Wednesday, March 18, 2009

45.46பால்ஃபர் பிரகடனத்தின் முக்கியப் பகுதி இத்தனை அறியாமையிலா ஒரு கூட்டம்?பகுதி.45-46.

45] பால்ஃபர் பிரகடனத்தின் முக்கியப் பகுதி.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 46

அமெரிக்கா ஒரு வல்லரசாக உருப்பெறுவதற்கு முன்னர், உலகம் பார்த்து பயந்த தேசம், இங்கிலாந்து. அன்றைய இங்கிலாந்தின் படைபலம், பொருளாதார பலம் இரண்டும் இதற்கான காரணங்கள். இவற்றைவிட முக்கியக் காரணம், அன்றைக்கு இங்கிலாந்துக்கு இருந்த காலனிகள் பலம்.

உலகெங்கும் பரவலாக பல்வேறு தேசங்களைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து ஆட்சிபுரிந்துகொண்டிருந்தது இங்கிலாந்து. இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால், எந்தெந்த தேசமெல்லாம் இங்கிலாந்தின் காலனியாக உள்ளதோ, அந்தந்த தேசத்தின் ராணுவமெல்லாம் இங்கிலாந்து ராணுவத்தின் ஒரு பகுதி. அந்தந்த தேசத்தின் இயற்கை வளங்களெல்லாம் இங்கிலாந்தின் வளங்கள். ஆகவே, நினைத்த மாத்திரத்தில் ஒரு மாபெரும் ராணுவத்தை எந்த இடத்துக்கும் அனுப்பும் வல்லமை பெற்றிருந்தது இங்கிலாந்து.

ஆனால் இங்கிலாந்தால்கூட அப்போது முடியாத ஒரு காரியம் உண்டென்றால், அது மத்தியக்கிழக்கில் தன் வேர்களை ஊன்றுவது.

நூறு சதவிகிதம் இஸ்லாமிய ஆட்சி நடந்துகொண்டிருந்த பூமி அது.

ஒரு பக்கம் ஒட்டாமான் துருக்கிய சாம்ராஜ்ஜியம். இன்னொரு பக்கம், பழைய கலீஃபாக்களின் மிச்சங்களாக, பாக்தாத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த சுல்தான்கள்.

ஆங்காங்கே இவர்களுக்குக் கப்பம் கட்டும் குறுநில மன்னர்கள். எப்படிப்பார்த்தாலும் இஸ்லாமியர்கள்தான். அவர்களைத் தவிர இன்னொருவர் கிடையாது.

மத்தியக்கிழக்கில் காலூன்றுவதற்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எல்லா மேற்கத்திய தேசங்களுமே கனவு கண்டுகொண்டிருந்த காலம் அது. உலகப்போர் அதற்கு சரியான சந்தர்ப்பமாக அமைந்தது.

பிரிட்டனும் பிரான்ஸும் போட்டிபோட்டுக்கொண்டு கூட்டணி அமைத்துத் தம் தாக்குதல் வியூகங்களை வகுத்தன.

முந்திக்கொண்டதென்னவோ பிரிட்டன்தான். ஒட்டாமான் சாம்ராஜ்ஜியம் என்று பெருமையாகச் சொன்னாலும் பிரிட்டனின் ராட்சஸப் படைபலத்துக்கு முன்னால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. உக்கிரமாகப் போரிட்டுத் தோற்றுப்போனார்கள் முஸ்லிம்கள்.

இதற்கு இன்னும் சில நுணுக்கமான காரணங்களும் இருக்கின்றன.

துருக்கியில் அப்போது நடந்துகொண்டிருந்தது முஸ்லிம்களின் ஆட்சிதான் என்றபோதும், புவியியல் ரீதியில் துருக்கி ஒரு ஐரோப்பிய தேசம்.

ஆனால் பிற ஐரோப்பிய தேசங்களுடன் ஒட்டமுடியாமல் மத்தியக்கிழக்கின் இஸ்லாமிய தேசங்களுடன் மட்டுமே உறவு கொண்ட தேசம்.

இந்தக் கடுப்பு அனைத்து ஐரோப்பிய தேசங்களுக்கும் உண்டு.

ஆகவே, அவர்கள் திட்டமிட்டு துருக்கியை மத்தியக்கிழக்கின் பிற பகுதிகளிலிருந்து சித்தாந்த ரீதியில் பிரித்துக் காட்டுவதற்காக ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்கள்.

அதன்படி, முஸ்லிம்கள் என்று பொதுவாகக் குறிப்பிடாமல், துருக்கியர்கள், அரேபியர்கள் என்று இரு தரப்பினரையும் எப்போதும் பிரித்தே குறிப்பிட்டு வந்தார்கள். இதனை ஒரு திட்டமிட்ட பிரசார உத்தியாகவும் மாற்றி, மிகத்தீவிரமாகப் பேசியும் எழுதியும் வந்தார்கள்.

இதன் விளைவு, பாமர அரேபியர்களுக்கு, தாங்கள் வேறு; துருக்கியர்கள் வேறு என்னும் எண்ணம் மெல்ல மெல்ல ஏற்பட்டு, காலப்போக்கில் அது மிகத்தீவிரமாக மனத்தில் வேரூன்றத் தொடங்கிவிட்டது.

உலகப்போர் சமயத்தில் பிரிட்டன் இதனைத் தனக்குச் சாதகமான ஓர் அம்சமாகப் பயன்படுத்திக்கொண்டு, கிராமப்புற அரேபியர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, துருக்கி சுல்தானுக்கு எதிராகத் தகவல்கள் சேகரிக்க, ஒற்றறிந்து வரப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.

ஒட்டாமான் சாம்ராஜ்ஜியம் என்பது எத்தனை பெரிய அரசு! ஒரு பேரரசு என்று சொல்வதற்கு முற்றிலும் பொருத்தமான அரசாக இருந்தது அது. அதுவும் எத்தனை நூற்றாண்டுகளாக!

ஆனால் அந்தப் பேரரசு, உலகப்போரில் விழுந்தபோது, அதற்காக கண்ணீர் சிந்தக்கூட யாருக்கும் அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

ஒட்டாமான் துருக்கிய சாம்ராஜ்ஜியம் யுத்தத்தில் விழுந்தது என்கிற தகவல் வந்ததுமே இங்கிலாந்தும் பிரான்ஸும் மிகத் தீவிரமாக உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கிவிட்டன. மிகக் கவனமாகத் திட்டமிட்டு, பேரரசின் பகுதிகளை எப்படிப் பிரிப்பது என்று ஆலோசித்தார்கள். இறுதியில் ஓர் ஒப்பந்தமும் அரங்கேறியது.

இன்றுவரை இங்கிலாந்தும் பிரான்ஸும் ‘அப்படியரு ஒப்பந்தம் நடைபெறவேயில்லை’ என்று அடித்துக்கூறி வந்தாலும், அந்த ஒப்பந்தத்துக்கு ஒரு பெயர் கூட இருக்கிறது. ‘ஸ்கைஸ் பிகாட் ஒப்பந்தம்’ (Skyes Picot Agreement).

நடக்கவேயில்லை என்று இரு தேசங்களும் அடித்துக்கூறும் ஒரு ஒப்பந்தம், பெயருடன் எப்படி வெளியே வந்தது?

அது ஒரு சுவாரசியமான கதை. முதல் உலகப்போர் சமயத்தில்தான் ரஷ்யாவில் உள்நாட்டுப் புரட்சி உச்சகட்டத்தைத் தொட்டிருந்தது. ஜார் மன்னர்களுக்கு எதிராகத் திரண்டெழுந்த மக்கள், கம்யூனிஸ்டுகளைத் தம்மைக் காக்கவந்த கர்த்தராகவே கருதிய சமயம் அது.

புரட்சியின் உச்சகட்டக் காட்சிகளுள் ஒன்றாக, கம்யூனிஸ்ட் வீரர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றை ஒரு சமயம் சூறையாடிக்கொண்டிருந்தார்கள். அப்படி சூறையாடியபோது அகப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த ‘ஸ்கைஸ் பிகாட் ஒப்பந்தம்!’

படித்துப் பார்த்தார்கள். அடடா, இங்கிலாந்தும் பிரான்ஸும் மத்தியக்கிழக்கைக் கூறு போட திட்டம் வகுக்கிறார்களே என்று கவலைப்பட்டு, உடனடியாக அந்த ஒப்பந்த நகலை நம்பகமான தூதுவர் ஒருவர் மூலம் துருக்கிக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

இப்படித்தான் முஸ்லிம்களுக்கு அந்த ஒப்பந்த விவரமே தெரியவந்தது, கம்யூனிஸ்டுகளின் மூலம்!

உடனே அவர்கள், இங்கிலாந்தின் மிகத் தீவிர ஆதரவாளராக அப்போது இருந்த மெக்கா நகரின் ஷெரீப், ஹுசேன் என்பவரிடம் கொடுத்து, விசாரிக்கச் சொன்னார்கள்.

அதுநாள் வரை இங்கிலாந்து தம்மை எதுவும் செய்யாது என்று திடமாக நம்பிக்கொண்டிருந்தவர் அவர். ஆகவே, நம்பிக்கையுடன் அந்த நகலை இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி, ‘இது என்ன விவகாரம்?’ என்று கேட்டார்.

“Nonsense, It is a figment of Bolsvik’s imagination!” என்று பதில் எழுதிவிட்டது இங்கிலாந்து. அதாவது, இதில் உண்மை இல்லை; இது ரஷ்யப் புரட்சியாளர்களின் கற்பனை. தங்கள் கற்பனைக்குத்தான் அவர்கள் இப்படியரு பொய்யான வடிவம் தந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

சொன்னார்களே தவிர, நடந்தது வேறு.

ஸ்கைஸ் பிகாட் ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருந்ததோ, அதன்படிதான் இங்கிலாந்தும் பிரான்ஸும் துருக்கியப் பேரரசை கூறு போடத் தொடங்கின.

பாலஸ்தீனை இங்கிலாந்து எடுத்துக்கொண்டது.

1917 டிசம்பர் 9-ம் தேதி அலன்பே (Allenby) என்கிற தளபதியின் தலைமையில் ஒரு படையை ஜெருசலேத்துக்கு அனுப்பிவிட்டார்கள். மறுபுறம், கவ் ராட் என்கிற பிரெஞ்சுத் தளபதி தலைமையிலான படை சிரியாவுக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது.

படை நுழைகிறது என்றால் அதிகாரம் மாறிவிட்டது என்று அர்த்தம்.

கண்மூடித்திறக்கும் நேரத்தில் பாலஸ்தீன் இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் சிரியா, பிரெஞ்சு காலனிகளுள் ஒன்றாகவும் ஆகிப்போயின.

இந்தப் பக்கம் இந்த வைபவங்கள் நடந்துகொண்டிருந்தபோதே, அங்கே இங்கிலாந்தில் (பின்னாளில் மிகப் பிரசித்தி பெற்ற) பால்ஃபர் பிரகடனத்தை வெளியிட்டார்கள்.

இன்றைக்கு வரை இஸ்ரேல், பாலஸ்தீன் விவகாரங்கள் அனைத்துக்கும் ஆதிமூல காரணமாக விளங்கிய மாபெரும் பிரகடனம் அது.

ஆர்தர் பால்ஃபர் என்கிற அன்றைய இங்கிலாந்து வெளிவிவகாரத்துறைச் செயலாளர் மூலம் வெளியிடப்பட்ட இந்தப் பிரகடனத்தின் சாரத்தை ஒரு வரியில் சொல்லுவதென்றால், பாலஸ்தீனில் யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்றை உருவாக்கியாகவேண்டும் என்பதுதான். அதை மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து மன்னரின் பெயரால் அப்பிரகடனம் அறிவித்திருந்தது. (His Majesty’s Government views with favour of establishment in Palestine of a Nation Home for the Jewish People)

இந்த அறிக்கையின் இன்னொரு பகுதி, ‘இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் பொது உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது’ என்றும் சொல்கிறது. (Nothing shall be done which may prejudice the civil and religious rights of exisiting non Jewish communities in Palestine.)

உலகில் எத்தனையோ தேசங்கள் தொடர்பாக எவ்வளவோ பிரகடனங்கள் இதற்கு முன்னும் பின்பும் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் எந்த ஒரு பிரகடனமும் பால்ஃபர் பிரகடனம் அளவுக்கு நயவஞ்சகமும் சூழ்ச்சியும் மிக்கதல்ல.

பிரிட்டன் ஏன் அத்தனை தீவிரமான யூத ஆதரவு நிலை எடுத்தது, அரேபியர்களுக்கு துரோகம் செய்தாவது யூதர்களைக் கொண்டு பாலஸ்தீனில் குடியமர்த்தலாம் என்று எதனால் முடிவு செய்தது? என்கிற கேள்விக்கெல்லாம் ஆதாரபூர்வ பதில் எதுவும் கிடையாது!

முன்பே பார்த்தது போல, யூதர்களின் ராஜதந்திர நடவடிக்கைகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவது தவிர வேறு வழியும் கிடையாது.

கொஞ்சம் பணம் செலவு செய்து ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி வீடு கட்ட முடியும் என்பது நமக்குத் தெரியும். ஏராளமாகப் பணம் செலவு செய்து ஒரு நாட்டையே கூடக் கட்டமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள் யூதர்கள்.

பால்ஃபர் பிரகடனத்தின் மிக முக்கியப் பகுதி இதுதான்:
‘இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் சிவில் உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது’.

காலம் காலமாக பாலஸ்தீன் என்பது அரேபிய முஸ்லிம்களின் தாயகமாக விளங்கும் தேசம். எப்படி அது யூதர்களின் பூர்வீக பூமியோ, அதே போலத்தான் அரேபியர்களின் பூர்வீக பூமியும் கூட. யூதர்களாவது பிழைப்பு நிமித்தம் இடம்பெயர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பல்வேறு தேசங்களுக்குப் போய்விட்டவர்கள். ஆனால், பாலஸ்தீன அரேபியர்கள் யுத்தகாலம் தொடங்கி, செத்தகாலம் வரை அங்கேயே இருந்து வந்தவர்கள்.

அப்படிப்பட்ட அரேபிய முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘யூதர் அல்லாதோர்’ என்னும் பதத்தை உபயோகிப்பதன்மூலம், பாலஸ்தீன் மண்ணின் மைந்தர்கள் என்பவர்கள் யூதர்கள்தான் என்கிற கருத்தாக்கத்தை மறைமுகமாக முன்வைத்தது பால்ஃபர் பிரகடனம்.

இதனால்தான் சரித்திர ஆசிரியர்கள், இப்பிரகடனத்தை வடிகட்டிய அயோக்கியத்தனம் என்று வருணிக்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் இதில் கவனிக்கலாம். அரேபியர்களின் சிவில் உரிமைகளுக்கும் மத உரிமைகளுக்கும் பங்கம் வராது என்று பால்ஃபர் பிரகடனம் சொல்கிறது. இதில் மறைபொருளாக இருக்கும் விஷயம் என்ன?

அரேபியர்களுக்கு இனி அரசியல் உரிமைகள் என்று எதுவும் கிடையாது என்பதுதான்! சிவில் உரிமைகளைப் பயன்படுத்தி, வேண்டுமானால் ஓட்டுப் போடலாமே தவிர, தேர்தலில் நிற்க முடியாது! ஆட்சியில் பங்கு கேட்க முடியாது.

சுருக்கமாகச் சொல்லுவதென்றால், பால்ஃபர் பிரகடனத்தின்படி, பாலஸ்தீன் மண்ணில் நிறுவப்படும் இஸ்ரேல் என்கிற தேசத்தின் அரசியல் உரிமைகளில் அரேபியர்கள் பங்கு கோர முடியாது.

இரண்டாந்தரக் குடிமகன்களாக அவர்களும் அங்கே வாழலாமே தவிர, யூதர்களின் தேசமாகத்தான் அது இருக்கும். அரபி அல்ல; ஹீப்ருவே தேசிய மொழியாக இருக்கும். இஸ்லாம் அல்ல; யூத மதமே தேசிய மதமாக இருக்கும்.

டாக்டர் அலி அப்துல்லா அல் தாஃபா என்கிற வரலாற்றாசிரியர், Arab Israel conflict என்றொரு நூல் எழுதியிருக்கிறார். இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைகளைப் பொறுத்தமட்டில் அந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.

தமது நூலில் டாக்டர் அப்துல்லா, பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் பால்ஃபரின் நாட்குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார். அந்த நாட்குறிப்புகளை அவர் எப்படிப் பெற்றார் என்கிற விவரம் தெரியாவிட்டாலும், அந்தக் குறிப்பிட்ட வரிகள் மிகவும் முக்கியமானவை:

“ஜியோனிசம் சரியான பாதைதானா என்பது பற்றிக் கவலையில்லை. ஆனால், அதன் அடிப்படையில் யூதர்களுக்கான தேசம் ஒன்றை பாலஸ்தீனில் உருவாக்கித்தான் ஆகவேண்டும். அப்படியரு யூததேசம் உருவாகுமானால், பாலஸ்தீனில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழு லட்சம் அரேபியர்களின் நிலை என்ன ஆகும் என்று கேட்கிறார்கள். அதுபற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.’’

இதைவிடக் கேவலமான, அருவருப்பூட்டக்கூடிய, சற்றும் பொறுப்பில்லாத ஒரு கருத்தை அந்தக் காலகட்டத்தில் வேறு யாரும் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 1 மே, 200546]

46.இத்தனை அறியாமையிலா ஒரு கூட்டம்?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 47

உலகப்போரை ஒரு சாக்காக வைத்து துருக்கிய ஒட்டாமான்களின் மீது தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனைக் கைப்பற்றிய பிரிட்டன், அங்கே முதன் முதலில் மேற்கொண்ட பணி என்னவெனில், ஜெருசலேத்தை ஆராய்வது.

யூத, கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் ஜெருசலேம். புனித நகரம், புண்ணிய நகரம் என்கிற பிம்பங்களுக்கு அப்பாலும் பார்க்கும்போதே பரவசம் ஏற்படுத்தக்கூடிய ஜெருசலேம்.

இந்த ஒரு நகருக்காகத்தானே இத்தனை கலாட்டாக்கள் என்று சற்றே வியப்புற்றார் பிரிட்டிஷ் படைகளின் தளபதி ஜெனரல் ஆலன்பெ. ஆயினும் உடனே சுதாரித்துக்கொண்டு, ஜெருசலேம் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் வசிக்கும் மக்களை முழுவதுமாக பிரிட்டிஷ் பேரரசின் விசுவாசக் குடிமக்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்.

அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, உணவுப்பிரச்னையைத் தீர்ப்பது. யுத்தகாலத்தில் ஏற்பட்ட பஞ்சம், யுத்தம் முடிவதற்கு முன்னதாகவே மறையும் விதத்தில் எகிப்திலிருந்து தேவையான உணவுப்பொருள்களை ஜெருசலேத்துக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார். க்யூவில் நிற்காமல், முட்டி மோதாமல், அடிதடிக்கு ஆட்படாமல், கேட்கிற அனைவருக்கும் கேட்கிற அளவு உணவுப்பொருள் தரப்படவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தது பிரிட்டிஷ் படை.

அதே மாதிரி, டைஃபாய்ட், காலரா போன்ற நோய்க்கிருமிகள் அப்போது பாலஸ்தீன் முழுவதும் நீக்கமறப் பரவியிருந்தன. ஏராளமான மக்கள் இந்த நோய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்கள், தடையின்றிக் கிடைக்க பாலஸ்தீனுக்கும் லண்டனுக்கும் சிறப்பு விமான சர்வீஸ்கள் இயக்கப்பட்டன.

மூன்றாவது காரியம், ஊழல் ஒழிப்பு. அன்றைய பாலஸ்தீனில் காலராவைக் காட்டிலும் மோசமான கிருமியாகப் பரவியிருந்தது ஊழல். பெரும்பாலும் நீதிமன்றங்களில்தான் இது ஆரம்பித்தது. மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நீதிபதிகள், தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் வெளியே பேரம் பேசுவதென்பது சர்வசாதாரணமாக இருந்தது.

இதனைக் கவனித்த பிரிட்டன், அதிகாரத்தைக் கையில் எடுத்த உடனேயே பாலஸ்தீன் முழுவதிலும் இயங்கிய நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கும் இதர ஊழியர்களுக்கும் அவர்களே நம்ப முடியாத அளவுக்கு சம்பளத்தை உயர்த்தியது. சம்பளத்தை உயர்த்துவதன் மூலம் லஞ்சத்தைத் தடுக்கலாம் என்பது பிரிட்டனின் கணக்கு. அது ஓரளவுக்கு உபயோகமாகவும் இருந்தது என்பதைச் சொல்லிவிடவேண்டும். பெரும்பாலும் நிலப் பிரச்னைகள் காரணமாகவே எழுந்த வழக்குகளில் அதன்பிறகு ஓரளவு நியாயமான தீர்ப்புகள் வெளிவரத் தொடங்கின.

இதெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போதே முதல் உலகப்போர் ஒருமாதிரி முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.

அடித்துக்கொண்டது போதும் என்று வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு எல்லாத் தேசங்களும் அவரவருக்கான லாபங்களுடன் ஊரைப் பார்க்கப் போய்விட்டன. இதில் பிரிட்டனுக்குக் கிடைத்த மிகப்பெரிய லாபம், பாலஸ்தீன்.

பாலஸ்தீனின் ஆட்சி அதிகாரம் பிரிட்டனைச் சேர்ந்தது என்று வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1919-ம் ஆண்டு ‘தேசங்களின் கூட்டமைப்பு’ (ஐநா உருவாவதற்கு முந்தைய கூட்டமைப்பு.)

ஹெர்பர்ட் சாமுவேல் என்கிற ஓர் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலை பாலஸ்தீனுக்கான தனது ஹைகமிஷனராக நியமித்து அனுப்பிவைத்தது. இந்த ஹெர்பர்ட் சாமுவேல் சாதாரணமான மனிதர் அல்லர். பால்ஃபர் பிரகடனத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர்.

வெளியுறவுச் செயலாளர் பால்ஃபரின் பெயரால் அது அழைக்கப்பட்டாலும் அந்த நான்கு வரிப் பிரகடனத்துக்குள்ளே என்னென்ன இருக்கவேண்டும், ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்த மூளைகளுள் ஒன்று.

எல்லாம் நினைத்தபடியே நடக்கிற சந்தோஷத்தில் பிரிட்டன் ஒரு சுற்றுப் பெருத்திருந்தது.

பாலஸ்தீனத்து அரேபியர்கள்தான் நடு ரோடுக்கு வந்துவிட்டிருந்தார்கள்.

ஒருபக்கம் பிரிட்டன், பால்ஃபர் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மும்முரமாக இருந்தது. இன்னொரு பக்கம் உலகெங்கிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனை நோக்கி தினசரி ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே யூத நிலவங்கி வாங்கிப்போட்டிருந்த இடங்களில் அவர்கள் தமக்கான குடியிருப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தார்கள். அதுதவிர, புதிதாகவும் நேரடியாகவும் நிலங்கள் வாங்கி, வீடு கட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

விசா பிரச்னைகள் கிடையாது, விசாரணைகள் கிடையாது, எதுவும் கிடையாது. யூதரா? வாருங்கள் பாலஸ்தீனுக்கு என்று கதவை அகலமாகத் திறந்துவைத்துவிட்டது பிரிட்டன்.

விசாவே இல்லாத யூதர்கள் கூட அப்போது ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனுக்கு வந்து சேரமுடிந்தது.

இதெப்படி என்று வியப்பாக இருக்கலாம். ஒரு உதாரணம் காட்டினால் புரியும்.

பல்வேறு ஐரோப்பிய தேசங்களிலிருந்து எப்படியாவது கட்டைவண்டி பிடித்தாவது பாலஸ்தீன் எல்லைக்கு வந்துவிடுவார்கள். அப்படி வந்து சேருபவர்கள் யூதர்கள்தானா என்று மட்டும் பார்ப்பார்கள்.

எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்ததும் ஒரே ஒரு ஏஜெண்டு உடன் வருவார். அவரிடம் ஒரு விசா மட்டும் இருக்கும். எல்லையில் உள்ள செக்போஸ்டில் அந்த ஒரு விசாவைக் காட்டிவிட்டு பத்து ‘டிக்கெட்’களை உள்ளே அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

எல்லையைக் கடந்து அவர்கள் போனதும் ஏஜெண்ட் திரும்பவும் எல்லைக்கு வந்து மீண்டும் அதே ஒரு விசாவைக் காட்டி இன்னும் பத்துப் பேரை அழைத்துப் போய்விடுவார். இப்படி ஆயிரக்கணக்கான ஏஜெண்டுகள். பல்லாயிரக்கணக்கான யூதர்கள்!

வளைப்பதற்கு சௌகரியமான விதிகளையே வைத்திருந்தார்கள். யூதர்களை வாழவைப்பது ஒன்றே நோக்கம்.

இதன்பின்னால் பல்லாயிரக்கணக்கான அரேபியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே என்பது பற்றி பிரிட்டனுக்கு எந்த அக்கறையும் இல்லை.

மனிதர்கள் வீடுகளில் வசிக்கட்டும்; நாய்கள் வீதிகளில் சுற்றட்டும்’ என்று ஒரு பிரிட்டன் ராணுவ அதிகாரி சொன்னாராம்!

அரேபிய முஸ்லிம்கள் மீது பிரிட்டன் அன்று காட்டிய வெறுப்புக்குக் காரணம் எதுவுமே இல்லை என்பதுதான் விசித்திரம்.

யூதர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக இப்படியொரு காரியத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

இத்தாலியில் உள்ள ஸான் ரெமோ என்கிற இடத்தில் நடைபெற்ற லீக் ஆஃப் நேஷன்ஸ் மாநாட்டில் எடுத்த முடிவின்படி இன்றைய இஸ்ரேலின் அத்தனை பகுதிகள் தவிர, காஸா, மேற்குக் கரை, கோலன் குன்றுப் பகுதிகளின் ஒரு பாகம், முழு ஜோர்டன் நிலப்பரப்பு ஆகியவை அன்றைக்கு பிரிட்டனுக்கு வழங்கப்பட்டிருந்தன.

தோராயமாக அன்றைக்கு இந்தப் பகுதியில் வசித்துவந்த மக்கள் தொகை சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இதில் பதினொரு சதவிகிதம் பேர் யூதர்கள். மற்ற அத்தனைபேரும் அரேபிய முஸ்லிம்கள்.

தேசத்தில் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள்தான்.

காதில் விழும் அத்தனை குரலுமே அரபிதான்.

குழுவாக வாழும் வழக்கமுள்ள யூதக்குடியிருப்புப் பகுதிகளிலாவது ஹீப்ரு சத்தம் கேட்கிறதா என்றால் கிடையாது. அவர்கள் அத்தனைபேரும் பல தலைமுறைகளாக ஐரோப்பிய தேசங்களில் வாழ்ந்தவர்கள்.

ஹீப்ருவின் சிதைந்த வடிவமான இட்டிஷ் என்கிற மொழிதான் ஐரோப்பிய யூதர்களுக்குத் தெரியும். மிகக் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்பட்டு, அழிந்துபோய்விட்ட ஒரு மொழி இது. ஐசக் பாஷ்விஸ் சிங்கர் என்கிற ஓர் எழுத்தாளர் மட்டும் இந்த இட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதிப் புகழ்பெற்றவர். (அவரது இட்டிஷ் மொழிப் படைப்புகள் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து பரவலானபின் அவருக்கு நோபல் பரிசுகூடக் கிடைத்தது.) அவர்கள் அதைத்தான் பேசினார்கள்.

ஜூன் 1922-ம் ஆண்டு தேசங்களின் கூட்டமைப்பு பாலஸ்தீன் ஆட்சியதிகாரம் தொடர்பான தனது இறுதி திட்டவரைவை வெளியிட்டது.

பிரிட்டனின் நீண்டநாள் கோரிக்கையான “பாலஸ்தீனுக்குள் ஒரு யூத தேசத்தை நிறுவுவது மற்றும் எஞ்சிய மக்களின் சிவில், மத உரிமைகளைப் பாதுகாப்பது’’ என்கிற திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்தத் திட்டவரைவின் பல பின்னிணைப்புகள், பாலஸ்தீனுக்கு சாரிசாரியாக வந்துகொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யூதர்களின் குடியுரிமைக்கு மிக ஜாக்கிரதையாக உத்தரவாதம் வழங்கும் பணியை கவனமாகச் செய்தன.

விசா பிரச்னை தொடங்கி விசாரணைப் பிரச்னைகள் வரை, இருப்பிடப் பிரச்னைகள் தொடங்கி, உத்தியோகப் பிரச்னைகள் வரை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்று வழியை மறைமுகமாக சிபாரிசு செய்தன.

எல்லாமே கண்கட்டு விளையாட்டுகள். பிரிட்டன் ஒரு முடிவு செய்துவிட்டது என்றால் மற்றவர்கள் அப்போது என்ன செய்துவிட முடியும்?

சட்டபூர்வமான, யாருக்கும் புரியாத மொழியில் தனது சம்மதத்தைத் தெரிவிப்பது தவிர, யாருக்கும் வேறு எந்த வழியும் இல்லை என்பதே உண்மை. அவர்களது நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது.

எக்காரணம் கொண்டும், பாலஸ்தீனுக்கு வரும் யூதர்கள் தடுத்து நிறுத்தப்படக் கூடாது; அவர்கள் பாலஸ்தீன் குடியுரிமை பெறுவதிலோ, அங்கு வாழ்வதிலோ எந்தக் குறுக்கீடும் தவறிக்கூட வந்துவிடக்கூடாது. அவ்வளவுதான்.

பெரிய பெரிய தொழிற்சாலைகளின் வாசல்களில் காலை நேரங்களில் நின்று கொஞ்சநேரம் வேடிக்கை பாருங்கள். தினசரி கூலி வேலைகளுக்காக வாசலில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருப்பார்கள். திடீரென்று ஒரு மணியடிக்கும். கதவைத் திறப்பார்கள். காத்திருப்பவர்கள், கடினவேலைகள் செய்யக்கூடியவர்கள்தானா, அவர்களால் அந்தப் பணிகளைச் செய்யமுடியுமா, முடியாதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள்.

காத்திருக்கும் அத்தனை பேரையும் உள்ளே விட்டுக் கதவை மூடிவிடுவார்கள். குழுவாகச் சேர்ந்தாவது செய்துமுடித்துவிடுவார்கள் என்கிற கணக்கு.

கிட்டத்தட்ட அப்படித்தான் அன்றைக்கு பாலஸ்தீனுக்குள் யூதர்களை அனுமதித்துக்கொண்டிருந்தார்கள்.

லீக் ஆஃப் நேஷன்ஸின் திட்டவரைவில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உத்தரவாக அல்லாமல் ஒரு கோரிக்கையாக பிரிட்டனிடம் கேட்டிருந்தார்கள். அது, பிரிட்டனின் ஆட்சியதிகாரத்துக்கு உட்பட்ட பாலஸ்தீனிய நிலப்பரப்பில் ஜோர்டன் நதியின் கிழக்குப் பகுதிகளில் மட்டும் யூதக் குடியிருப்புகளை நிறுவுவதைக் கொஞ்சம் நிறுத்திவைக்க வேண்டுமென்பது.

ஜோர்டன் நதியின் மேற்குக் கரை நமக்குத் தெரியும். வெஸ்ட் பேங்க் என்றே குறிப்பிடப்படும் பாலஸ்தீனியப் பகுதி. கிழக்குக்கரை என்பது நதிக்கு அந்தப் பக்கம். இன்றைய ஜோர்டன். அன்றைக்கு அதற்கு டிரான்ஸ்ஜோர்டன் என்று பெயர்.

மன்னராட்சி நடந்துகொண்டிருந்த நாடு அது. உலகப்போரில் மன்னர்களெல்லாம் காணாமல் போய்விட, ராணுவம் ஒன்றே ராஜாவாகிவிட, ஜோர்டனும் பிரிட்டனின் அதிகார எல்லைக்குள் வந்துவிட்டிருந்தது.

ஆனால் நடுவில் சில அரசியல் காரணங்களை முன்னிட்டு ஜோர்டனைத் தனித்து இயங்கச் செய்யலாம் என்று முடிவு செய்ய, பிரிட்டனும் அதற்கு மௌனமாகச் சம்மதித்திருந்தது.

அப்துல்லா என்கிற ஜோர்டானிய மன்னர் மீண்டும் தன் தலைக்குத் தானே முடிசூட்டிக்கொண்டு அங்கே ஆட்சியில் உட்கார்ந்தார். ஜோர்டனின் கிழக்குக்கரைப் பகுதியில் தான் எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை என்று பிரிட்டன் உத்தரவாதம் அளித்து, மேற்குக் கரை தன்னுடையதுதான் என்பதையும் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

கிழக்கு ஜோர்டன், மேற்கு ஜோர்டன் என்று ஒரு சௌகரியத்துக்கு அப்போது சொல்லிக்கொண்டார்கள். இரண்டு பக்கங்களிலும் இருந்தவர்கள் என்னவோ அரேபிய முஸ்லிம்கள்தான். ஆனால் அந்தப் பக்கம் மன்னராட்சி. இந்தப் பக்கம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி.

உண்மையில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அரேபியர்களுக்கு முதலில் புரியவில்லை. அவர்களிடம் சரியான தலைவர்கள் அப்போது இல்லை. ஒரு அமைப்பாகத் திரண்டு பேசவோ, தமது குரலை வெளியிடவோ அவர்களுக்குத் தெரியவில்லை.

யோசித்துப் பார்த்தால் இத்தனை அறியாமையிலா ஒரு மக்கள் கூட்டம் இருந்திருக்கும் என்று வியக்காமல் இருக்கமுடியாது.

அந்தளவுக்கு சரித்திரம் முழுவதும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள், பாலஸ்தீனிய அரேபியர்கள்.

நிலம் அவர்களுடையது. பாத்தியதை அவர்களுடையது. மண்ணின் மைந்தர்கள் என்கிற பெயரும் அவர்களுடையது.

மன்னர்கள் காலத்திலிருந்து பாலஸ்தீனைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அத்தனை யுத்தங்களிலும் அவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள்.

ஆனால் தங்கள் கண்ணெதிரேயே, தங்களைக் கேட்காமலேயே தேசத்தின் இரண்டாந்தரப் பிரஜையாகத் தம்மை யாரோ அறிவிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்!

எந்த யூதர்கள் அங்கே மைனாரிடிகளாக இருக்கிறார்களோ, அதே யூதர்களின் தேசமாக பாலஸ்தீன் மாறி, மெஜாரிடிகளான அரேபியர்கள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடந்தாக வேண்டிய சூழல்!

உலகில் வேறெந்த தேசமும் இப்படியொரு வினோத நெருக்கடிக்கு உள்ளானதில்லை. இப்படியொரு நெருக்கடி உருவானபோதும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் யாரும் திண்டாடித் தெருவில் நின்றதில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 5 மே, 2005
************************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: