Tuesday, March 17, 2009

35.36. பாலஸ்தீனிய அரபிகளும் யூதர்களும். நெப்போலியனும் யூதர்களும். பகுதி-35-36.

35] பாலஸ்தீனிய அரபிகளும் யூதர்களும்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 35

கி.பி. 1517-ம் ஆண்டு தொடங்கி 1917, 18-ம் ஆண்டுகள் வரை பாலஸ்தீன் ஒட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ்தான் இருந்தது. அதாவது, நானூறு வருடங்கள். நடுவில் 1831-ம் ஆண்டு தொடங்கி 1840 வரை எகிப்தை ஆண்ட முகம்மது அலி என்கிற சர்வவல்லமை பொருந்திய சக்ரவர்த்தியின் காலத்தில் மட்டும் ஒரேயொருமுறை ஒட்டோமான் அரசிடமிருந்து பிரிந்து எகிப்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது. தமது பேரரசு விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் ஒரு சிறு படையெடுப்பு நிகழ்த்தி, பாலஸ்தீனை எகிப்துடன் இணைத்தார் முகம்மது அலி.

ஐந்தாறு வருடங்கள்தான் என்றாலும், அவரது ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீனில் விவசாயம் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டதாக அநேகமாக எல்லா சரித்திர ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள்.

பாலஸ்தீன் முழுவதிலும் இருந்த தரிசு நிலங்களை அளந்து கணக்கிட்டு, அந்தந்த நிலப்பரப்பின் தன்மைக்கேற்ற பயிர்கள் விதைக்கப்பட்டன.

பெரும்பாலான இடங்களில் விவசாயம் ஒரு அரசுத்துறை நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டு, உழைப்பவர்களுக்கு ஒழுங்கான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. (சில இடங்களில் நிலச்சுவான்தார்களின் அட்டகாசமும் இருந்திருக்கிறது.) சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள் ஒழுங்காக வரி செலுத்திவிட்டால் போதும்.

யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்று பாரபட்சமில்லாமல், பிரச்னையின்றி வாழ்வதற்கு முகம்மது அலி உத்தரவாதம் அளித்திருந்தார்.

இந்த விஷயத்தில் பல ஜமீந்தார்களுக்கு மிகவும் வருத்தம்! பெரிய பெரிய கிராமங்களின் அளவுக்கு நிலம் வைத்திருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்குக் கிடைத்த அதே மரியாதை, ஒரு கர்ச்சிப் அளவு நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் அப்போது கிடைத்தது. சமத்துவம்!

இந்த சமத்துவம், திட்டமிட்டுப் பேணப்படவில்லை. பாலஸ்தீனுக்கு மட்டும் இயல்பாக வாய்த்தது. அடிப்படையில் முகம்மது அலி ஒரு நில உடைமைவாதியாகத்தான் இருந்திருக்கிறார். ஆயினும் விவசாயம் தவிர, கல்வித்துறையிலும் அவரது காலத்தில் கணிசமான வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது.

ஜெருசலேம், காஸா மற்றும் இன்றைய வெஸ்ட் பேங்க் பகுதிகளில் அன்றைக்கு அடிப்படைப் பள்ளிக்கூடங்கள் தொடங்கி, சர்வகலாசாலைகள் வரை ஏராளமாக நிறுவப்பட்டு, பல்வேறு தேசங்களிலிருந்து வல்லுநர்களை வரவழைத்துப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார் மன்னர்.

ஆனால், 1840-ல் துருக்கி சுல்தான் மீண்டும் பாலஸ்தீனைக் கைப்பற்றிவிட்டார்.

பாலஸ்தீனை இழப்பதென்பது அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் அவமானமாகவே சுல்தான்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.

எத்தனையோ யுத்தங்களில் எத்தனையெத்தனையோ இடங்களை வென்றிருக்கிறார்கள், தோற்றும் இருக்கிறார்கள். அதையெல்லாம் மீட்டெடுக்க யாரும் இத்தனை முயற்சி மேற்கொண்டதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை பாலஸ்தீன் கையை விட்டுப் போகும்போதும் சம்பந்தப்பட்ட மன்னர்களால் ஏனோ தாங்கமுடியாமலாகிவிடுகிறது.

இத்தனைக்கும் மத்திய ஆசியாவிலேயே மிகவும் வளம் குன்றிய பகுதி அதுதான். (இன்றைக்கும்!) பாலைவனங்களும் கரடுமுரடான பாறைகளாலான சிறு குன்றுகளும் அங்கே அதிகம். பெரும்பாலான கிராமங்களுக்கு வெளியிலிருந்து யாரும் போகக்கூட முடியாது. பாதைகளே இருக்காது.

பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் பாலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்து வந்த யூதர்கள், அங்கே ஆறு ‘புத்தம்புதிய’ கிராமங்களைக் ‘கண்டு பிடித்திருக்கிறார்கள்’ என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு பாலைநிலப்பகுதியில் தற்செயலாகப் பயணம் மேற்கொண்டவர்கள், தாகத்தில் அலைந்து திரிந்தபோது, புதிதாகச் சில கிராமங்களையும் அங்கு வாழும் மக்களையும் கண்டுபிடித்தார்கள்!

மண்ணின் மைந்தர்களான அவர்கள், அதுநாள் வரை பாலஸ்தீனில் நடைபெற்ற எத்தனையோ அரசியல் குழப்பங்களுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல, தனிக்காட்டில் கூட்டுவாழ்க்கை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள்!

இப்போது தங்களை யார் ஆள்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் அவர்கள் இருந்திருக்கிறார்கள்!

அப்படிப்பட்ட இடம் பாலஸ்தீன்.

ஆனாலும் எந்த மன்னராலும் பாலஸ்தீனை மனத்தளவிலும் விட்டுக்கொடுத்துவிட முடியாது. காரணம், ஜெருசலேம்.

ஒட்டோமான் பேரரசின் கீழ் பாலஸ்தீன் இருந்த காலத்தில் ஏராளமான ஐரோப்பிய யூதர்கள் அங்கே இடம்பெயர்ந்து வந்ததை ஏற்கெனவே பார்த்தோம்.

ஆனால் பாலஸ்தீனில் மீண்டும் யுத்தம், மீண்டும் ஆட்சி மாற்றம் என்று எகிப்து மன்னர் முகம்மது அலியின் படையெடுப்பை ஒட்டி ஏற்பட்ட பதற்றத்தில் பெரும்பாலான யூதர்கள் பாலஸ்தீனை விட்டு வெளியேறி விட்டிருந்தார்கள்.

துருக்கிப் பேரரசின் எல்லைக்குள் பரவலாக வசிக்கத் தலைப்பட்ட யூதர்களுக்கு இம்முறை வாழ்வது கொஞ்சம் பிரச்னையாகத்தான் இருந்தது.

அவர்கள் முதன்முதலில் இடம்பெயர்ந்து வந்தபோது இருந்த அளவுக்கு அரசு அப்போது கருணை மிக்கதாக இல்லை. அரசு என்றால் மன்னர், சுல்தான், திம்மிகள் என்ற அளவில் அவர்களுக்கான உரிமைகள் இருக்கவே செய்தன என்றபோதும், அடக்குமுறை சற்று அதிகமாகவே இருந்ததாக எழுதுகிறார்கள் யூத சரித்திர ஆசிரியர்கள். (இதனை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்களும் ஆமோதிக்கிறார்கள்.)

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரேபியர்களுக்கு யூதர்களை சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட்டது.

அதுவரை யூதர்கள் விஷயத்தில் கூடியவரை சகிப்புத்தன்மையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்துவந்தவர்கள், கி.பி. 1790-ம் ஆண்டு காலகட்டத்திலிருந்து ஏனோ யூதர்களிடமிருந்து பெரிதும் விலகியே இருக்கத் தொடங்கினார்கள்.

இதற்கு பாலஸ்தீன் முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்கள் பின்வருமாறு:

1.அவர்கள் நைச்சியமாக அதிகாரிகளை வளைத்துப்போட்டு எங்கள் நிலங்களை அபகரித்துக்கொள்கிறார்கள்.

2. வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் புரியாத விதத்தில் பத்திரங்களை எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். பணம் கட்ட முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் அந்தப் பத்திரங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, எங்கள் வீடுகளையும் நிலங்களையும் கையகப்படுத்திவிடுகிறார்கள். கூடுதலாக அவகாசம் தருவது என்பதே கிடையாது.

3.அரேபியச் சிறுவர்களையும் சிறுமிகளையும் வீட்டு வேலைகளுக்கு வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் மனத்தில் யூதமதம்தான் உயர்வானது, யூதர்கள்தான் மேலான குடிகள் என்பது போன்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். அரேபியர்கள் அடிமை வாழ்வு வாழவே பிறந்தவர்கள் என்று திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.

4.ஆட்சியாளர்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுவிடுகிறார்கள். வெளிநாட்டு வர்த்தகம் போன்ற லாபம் தரத்தக்க பணிகளில் அரேபியர்கள் நுழைவதை முடிந்தவரை தடுக்கிறார்கள்.
5. தங்கள் தொழிலுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் பெரிதாக வளர்ந்து வரும்போது சூழ்ச்சி செய்து அழிக்கிறார்கள்.


6. யூதக் குழந்தைகளை முஸ்லிம் குழந்தைகளுடன் பழகவிடுவதில்லை.

7. யூத குருமார்கள் ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்களை அறவே மதிப்பதில்லை.

8. முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களிலும் கொண்டாட்டக் காலங்களிலும் அவர்கள் தம் வீடுகளைத் திறப்பதே இல்லை. துக்க தினம்போல அனுஷ்டிக்கிறார்கள்.

9. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இறைத்தூதரான முகம்மது நபியை அவமரியாதையாகப் பேசுகிறார்கள்.

மேற்சொன்ன இந்த ஒன்பது காரணங்களை ஹாசன் தாபித் என்கிற பதினெட்டாம் நூற்றாண்டு சரித்திர ஆசிரியரின் குறிப்புகளிலிருந்து பெறமுடிகிறது. இஸ்தான்புல்லில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் இவர்.

இந்த ஒன்பது காரணங்களைச் சற்று உன்னிப்பாக கவனித்தால் அன்றைய பாலஸ்தீன் அரேபியர்களின் சமூக நிலைமை சற்று புரியும்.

முதல் காரணம் நமக்குத் தெரிவிப்பது, அந்தக் காலத்தில் அரேபிய முஸ்லிம்களுக்கு கிராம, நகர அதிகாரிகளுடன் நெருக்கமோ செல்வாக்கோ இல்லை. அதிகாரிகளும் முஸ்லிம்களே என்றபோதும் சாமானிய மக்களுக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது.

இரண்டாவது காரணம் சொல்லும் செய்தி, யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வந்தார்கள் என்றபோதும் அவர்களுக்குப் பணப்பிரச்னை இல்லை.

வட்டிக்குப் பணம் தரும் அளவுக்கு வசதியாக இருந்திருக்கிறார்கள்.

அரேபியர்கள் உள்ளூர்க்காரர்களே என்றாலும் ஏழைமை மிகுதியாக இருந்திருக்கிறது.

வட்டிக்குப் பணம் பெற்றே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள் என்பது முதல் செய்தி.

இதிலேயே உள்ள இரண்டாவது செய்தி, வட்டிப் பத்திரங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களுக்குப் படிப்பறிவு இல்லை என்பது.

மூன்றாவது காரணமும் அரேபியர்களின் ஏழைமை வாழ்க்கையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

நான்காவது காரணம், அந்தக் காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். வர்த்தக ஒப்பந்தங்கள், லைசென்ஸ்கள் போன்றவை லஞ்சமில்லாமல் சாத்தியமாகவில்லை.

ஐந்தாவது காரணம், முஸ்லிம்களில் சிலர் கல்வி கற்றோராக, வியாபாரத்தில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் யூதர்களுடன் அவர்களால் போட்டியிட முடியாமல் போயிருக்கிறது.

ஆறாவது காரணம் யூதர்கள், குழந்தைகளிடமிருந்தே பிரிவினையை ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற தகவலைச் சொல்லுகிறது. ஆனால் இது விஷயமாக எதிர்த்தரப்பையும் நாம் ஆராய உரிய ஆவணங்கள் ஏதும் இன்று கிடைக்காததால் இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது.

இது போலவே ஏழு, எட்டாவது காரணங்களையும் ஆதாரபூர்வமாக இன்று உறுதிப்படுத்திக்கொள்ள வழியில்லை.

ஒன்பதாவது காரணம் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. முகம்மது நபி வாழ்ந்த காலத்திலிருந்தே யூதர்கள் விடாமல் செய்துவரும் காரியம்தான் அது!

ஆக, எப்படியோ யூதர்களும் முஸ்லிம்களும் தண்டவாளங்கள்போலத் தனித்தனியே பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் தான் என்று மனத்தளவில் இரு தரப்பிலுமே முடிவாகியிருக்கிறது.

ஒத்துப்போகாது என்பதற்கு எந்தக் காரணமுமே முக்கியமில்லை என்கிற அளவுக்கு இரு தரப்பினருக்குமான இறுக்கம் அதிகமாகிக்கொண்டே வந்தது.

இந்தச் சூழலில், முகம்மது அலி கைப்பற்றிய பாலஸ்தீனை, துருக்கி சுல்தான் மீண்டும் வெற்றிகொண்டபிறகு, பாலஸ்தீன் யூதர்களுக்கு அங்கே இருப்பு சார்ந்த சங்கடங்கள் நிறைய தோன்ற ஆரம்பித்தன.

அன்றைய தேதியில் பாலஸ்தீனில் மட்டும் சுமார் பன்னிரண்டாயிரம் யூதர்கள் இருந்தார்கள். (பதினாறாயிரம் பேர் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.)

இந்தப் பன்னிரண்டாயிரம் பேரில் பாதிப்பேருக்கு மேல் சுயமாகத் தொழில் செய்பவர்கள். பாஸ்போர்ட், விசா பிரச்னையெல்லாம் இன்றைக்குப் போல் அத்தனை பெரிதாக இல்லாத காலகட்டமாதலால் வருடத்தில் பாதி நாட்களுக்கும் மேல் அவர்கள் உலகம் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

வர்த்தகக் காரணம் ஒரு பக்கம். ஒவ்வொரு தேசத்திலும் உள்ள யூதர்களைக் கணக்கெடுத்து, அந்தந்த தேசத்தின் அரசியல் நிலவரங்களை அலசி ஆராய்ந்து, உடனடிப் பிரச்னை என்றால் ஒரு தீர்வு, நீண்ட நாள் பிரச்னை என்றால் ஒரு தீர்வு, எதிர்பார்க்கப்படும் பிரச்னை என்றால் அதற்கான மந்திராலோசனை என்று பல்வேறு சமூகத்திட்டங்கள் இல்லாமல் எந்த ஒரு யூதரும் வெளிநாட்டுக்குப் போகமாட்டார்.

ஒரு யூதர் வெளிநாடு கிளம்புகிறார் என்றால் முதலில் பாஸ்போர்ட் அலுவலகம் போகமாட்டார். இன்றைக்கும் தமது மதச்சபை தலைமை குருவைத்தான் முதலில் சந்திக்கச் செல்வார்.

தமக்கு முன்பின் தெரிந்தவரா, தெரியாதவரா என்பது கூட அவர்களுக்கு முக்கியமில்லை. யூதரா? அவ்வளவுதான்.

இப்படி வர்த்தகக் காரணங்களுடன் வெளிநாடுகளுக்குப் புறப்பட்ட பாலஸ்தீன் யூதர்கள்தான், பல்வேறு இடங்களிலிருந்த யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்து சேரவும் வாழத்தொடங்கவும் காரணமாக இருந்தார்கள்.

ஆயிரத்து எண்ணூறுகளின் தொடக்கத்தில் பாலஸ்தீனில் மொத்தமே பதினைந்தாயிரம் யூதர்கள்தான் இருந்தார்கள்.

ஒரு நூறு வருஷத்தில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டது.

அந்த நூறு வருட காலத்தில் பத்துப்பத்து பேராக, நூறு நூறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக யூதர்கள் எங்கெங்கிருந்தோ பாலஸ்தீனுக்கு வந்து சேர்ந்தது தவிர, வேறு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் அம்மண்ணில் நடைபெறவில்லை என்பதைப் பார்க்கவேண்டும்.

பாலஸ்தீன் மண்ணில் கண்ணுக்குத்தெரியாமல் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதை அரேபிய முஸ்லிம்கள் கவனிக்கவேயில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 மார்ச், 2005

36] நெப்போலியனும் யூதர்களும்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 36

இந்தியாவில் உள்ள மணிப்பூர் அல்லது மேகாலயா அளவேயான நிலம்தான் பாலஸ்தீன். சரித்திர காலத்து நிலப்பரப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்வதென்றால்கூட தமிழ்நாட்டு அளவை மிஞ்சும் சாத்தியம் இல்லை.

ஆனால் இந்தச் சிறியதொரு நிலத்தை முன்வைத்து எத்தனை அரசியல்கள்!

சரித்திர காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடைவழியான கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகள், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் எல்லாம் இந்த அரசியல் நம்பமுடியாத வேகம் எடுத்ததைக் குறிப்பிட வேண்டும்.

மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்கள் மூச்சுக்கு முந்நூறு முறை யூதர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசப்பட்ட இடங்களிலெல்லாம் காற்றைப்போல யூதர்களும் பரவியிருந்தார்கள்.

நிலையான இருப்பிடம் என்று ஒரு பிரதேசம் அவர்களுக்கு இல்லை என்றாலும் இருக்கிற இடங்களிலெல்லாம், கிடைக்கிற தொழில்களில் எல்லாம் அவர்கள் ஒட்டிக்கொண்டு ஒரு மாபெரும் புரட்சிக்கும் போராட்டத்துக்கும் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். எல்லாமே மிக மௌனமாக நடந்தது. மிகமிக ரகசியமாக நடந்தது.

வாழ்க்கைப் பிரச்னைகள் அவர்களை ஊரைவிட்டு ஓடச் செய்தாலும் விருப்பம் முழுவதும் பாலஸ்தீனில் மட்டுமே இருந்தது. குறிப்பாக, ஜெருசலேம். அப்போது ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்த ஜெருசலேம்.

ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீனுக்குத் திரும்பி வரவேண்டும், அது தங்களது சொந்த நிலப்பரப்பு என்பதை அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்க வேண்டும், அங்கேயே வாழவேண்டும் என்கிற விருப்பம் ஒரு தீ போல அவர்கள் மனமெங்கும் பரவி தகித்துக்கொண்டிருந்தது.

யுத்தகாலங்களில் அம்போவென்று ஊரைவிட்டுப் புறப்பட்டு ஓடிப்போன குற்ற உணர்ச்சியெல்லாம் அவர்களிடம் இல்லை. அரேபியர்கள்தான் எதிரிகளிடம் நூற்றாண்டு காலமாகப் போராடிக் கொண்டிருந்தார்கள் என்கிற நியாய உணர்ச்சியும் இல்லை.

சுல்தான் சலாவுதீன் காலம் தொட்டு பாலஸ்தீனின் விடுதலைக்காக அரேபிய முஸ்லிம்கள் எத்தனை பாடுபட்டிருக்கிறார்கள், வீடு வாசல்களை இழந்தும் அங்கேயே நின்று போராடியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை.

கடவுளின் பிரதேசமான பாலஸ்தீன், கடவுளின் விருப்பக் குழந்தைகளான யூதர்களுடையது. அவ்வளவுதான். அது மட்டும்தான் அவர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த எண்ணம் மிகவும் வலுப்படத் தொடங்கியதற்கு யூதரல்லாத ஓர் ஐரோப்பியச் சக்ரவர்த்தி ஒரு மறைமுகக் காரணமாக இருந்திருக்கிறார்.

நெப்போலியன். தெரியுமல்லவா? நெப்போலியன் போனபார்ட்.

அந்தக் காலத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மன்னர்கள் யூதர்களை நடத்திய விதத்துக்கும், பிரான்ஸின் நிகரற்ற பேரரசராக விளங்கிய நெப்போலியன் அவர்களை நடத்தியதற்கும் நம்பமுடியாத வித்தியாசங்கள் இருக்கின்றன.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பிரான்ஸில் யூதர்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களுக்குக் கொஞ்சம் துணிச்சல்கூட வந்தது.

இத்தனைக்கும் ஒருமாதிரி வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுதந்திரத்தையும்தான் நெப்போலியன் அவர்களுக்கு வழங்கியிருந்தார்.

ஆண்டாண்டு காலமாக ஐரோப்பாவில் வசித்தாலும் யூதர்கள், அந்த தேசங்களின் வளமைகளிலோ, அரசியல் சாசன உரிமைகளிலோ பெரிய அளவில் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் அவர்களது குடியேற்ற உரிமைகள் காப்பாற்றப்படும். பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள் என்கிற அளவில் அவர்களது இருப்பு அங்கீகரிக்கப்படும். அதற்கு அப்பால் வேறு எதற்கும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது.

பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள். இது போதாது யூதர்களுக்கு? அது மட்டும் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தால் போதும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.

அவர்களே இதனைச் சொல்லிக்கொண்டிருப்பதற்கும் நெப்போலியன் போனபார்ட் போன்ற ஒரு சக்ரவர்த்தி சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன அல்லவா?

என்றைக்கு இருந்தாலும் பாலஸ்தீன்தான் யூதர்களின் சொந்தபூமி, எத்தனை நூற்றாண்டுகள் அவர்கள் அங்கிருந்து வெளியேறி வாழ்ந்தாலும் எப்போது திரும்பினாலும் அங்கே உரிமை உண்டு என்பதை திரும்பத்திரும்ப அழுத்தந்திருத்தமாக நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, நெப்போலியனின் அந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் யூதர்களுக்கு உறுதி செய்தது.

நெப்போலியனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் யூதர்களுக்கு முழு சிவில் உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனாலும் அது குடியேறிகளுக்கான உரிமைகளாக மட்டுமே சொல்லப்பட்டது. வழிபாட்டுச் சுதந்திரம், வர்த்தகச் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம் எல்லாம் இருந்தன. ஒவ்வொன்றும் அவர்கள் பாலஸ்தீன்காரர்கள் என்று சொல்லிச் சொல்லி வழங்கப்பட்டது.

கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நெப்போலியன், ஒரு பாதுகாப்புக் கருதியே யூதர்களைத் தொடர்ந்து பாலஸ்தீன்காரர்கள், வந்தேறிகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லிவந்திருக்கிறார்.

அதாவது பிரெஞ்சுக்காரர்களின் பாதுகாப்பு. யூதர்கள் அங்கே மெஜாரிடிகளாக ஆகி, பெரிய அளவில் பிரச்னைக்கு வித்திட்டுவிடக் கூடாதே என்கிற பாதுகாப்புணர்வு. ஆனால் யூதர்களைப் பொறுத்த அளவில் இதை வேறு விதமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

ஐரோப்பாவில் வேறு எந்தப் பகுதியிலும் வாழக்கூட முடியாத சூழ்நிலை அவர்களுக்கு. எங்கே போனாலும் உதைத்தார்கள். எந்த ஒரு கிறிஸ்துவ தேசத்திலும் அவர்களுக்கு நிம்மதி இல்லாத சூழ்நிலை.

அப்படிப்பட்ட காலகட்டத்தில், வந்தேறிகள் என்று சொல்லியாவது இந்த நெப்போலியன் வாழ வழிகொடுக்கிறாரே என்கிற ஆறுதல் ஒரு பக்கம்; அதிர்ஷ்டப்பரிசு மாதிரி ‘பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள்’ என்று திரும்பத்திரும்பச் சொல்கிறாரே, அந்த இடம் நம்முடையதுதான் என்பதை இதுவே உலக மக்கள் மனத்தில் பதியச் செய்கிறதே என்கிற ரகசிய சந்தோஷம் இன்னொரு புறம்.

கி.பி. 1799-ல் நெப்போலியன் எகிப்திலிருந்து சிரியா நோக்கி படை நகர்த்திச் சென்றுகொண்டிருந்தார். நெப்போலியனின் போர்த்திட்டங்கள், நாடு பிடிக்கும் வேட்கை போன்ற விஷயங்களெல்லாம் மிகப்பெரிய கதை.

பாலஸ்தீன் சரித்திரத்துடன் சம்பந்தப்படாதது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட படையெடுப்பு மட்டும் சம்பந்தம் கொண்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

நெப்போலியனின் அப்போதைய நோக்கம், இன்றைக்கு சிரியாவிலும் அன்றைக்கு பாலஸ்தீனிலும் இருந்த ஏக்ர் நகரக் கோட்டையைப் பிடிப்பது. சரித்திரகாலம் தொட்டு மிக முக்கியமான நகரமாகக் கருதப்பட்டு வந்தது ஏக்ர்.

மாபெரும் வீரர்; மிகப்பெரிய படை வைத்திருப்பவர் என்றாலும் அந்த முற்றுகை நெப்போலியனுக்கு வெற்றி தரவில்லை. காரணம், துருக்கியப் படைகள், அப்போது பிரிட்டிஷ் படைகளின் ஒத்துழைப்புடன் நெப்போலியனை எதிர்த்து நின்றது.

இதுவும் மிக முக்கியமானதொரு நிகழ்வு.

முதல் முறையாக பாலஸ்தீன் பிரச்னையில் அப்போதுதான் பிரிட்டன் தலையிடுகிறது. அதுவரை பிரிட்டன் கவனத்துக்கு உட்பட்ட பிரதேசமாக பாலஸ்தீன் இல்லை.

பிரிட்டனின் ராணி எலிசபெத், ‘கிறிஸ்துவரல்லாத யாரும் பிரிட்டனில் வாழ லாயக்கற்றவர்கள்’ என்று யூதர்களைக் குறிவைத்து அறிவித்திருந்த சமயமும் கூட அது.

ஏக்ர் கோட்டையைப் பிடிக்கும் எண்ணத்துடன் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல் வழியே புறப்பட்டு வந்த நெப்போலியன், அப்போது ரமல்லாவில் தங்கியிருந்தார்.

யாசர் அரஃபாத் தமது இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்த நகரம்.

ரமல்லாவில் சும்மா இருக்கும் நாட்களை வீணாக்க வேண்டாம் என்று அவர் அங்கிருந்த யூதர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறிய அணிவகுப்புடன் கூடிய ‘நீதி கேட்கும் நெடும்பயணத்தை’ மேற்கொண்டார்.

அந்தப் பேரணியின்போது அவர் அறிவித்தார்: “யூதர்களே, எனக்கு உதவுங்கள். துருக்கியப் படையை நான் வெற்றி கொள்ள முடியுமானால் நீங்கள் நிம்மதியாக உங்கள் ஜெருசலேத்துக்குத் திரும்புவதற்கு நான் உதவி செய்கிறேன்’’

இது ஒரு ராஜதந்திர அறிவிப்புத்தான் என்றாலும் யூதர்களுக்குப் பரவசமூட்டப் போதுமான அறிவிப்பாக இருந்தது.

ஏராளமான யூதர்கள் அப்போது நெப்போலியனின் படையில் இணைந்ததாகப் பல வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. பெரெக் ஜோஸ்லெவிச் என்கிற புகழ்பெற்ற யூத வீரர், அப்போது நெப்போலியனின் ஒரு படையில் சாதாரண வீரராகச் சேர்ந்தவர். பின்னாளில் அவரது படையில் கர்னல் அளவுக்கு உயர்ந்து, ஆஸ்திரியப் போரில் உயிர் துறந்தவர்.

ஆனால் ஏக்ர் கோட்டைக்கான யுத்தத்தில் நெப்போலியன் தோல்வியடைய நேரிட்டபிறகு, யூதர்கள் விஷயத்தில் அவர் அத்தனை ஆர்வம் செலுத்தவில்லை.

சரியான காரணங்கள் ஏதுமில்லை என்றபோதும் அவருக்கும் யூதர்கள் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது உண்மை. அவர்களுக்கு வழங்கியிருந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரத்திலேயே நிறைய புதிய வரையறைகளைச் சேர்த்தார். குறிப்பாக, நெப்போலியனின் இறுதிக்கால ஆட்சி சமயத்தில் யூத வர்த்தகர்கள் ஏராளமான வரிச்சுமைக்கு ஆளாக நேர்ந்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில், பல மானியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கொஞ்சம் வாலை நறுக்கி வைக்கலாம் என்று நெப்போலியனுக்கும் ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனாலும் அப்படித்தான் அவர் நடந்துகொண்டார்!

ஆனால் அவரது காலத்தில் போலந்து, லித்துவேனியா, பிரான்ஸ், (ஜெர்மனியிலுள்ள) ஹாம்பர்க் நகரம், போன்ற இடங்களில் சரசரவென்று யூதர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போனது. எங்கிருந்துதான் இவர்கள் வருகிறார்களோ என்று வியந்து முடிப்பதற்குள்ளாகவே பல லட்சக்கணக்கான யூதர்கள் அந்தப் பகுதிகளில் குடியேறிவிட்டார்கள்.

அப்போது ரஷ்யாவும் நிலப்பரப்பு விஸ்தரிப்பில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் அப்போது நெப்போலியனுக்கு நிகரான ஆர்வம், ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னர்களுக்கும் இருந்தது. (ஜார் என்பது ஒரு குறிப்பிட்ட மன்னரின் பெயர் அல்ல. அது ஒரு வம்சத்தின் அடையாளப்பெயர். ஜார் என்ற பட்டத்துடன் பல மன்னர்கள் ரஷ்யாவை ஆண்டிருக்கிறார்கள்.)

கி.பி. 1772 தொடங்கி, 1815-ம் ஆண்டு காலகட்டத்துக்குள் போலந்து, லித்துவேனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டன.

யூதர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட காலகட்டம் கொஞ்சம் சாதகமாக இருந்தது. அன்றைய ரஷ்ய அரசுத்தரப்பின் மிக முக்கிய நபராக விளங்கிய இளவரசர் பொட்ம்கின் சிலபல அரசியல் காரணங்களை உத்தேசித்து, யூத ஆதரவு நிலை எடுத்தார்.

ஐரோப்பாவில் வாழமுடியாத யூதர்களெல்லாம் ரஷ்யாவுக்கு வந்து, அதன் தென்பகுதி மாகாணங்களில் (அவை யாவும் குட்டி நாடுகள்!) வாழத்தொடங்கலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார். (இதே ரஷ்யாவிலிருந்து இன்னும் கொஞ்சகாலத்தில் அத்தனை யூதர்களும் அடித்துத் துரத்தப்படவிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.)

அப்போதைய ஜார் மன்னரின் பெயர் கேதரின் 2. மகா கேதரின் என்று அவர் தம்மைச் சொல்லிக்கொண்டார். மக்கள் சொன்னார்களா என்று தெரியவில்லை. அவரது விருப்பத்தின்படி, இளவரசர் பொட்ம்கின், ரஷ்யப் படையில் ஒரு யூதப்பிரிவை உருவாக்கினார்.

இந்தப் படை உருவாக்கப்பட்டதன் ஆதார நோக்கமே, துருக்கியுடன் ஒரு யுத்தத்தை உத்தேசித்துத்தான். திரும்பத்திரும்ப துருக்கி. திரும்பத்திரும்ப பாலஸ்தீன் ஆசைக்கனவு. முன்பு நெப்போலியன் என்றால் இப்போது ஜார். அவ்வளவுதான் வித்தியாசம்.

அந்த யூதப் படைப்பிரிவுக்கு பொட்ம்கின், இஸ்ரேலவ்ஸ்கி என்று பெயரிட்டார். இதுவும் ஒரு அரசியல் காரணத்தை உத்தேசித்துத்தான்.

இஸ்ரேல் என்றொரு தேசம் குறித்தெல்லாம் யூதர்கள் அப்போது சிந்திக்கக்கூட இல்லை.

ஆனாலும் இனத்தின் பெயரால் அவர்களை ஒருங்கிணைத்து, இடத்தின் பெயரால் வழி நடத்த இது ஒரு உபாயமாகப் பயன்படும் என்று கருதிய ரஷ்ய இளவரசர், புராதன ஹீப்ரு பைபிளில் வரும் இஸ்ரவேலர்களின் புத்திரர்களை நினைவு கூர்ந்து இப்படியொரு பெயர் சூட்டி யூதர்களைப் புளகாங்கிதமடையச் செய்தார்.

1768-லிருந்து 1774 வரை ஒரு யுத்தம். பிறகு 1787-லிருந்து 1792 வரை ஒரு யுத்தம். ஆக மொத்தம் துருக்கியுடன் இரண்டு யுத்தங்கள். இரண்டுமே வெற்றி பெறவில்லை. மாறாக ஒட்டுமொத்த அரேபிய முஸ்லிம்களுக்கும் யூதர்கள் நிரந்தரப் பகைவர்களாவதற்கு பெரிய அளவில் ஒரு பிள்ளையார் சுழியைப் போட்டுவைத்தன.

இத்தனைக்கும் ஒட்டாமான் துருக்கிய மன்னர்கள் யூதர்களுக்கு எத்தனையோ வசதிகள் செய்துதந்து, பாலஸ்தீன் உள்பட துருக்கியப் பேரரசின் அத்தனை இடங்களிலும் சர்வ சுதந்திரமுடன் வாழ அனுமதித்திருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பாலஸ்தீனை அவர்கள் முழுவதுமாகத் தங்களுக்கான தனிநாடாக அடைய விரும்புகிறார்கள் என்று சிந்திக்கவேயில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 மார்ச், 2005
***************************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.


(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30..
)


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: