Thursday, March 19, 2009

53.54 பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம்.பகுதி 53-54.

53] பிரிட்டனின் திட்டம்.
நிலமெல்லாம். ரத்தம் - பா. ராகவன்.

பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள்.

இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம்.

இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட்டன் யோசித்துக்கொண்டிருந்தது.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். இவர்கள் அத்தனைபேரும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து பாலஸ்தீன் வந்து சேர்ந்தவர்கள்.

அவர்களது மூதாதையர்களுக்கு பாலஸ்தீன் சொந்த ஊராக இருக்கலாம். அவர்களுக்குக் கண்டிப்பாக அது புதிய தேசம். அதாவது சொந்த தேசமே என்றாலும் வந்தேறிகள்.

அவர்களைத் தவிர உள்ளூர் யூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியாக சுமார் இருபதாயிரம் பேர் இருந்தால் அதிகம்.

ஆனால் அங்கே இருந்த அரேபியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம். குறைந்தது நாலரை மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரேபியர்கள் அப்போது அங்கே இருந்தார்கள்.

ஆகவே, அநியாயமாகவே நிலப்பரப்பைப் பிரிப்பதென்றாலும் அரேபியர்களுக்குச் சற்றுக் கூடுதலான நிலம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.

அப்படிச் செய்வதென்றால் இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்க நினைப்பதன் அடிப்படைக் காரணமே தவிடுபொடியாகிவிடும்.

இது முதல் பிரச்னை.

இரண்டாவது பிரச்னை ஜெருசலேம் தொடர்பானது. பாலஸ்தீனின் மிக முக்கியமான நகரம்.

முஸ்லிம்கள், யூதர்கள் என்று இருதரப்பினருக்குமே அது ஒரு புனித நகரம். இந்த இரு தரப்பினர் மட்டுமல்லாமல் பாலஸ்தீனின் அப்போதைய மிகச் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்களுக்கும் அது புனிதத்தலம். ஒட்டுமொத்த பாலஸ்தீனில் யார் எத்தனைபேர் வாழ்கிறார்கள் என்று கணக்கெடுக்கும்போதே ஜெருசலேத்தில் எத்தனைபேர் என்று உடன் சேர்த்துப் பார்ப்பதுதான் வழக்கம்.

பாலஸ்தீனின் மற்ற பகுதிகளைப் பிரிப்பதில் ஏதாவது குளறுபடி நேர்ந்தால்கூடப் பின்னால் சரிசெய்துகொண்டுவிட முடியும்.

ஆனால், ஜெருசலேத்தைப் பிரிப்பதில் ஒரு சிறு பிரச்னை வந்தாலும் மூன்று மிகப்பெரிய சமயத்தவரும் பிரிட்டனை துவம்சம் செய்துவிடும் அபாயம் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் உணர்ந்தார்.

ஆகவே ஒரு சிறு சிக்கல் கூட வராமல் விஷயத்தை முடிக்கவேண்டும் என்பதால்தான் இஸ்ரேல் விஷயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிக்காமல் முதலில் இந்தியப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லிவிட்டு, அடுத்தபடியாக இஸ்ரேலுக்கு வரலாம் என்று நினைத்தது பிரிட்டன்.

இவற்றையெல்லாம் தாண்டி பிரிட்டனுக்கு இன்னொரு hidden agenda இருக்கவே செய்தது.

இரண்டு தரப்பினருக்கும் அதிருப்தி ஏற்படாமல் தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு தேசத்துக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டு பிரச்னையைத் தீர்ப்பது என்பது மேல்பார்வைக்குத் தெரிந்த செயல்திட்டம்.

பிரிட்டனின் உண்மையான திட்டம், ஓரளவுக்காவது பாலஸ்தீனை முழுமையாக யூதர்களின் தேசமாக்கிவிடுவதுதான்.

அதாவது பெரும்பான்மை நிலப்பரப்பு யூதர்களுடையதாக இருக்க வேண்டும்.

அப்படியென்றால் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். யூதர்களின் வசிப்பிடம் இன்னும் பரவலாக, எல்லா சந்துபொந்துகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு எல்லைக்கோடு என்று கிழிக்கும்போது அதிக இடத்தை யூதர்கள் பெறும்படி செய்யலாம்.

ஆனால் யதார்த்தம் வேறு விதமாகத்தான் இருந்தது.

பாலஸ்தீன் முழுவதும் அரேபியர்களே நிறைந்திருந்தார்கள். நிலங்களை இழந்த அரேபியர்கள் கூட, வேறிடம் தேடிச்செல்லாமல் பாலைவனங்களில் கூடாரம் அடித்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

பாறைகள் மிக்க மலைப்பகுதிகளிலும் அவர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஜோர்டன் நதியின் மேற்குக் கரையில் ஏராளமாக வசித்தார்கள். கிழக்கு கடற்கரைப் பகுதியான காஸா உள்ளிட்ட எல்லையோர நகரங்களிலும் அவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஒரு வரியில் சொல்லுவதென்றால், எல்லைப்புறங்கள் முழுவதிலும் அரேபியர்கள் நாலா திசைகளிலும் இருந்தார்கள். நாட்டின் நடுப்பகுதிகளிலும் அவர்கள் பரவலாக வசித்துவந்தார்கள். மிகச் சில இடங்களில் மட்டுமே யூதக்குடியிருப்புகள் இருந்தன.

ஒரு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு இது மிகவும் சிக்கல்தரக்கூடிய விஷயம்.

எங்கே போடுவது எல்லைக் கோட்டை?

பாலஸ்தீனுக்கு நடுவே ஒரு வட்டம் போட்டா இஸ்ரேல் என்று சொல்லமுடியும்?

அப்படியென்றால் இஸ்ரேலின் நான்குபுறமும் பாலஸ்தீன் இருக்கும். பாலஸ்தீனின் கிழக்கு எல்லையில் வசிப்பவர்கள், மேற்குப் பகுதி நகர் ஒன்றுக்குப் போவதென்றால் விசா எடுத்துக்கொண்டு போகவேண்டி வரும். இதெல்லாம் மிகப்பெரிய சிக்கல்கள்.

நமக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தேசத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்தார்கள்.

ராட்க்ளிஃப் என்கிற பிரிட்டிஷ் சர்வேயர் ஒருவர் வரைபடத்தை வைத்துக்கொண்டு அதில் கோடு கிழித்தார்.

மேற்கே ஒரு பரந்த நிலப்பரப்பு. கிழக்கே இந்தியாவின் ஜாடையில் பிறந்த இன்னொரு குழந்தை மாதிரி இன்னொரு சிறு நிலப்பரப்பு. மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று அடையாளம் கூறப்பட்டது.
எத்தனை சிக்கல்கள் வந்துவிட்டன!

ஆட்சி நிர்வாகம் முழுவதும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து நடைபெறும். எதற்குமே சம்பந்தமில்லாமல் இடையில் இந்தியாவின் இருபெரும் எல்லைகள் தாண்டி கிழக்கு பாகிஸ்தான் அம்போவென்று தனியே கிடக்கும்.

இதனால்தான் அம்மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தார்கள். அரசுக்கு எதிராகக் கலவரங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முக்திபாஹினி என்கிற தனியார் ராணுவம் ஒன்றையே அமைத்து சொந்த தேச ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டார்கள்.

அதன்பிறகு 1971-ல் யுத்தம், பங்களாதேஷ் பிறப்பு என்று ஒருவாறு பிரச்னை தீரும்வரை அங்கே சிக்கல், சிக்கல் மட்டும்தான்.

இந்த பாகிஸ்தான் பிரிவினை விவகாரம், அங்குள்ள முஸ்லிம்களுக்கு எத்தனை சிக்கல் தரக்கூடியது என்பதை அவர்கள் உணர்வதற்குச் சில காலம் ஆனது உண்மை.

ஆனால் பிரித்துக்கொடுத்த பிரிட்டனுக்கு அன்றே புரிந்துவிட்டது.

இஸ்ரேல் - பாலஸ்தீன் அளவுக்கெல்லாம் மிகப்பெரிய பிரச்னைகள் இல்லாத தேசத்திலேயே இத்தனை சிக்கல் என்றால், பாலஸ்தீனைப் பிரிக்கிற விஷயத்தில் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கவே வேண்டாம்.

பிரிட்டனின் மிகப்பெரிய சிறப்பு அதுதான். அவர்களால் நிறைய பிரச்னைகளை உருவாக்க முடியும். பிரச்னை வரும் என்று தெரிந்தே செய்வார்கள். சிறு தேசங்களில் பிரச்னை இருந்தால்தான் வளர்ந்த நாடுகளின் பிழைப்பு நடக்கும் என்பது ஓர் அரசியல் சித்தாந்தம்.

ஆனால் பாலஸ்தீன் விஷயத்தில் பிரிட்டனின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. இஸ்ரேலை உருவாக்கவேண்டும். அவ்வளவுதான்.

பாலஸ்தீன் என்கிற நிலப்பரப்பின் பெரும்பகுதியை அந்தப் புதிய தேசத்துடன் இணைக்கவேண்டும்.

கடமைக்காக, முஸ்லிம்களுக்கென்றும் கொஞ்சம் நிலம் ஒதுக்கியாக வேண்டும். அப்படி ஒதுக்கும் நிலம் அதிகமாக இருந்துவிடக்கூடாது!

இந்தப் பாசம் யூதர்களுக்குப் புரிந்ததைக் காட்டிலும் முஸ்லிம்களுக்கு மிக நன்றாகப் புரிந்தது.

எப்படியிருந்தாலும் இனி தாங்கள் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பயமும் பதற்றமும் கவலையும் அவர்களைப் பீடித்தன. யார் தங்களுக்கு உதவுவார்கள் என்று உலகெங்கும் தேட ஆரம்பித்தார்கள்.

துரதிருஷ்டவசமாக அன்றைய தேதியில் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்ய யாருமே தயாராக இல்லை.

அவர்கள் சார்பில் வெறுமனே குரல் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை.

காரணம், உலகப்போரில் அவர்கள் ஹிட்லரை ஆதரித்தவர்கள் என்பதுதான்.

ஓர் அழிவு சக்திக்குத் துணைபோனவர்கள் என்கிற அழிக்கமுடியாத கறை அன்று முஸ்லிம்களின் மீது படிந்திருந்தது.

உண்மையில் அழிவுக்குத் துணைபோவதா அவர்களின் எண்ணமாக இருந்தது?

மிகவும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய விஷயம்.

உயிர்போகிற கடைசி வினாடியில் தப்பிக்க ஒரு சிறு சந்து கிடைக்கும் என்று தோன்றினால் நம்மில் எத்தனைபேர் அதைப் பயன்படுத்த விரும்பாமல் இருப்போம்?

அன்றைய நிலைமையில் பாலஸ்தீனில் யூதர்களின் ஊடுருவலைத் தடுக்கவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அனைத்து மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது யூதர்களைக் கொண்டுபோய் பாலஸ்தீனில் திணித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது ஹிட்லர் ஒருவர்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தவர். அந்த ஒரு காரணத்தால்தான் முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.

இதை நியாயப்படுத்த முடியாது; நியாயப்படுத்தவும் கூடாது.

அதே சமயம், அத்தனை அர்த்தம், அனர்த்தங்களுடனும் இதனைப் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

கண்ணெதிரே சொந்த தேசம் களவாடப்படுகிறது என்பது தெரியும்போது ஏதாவது செய்து காப்பாற்றவேண்டும் என்று விரும்பினார்கள்.

விரும்பியதில் தவறில்லை. ஆனால் தேர்ந்தெடுத்த வழிதான் தவறாகப்போய்விட்டது.

மிகவும் யோசித்து, திட்டமிட்டுத்தான் பிரிட்டன் பாலஸ்தீனைப் பிரிக்க திட்டம் தீட்டியது.

திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் தேசத்தின் நடுப்பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களை, குறிப்பாக கிராமப்பகுதி முஸ்லிம்களை மேற்கு எல்லைக்கு விரட்டுவதற்கான ஏற்பாடுகள் மறுபுறம் மிகத்தீவிரமாக நடக்க ஆரம்பித்தன.

யூத நிலவங்கிகளுக்காக மிரட்டல் மூலம் நிலங்களை அபகரித்துக்கொடுத்த முன்னாள் குண்டர்படைகளின் வம்சாவழிகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தார்கள்.

அவர்கள், ஆயுதங்களுடன் முஸ்லிம் கிராமங்களுக்குள் நுழைந்து, இரவு வேளைகளில் வீடுகளுக்குத் தீவைத்து மக்களை வெளியேற்ற ஆரம்பித்தார்கள்.

அப்படி அலறி வெளியே ஓடிவரும் முஸ்லிம்களைக் கொல்லாமல், வெறுமனே துரத்திக்கொண்டே போய் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை வரை சென்று விட்டுவிட்டு வந்தார்கள்.

நல்லவேளை, இந்தச் செயல்கள் அதிகமாக நடைபெறவில்லை. சில ஆயிரம் பேரை மட்டும்தான் அவர்களால் இப்படித் துரத்த முடிந்தது. அதற்குள் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தாற்காலிக ஆயுதப்படை வீரர்கள் முளைத்து தத்தம் கிராமங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் இதெல்லாமே கொஞ்சநாள்தான். சட்டப்படி என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துமுடித்துவிட்டு, அமைதியாக பிரிட்டன் தன் தீர்மானத்தை அறிவித்தபோது, முஸ்லிம்கள் இறுதியாக நொறுங்கித் தூள்தூளாகிப் போனார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29 மே, 200554]

54. யூதர்களின் நம்பிக்கை துரோகம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 55

பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி, 1947-ம் வருடம். பிரிட்டன் அரசு ஒரு முடிவெடுத்தது.

1917-ம் வருடத்திலிருந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீன் விஷயத்தில் உருப்படியான ஒரு தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்தும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு கமிட்டியிடம் அன்றைய தினம் ஒப்படைத்துவிட்டார்கள்.

என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும், ஏன் செய்யவேண்டும் என்பதெல்லாம் ஏற்கெனவே பிரிட்டன் தீர்மானித்துவிட்ட விஷயம்தான்.

ஆனால் ஒரு நடுநிலை அமைப்பின் மூலம் அவற்றைச் செயல்படுத்துவது என்பது சற்றே பாதுகாப்பானதொரு ஏற்பாடு. இதை மரபு என்றும் சொல்லலாம். ஜாக்கிரதை உணர்வு என்றும் சொல்லலாம்.

எப்படியாயினும் பாலஸ்தீனைப் பிரிப்பது என்பது முடிவாகிவிட்ட விஷயம்.

அதை பிரிட்டன் செய்தால் என்ன, பிரிட்டன் சொல்வதைக் கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கமிட்டி செய்தால் என்ன? விஷயம் அதுவல்ல.

ஒரு தேசம் என்று உருவாக்குவதற்குப் போதுமான அளவுக்கு அங்கே யூதர்கள் இருக்கிறார்களா என்கிற கேள்விதான் முதலில் வரும். ஆகவே அது சரியாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக்கொண்டார்கள். எங்கிருந்து யார் வந்தாலும் இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக யூதர்களை இழுத்து இழுத்து உள்ளே போட்டுக்கொண்டிருந்தார்கள். போதுமான அளவு யூதர்கள் தேறிவிட்டார்கள் என்பது தெரிந்ததும் ஐ.நா. கமிட்டி தனது அறிவிப்பை வெளியிட்டது.

1. பாலஸ்தீன் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று யூதர்களின் தேசம். அதன் பெயர் இஸ்ரேல். இன்னொன்று அரேபியர்களின் பூர்வீக தேசம். அது பாலஸ்தீன் என்றே வழங்கப்படும்.

2. இப்படிப் பிரிக்கப்படும் இரண்டு நிலப்பரப்பிலும் இருசாராரும் வசிப்பார்கள். யூதர்களின் தேசமாக உருவாக்கப்படும் இஸ்ரேலில், மொத்தம் 4,07,000 அரேபியர்கள் வசிப்பார்கள். (மொத்த யூதர்களின் எண்ணிக்கை 4,98,000.) அதே மாதிரி அரேபியர்களின் பாலஸ்தீனில் 10,000 யூதர்கள் வசிப்பார்கள். (இங்கே மொத்த அரேபியர்களின் எண்ணிக்கை 7,25,000.) ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்காக மட்டுமல்லாமல், புவியியல் ரீதியிலும் இந்த ஏற்பாடே சரியாக வரும்.

3. ஜெருசலேத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக பெத்லஹெம், பெயித் ஜல்லா போன்ற இடங்களிலும் பெரும்பாலும் அரேபிய கிறிஸ்துவர்கள் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனபோதிலும் அங்கே 1,05,000 அரேபிய முஸ்லிம்களும் ஒரு லட்சம் யூதர்களும் கூட வசிப்பார்கள். ஆனால் இந்தப் பகுதி இஸ்ரேலின் வசமோ, பாலஸ்தீனின் வசமோ தரப்படமாட்டாது. பிரச்னைக்குரிய இடம் என்பதால் இப்பகுதியின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுவதுமாக ஐக்கிய நாடுகள் சபையின் வசமே இருக்கும்.

4. நெகவ் பாலைவனப்பகுதி, யூத தேசத்தின் வசத்தில் இருக்கும்.

5. கலிலீ மலைப்பகுதியின் மேற்குப் பகுதி முழுவதும் பயிரிடுவதற்கு ஏற்ற பகுதிகளாகும். இப்பகுதி அரேபிய தேசத்தின் வசம் இருக்கும்.

இந்த ஐந்து தீர்மானங்களை மிக கவனமாகக் குறித்துக்கொள்ளுங்கள்.

பாலஸ்தீனைப் பிரிக்கும் விஷயத்தில் முதல் முதலாக அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக வெளியிடப்பட்ட திட்ட வரைவு இது.

இந்த அறிவிப்பு வெளியான மறுகணமே பாலஸ்தீன் அரேபியர்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்துவிட்டார்கள். நாட்டுத் துப்பாக்கிகள் வெடித்தன.
கண்ணிவெடிகள் பூமியைப் பிளந்தன. கத்திகள் வானில் உயர்ந்தன. புழுதி வாரிக் கொட்ட, கூட்டம் கூட்டமாகத் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். ஐயோ, ஐயோ என்று கதறினார்கள். தேசம் துண்டாடப்படுகிறதே என்று அலறினார்கள். அநியாயமாகப் பாலஸ்தீனை இப்படி யாரோ பங்கு போடுகிறார்களே என்று அழுது புலம்பினார்கள். யார் கேட்பது?

அங்கே யூதர்களின் முகத்தில் நிம்மதிப் புன்னகை முழுநிலவு போலத் ததும்பியது. கண்ணை மூடிக் கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். பிரிட்டன் இருந்த திசை நோக்கி வணக்கம் தெரிவித்தார்கள்.

ஐ.நா. சபையை ஆராதனை செய்தார்கள். இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பூக்களால் அலங்கரித்து, வீடுகளில் பண்டிகை அறிவித்தார்கள்.

உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தங்கள் உடன்பிறவாத யூத சகோதரர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். கண்ணீர் மல்க கூடிக் கூடிப் பேசிக் களித்தார்கள்.

செப்டம்பர் மாதம் கூடிய அரேபியர்களின் அரசியல் உயர்மட்டக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தீர்மானத்தை முற்றிலுமாக நிராகரித்தது. தேசம் துண்டாடப்படுவதில் தங்களுக்குத் துளிகூடச் சம்மதமில்லை என்று தெரிவித்தார்கள்.

இதன் பின்விளைவுகள் என்னமாதிரி இருக்கும் என்று தங்களால் யூகிக்கக்கூட முடியவில்லை என்று மறைமுகமாக எச்சரித்தார்கள்.

அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஒரு முடிவுடன்தான் இருந்தார்கள். 29 நவம்பர், 1947 அன்று ஐ.நாவின் பொதுக்குழு கூடியது. சிறப்பு கமிட்டியின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முப்பத்து மூன்று ஆதரவு ஓட்டுகள். போதாது?

ஆறு அண்டை அரேபிய தேசங்களும் க்யூபா, ஆப்கானிஸ்தான், ஈரான், க்ரீஸ், துருக்கி போன்ற தேசங்களும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

அப்போதுதான் சுதந்திரம் பெற்ற தேசங்களான இந்தியாவும் பாகிஸ்தானும் கூட பாலஸ்தீன் துண்டாடப்படுவதை எதிர்த்தன.

ஆனால் ஆதரித்த தேசங்கள் எவை என்று பார்க்கவேண்டும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சோவியத் யூனியன், பிரான்ஸ், நெதர்லாண்ட், நியூசிலாந்து, ஸ்வீடன் மற்றும் போலந்து.

இவற்றுள் அன்றைய சூழ்நிலையில் நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து தவிர மற்ற அனைத்து தேசங்களுமே மத்தியக்கிழக்கின் எண்ணெய் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தவை.

எண்ணெயே இல்லாவிட்டாலும் இந்த தேசங்களுக்கு மத்தியக் கிழக்கில் ஏதோ ஒரு விதத்தில் தமது ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகக் கருதினார்கள்.

மேலும் அமெரிக்கா அந்த அணியில் இருந்தது. பிரான்ஸ் இருந்தது. மேற்கின் தவிர்க்கமுடியாத சக்திகள் என்று வருணிக்கப்பட்ட தேசங்கள் அவை. அத்தகைய தேசங்கள் நிற்கும் அணியில் நிற்பது தங்களுக்கு எந்த வகையிலாவது லாபம் தரலாம் என்று இவை கருதியிருக்கலாம்.

மற்றபடி பாலஸ்தீனைப் பிரிப்பதில் நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வேறு என்ன அக்கறை இருந்துவிட முடியும்?

இத்தனைக்கும் ஐரோப்பிய தேசங்களில் இருந்த அளவுக்கெல்லாம் அங்கே யூதர்கள் கூட அவ்வளவாகக் கிடையாது.

இது இவ்வாறு இருக்க, யூத தேசம் உருவாவதற்கு ஆதரவாக ஓட்டளித்த தேசங்களுக்கெல்லாம் பாலஸ்தீனிய யூதர்கள் மறக்காமல் நன்றி சொல்லிக் கடிதம் எழுதினார்கள். முடிந்த இடங்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளையே நேரில் அனுப்பி நன்றி சொன்னார்கள்.

இஸ்ரேல் உருவான பிறகு, அந்த தேசங்களுடன் நிரந்தரமாக அரசியல் உறவுகொள்ளத் தாங்கள் விரும்புவதாக முன்னதாகவே சொல்லியனுப்பினார்கள். பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்ளவும் ஆதரவுக்கரம் கொடுக்கவும் எப்போதும் தாங்கள் தயார் என்று தெரிவித்தார்கள்.

அரேபியர்களுக்கு அடி வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது. யாருடைய பூமியை யார் பங்கிட்டு, யாருக்குக் கொடுப்பது?

அவர்களது அலறலையோ, கதறலையோ கேட்பதற்கு ஒரு நாதி இல்லாமல் போய்விட்டதுதான் துரதிருஷ்டம். எதிர்த்து வாக்களித்த பிற அரேபிய தேசங்கள் கூட மல்லுக்கட்டி நிற்கத் தயங்கின.

காரணம், அந்த நிமிடம் வரை பாலஸ்தீன் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தேசம். ஒரு சௌகரியத்துக்காகத்தான் ஐ.நா.வின் சிறப்பு கமிட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்து, பிரிக்கும் விஷயத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அப்படியிருக்க, பிரிட்டன், தனக்குச் சொந்தமான ஒரு காலனியை என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பிரிக்கலாம்; யார் கேட்பது?

தார்மீக நியாயங்களும் சரித்திர நியாயங்களும் பத்திரமாகச் சுருட்டிப் பரண்மீது போடப்பட்டன. அத்தனை வருஷம் கஷ்டப்பட்ட யூதர்கள் இனியேனும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதுதான் அந்தக் காலகட்டத்தின் ஒரே நியாயமாக இருந்தது.

தவிரவும் ஐ.நாவின் சிறப்பு கமிட்டி வரைந்தளித்த திட்டத்தின்படி பாலஸ்தீனைப் பிரிப்பதால் அரேபியர்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்துவிடாது; அவர்களுக்குப் போதுமான நிலப்பரப்பு இருக்கவே செய்யும் என்றும் சொல்லப்பட்டது.

இஸ்ரேலை உருவாக்கியபின் தேவைப்பட்டால் எல்லை விஷயத்தில் கொஞ்சம் மறு ஆய்வு செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்களே தவிர, தேசத்தைப் பிரிக்கும் விஷயத்தில் மிகவும் தீர்மானமாகவே இருந்தார்கள்.

நடுநிலைமையோடு பார்ப்பதென்றால், ஐ.நா. அன்று எடுத்த முடிவு சரியானதே. எப்படி அரேபியர்களுக்கு அது தாய்மண்ணோ, அதேபோலத்தான் யூதர்களுக்கும். இடையில் அவர்கள் மண்ணை விட்டு பல ஆயிரம் வருடங்களாக எங்கோ போய்விட்டவர்கள்தானே என்கிற ஒரு குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஓட ஓட விரட்டப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்த இனம் அது. ஒதுங்க ஒரு நிழலில்லாமல் வாழ்நாளெல்லாம் சுற்றிக்கொண்டே இருந்தவர்கள்.

என்னவோ செய்து, எப்படியெப்படியோ யார் யாரையோ பிடித்து தங்கள் கனவை நனவாக்கிக்கொள்ளவிருந்தார்கள். நல்லதுதான். அவர்களும் நன்றாக இருக்கட்டும்.

பிரச்னை அதுவே அல்ல! ஏன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரியவில்லையா? இதே இனப்பிரச்னைதானே காரணம்? பிரிவினை சமயத்தில் கலவரங்கள் இங்கும் நடக்கத்தான் செய்தன. ஏராளமான உயிர்ப்பலிக்குப் பிறகுதான் அமைதி திரும்பியது. இதெல்லாம் எங்குதான் இல்லை? எந்தெந்த தேசம் இரண்டாகப் பிரிகிறதோ, அங்கெல்லாம் ரத்தம் இருக்கத்தான் செய்யும். இது என்ன புதுசு?

கேள்வி வரலாம். நியாயம்தான். விஷயம், அதுவும் அல்ல!

ஐ.நா.வின் சிறப்பு கமிட்டி வகுத்தளித்தபடி பிரிக்கப்பட்ட இரு தேசங்களும் முட்டிக்கொள்ளாமல் ஆண்டிருக்குமானால் எந்தப் பிரச்னையுமே இருந்திருக்காது என்பது உண்மைதான். ஆனால் நடந்தது என்ன?

'யூதர்களை நம்பாதீர்கள், அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள்; சதிகாரர்கள்! தங்களுக்கென்று ஒரு தேசம் உருவாகும் வரைதான் அவர்கள் அமைதியுடன் இருப்பார்கள். அப்படியொரு தேசம் உதித்துவிட்டால், மறுகணமே அரேபியர்களின் மீது படையெடுத்து, எங்களின் நிலப்பரப்பை அபகரித்துக்கொண்டுவிடுவார்கள்!'' என்று அன்றைக்குக் கத்திக் கதறித்தீர்த்தார்கள் பாலஸ்தீனிய அரேபிய முஸ்லிம்கள்.

இது வெறும் கற்பனை என்றும் பயத்தில் உளறுகிறார்கள் என்றும் யூதர்கள் சொன்னார்கள்.ஆனால் அதுதானே நடந்தது?

சந்தேகமே இல்லாமல் யூதர்கள் நம்பிக்கை துரோகம் செய்தார்கள்.

தலைமையின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த அரேபியர்களை ஓட ஓட விரட்டி அவர்களின் தேசத்தையும் அபகரித்துக்கொண்டார்கள்.

எந்த அரபு தேசங்கள் ஒன்றுதிரண்டு பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் போரில் நிற்கும் என்று சொல்லப்பட்டதோ, அதே முஸ்லிம் தேசங்களை சூழ்ச்சியில் வளைத்துப் போட்டு, சொந்த சகோதர தேசமான பாலஸ்தீனுக்கு எதிராகவே அவர்களை அணி திரட்டினார்கள். நாய்க்கு எலும்பு வீசுவதுபோல், அபகரித்த நிலத்தில் ஆளாளுக்குக் கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுத்து, அந்த சமயத்துக்குத் திருப்திப்படுத்தினார்கள்.

அப்புறம் அவர்கள் மீதும் படையெடுத்து, கொடுத்த இடங்களைத் திரும்ப அபகரித்தார்கள் யூதர்கள்.

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எந்தச் சக்தி இவர்களை இப்படி ஓயாமல் குயுக்தியாக மட்டும் சிந்திக்கச் செய்கிறது? எது இவர்களுக்கு மட்டும் இடைவிடாமல் வெற்றியை மட்டுமே பெற்றுத்தருகிறது? சரித்திரத்தால் மிகவும் தாக்கப்பட்ட இனம் அது. அந்த வெறுப்பில்தான் சரித்திரத்தைத் திருப்பித் தாக்குகிறார்களா?

அதற்கு அப்பாவி பாலஸ்தீன் அரேபியர்கள்தான் கிடைத்தார்களா? யூதகுலத்தை வேரறுக்க முடிவு செய்த ஜெர்மனியை ஏன் விட்டுவிட்டார்கள்?

ஆயிரக்கணக்கான யூதர்களை எரித்தே கொன்ற சோவியத் யூனியன் மீது ஏன் அவர்களுக்குப் பகையில்லை?

இதர ஐரோப்பிய தேசங்கள் அனைத்தையும் ஏன் மன்னித்தார்கள்?

விட்டுவிட்டு ஓடிப்போன தேசத்துக்குத் திரும்ப வாழவந்தபோதும் இருகரம் நீட்டி அரவணைத்த பழைய சகோதர இனமான அரேபியர்களை மட்டும் ஏன் இப்படி நடத்தினார்கள்?

அதுதான் கதை. அதுதான் சுவாரசியம். அதுதான் சோகத்தின் உச்சமும் கூட.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 2 ஜூன், 2005
********************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: