69] சினாயும் காஸாவும் இஸ்ரேல் வசம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 69
இஸ்ரேலும் ஒரு முடிவில்தான் இருந்தது. சிரியாவுடனான தண்ணீர்ப் பிரச்னை, எகிப்துடனான கப்பல் போக்குவரத்துப் பிரச்னை, ஜோர்டனுடனான மேற்குக்கரைப் பிரச்னை உள்ளிட்ட தன்னுடைய சொந்தப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவோ, ஐ.நா.சபையோ ஒரு தீர்வு கொண்டுவராவிட்டால், தனக்குத் தெரிந்த முறையில் தானே நடவடிக்கையில் இறங்கிவிடலாம் என்பதுதான் அது!
அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி மோஷே தயான் (Moshe Dayan) என்கிற மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை ராணுவத் தளபதியாக நியமித்தார் இஸ்ரேலியப் பிரதமர் லெவி இஷ்கல். (Levi Eshkol). ஒரு அவசர யுத்தத்தை திட்டமிட்டு நடத்தக்கூடிய வல்லமை பொருந்தியவர் என்பதால்தான் இந்த திடீர் பதவி மாற்றம்.
இதைக் கவனித்ததுமே அமெரிக்க அதிபர் ஜான்சன் இஸ்ரேலிய பிரதமரைத் தொலைபேசியில் அழைத்தார். வேண்டாம், யுத்த முஸ்தீபுகள் இப்போது தேவையில்லை என்று எச்சரிக்கை செய்தார்.
ஆனால், இஸ்ரேல் கேட்கக்கூடிய நிலையில் இல்லை.
அமெரிக்கா சொன்னதைக் கேளாமல் யுத்தத்தை ஆரம்பித்து விட்டாலும் பின்னால் சமாதானம் பேசி வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தார் இஸ்ரேலியப் பிரதமர்.
ஆகவே எகிப்தின்மீது தாக்குதல் தொடங்க உத்தரவிட்டார்.
அன்றைக்குத் தேதி ஜூன் 5.
இஸ்ரேலின் முதல் இலக்கு, எகிப்தின் விமானப்படையை ஒழித்துக்கட்டுவதுதான்.
அன்றைய தேதியில், மத்தியக்கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருந்த ஒரே தேசம் எகிப்து. காரணம் சோவியத் யூனியனின் ஒத்துழைப்பு. உலகில் விமானக் கட்டுமானத்தில் என்னென்ன நவீன உத்திகள் மேற் கொள்ளப்படுகின்றனவோ, அவை யனைத்தும் எகிப்து விமானப்படைக்கு வந்து சேர வேண்டுமென்பதில் எகிப்தைக் காட்டிலும் அப்போது சோவியத் யூனியன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது.
மத்தியக் கிழக்கில் தான் பங்கேற்கக்கூடிய பெரிய யுத்தம் என்று ஏதேனும் வருமானால், அப்போது அதிநவீன எகிப்து விமானப்படையை உபயோகித்துக் கொள்ளலாமே என்கிற முன் யோசனையுடன் தான் சோவியத் யூனியன் எகிப்து விமானப் படையை ஒரு செல்ல நாய்க்குட்டி போலப் பராமரித்து வந்தது.
இது ஒரு வெளிப்படையான ரகசியம். அன்றைக்கு உலகம் முழுவதற்குமே இந்த விஷயம் தெரியும். தன்னுடைய விமானப்படையின் பலம் குறித்த பெருமையுடன் இருந்த எகிப்து, அதனாலேயே மற்ற படைகள் சற்று முன்பின்னாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்தது.
இதனால்தான் இஸ்ரேல் முதலில் எகிப்தின் விமானப்படையைத் துவம்சம் செய்துவிட முடிவு செய்தது. மொத்தம் 385 போர் விமானங்கள். அத்தனையும் சோவியத் யூனியன் சரக்கு. அவற்றுள் நாற்பத்தைந்து விமானங்கள், ஜிஹி 16 Badger என்கிற நடுத்தர குண்டுவீச்சு விமானங்கள்.
இந்த விமானங்களைக் கொண்டுதான் முன்னதாக எகிப்துப் படைகள் இஸ்ரேலின் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வந்தன. ஆகவே இவற்றை முதலில் ஒழித்துவிடவேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஜூன் 5-ம் தேதி இஸ்ரேலிய நேரம் காலை 7.45-க்கு அனைத்து இஸ்ரேல் போர் விமானங்களும் எகிப்து விமான தளங்களைக் குறிவைத்துப் புறப்பட்டன.
முன்னதாக இஸ்ரேல் முழுவதும் யுத்த எச்சரிக்கை செய்யப்பட்டது. எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். முக்கிய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இரவோடு இரவாக தேசம் முழுவதும் ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பணியில் நிறுத்தப்பட்டார்கள்.
எகிப்து வசம் நல்ல தரமான போர் விமானங்கள் இருந்தனவே தவிர, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே கிடையாது. அதன் விமான தளங்கள் அனைத்தும் கார்ப்பரேஷன் மைதானம் போலத்தான் இருக்கும்.
விலை மதிப்பு மிக்க போர் விமானங்களைப் பாதுகாக்கக்கூடிய பங்கர் என்றுசொல்லப்படும் ராணுவத் தளவாடங்கள் அப்போது எகிப்திடம் இல்லை.
இந்த விஷயத்தை மனத்தில் கொண்ட இஸ்ரேல், எந்தத் திசையிலிருந்து தாக்குதலைத் தொடங்கலாமென்று ஆற அமர யோசித்து, இறுதியில் மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து ஆரம்பிப்பதே பலன் தரும் என்று முடிவு செய்தது.
அனைத்து இஸ்ரேலியப் போர் விமானங்களும் எகிப்துப் பக்கம் திரும்புமுன் மத்தியத் தரைக்கடலின் மீது வானில் அணிவகுத்துப் பறந்தன.
நாசர் கவலை கொண்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு வேறு ஒரு பிரச்னை இருந்தது. அறிவிப்பில்லாமல் இஸ்ரேல் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது.
இந்த விஷயம் எகிப்து மக்களுக்கு முதலில் முறைப்படி தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவகாசம் இல்லை. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்கிற அடிப்படையில் எகிப்து விமானங்களையும் அணி வகுத்துப் பறக்கச் செய்தால், வேறு ஒரு பிரச்னை வரும்.
அதாவது, எகிப்து அரசுக்கு எதிராக அப்போது உள்நாட்டில் பல தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அத்தனை இயக்கங்களுமே நாசரைப் பதவியிலிருந்து இறக்க விரும்பிய இயக்கங்கள். எல்லாம் எகிப்தின் உள்நாட்டுப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை.
இந்தத் தீவிரவாத இயக்கங்களிடம் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் நவீன பீரங்கிகளும் இருந்தன.
நாசருக்கு என்ன கவலை என்றால், இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக தான் போர்விமானங்களை அணிவகுத்துப் பறக்கவிடப் போக, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு உள்ளூர் தீவிரவாதிகள், அவர்களை ஒழிக்கத்தான் ராணுவ விமானங்கள் வருகின்றனவோ என்று எண்ணி, சுட்டு வீழ்த்தி விடக் கூடுமல்லவா?
ஆகவே கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என்று நினைத்து, தனது போர் விமானங்களை எடுக்காமல், இஸ்ரேல் விமானங்கள் வரும்போது எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு பீரங்கிகளை மட்டும் தயார் நிலையில் வைக்கச் சொன்னார்.
இதுதான் மிகப்பெரிய பிரச்னையாகப் போய்விட்டது.
என்னதான் ராணுவ டாங்குகள் அணிவகுத்தாலும் போர் விமானங்களை, அதுவும் மொத்தமாக பத்திருபது விமானங்கள் வரும்போது அவற்றைச் சமாளிக்க, டாங்குகளால் முடியாது.
பறந்துவரும் விமானங்களைத் தரையிலிருந்து அடித்து வீழ்த்துவது பெரிய கலை. அந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, ஒரு சமயத்தில் ஓரிரண்டு விமானங்களைத்தான் வீழ்த்த முடியுமே தவிர, மொத்தமாக ஒரு விமானப்படையையே அழித்துவிட முடியாது.
இஸ்ரேல் இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டம் அப்போது அவர்கள் பக்கம் இருந்தது. அத்தனை எகிப்து விமானங்களும் சமர்த்தாக மைதானங்களில் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவர்கள் வியப்பின் உச்சிக்கே போனார்கள்.
எந்தவித சிரமமும் இல்லாமல் ஒன்று விடாமல் 300 எகிப்திய விமானங்களைக் குண்டு வீசி அழித்தார்கள். சுமார் நானூறு விமானப்படை வீரர்களும் இறந்தார்கள்.
எகிப்து தரப்பில் அவர்களால் வெறும் பத்தொன்பது இஸ்ரேல் விமானங்களைத்தான் வீழ்த்த முடிந்தது.
இது ஒரு பெரிய விஷயமே இல்லை. தவிரவும் எகிப்தின் விமான பலத்துடன் ஒப்பிட்டால் இஸ்ரேலியப் போர் விமானங்கள் அத்தனையுமே சொத்தை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆகவே, அந்தச் சிறிய இழப்பை இஸ்ரேல் கண்டுகொள்ளவே இல்லை. வெற்றிப் பெருமிதத்துடன் இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் தம் தேசத்துக்குப் போய்விட்டன.
இத்தனை பெரிய வெற்றியை இஸ்ரேல் தொடக்கத்திலேயே எதிர்பார்க்கவில்லையாதலால், மிகுந்த மகிழ்ச்சியுடனும் மேலும் உத்வேகத்துடனும் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக எகிப்தின் சினாய் மற்றும் காஸா பகுதிகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட ஏழு முழுப்படைகளை இப்பணியில் இறக்கியது இஸ்ரேல். யுத்தத்தில் பங்குகொண்ட முக்கியத் தளபதிகளுள் ஒருவர் பெயர் ஏரியல் ஷரோன். இன்றைய இஸ்ரேலியப் பிரதமர்.
சினாயைக் கைப்பற்றுகிற விஷயத்தில் இஸ்ரேல் அன்று கடைப்பிடித்த உத்தியைக் கவனிக்க வேண்டும்.
நேரடியாக சினாய்க்கு வீரர்களை அனுப்பியதுடன் இஸ்ரேல் ராணுவத் தளபதிகள் ஓய்ந்துவிடவில்லை.
மாறாக எகிப்தின் நான்கு முனைகளிலும் தாக்குதலுக்கு வீரர்களை அனுப்பி எல்லைகளில் அணிவகுக்க வைத்தார்கள். அதனால், எகிப்து தனது வீரர்களை அனைத்துப் பக்கமும் அனுப்ப வேண்டியதானது. ஆனால், இஸ்ரேல் யுத்தம் செய்ய முடிவு செய்தது என்னவோ சினாயில் மட்டும்தான்.
பெரும்பாலான எகிப்து வீரர்கள் தேசமெங்கும் சிதறிக்கிடக்க, இஸ்ரேல் தன்னுடைய ராணுவத்தின் முக்கியப் படைகள் அனைத்தையும் சினாயில் குவித்து, யுத்தத்தை ஆரம்பித்தது.
கப்பல் படையின் பாதுகாப்பில் தரைப்படை வீரர்கள் முன்னேறி வந்து தாக்கத் தொடங்கினார்கள். எகிப்து ராணுவத்துக்கு இங்கேயும் பிரச்னை.
அவர்கள் இஸ்ரேல் கப்பல் படையை முதலில் கவனிப்பதா, தரைப்படையைக் கவனிப்பதா என்று புரியாமல் கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருக்க, அதற்குள் முழு சினாயையும் ஆக்கிரமித்துவிட்டது இஸ்ரேல் படை. இது நடந்தது 8 ஜூன்.
யுத்தங்களுக்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தக் குறிப்பிட்ட போரைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஓர் இலக்கணம் மீறிய புதுக்கவிதை யுத்தத்தை மேற்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
யுத்த இலக்கணப்படி கப்பல்படையின் பாதுகாப்பில் தரைப்படை முன்னேறுமானால், முதலில் பின்னால் அணிவகுக்கும் கப்பல்களைத்தான் தற்காப்பு யுத்தம் செய்யும் தேசம் குறிவைக்கும்.
ஏனெனில் ஒரு போர்க்கப்பல் என்பது இருபது விமானங்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். இரண்டாயிரம் வீரர்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். பல்லாயிரக்கணக்கான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அதில் இருக்கலாம்.
தரைப்படை வீரர்களை முதலில் தாக்கத் தொடங்கினால் பின்னால் சாரிசாரியாக ஆட்களும் ஆயுதங்களும் வந்தபடியே இருக்குமென்பதால் முதலில் பாதுகாப்பளிக்கும் போர்க்கப்பல்களை அழிப்பதுதான் யுத்த நடைமுறை.
அதைத்தான் எகிப்துப்படையினர் செய்ய முயன்றார்கள். ஆனால், இஸ்ரேல் மிகக் கவனமாகத் தனது போர்க்கப்பல்களில் எந்த விதமான முக்கிய ஆயுதங்களையோ விமானங்களையோ வைக்காமல், ஒப்புக்குக் கொஞ்சம் வீரர்களை மட்டுமே நிறுத்திவிட்டு, தரைப்படையினர் வசமே அத்தனை தளவாடங்களையும் தந்திருந்தது!
இதை எகிப்து கனவில் கூட எதிர்பார்த்திருக்க முடியாதென்பதால், தரைப்படையினரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அது தோல்வியைத் தழுவ வேண்டியதானது!
எகிப்தின் இன்னொரு பெரிய பலவீனம், தகவல் தொடர்பின்மை மற்றும் ஒருங்கிணைப்பு இன்மை. பதற்றத்தில் எகிப்துப்படை இஷ்டத்துக்குப் போரிடத் தொடங்கிவிடவே, ஒரு கட்டுப்படுத்தும் சக்தியாக யாராலுமே செயல்பட முடியாமல் போய்விட்டது.
சினாயும் காஸாவும் இஸ்ரேலின் வசம் திரும்ப வந்தது இப்படித்தான்!
சிரியாவின் கோலன் குன்றுகளாயிற்று, எகிப்தின் சினாய் ஆயிற்று. அடுத்தது ஜோர்டன். அந்த மேற்குக் கரை விவகாரம்.
இஸ்ரேல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அந்தப் பக்கம் அடுத்து பார்த்தது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 ஜூலை, 2005
70] அரேபியர்களின் அந்த மௌன ஓலம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா ராகவன் 70
எகிப்து மற்றும் சிரியாவின் படைகளுடன் ஒப்பிட்டால் அன்றைய காலகட்டத்தில் ஜோர்டனின் படை சற்றே வலுவானது என்றுதான் சொல்லவேண்டும்.
ஜோர்டனுக்கு நிறைய மேலை நாடுகளுடன் நட்பு இருந்தது. அதன்மூலம் நவீன ஆயுதங்கள் பலவற்றை வாங்கிக் குவித்திருந்தார்கள்.
அத்துடன், அப்படி வாங்கும் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சியும் முறைப்படி ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைப் பிடிக்காத அத்தனை தேசங்களுடனும் அன்றைக்கு ஜோர்டன் நட்புக் கொண்டிருந்தது.
ஆகவே, ஒரு யுத்தம் என்று வரும்போது, அதுவும் இஸ்ரேலுடன் யுத்தம் என்று வரும்போது அத்தனை பேரும் போட்டி போட்டுக்கொண்டு ஜோர்டனுக்கு ஆயுத உதவிகள் செய்தார்கள்.
ஆறு நாள் யுத்த சமயத்தில் ஜோர்டனின் மொத்த படைபலம் சுமார் ஒன்றரை லட்சம். அதில் பதினொரு பிரிகேடுகள் அதாவது, சுமார் அறுபதாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவு நவீன ரக பீரங்கிகளை இயக்குவதற்காகவே பழக்கப்பட்டிருந்தது.
இதில் சுமார் நாற்பதாயிரம் பேரை மேற்குக் கரையிலும் மிச்சமிருந்த இருபதாயிரம் பேரை ஜோர்டன் பள்ளத்தாக்குப் பகுதியிலும் நிறுத்தியிருந்தார்கள். இவர்களுக்கு உதவியாக ராயல் ஜோர்டன் விமானப்படைப் பிரிவு ஒன்று இருபத்துநான்கு மணிநேரமும் கூடவே சுற்றிப் பறந்துகொண்டிருந்தது.
மொத்தம் இருபது போர் விமானங்கள் கொண்ட படை அது.
ஜோர்டனுக்கு இரண்டு பிரச்னைகள் இருந்தன. முதலாவது, மேற்குக் கரைப் பகுதியை இஸ்ரேலிடமிருந்து காப்பது.
இரண்டாவது, ஜோர்டனின் வசம் இருந்த ஜெருசலேம் பகுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக்கொள்வது. ஆகவே, ஜெருசலேத்தில் தனியே ஐந்து பிரிகேடுகள் நிறுத்தப்பட்டன.
ஜூன் ஐந்தாம்தேதி ஜோர்டன் தனது யுத்தத்தைத் தொடங்கியது.
முதலில் ஜெருசலேத்தில் இருந்த இஸ்ரேலிய ராணுவ முகாம் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள்.
மறுபுறம் டெல் அவிவ் நகரில் இருந்த அத்தனை இஸ்ரேலிய அரசு அலுவலகங்கள் மீதும் ஜோர்டன் விமானங்கள் குண்டு வீசத் தொடங்கின.
இப்படிக் கட்டடங்களைத் தாக்கிக்கொண்டே இஸ்ரேலின் விமானதளம் வரை வந்து சேர்ந்த ஜோர்டன் படை, அங்கிருந்த இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஒவ்வொன்றையும் குறிவைத்துக் குண்டு வீச ஆரம்பித்தன.
இஸ்ரேலியத் தரைப்படையினர் பீரங்கி மூலம் நிகழ்த்திய தாக்குதலில், ஜோர்டனின் சில விமானங்களும் அப்போது நாசமாயின என்றாலும் ஜோர்டன் அரசு சற்றும் எதிர்பாராதவிதமாகக் குறைந்தது எட்டு இஸ்ரேலிய விமானங்களையாவது அவர்கள் முழுச்சேதப்படுத்தியிருந்தார்கள்.
இதற்கான பதிலை மறுநாள் யுத்தத்தில் இஸ்ரேல் அளித்தது. ஒரே சமயத்தில் ஏழு ஜோர்டானிய இலக்குகளின் மீது அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள்.
ரமல்லா நகரம், ஜெருசலேமின் ஜோர்டானியப் பகுதிகள், ஜோர்டன் பள்ளத்தாக்கு என்று புகுந்து புகுந்து அடிக்க ஆரம்பித்தார்கள். மூச்சு விடக்கூட அவகாசமில்லாமல் குண்டுகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன.
ஏழாம் தேதி நிலைமை இன்னும் தீவிரமானது. ஜோர்டனின் விமானப்படை முழுவதும் மேற்குக் கரை ஓரம்தான் அணிவகுத்திருக்கின்றன என்பதை கவனித்து, இஸ்ரேல், தனது விமானப்படையை மொத்தமாக ஜெருசலேத்துக்கு அனுப்பியது.
விமானப்படையின் பாதுகாப்பில் நகருக்குள் பழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவம், அங்குள்ள புனிதச் சுவரையும் Temple Mount என்று சொல்லப்படும் புராதனமான புண்ணியத் தலம் ஒன்றையும் கைப்பற்றிக்கொண்டது.
அத்துடன் ஓயாமல் அப்படியே படையை நகர்த்திக்கொண்டு போய் ஜுதேயா, குஷ் எட்ஸன், ஹெப்ரான் பகுதிகளையும் அபகரித்துக்கொண்டது.
இந்தப் போரில் ஜோர்டன் படையினர் காட்டிய வீரம் குறித்து மொத்தம் நான்கு இஸ்ரேலிய ராணுவ ஜெனரல்கள் தமது போர் நினைவுக் குறிப்புகளில் மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
'அவர்களிடம் சரியான திட்டமிடல் இருந்தது. இலக்கு தவறாமல் ஆயுதப்பிரயோகம் செய்யத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நவீன ஆயுதங்களைச் சிறப்பாகக் கையாளவும் செய்கிறார்கள்.
தோற்றதற்குக் காரணம், அவர்களைக் காட்டிலும் இஸ்ரேலியர்கள் சிறப்பாகப் போரிட்டதுதான்'' என்று எழுதுகிறார் மாண்ட்லர் என்கிற ஓர் இஸ்ரேலிய கமாண்டர்.
ஆறுநாள் யுத்தத்தில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது மேற்குக் கரையையும் முழு ஜெருசலேத்தையும் அவர்களால் கைப்பற்ற முடிந்ததுதான்.
அரேபியர்கள் அதிர்ச்சியடைந்ததும் அதனால்தான் ஜெருசலேத்தின் ஒரு பகுதியாவது ஜோர்டன் வசமிருந்ததில் சற்றே ஆறுதலடைந்த முஸ்லிம்கள், அதுவும் இப்போது போய்விட்டதில் மிகுந்த கலக்கத்துக்கு ஆளானார்கள்.
ஜூன் பத்தாம்தேதி யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்தது.
சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கோலன் சிகரங்களை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டதுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்தது.
காஸா, சினாய், மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் என்று இஸ்ரேல் கண்ட முழுக்கனவும் அந்த யுத்தத்தில் நனவாகிப்போனது.
இதன்மூலம் இஸ்ரேலின் பரப்பளவு முன்பிருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரிக்க, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வாழும் அரேபியர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகப் பத்துலட்சம் ஆனது.
இந்த யுத்தத்தைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு விஷயத்தை மிகத்தெளிவாக நிரூபித்தது.
ஒரு போரில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது மட்டுமல்ல; ஒரு போரை வெற்றிகரமாக ஆரம்பித்து, நடத்தி ஜெயிப்பதிலும் தான் கில்லாடி என்பதைச் சொல்லாமல் சொன்னது.
எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய மூன்று தேசங்களுக்கும் இந்த யுத்தம் சில பாடங்களைச் சொல்லித்தந்தன.
என்னதான் அவர்கள் வீரத்துடன் போரிட்டாலும் யுத்தத்தில் வெற்றி என்பது சில சூட்சுமமான ஃபார்முலாக்களைக் கைக்கொள்வதில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
எந்தச் சமயத்தில் எங்கு தாக்கினால் பலன் கிடைக்கும் என்பதை யூகிப்பதற்கு அறிவியல்பூர்வமான கற்பனை அவசியம் என்பதை நாசர் உணர்ந்துகொண்டார். மடத்தனமாகத் தனது விமானப் படையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்து மொத்தமாக இழந்தது குறித்து மிகவும் வருத்தப்பட்டார்.
யுத்தத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி, மேற்குக்கரை.
அது பாலஸ்தீனியர்களின் தாயகம். இஸ்ரேல் வசமிருந்து ஜோர்டனுக்குக் கைமாறி, மீண்டும் இப்போது இஸ்ரேல் வசமே வந்துவிட்டது. எனில் பாலஸ்தீனியர்களின் சுதந்திரம் என்பது நிரந்தரக் கேள்விக்குறிதானா?
மேற்குக்கரையில் அப்போது சுமார் பத்துலட்சம் அரேபியர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள்.
யுத்தம் இஸ்ரேலுக்குச் சாதகமாக மாறிவிட்டதில், அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து அங்கே வசிப்பதில், தங்களுக்கு மிகுந்த சிரமம் இருக்கும் என்று கருதினார்கள்.
சுமார் மூன்றரை லட்சம் பேர் அகதிகளாகப் புறப்பட்டு, ஜோர்டன் நதியைக் கடந்து ஜோர்டன் நாட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள்.
இதன்மூலம் ஜோர்டனுக்கு அகதிச் சுமையும் அதிகமானது.
அதிலும் தர்மசங்கடமான நிலைமை வேறு.
மேற்குக்கரையிலிருந்து இப்போது வரும் மக்களை எந்த தேசத்தவர்கள் என்று சொல்வது?
முந்தைய தினம் வரை அவர்களும் ஜோர்டன் குடிமக்கள்தான்.
இந்த நிமிஷம் மேற்குக்கரை, இஸ்ரேல் வசமானதால் அவர்கள் அந்நிய நாட்டு அகதிகளா, அல்லது சொந்த நாட்டு அகதிகளா?
அரசுக்கே இந்தக் குழப்பம் என்றால், அந்த மேற்குக் கரை மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அகண்ட பாலஸ்தீனின் ஆதிகுடிகள் அவர்கள். அவர்கள்தான் அப்போது அகதிகளாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.
ஆள வந்த இஸ்ரேலியர்களும் சரி, ஆண்டு முடித்த ஜோர்டானியர்களும் சரி, மேற்குக்கரையின்மீது சொந்தம் கொண்டாட எந்த நியாயமும் இல்லாதவர்கள்.
இது ஏன் உலகின் பார்வையில் சரியாக விழவே மாட்டேனென்கிறது? தங்களுக்காக ஏன் யாருமே குரல் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்?
பாலஸ்தீனிய அரேபியர்களின் அந்த மௌன ஓலம் பாலைவனக் காற்றில் மிதந்து அலைந்துகொண்டிருந்தது. கேட்கத்தான் நாதி இல்லை.
இந்த யுத்தத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், இழப்புகள் தொடர்பானது.
மூன்று தேசங்கள் இணைந்து இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டுடன் யுத்தம் செய்திருக்கின்றன. ஆனால் போரில் ஏற்பட்ட இழப்புகள் அப்படியே தலைகீழ்!
எகிப்துடனான யுத்தத்தில் இஸ்ரேல் இழந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை வெறும் முந்நூற்று முப்பத்தெட்டு!
ஆனால் எகிப்து தரப்பில் மொத்தம் பதினைந்தாயிரம் வீரர்கள் உயிரிழந்திருந்தார்கள்.
ஜோர்டன் தரப்பில் எண்ணூறு பேர் இறந்தார்கள். ஜோர்டன் படையுடன் போரிட்ட இஸ்ரேல் ராணுவத்தரப்பில் இழப்பு எண்ணிக்கை முந்நூறுதான்.
அதேபோல சிரியாவின் கோலன் குன்றுகளில் நடந்த யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பில் மொத்த இழப்பே 141 பேர்தான். ஆனால் ஐந்நூறு சிரிய வீரர்கள் அந்த யுத்தத்தில் இறந்ததாக இஸ்ரேலியத் தரப்பு கணக்குச் சொன்னது. (இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சிரிய ராணுவம் சரியான தகவல் தராத காரணத்தால் இஸ்ரேல் சொல்லும் எண்ணிக்கையை மட்டுமே நாம் ஏற்கவேண்டியிருக்கிறது!)
இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அரேபியர்கள் யோசித்துப் பார்த்தார்கள்.
உண்மையில், அதிக ஆட்சேதம் இல்லாமல் யுத்தம் செய்வது எப்படி என்கிற கலையை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் தனிப்படைப் பிரிவு ஒன்று இஸ்ரேல் ராணுவத்துக்குக் கற்றுக்கொடுத்தது என்று ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடந்த இன்னொரு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின்போது தெரியவந்தது!
ஆனால் இந்தக் குறிப்பிட்ட யுத்தத்தில் அமெரிக்கா மட்டுமல்லாமல் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு மறைமுகமாக நிறைய உதவிகள் செய்து, கொம்புசீவி விட்டதாக அரபு மீடியாக்கள் அத்தனையும் அலறின.
உதாரணமாக, எதிரிப்படைகளின் இருப்பு குறித்த தகவல்களையும் அவர்கள் எங்கே, எந்த திசையில் நகர்கிறார்கள் என்பது போன்ற விவரங்களையும் அமெரிக்கா தன் உளவு சாட்டிலைட்டுகள் மூலம் கண்காணித்து, உடனுக்குடன் இஸ்ரேலுக்குத் தகவல் தெரிவித்து வந்தது என்று கெய்ரோ வானொலி, மணிக்கொருதரம் சொல்லிவந்தது.
இதே தகவலை அல் அஹ்ரம் என்கிற எகிப்து நாளிதழும் உறுதிப்படுத்திக்கொண்டே இருந்தது.
சிரியா மற்றும் ஜோர்டன் ஊடகங்கள், பிரிட்டன் அளித்த பொருளுதவிகள், ஆயுத உதவிகள் பற்றி நிமிஷத்துக்கு நிமிஷம் அறிக்கை வாசித்துக்கொண்டே இருந்திருக்கின்றன.
காரணம், இதையெல்லாம் கேட்டாவது சோவியத் யூனியன் களத்தில் வந்து குதிக்காதா என்கிற எதிர்பார்ப்புதான்.
ஆனால் சோவியத் யூனியன் அப்படிச் செய்யாததற்குக் காரணம், உள்ளூர் யுத்தம் ஓன்று இன்னொரு உலக யுத்தமாகி விடக்கூடாதே என்பதுதான்.
அவர்களால் முடிந்தவரை எகிப்து ராணுவத்துக்கு விமானப்படை உதவிகளை ஏற்கெனவே அளித்திருந்தார்கள். வேறென்ன செய்யமுடியும்?
அன்றைய தேதியில் உளவு பார்க்கிற விஷத்தில் அமெரிக்க சாட்டிலைட்டுகள் அளவுக்கு, சோவியத் சாட்டிலைட்டுகள் அத்தனை சிறப்பானதில்லை.
தவிர, அரேபியப் படைகள்தான் ரகசியமாகத் திட்டம் தீட்டி படைகளை நகர்த்திக்கொண்டிருந்தனவே தவிர, இஸ்ரேலிய ராணுவம், எந்த ரகசியமும் இல்லாமல் மிகவும் வெளிப்படையாகவேதான் தனது படைகளை நகர்த்திச் சென்றது.
அவர்களே தினசரி போட்டோ பிடித்துப் பத்திரிகைகளில் வெளியிட்டுக்கொண்டும் இருந்தார்கள். எந்தப் படை எங்கே இருக்கிறது; எங்கே போகப்போகிறது என்று பத்தி பத்தியாக எழுதிக்கொண்டும் இருந்தார்கள்.
ஒரு தேர்ந்த ராணுவத்துக்குரிய எல்லா லட்சணங்களையும் பெற்றவர்களாக அவர்கள் இருந்ததை அரபு உலகம் கவனித்தது. இது எப்படி சாத்தியமானது?
வெறும் 19 வயதே ஆன இஸ்ரேல். எந்தவித உள்கட்டுமானமும் இன்னும் செய்துமுடிக்கப்படாத தேசம் அது. தேசம் என்று பிறந்த நாளாக சிக்கல்களை மட்டுமே எதிர்கொண்டுவரும் இஸ்ரேல். ஆனாலும் எப்படி முடிகிறது?
பேசலாம், அமெரிக்க உதவி, பிரிட்டன் உதவி என்று என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அடிப்படையில் இஸ்ரேலியர்களுக்கு வெற்றியை மட்டுமே தேடித்தரும் காரணி எதுவாக இருக்கும்?
இதுதான் அரேபியர்களுக்குப் புரியவில்லை. அவர்களுக்கு அது புரியாததுதான் இஸ்ரேலின் பலமாக அப்போதும் இருந்தது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 ஜுலை, 2005
-----------------------------------------------------
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)
(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)
(27-28. ) ( 29-30.. )
( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)
(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)
(55-56.) (57-58.) .(59-60.)
(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)
( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).
(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)
(97-98). (99.100.)
No comments:
Post a Comment