Thursday, March 19, 2009

57._58. ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி.- பாலஸ்தீன் அகதி.பகுதி 57-58.

57] ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி.
நிலமெல்லாம் ரத்தம் _ பா. ராகவன் 57

ஐ.நா. தலையீடு. அமைதி ஒப்பந்தம். போர் நிறுத்தம். இஸ்ரேலுக்கு இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஏனெனில் யுத்தம் அவர்களது நோக்கமில்லை. யுத்தத்தைத் தொடங்கியவர்கள் அரேபியர்கள். அதாவது பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த ஏனைய அரபு தேசங்கள். அவர்களுக்குச் சம்மதமெனில் போரை நிறுத்திக்கொள்ள இஸ்ரேலுக்கு எந்தத் தடையும் இல்லை.

பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிய பிற அரபு தேசங்களுக்கோ, ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி இருந்தது.

போரை நிறுத்துங்கள் என்று பக்குவமாக வெளியில் கேட்டுக் கொள்ளப்பட்டாலும், உள்ளுக்குள் அது சந்தேகமில்லாமல் மிரட்டல்.

தவிரவும், யுத்தத்தில் அவர்கள் நிறையவே இழந்தும் இருந்தார்கள்.

அதைத்தவிரவும் ஒரு காரணம் சொல்லுவதென்றால், போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சில நேர்முக நிறைய மறைமுக லாபங்கள். எல்லாம், அரசியல் சாத்தியமாக்கக்கூடிய லாபங்கள்.

முதல் முதலாக இஸ்ரேல் பிப்ரவரி 24, 1949 அன்று எகிப்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.

எகிப்து யுத்தத்தில் முன்னேறி வந்த காஸா பகுதி எகிப்துக்கே சொந்தம். பிறகு லெபனானுடன் மார்ச் 23 அன்று ஒப்பந்தம் ஆனது. ஏப்ரல் 3_ம் தேதி டிரான்ஸ்ஜோர்டனுடனும் ஜூலை 20_ம் தேதி சிரியாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுவரையிலுமேகூட தாக்குப்பிடிக்க முடியாத ஈராக், தானாக முன்வந்து தன் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, தான் கைப்பற்றியிருந்த பகுதிகள் சிலவற்றை ஜோர்டனுக்குத் தாரை வார்த்துவிட்டு வந்த வழியே போய்விட்டது.

ஒரு வரியில் இதைப் புரியும்படி சொல்வதென்றால், பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்வதற்கென்று வந்த பிற அரபு தேசங்கள் அனைத்தும் நடு வழியில் அவர்களைக் கைவிட்டுவிட்டு, தமக்குக் கிடைத்த லாபங்களுடன் திருப்தியடைந்து, திரும்பிப் போய்விட்டார்கள்.

இதனைக் காட்டிலும் கேவலமான, இதனைக் காட்டிலும் அருவருப்பூட்டக்கூடிய, இதைவிட மோசமான நம்பிக்கைத் துரோகம் என்பது வேறில்லை.

ஐ.நா.வின் தலையீட்டால்தான் அப்படிச் செய்யவேண்டியதானது என்று அரபு தேசங்கள் சமாதானம் சொன்னாலும், மத்தியக்கிழக்கு தேசங்களின் ஒற்றுமை என்பது எந்த லட்சணத்தில் இருந்தது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

ஆனால் இதற்கான அரசியல் நியாயங்கள் ஏராளம் இருக்கின்றன.
மேலோட்டமாகவாவது அவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய பிரச்னை ரகசியமாக உருவாகியிருந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் உருவாகியிருந்த பலப்பரீட்சைதான் அது.

இருவரில் யார் வல்லரசு என்கிற கேள்வி மிகப்பெரிதாக இருந்தது அப்போது. உலகப்போரில் இரு தேசங்களுமே மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்திருந்தன.

இரண்டுமே தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள் என்பது உலகம் முழுவதற்கும் தெரிந்துவிட்டது.

இப்போது யார், எந்தக் கட்சி என்கிற கேள்வி எழுந்தது. அதாவது, அமெரிக்காவை ஆதரிக்கும் தேசங்கள் எவை, ரஷ்யாவை ஆதரிக்கும் தேசங்கள் எவை என்கிற கேள்வி.

அமெரிக்காவை ஆதரிப்பதென்றால், அமெரிக்கா ஆதரிக்கும் அனைத்து அம்சங்களையும் சேர்த்து ஆதரிப்பது என்றாகும். ரஷ்யாவை ஆதரிப்பதென்றாலும் அப்படியே.

இஸ்ரேல் விஷயத்தில் அன்றைக்கு அமெரிக்காவுக்கும் சரி; ரஷ்யாவுக்கும் சரி, ஒரே நிலைப்பாடுதான். அவர்கள் இருவருமே இஸ்ரேலை ஆதரித்தார்கள்.

யூதர்கள் மீதான அனுதாபம் என்பது தவிர, மத்தியக்கிழக்கில் வலுவாகத் தன் கால்களை ஊன்றிக்கொள்ள இரு தேசங்களுமே சரியான இடம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மத்தியக்கிழக்கின் எண்ணெய் வளத்தைக் கொண்டு அடையக்கூடிய லாபங்கள் குறித்து அன்றைக்கு அரபு தேசங்களுக்கே அத்தனை முழுமையாக விவரம் தெரியாது.

ஆனால் அமெரிக்காவுக்குத் தெரியும். ரஷ்யாவுக்குத் தெரியும்.

எண்ணெய் இருக்கிறது என்று அரபு தேசங்களுக்குத் தெரிந்தாலும் அமெரிக்கா அளவுக்கு, சோவியத் யூனியன் அளவுக்கு அவர்களிடம் தொழில்நுட்பத் தேர்ச்சி கிடையாது. இதென்ன வடை சுட்டுச் சாப்பிடும் எண்ணெய்யா?

பெட்ரோலியம். எல்லாவற்றுக்குமே மூலாதாரம்.

எடுக்கும் ஒவ்வொரு சொட்டும் பணம். ஆகவே, இந்த இரு தேசங்களை எக்காரணம் கொண்டும் யாரும் பகைத்துக்கொண்டுவிடத் தயாராக இல்லை.

இரண்டாவது காரணம், பாலஸ்தீனை ஆதரிப்பதால் தமக்கு ஏதாவது லாபம் உண்டா என்று அனைத்து அரபு தேசங்களும் யோசித்தன.

இஸ்ரேலை ஆதரிக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டால் கூடப் பிரச்னை ஏதுமிராது.

ஆனால் பாலஸ்தீனை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய, சோவியத் யூனியனின் ஒட்டுமொத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டிவருமோ என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தது.

தவிரவும் அனைத்து அரபு தேசங்களுமே கொஞ்ச நாள் இடைவெளிகளில் தான் சுதந்திரம் பெற்றிருந்தன.

எதுவும் அப்போது தன்னிறைவு கண்ட தேசமல்ல. உணர்ச்சிவசப்பட்டு சகோதர அரேபியர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, வேண்டாத வம்புகளில் சிக்கிக்கொள்ள நேரிடுமோ என்றும் கவலைப்பட்டார்கள்.

நடந்து முடிந்த யுத்தத்தில் கிடைத்தவரை லாபம் என்று திரும்பிப் போவது தான் தனக்கும் நல்லது; தன் தேசத்துக்கும் நல்லது என்று ஒவ்வொரு தேசமும் நினைத்தன.

ஆகவே, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஆத்மசுத்தியுடன் கையெழுத்திட்டு விட்டார்கள். பாலஸ்தீன அரேபியர்கள் அந்தக் கணம் முதல் நடுத்தெருவுக்கு வந்தார்கள்.

பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை போர் முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கவே இல்லை.

உதவிக்கு வந்தவர்கள்தான் ஓடிவிட்டார்களே தவிர, யுத்தம் முடியவில்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஆனால், இதனை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. சுற்றியிருக்கும் அரபு தேசங்களுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்படியே விஸ்தரித்து, நல்லுறவு கொள்ளவே அது விரும்பியது.

இந்த விஷயத்தில் பென்குரியன் மிகத் தெளிவாக இருந்தார். என்றைக்கு இருந்தாலும் அரேபியர்கள் பாலஸ்தீன் போராளிகளை திரும்ப ஆதரிக்கவோ, அவர்களுக்காக யுத்தம் செய்யவோ முன்வரக்கூடும்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்படாத வண்ணம், நிரந்தரமாக அந்தத் தேசங்களுடன் நல்லுறவுப் பாலம் அமைத்துவிட அவர் மிகவும் விரும்பினார்.

அவர்களைச் சரிப்படுத்திவிட்டால், பாலஸ்தீன் போராளிகளைச் சமாளிப்பது பெரிய விஷயமல்ல என்பது அவர்களது சித்தாந்தம்.

யுத்தத்தின் இறுதியில் வெஸ்ட் பேங்க் என்று அழைக்கப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரைப் பகுதி முழுவதையும் ஜோர்டன் பெற்றிருந்தது. அவர்களுக்குக் கிடைத்த நிலப்பரப்பின் ஓர் எல்லை, ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதி வரை நீண்டிருந்தது. எஞ்சிய மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது.

ஆகவே, யதார்த்தமாகவே ஜெருசலேம் நகரம் இரண்டாகப் பிளக்கப்பட்டது.

ஏற்கெனவே ஊருக்கு நடுவே ஓர் உடைந்த பெருஞ்சுவர் உண்டு. அது தவிரவும் ஒரு மானசீகப் பெருஞ்சுவரை இரு தேசங்களும் ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

ஆனால் அமைதி ஒப்பந்தத்தில், ஜெருசலேம் பற்றிய குறிப்பில் இஸ்ரேல் மிகத் தெளிவாக, வழிபாட்டுச் சுதந்திரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. இரு தரப்பு மக்களும் ஜெருசலேமுக்கு வருகை தருவதிலோ, கோயில்களில் வழிபாடு நடத்துவதிலோ, எந்த அரசும் எந்தப் பிரச்னையும் செய்யக்கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தது. ஜோர்டனும் அதற்கு ஒப்புக்கொண்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

என்னதான் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டாலும் இஸ்ரேல் ஒரு யூத தேசம்.

பாலஸ்தீன் அரேபியர்களை நட்டாற்றில் விட்டாலும் ஜோர்டன் ஓர் இஸ்லாமிய தேசம். ஆகவே, சிக்கல் அங்கிருந்து ஆரம்பித்தது.

ஜோர்டன் வசமிருந்த ஜெருசலேம் நகரின் பகுதிவாழ் யூதர்கள் யாரும் 'சினகா'க்களுக்குச் (கோயில்களுக்கு) செல்ல அனுமதிக்கப்படவில்லை.

யூதர்களின் புனிதச் சுவரான அந்த உடைந்த பெருஞ்சுவர் அருகே நின்று அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஜெருசலேம் நகரில் ஒரு புராதனக் கல்லறை ஒன்று உண்டு. ஒரு சிறு குன்றை ஒட்டிய பகுதியில் அமைந்த கல்லறை.

இந்தக் கல்லறைப் பகுதி, யூதர்களுக்கு ஒரு வழிபாட்டிடம். சுற்றிப்பார்க்கவும் வருவார்கள். நின்று பிரார்த்தனையும் செய்வார்கள். ஆயிரமாண்டு கால சரித்திரம் புதைந்த நிலம் அல்லவா? தொட்ட இடங்களெல்லாம் புனிதம்தான். வழிபாட்டிடம்தான்.

ஜோர்டன் என்ன செய்ததென்றால் இந்தக் கல்லறைக்கு வரும் யூதர்களைத் தடுப்பதற்காகவே அந்த வழியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைத் திட்டத்தை அறிவித்து, உடனடியாக சாலை போடும் வேலையில் இறங்கிவிட்டது.

சாலை என்றால் கல்லறைப் பகுதிக்குப் பக்கத்தில் அல்ல! அதன் மேலேயே. அப்படியொரு கல்லறை அங்கே இருந்தது என்று எதிர்காலம் சொல்லிக் கொள்ளலாமே தவிர, நின்று பார்க்க முடியாது. அமர்ந்து பிரார்த்தனை செய்யவும் முடியாது.

அது மட்டுமல்லாமல், சாலை போடும் பணியில் ஈடுபட்ட ஜோர்டன் தேசத்துப் பணியாளர்கள் சில அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

உதாரணமாக, நூற்றுக்கணக்கான புராதன கல்லறைகள் நிறைந்த அந்தப் பகுதியில் சில கல்லறைகளின் மேலே சிறிய கோபுரங்கள், அல்லது சாளரம் மாதிரியான வடிவமைப்பைச் செய்திருந்தார்கள். அந்த இடங்களையெல்லாம் பணியாளர்கள் பாத்ரூமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

யூதர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பைத்தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இதெல்லாம் யூதர்களை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

அந்தக் கணத்தில் அவர்கள், 'செய்வது ஜோர்டானியர்கள்தானே' என்றெல்லாம் நினைத்துப் பார்க்கமாட்டார்கள். மாறாக, 'முஸ்லிம்கள் அல்லவா இப்படிச் செய்கிறார்கள்' என்றுதான் விரோதம் வளர்த்தார்கள்.

இந்த விரோதமெல்லாம்தான் பின்னால் பாலஸ்தீனிய அரேபியர்கள் மீது மொத்தமாக விடிந்தது.

இதனோடாவது ஜோர்டன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் அத்தனை யூதர்களும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆகவே அத்தனை பேரும் இடம் பெயர்ந்து இஸ்ரேலுக்குள் வந்தார்கள்.

ஜோர்டன் மட்டும் என்றில்லை. இஸ்ரேலைச் சுற்றியிருந்த அத்தனை அரபு தேசங்களுமே யுத்தத்துக்கும் அமைதி ஒப்பந்தங்களுக்கும் பிறகு இப்படித்தான் நடந்துகொண்டன.

பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏதும் செய்யாமல் தமது யூத வெறுப்பை மட்டும் அவை இவ்வாறு வெளிப் படுத்திக் கொண்டிருந்தன.

முடிந்த வரை யூதர்கள் இடம் பெயர்ந்து இஸ்ரேலுக்குள் தஞ்சமாக வந்து சேர்ந்தார்கள். கொள்ளளவு என்று ஒன்று இருக்கிறதல்லவா?

முடியாத யூதர்கள் மொராக்கோவுக்குப் போனார்கள். ஈரானுக்குப் போனார்கள்.

எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் போனார்கள். இடம் பெயர்வது அவர்களுக்கொன்றும் புதிதல்ல' அல்லவா?

ஆனாலும் இஸ்ரேல் அரசு இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு வரியைக் கூட எந்த அரபு தேசமும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை என்பதை கவனித்துக்கொண்டே இருந்தது.

இதை வசமான சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது பற்றி அமைச்சர்கள் கூடி விவாதித்தார்கள்.

அதற்குமுன் உடனடி எதிர்வினையாக ஏதேனும் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? என்ன செய்யலாம்?

இஸ்ரேல் எல்லைக்குள் வசிக்கும் அரேபியர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியது. உள்ளூர் ஆட்சிமன்றக் குழுக்களின் மூலம் ஏற்பாடு செய்து அவர்களுக்குப் பிரச்னைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேல் எல்லைக்குள் இருக்கும் அரேபியர்களை விரட்டியடிப்பது. வெளியிலிருந்து ஒரே ஒரு அரேபியக் கொசு கூட இஸ்ரேலுக்குள் நுழையமுடியாமல் பார்த்துக்கொள்வது.

இஸ்ரேலுக்குள் என்றால் ஜெருசலேத்துக்குள் என்றும் அர்த்தம். இஸ்ரேலின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேம். முஸ்லிம்களுக்கும் புனிதமான ஜெருசலேம்.

யூதர்களாவது வாழ நெருக்கடி என்றால் தாற்காலிகமாக ஜெருசலேத்தை விட்டு ஓடிவிடத் தயங்கமாட்டார்கள். ஆனால் அரேபியர்களோ, உயிரே போனாலும் ஜெருசலேமில் போகட்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

ஆகவே, அந்த இடத்தில் அடிக்கலாம் என்று முடிவு செய்தது இஸ்ரேல் அரசு.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 ஜூன், 2005

58] பாலஸ்தீன் அகதி.
நிலமெல்லாம் ரத்தம் _ பா. ராகவன் 58

ஜெருசலேம் நகரில் வசிக்கும் அரேபியர்களை ஏதாவது செய்து வெளியேற்றுவது. யுத்த சமயத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ, வேறு ஏதாவது காரணங்களை முன்னிட்டோ நகரை விட்டு வெளியேறிய அரபுகள் திரும்பி ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்துவது.

இந்த இரண்டு காரியங்களை ஒழுங்காகச் செய்தாலே அரேபியர்களின் அடிவயிற்றில் அடித்தது மாதிரிதான் என்று முடிவு செய்தது இஸ்ரேல்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த சட்டதிட்டங்களெல்லாம் என்ன ஆயின, எங்கே போயின? என்று யாரும் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

யுத்தத்தின் இறுதியில் மேற்கு ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டுவிட்டது இஸ்ரேல்.

கேட்டால், 'கிழக்குப் பகுதியை ஜோர்டன் எடுத்துக்கொள்ளவில்லையா' என்கிற பதில் அவர்களிடம் தயாராக இருந்தது.

ஜெருசலேம் நகரின் நிர்வாகம் ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு சிறப்புக் குழுவிடம் இருக்கும் என்கிற முன் தீர்மானங்களெல்லாம் காற்றோடு போயின.

கொஞ்சநாள் எல்லோரும் அடித்துக்கொள்வார்கள்; கிடைக்கிற இடங்களிலெல்லாம் போய் முறையிடுவர்கள்; சண்டைக்கு வருவார்கள்தான்.

ஆனால் காலப்போக்கில் அவரவர் தத்தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்; தனக்குச் சிக்கல் ஏதும் இருக்காது என்று நினைத்தது இஸ்ரேல்.

இன்னொரு கணக்கும் அவர்களிடம் இருந்தது. எப்படியும் அமெரிக்காவின் தீவிர ஆதரவு தனக்கு உண்டு என்று அப்போதே தீர்மானமாக இருந்த இஸ்ரேல் அரசு, அமெரிக்க பலத்துடன் அக்கம்பக்கத்து தேசங்களை மிரட்டுவதோ, அவர்கள் மிரட்டினால் எதிர்ப்பதோ தனக்குச் சுலபம்தான் என்று கருதியது.

இந்த இடத்தில், பாலஸ்தீனைச் சுற்றியுள்ள பிற அரபு தேசங்களின் நிலைப்பாட்டை சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

என்னதான் 1948_யுத்தத்தில் அரேபியர்கள் சமரசம் செய்துகொண்டு போகவேண்டி நேர்ந்தாலும், பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான வெஸ்ட்பேங்க் மற்றும் காஸா பகுதிகளை முறையே ஜோர்டனும் எகிப்தும் தன்னுடையதாக்கிக்கொண்டாலும், யூதர்கள் மீதான அவர்களது வெறுப்பில் துளி மாறுதலும் ஏற்படவில்லை.

சொந்தச் சகோதரன் ஏமாற்றப்பட்டதில் தமக்கும் பங்குண்டு என்கிற குற்ற உணர்ச்சியெல்லாம் அவர்களுக்கு இல்லை என்பது உண்மையே. அதே சமயம், சகோதரனின் எதிரி தமக்கும் எதிரி என்கிற நிலைப்பாட்டிலும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை!

இது என்ன விசித்திரம் என்றால், இதற்குப் பெயர்தான் அரசியல். யுத்தத்தின் இறுதியில் தனக்குக் கிடைத்த காஸா பகுதியை ஏன் எகிப்து பாலஸ்தீனியர்களுக்குத் திருப்பித்தரவில்லை?

ஏன் வெஸ்ட் பேங்கை ஜோர்டன், பாலஸ்தீனிய அரேபியர்கள் வசம் ஒப்படைக்கவில்லை? அப்புறம் என்ன சகோதரத்துவம் வாழ்கிறது என்கிற கேள்வி எழலாம். அவசியம் எழவேண்டும்.

எகிப்தும் ஜோர்டனும் மனம் வைத்திருந்தால், பாலஸ்தீனியர்களுக்கு ஐ.நா. பகுத்து அளித்திருந்த அதே நிலப்பரப்பை மீண்டும் அவர்கள் வசமே தந்து ஆளச் செய்திருக்கமுடியும்.

இஸ்ரேலுடன்தான் அவர்கள் மோதினார்கள் என்றாலும் போரின் இறுதியில் பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பு முழுவதும் யாரிடம் இருந்தது என்றால், இந்த இரு சகோதர அரபு தேசங்களிடம்தான்!

இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதி அப்போது சொற்பமே. ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜெருசலேமைத்தான் அவர்களால் ஆக்கிரமிக்க முடிந்ததே தவிர, வெஸ்ட் பேங்க்கையோ, காஸாவையோ அல்ல. அவை இரண்டுமே பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பு, ஐ.நா.வின் திட்டப்படி.

ஆக, 1948_யுத்தத்தைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கி அழகுபார்த்தது இஸ்ரேல் அல்ல; சகோதர அரபு தேசங்களான எகிப்தும் ஜோர்டனும்தான் என்றாகிறது!

இஸ்ரேலுடன்தான் மோதினார்கள்; இஸ்ரேல்தான் எதிரி. இதில் சந்தேகமில்லை. ஆனாலும் யுத்தத்தின் இறுதியில் நிஜ எதிரியாக மறைமுகமாக அடையாளம் காணப்பட்டவை எகிப்தும் ஜோர்டனும்தான்.

அரபு தேசங்களின் சகோதரத்துவ மனப்பான்மை எத்தனை 'உன்னதமானது' என்பதற்கு இது முதல் உதாரணம்.

இதுதான். இந்த ஒரு அம்சம்தான் இஸ்ரேல் தன்னம்பிக்கை கொள்ள ஆதிமூலக் காரணமாகவும் அமைந்தது. என்ன செய்தாலும் தான் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் கருதியதன் காரணம் இதுதான்.

அரபு தேசங்கள் எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் நாய்கள்தான் என்று அவர்களைக் கருதச் செய்ததும் இதுதான்.

இந்த அம்சத்தை மனத்தில் கொண்டுதான், அரபு மண்ணில் காலூன்ற வழிதேடியது அமெரிக்கா.

இதே விஷயத்தை மனத்தில் கொண்டுதான் ஏனைய ஐரோப்பிய நாடுகளும், சோவியத் யூனியனும் கூட அன்றைக்கு அரபு மண்ணின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட வழிதேடிக்கொண்டிருந்தன.

அரேபியர்களின் சகோதரத்துவம் என்பது முற்றிலும் மதம் சார்ந்ததே தவிர, அரசியல் சார்ந்ததல்ல.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியுமானால் பாலஸ்தீன் பிரச்னையின் சிடுக்குகள் மிக்க குழப்பங்களைப் புரிந்துகொள்வதில் பெரிய பிரச்னை இராது.

அதனால்தான் அவர்கள் பாலஸ்தீனியர்களின் சுயராஜ்ஜியக் கனவு பறிபோனது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தமது யூத வெறுப்பை மட்டும் தீவிரமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.

ஜோர்டனைத் தொடர்ந்து அத்தனை அரபு தேசங்களுமே யூதர்களை நிர்தாட்சண்யமாக வெளியேற்ற ஆரம்பித்தன.

ஒவ்வொரு அரபு தேசமுமே தமது தேச எல்லைக்குள் வசிக்கும் அனைத்து யூதர்களும் தமது எதிரிகள் என்று பகிரங்கமாகச் சொல்லத் தொடங்கின.

யூதர்கள் முடிந்தவரை இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தார்கள். முடியாதவர்கள் எங்கெங்கு தஞ்சம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் போகத் தொடங்கினார்கள்.

சிரியா, தனது எல்லைக்குள் குடியேற்றமே கிடையாது என்று அறிவித்துவிட்டது.

மொராக்கோ, யூதர்களை அனுமதித்தது. ஆனால் மதமாற்ற நிர்ப்பந்தங்கள் அங்கே மிக அதிகம் இருந்தன.

1948 _ யுத்தத்தில் இஸ்ரேல் அபகரித்த பகுதிகள் திருப்பித்தரப்பட்டால் ஒருவேளை நிலைமை கொஞ்சம் சீராகலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

ஆனால் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட ஒரு துண்டு நிலத்தையும் விட்டுத்தர முடியாது என்று சொல்லிவிட்டார் பென்குரியன்.

அதே சமயம் எதற்கும் இருக்கட்டும் என்று, தனது கட்டுப்பாட்டு நிலப்பரப்புக்குள் வசிக்கும் அரேபியர்கள் தொடர்ந்து நிம்மதியாக வசிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் சொன்னார்.

இதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றிய கேள்விகள் இருந்தாலும் இஸ்ரேலின் இத்தகைய அறிவிப்பே மற்ற அரபு தேசங்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடத்தைத் தந்தது.

காரணம், பாலஸ்தீனைச் சுற்றியுள்ள பிற தேசங்களுக்கு யுத்தத்தின் இறுதியில் அகதிகளாகப் போய்ச் சேர்ந்த பாலஸ்தீனிய அரேபியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களை என்ன செய்யலாம்; எப்படி வைத்துக் காப்பாற்றலாம் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு அரபு தேசத்தின் எல்லைகளிலும் பாலஸ்தீனிய அகதிகள் முகாம்கள் இருந்தன.

ஒவ்வொரு முகாமும் மைல் கணக்கில் நீளமானது. ஒவ்வொரு முகாமிலும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் தங்க இடம், உண்ண உணவு, வாழ வழி செய்து தரும் தார்மீகக் கடமை அந்தந்த தேசங்களுக்கு இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களில் அவை சிக்கித்தவித்தன. பொருளாதாரப் பிரச்னை முதலாவது. இட நெருக்கடி

இரண்டாவது. அரபு தேசங்கள் எல்லாம் பரப்பளவில் மிகவும் சிறியவை. சிரியா, ஜோர்டன், லெபனான் எல்லாம் மிக மிகச் சிறிய தேசங்கள். நமது வடகிழக்கு மாநிலங்களின் அளவே ஆனவை. இருக்கிற மக்களுக்கே இடம் காணாத அத்தகைய தேசங்கள் அகதிகளை வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிக்கும்?

எகிப்து, லெபனான், ஈராக் ஆகிய மூன்று தேசங்களும் முதன் முதலாக, பாலஸ்தீனிய அகதிகளைத் தமது மக்களுடன் கலந்து வாழ அனுமதிக்க முடியாது என்று அறிவித்தன.

அதாவது அகதி நிலையிலேயே அவர்கள் முகாம்களில் தொடரலாம். ஏதாவது தீர்வு யோசித்து பின்னால் ஒரு வழி காணலாம் என்று இதற்கு அர்த்தம்.

சகோதர முஸ்லிம்கள்!

இதில் சில கேவலமான பேரங்கள் எல்லாம் கூட நடந்தன. சிரியாவின் அப்போதைய சர்வாதிகாரியாக இருந்தவர் பெயர் ஹஸ்னி ஸாயிம் (பிusஸீவீ ஞீணீ'வீனீ). இவர் நேரடியாக இஸ்ரேல் அரசிடமே ஒரு பேரத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதாவது, அகதிகளாக இஸ்ரேல் எல்லையிலும் சிரியாவின் எல்லையிலும் உலவிக்கொண்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் பாலஸ்தீனியர்களை சிரியா தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும். அதற்குப் பிரதி உபகாரமாக கலீலீ கடல் பகுதியின் சரிபாதியை ஆண்டுகொள்ளும் உரிமையைத் தனக்கு இஸ்ரேல் விட்டுக் கொடுக்குமா? என்று கேட்டார்.

இதைப்போன்ற மட்டரகமான பேரங்களுக்கு இஸ்ரேல் சம்மதிக்காததுதான் அதன் மிகப்பெரிய பலம்.

பென்குரியன் மிகத்தெளிவாகச் சொன்னார். 'எப்படி நாங்கள் உலகெங்கிலுமிருந்து வரும் யூதர்களை ஏற்றுக்கொள்கிறோமோ, எப்படி உலகெங்கிலுமிருந்து வந்து குடியேறும் அனைத்துத் தரப்பினரையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதோ, அதேபோல அந்தந்த அரபு தேசங்களுக்கு அகதிகளாக வருவோரையும் குடியேற விரும்பி வருவோரையும் அந்தந்த தேசம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று அவர் சொன்னார்.

இதில் கவனித்துப் பார்க்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு.

இஸ்ரேல் தன்னைப் பற்றி மட்டும் இந்த வரிகளில் சொல்லிக் கொள்ளவில்லை. மாறாக தனது ஆதர்சம் அமெரிக்காதான் என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறது.

தமது இனத்தவர்கள் எங்கிருந்து வந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற வந்தால் அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது பார் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம், அமெரிக்காவையும் மறைமுகமாகப் புகழ்ந்து, அந்தப் பக்கம் கொஞ்சம் சுகமாகச் சாய்ந்துகொண்டது.

இது, இருப்பியல் சிக்கல்கள் மிக்க அரபு தேசங்களுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது.

சுதந்திர தேசமாக ஆன தினம் முதலே இஸ்ரேல் தனது தீவிர அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்தத் தவறியதில்லை.

அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்கியதுடன் முடிந்துவிடுவதில்லை அல்லவா?

ஒரு தேசத்தின் நிர்மாணம் என்பது பெரிதும் பொருளாதாரம் மற்றும் ராணுவக் கட்டுமானத்தைச் சார்ந்தது. மத்தியகிழக்கைப் பொறுத்தவரை ராணுவக் கட்டுமானம் என்பது பொருளாதாரக் கட்டுமானத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக எதிரிகளைத் தவிர சுற்றிலும் வேறு யாருமே இல்லாத இஸ்ரேலுக்கு..

இந்நிலையில் கணக்கு வழக்கில்லாமல் தனக்கு உதவக்கூடிய தேசம் அமெரிக்கா மட்டும்தான் என்று இஸ்ரேல் கருதியதில் வியப்பில்லை.

பதிலுக்கு அமெரிக்காவுக்குத் தான் எந்தெந்த வகைகளிளெல்லாம் உதவி செய்யவேண்டிவரும் என்பது பற்றி அத்தனை துல்லியமாக அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை என்பது உண்மையே.

ஆனாலும், காரணமில்லாமல் அமெரிக்கா தன்னை ஆதரிக்காது என்கிற அளவிலாவது அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அகதிகளைச் சமாளிக்க முடியாத பிற அரபு தேசங்கள் கூடி என்ன செய்யலாம் என்று விவாதித்தன.

இறுதியில் காஸாவும் வெஸ்ட் பேங்க்கும் யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த மண்ணின் மக்கள் மீண்டும் அந்த இடத்துக்கே திரும்பிவிடலாமே என்று நினைத்தார்கள்.

அகதி நிலைமையில் அந்நிய தேசத்தில் வாழ்வதைக் காட்டிலும், சொந்த மண்ணில் அடுத்த நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு வாழ்வதில் அவர்களுக்குப் பெரிய மனச்சிக்கல் ஏதும் இராது என்று தீர்மானித்து அழைப்பு விடுத்தார்கள்.

இதனிடையில் 'பாலஸ்தீன் அகதி' என்கிற தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கை மத்தியக் கிழக்கு முழுவதிலும் ஏராளமாகப் பரவிவிட்டிருந்தது.

ஐரோப்பிய எல்லை வரை அவர்கள் பரவிவிட்டிருந்தார்கள்.

சொந்த தேசத்தில் வாழமுடியாமல் துரத்தப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம்களை வைத்துக்கொண்டு பராமரிக்க யாராலுமே முடியாத நிலையில், மிகவும் திண்டாடித் தெருவில் நின்றார்கள் அவர்கள்.

மீண்டும் நீங்கள் பாலஸ்தீனுக்கு வரலாம் என்று பிற அரபு தேசங்கள் சேர்ந்து குரல் கொடுத்தபோது, எங்கே பாலஸ்தீனியர்கள் அல்லாத பிற அரபு முஸ்லிம்களும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே வந்து சிக்கல் உண்டாக்கிவிடுவார்களோ என்று ஐ.நா. கவலைப்பட்டது.

ஆகவே யார் பாலஸ்தீனிய அகதி என்பதற்கு ஒரு விளக்கம் அளித்தார்கள். 'குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் அவர்கள் பாலஸ்தீனில் வாழ்ந்திருக்க வேண்டும்.'அவர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 ஜூன், 2005
************************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: