61] யூதர்களை ஆதரிக்கும் காரணங்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 61
பாலஸ்தீன் போராளிகளுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை, ஆயுதங்கள். அதிநவீன ஆயுதங்களுடன் அவர்களுக்குப் பரிச்சயம் கிடையாது. கொடுத்தாலும் உபயோகிக்கத் தெரியாது. நாட்டுத் துப்பாக்கிகளும் கையெறிகுண்டுகளுமே அவர்களுக்குப் போதுமானவை. ஆனால் அவை கிடைப்பதில்தான் அதிக சிக்கல்கள் இருந்தன.
மற்ற விஷயங்களில் எப்படியோ. ஆயுதப் பதுக்கல், கடத்தல், தயாரித்தல் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஒழிப்பதில் அப்போது பாலஸ்தீனில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் மிகத் தீவிரமாக இருந்தது. போராளிகளின் செயல்பாடுகளை ஒடுக்குவதென்பது அவர்களை நிராயுதபாணிகளாக்குவது தான் என்பது அவர்களின் சித்தாந்தம்.
ஆகவே, கிராமம் கிராமமாக தினசரி ரெய்டுக்குப் போவார்கள். பாழடைந்த கட்டடங்கள், பாலைவனப்பகுதிகள், குன்றுகள், குகைகள், மசூதிகள் என்று திட்டமிட்டுச் சென்று தேடி போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து அழித்து வந்தார்கள்.
ஆகவே, பாலஸ்தீன் போராளிகள் தமக்கான ஆயுதங்களை உள்ளூரில் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சிரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் ஜோர்டனிலிருந்தும் சற்றுத் தள்ளி ஈராக்கிலிருந்தும் அவர்கள் ஆயுதங்களை ரகசியமாகத் தருவித்துக்கொண்டிருந்தார்கள்.
பேரீச்சம்பழ மூட்டைகளின் அடியில் பதுக்கி, துப்பாக்கிகளை அவர்கள் கடத்தி வந்தார்கள். பயணிகள் வாகனங்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி, அதன்மூலமும் ஆயுதங்கள் கடத்தினார்கள்.
எல்லையோர கிராமவாசிகள், ஆடுகள் மேய்ப்போர், நாடோடிக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி அவர்கள் மூலமும் ஆயுதம் கடத்தினார்கள்.
இப்படி, பாலஸ்தீனுக்கு ஆயுதம் அனுப்ப ஒவ்வொரு நாட்டிலும் சில குழுக்கள் இருந்தன. எல்லைவரை ஆயுதங்களைக் கொண்டுவந்து உரியவர்களிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்வது அவர்களது பணி.
அப்படியான ஒரு குழுவின் தொடர்புதான் அராஃபத்துக்கு முதன் முதலில் ஏற்பட்டது. பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான எதையாவது செய்யவேண்டும் என்று கருதிய அராஃபத், ஆயுதங்களை எல்லை வரை கடத்திச் சென்று கொடுத்துவரும் பணியை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.
இந்தப் பணி, தன் படிப்பை பாதித்தாலும் பரவாயில்லை என்பதே அவரது கருத்தாக இருந்தது. ஆனாலும் பள்ளிப் படிப்பில் அவர் சுமாரான மதிப்பெண்களைப் பெறவே செய்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் அராஃபத், கெய்ரோவில் உள்ள ஃபாத் (Faud) பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பைத் தொடங்கினார். பின்னாளில் இதுதான் கெய்ரோ பல்கலைக் கழகம் என்று அறியப்பட்டது.
இந்தப் பல்கலைக் கழகத்தில் அராஃபத் படிக்கத் தொடங்கியது, கட்டுமானப் பொறியியல் படிப்பு. இந்தப் படிப்பில் சேர்வதன்மூலம் பாலைவனங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் நிறைய பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருக்கும் என்று அவர் கருதினார்.
கல்லூரி மூலமாகவே பாலஸ்தீன் செல்லவும் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்று நினைத்தார். ஏனெனில் அன்றைக்குப் பல்வேறு மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் பொறியியல் மாணவர்கள், கட்டடங்களை ஆய்வு செய்ய, புராதன கட்டுமானங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஜெருசலேத்துக்கு வந்துகொண்டிருந்தார்கள். அப்படியரு சந்தர்ப்பம் தனக்கும் கிடைத்தால் அடிக்கடி ஜெருசலேத்துக்குச் செல்ல முடியுமே என்று அவர் கருதியிருக்கலாம்.
ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் போய்விட்டது. 1948-ம் வருடம். இஸ்ரேல் உருவாகி, அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் யுத்தம் மூண்டிருந்த தருணம். அராஃபத்துக்கு அப்போது பத்தொன்பது வயது. (ஆகஸ்ட் 24, 1929 அன்று அவர் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இது உறுதிப்படுத்த முடியாத தகவல். அவர் ஆகஸ்ட் 4-ம் தேதி ஜெருசலேத்தில் பிறந்தார் என்று ஒரு சாரார் இன்றும் தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அராஃபத்தின் பிறப்புச் சான்றிதழைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தாலும் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் அவரைப் பற்றிய ஆவணங்களைத் தேடிப்பெற இயலாத காரணத்தாலும் அவரது பிறப்பு விவரங்கள் இன்றளவும் சந்தேகத்துக்கு இடமானதுதான்.
ஆலன் ஹார்ட் என்கிற அராஃபத்தின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர்கூட அவர் கெய்ரோவில் பிறந்ததைத் தான் உறுதிப்படுத்துகிறாரே தவிர, பிறந்த தேதி, ஆண்டு உள்ளிட்ட விவரங்களை அல்ல.)
ஏற்கெனவே பாலஸ்தீன் போராளிகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த அராஃபத்துக்கு, யுத்தத்தில் அரபு முஸ்லிம்கள் பட்டுக்கொண்டிருந்த காயமும் அவமானமும் ஆறாத வடுவாகிப்போனது.
வழிகாட்ட ஒரு நாதியில்லாமல் இப்படி நிலத்தை இழந்து தவிக்கிறார்களே என்று கண்ணீர் விட்டார். ஏதாவது செய்யமாட்டோமா என்று அவர் மனம் ஏங்கியது.
இஸ்ரேலியர்கள் அத்தனை பேரையும் நிற்க வைத்துச் சுடவேண்டும் என்கிற வெறி மேலோங்கியது. இதற்குமேல் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா என்று சந்தேகப்பட்டார். உடனடியாகச் சில தோழர்களுடன் எகிப்து எல்லையைக் கடந்து காஸா பகுதிக்குள் புகுந்தார். யுத்தத்தில் பங்கெடுக்கத் தொடங்கினார்.
கவனிக்கவும். அராஃபத்துக்கு அப்போது பெரிய போர்ப்பயிற்சிகள் கிடையாது. முதல் முறையாக ஆயுதங்களைப் பயன்படுத்தினார். எப்படிச் சுடவேண்டும் என்பதுகூடத் தெரியாது. இலக்கு சரியாகப் பட்டால் அதிர்ஷ்டம் என்கிற நிலையில்தான் இருந்தார். தனக்கு மட்டுமல்ல; பெரும்பாலான பாலஸ்தீனப் போராளிகளும் தன்னைப் போலத்தான் இருக்கிறார்கள் என்பதையும் கவனித்தார்.
யுத்தத்தில் அரேபியர்கள் அடைந்த வீழ்ச்சி அராஃபத்தை மிகவும் பாதித்தது. உதவிக்கு வந்த சகோதர அரபு தேசங்கள் அனைத்தும் அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் ஆளுக்குக் கொஞ்சம் லாபம் பார்த்துவிட்டு ஊர் திரும்பியதும் அவரை வருத்தமுறச் செய்தது.
விரக்தியில், என்ன செய்வதென்று புரியாமல் சில காலம் பிரமை கொண்டு திரிந்தார். தன்னால் மேற்கொண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை.
ஒரு கட்டத்தில் அந்தப் பிராந்தியத்தை விட்டே விலகி எங்காவது போய்த் தனியாக வசித்தால் உருப்படியாகத் தன்னால் யோசிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றியது. தனிமையில்தான் திட்டம் தீட்ட முடியும். தனிமையில்தான் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். தனிமைதான் காயப்பட்ட மனத்தைப் புடம் போடும். மேலும் தனிமை தரும் அனுபவங்களும் முக்கியமானவை.
ஆகவே அராஃபத் சில காலம் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து, விசாவுக்கு விண்ணப்பித்தார். அங்கே டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.
அந்த ஒருசில வருட அமெரிக்க வாழ்க்கைதான் அராஃபத்தின் கண்ணைத் திறந்தது என்று சொல்லவேண்டும்.
தனக்குக் கிடைத்த தனிமையை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீன் மக்களைக் குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார்.
அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலையை மிக நெருக்கமாக ஆராய்ந்தார். யூதர்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? அமெரிக்கா போன்ற பெரும் முதலாளித்துவ தேசங்கள் அவர்களை ஏன் ஆதரிக்கிறார்கள்?
யூதர்களை விரட்டியடித்த ஐரோப்பா ஏன் அவர்களுக்கு ஆதரவாக இப்போது நிற்கிறது? அரேபியர்களின் நியாயம் என்ன? அது ஏன் மற்றவர்களுக்குப் புரிவதில்லை? அரேபியர்களின் நியாயத்தைக் காட்டிலும் யூதர்களின் நியாயம் ஏன் பொருட்படுத்தத் தகுந்ததாக மற்றவர்களுக்குத் தோன்றுகிறது?
எந்தச் சார்பும் இல்லாமல் மிகவும் ஆழமாக அராஃபத் யோசித்தார். இறுதியில் அவருக்குக் கிடைத்த விடைகளை இப்படிப் பட்டியலிடலாம்:
1. சரித்திர நியாயங்களை மேலை நாடுகள் பொருட்படுத்துவதில்லை.
2. அரேபியர்கள் ஏமாற்றப்படுவது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில் இஸ்லாத்தையே ஏற்க விரும்பாதவர்கள் அவர்கள். இது அரசியல் காரணங்களைத் தாண்டி மதக் காரணங்களை உள்ளடக்கியது. கிறிஸ்துவர்கள் யூதர்களை ஏற்றாலும் ஏற்பார்களே தவிர, முஸ்லிம்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
3. அரேபியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதுதான் ஐரோப்பிய தேசங்களுக்கும் இஸ்ரேலுக்கும் முக்கியமான தற்காப்புச் சாதனமாக இருக்கிறது.
4. அரேபியர்களுக்குக் கல்வி இல்லை. பொருளாதார வசதிகள் இல்லை. ஆகவே சிந்திக்க மறுக்கிறார்கள். அவர்களது கோபத்தை சரியான வழியில் வெளிப்படுத்தத் தெரியாததால் முரடர்கள் என்று பெயரெடுத்துவிடுகிறார்கள்.
5. இஸ்ரேல் செய்வது முழு அயோக்கியத்தனம். இதைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பது எந்த ஒரு அரேபியனாலும் இயலாத காரியம். இஸ்ரேலுக்கு அமைதியின் மொழி புரியாது. ஆயுதம்தான் ஒரே வழி. அதற்கு அரேபியர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும்.
6. இவற்றைக் கல்லூரி மட்டத்திலிருந்து தொடங்குவதே சரியான காரியமாக இருக்கும்.
இவ்வாறு முடிவு செய்தார் அராஃபத். என்ன செய்யவேண்டும் என்று தெளிவு கிடைத்ததும் எப்படிச் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
அதற்குள் அவரது பட்டப்படிப்பு முடிந்திருந்தது. மீண்டும் கெய்ரோவுக்கு வந்து, கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்புக்காகப் பதிவு செய்துகொண்டார்.
அது ஒரு சாக்குதான். உண்மையில் அரபு மாணவர்களை ஒருங்கிணைத்து, பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண்பதுதான் அவரது முக்கியமான நோக்கமாக இருந்தது.
கெய்ரோ பல்கலைக் கழகத்து மாணவர்களிடம் அவர் தொடர்ந்து, இடைவிடாது பாலஸ்தீன் பிரச்னை குறித்து பேசத் தொடங்கினார். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்தபடியால், பிற பல்கலைக் கழக மாணவர்களுடன் தொடர்பு கொள்வதும் அவருக்கு எளிதாக இருந்தது.
அதுவரை ஏட்டளவில் இருந்த அரேபிய சகோதரத்துவம் என்கிற கருத்தாக்கத்தை நடைமுறையில் சாத்தியமாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. நிறைய பயணங்கள் மேற்கொண்டார். எல்லா தேசங்களின் மாணவர்களையும் சந்தித்து, இஸ்ரேலின் அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார். அரேபிய மாணவர்கள் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தக் காலகட்டத்தில் அராஃபத் பலமுறை ரகசியமாக பாலஸ்தீனுக்குப் போய்வந்திருப்பதாகத் தெரிகிறது.
ஜெருசலேம், காஸா, மேற்குக்கரைப் பகுதிகளில் வசித்துவந்த அரேபிய இளைஞர்களைத் திரட்டி, போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றியெல்லாம் அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது.
பாலஸ்தீன் மாணவர் பேரவை என்றொரு அமைப்பைத் தோற்றுவித்து, அதன் தலைவராகவும் நான்கு வருடங்கள் பணியாற்றினார். (1952 முதல் 56 வரை)
அராஃபத், பாலஸ்தீன் மாணவர் பேரவையின் சார்பில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தபோதுதான் கெய்ரோவில் அவரது தந்தை காலமானார்.
தகவல் வந்து சேர்ந்தபோது அராஃபத், ஒரு மாணவர் கூட்டத்தில் பேசுவதற்காகத் தயார் செய்து, நண்பர்களிடம் பேசிக்காட்டிக்கொண்டிருந்தார். செய்தியைச் சொன்னவர்கள், அராஃபத் உடனடியாகக் கெய்ரோவுக்குப் புறப்பட என்னவழி என்றும் வழிச்செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வதென்றும் கவலைப்பட, அராஃபத், 'எதற்கு தண்டச் செலவு? அவர் இறந்துவிட்டார். அவ்வளவுதானே? எப்படியும் யாராவது எடுத்துப் போய் புதைப்பார்கள். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்' என்று சொல்லிவிட்டாராம்.
எக்காரணம் கொண்டும் தன் கவனம் போராட்டத்திலிருந்து திசை திரும்பிவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார் அவர்.
1956-ல் அராஃபத் தன் உயர்நிலை பட்டப்படிப்பை முடிவு செய்தார். அவருக்கு உடனே எகிப்து ராணுவத்தில் பொறியாளராக வேலை கிடைத்தது. சிலகாலம் சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பணியாற்றியபடியே ஓய்வு நேரத்தில் தனது ரகசிய நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.
ஒரு வருடம் கூட இருக்காது. குவைத்தில் பொதுப்பணித்துறையில் அவருக்குப் பொறியாளர் வேலை கிடைத்தது. எகிப்தில் இருப்பதைக் காட்டிலும் சற்றுத் தள்ளி குவைத்துக்குப் போய் வாழ முடியுமானால், தனது நடவடிக்கைகளுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே, எகிப்து ராணுவப் பணியை ராஜினாமா செய்துவிட்டு குவைத்துக்குப் போனார்.
இது நடந்தது 1957-ம் ஆண்டு வாக்கில். முதலில் பொதுப் பணித்துறை. பிறகு அங்கேயே தனக்கென்று சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி, ஒரு போர்டு மாட்டினார். இது போதும் என்று முடிவு செய்தார்.
கட்டுமான நிறுவன போர்டின் பாதுகாப்பில் அவர் பாலஸ்தீன விடுதலைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 ஜூன், 200562]
62. அராஃபத் என்கிற புரட்சியாளர்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 62
பகலில் அவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர். ஆனால் அவரது இரவுகளுக்கு வேறு முகம் இருந்தது. அராஃபத் குவைத்துக்குப் போய்ச்சேர்ந்து, பொதுப்பணித்துறை பொறியியல் வல்லுநராகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் செய்த முதல் காரியம், தனக்கென ஒரு சௌகரியமான வீட்டைத் தேடிக்கொண்டதுதான்.
சற்றே ஒதுக்குப்புறமான பகுதி ஒன்றில் மாடியும் தரைத்தளமுமாக இருந்த ஒரு சிறிய வீடு. அராஃபத் அந்த வீட்டின் மாடிப் பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் நடுவில் மரத்தாலான இன்னொரு ரெடிமேட் தளத்தைத் தானே செய்து எடுத்துப் பொருத்தினார்.
கீழிருந்து அந்தப் பகுதிக்குப் போகமுடியாது. ஆனால் மாடியிலிருந்து அந்த மறைவிடத்துக்கு இறங்கி வரமுடியும். அதிகபட்சம் அங்கே ஐந்து அல்லது ஆறுபேர் அமரமுடியும். படுப்பதென்றால் மூன்று பேர் படுக்கலாம். அத்தனை சிறிய மரப்பொந்து அது.
இந்த ரகசிய அறையில்தான் அராஃபத் என்கிற புரட்சியாளர் முதல்முதலில் உருவாகத் தொடங்குகிறார். பாலஸ்தீன் விஷயம் குறித்து வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளையும் வாங்கிப் படித்து, அங்கே அவர் சேகரித்துவைத்தார்.
மிகச் சில மாதங்களிலேயே அந்தப் பத்திரிகைக் குவியல் ஒரு மலைபோல் ஆகிவிட, அதன் பின்னால் நான்கு துப்பாக்கிகளை அவர் பதுக்கிவைத்தார். அந்த நான்குமே அராஃபத் எகிப்தில் இருந்தபோது தொடர்பில் இருந்த ஓர் ஆயுதக் கடத்தல் குழுவிடமிருந்து பெற்றவை.
இதற்கிடையில் குவைத்தில் இருந்த பாலஸ்தீனிய அகதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபடத் தொடங்கினார்.
அராஃபத்தின் இலக்கு, நாம் முன்பே பார்த்தது போல, கல்லூரி மாணவர்கள்தான். அவர்களிடம்தான் அராஃபத் நிறையப் பேசினார். பேசிப்பேசி அவர்களின் தேசிய உணர்வைத் தட்டி எழுப்பினார்.
பாலஸ்தீனை இஸ்ரேலின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் என்கிற உணர்ச்சி, அவர்களிடையே தீ போல கொழுந்துவிட்டெரியத் தொடங்கியபிறகு, அவர்களைத் தன் வீட்டுக்கு, குறிப்பாக அந்த ரகசிய அறைக்கு அழைத்து வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.
அராஃபத்தின் போதனைகள் மூன்று பிரிவுகளாக அமைந்தன. முதலாவது அரசியல் பாடம். இரண்டாவது சித்தாந்தப் பாடம். மூன்றாவது ஆயுதப்பாடம்.
முதல் இரண்டைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. ஆனால் ஆயுதப்பாடம் எடுப்பதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன.
முதலாவது சிரமம், அராஃபத்துக்கே ஆயுதப்பயிற்சி அவ்வளவாகக் கிடையாது என்பது.
ஆகவே, முதலில் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காக அராஃபத், சில ரகசியக் குழுக்களில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். குவைத்தின் பாலைவனப்பகுதிகளில் அவருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சிகள் தொடங்கின. அலுவலக ஓய்வு நாட்களிலும் அவ்வப்போது தானே எடுத்துக்கொள்ளும் ஓய்வு தினங்களிலும், தினசரி அதிகாலை வேளைகளிலும் இந்தப் பயிற்சியில் அராஃபத் ஈடுபட்டார்.
அராஃபத்துக்குத் துப்பாக்கி சுடக் கற்றுக்கொடுத்த குழுவினர் அப்படியொன்றும் திறமைசாலிகள் அல்லர். சுமாராகத்தான் அவர்களுக்கே ஆயுதப் பிரயோகம் தெரியும். ஆனால், கற்றுக்கொள்ளத் தொடங்கிய மிகச் சில தினங்களுக்குள்ளாகவே, அராஃபத்துக்கு அதிலிருந்த தேர்ச்சி அவர்களுக்கு பிரமிப்பூட்டியது.
அவர் ஒரு பிறவிப் போராளி என்று முதல் முதலில் சொன்னது அந்தக் குழுவினர்தான்.
தான் கற்றுக்கொண்டதைத் தன்னுடைய மாணவ நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் பணியை அராஃபத் ஆறே மாதங்களில் ஆரம்பித்துவிட்டார். துப்பாக்கி சுடுதல், பதுங்கியிருந்து தாக்குதல் (கொரில்லாத் தாக்குதல்), குண்டு வைத்தல், குண்டு வீசுதல் போன்ற கலைகளில் அராஃபத் நிகரற்ற திறமைசாலியாக இருந்தார்.
தமக்குத் தெரிந்த அத்தனை கலைகளையும் அவர் தமது தோழர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
மிகக் குறுகிய காலத்தில் அவரது குழுவில் சுமார் ஐம்பது போராளிகள் தயாராயினர். ஆயுதம் தாங்கிய போராளிகள். சுதந்திரப் பாலஸ்தீனை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்த கெரில்லாப் போராளிகள்.
ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே உருவாகிவிட்ட இந்த அமைப்புக்கு அராஃபத் அல் ஃபத்தா என்று பெயரிட்டார். அல் ஃபத்தா என்கிற அரபுப் பெயருக்கு 'புனிதப் போர்மூலம் புதுவெற்றி காண்போம்' என்று கவித்துவமாகத் தமிழில் அர்த்தம் சொல்லலாம்.
அது ஒரு விடுதலைக் குழு. அவ்வளவுதான்.
அராஃபத் தோற்றுவித்த அல் ஃபத்தாவைப் பிற தீவிரவாதக் குழுக்களோடெல்லாம் ஒப்பிடவே முடியாது. இன்றைக்குத் தீவிரமாக இயங்கும் அல் குவைதா, ஹமாஸ், எல்.டி.டி.ஈ., போன்ற மாபெரும் குழுக்களாலெல்லாம் முடியாத காரியங்களை இந்த ஐம்பதுபேர் கொண்ட குழு வெகு அலட்சியமாகச் செய்து முடிக்கக்கூடிய வல்லமை பெற்றதாக இருந்தது.
அதிக வசதிகள், நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் அல் ஃபத்தாவுக்குக் கிடையாது. குறைந்தபட்ச ஆயுதங்கள் மட்டும்தான். ஆனால் அவர்களிடம் இருந்த கோபமும் தீவிரமும் வேகமும் வெறியும் அராஃபத் என்கிற ஒரு சரியான தடுக்கும் சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டு புரட்சிப் பாதையில் துல்லியமாகத் திசைதிருப்பி விடப்பட்டதால், நம்பமுடியாத சாதனைகளைப் புரியக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ஐம்பதுகளில் அல் ஃபத்தா என்றால் மத்தியக்கிழக்கு முழுவதும் அலறும். குறிப்பாக, ஆளும் வர்க்கம். அதிகார வர்க்கம். இன்னும் குறிப்பாகச் சொல்லுவதென்றால் இஸ்ரேலையும் யூதர்களையும் பேச்சளவில் ஆதரித்தால் கூட அல்ஃபத்தாவினர் அடிப்பார்கள்.
குவைத்திலும் பிற அரபு தேசங்களிலும் எந்த யூதருக்காவது அரசுத்தரப்பில் ஏதாவது ஒரு சிறு சலுகை அல்லது உதவி தரப்படுமானாலும் தீர்ந்தது விஷயம்.
இவையெல்லாம் தவிர, குவைத்தில் நிலைகொண்டு பாலஸ்தீனில் தாக்குதலுக்கான முழுவேக ஆயத்தங்களையும் அவர்கள் அப்போது ஆரம்பித்திருந்தார்கள்.
அல் ஃபத்தா உருவான அதே காலகட்டத்தில் பாலஸ்தீனில் ஏகப்பட்ட போராளிக்குழுக்கள் தோன்றத் தொடங்கின. பாலஸ்தீனுக்கு உள்ளேயும் வெளியேயுமாகத் தோன்ற ஆரம்பித்த அந்த அத்தனை குழுக்களுக்கும் ஒரே நோக்கம்தான்.
இஸ்ரேலின் பிடியிலிருந்து பாலஸ்தீனை விடுவிப்பது.
ஃபோர்ஸ் 17, ஹவாரி, ஆகிய குழுக்கள் இவற்றுள் மிக முக்கியமானவை. இதுபோல சுமார் இருபத்தைந்து தீவிரவாதக் குழுக்கள் பாலஸ்தீன் விடுதலையை முன்னிட்டு உருவாயின.
இந்தக் குழுக்கள் அனைத்தும் தனித்தனியே போரிட்டுக்கொண்டிருப்பதால் பயனில்லை என்று ஒரு குறிப்பிட்ட முகூர்த்த வேளையில் யாருக்குத் தோன்றியதோ தெரியவில்லை. அந்தந்தக் குழு தன் தனி அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் இயங்கலாம் என்று அப்போது முடிவு செய்தன.
அப்படிப் பிறந்ததுதான் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் என்று அழைக்கப்பட்ட பி.எல்.ஓ.
இந்த இடத்தில் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பி.எல்.ஓ என்பது யாசர் அராஃபத் தோற்றுவித்த ஒரு போராளி இயக்கம் என்று இன்றைக்கும் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து.
1. பி.எல்.ஓ. என்கிற அமைப்பை யாசர் அராஃபத் தோற்றுவிக்கவில்லை.
2. பி.எல்.ஓ. என்பது ஒரு குறிப்பிட்ட போராளி இயக்கமும் இல்லை.
3. பி.எல்.ஓ.வில் எத்தனையோ பல போராளி இயக்கங்கள் இணைந்து சில வருடங்கள் செயல்படத் தொடங்கிய பிறகு, மிகத் தாமதமாகத்தான் அராஃபத் தன்னுடைய அல் ஃபத்தாவைக் கொண்டுவந்து பி.எல்.ஓ.வுடன் இணைத்தார்.
4. அராஃபத்தின் அல் ஃபத்தா அமைப்பினருக்கு இருந்த செயல்வேகம், பி.எல்.ஓ.வில் இருந்த மற்ற இயக்கங்களுக்கு இல்லாத காரணத்தாலும் அராஃபத்தைக் காட்டிலும் தலைமை ஏற்கச் சரியானதொரு நபர் அங்கே இல்லாத காரணத்தாலும்தான் பி.எல்.ஓ.வின் தலைவராக அராஃபத் பிற்பாடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி ஆட்சி மாதிரி அது ஒரு கூட்டணிப் போராளி அமைப்பு. அராஃபத் அதற்குத் தலைவர். அவ்வளவுதான்.
இந்தப் போராளி அமைப்புகள் ஒருங்கிணைந்து யுத்தத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் பாலஸ்தீன் அரசியல் வானில் சில குறிப்பிடத்தகுந்த சம்பவங்கள் அரங்கேறின.
அவற்றுள் மிக முக்கியமானவை இரண்டு. முதலாவது, இஸ்ரேல், எகிப்துடன் நடத்திக்கொண்டிருந்த நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தை.
இஸ்ரேலுக்கு அடி மனத்தில் ஒரு சிறு திகில் இருந்தது. ஏதாவது ஓர் அரபு தேசத்துடனாவது நட்புறவு வைத்துக்கொள்வது தனக்கு நல்லது என்று நினைத்தது.
1948 யுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தின்படி எகிப்து காஸா பகுதியைத் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்தபடியால், எகிப்துடன் நீடித்த நல்லுறவு சாத்தியமா என்று பார்க்க இஸ்ரேல் விரும்பியது.
மேற்கே, ஜோர்டனுடன் உறவுக்கு முயற்சி செய்வதைக் காட்டிலும் எகிப்தை முயற்சி செய்வது லாபம் தரக்கூடும் என்று இஸ்ரேல் எண்ணியது.
இஸ்ரேல் இப்படித் தொடர்ந்து எகிப்துடன் அமைதி, அமைதி என்று கத்திக்கொண்டிருக்க, மறுபுறம் ஜோர்டன் மிகத்தீவிரமாக இஸ்ரேல் விரோதக் காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
முதல் கட்டமாக ஏப்ரல் 24, 1950 அன்று வெஸ்ட் பேங்க்கையும் பழைய ஜெருசலேம் பகுதியையும் தன் தேசத்தின் பகுதிகளாக அதிகாரபூர்வமாக இணைத்து ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
என்னதான் 1948 யுத்த நிறுத்தத்தின்போது ஜோர்டனுக்குக் கிடைத்த பகுதிகள்தான் அவை என்றபோதும், இம்மாதிரி அதிகாரபூர்வ இணைப்பு என்று அறிவிப்புச் செய்தபோது, சந்தடி சாக்கில் கணக்கில் வராத இன்னும் கொஞ்சம் நிலப்பரப்புக்கும் சேர்த்து வேலி போட்டது ஜோர்டன்.
இது இஸ்ரேலுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்தது. சொல்லப்போனால் பிரிட்டனையும் பாகிஸ்தானையும் தவிர, வேறு எந்த ஒரு தேசமும் ஜோர்டனின் இந்த நடவடிக்கைக்கு அப்போது ஆதரவு தெரிவிக்கவில்லை.
பிரிட்டன் ஏன் அதை ஆதரித்தது, பாகிஸ்தானுக்கு இதில் என்ன லாபம் என்கிற கேள்விகளுக்கெல்லாம் இடமே இல்லை.
எல்லாமே அரசியல் காய் நகர்த்தல்கள் என்கிற அடிப்படையில் பாலஸ்தீனைத் துண்டாடும் விஷயத்தில் அத்தனை பேருமே கச்சை கட்டிக்கொண்டிருந்தார்கள் அப்போது.
டிரான்ஸ் ஜோர்டன் இப்படிச் செய்ததில் என்ன ஆயிற்று என்றால், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள், பாலஸ்தீனியர்களாக ஆகிப்போனார்கள்.
அதாவது, ஏற்கெனவே டிரான்ஸ்ஜோர்டன் நாட்டில் வசித்துவந்தவர்களைக் காட்டிலும் இணைக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதி மக்களின் என்ணிக்கை அதிகம்!
இதை இன்னொரு விதமாகப் பார்ப்பதென்றால், பாலஸ்தீனியர்கள் தாங்கள் இஸ்ரேலை எதிர்த்துப் போரிடுவதா? அல்லது சொந்த சகோதர தேசமான ஜோர்டனை எதிர்த்துப் போரிடுவதா? என்று புரியாமல் குழம்பத் தொடங்கினார்கள்.
ஜோர்டன் ஏன் அன்றைக்கு அப்படி நடந்துகொண்டது என்கிற கேள்விக்கு விடை இல்லை. ஜோர்டனின் மன்னர் அப்துல்லா ஒரு மூத்த அரசியல்வாதி.
அரபு சகோதரத்துவம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தவர்களுள் ஒருவர். ஆனபோதிலும், பாலஸ்தீனியர்களைத் துன்பத்தில் வாடவிட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
முதல் கட்டமாக, மேற்குக்கரைப் பகுதி மக்களுக்கான நிதி ஆதாரங்களை ஜோர்டன் கணிசமாகக் குறைத்தது. மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாடவேண்டியதானது.
மொத்த தேசமுமே சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று ஜோர்டன் அரசு சொன்னாலும் ஒப்பீட்டளவில் மேற்குக்கரைப் பகுதி இரண்டாம்தர மக்கள் வசிப்பிடமாகவே நடத்தப்பட்டது கண்கூடு.
அங்கே எந்தப் புதிய தொழிலும் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு நலத்திட்டங்கள் என்று மருந்துக்கும் ஏதுமில்லை. பத்தாயிரம் தினார்களுக்கு மேல் எந்த ஒரு தொழிலிலும் யாரும் முதலீடு செய்யக்கூடாது என்றுவேறு ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்.
இதனாலெல்லாம் பாலஸ்தீனியர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள்.
1951-ம் ஆண்டு ஜோர்டன் மன்னர் அப்துல்லா அடையாளம் காணமுடியாத தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். உடனே ஜோர்டன் ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் தேடுதல் வேட்டைக்குப் புறப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் ராணுவம் நுழைந்தது. ஒவ்வொரு நபரையும் சோதித்தார்கள். பல வீடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக 'அல் அஹ்ரம்' என்கிற நாளிதழ் செய்தி வெளியிட்டது.
பி.எல்.ஓ அமைப்பினர் சூழ்நிலையை மிக கவனமாக உற்றுநோக்கத் தொடங்கினார்கள். --- நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 ஜூலை, 2005
************************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)
(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)
(27-28. ) ( 29-30.. )
( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)
(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)
(55-56.) (57-58.) .(59-60.)
(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)
( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).
(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)
(97-98). (99.100.)
No comments:
Post a Comment