Thursday, March 19, 2009

51.52.அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு.ஹிட்லரின் தற்கொலை.பகுதி 51-52.

51] அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 51.

இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று மெதுவாகவே மக்களுக்குத் தெரியவந்தன.

யூதர்கள் மட்டும் தாம் வாழும் தேசங்களில் ஹிட்லருக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி விஷயத்தை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டிராவிட்டால், ஒருவேளை இன்றைக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச விவரங்கள்கூட கிடைக்காமலே போயிருக்கக்கூடும்.

என்ன செய்து ஹிட்லரிடமிருந்து தப்பிக்கலாம் என்பதுதான் அன்றைக்கு ஒட்டுமொத்த யூதகுலத்தின் ஒரே கவலையாக இருந்தது. யாராலுமே நெருங்கமுடியாத, யாருமே எதிர்க்கமுடியாத ஒரு ராட்சஸ சக்தியாக அவர் இருந்தார். குரூரம் மட்டும் அவரது குறைபாடல்ல.

மாறாக, அவர் ஒரு முழு முட்டாளாகவும் இருக்க நேர்ந்தது துரதிருஷ்டம்தான். எடுத்துச் சொல்லப்படும் எந்த விஷயமும் ஹிட்லரின் சிந்தனையைப் பாதிக்காது என்பது தெரிந்தபிறகு அவரிடம் பேசுவதற்குக்கூட யாரும் முன்வரவில்லை. ஹிட்லர் ஆதரவுத் தலைவர்கள், ஹிட்லர் எதிர்ப்புத் தலைவர்கள் என்றுதான் இருந்தார்களே தவிர, நல்லவிதமாகப் பேசி அவரைச் சரிப்படுத்தும் நிலையில் யாருமே இல்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இது அன்றைக்கு மற்ற யாரையும்விட, பாலஸ்தீன் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.

ஏற்கெனவே உலகெங்கிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். கட்டுப்படுத்தவே முடியாத ஒரு மாபெரும் இனப்பெயர்ச்சியாக இருந்தது அது.

ஹிட்லர் ஒருவேளை தன் திட்டப்படி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கபளீகரம் செய்துவிட்டால் வேறு வழியே இல்லை. அத்தனை லட்சம் ஐரோப்பிய யூதர்களும் தப்பி ஓடிவரக்கூடிய ஒரே இடம் பாலஸ்தீனாகத்தான் இருக்கும்.

சட்டபூர்வமாக அதை ஒரு யூத தேசமாக ஆக்க முயற்சி செய்துகொண்டிருந்த யூதர்களுக்கு, விஷயம் மிகவும் சுலபமாகிப்போகும். ஒரு வாக்கெடுப்பு நடத்தினால்கூட பெரும்பான்மை யூதர்களாகவே அப்போது இருப்பார்கள்.

என்ன செய்யலாம் என்று முஸ்லிம் தலைவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள்.

ஹிட்லரின் யூதப் படுகொலைகளை ஆதரிக்கவோ எதிர்க்கவோ அவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக, ஹிட்லராவது தங்களுக்கு உதவமாட்டாரா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்!

அதாவது ஹிட்லர் கொன்றதுபோக, அடித்துத் துரத்தப்படும் யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்துவிடாமல் இருக்க ஏதாவது ஒரு வழி வேண்டும் அவர்களுக்கு. பிரிட்டனிடம் இதற்காக உதவி கேட்கமுடியாது.

ஏற்கெனவே இஸ்ரேலை உருவாக்குவதற்காக வரிந்துகட்டிக்கொண்டிருக்கும் தேசம் அது. உலகப்போர் தொடங்கிய சமயம் பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன் சர்ச்சில், தொடக்கத்திலிருந்தே யூதர்கள் மீது அனுதாபம் கொண்டவராகவே தன்னைக் காட்டிக்கொண்டு வந்தவர்.

அமெரிக்காவிடம் போகலாமென்றால், அவர்களும் ஜெர்மானிய யூதர்களின் மீது ஏற்பட்ட அனுதாபம் காரணமாக, முழு யூத ஆதரவு நிலை எடுக்கும் கட்டத்தில் இருந்தார்கள்.

சரித்திர நியாயங்கள் யாருக்கும் அப்போது முக்கியமாகப் படவில்லை. ஹிட்லர் என்கிற தனிமனிதனின் வெறியாட்டத்தால் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்கிறது; எப்படியாவது, ஏதாவது செய்து யூதர்களைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் சிந்தித்தன.

விசித்திரம் பாருங்கள். அத்தனை தேசங்களுமே ஒவ்வொரு காலகட்டத்தில் யூதப் படுகொலைகளை நிகழ்த்தியவைதான். ஆனால் ஹிட்லர் செய்தவற்றோடு ஒப்பிட்டால், எதுவுமே சாதாரணம்தான் என்று நினைக்கத்தக்க அளவில் நடந்துகொண்டிருந்தது ஜெர்மானிய நாஜிக்கட்சி.

என்ன செய்யலாம்? உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள்.

எப்படியும் போரின் இறுதியில் பிரிட்டன் கூட்டணிப் படைகள் வெற்றி பெற்றுவிட்டால் இஸ்ரேலை உருவாக்காமல் விடமாட்டார்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. போரில் பிரிட்டன் தோற்கவேண்டும் என்று கடவுளையா வேண்டிக்கொள்ளமுடியும்?

பிரிட்டன் தோற்பதென்றால் ஹிட்லர் ஜெயித்தாகவேண்டும். ஹிட்லர் ஜெயித்தால் யூதர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் நாசமாவது தவிர, வேறு வழியே இல்லை.

ஆனாலும் முஸ்லிம்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாமென்று அவர்கள் நினைத்தார்கள். குறைந்தபட்சம், யூதர்களுக்கு எதிரான ஒரு காரியம் செய்கிறோம் என்கிற சந்தோஷத்திலாவது ஹிட்லர் தமக்கு உதவலாம் என்பது அவர்கள் எண்ணம்.

மறுபுறம், உலகப்போரில் பிரிட்டனை மிகப் பலமாக ஆதரித்த யூதகுலத்தவர்கள், ஆயிரமாயிரம் பேராக, சுயமாக பிரிட்டனை அணுகி, படையில் தம்மைச் சேர்த்துக்கொள்ளக் கேட்டு நிற்கத் தொடங்கினார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை அது வாழ்வா, சாவா யுத்தம். ஹிட்லருக்கு எதிராக யார் திரண்டாலும் தமது ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பது மட்டும்தான் யூதர்களின் நிலைப்பாடு.

யூத தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவராக இருந்தவர் டேவிட் பென்குரியன். பிரிட்டனுடன் மிக நெருக்கமான அரசியல் உறவு கொண்டவர். பல உரசல்களைத் தாண்டியும் நெருக்கம் குலையாத உறவு அது. பிரிட்டன் மிகவும் வெளிப்படையாக இஸ்ரேல் உருவாக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டுமென்று அப்போது வற்புறுத்திவந்தவர் குரியன். சர்ச்சிலோ, ‘யுத்தம் முடிந்தபிறகு அதைப் பற்றிப் பேசலாம்; இப்போது வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எப்படியும் சர்ச்சில் செய்துவிடுவார் என்பது குரியனுக்குத் தெரியும். ஆனாலும் போரின் தன்மை எப்படி மாறும் என்று கணிக்கமுடியாமல் இருந்தது.

உண்மையில், அமெரிக்கா யுத்தத்தில் இறங்கும்வரை, ஹிட்லரின் கைதான் மேலோங்கியிருந்தது. இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினியுடன் சேர்ந்துகொண்டு, இன்னொரு பக்கம் ஜப்பான் உதவிக்கு இருக்கிற தைரியத்தில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அவரது ராணுவம்.

ஜெர்மனியின் உண்மையான பலம் இவை மட்டுமல்ல. பொறியியல் துறையில் அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட தன்னிறைவு கண்டிருந்த தேசம் அது. ஆயுதங்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பிலும் பிரயோகத்திலும் மற்ற தேசங்கள் எதுவும் நெருங்கமுடியாத தரத்தைத் தொட்டுவிட்டிருந்தது ஜெர்மனி.

இந்த தைரியம்தான் ஹிட்லரை எதைக் கண்டும் பயப்படாத மனநிலைக்குக் கொண்டுசேர்த்திருந்தது. ஜெர்மனியின் ஒவ்வொரு குடிமகனும் தனது படைவீரன்தான் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தது பெரிய விஷயமல்ல.

முதியோர், பெண்கள் உள்பட ஜெர்மானியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது விதத்தில் யுத்தத்தில் பங்கெடுக்கவேண்டுமென்பதை அவர் மிகவும் வற்புறுத்தினார். ஆள்பலமும் ஆயுதபலமும் அவரைக் கிரக்கம் கொள்ளச் செய்தன. இயல்பான முரட்டுத்தனமும் வெறியும் அவரைச் செலுத்திக்கொண்டிருந்தன.

இதுதான் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஓரளவு நம்பிக்கையளித்த விஷயம்.

பிரிட்டன், அமெரிக்க, பிரான்ஸ் கூட்டணி நாடுகள் ஒருபோதும் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்பது தெளிவானதுமே பாலஸ்தீன் அரேபியர்கள் ஹிட்லரை ஆதரித்துவிடலாமென்று முடிவு செய்தார்கள்.

அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு இது.

அவர்கள் செய்த முதல் தவறு, யூத நில வங்கிகளின் நோக்கம் தெரியாமல் தங்கள் நிலங்களை இழந்தது. இரண்டாவது இது.

பிரிட்டனின் காலனிகளுள் ஒன்றாக இருந்த பாலஸ்தீனில் அப்போது முஸ்லிம்களுக்கென்று பிரமாதமான அமைப்பு பலமோ, நட்பு பலமோ கிடையாது. அவர்கள் சிதறிய பட்டாணிகளாகத்தான் இருந்தார்கள். எல்லோருக்கும் பொதுவான ஒரே விஷயம் எல்லோருமே யூதர்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான்.

முகம்மது அமீன் அல் ஹுஸைனி என்பவர் அன்றைக்கு பாலஸ்தீன முஸ்லிம்கள் சமூகத்தின் தலைவராக இருந்தார். 1893-ம் வருடம் ஜெருசலேமில் பிறந்தவர் இவர். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பணக்காரர் என்றால் ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பம் என்று பெயர்பெற்ற அளவுக்குப் பணக்காரர்.

தமது சொத்து சுகங்கள் முழுவதையும் கொடுத்தாவது பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிம்மதியைத் தேடித்தரமுடியுமா? என்று பாடுபட்டுக்கொண்டிருந்தவர் அவர். இந்தக் குணங்களால் அவரை மக்கள் ‘கிராண்ட் முஃப்தி’ என்று அழைத்தார்கள். அவர் சொன்ன பேச்சைக் கேட்டார்கள்.

புத்திசாலி; திறமைசாலி; பொதுநல நோக்குக் கொண்டவர், அரசியலில் தெளிவான பார்வை உள்ளவர் என்று எத்தனையோ விதமாகப் பாராட்டப்பட்ட ஹுசைனிதான் அந்தத் தவறைச் செய்தார்.

உலகப்போரில் ஹிட்லருக்கு ஆதரவு!
மனித மனங்களின் விசித்திரங்களைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஹிட்லர் எத்தனை ஆபத்தான மனிதர் என்று பாலஸ்தீன் அரேபியர்களுக்குத் தெரியாதா? நிச்சயம் தெரியும்.

ஆனாலும் அந்த நேரத்தில் தங்களுக்கு உதவ அவரைவிட்டால் வேறு ஆள் இல்லை என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம், ஹிட்லருக்கு யூதர்களைப் பிடிக்காது என்பது மட்டும்தான்!

ஹுஸைனி, ஜெர்மனிக்குப் போய் ஹிட்லரைச் சந்தித்துப் பேசினார். யுத்தத்தில் பாலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தினர் முழு மனத்துடன் அவரை ஆதரிப்பார்கள் என்று வாக்குக் கொடுத்தார். சிறிய அளவிலாவது ஒரு ராணுவத்தைத் திரட்டித் தர தம்மால் முடியும் என்றும் சொன்னார்.

யுத்தம் மிகத்தீவிர முகம் கொள்ளத்தொடங்கியது. முஸ்லிம்கள் தம் தலையில் தாமே மண்ணை வாரிக்கொட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22 மே, 200552]

52.ஹிட்லரின் தற்கொலை.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 53

ஜெர்மனியில் ஹிட்லரின் ராஜாங்கம் ஆரம்பமானதிலிருந்து, அவரது மறைவை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக யுத்தம் வரை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், அதற்கு ஏராளமான சுவாரசியமான புத்தகங்கள் இருக்கின்றன.

வில்லியம் ஷிரரின் The Rise and Fall of the Third Riech படித்துப் பாருங்கள். ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும். ஹிட்லரின் யூதப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் யூதர்கள் பிரிட்டனின் கூட்டணிப் படைகளுக்கு அளித்த ஆதரவு, என்ன செய்தாவது தங்கள் தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பதைப்பில் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்தது... இந்த மூன்று விஷயங்கள்தான் இங்கே முக்கியம்.

இதில், முஸ்லிம்களின் இந்த முடிவு மிகவும் அபத்தமானது; துரதிருஷ்டவசமானது. யுத்தத்தில் அவர்கள் எந்தப்பக்கமும் சாயாமல் இருந்திருந்தால் கூடக் கொஞ்சம் அனுதாபம் மிச்சம் இருந்திருக்கும். எப்போது அவர்கள் ஹிட்லரை நம்பினார்களோ, அப்போதே அவர்களின் விதி எழுதப்பட்டுவிட்டது.

உலக யுத்தம் தொடங்கிய முதல் ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் வரை ஹிட்லரின் கைதான் பெரிதும் மேலோங்கியிருந்தது. ஆனால் பின்னால் நிலைமை அப்படியே தலைகீழாகி, ஜெர்மன் இத்தாலி ஜப்பான் ராணுவங்களை பிரிட்டனும் அமெரிக்காவும் பிரான்ஸும் பார்த்த இடங்களிலெல்லாம் உதைக்கத் தொடங்கின.

பர்ல் துறைமுகத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜப்பான் மீது அமெரிக்கா கொண்ட வெறி, ஜெர்மனிக்கும் மிகப்பெரிய எமனாக விடிந்தது. அமெரிக்கா என்பது எத்தகைய சக்திகளைக் கொண்ட தேசம் என்பதும் முதல் முதலில் அப்போதுதான் முழுமையாகத் தெரியவந்தது.

1944-ம் ஆண்டின் இறுதியில் பிரிட்டன் கூட்டணிப் படைகளின் வெற்றியை எல்லோரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டனில் அவ்வப்போது கூடிய தொழிற்கட்சிக் கூட்டங்களில் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேலை உருவாக்கித் தருவது பற்றி நிறையவே விவாதித்தார்கள்.

பாலஸ்தீனிய முஸ்லிம்களின் ஜெர்மானிய ஆதரவு நிலை அவர்களை மிகவும் வெறுப்பேற்றியிருந்ததை மறுக்க முடியாது. அது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

அரேபியர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் ‘அரேபியர்களுக்கு இடமா இல்லை? மத்தியக் கிழக்கின் எல்லா நிலப்பரப்பும் அவர்களது மூதாதையர்களின் இடங்கள்தானே? பாலஸ்தீனிய அரேபியர்கள் எங்குவேண்டுமானாலும் போய் வசிக்கலாமே? பெருந்தன்மையுடன் அவர்கள் பாலஸ்தீனை யூதர்களுக்கு காலி பண்ணிக்கொடுத்தால்தான் என்ன? யூதர்கள்தான் பாவம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்’ என்று பேசினார்கள்.

யுத்தம் முடிந்த சூட்டில் பிரிட்டனிலும் தேர்தல் ஜுரம் வந்துவிடப்போகிறது என்கிற சூழ்நிலை. ஆகவே பேசுகிற ஒவ்வொரு பேச்சையும் ஓட்டாக மாற்றிப் பேசியாக வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருந்தது. அப்போதைய தொழிற்கட்சி உறுப்பினர்களுள் மிகவும் பிரபலமானவர்கள், க்ளெமண்ட் அட்லி, ஹெர்பர்ட் மாரிசன், எர்னெஸ்ட் பெவின் ஆகியோர். இவர்கள், அப்போதைய பிரிட்டன் பிரதமரான சர்ச்சிலின் யுத்த ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்தார்கள்.

ஆலோசனைக் கூட்டங்களில் என்ன பேசினாலும் உடனே அதை மக்கள் மத்தியிலும் வந்து ஒப்பித்துவிடுவார்கள். தங்கள் கட்சி, யூதர்கள் விஷயத்தில் மிகவும் வெளிப்படையான நிலையையே எடுக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ளவே இந்த ஏற்பாடு.

இஸ்ரேலை உருவாக்கும்போது, ‘தற்போதுள்ள பாலஸ்தீனிய எல்லைகளைச் சற்று மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருந்தால் அதையும் பரிசீலிப்போம்’ என்று பேசினார்கள்.

அதாவது, தேவையிருப்பின் எகிப்து, சிரியா, ஜோர்டன் (அன்றைக்கு அதன் பெயர் டிரான்ஸ்ஜோர்டன்) ஆகிய பாலஸ்தீனின் அண்டை நாடுகளுடன் கலந்து பேசி, எல்லைகளைச் சற்று விஸ்தரித்து அமைக்கலாம் என்பது தொழிற்கட்சியின் திட்டமாக இருந்தது.

எப்படி இருந்தாலும் மேற்சொன்ன தேசங்கள் எல்லாமே யுத்தத்தின் முடிவில் பிரிட்டன் கூட்டணி தேசங்கள் எதாவது ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இருக்கும்; பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் யோசனை.

என்ன செய்தும் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு ஏப்ரல் 30, 1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். சரியாக எட்டு தினங்கள் கழித்து இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.

ஐரோப்பாவையும் யூதர்களையும் பிடித்த சனி அன்றுடன் விலகிக்கொண்டது. யுத்தத்தில் மொத்தம் அறுபது லட்சம் பேர் இறந்தார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு யூதர்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்று எடுத்துக்கொண்டாலும் குறைந்தது இருபது லட்சம் யூதர்களாவது ஹிட்லர் என்கிற தனிமனிதனின் வெறியாட்டத்துக்கு பலியானது உண்மையே.

பாலஸ்தீன் என்கிற தேசம் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் சமமான அளவு பாத்தியதை உள்ளதுதான் என்கிற சரித்திர உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த மேலை தேசங்களும் இஸ்ரேல் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்ததற்கும் இதுதான் காரணம். யூதர்கள் மீதான அனுதாபம்.

மிச்சமிருக்கும் யூதர்களாவது இனி நிம்மதியாக வாழட்டுமே என்கிற இரக்கம்.
அந்த வகையில் இஸ்ரேல் உருவானதற்கு பிரிட்டனைக் காட்டிலும் ஹிட்லர்தான் மூலகாரணம் என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது!

அனுதாபம் வரலாம், தவறில்லை; ஆனால் ஏன் பாலஸ்தீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வேறு இடமா இல்லை என்கிற புராதனமான கேள்வி இங்கே மீண்டும் வரலாம். வேறு வழியே இல்லை.

இதெல்லாம் நடக்கும், இப்படித்தான் நடக்கமுடியும் என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே யோசித்து பாலஸ்தீனில் நில வங்கிகளைத் தொடங்கி, பெரும்பாலான இடங்களை வளைத்துப் போட்டுக் காத்திருந்த யூதர்கள், இன்னொரு இடம் என்கிற சிந்தனைக்கு இடம் தருவார்களா?

யூதகுலம் சந்தித்த மாபெரும் இழப்புகளுக்கெல்லாம், அவல வாழ்வுக்கெல்லாம் ஓர் அர்த்தம் உண்டென்றால் அது பாலஸ்தீனை அடைவதாகத்தான் இருக்க முடியும் என்று பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் அப்போது நினைக்கத் தொடங்கிவிட்டன. அங்குள்ள அரேபியர்கள் என்ன ஆவார்கள்?

இவர்கள் சுகமாக வாழ்வதற்காக அவர்கள் அவதிப்படவேண்டுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.

யார் எக்கேடு கெட்டால் என்ன? யுத்தம் முடிந்துவிட்டது. இனி கொஞ்சம் ஓய்வெடுத்தாக வேண்டும். யூதர்களுக்கு இஸ்ரேலைத் தந்துவிடலாம். அவர்களும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.

இதனிடையில் சுமார் ஆறு லட்சம் யூதர்கள் பாலஸ்தீனில் நன்றாக வேர் விட்டுக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டிருந்தார்கள். சுத்தமாகத் துடைத்துவிடப்பட்டு ஒரு யூதர் கூட இல்லாதிருந்த பாலஸ்தீன்!

சலாவுதீன் மன்னன் காலத்தில் புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். எத்தனை தலைமுறைகள்! எங்கெங்கோ சுற்றி, என்னென்னவோ கஷ்டப்பட்டவர்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்துப் பத்துப் பேராக, நூறு நூறு பேராக உள்ளே நுழையத் தொடங்கியவர்கள்தான் யுத்தத்தின் முடிவில் ஆறு லட்சம் பேராகப் பெருகியிருந்தார்கள்.

1917-ல் உருவான பால்ஃபர் பிரகடனம் 1939-ம் ஆண்டு யுத்தம் தொடங்குவதற்கு முன்பு வரை அப்படியே உயிருடன் தான் இருந்தது.

‘இஸ்ரேலை உருவாக்கித் தருவோம்.’ பிரிட்டனின் வாக்குறுதி அது. யுத்தம் தொடங்கியதிலிருந்து கவனம் திசை மாறிவிடவே, மீண்டும் அதை எடுத்து தூசிதட்டி உடனடியாக முடித்துத்தரக் கேட்டார்கள் யூதர்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், எங்கே பிரிட்டன் தங்களை ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய சில யூதர்கள், ரகசியமாக புரட்சிப் படைகளையெல்லாம் அவசர அவசரமாக உருவாக்கி, பாலஸ்தீனின் பாலைவனப்பகுதிகளில் போர்ப்பயிற்சிகளெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள்.

யுத்தத்துக்குப் பிறகு உடனடியாக அறிவிக்கப்பட்ட பிரிட்டனின் செயல் திட்டங்களுள் இஸ்ரேல் உருவாவது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாததே இதற்குக் காரணம்.

இத்தகைய புரட்சிகர அமைப்புகள் ஆங்காங்கே சில சில்லறை வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. ‘பாலஸ்தீனிலிருந்து பிரிட்டன் ராணுவத்தினரை வெளியேற்றுவோம்’ என்று சொல்லிக்கொண்டு இவர்கள் போராடத் தொடங்கினார்கள். இதில் பிரிட்டனுக்கு மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது.

இஸ்ரேல் உருவாவதற்குத்தான் அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் யூதர்களே வில்லன்களாக ஏதாவது குட்டையைக் குழப்பி விடப்போகிறார்களோ என்று பயந்தார்கள்.

‘இன்னும் கொஞ்ச நாளைக்கு பாலஸ்தீனில் பிரிட்டிஷ் ராணுவம் இருக்கத்தான் செய்யும்’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டு, கலவரக்காரர்களை அடக்கச்சொல்லி ராணுவத்துக்கு உத்தரவிட்டது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்.

அரேபியர்களுக்கு அச்சம் மிகுந்திருந்தது அப்போது. ஏதோ சதி நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. எப்படியும் பாலஸ்தீனை உடைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

ஓர் உச்சகட்ட காட்சியை மிகுந்த உணர்ச்சிமயமாகத் தயாரிக்கும் பொருட்டுத்தான் இப்படி அவர்கள் தமக்குள் ‘அடிப்பது மாதிரி அடி; அழுவது மாதிரி அழுகிறேன்’ என்று நாடகம் போடுகிறார்களோ என்று சந்தேகப்பட்டார்கள்.

என்ன ஆனாலும் பாலஸ்தீனைப் பிரிக்க விடமாட்டோம், யூதக் குடியேற்றங்களை இறுதி மூச்சு உள்ளவரை தடுக்கவே செய்வோம்’ என்று அரேபியர்கள் கோஷமிட்டார்கள்.

ஆனால், அவர்களது கோஷத்தை யார் பொருட்படுத்தினார்கள்?

தினசரி லாரி லாரியாக யூதர்கள் வந்து பாலஸ்தீன் எல்லையில் இறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். (ரயில்களிலும் டிரக்குகளிலும் கூட வந்தார்கள்.) அப்படி வந்த யூதர்களுக்கு உடனடியாக பாலஸ்தீனில் வீடுகள் கிடைத்தன. குடியேற்ற அலுவலகத்திலேயே வீட்டுச்சாவிகளை வாங்கிக் கொண்டுதான் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

அரேபியர்கள் தாங்கள் மெல்ல மெல்ல தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தார்கள்.

யாரிடம் உதவி கேட்கலாம் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை. யுத்தத்தில் ஜெர்மனியை ஆதரித்தவர்களுக்கு, யுத்தம் முடிந்தபிறகு உதவுவதற்கு ஒரு நாதியில்லாமல் போய்விட்டது.

தவிர, இன்னொரு மிக முக்கியமான பிரச்னையும் அப்போது இருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில்தான் மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளம் குறித்த முழுமையான ‘ஞானம்’ அனைத்து மேற்கத்திய தேசங்களுக்கும் உண்டாகியிருந்தது.

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான தேசங்கள் ஏதாவது வகையில் மத்தியக் கிழக்கில் வலுவாகக் காலூன்ற முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருந்தன.

யுத்தத்தின் சாக்கில் கைப்பற்றப்பட்ட மத்தியக்கிழக்கு தேசங்களை எப்படிப் பங்கிடலாம், எப்படி நிரந்தரமாகப் பயனடையலாம் என்றே அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

தமக்குச் சாதகமான அரசுகள் அங்கே உருவாவதற்கு உதவி செய்வதன்மூலம், எண்ணெய்ப் பொருளாதாரத்தில் தாங்கள் லாபம் பார்க்கலாம் என்பதே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேசங்களின் சிந்தனையாக இருந்தது.

அமெரிக்காவின் வல்லமை முழுவதுமாக வெளிப்பட்டிருந்த சமயம் அது. எப்படியும் ஒரு மாபெரும் வல்லரசாக அத்தேசம் உருவாவது நிச்சயம் என்று யாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, பிரிட்டனுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது.

ஆகவே, அமெரிக்கா யூதர்களை வலுவாக ஆதரிப்பதை பிரிட்டன் அரசு கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது.

பாலஸ்தீன் என்றில்லை. எந்த அரேபிய தேசமும் அமெரிக்காவை மனத்தளவில் ஆதரிக்காது.

ஆகவே, மத்தியக்கிழக்கில் ஒரு யூத தேசம் உருவாவது தனக்கு மிகவும் சாதகமானது என்றே அமெரிக்கா கருதியது.

இதனால்தான் வரிந்துகட்டிக்கொண்டு அன்றுமுதல் இன்றுவரை இஸ்ரேலை ஆதரித்து வருகிறது அமெரிக்கா.

சக்திமிக்க தேசங்கள் என்கிற அளவில் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அப்போது சம பலத்தில் இருந்தன. ஒரே வித்தியாசம் என்னவெனில், அமெரிக்கா ஒரு முதலாளித்துவ தேசம். சோவியத் யூனியன், கம்யூனிச தேசம்.

பிரிட்டனால் அமெரிக்காவைச் சகித்துக்கொள்ள முடிந்தாலும் முடியுமே தவிர, கம்யூனிஸ்டுகளின் அரசை ஒருக்காலும் சகிக்க முடியாது.

இந்தக் காரணத்தாலும் இஸ்ரேல் விஷயத்தில் அமெரிக்காவின் விருப்பமும் நிலைப்பாடும் பிரிட்டன் பொருட்படுத்தத்தக்கவையாக இருந்தன.

இதையெல்லாம் ஏனைய ஐரோப்பிய, ஆசிய தேசங்கள் மிகவும் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. என்னதான் நடக்கப்போகிறது பாலஸ்தீனில்?

யுத்தம் முடிந்தவுடனேயே பிரிட்டன் பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு சொல்லிவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது உண்மை. ஆனால் யுத்தத்தின் முடிவில் உடனடியாகத் தீர்ந்தது பாலஸ்தீன் பிரச்னையல்ல; இந்தியப் பிரச்னை!

ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டு பிரிட்டன், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டது.

இந்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்ததை பாலஸ்தீனிய யூதர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே பிரிட்டன் தான் அவர்களுக்கும் ஒரு நல்லது செய்தாகவேண்டும். ஆனால் எப்போதுசெய்யப்போகிறது?

பிரிட்டன் தயாராகத்தான் இருந்தது. ஒரே ஒரு பிரச்னைதான். கொஞ்சம் சிக்கல் மிக்க பிரச்னை. அது தீர்ந்தால் இஸ்ரேல் விஷயத்தைத் தீர்த்து விடலாம். ஆனால் எப்படித் தீர்ப்பது?அதைத்தான் யோசித்துக்
கொண்டிருந்தார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 மே, 2005
***********************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: