Monday, March 16, 2009

25-26. முழங்கால் அளவு ரத்தம்.-நீண்டு போன சிலுவை யுத்தம்.பகுதிகள்-25-26.

சிலுவை ஏந்தியபிறகு ரத்தம் சிந்தாமல் எப்படி முடியும்?
25] முழங்கால் அளவு ரத்தம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 25

பல லட்சக்கணக்கான வீரர்கள், தாங்கள் கிறிஸ்துவத்துக்காகப் போரிடுகிறோம் என்பதற்கு ஓர் அடையாளமாகக் கையில் சிலுவை ஏந்திப் போரில் பங்குபெற்றதால் அதைச் சிலுவைப்போர் என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. சிலுவை ஏந்தியபிறகு ரத்தம் சிந்தாமல் எப்படி முடியும்?

உண்மையில், முதல்முதலில் சிலுவைப்போரில் பங்குகொண்ட கிறிஸ்துவர்களுக்கு அரசியல் காரணங்கள் எதுவும் அத்தனை முதன்மையாகத் தோன்றவில்லை. போப்பாண்டவர் அர்பன் 2வுக்கும் பல்வேறு கிறிஸ்துவ தேசத்தின் ஆட்சியாளர்களுக்கும் இப்போரின் விளைவுகள் குறித்த ஓர் அனுமானம் இருந்தது. எப்படியும் உடனடியாக முடிந்துவிடக் கூடிய யுத்தம் இல்லை அது என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது.

ஆனால் வீரர்களுக்கு ஒரே இரவில் ஜெருசலேமைப் பிடித்துவிடும் வெறியும் வேட்கையும் மட்டுமே இருந்தது. அதன் சாத்தியங்கள் பற்றிக்கூட அவர்கள் யோசிக்க விரும்பவில்லை. முஸ்லிம்கள் இந்த யுத்தத்தைச் சற்றும் எதிர்பார்க்கமாட்டார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆகவே, எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து, ஜெருசலேம் வீழ்ந்துவிடும் என்று நினைத்தார்கள். ஒருவேளை தாங்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் சுதாரித்துக்கொண்டு மீண்டும் போருக்கு வந்தால், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்பதே அவர்கள் யோசனையாக இருந்தது.
தவிரவும், யுத்தத்தை ஜெயிப்பது ஒன்றுதான் அவர்களது அப்போதைய குறிக்கோள். யுத்தத்தில் பங்கெடுப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார லாபங்கள், சரித்திரத்தில் பெயர் இடம்பெறப்போகிற பரவசம் போன்ற உபரிக் காரணங்கள் இதற்கானவை.

பீட்டர் என்கிற கிறிஸ்துவப் பாதிரியார் இந்த முதல் சிலுவைப் போருக்குத் தலைமை தாங்கினார்.

கி.பி. 1096-ல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல சிறு படைகளாகப் புறப்பட்ட கிறிஸ்துவர்கள், மாபெரும் படையாக ஜெருசலேத்தை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்.

வழியெங்கும் கண்ணில் தென்படும் யூதர்களையும் முஸ்லிம்களையும் வெட்டிக்கொண்டே முன்னேறினார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தகத் தலங்கள், வழிபாட்டிடங்கள் சூறையாடப்பட்டன.

அரசு அலுவலகங்களுக்குத் தீவைக்கப்பட்டன. என்ன நடக்கிறது என்பதே அரேபியர்களுக்கு முதலில் புரியவில்லை. மிகப்பெரிய யுத்த அபாயத்தைச் சமாளிக்கும் விதமான முன்னேற்பாடுகள் எதையும் சுல்தான் அப்போது செய்துவைத்திருக்கவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் மாபெரும் இழப்பு ஏற்பட்டது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட கலீஃபா அல் முஸ்தசீர் பிலாஹ், முழுப்படையையும் உடனே திரட்ட முடியாவிட்டாலும் பகுதி பகுதியாக வீரர்களை யுத்தத்துக்கு அனுப்பத் தொடங்கினார். அவர் செய்த மிகப்பெரிய புத்திசாலித்தனமான காரியம், படையை ஒரே இடம் நோக்கி அனுப்பாமல், வடக்கிலிருந்து தெற்காக, பாலஸ்தீனை நோக்கிப் போகும் அனைத்து வழிகளுக்கும் படைகளைப் பிரித்து அனுப்பியதுதான்.

இதன்மூலம், சிலுவைப் போர் வீரர்கள் எந்த வழியே, எந்த இடத்தை நோக்கி வந்தாலும் ஜெருசலேத்தை நெருங்க முடியாமல் வழியிலேயே யுத்தத்தில் ஈடுபடவேண்டியிருக்கும்.

முஸ்லிம் வீரர்கள் அப்போது ஓரளவு கட்டுக்கோப்புடன் போரிடப் பயிற்சி பெற்றிருந்தார்கள். எதிரிப்படையை நிர்மூலமாக்குவதைக் காட்டிலும் தமது தரப்பில் இழப்புகள் குறைவாக இருக்கும்படி கவனமாகச் செயல்பட வியூகம் வகுத்தார்கள். அதாவது, கிறிஸ்துவ வீரர்களைக் கொன்று வீழ்த்துவதைவிட, கூடியவரை அவர்களை வளைத்துப் பிடித்து நிராயுதபாணிகளாக்கி, கைது செய்யவே அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தி நல்ல பலன் கொடுத்தது. கிறிஸ்துவர்களின் மாபெரும் தளபதி என்று வருணிக்கப்பட்ட வீரர் ரெஜினால்ட் உள்பட ஒரு பெரும்படையை முஸ்லிம்கள் சரணடைய வைத்தார்கள். இப்படிச் சரணடைந்தவர்கள் உயிர்பிழைக்க, இஸ்லாத்தைத் தழுவவேண்டி வந்தது.

(முக்கியத் தளபதி உள்ளிட்ட பெரும்படை சரணடைந்துவிட்டதால் சிலுவைப்போர் வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள். எதிர்பார்த்தபடி ஒரே நாளில் ஜெருசலேத்தை அடைந்து, கைப்பற்றும் கனவைத் துறந்து பெரும்பாலானோர் உயிர்பிழைக்கத் திரும்ப ஓடினார்கள்.

முதல் சிலுவைப்போர் இப்படியாகக் கிறிஸ்துவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரமும் அவமானமும் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையாக ஒரு ஜெர்மானிய திருச்சபைத் தலைவரின் தலைமையில் இன்னொரு பெரிய படையை ஜெருசலேத்தை நோக்கி அனுப்பின.

ஆனால் இந்தப் படையால் ஐரோப்பிய தேசமான ஹங்கேரியைக் கூடத் தாண்டமுடியவில்லை. குடி, கேளிக்கைகளில் ஆர்வம் கொண்ட இந்தப் படையின் இலக்கு கான்ஸ்டாண்டிநோபிள் மற்றும் ஜெருசலேம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் பெல்கிரேடைக் கடக்கும் முன்னர், ஹங்கேரி மக்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டனர். புனிதமான கிறிஸ்துவ மதத்துக்காக யுத்தம் செய்யக் கிளம்பி இத்தனை கீழ்த்தரமான கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களே என்று வெறுப்புற்ற பெல்கிரேட் நகர மக்களே அவர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கினார்கள். (இந்த சிலுவைப்போர் வீரர்களை, புகழ்பெற்ற ஐரோப்பிய சரித்திர ஆசிரியர் கிப்பன், 'மூடர்கள்’, அநாகரிகமானவர்கள்' என்று வருணிக்கிறார்!)

திருச்சபைகள் இதனால் கவலை கொண்டன. போப்பாண்டவர் வீரர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபட்டு கிறிஸ்துவத்துக்கு அவமானம் தேடித்தருபவர்கள் நிச்சயம் தண்டனைக்குள்ளாவார்கள் என்று எச்சரிக்கப்பட்டனர்.

இதன்பிறகே ஒரு தனிப்படை என்றில்லாமல் கூட்டு ராணுவமாக வீரர்களை அனுப்பலாம் என்று போப் முடிவு செய்தார்.

அதன்படி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி தேசங்களிலிருந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு சமுத்திரம் போல் அணிவகுப்பில் நிறுத்தப்பட்டார்கள்.

இந்த வீரர்கள் தாங்கள் முன்னேறும் வழியிலெல்லாம் முதலில் யூதர்கள் கண்ணில் படுகிறார்களா என்று தேடித்தேடிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். ரைன், மோஸெல் நதிக்கரையோரங்களில் வசித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததை சரித்திர நூல்கள் பக்கம் பக்கமாக வருணிக்கின்றன.

இதில் பரிதாபம் என்னவெனில், யூதர்கள் தம்மை முஸ்லிம்கள் தாக்குவார்களோ என்றுதான் அப்போது பயந்துகொண்டிருந்தார்களே தவிர கிறிஸ்துவர்களிடமிருந்து அப்படியரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்பதுதான்!

நடப்பது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான யுத்தம்.

இதில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் அப்போது யூதர்களின் நிலையாக இருந்தது. ஏனெனில், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித நகரமே என்றாலும் அப்போது அது முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

முஸ்லிம்களை எதிர்த்து, கிறிஸ்துவர்கள் போல போரில் இறங்க யூதர்களிடம் பெரிய படைபலமெல்லாம் அப்போது இல்லை. அவர்கள் சந்தேகமில்லாமல் சிறுபான்மையினர். ஆகவே, எத்தரப்புக்கும் சார்பின்றி நடுநிலைமை காக்கலாம் என்றே யூதர்கள் முடிவு செய்திருந்தார்கள். (இந்த நடுநிலைமை காக்கிற விஷயத்தை யூதர்கள் தமது சரித்திரமெங்கும் பல தருணங்களில் செய்துவந்திருக்கிறார்கள்!)

ஆனால் மூன்றாவது முறையாகப் படையெடுத்து முன்னேறி வந்த கிறிஸ்துவர்கள் முதலில் தாக்கியது யூதர்களைத்தான்.
கி.பி. 1097-ல் ஐரோப்பிய மன்னர்களின் கூட்டமைப்பு ஒன்று அதிகாரபூர்வமாக உண்டானது.

அரேபியர்களிடமிருந்து ஜெருசலேத்தை மீட்பது மட்டுமே இந்தக் கூட்டமைப்பின் செயல்திட்டம். முதல் முறையாக போப்பாண்டவரின் யோசனையாக அல்லாமல், மன்னர்கள் ஒன்றுகூடி இப்படியரு ஏற்பாட்டைச் செய்தபோது கணிசமான (சுமார் ஏழரை லட்சம் பேர்) வீரர்களை - தொழில்முறை போர்ப்பயிற்சி பெற்ற வீரர்களைத் திரட்டி நிறுத்த முடிந்தது!

எந்த இடையூறும் இல்லாமல் இம்முறை எப்படியாவது ஜெருசலேத்தை அடைந்தே தீருவது என்கிற நோக்கமுடன் புறப்பட்ட இந்தப் படை முதல் முதலில் துருக்கியில் உள்ள அண்டியோக்கை (Antioch) முற்றுகையிட்டது.

சரித்திரத்தில் பக்கம் பக்கமாகப் பேசப்படும் ஓர் அசுர முற்றுகை இது! சுமார் ஒன்பது மாத காலத்துக்கு மேலாகத் தொடர்ந்த முற்றுகையும் கூட.
ஒரு நகரை அல்லது கோட்டையை முற்றுகை இடுவதென்றால், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டுவிடுவதாக அர்த்தம்.

அதாவது, முற்றுகையிடப்பட்ட பகுதியில், கைவசம் உணவுப் பொருள்கள் தீரும்வரை மட்டுமே அவர்கள் உள்ளே சுகமாக இருக்க முடியும். உணவு என்றில்லை. வேறு எந்தக் காரணத்துக்காகவாவது அவர்கள் வெளியே வரவேண்டுமென்றால், வெளியே காத்திருக்கும் படை அடித்து துவம்சம் செய்துவிட்டு உள்ளே புகுந்து கைவரிசை காட்டிவிடும்.

பொதுவாக பலம் குன்றிய பகுதிகள் மட்டுமே முற்றுகைக்கு இலக்காகும். பலம் பொருந்தியவர்கள் ஏன் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருக்கப்போகிறார்கள்? அவர்கள் எதிரிகள் வந்ததுமே தாமே முன்வந்து போரைத் தொடங்கிவிடுவார்கள் அல்லவா?

கிறிஸ்துவ சிலுவைப் போர் வீரர்கள் அண்டியோக்கை முற்றுகையிட்டபோது, அங்கே சுமார் ஓராண்டுக்கான உணவுப்பொருள் சேகரம் இருந்தது. நகர மக்கள் பசியால் வாடவேண்டிய அபாயம் இல்லை என்றே நிர்வாகிகள் கருதினார்கள். ஆனால் கிறிஸ்துவர்களை எதிர்த்துப் போரிட, வீரர்கள்தான் அப்போது அங்கே பிரச்னையாக இருந்தது. ஆகவே, முற்றுகைக் காலத்தில் போர் வீரர்களை ஆயத்தப்படுத்தி, புதிய வீரர்களை உருவாக்கி, தயாரிக்கும் மாபெரும் பணி அவர்களுக்கு இருந்தது. அதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக, போரிட வந்த கிறிஸ்துவ அணியினரின் உணவுப்பொருள்கள் தீர்ந்துவிட்டன. ஆகவே பெரும் சிக்கல் ஏற்பட்டது. புகழ்பெற்ற சரித்திர ஆசிரியர் மில் (John Stuart Mill) இதனை வருணிக்கும்போது, 'கிறிஸ்துவ வீரர்கள் உணவின்றி, தமக்குள் தாமே ஒருவரையருவர் கொன்று பிணத்தைப் புசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்' என்று எழுதுகிறார். (இறந்த உடல்களைப் புதைப்பதான பாவனையில் ரகசிய இடங்களுக்குக் கொண்டுபோய் அங்கே பசி தாங்காமல் அதனைத் தின்றார்கள் என்று வேறு சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியிருக்கிறார்கள்.)

இத்தனைக்குப் பிறகும் அண்டியோக் கோட்டையின் படைத்தலைவனாக இருந்த ஃபிரஸ் (Firuz) என்பவன் கிறிஸ்துவ தளபதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு கோட்டைக் கதவுகளை கட்டக்கடைசி நிமிடத்தில் திறந்துவிட்டு விட்டபடியால், கோட்டை கிறிஸ்துவர்களின் வசமாகிப் போனது. '

மிகப்பெரிய துரோகம்' என்று இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் இன்றளவும் வருணிக்கும் இச்சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து கோட்டைக்குள் இருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்கள் கண்மண் தெரியாமல் வெட்டி வீழ்த்தினார்கள். வெற்றிக்களிப்புடன் எக்காளமிட்டபடி ஜெருசலேத்தை அடைந்து, எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் கொன்று வீழ்த்தியபடியே முன்னேறிச் சென்றார்கள்.

ஜெருசலேத்தின் வீதிகள் அனைத்தும் உடல்களால் நிறைந்தன. பிணம் தின்னும் பறவைகள் ஏராளமாக வானில் வட்டமிட்டபடி இருந்தன. எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள், அவல ஓலங்கள். இடிந்த கட்டடங்களின் இடைவெளிகளில் பெரும்புகை எழுந்து வானை நிரப்பியது. தீவைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள், கல்வித் தலங்களிலிருந்து எழுந்த புகை அது.

அந்தச் சம்பவத்தின்போது மட்டும் எழுபதாயிரம் ஜெருசலேம்வாசிகள் கிறிஸ்துவர்களால் கொல்லப்பட்டதாக மிஷட் (Nafed Khaled Mishad) என்கிற சரித்திர ஆசிரியர் எழுதுகிறார். (இவர்களுள் ஜெருசலேம் நகரத்துக் கிறிஸ்துவர்களும் அடங்குவார்களா என்று தெரியவில்லை.

கண்மூடித்தனமான தாக்குதலின்போது, 'இவன் கிறிஸ்துவன், இவன் முஸ்லிம்' என்று பார்த்துப் பார்த்துக் கொலை செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.) சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் கொண்டு எழுதும் மிஷட், 'கொல்லப்பட்டவர்களின் ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் ஆழத்தில் குதிரைக் கடிவாளத்தை எட்டி நின்றது' என்றும் குறிப்பிடுகிறார்.

முழங்கால் ஆழத்துக்கு ரத்தக் குளம்! நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அப்படியொரு குரூர யுத்தத்தின் இறுதியில் ஜெருசலேம், சிலுவைப் போர் வீரர்களின் வசமானது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 17 பெப்ரவரி, 2005
வெள்ளி, ஏப்ரல் 29, 2005

26] நீண்டு போன சிலுவை யுத்தம்.நிலமெல்லாம் ரத்தம் -
பா. ராகவன் 26

ஜெருசலேம் நகரம் கிறிஸ்துவர்களின் வசமாகிவிட்டது என்கிற தகவல் அறிந்ததும் கலீஃபாவின் உடனடிச் செயல் என்னவாக இருந்திருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

அதாவது, முஸ்லிம் வீரர்களுக்கு அந்த யுத்தத்தில் மிகப்பெரிய தோல்வி கிட்டியிருக்கிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் காலத்தில், முஸ்லிம்கள் வசமானது ஜெருசலேம் நகரம்.

மூன்று மதங்களைச் சேர்ந்த மக்களும் அங்கே சண்டை சச்சரவின்றி ஒற்றுமையாக வாழ வழிசெய்தவர் அவர். சரித்திரம் உள்ளவரை அவரது காலமும் அந்த வெற்றியும், வெற்றிக்குப் பிறகு அவர் மேற்கொண்ட மத நல்லிணக்க முயற்சிகளும் ஓயாமல் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த சமயம் வேறு. பின்னால் வந்த ஆட்சியாளர்களின் செயல்திறன் குறைவுதான் இந்த மாபெரும் தோல்விக்குக் காரணம் என்று பள்ளிக்கூட சரித்திர ஆசிரியர்கள் இனி போதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுகூட இரண்டாம்பட்சம். மத்திய ஆசியாவெங்கும் கலீஃபாக்களின் ஆட்சி என்று பெருமையுடன் இனி சொல்லிக்கொள்ள முடியாது. இன்றைக்குக் கிறிஸ்துவர்கள் கை மேலோங்கியிருக்கிறது. நாளை யூதர்களின் கரங்கள் மேலோங்கலாம். வேறு யாராவது அந்நியர்களும் படையெடுக்கலாம். உடனடியாக ஏதாவது செய்தாலொழிய இதிலிருந்து மீட்சி கிடையாது.
அப்படிப்பட்ட நெருக்கடியான நிலை. என்ன செய்திருப்பார் அப்போதைய கலீஃபா?

நம்பமாட்டீர்கள்! உட்கார்ந்து ஓவென்று அழுதாராம். தமது கையாலாகாத்தனத்தை நினைத்து அவர் அழுததை அத்தனை சரித்திர ஆராய்ச்சியாளர்களும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். போதாக்குறைக்கு கலீஃபா முஸ்தகீருக்கு அவரது மெய்க்காப்பாளரான பல்கியாருக் தாஜுத் என்பவருடன் அப்போது ஒரு பெரும் பிணக்கு வேறு ஏற்பட்டிருந்தது.

மெய்க்காப்பாளரான அந்த பல்கியாருக்தான் அப்போது அவரது ராணுவ மந்திரியும் கூட.எதிரிகளின் அட்டகாசம் ஒருபுறம் இருக்க, சுல்தானுக்கு அவரது மெய்க்காப்பாளராலேயே ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லை என்பது போன்ற சூழ்நிலை.

ஆனால் சுயபுத்தி இல்லாத கலீஃபா, தங்களுக்கிடையிலான சொந்தச் சண்டையை ஒதுக்கிவைத்துவிட்டு (இந்தச் சண்டை, சில கிராமங்களில் வரியாக வசூலிக்கப்பட்ட பணத்தைப் பங்குபிரிப்பதில் ஏற்பட்டது என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் உறுதிசெய்யப்பட்ட தகவல் அல்ல.) பொது எதிரியை ஒழிக்க ஏதாவது யோசனை சொல்லுமாறு பல்கியாருக்கிடம் கேட்டார்.

தனக்குக் கூடுதல் அதிகாரங்கள், சில குறிப்பிட்ட பகுதிகளில் தனியாட்சி செய்யும் உரிமை போன்றவை கிடைத்தால் ஏதாவது யோசனை தர இயலும் என்று அந்த ராணுவ அமைச்சர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

மிக உயர்ந்த அதிகாரபீடத்திலேயே இத்தகையதொரு அவல நிலை என்னும்போது அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலப்பகுதியின் ஆட்சியாளரும் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடத்துக்குத் தாங்களே சக்கரவர்த்தியாக வேண்டும் என்கிற கனவை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு கிராம அதிகாரியும் தமது கிராமத்தில் வசூலிக்கப்படும் வரிகளைத் தமது உபரி வருமானமாகக் கருதத்தொடங்கியிருந்தார்கள். ஊழல், எல்லா மட்டங்களிலும் பரவி வேரூன்றியிருந்தது. ஆட்சியாளர்களே ராணுவ வீரர்களைத் தனியார் ராணுவம் போல் வாடகைக்குப் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை இருந்தது. கேட்ட பணம் கிடைக்காவிட்டால் ராணுவ வீரர்கள் எதிரிப்படைக்கு விசுவாசமாக நடந்துகொண்டுவிடுவார்கள்.

இப்படியரு அவலமான காலத்தில்தான், முஸ்லிம்களின் இழந்த செல்வாக்கை மீட்கும் வேட்கையுடன் முஹம்மது என்பவர் புதிய சுல்தானாகப் பதவியேற்றார்.

இவர் பல்கியாருக்கின் சகோதரர். தமது அண்ணனைப் போலவோ, அவரது காலத்துக் கலீஃபாவான முஸ்தகீரைப் போலவோ இல்லாமல் கொஞ்சம் வீரமும் விவேகமும் கொண்டவராக இருந்தவர்.

ஜெருசலேத்தை மீட்பதென்றால், முதலில் ராணுவத்தையும் ஆட்சிமுறையையும் ஒழுங்குபடுத்தியாகவேண்டும் என்பதை அறிந்தவராக, அந்தப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஊழல் அதிகாரிகளை ஒழித்துக்கட்டி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உருப்படியான ஆட்சியாளர்களை நியமித்தார். ராணுவத்தில் ஏராளமாகக் களையெடுத்து, தேசமெங்கிலுமிருந்து, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களைத் தேடித்தேடி சேர்க்கத் தொடங்கினார்.

இவர் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டிருந்தபோது, இன்னொருபுறம் ஜெருசலேத்தைக் கைப்பற்றிய சிலுவைப் போர் வீரர்கள், வெற்றிக்களிப்பில் திரிபோலி, டைர் (ஜிஹ்க்ஷீமீ), சிடான் (ஷிவீபீஷீஸீ) போன்ற சில முக்கியமான இஸ்லாமியக் கோட்டைகளைத் தாக்கி வீழ்த்தியிருந்தார்கள்.

கிறிஸ்துவ வீரர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இருந்த முஸ்லிம்கள் எல்லோரும் பாதுகாப்பாக வேறு நகரங்களுக்கு, மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து போய்விட்டிருந்த நிலையில் கோட்டைகளை வெற்றி கொண்ட கிறிஸ்துவர்களுக்கு அங்கே கொன்று களிக்க யூதர்களே கிடைத்தார்கள்.

பாதுகாப்பற்ற நிலையில் இருந்த யூதர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்த தங்கள் திருச்சபைகளிலும் தேவாலயங்களிலும் புகுந்து கதவை உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக்கொண்டிருந்தார்கள்.

யூதர்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த மாத்திரத்திலேயே கிறிஸ்துவர்களின் ரத்தவெறி அடக்கமாட்டாமல் மேலேறித் திமிறியது.

யூதர்களின் அனைத்து தேவாலயங்களையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தவர்கள், அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒவ்வொருவரையும் துண்டு துண்டாக வெட்டிக் குவித்தார்கள்.

அப்படியும் வெறி அடங்காமல் பிணங்களை அந்தந்த தேவாலயங்களின் உள்ளேயே குவித்து, வெளியே வந்து ஆலயங்களுக்குத் தீவைத்துக் கொளுத்தினார்கள்.

இந்தப் பேயாட்டத்துக்குப் பிறகு அந்தந்தப் பகுதிகளில் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த சிலுவைப்போர் வீரர்கள், கிறிஸ்துவர்கள் அல்லாத அத்தனை மக்களும் நிரந்தரமாகச் சங்கிலியால் கரங்கள் பிணைக்கப்பட்ட நிலையில்தான் வலம் வரவேண்டும் என்றொரு உத்தரவைப் பிறப்பித்தார்கள்.

அதாவது கிறிஸ்தவர் அல்லாத அத்தனை பேருமே கைதிகள்தாம். சிறைக்கூடங்களுக்கு பதில் அவர்கள் நாட்டில் வீட்டில்கூட வசிக்க முடியும்; ஆனால் சங்கிலியால் கரங்களும் காலும் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருக்கும்!

அப்படியேதான் உத்தியோகத்துக்கும் போகமுடியும். சம்பாதிக்கலாம், செலவு செய்யலாம், ஊர் சுற்றலாம். சங்கிலியை மட்டும் கழற்றக் கூடாது!

நீதிமன்றங்கள் இழுத்து மூடப்பட்டன. மாறாக மரத்தடி கட்டைப் பஞ்சாயத்துகள் செல்வாக்குப் பெறலாயின.

ஒருவரியில் சொல்லுவதென்றால், அதுவரை திம்மிகளாக இருந்த கிறிஸ்துவர்கள் அப்போது மற்றவர்களை அம்மிகளில் வைத்து அரைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஒரு வழியாக 1103-ல்தான் சுல்தான் முஹம்மத், சிலுவைப்போர் வீரர்களை இனி தாக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார். மரிதின்,சஞ்சார், திமஷ்க், மோஸுல் ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்து ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு அணிவகுக்கச் செய்யப்பட்டனர்.

யுத்தத்தின் நோக்கம் இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. படை முதலில் நேராக பாலஸ்தீனை நோக்கி முன்னேறவேண்டும். அரை வட்ட வடிவில் வடக்கிலிருந்து தெற்காக முன்னேறத் தொடங்கவேண்டும்.

பாலஸ்தீன் நிலப்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவர்களின் கரங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். ஓரளவு இதில் வெற்றி கிடைத்ததும், இன்னொரு படை புறப்பட்டு நேரடியாக ஜெருசலேத்தை நோக்கி வரும். ஜெருசலேத்தை அந்தப் படை அடைந்ததும் வடக்கிலிருந்து (அதாவது ஆசியாவிலிருந்து) முன்னேறி வரும் படையும் உடன் வந்து இணைந்துகொண்டு முழு வட்டமாக ஜெருசலேத்தை சுற்றி முற்றுகையிட வேண்டும். ஒரு முழு நீள யுத்தம் நடத்தி மீட்டுவிடவேண்டும்.
சுல்தான் முஹம்மதின் இந்தப் போர்த்திட்டம் துளியும் சிதறாமல் அப்படியே காப்பாற்றப்பட்டது!

ஆக்ரோஷமுடன் பாலஸ்தீனை அடைந்த முதல் படை அங்கிருந்த கிறிஸ்துவப் படையினரை முதலில் டைபீரியாஸ் என்கிற இடத்தில் நடந்த யுத்தத்தில் ஓட ஓட விரட்டித் தோற்கடித்தது.

ஆனால் அடுத்தபடை ஜெருசலேத்தை வந்தடைவதற்குள் ஏராளமான தடைகள் உருவாயின. சிறு சிறு யுத்தங்களை அவர்கள் வழியெங்கும் செய்தாகவேண்டியிருந்தது. பல இடங்களில் மாதக்கணக்கில் முற்றுகையிட்டே முன்னேற வேண்டியிருந்தது.

ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் திட்டமிட்டபடி ஜெருசலேத்தை முஸ்லிம் படைகள் நெருங்க முடிந்தன. (கி.பி. 1109-ம் ஆண்டு) பலாத் என்ற இடத்தில் இப்போது யுத்தம் நடந்தது.

முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும். மோதலும் சாதலும். கத்தியும் ரத்தமும். ஆனால், கொஞ்சநஞ்சமல்ல. யுத்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு ஒருமாதிரி காட்டுமிராண்டி யுத்தத்தைத்தான் கிறிஸ்துவ வீரர்கள் மேற்கொண்டார்கள் என்று பல கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்களே எழுதியிருக்கிறார்கள்.

மிகக் கோரமான யுத்தத்தின் முடிவில் கிறிஸ்துவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

ஆனாலும் ஒருவழியாக ஜெருசலேத்தை மீட்டுவிட்டோம் என்று முஸ்லிம்கள் சந்தோஷப்பட முடியவில்லை.

காரணம், முன்பே பார்த்தது போல், சிலுவைப்போர்கள் என்பவை, ஒரு குறிப்பிட்ட படையினரால் மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. மாறாக, ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அதை ஒரு நீண்டகாலத் திட்டமாகக் கருதி, தொடர்ந்து தேவைக்கேற்ப வீரர்களை அனுப்பிக்கொண்டே இருந்தது.

கிறிஸ்துவ வீரர்களின் எண்ணிக்கை குறையக்குறைய புதிய வீரர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கான பண உதவிகள், உணவுப்பொருள் உதவிகள் யாவும் ஐரோப்பாவின் பல்வேறு தேசங்களிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஒரு தொடர் நடவடிக்கையாக மட்டுமே ஐரோப்பிய தேசங்கள் சிலுவைப்போர்களை நடத்தின.

ஆகவே, ஜெருசலேத்தை முஸ்லிம்கள் மீண்டும் ஜெயித்துவிட்டார்கள் என்பது தெரிந்ததுமே ஐரோப்பாவிலிருந்து அலையலையாக சிலுவைப்போர் வீரர்கள் புறப்பட்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். இம்முறை அவர்கள் ஜெருசலேம் என்று மட்டும் பாராமல், வரும் வழியெங்கும் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்கள்.

அதாவது கிறிஸ்துவப் படை முன்னேறும் வழியெல்லாமே கிறிஸ்துவர்களின் ஆளுகைக்கு உட்பட்டது என்பது போல! யாராவது தாக்குதலுக்குத் தயாராக நின்றால், அந்தக் கணம் எதிரே இருக்கும் படையினர் போரிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மாறாக, பின்னால் வரும் அடுத்த அணி சிலுவைப்போர் வீரர்களுக்கு அந்தப் பணியைக் கொடுத்துவிட்டு இவர்கள் வேறு வழியே வேகமாக முன்னேறத் தொடங்கிவிடுவார்கள்.

கிறிஸ்துவ வீரர்களிடையே அப்போது சரியான ஒருங்கிணைப்பு இருந்தது. தவிர, தங்களுக்குப் பின்னால் பெரிய பெரிய நாடுகள் ஆதரவாக இருக்கின்றன என்கிற மானசீக பலம் அவர்களுக்கு இருந்தது.

ஆகவே, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வேருடன் அழித்து, மாபெரும் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தை - ஜெருசலேத்தை தலைநகராகக் கொண்டு மத்திய கிழக்கில் நிறுவி விடுவது என்கிற பெருங்கனவுடன் அவர்கள் பாய்ந்துகொண்டிருந்தார்கள்.

துரதிருஷ்டவசமாக அப்போதுதான் சுல்தான் முஹம்மது காலமாகி, அடுத்தபடியாகப் பதவியேற்ற முஸ்தகீர் என்பவரும் ஒரே ஆண்டில் மரணமடைந்திருந்தார்.

முஸ்லிம்களிடையே ஒற்றுமை என்கிற முஹம்மதின் திட்டமும் அவர்களுடன் சேர்ந்து காலமானதுதான் இதில் பெரும் சோகம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 பெப்ரவரி, 2005
******************************************
Readers, kindly inform about this article to all of your friends / groups through e-mail-sms-phone.

தொடரும்... மீண்டும் வாருங்கள்.
***********************************
அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்1-2.
1-2. நிலமெல்லாம் ரத்தம்- .
3-4 நிலமெல்லாம் ரத்தம்- ..
5-6 நிலமெல்லாம் ரத்தம்- ...
7-8 நிலமெல்லாம் ரத்தம்- ...
9-10 நிலமெல்லாம் ரத்தம்- ..
11-12 நிலமெல்லாம் ரத்தம்- ...
13-14 நிலமெல்லாம் ரத்தம்- ...
15-16 நிலமெல்லாம் ரத்தம்- ..
17-18.நிலமெல்லாம் ரத்தம்-...
19-20. நிலமெல்லாம் ரத்தம்- ...
21-22.இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்...
23-24. பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம். சிலுவைப்...

No comments: