இந்த யுத்தங்களின் சூத்திரதாரியாக இருந்தவர் போப்பாண்டவர் என்பதையும் இதனுடன் இணைத்து யோசிக்கலாம்.
29] அரசர் ரிச்சர்ர்டும் சுல்தான் ஸலாஹுதீனும்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 29
யுத்தங்களில் வெற்றி தோல்வி வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் இழப்புகள் அப்படிப்பட்டதல்ல. இன்றைக்குச் சாவகாசமாக, பத்தாயிரம் பேர் இறந்தார்கள், ஐம்பதாயிரம் பேர் இறந்தார்கள் என்று பழைய போர்க்கதைகளை நினைவு கூர்ந்துவிட முடிகிறது. அவை நடந்த காலத்தில் அந்தப் பேரிழப்புகள் ஒவ்வொரு தேசத்துக்கும் அளித்த வலிகள் கொஞ்சநஞ்சமல்ல.
மீண்டு எழுவதற்கு எத்தனையோ பல காலம் ஆகும் என்ற கணிப்புகளையெல்லாம் தூள் தூளாக்கி, மீண்டும் மீண்டும் போர் முரசு கொட்டினார்கள் என்றால், நோக்கத்தில் எத்தனை தீவிரம் இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான கிறிஸ்துவர்களின் சிலுவைப்போர்களில் ஏற்பட்ட மொத்த இழப்பு எத்தனை என்பதற்குத் திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் இல்லை. குறைந்தது பத்திருபது லட்சங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.
நவீன ஆயுதங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படாத காலகட்டத்தில் வாள்களும் விஷ அம்புகளுமே முக்கிய ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
போரில் இறந்தவர்களின் உடல்கள் பெரும்பாலும் கடலில்தான் வீசியெறியப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் ஒரு கிராமத்தையே தோண்டி மாபெரும் குழியாக்கி, மொத்தமாகப் பிணங்களைத் தள்ளி மூடியிருக்கிறார்கள் அல்லது எரித்திருக்கிறார்கள்.
மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும் குன்றுகளின் சிகரங்களுக்குப் பிணங்களைக் கொண்டுபோய் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள். போர் புரியும் படை ஒருபுறமென்றால் இப்படிப் பிணங்களை அப்புறப்படுத்தும் படைகளே தனியாக இயங்கியிருக்கின்றன.
ஆயிரக்கணக்கான பிணங்களைத் தொடர்ந்து பார்த்தும் சுமந்தும் செல்ல நேர்கிறவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யூகிப்பது சிரமம்.
மதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிற யுத்தம். மிகச் சிலருக்காவது அந்த இழப்புகள் ஞானத்தைத் தந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கத் தோன்றலாம்.
உண்மையில் மேலும் யுத்தம், மேலும் மேலும் உக்கிரமான யுத்தம் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. இது சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அரசியலைக் காட்டிலும் வீரியமுள்ளதொரு சக்தியாகவே மதம் இருந்திருக்கிறது என்பதைத்தான்.
இந்த யுத்தங்களின் சூத்திரதாரியாக இருந்தவர் போப்பாண்டவர் என்பதையும் இதனுடன் இணைத்து யோசிக்கலாம்.
அன்றைக்கு ஐரோப்பாவை ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்துவ மன்னர்களைக் காட்டிலும் இந்தப் போப்பாண்டவர்களுக்கு இந்த யுத்தத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்திருக்கிறது.
கிறிஸ்துவர்களுக்கு யுத்தத்தில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் எழுச்சியூட்டும் சக்தியாக முன்னின்று செயல்பட்டவர்கள் அவர்களே.
ஒவ்வொரு போப்பாண்டவர் மாறும் போதும் இந்த யுத்த நோக்கத்தைத்தான் தம் சீதனமாக அடுத்து வருபவருக்கு அளித்துவிட்டுப் போயிருக்கிறார் என்று தெரிகிறது.
சரித்திரத்தின் மிகச் சூடான பக்கங்கள் இவை.
இல்லாவிட்டால் சுல்தான் சலாவுதீன் ஜெருசலேத்தை வென்று, அதிகாரத்தைக் கைப்பற்றிய கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளாகவே இன்னொரு யுத்தம் எப்படிச் சாத்தியமாக முடியும்?
டைர் (Tyre) நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்த சிலுவைப் போர் வீரர்கள், அங்கிருந்த ஏனைய கிறிஸ்துவர்களை ஒன்று திரட்டி உடனடியாக இன்னொரு பெரிய யுத்தத்துக்கான அடித்தளத்தை மிக உறுதியாகக் கட்டத் தொடங்கியிருந்தார்கள்.
இந்த உடனடி எழுச்சியின் பின்னால் இருந்தவரும் அன்றைய போப்பாண்டவர்தான்.
அவரது உத்தரவின் பேரில் ஜெர்மனியின் அரசராக இருந்த பிரடரிக் பார்பரோஸா (Frederick Barbarossa) என்பவரும் இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்டும் (King Richard 1) பிரான்ஸ் பேரரசர் பிலிப் அகஸ்டஸ் (Philip Augustus) என்பவரும் கூட்டாகப் படை திரட்டிக்கொண்டு சிலுவைப்போர் வீரர்களுக்கு உதவுவதற்காக பாலஸ்தீனை நோக்கி வரத் தொடங்கினார்கள்.
மூன்றாவது சிலுவைப்போர் என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கொடும்யுத்தம், சிரியாவின் ‘ஏக்ர்’ என்னும் கோட்டை முற்றுகையில் ஆரம்பமானது.
கண் திகட்டிப் போகுமளவுக்கு சிலுவைப்போர் வீரர்கள் அக்கோட்டையின் வெளியே அலையலையாக அணிவகுத்து நின்றார்கள். அவர்களை விரட்டியடித்து எப்படிக் கோட்டையை மீட்பது என்று சுல்தான் சலாவுதீன் யோசித்தார்.
முற்றுகையைத் தாம் சமாளித்துக்கொண்டிருக்கும்போது எப்படியும் வேறொரு பெரிய படை பாலஸ்தீனுக்குள் நுழையப்பார்க்கும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஒற்றர்கள் மூலம் அந்தப் படையின் பலம் குறித்துத் தகவல் சேகரித்து அறிய விரும்பியவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
பாலஸ்தீனை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த படையை வழிநடத்தி வந்தவர், ஜெர்மானிய சக்கரவர்த்தி பிரடரிக் பார்பரோஸாவேதான்!
ஆகவே, நிலைமை கைமீறிப் போய்விடக்கூடாதே என்று கவலைப்பட்ட சலாவுதீன் உதவிக்கு வரமுடியுமா என்று கேட்டு மொராக்கோவுக்குத் தூது அனுப்பினார். அங்கே அப்போது ஆண்டுகொண்டிருந்தவர் ஒரு முஸ்லிம் குறுநில மன்னர்.
பக்கத்தில்தான் இருக்கிறது பாக்தாத். (ஈராக்கின் தலைநகர்.) கலீஃபா என்று ஒருவர் அங்கு இருக்கவே இருக்கிறார். பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் வாழும் நாடுகளெல்லாம் அவரது கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கிறது.
ஆனாலும் ஏனோ தமக்குச் சம்பந்தமில்லாமல் யாரோ யாருடனோ மோதும் யுத்தம் என்பது போலத்தான் அப்போது அவர் இருந்தார். சலாவுதீனுக்கு இதில் வருத்தம் உண்டு என்றாலும் சொந்தச் சண்டைகளைப் பேசிக்கொண்டிருக்க சமயமில்லை என்பதால் உதவக்கூடியவர் என்று நம்பியே மொராக்கோ சுல்தானுக்குத் தூது அனுப்பினார்.
துரதிருஷ்டவசமாக அவர் எதிர்பார்த்த உதவி எதுவும் அங்கிருந்தும் வரவில்லை.
ஆகவே, தனியொரு நபராகத் தாமே முடிவெடுத்துச் செய்யவேண்டிய யுத்தம் இது என்று முடிவு செய்தார்.
சிலுவைப்போர் சரித்திரத்திலேயே இது ஒரு வினோதம்தான். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் கலீஃபாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல் ஒரு குறுநில மன்னருடன் ஐரோப்பிய தேசங்கள் மோதிய யுத்தம்.
சலாவுதீனுக்கு அப்படியன்றும் அதிர்ஷ்டம் முற்றிலுமாகக் காலை வாரிவிடவில்லை. யாருமே எதிர்பாராவிதமாக பாலஸ்தீனை நெருங்கும் வேளையில் ஜெர்மானிய மன்னர் பிரடரிக் ஓர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார்.
இதனால் நிலைகுலைந்த ஜெர்மானியப்படை கொஞ்சம் சிதறிப்போனது. அவர்களை மீட்டு ஒருங்கிணைத்து மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காக ஹென்றி என்கிற மாவீரர் ஒருவர் தலைமையில் இன்னொரு பெரிய படையை போப் அனுப்பிவைத்தார்.
கி.பி. 1190-ம் ஆண்டு ஜூலை மாதம் யுத்தம் ஆரம்பமானது. சுமார் ஒரு வருட காலத்துக்கு எந்தத் தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் நீடித்துக்கொண்டே போன யுத்தம் அது. சலிப்புற்றாவது போரை நிறுத்துவார்களா என்று உலகம் பார்த்துக்கொண்டிருந்தபோது சலாவுதீனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. ஆகவே, வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாமல் ஓர் இடைக்கால ஏற்பாடு போல போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் போர் நிறுத்தக் காலத்தை சிலுவைப்போர் வீரர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்த ஆள்பலம் மற்றும் பொருள்பலத்தைச் சரியாகப் பங்கிட்டு முற்றுகை நடந்துகொண்டிருந்த கோட்டைகளுக்கு அனுப்பிவைத்தார்கள்.
கப்பலில் வந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவர்கள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மன்னர்கள். இந்த இருவருமே வந்து சேர்ந்த கணத்திலிருந்தே காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன், ஐயோ பாவம், மன்னர்களுக்குக் காய்ச்சல் வந்தால் வீரர்கள் சோர்வடைந்துவிடுவார்களே என்று பிரசித்தி பெற்ற லெபனான் நாட்டு மருந்துகளையும் சுரவேகத்தைத் தணிக்கக் கூடிய மூலிகை வேர்களிலிருந்து பிழியப்பட்ட சாறுகளையும் அன்பளிப்பாக அனுப்பிவைத்தாராம்!
அந்த இரு மன்னர்களும் உடல்நலம் தேறியபிறகு மீண்டும் முற்றுகை யுத்தம் ஆரம்பமானது.
ஆனால் முஸ்லிம் வீரர்கள் இம்முறை மிகவும் சோர்ந்துவிட்டிருந்தார்கள். சலாவுதீன் யோசித்தார். தமது வீரர்கள் எவரும் வீணாக உயிரிழப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரையும் கொல்லமாட்டோம் என்று உத்தரவாதம் தந்தால் ஏக்ர் கோட்டையை விட்டுத்தந்துவிடுவதாகச் சொன்னார்.
சிலுவைப்போர் வீரர்கள் சம்மதித்தார்கள். கோட்டை கிறிஸ்துவர்களின் வசமானது. அதன்பிறகு நடந்ததுதான் துரதிருஷ்டவசமானது. மன்னர் சலாவுதீன் எத்தனை மனிதாபிமானமுடன் கிறிஸ்துவர்களை நடத்தினார் என்பதைச் சற்றும் நினைவுகூர்ந்து பாராமல், கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கோட்டை கைவசமானதுமே அத்தனை முஸ்லிம் வீரர்களையும் கிறிஸ்துவர்கள் நிற்கவைத்துத் தலையைச் சீவினார்கள்! (வெண்ணிறமானதொரு பெரிய மைதானம் முழுவதும் ரத்தம் படிந்து செம்மண் நிலம் போலானது என்று இதனை எழுதுகிறார் சரித்திர ஆசிரியர் மிஷாட்.)
யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது என்றாலும் நம்பமுடியாததொரு திருப்பமாகக் குறிப்பிடவேண்டிய விஷயம், இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சர்டின் மனமாற்றம்.
சலாவுதீன் இத்தனை அன்பானவராக, மனிதாபிமானம் உள்ளவராக இருப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடன் போரிடுவதற்கு மன்னருக்குச் சங்கடமாக இருந்தது. ஏதாவது செய்து யுத்தத்தைத் தவிர்க்க முடிந்தால் எத்தனையோ சிறப்பாக இருக்குமே என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து அரசியலில் ஏற்பட்டிருந்த சில குழப்பங்களும் இதற்குக் காரணம் என்று தெரிகிறது. ரிச்சர்ட், நாடு திரும்ப எண்ணினார். போவதற்கு முன்னால் போரை நிறுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா என்று அவர் பார்த்தார்.
ஆகவே, சலாவுதீனின் தம்பியான சைபுதீனைச் சந்தித்துத் தம் அமைதி நாட்டத்தைத் தெரியப்படுத்தினார். அது எந்த மாதிரியான அமைதி ஒப்பந்தம், அதில் இடம்பெற்றிருந்த ஷரத்துகள் என்னென்ன என்பது பற்றிய முழு விவரங்கள் இன்று கிடைப்பதில்லை.
ஆனால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மிகவும் சுவாரசியமானது.
ரிச்சர்டுக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் ஒரு விதவை. அந்த விதவைச் சகோதரியை சைபுதீன் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து மன்னரின் சகோதரியை சுல்தான் சலாவுதீனின் சகோதரர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் முஸ்லிம் கிறிஸ்துவர்களிடையே போர் நிறுத்தம் ஏற்படுவது ஓரளவு சுலபமாகும். (அதாவது சிலுவைப்போரிலிருந்து இங்கிலாந்து மட்டுமாவது வெளியேறும்.)
திருமணம் ஆனதும் ஜெருசலேமை சைபுதீனும் மன்னரின் சகோதரியும் இணைந்து ஆட்சி செய்யலாம்.
இந்த ஒப்பந்தம் மட்டும் நடைமுறைக்கு வந்திருக்குமானால் சிலுவைப்போர்கள் அன்றைய தினத்துடனேயே கூட முற்றுப்பெற்றிருக்கும் என்று அங்கலாய்க்கிறார்கள் அனைத்து சரித்திர ஆசிரியர்களும்.
இது புரட்சிகரமான திட்டம் மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வை கொண்ட யோசனையும் கூட. இரு பெரும் சமூகத்தினரிடையே மூண்டிருந்த பகைமையை நிச்சயம் தணித்திருக்கக் கூடும்.
ஆனால், கிறிஸ்துவ மத குருமார்கள் ஒட்டுமொத்தமாக இதனை அன்று எதிர்த்துவிட்டார்கள். மன்னர் ரிச்சர்டுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே பேசத் தொடங்கிவிட்டார்கள்.
ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால் மனம் சோர்ந்திருந்த ரிச்சர்ட், வேறு புதிய பிரச்னைகள் வேண்டாம் என்று கடைசி நிமிடத்தில் மனம் மாறியிருக்கலாம். குருமார்களை சந்தோஷப்படுத்துவதை மட்டுமே தமது அப்போதைய நோக்கமாக வைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக ஜெருசலேம் மீது படையெடுப்பைத் தொடங்கினார்.
சுல்தான் சலாவுதீனுக்கு இங்கிலாந்து மன்னரின் மனநிலை புரிந்தது. அவரது சூழ்நிலையும் புரிந்தது. ஆகவே, மிகவும் ‘பரிவுடன்’ யுத்தத்துக்கு ஒத்துழைத்தார்!
‘நீங்கள் வேறு வழியில்லாமல் ஜெருசலேம் மீது படை எடுக்கிறீர்கள். நானும் வேறு வழியில்லாமல் உங்களை எதிர்க்கிறேன்’ என்று சொன்னாராம் சலாவுதீன்!
அந்தப் போரில் ரிச்சர்டால் ஜெருசலேத்தை வெல்ல முடியவில்லை.
சுல்தானின் வீரர்கள் இரும்புச் சுவர்கள் போல நகரைச் சுற்றி அணிவகுத்து ஒரு கிறிஸ்துவப் போராளியும் முன்னேற முடியாமல் தடுத்து யுத்தம் புரிந்தார்கள். தோல்விதான் என்று ரிச்சர்டுக்குப் புரிந்துபோனது.
வீணாக நாட்களைக் கடத்தவேண்டாம் என்று முடிவு செய்தவராக, அவர் சலாவுதீனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
“உங்கள் அன்பையும் நட்பையும் மிகவும் மதிக்கிறேன். உங்களுடைய இந்த நிலத்தில் ஆட்சிபுரிய நான் விரும்பவில்லை. இதுவரை நான் வென்ற பகுதிகளை என் சகோதரி மகனான ஹென்றிக்கு அளித்து விடுகிறேன். அவன் உங்களுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி புரிவான். அப்படித்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்திவிட்டே செல்கிறேன். ஆனால் ஜெருசலேத்தை மட்டும் நீங்கள் எனக்கு அளித்துவிடவேண்டுமென்று வேண்டுகிறேன்.”
சலாவுதீன் புன்னகையுடன் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். நட்பு தொடரும். ஆனால் ஜெருசலேம் கிடையாது!
மூன்றாவது சிலுவைப்போர் இப்படியாக ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ஜெர்மானிய சக்கரவர்த்தியின் துர்மரணம், பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிர்த்தியாகம், ஏகப்பட்ட நோய்க்கிருமிகள் பரவியது, இங்கிலாந்து மன்னரின் மனமாற்றம், நிறைவேறாத ஓர் அமைதி ஒப்பந்தம் ஆகியவை இந்தப் போரின் எச்சங்கள்.
சிரியாவின் ஏக்ர் என்னும் ஒரு சிறு நகரின் கோட்டையை வெற்றி கொண்டது மட்டுமே இந்தப் போரில் கிறிஸ்துவர்கள் அடைந்த லாபம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 மார்ச், 2005
30] சுல்தான் ஸலாஹுதினின் மரணமும் கிறிஸ்தவர்களும்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 30
மூன்றாவது சிலுவைப்போரில் வெற்றி பெற்றபிறகு சுல்தான் சலாவுதீன் நெடுநாள் உயிர்வாழவில்லை. யுத்தத்தின்போது ஏற்கெனவே அவருக்கு விஷக்காய்ச்சல் கண்டிருந்தது. ஒருமாதிரி மனோபலத்தில் தாக்குப்பிடித்து யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் பெற்றிருந்தார்.
தாம் அதிகநாள் உயிர்வாழ மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. ஜெருசலேம் சிம்மாசனத்தில் அந்த முறை அமர்ந்த நாளாக ஊரில் ஏராளமான கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்ட ஆரம்பித்தார்.
வழிபாட்டிடங்கள் அவசியம்தான். ஆனால் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வல்லவை என்று சொல்லியிருக்கிறார் சலாவுதீன்.
யுத்தத்தில் ஒரு வெற்றி என்றால், அதன் அடையாளமாக ஒரு மசூதியாவது, தேவாலயமாவது எழுப்புவது அந்நாளைய மன்னர்களின் வழக்கம்.
சலாவுதீன் அந்த வெற்றிக்குப் பின் ஒரு மசூதியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மாறாக இடிக்கப்பட்டிருந்த அரசுக் கட்டடங்கள் பலவற்றைச் சீரமைத்து கல்லூரிகளாகத்தான் எழுப்பினார். இந்த வகையிலும் அவர் மற்ற கலீஃபாக்கள், சுல்தான்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவராகவே இருந்திருக்கிறார்!
கொஞ்சநாள் ஓய்வெடுக்கலாம் என்று ஜெருசலேத்திலிருந்து புறப்பட்டு சிரியாவில் உள்ள டெமஸ்கஸுக்குப் (அந்நாளில் திமஷ்க்.) போனவர், அங்கேயே கி.பி. 1193-ம் ஆண்டு உயிர்நீத்தார். வயதொன்றும் அதிகமில்லை. ஐம்பத்தாறுதான்.
சலாவுதீனின் மரணம் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் நிலைகுலையச் செய்தது என்று பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இதில் மிகை ஏதுமில்லை.
ஏனெனில், அன்றைய தேதியில் சிலுவைப்போர் வீரர்களுக்கு சவால் விடக்கூடிய வல்லமை பொருந்தியவராக அவர் ஒருவர்தான் இருந்தார். அச்சமூட்டுவதற்காகவே லட்சக்கணக்கான வீரர்களை ஐரோப்பாவிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள் அப்போது. அந்தப் பெரும்படைகளைக் கண்டு மிரளாமல் எதிர்த்து நின்றவர் சலாவுதீன்.
போர்க்கள வீரம் மட்டுமல்ல காரணம். தனிவாழ்விலும் அப்பழுக்கற்ற சுல்தானாக அவர் இருந்திருக்கிறார். சுல்தான் இறந்தபிறகு அவரது சொத்து விவரங்களை ஆராய்வதற்காக ஓர் அரசுக்குழுவை நியமித்திருந்தார்கள்.
மன்னரின் தனிப்பட்ட வரவு செலவுக் கணக்குகள், அவர் தம் பெயரிலும் தமது உறவினர்கள் பெயரிலும் என்னென்ன அசையாச் சொத்துகள் வைத்திருக்கிறார் போன்ற தகவல்களைச் சேகரிக்கச் சென்ற அந்தக் குழு வியப்பில் மூர்ச்சையாகிப் போனது.
காரணம், எத்தனை தேடியும் மன்னரின் சொத்தாக அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது ஒரே ஒரு தினாரும் ஆறு திஹ்ரம்களும் மட்டுமே. நமது மொழியில் புரியும்படி சொல்லுவதென்றால் ஒரு ரூபாய் அறுபது காசு. இதில் மிகையே இல்லை. தமக்கென்று ஒரு பைசா கூட கடைசிவரை சேர்த்து வைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார் சலாவுதீன்!
அவரது மனைவி உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு இது விஷயமாக வருத்தம் இருந்திருக்குமோ என்னவோ, ஆட்சி அதிகாரத்தை மேலாடையாகக் கூட இல்லை; ஒரு கைக்குட்டை மாதிரிதான் வைத்திருந்தார் அவர்.
சலாவுதீனின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்லப்படுவது, எகிப்துக்கு அவர் ஓர் அரசியல் முக்கியத்துவம் பெற்றுத் தந்ததைத்தான்.
மத்திய ஆசியாவின் எத்தனையோ பகுதிகள் அந்நியப் படையெடுப்புகளாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் சிதறுண்டுபோன காலகட்டத்தில் சிதறிக்கிடந்த எகிப்தை சில்லறை சேர்ப்பதுபோல ஒன்று சேர்த்து, ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து, மத்தியக் கிழக்கின் மிக முக்கியமான முஸ்லிம் சாம்ராஜ்ஜியங்களுள் ஒன்றென அதற்கொரு தனியடையாளம் பெற்றுத்தந்தவர் சலாவுதீன்.
பாலஸ்தீன், சிரியா வரை அந்த ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரித்து, வலுவான பாதுகாப்பு அரணாகத் தாமே முன்னின்று காத்தவர் அவர். தவிர, பாக்தாத் கலீஃபாவின் அரசுடன் எகிப்துக்கு நிரந்தரமான, நீடித்த நல்லுறவு ஏற்படவும் காரணமாக இருந்தவர்.
அவரது மரணம் எப்படி முஸ்லிம்களுக்கு மாபெரும் துயரத்தைத் தந்ததோ, அதே அளவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஐரோப்பியர்களுக்குத் தந்ததையும் இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும்.
சலாவுதீன் இறந்து சரியாக இரண்டே ஆண்டுகளில் நான்காவது சிலுவைப்போருக்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டது ஐரோப்பா.
அப்போது போப்பாண்டவராக இருந்தவரின் பெயர் செல்ஸ்டின் 3. ‘ஒரு சரியான தலைவன் இல்லாத பிரதேசமாக இப்போது பாலஸ்தீன் இருக்கிறது. சலாவுதீனுக்குப் பிறகு அவரளவு திறமைசாலிகள் யாரும் அங்கே இன்னும் உதிக்கவில்லை. ஆகவே, தாக்குவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று ஐரோப்பிய மன்னர்களுக்கு அவர் கடிதம் எழுதினார்.
போப்பாண்டவர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசமுடியாது. இத்தனைக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மானிய மன்னர்கள் முந்தைய சிலுவைப்போரின் இறுதிச் சமயத்தில் அவரவருக்கு ஏதோ ஓரளவில் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் ஊர் திரும்பியிருந்தார்கள்.
ஆனால், அரசு ரீதியில் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் பற்றி மதகுருவான போப்பாண்டவரிடம் விளக்கிக்கொண்டிருக்க முடியாது.
பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலெல்லாம் அரசர்கள் அளிக்கும் தீர்ப்புகளை போப்பாண்டவர்கள் மாற்றி எழுதும் வல்லமை பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்!
ஆகவே, மீண்டும் யுத்தம் ஆரம்பமானது.
வேறென்ன? நேரே புறப்பட்டு பாலஸ்தீனை அடையும் நோக்கமுடன் ஒரு நெடும்பயணம். வழியில் அதே சிரியாவில் ஒரு கோட்டை முற்றுகை. இம்முறை பெய்ரூத் கோட்டை. பெய்ரூத்தை சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றிக்கொண்டதும் முஸ்லிம்களின் படை (சலாவுதீனின் வாரிசாக இந்தப் போரை முன்னின்று நடத்தியவரின் பெயர் மலிகல் ஆதில்.) ஜாஃபா என்ற இடத்திலிருந்த கிறிஸ்துவர்களின் கோட்டையை முற்றுகையிட்டு, கைப்பற்றிக்கொண்டார்கள்.
இந்த ஜாஃபா முற்றுகையின்போது ஏராளமான கிறிஸ்துவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு இழப்பு நேரிட்டதால் கிறிஸ்துவர்கள் உடனடியாகப் போர் நிறுத்தம் கோரினார்கள்.
சலாவுதீன் இறப்பதற்கு முன்னால் சொல்லிவிட்டுப் போனது அது. எதிரி போர் நிறுத்தத்துக்கு விருப்பம் தெரிவித்தால், எந்த நிலையிலிருந்தாலும் சம்மதித்துவிட வேண்டும்.
ஆகவே யுத்தம் நிறுத்தப்பட்டது. உண்மையில் சலாவுதீன் முன்னின்று நடத்திய அந்த மூன்றாவது சிலுவைப்போர்தான் கடைசிப் பேரழிவுப் போர். அப்புறம் நடந்த சிலுவைப்போர்களெல்லாம் விளையாட்டேபோல நடத்தப்பட்ட யுத்தங்கள்தாம். இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை! உண்மையிலேயே அப்படித்தான் நடந்திருக்கிறது.
உதாரணமாக, ஐந்தாவது சிலுவைப்போரை எடுத்துக்கொள்ளலாம். இன்னஸண்ட் 3 (Pope Innocent 3) என்னும் போப்பின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போருக்கு அடிப்படைக் காரணம் ஜெருசலேத்தைக் கைப்பற்றுவதல்ல. பணம் திரட்டுவதுதான்!
முந்தைய யுத்தங்களினால் ஏற்பட்டிருந்த இழப்புகளைச் சரிக்கட்டுவதன்பொருட்டு, ஒரு சிறிய யுத்தத்தை ஆரம்பித்துவிட்டு, அதைச் சொல்லி ஐரோப்பா முழுவதும் வசூல் நடத்திக் குவித்துவிட்டார்கள்.
இந்தப் போரில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் தெரிவித்துவிட்டார். இன்னும் சில சிறு மன்னர்களும் இந்த ஐந்தாம் சிலுவைப்போரைப் புறக்கணிக்க (பின்னே? ஓயாமல் யுத்தம் என்றால் யாரால் முடியும்?), சாத்தியமுள்ள மன்னர்களின் உதவியுடன் யுத்தத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார் போப்.
ஆனால் நடந்தது மிகப்பெரிய நகைச்சுவை.
ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் பாலஸ்தீனை நோக்கி முன்னேறாமல், நேரே கான்ஸ்டாண்டிநோபிளுக்குப் போய் அங்கே ஆட்சி புரிந்துகொண்டிருந்த கிரேக்க மன்னருக்கு எதிராகச் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த கிரேக்க மன்னர், அவரது குடிபடைகள் எல்லோருமே கிறிஸ்துவர்கள்!
கிறுக்குப் பிடித்து ஒரு கிறிஸ்துவ நகரின்மீதே தொடுக்கப்பட்ட இந்த யுத்தத்தைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டார் போப் இன்னஸண்ட் 3. ஆனால் நிலைமை கைவிட்டுப் போய்விட்டது.
கான்ஸ்டாண்டிநோபிளைத் தாக்கிய சிலுவைப் போர் வீரர்கள், போரில் வென்றதோடு விடவில்லை. முழு நகரையும் தீவைத்துக் கொளுத்தினார்கள். தப்பியோடியவர்களை வெட்டி வீழ்த்தியும், அகப்பட்ட பெண்கள் அத்தனைபேர் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியும் வெறியாட்டம் போட்டார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் சொன்ன காரணம் : “கான்ஸ்டாண்டிநோபிள்வாசிகள் சிலுவைப் போர் வீரர்களை முழு மனத்துடன் ஆதரிக்கவில்லை என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அதனால்தான் தாக்கினோம்.’’
புகழ்பெற்ற கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர் நிகிடாஸ் (ழிவீநீமீtணீs) என்பவர், “சலாவுதீனின் படைகள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது ஒரு கிறிஸ்துவப் பெண்ணின் மானமும் பறிபோகவில்லை. வெறிகொண்ட கிறிஸ்துவ வீரர்களுக்கு புத்திதான் மழுங்கியதென்றால் கண்களுமா இருண்டுபோயின?’’ என்று வெறுப்புற்று எழுதுகிறார்.
சிலுவையைத் தொழுவோர் மீதே நிகழ்த்தப்பட்ட இந்த ஐந்தாம் சிலுவைப்போர் இப்படியாக அபத்த முடிவை அடைந்தபிறகு, கி.பி. 1217-ல் போப் இன்னஸண்ட் 3 அடுத்த சிலுவைப்போருக்கான அழைப்பை விடுத்தார்.
இம்முறை ஐரோப்பாவின் கிழக்கு தேசங்கள் பலவற்றிலிருந்து பெரும்பான்மையான வீரர்கள் அணிதிரண்டார்கள். சுமார் மூன்று லட்சம் பேர் என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இரண்டிலிருந்து இரண்டே கால் லட்சம் வீரர்கள் என்று இன்னொரு கணக்கு.
ஆனால் இரு தரப்புமே தவறாமல் ஒப்புக்கொள்கிற ஒரே விஷயம் இந்தப் படையில் கிழவர்கள், பெண்கள், குருடர்கள், கால் முடமானவர்களெல்லாம் இருந்தார்கள் என்பதைத்தான்!
அதாவது பெரியதொரு படையாகக் காட்டியாகவேண்டும் என்பதற்காக, அகப்பட்ட ஆட்களையெல்லாம் திரட்டிப் படையில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள்! கிட்டத்தட்ட காட்டுமிராண்டி யுத்தம் போல்தான் இப்போர் நடந்திருக்கிறது.
எந்தப் போர் இலக்கணத்துக்குள்ளும் அடங்காமல் கொலைவெறி ஆட்டம் ஆடித் தீர்த்திருக்கிறார்கள். சலாவுதீனின் வம்சாவழியினர் பலம் குன்றியிருந்த நேரம் அது. அவரது பேரன்கள் இரண்டுபேர் சாம்ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டு ஆண்டுகொண்டிருந்தார்கள்.
அவர்களால் சிலுவைப்போர் வீரர்களைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்கள். கிறிஸ்துவர்கள் இந்தத் தாக்குதலில் கைப்பற்றிய புதிய இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டால், முன்னாளில் சலாவுதீன் கைப்பற்றிய கிறிஸ்துவக் கோட்டைகளை மீண்டும் அவர்களுக்கே தந்துவிடுவதாகச் சொல்லிப் பார்த்தார்கள்.
ஆனால், சிலுவைப்போர் வீரர்கள் இதற்கு உடன்படவில்லை. எகிப்து பலம் குன்றியிருக்கும் நேரத்தில் அதை நேரடியாகத் தாக்கி வெற்றி பெறுவது சுலபம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால், அவர்கள் சற்றும் எதிர்பாராவிதமாக நைல் நதியில் அப்போது வெள்ளம் பெருக்கெடுத்து, காரியத்தைக் கெடுத்தது. படைகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் ஆகிப்போனது. வேறு வழியின்றி, கிறிஸ்துவர்கள் ஊர் திரும்ப நினைத்தார்கள்.
ஜெருசலேத்தைக் கைப்பற்றுவது என்கிற ஆதார நோக்கமுடன் தொடங்கப்பட்டவை சிலுவைப்போர்கள். நடுவில் இந்த நோக்கம் சிலமுறை திசைமாறியிருக்கிறது. கணக்கு வழக்கே இல்லாமல் பல காலமாகத் தொடர்ந்த இந்த யுத்தங்களால் எந்தத் தரப்புக்கும் லாபம் இல்லை என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.
பல ஐரோப்பிய நாடுகளின் மதவெறி, ஆள்பலம், பணபலம் என்ன என்பதை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியதுதான் சிலுவைப்போர்களால் ஆன பயன்.
மத்திய ஆசிய சுல்தான்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பதையும் பிற்கால கலீஃபாக்கள் செயல்திறன் அற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் கூட இந்த யுத்தங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றன.
ஒருவாறாக, போர்வெறி சற்று மட்டுப்பட்டு ஐரோப்பிய தேசங்கள், சொந்தக் கவலைகளில் மூழ்கத் தொடங்கிய பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடு வருடங்களில் மத்திய ஆசியா பதவிவெறி பிடித்த சுல்தான்களின் சுயலாப நடவடிக்கைகளின் மூலம் மேலும் வலிமை குன்றி, நலிவடையத் தொடங்கியிருந்தது.
தோதாக மங்கோலியர்கள் தம் படையெடுப்பை அப்போது துரிதப்படுத்தியிருந்தார்கள். எந்தக் கணமும் பாக்தாத்தை நோக்கி மங்கோலியப்படைகள் வந்துவிடலாம் என்கிற சூழ்நிலை. பாக்தாத்துக்கு வந்தால், பக்கத்து வீடுதான் பாலஸ்தீன்.
யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று அப்போது மூன்று தரப்பினருமே இணைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால்கூட செங்கிஸ்கானின் வம்சாவழியினரின் அசுரப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாது என்கிற நிலைமை.
பயத்தில் சுருண்டுகிடந்தது பாலஸ்தீன். அந்நியப் படையெடுப்பு மேகங்கள் மிகவும் கருமையாக அதன் மீது படர்ந்திருந்தன. அதுவரை ஏற்பட்டிருந்த இழப்புகளின் வலி அதைக்காட்டிலும் கொடுமையாகப் பாதித்திருந்தது வேறு விஷயம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 மார்ச், 2005
************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.
***********************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)
(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)
(27-28. ) ( 29-30.. )
( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)
(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)
(55-56.) (57-58.) .(59-60.)
(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)
( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).
(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)
(97-98). (99.100.)
Readers, kindly inform about this article to all of your friends / groups through e-mail-sms-phone.
No comments:
Post a Comment