்கிறது என்று இன்றைக்கு இஸ்ரேலிய அரசு விஷமப்பிரசாரம் செய்யலாம்; செய்கிறது.

உண்மையில் அன்றைக்கு அமைதிப் பேச்சு என்கிற விஷயத்தை அவர் ஆரம்பித்து வைக்காதிருப்பாரேயானால், ஜோர்டன் நதி முழுச் சிவப்பாகவே இப்போது ஓடவேண்டியிருந்திருக்கும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 செப்டம்பர், 2005

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

Wednesday, March 25, 2009

77.78 இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள் ஓஸ்லோ ஒப்பந்தம். பகுதி.77-78.

இஸ்ரேலின் குள்ளநரித்தனம் உலக மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, பாலஸ்தீனியர்களின் சுய அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியாயம் என்று பேச வழிவகுத்தது.


ஏராளமான பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டதில் கொதித்துப்போன அமெரிக்கப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அந்தச் செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துப் பிரசுரித்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்க அரசு இஸ்ரேலைக் கண்டித்துப் பேசவும், நடவடிக்கை எடுக்கவும் கூடக் கடுமையாக வற்புறுத்தின.
--------------------------------------------------------------
77] இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 77

நமக்குத்தெரிந்த ஊர்வலங்கள், நாம் பார்த்திருக்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், நமது தேசத்தில் நடைபெறும் மாபெரும் பேரணிகள், சீரணி அரங்கத்தில் திரளும் மக்கள்வெள்ளம் _ இவற்றைக் கொண்டு பாலஸ்தீனில் அன்று நடைபெற்ற இண்டிஃபதாவைக் கற்பனை செய்யாமல் இருப்பது நல்லது.

ஏனெனில், எண்பதுகளின் பிற்பகுதியில், பாலஸ்தீனியர்களின் இந்த எழுச்சி அலையை ஒப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காமல் திண்டாடித் தெருவில் நின்றிருக்கிறது சர்வதேச மீடியா.

பத்து, நூறு, ஆயிரமல்ல. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டுவிடுவார்கள். நிற்க இடமில்லாமல் சாலைகள் அடைபடும். கூட்டம் ஓரங்குலம் நகர்வதற்கே மணிக்கணக்காகும். ஒட்டுமொத்த பாலஸ்தீனிய அரேபியர்களும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது, எத்தனை கண்ணீர்க் குண்டுகள் வீசமுடியும்?

என்னதான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?

மேலும் எழுச்சிப் பேரணி என்பது காலை தொடங்கி மாலை முடிவுறும் விஷயமும் அல்ல. வருடக்கணக்கில் நடந்தது. இரவு _ பகல் பாராமல் நடந்தது.

பிறவி எடுத்ததே பேரணி நடத்தத்தான் என்பது போல் திடீர் திடீரென்று நினைத்துக் கொண்டாற்போல் மக்கள் கூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகளை முதலில் நடக்கவிட்டு, பின்னால் பெண்கள் அணிவகுப்பார்கள்.

அவர்களுக்குப் பின்னால் ஆண்கள். நடுவில் ஊடுபாவாகப் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இருக்கவே இருக்கிறது கல் வண்டிகள். பெட்ரோல் அடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள்.

பாலஸ்தீனியப் போராளி இயக்கங்களின் நோக்கத்துக்கு, இந்த மக்கள் எழுச்சிப் பேரணிகள் மிகப்பெரிய உதவிகள் செய்ததை மறுக்கவே முடியாது. அதே சமயம், இழப்புகளும் சாதாரணமாக இல்லை.

முதல் இண்டிஃபதா தொடங்கி பதின்மூன்று மாத காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் முஸ்லிம்கள் இஸ்ரேலியக் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அத்தனைபேரும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள். பதிலுக்கு அரேபியர்கள் நடத்திய தாக்குதலில் (அதே ஒரு வருட காலத்தில்) 160 இஸ்ரேலியக் காவல்துறையினர் இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கல்லடித் தாக்குதல் உத்தியைக் காட்டுமிராண்டித்தனமாக மீடியாவில் முன்னிறுத்த, இஸ்ரேல் அரசு மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொண்டது.

உலகப்போர்களையும் உள்ளூர்ப் போர்களையும் பார்த்துவிட்ட பிறகு, துப்பாக்கிச் சூடு என்பது மிகச் சாதாரணமான விஷயமாக ஆகிவிட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்லால் அடித்துக் கொல்வது என்பது கண்டிப்பாகக் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது என்று நம்பி, இஸ்ரேல் அரசு இண்டிஃபதாவின் வன்முறைப் பக்கங்களை _ குறிப்பாக அரேபியர்களின் கல்லடித் தாக்குதல் காட்சிகளை கவனமாகப் படம் பிடித்து மீடியாவுக்கு அளிக்க விசேஷ கவனங்கள் எடுத்துக்கொண்டது.

ஆனால், இந்த முயற்சி பலனளிக்கவில்லை. காரணம், இண்டிஃபதா ஊர்வலங்களைக் குழந்தைகளை முன்னிறுத்தி அரேபியர்கள் நடத்தியபடியால், முதல் பலி எப்படியானாலும் சிறுவர், சிறுமியராகவே இருந்ததால், அதுதான் பூதாகரமாக வெளியே தெரிந்தது.

"குழந்தைகளைத் தாக்காதீர்கள்" என்று ராணுவ உயர் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கரடியாகக் கத்திக்கொண்டிருந்தாலும், இஸ்ரேலியப் படையினருக்கு அத்தனை பெரிய கூட்டங்களைச் சமாளிக்கத் தெரியவில்லை. குழந்தைகளை விலக்கிவிட்டு எப்படிக் கூட்டத்தின் உள்ளே புகுந்து பின்னால் அணி வகுக்கும் ஆண்களைக் குறிவைப்பது என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஊர்வலத்தை தூரத்தில் பார்க்கும்போதே அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் சில நூறு குழந்தைகளாவது உடனே மயக்கமடைந்து கீழே விழும். காத்திருந்தாற்போல் போராளி அமைப்பினர் அவற்றைப் புகைப்படமெடுத்து அனுப்பிவிடுவார்கள்.

இஸ்ரேலியப் படையினர் ஊர்வலத்தை நெருங்கி, தாக்குதலை மெல்ல ஆரம்பித்து எல்லாம் முடிந்தபிறகு படமெடுக்கத் தொடங்குவதற்குள் அங்கே குழந்தைகள் விழுந்துகிடக்கும் படங்கள் பிரசுரமே ஆகியிருக்கும்.

நாடெங்கிலும் பெரிது பெரிதாக போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவார்கள். நம்மூர் பாணியில் சொல்லுவதென்றால் "அப்பாவிக் குழந்தைகள் அநியாய பலி! யூதர்களின் கொலைவெறியாட்டம்!!" என்கிற தலைப்புகளை நாள்தோறும் பார்க்க முடிந்தது.

பாலஸ்தீன் பற்றி எரிகிறது என்பது தெரிந்ததுமே உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தமது பிரதிநிதிகளை பாலஸ்தீனுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

பெரும்பாலான சர்வதேச ஊடகங்களுக்கு அன்று பாலஸ்தீனில் ஒரு நிரந்தர அலுவலகமே இருந்தது.

இந்த மேலை நாட்டு ஊடகச் செய்தியாளர்களிடம் ஒரு பிரச்னை என்னவெனில், அவர்களுக்கு அரபு - யூத உறவு அல்லது உறவுச் சிக்கல் பற்றிய அடிப்படைகள் அவ்வளவாகத் தெரியாது. வரலாறு தெரியாது.

ஆகவே, ஒவ்வொருவரும் தம் இஷ்டத்துக்கு ஒரு வரலாற்றை உற்பத்தி செய்து பக்கம் பக்கமாகக் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக ஐரோப்பிய தேசங்களிலிருந்து அன்றைக்கு பாலஸ்தீனுக்கு வந்த பத்திரிகையாளர்கள் அடித்த கூத்து, நகைச்சுவை கலந்த சோகம்.
ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்லுவார்கள்.

இண்டிஃபதா ஊர்வலத்தை ஒருநாள் பார்த்துவிட்டு, அரேபியர்கள் அடிபடும் காட்சி அவர்கள் கண்ணில் பட்டுவிட்டதென்றால், அன்றைக்கு அரேபியர்கள் மீது அவர்களின் அனுதாபம் பிய்த்துக்கொண்டு ஊற்றத் தொடங்கிவிடும்.

சரித்திர காலத்திலிருந்தே பிரச்னையை கவனித்து வருபவர்கள்போல, அரேபியர்களின் பக்கம் சார்பு எடுத்து பக்கம் பக்கமாக என்னென்னவோ எழுதித் தள்ளி அனுப்பிவிடுவார்கள். அது பிரசுரமும் ஆகிவிடும்.

அதே நிருபர்கள் மறுநாள் அல்லது அடுத்த வாரம் எழுதும் கட்டுரை சம்பந்தமே இல்லாமல் யூத ஆதரவு நிலை எடுத்துப் பல்லை இளிக்கும்.
உண்மை என்னவென்றால், பிரச்னையின் ஆணிவேர் அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


சரித்திர காலம் தொடங்கி நடந்துவரும் இரண்டு இனங்களின் மோதலுக்கு அடிப்படை என்னவென்று மேலை நாட்டினருக்குத் தெரியவே தெரியாது.

யூதர்கள் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்கிற அனுதாபம் அனைத்து ஐரோப்பியர்களுக்கும் எப்போதும் உண்டு. ஏனென்றால், ஐரோப்பிய தேசங்கள்தான் யூதர்களைக் கஷ்டப்படுத்தியிருக்கின்றன.

அது ஓரெல்லை வரை அவர்களது உள்ளூர் சரித்திரத்தின் சில அத்தியாயங்கள். ஆகவே, யூத ஆதரவு நிலை எடுக்க அந்த ஒரு காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது.

ஆனால், சமகாலத்தில் பாலஸ்தீன் மக்களின் எழுச்சிப் போராட்டத்தைப் பார்க்க நேரிடுகையில், யூதர்கள் தம் குணத்தை மாற்றிக்கொண்டு கொடுங்கோலர்களாக மாறிவிட்டார்களோ என்றும் சமயத்தில் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

உண்மையில், யாரும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. குணத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

யூதர்கள், அரபுகளின் நிலங்களை அபகரித்ததில்தான் பிரச்னை தொடங்குகிறது.

நிலவங்கிகள் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இது நா¦Ç¡ரு முகம் கொண்டு பூதாகரமாகி வருகிற விஷயம்.

ஆதரவற்ற அரேபியர்களை அடக்கி வைப்பது அவர்களுக்குச் சுலபமாக இருந்த காரணத்தால், தயங்காமல் தர்ம, நியாயம் பார்க்காமல் பாலஸ்தீன் முழுவதையும் ஆக்கிரமித்தார்கள்.

அரபுகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஒருமித்த குரலில் இஸ்ரேலை எதிர்க்கமுடியவில்லை.

யுத்தம் வரை வந்த சகோதர அரபு தேசங்கள் கூட, கிடைத்தவரை லாபம் என்று மேற்குக் கரையையும் காஸாவையும் ஆளுக்கொரு பக்கம் கூறு போட்டது நினைவிருக்கலாம்.

1948 - யுத்தத்தின்போதே, ஜோர்டனும் எகிப்தும் தமக்கு லாபமாகக் கிடைத்த பாலஸ்தீனிய நிலப்பரப்பை பாலஸ்தீனிய அரேபியர்களிடமே திருப்பிக் கொடுத்து, சுதந்திரப் பாலஸ்தீனை உருவாக்கி அளித்திருப்பார்களேயானால், அவர்களின் சுதந்திரத்துக்குப் பாதுகாவலர்களாக நின்றிருப்பார்களேயானால், இத்தனை தூரம் பிரச்னை வளர்ந்திருக்கமுடியாது.

மீண்டும் யுத்தம் செய்து இழந்த நிலங்களை இஸ்ரேல் கைக்கொண்டபிறகு தான் இத்தனை விவகாரங்களும் சூடுபிடித்தன.

இதெல்லாம் ஐரோப்பிய மீடியாவுக்குத் தெரியவில்லை. ஆகவே, இஷ்டத்துக்கு எழுதி, குழம்பிய குட்டையை மேலும் குழப்ப ஆரம்பித்தார்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம், ஐரோப்பிய ஊடகங்களுக்குத் தெரியாத சரித்திரங்களை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க மீடியா எடுத்துச் சொன்னது என்பதுதான்.

இண்டிஃபதா ஊர்வலங்களில் ஏராளமான பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டதில் கொதித்துப்போன அமெரிக்கப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அந்தச் செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துப் பிரசுரித்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்க அரசு இஸ்ரேலைக் கண்டித்துப் பேசவும், நடவடிக்கை எடுக்கவும் கூடக் கடுமையாக வற்புறுத்தின.

நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுகளுக்கு நாம் வந்து சேரவேண்டியிருக்கிறது:

பாலஸ்தீன் போராளி இயக்கங்களே சாதிக்க முடியாத பலவற்றை இந்த மக்கள் எழுச்சி ஊர்வலங்களும் அதன் தொடர்ச்சியான கலவரங்களும் சாதித்தன.

பாலஸ்தீன் பிரச்னை குறித்த சர்வதேச கவனமும் அக்கறையும் உண்டாக இந்த இண்டிஃபதாதான் ஆரம்பக் காரணமானது. பாலஸ்தீன் விஷயத்தை ஐ.நா. மிகத்தீவிரமாக கவனிக்கவும் பின்னால் பி.எல்.ஓ.வுக்கு ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்து அளிக்கவும் கூட இதுதான் மறைமுகக் காரணம்.

அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் தொடர்போ, ஒத்துழைப்போ இல்லாமல், பாலஸ்தீனிய அரேபியர்கள் தாங்களாகவே வழிநடத்தி, முன்னெடுத்துச் சென்ற இந்த மிகப்பெரிய எழுச்சி ஊர்வலங்கள், அரசியலைத் தாண்டி அனுதாபத்துடன் பிரச்னையைப் பார்க்க வழி செய்தன.

அதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாலஸ்தீனிய அரேபியர்களை "South Syrians" என்று சிரியாவின் குடிமக்களாக முன்னிலைப் படுத்தியே பேசிவந்த இஸ்ரேலின் குள்ளநரித்தனம் உலக மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு,

பாலஸ்தீனியர்களின் சுய அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியாயம் என்று பேச வழிவகுத்தது.

இந்த இண்டிஃபதாவுக்குப் பிறகு சற்றும் நம்பமுடியாதபடியாகப் பல்வேறு ஐரோப்பிய தேசங்களின் அரசுகள் பி.எல்.ஓ.வுக்கும் றி.கி என்று சுருக்கமாகச் சொல்லப்படும் "பாலஸ்தீனியன் அத்தாரிடி" என்கிற அரபுகளின் ஆட்சிமன்றக் குழுவுக்கும் வெள்ளமென நிதியுதவி செய்ய ஆரம்பித்தன.

மறுபுறம் அமெரிக்க அரசு, தனது விருப்பத்துக்குரிய தோழனான இஸ்ரேலிய அரசுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளையும் மிரட்டல்களையும் முன்வைத்து வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது.

குறிப்பாக எழுச்சிப் பேரணியின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பதினாறு வயதுக்குட்பட்ட 159 அரேபியக் குழந்தைகள் மொத்தமாக இஸ்ரேலியக் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஊடகங்கள் அத்தனையும் தம் அரசின் இஸ்ரேலிய ஆதரவு நிலையை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன.

வேறு வழியில்லாமல் அமெரிக்க அரசு இது தொடர்பாக இஸ்ரேலைக் கண்டித்ததுடன் மட்டுமல்லாமல், ஒரு சில உதவிகளைத் தாம் நிறுத்த வேண்டிவரும் என்று எச்சரிக்கையும் செய்தது.

இஸ்ரேல் அரசின் நிதி ஆதாரம் கணிசமாக பாதிக்கப்பட ஆரம்பித்தது. ஒரு வருட காலத்தில் சுமார் 650 மில்லியன் டாலர் ஏற்றுமதி இதனால் கெட்டது என்று பேங்க் ஆஃப் இஸ்ரேல் அறிக்கை அளித்துக் கலவரமூட்டியது. இந்தப் போராட்டங்களினால் இஸ்ரேலின் சுற்றுலா வருமானம் சுத்தமாக நின்றுபோனது.

அதுவரை அரேபியர்களின் அனைத்துப் போராட்டங்களையும் தீவிரவாதச் செயல்களாக மட்டுமே சொல்லிவந்த இஸ்ரேலிய அரசுக்கு இண்டிஃபதா எழுச்சிப் பேரணிகளை என்ன சொல்லி வருணிப்பது என்று தெரியாமல் போனது.

தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் கலந்துகொள்ளும் பேரணிகளை எப்படித் தீவிரவாதச் செயலாக முன்னிலைப்படுத்த முடியும்? அதுவும் சர்வதேச மீடியா முழுவதும் அப்போது பாலஸ்தீனில் குடிகொண்டிருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இண்டிஃபதா நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலெல்லாம் யாசர் அராஃபத்தும் பி.எல்.ஓ.வின் மிகமுக்கியத் தலைவர்களும் துனிஷியாவில் அகதி அந்தஸ்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். (அதற்குமுன் கொஞ்சகாலம் லெபனானிலும் அங்கிருந்து துரத்தப்பட்டு சிரியாவிலும் தஞ்சமடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.)

பாலஸ்தீனில் இருக்கமுடியாத அரசியல் நெருக்கடி அவர்களுக்கு இருந்தது.

வெளிநாட்டில் இருந்தபடிதான் பாலஸ்தீனியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடிக்கொண்டிருந்தார்கள்.

இண்டிஃபதாவின் மகத்தான வெற்றிதான் அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வழிகோலியது. அதாவது ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான ஆரம்பமே இந்த மக்கள் எழுச்சிப் பேரணிகளும் அவற்றின் விளைவுகளும்தான். ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்த பிறகுதான் பி.எல்.ஓ.வினர் பாலஸ்தீன் திரும்ப முடிந்தது.

அதென்ன ஓஸ்லோ ஒப்பந்தம்? அடுத்துப் பார்க்கவேண்டியது அதுதான்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 ஆகஸ்ட், 2005

78] ஓஸ்லோ ஒப்பந்தம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 78

பி.எல்.ஓ. போன்ற மாபெரும் போராளி இயக்கங்களின் தலைவர்கள் பாலஸ்தீனிலேயே இருந்தபடி போராட்டங்களை நடத்துவது என்பது சற்றும் இயலாத காரியம்.

ஓர் இயக்கத்தை வழி நடத்துவது என்பது நூற்றுக்கணக்கான சிக்கல்களை உட்கொண்டது. முதலில் போராளிகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும்.

அதற்கு சௌகரியமான இடம், வசதிகள், உணவு, போதிய தூக்கம், பாதுகாப்பு மிகவும் அவசியம். இவற்றைவிட முக்கியம், பணம். அப்புறம் அரசு ஆதரவு. தடையற்ற ஆயுதப் பரிமாற்றங்களுக்கான வசதிகள்.

இதன் அடுத்தக்கட்டம், அரசியல் தீர்வுகளுக்கான ஆலோசனைகளை மேற்கொள்வது, பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளைத் திறக்கப் பார்ப்பது. உண்மையிலேயே அதில் விருப்பமிருக்குமானால் தலைவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருந்தாக வேண்டும்.

விமர்சனங்களுக்கு அஞ்சாத பக்குவம் வேண்டும். நீண்டநாள் நோக்கில் தேசத்துக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாவதற்காகக் கொள்கைகளில் சிறு மாறுதல்கள் செய்துகொள்ளத் தயங்கக்கூடாது. எல்லாவற்றைக் காட்டிலும் சுயநலமற்ற மனப்பான்மை நிரந்தரமாக இருக்கவேண்டும்.

இதெல்லாம் அனைவருக்கும் புரியக்கூடியவை அல்ல. புரியும் என்றாலும் முழுக்கப் புரிவது சாத்தியமில்லை.

பாலஸ்தீனில் வசிக்க முடியாத பி.எல்.ஓ.வினருக்கு லெபனானும் சிரியாவும் டுனிஷும் அரசியல் அடைக்கலமும் ஆதரவும் அளித்து, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழி செய்துகொடுத்ததில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை.

ஆனால், அராஃபத் யுத்தத்தைக் காட்டிலும் அரசியல் தீர்வில்தான் தமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தொடக்கம் முதல் வெளிப்படையாகத் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டதில்தான், கொஞ்சம் பிரச்னையாகிவிட்டது.

அரசியல் தீர்வுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று வாய்வார்த்தையில் சொல்லுவது பெரியவிஷயமல்ல. அதை அவர் தொடக்கம் முதலே செய்துவந்திருக்கிறார் என்றபோதும், பிரதானமாக ஒரு போராளியாகவே அடையாளம் காணப்பட்டவர்,

இஸ்ரேலிய அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுவந்திருக்கிறார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் விஷயமாகவே இருந்தது.

தவிரவும், முன்பே பார்த்தது போல அராஃபத்தும் சரி, அவரது அல்ஃபத்தா அமைப்பும் சரி, ஆரம்பம் முதலே சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரும் இயக்கமுமாகவே அடையாளம் காணப்பட்டு வந்ததையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒருபோதும் மதத்தை முன்னிறுத்தி அராஃபத் யுத்தம் மேற்கொண்டதில்லை.

அவரளவில் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்றபோதும், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு அராஃபத்தின் அரசியல் அவ்வளவாகப் புரியவில்லை என்பது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தெரியவந்தது.

அராஃபத் டுனிஷில் இருந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.

இவற்றில் எது ஒன்றும் முழு விவரங்களுடன் வெளியே வரவில்லை. ஒரு பக்கம் பாலஸ்தீன் முழுவதும் இண்டிஃபதா எழுச்சிப் போராட்டங்கள் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்பதைப் பாலஸ்தீனியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தாற்காலிகத் தீர்வுகளின் வழியே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது என்கிற சித்தாந்தத்தில், அராஃபத்துக்கு நம்பிக்கை உண்டு.

அவரது மேடைப்பேச்சு வீடியோக்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. ஆக்ரோஷமாக "ஜிகாது ஜிகாது ஜிகாது" என்று கை உயர்த்திக் கோஷமிடும் அந்த அராஃபத்தைத்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குத் தெரியும்.

அந்த உத்வேகத்துக்கு ஆட்பட்டுத்தான் அவர்கள் இண்டிஃபதாவை மாபெரும் வெற்றிபெற்ற போராட்டமாக ஆக்கினார்கள்.

அதிகம் படிப்பறிவில்லாத, தலைவன் என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய அந்த மக்களுக்கு, அராஃபத்தின் இந்த அரசியல் தீர்வை நோக்கிய ஆரம்ப முயற்சிகள் முதலில் புரியாமல் போனதில் வியப்பில்லை.

துப்பாக்கியுடன் மட்டுமே அராஃபத்தைப் பார்த்தவர்கள் அவர்கள். ஆலிவ் இலையும் துப்பாக்கியும் கைக்கொன்றாக எடுத்துக்கொண்டு ஐ.நா.வுக்குப் போன அராஃபத், அவர்களுக்கு மிகவும் புதியவர்.

அதனால்தான், இண்டிஃபதாவின் விளைவாக உருவான ஓஸ்லோ ஒப்பந்தம், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் தந்தது.

அவநம்பிக்கை என்றால், அராஃபத்தின் மீதான அவநம்பிக்கை. கிட்டத்தட்ட சரிபாதி பாலஸ்தீனியர்கள் இந்த அவநம்பிக்கைக்கு ஆட்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அகண்ட பாலஸ்தீனத்தின் ஒரே பெரிய தலைவராக அவரைக் கற்பனை செய்து பார்த்து வந்த மக்களுக்கு, அவரை ஒரு முனிசிபாலிடி சேர்மனாக நினைத்துப் பார்ப்பதில் நிறைய சங்கடங்கள் இருந்தன.

அதைவிட, எங்கே அராஃபத் விலைபோய்விடுவாரோ என்கிற பயம் அதிகம் இருந்தது.

அவரும் இல்லாவிட்டால் தங்களுக்கு விடிவு ஏது என்கிற கவலை. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் வசித்துவந்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் அடிமனத்தில் இந்த பயம் இருக்கத்தான் செய்தது.

இந்த விவரங்களின் பின்னணியில், நாம் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குள் நுழைவது சரியாக இருக்கும்.

இன்றைக்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசம் பேசி ஏதாவது நல்லது செய்துவைக்க முடியுமா என்று பார்க்கிற நார்வே, அன்றைக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில்கூட இப்படியானதொரு அமைதி முயற்சியை மேற்கொண்டது.

ஆனால் இன்றைக்குப் போல, அன்று நடந்த இந்த முயற்சிகள், வெளிப் படையான முயற்சிகளாக இல்லை. மாறாக, டுனிஷியாவில் இருந்த யாசர் அராஃபத்துக்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் பரம ரகசியமாகவே நடைபெற்றன.

இதற்கு நார்வே மட்டும் காரணமல்ல. ஓரெல்லை வரை அமெரிக்காவும் காரணம்.

1989-90_களிலிருந்தே பி.எல்.ஓ.வும் இஸ்ரேலிய அரசும் ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஓரளவு அமைதிக்கான சாத்தியம் இருக்கிறது என்பது தெரியவந்தபோது, ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான பணிகளில் இறங்க ஆரம்பித்தார்கள்.

ஓஸ்லோ என்பது நார்வேவின் தலைநகரம். அங்கே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் அந்தப் பெயர் வந்துவிட்டது. அவ்வளவுதான்.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அராஃபத் நார்வேக்குப் போகவில்லை. அவர் அப்போது அமெரிக்காவில் இருந்தார்.

அமெரிக்க அதிகாரிகளுடனும் ஐ.நா.வின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். நிரந்தரத் தீர்வு என்பது உடனடியாகச் சாத்தியமில்லாத காரணத்தால், சில தாற்காலிகத் தீர்வுகளை இருதரப்புக்கும் பொதுவாக அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் முன்வைத்தார்.

ஒரு பக்கம் யாசர் அராஃபத் அங்கே பேசிக்கொண்டிருந்த அதே சமயம், அங்கே பேசப்பட்ட தீர்வுகள், ஓர் ஒப்பந்தமாக எழுதப்பட்டு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் கையெழுத்தானது.

பி.எல்.ஓ.வின் சார்பில் அகமது குரானி என்பவரும், இஸ்ரேல் அரசின் சார்பில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரஸும் கையெழுத்திட்டார்கள்.

கவனிக்கவும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், ரகசியமாகவே செய்யப்பட்டது. உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று இது நடந்தது.

ஒப்பந்தம் என்று செய்யப்பட்டதே தவிர, பாலஸ்தீனியர்கள் இதனை எப்படி ஏற்பார்கள் என்கிற சந்தேகம் அராஃபத்துக்கும் இருந்திருக்கிறது.

அதனால்தான், பகிரங்கமாக ஒப்பந்தத்தை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.

ஆனால், இதெல்லாம் மூடிவைக்கிற விஷயமல்ல என்கிற காரணத்தினால் சரியாக எட்டே தினங்களில் (ஆகஸ்ட் 27) வெளிவந்துவிட்டது. பத்திரிகைகள் எப்படியோ மோப்பம் பிடித்து செய்தி வெளியிட்டுவிட்டன.

முதலில் அராஃபத்தும் இஸ்ரேலிய அதிகாரிகளும் யோசித்தார்கள். அப்படியொரு ஒப்பந்தம் நடக்கவே இல்லை என்று சொல்லிவிடுவதா?
அல்லது, ஆமாம் நடந்தது என்று உண்மையை ஒப்புக்கொள்வதா?

இதுதான் குழப்பம். ஆனால் நார்வே அரசு, இதற்கு மேல் மூடி மறைக்க வேண்டாம் என்று சொல்லி, ஒப்பந்தம் கையெழுத்தானது உண்மைதான் என்று பகிரங்கமாக அறிவித்தது.

பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே வியப்புடன் பார்த்த சம்பவம் இது.

ஆண்டாண்டு காலமாகப் பாலஸ்தீனியர்களின் விடுதலைக்காகத்தான் யாசர் அராஃபத் போராடுகிறார். அவர்களுக்காகத்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓர் ஒப்பந்தம் வரை போயிருக்கிறார். அப்படி இருக்கையில், அதை ஏன் ரகசியமாகச் செய்யவேண்டும்? மக்கள் மத்தியிலேயே செய்திருக்கலாமே?

என்றால், காரணம் இல்லாமல் இல்லை. நிதானமாகப் பார்க்கலாம்.

விஷயம் வெளியே தெரிந்துவிட்டதும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள வேண்டியதானது என்று பார்த்தோமல்லவா?

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தை, முறைப்படி பகிரங்கமாக மீண்டும் ஒரு முறை செய்தால்தான் சரியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் சொன்னார்.

ஆகவே, கையெழுத்தாகிவிட்ட ஒப்பந்தம் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகிரங்கமாக, மீடியாவின் விளக்குகளுக்கு எதிரே மீண்டும் கையெழுத்தானது.

இம்முறை இஸ்ரேல் பிரதமர் இட்ஸாக் ராபினும் யாசர் அராஃபத்துமே பில் க்ளிண்டன் முன்னிலையில் கையெழுத்துப் போட்டார்கள்.

இப்படியொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக யூதர்கள், ராபினைப் புழுதிவாரித் தூற்றி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அரேபியர்கள், யாசர் அராஃபத்தை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

யாருக்குமே சந்தோஷம் தராத அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாம்:

Declaration of Principles என்று தலைப்பிடப்பட்டு ஒரு கொள்கைப் பிரகடனமாக வெளியிடப்பட்ட இந்த ஒப்பந்தம், மொத்தம் பதினேழு பிரிவுகளையும் நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டது.

"பாலஸ்தீன் மக்கள் தமது ஒரே தலைவராக யாசர் அராஃபத்தைத்தான் கருதுகிறார்கள். ஆகவே, அவருடன் செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களுடனும் செய்துகொள்ளும் ஒப்பந்தமாகக் கருதப்படும்" என்கிற அறிவிப்புடன் ஆரம்பமாகும் இந்த ஒப்பந்தத்தின் சாரமென்னவென்றால்,

பி.எல்.ஓ.வுக்கு இஸ்ரேலிய அரசு சில இடங்களில் தன்னாட்சி செய்யும் உரிமையை வழங்கும் என்பதுதான்.

தன்னாட்சி என்கிற பதம், சற்றே கிளுகிளுப்பு தரலாம்.

உண்மையில் ஒரு நகராட்சி அல்லது மாநகராட்சியை நிர்வகிப்பது போன்ற அதிகாரத்தைத்தான் இஸ்ரேல் அதில் அளித்திருந்தது.

காஸா மற்றும் மேற்குக் கரையிலுள்ள ஜெரிக்கோ நகரங்களை ஆட்சி செய்யும் அதிகாரம் அரேபியர்களிடம் அளிக்கப்படும்.

"பாலஸ்தீனியன் அத்தாரிடி" என்கிற ஆட்சிமன்ற அமைப்பின் மூலம் அவர்கள் அந்தப் பகுதிகளை நிர்வகிக்க வேண்டும்.

யாசர் அராஃபத் முதலில் பாலஸ்தீனுக்கு ஒரு முறை "வந்துபோக" அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் அங்கே குடிபெயரவும் ஏற்பாடு செய்யப்படும்.

பி.எல்.ஓ.வின் ஜோர்டன் கிளையில் உறுப்பினர்களாக இருக்கும் சில நூறு போராளிகள் மேற்குக் கரைப் பகுதி நகரமான ஜெரிக்கோவுக்கு வந்து நகரக் காவல் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். (அதாவது உள்ளூர் போலீஸ்.) பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தபால் துறை ஆகிய துறைகள் பாலஸ்தீனியன் அதாரிடியால் நிர்வகிக்கப்படும்.

இஸ்ரேலிய ராணுவம் அந்தப் பகுதிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்படும். ஆனால், உடனடியாக அது நடக்காது.

"தன்னாட்சி அதிகாரம் பெற்ற இடங்கள்" என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலங்களையும் நீர் ஆதாரங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இஸ்ரேல் அரசிடம்தான் இருக்கும். ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பு மற்றும் வெளி விவகாரத் துறைப் பொறுப்பு ஆகியவையும் இஸ்ரேலைச் சேர்ந்ததே.

சுற்றி வளைக்க அவசியமே இல்லை.

இரண்டு நகரங்களை ஒரு நகராட்சித் தலைவர்போல யாசர் அராஃபத் ஆளலாம். அவ்வளவுதான்.

இதற்குத்தான் நார்வே நாட்டாமை. அமெரிக்க ஆதரவு. ரகசியப் பேச்சுக்கள் எல்லாம்.

அதுசரி. பதிலுக்கு பி.எல்.ஓ. அவர்களுக்குச் செய்யப்போவது என்ன?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 ஆகஸ்ட், 2005.

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)