முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு இபுறாஹிம் (அலை ) முதல் இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.
வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.
முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
5] கிருஸ்துவமும் யூதர்களும்
நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 5
கிறிஸ்தவ மதத்தின் எழுச்சி, யூதகுலத்துக்கு விடப்பட்ட முதல் மற்றும் மிகப்பெரிய சவால். இதில் சந்தேகமே இல்லை.
கி.பி. 300-ம் ஆண்டு சிரியா, ஆசியா மைனர், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த யூதர்களில் மிகப்பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.
கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஜேம்ஸ், பால் போன்ற இயேசுவின் தோழர்கள் அக்காரணத்தாலேயே சிறைப்பிடிக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் (ஜேம்ஸை யூதர்கள் கல்லால் அடித்துக் கொன்றார்கள். பால், ரோம் நகருக்குச் சென்றபோது மன்னர் நீரோ அவரை சிறையில் அடைத்தார். அங்கேயே அவர் உயிரையும் விட்டார்.) மக்களிடையே மிகப்பெரிய அனுதாபத்தை உண்டாக்கியது.
இது, முன்னைக்காட்டிலும் வேகமாக கிறிஸ்தவம் பரவ உதவியாக அமைந்ததை மறுக்க இயலாது.கிறிஸ்தவம் இப்படிப் பரவத் தொடங்கிய அதே வேளை, ஜுதேயாவின் யூதர்களுக்கு வேறொரு வகையிலும் நெருக்கடி ஆரம்பமானது.
இயேசுவின் சீடர்களால் புதிய ஏற்பாடு எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பாலஸ்தீன் என்பது (அப்போது பலெஸ்தீனா) வடக்கே சிரியா, லெபனான் தொடங்கி தெற்கே எகிப்தின் சில பகுதிகள்வரை நீண்டதொரு மிகப்பெரிய நிலப்பரப்பு. அதில் ஜுதேயா என்கிற இஸ்ரேலின் இடம் மிகச் சொற்பமானது. ஆனபோதும் (ரோமானிய ஆளுகைக்கு உட்பட்ட அளவில்) அப்போது அது தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
ஹெரோத் மன்னன் இருந்தவரை, ரோமானிய சக்கரவர்த்திக்கு அவர் யாராக இருந்தாலும் மிக நெருக்கமானவராக இருந்தான். இதனால் படையெடுப்பு போன்ற ஆபத்துகள் ஏதும் ஜுதேயாவுக்கு இல்லாமல் இருந்தது. அங்கே ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அது ஹெரோதால் மட்டுமே உண்டாக்கப்படக் கூடியதாக இருந்தது.கி.மு. நான்காம் நூற்றாண்டில் ஹெரோத் இறந்ததும், ரோம் அதிகாரபீடம் ஜுதேயாவை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டது.
அதன்பிறகு, ஹெரோத் மாதிரி முடிசூடிக்கொண்டு யாரும் ஆட்சிபுரிய முடியவில்லை. ரோமானிய மன்னரின் பிரதிநிதியாக கவர்னராக மட்டுமே ஆள முடிந்தது. அது, ஹெரோதின் மகனே ஆனாலும் சரி.ஹெரோதின் மரணம் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்கு இப்படித்தான் இஸ்ரேல், ரோமானியக் காலனியாக இருக்கவேண்டியிருந்தது.
ரோம் அதிகாரபீடம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப் படவேண்டியிருந்தது. அரசியல் ரீதியில் இதனால் பெரிய பிரச்னைகள் ஏதுமில்லாத போதும் மத ரீதியில் அவர்களுக்குச் சில தர்மசங்கடங்கள் இருந்தன.
காரணம், அப்போது ரோமில் திட்டவட்டமான மதம் என்று ஏதும் கிடையாது. ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாடுகள் இருந்தன.
பெரும்பாலும் மக்களுக்கு மன்னரே கடவுள். ரோமில் பரவியிருந்த யூதர்களாலேயே இதனைச் சகிக்க முடியவில்லை என்கிறபோது, இந்த "மன்னரே கடவுள்" திட்டம் ஜுதேயாவுக்கும் பொருந்தும் என்றொரு சட்டம் கி.பி 40-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அப்போது ரோமானிய மன்னராக இருந்தவரின் பெயர் காலிகுலா). அவர்தான், இனி ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் தன் சிலையை மட்டுமே வைத்து, தன்னை மட்டுமே தொழவேண்டும் என்றொரு விபரீத உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசியல் ரீதியிலான எந்தவிதத் திணிப்பையும் சகித்துக்கொள்ளத் தயாராக இருந்த யூதர்களால், இந்த வழிபாட்டுத் திணிப்பை மட்டும் ஏற்க முடியவில்லை. யூதர்களுக்கு ஒரே கடவுள். அவர்கள் தம் கடவுளை ஜெஹோவா என்று அழைப்பார்கள். அவரைத்தவிர வேறு யாரையும் தொழ அவர்கள் தயாராக இல்லை. (இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே "ஒன்றே கடவுள்" என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டிருந்த மதம் யூத மதம்தான்.)ஆகவே அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இப்படியரு உத்தரவுக்கு அடிபணிவதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று முழங்கினார்கள்.ஜுதேயாவின் அப்போதைய கவர்னராக இருந்தவர், ஆக்ரிப்பா-1 என்பவர்.
அவர், நிலைமையை எடுத்துச் சொல்லி விளக்கம் அளிப்பதற்காக ரோமுக்குப் போனார். யூதர்களின் வழிபாட்டு முறை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. திடீரென்று அதை மாற்றச் சொல்வது முடியாத காரியம். ரோமானிய மன்னரின் மீது அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் தொழுவதற்குரிய கடவுளாக அவரை எந்த யூதரும் ஏற்கமாட்டார்கள் என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்து ஒருவாறு தெரியப்படுத்திவிட்டார்
ஆக்ரிப்பா-1.
அவருடைய நல்லநேரம், ரோமானிய மன்னர் காலிகுலா, கோபமடையாமல், ஜுதேயாவின் தேவாலயங்களில் தன்னுடைய சிலையை வைத்துத் தொழவேண்டுமென்கிற அரசு உத்தரவைத் திரும்பப்பெற முடிவு செய்தார்.ஆனாலும் போராட்டத்தில் இறங்கியதால் கைதுசெய்யப்பட்ட யூதர்களை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்கள் யாவரும் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று நினைத்தார்.
அரசர் சொல்வதைக் கேட்டால் அது ராஜ விசுவாசம். கேட்க மறுத்தால் ராஜதுரோகம். ராஜதுரோகக் குற்றச்சாட்டுக்குத் தண்டனை என்றால், அது மரணம் மட்டுமே. இதனடிப்படையில் ஆயிரக்கணக்கான ஜுதேயா யூதர்கள் மரணத்தின் வாசலில் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, சற்றும் எதிர்பாராத வகையில் மன்னர் காலிகுலா அவரது அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்.
ரோமில் நிகழ்ந்த ஆட்சிமாற்றம், இங்கே இஸ்ரேல் யூதர்களின் உயிரைக் காப்பாற்றியது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கி.பி. 66-ம் ஆண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜுதேயா என்கிற இஸ்ரேலில் வேறெந்தப் பிரச்னையும் பெரிதாக எழவில்லை. சுதந்திர வேட்கையோ, தனிநாடு கோரிக்கையோ அவர்களிடம் இல்லை.
பாலஸ்தீனப் பெருநிலத்திலிருந்த மற்ற சில நாடுகளும் கூட இப்படி ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இயங்கின என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகவே படவில்லை.
ரோமானியர்கள், ஆளப்பிறந்தவர்கள். நாம் அடங்கி வாழவேண்டியவர்கள். இது இயல்பாக மக்கள் மனத்தில் ஊறிப்போயிருந்தது.கி.பி.66-ல்தான் அங்கே முதல்முதலில் ஒரு புரட்சி ஏற்பட்டது. புரட்சி செய்தவர்களும் யூதர்களே.
ஜெருசலேமை முற்றிலுமாக ரோமானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, ஒரு முழுமையான யூத சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட அந்தப் புரட்சியை "ஸிலாட்" என்கிற அமைப்பினர் முன்னின்று நடத்தினார்கள்.
ஒட்டுமொத்த ஜெருசலேம் யூதர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, ஸிலாட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையோர்தாம். அவர்களது புரட்சி, மக்களுக்கு சந்தோஷத்தைக் காட்டிலும் பயத்தையே தந்தது.
ஏனெனில், அவர்கள் எதிர்ப்பது ஒரு சாதாரண தேசத்தையோ, குறுநில மன்னனையோ அல்ல. மாபெரும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை எதிர்த்துப் புரட்சி செய்ய ஆரம்பித்திருந்தார்கள். இது நிச்சயம் அபாயகரமானது என்று கருதினார்கள்.
ஆனால், புரட்சிக்காரர்கள் மிகச் சுலபமாக ஜுதேயா கவர்னரின் ராணுவத்தைச் சிதறடித்து ஜெருசலேமைக் கைப்பற்றிவிட்டார்கள். தவிர இஸ்ரேலின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கணிசமான இடத்தை அவர்களால் ஆக்கிரமித்துவிட முடிந்தது. ஆனால், எப்படியும் ஒரு முழுமையான யூத அரசை நிறுவிவிட முடியும் என்று அவர்கள் கொண்ட நம்பிக்கை, அடுத்த ஒரு வருடத்தில் தரைமட்டமானது.
இப்போது, ரோமானியப்படை முழு வேகத்தில் இஸ்ரேலின் மீது தாக்குதலை ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக இழந்த இடங்களை மீட்கத் தொடங்கியது.
கி.பி. 70-ம் ஆண்டு அது நடந்தது. பிரளயம் வந்தது போல இஸ்ரேலுக்குள் நுழைந்த மாபெரும் ரோமானியப் படையன்று, இண்டு இடுக்கு விடாமல் அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தது. புரட்சி செய்த ஸிலாட் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள். கோரதாண்டவம் என்பார்களே, அது!
ஜெருசலேம் உள்பட புரட்சிக்காரர்கள் கைப்பற்றியிருந்த அத்தனை இடங்களையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தியது ரோமானிய ராணுவம். ரோமானியச் சக்கரவர்த்தியின் மகனான டைடஸ் என்பவனே அப்போது ராணுவத் தளபதியாக வழிநடத்திக்கொண்டு வந்திருந்தான். தம்மை எதிர்த்த அத்தனை பேரையும் அவர்கள் கொன்றார்கள்.
தடுத்த சுவர்களையெல்லாம் இடித்தார்கள். கண்ணில்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள். சாலைகள் சிதைந்தன. குளங்கள் உடைந்தன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அவர்கள் வித்தியாசம் பார்க்கவே இல்லை. கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் கதறக் கதறக் கொன்று வீசினார்கள்.
இந்தத் தாக்குதலின் உச்சகட்டம் ஜெருசலேம் நகரில் நிகழ்ந்தது. ஆ, அந்தக் கோயில்! இந்தக் கோயிலை முன்னிட்டு அல்லவா யூதர்கள், ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆணையை முதல் முதலில் எதிர்த்துக் கலகம் செய்தார்கள்? இதைத்தானே ஒட்டுமொத்த யூதர் குலத்துக்கே புனிதத்தலம் என்று சொல்லி, தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள்? அவர்களது ஆணவத்தின் அடையாளமல்லவா இது?
இதன் பழம்பெருமைதானே அவர்களைத் திமிர் பிடித்து ஆடவைத்தது?இனி எக்காலத்துக்கும் யூதர்கள் புரட்சி என்று இறங்க நினைக்கக்கூடாதபடிக்குத் தாக்குதலை முழு வேகத்தில் நடத்தவேண்டும் என்று நினைத்தவர்கள், கோயிலை இடிக்க ஆரம்பித்தார்கள். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அது தூள்தூளாகச் சிதறி, உதிர ஆரம்பித்தது. கதவுகள் பெயர்த்து எடுக்கப்பட்டன.
அலங்கார விளக்குகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தூண்கள் இடிக்கப்பட்டன. மாடங்களில் தீவைத்தார்கள். முன்னதாக வெகு ஜாக்கிரதையாக உள்ளே இருந்த அத்தனை மதிப்புள்ள பொருள்களையும் சுருட்டி வாரி மூட்டைகட்டி ரோமுக்கு அனுப்பிவிட்டார்கள்.
அவற்றுள் முக்கியமானவை, கோயிலின் மிகப்புனிதமான பொருள்களாகக் கருதப்பட்ட தங்கத்தாலான பாத்திரங்களும், வேலைப்பாடுகள் மிக்க, பிரமாண்டமான தங்க மெழுகுவர்த்தித் தாங்கி ஒன்றும். ரோமானியர்களின் படையெடுப்பை, படுகொலைகளைக் கூட யூதர்கள் அமைதியுடன் சகித்துக்கொண்டிருந்திருப்பார்கள்.
ஆனால் ஜெருசலேம் தேவாலயத்தை அவர்கள் தாக்கத் தொடங்கியதும், பொறுக்கமுடியாமல் எதிர்த்துப் போரிட வீதிக்குத் திரண்டு வந்தார்கள்.ஆனால், பிரமாண்டமான ரோமானியப் படையின் எதிரே ஜெருசலேம் யூதர்கள் வெறும் கொசு. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் யூதர்கள் அந்தப் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிறது வரலாறு.
இதைத்தவிர, ஜெருசலேம் தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த மதகுருக்களைத் தனியே நிற்கவைத்துக் கழுவிலேற்றினார்கள் ரோமானியர்கள்.
ஜெருசலேம் நகரமே ஒரு மாபெரும் குப்பைத்தொட்டி போலக் காட்சியளித்தது. எங்கும் பிணங்கள். ரத்தம். இடிபாடுகளின் இடையே கேட்ட கதறல் ஒலிகள். வல்லூறுகள் வானில் வட்டமிட்ட வேளையில் கொள்ளையடித்த பொருள்களை மூட்டைகட்டிக்கொண்டு ரோமானியப்படை ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தது.
இரண்டாவது முறையாகக் கட்டப்பட்ட அந்த ஆலயம் மீண்டும் இடிக்கப்படும் என்று முன்னரே யூகித்துச் சொன்ன இயேசுவைத் தான் அப்போது ஜெருசலேம் நகரத்து யூதர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.கிறிஸ்தவத்தின் மீதான அவர்களது வெறுப்பு இன்னும் பல மடங்காக உயர ஆரம்பித்தது. நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 டிசம்பர், 2004
*********************
6. பிரித்து ஆளும் சூழ்ச்சி.
நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 6
ஒரு கோயிலை இடிப்பதென்பது எப்பேர்ப்பட்ட சரித்திர வடு என்பது மற்ற யாரையும் விட நமக்கு மிக நன்றாகத் தெரியும்
.
முதல் தலைமுறைக்குக் கண்ணைவிட்டு அகலாத காட்சியாகவும், எந்தத் தலைமுறைக்கும் நெஞ்சைவிட்டு நகராத சம்பவமாகவும் அப்படியே படிந்துவிடக்கூடியது அது.
யூதர்களைப் பொறுத்தவரை அப்படியரு சம்பவத்தைத் தம் வாழ்நாளில் இரண்டாவது முறையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். கி.பி. 70-ம் ஆண்டு ரோமானியத் தாக்குதலுக்கு இலக்காகி, இடிக்கப்பட்ட அந்தத் தேவாலயம் இன்றுவரை மீண்டும் கட்டப்படவில்லை.
இன்னொரு தேவதூதன் இறங்கிவந்து மீண்டும் அதைக் கட்டித்தருவான் என்று யூதகுலம் காத்திருக்கிறது. இடிந்த கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அவர்கள் திரும்ப எடுத்து அடுக்க முயற்சி செய்யவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள்.
படையெடுப்பின் ஞாபகார்த்தமாக இன்னும் மிச்சமிருக்கும் கோயில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியைத்தான் அவர்கள் தம் புனிதத்தின் மிச்சமாக வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கதையல்ல. உண்மையிலேயே இன்று உலகெங்கும் பரவி வசிக்கும் (இஸ்ரேலில் மட்டும் தொண்ணூறு சதவிகிதம்) சுமார் ஐம்பது லட்சம் யூதர்களுக்கும் அதுதான் நம்பிக்கை. அதுதான் ஞாபகார்த்தம்.கோயிலை தேவதூதன் வந்து கட்டித்தருவான். உடைந்த மனங்களை யார் வந்து கட்டித்தருவார்கள்?
அதுதான். அந்தத் தருணம்தான். முதல்முதலாக யூதர்கள் தம்மையரு தனித்தீவாக்கிக்கொண்டுவிட முடிவு செய்த தருணம் அதுவேதான். தமது மதத்துக்கும் கலாசாரத்துக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் எந்தக் காலத்திலும் மற்றவர்களால் ஆபத்து இருந்தே தீரும் என்று ஜுதேயா யூதர்களுக்கு அன்று உறுதியாகத் தோன்றியது.
முக்கியமாக, "இயேசுவைக் கொன்றவர்கள்" என்று கிறிஸ்தவப் பிரசாரகர்கள் மிகத்தீவிரமாக உலகெங்கும் சொல்லிக்கொண்டு போனது மாபெரும் அவமானமாக அவர்களின் வாழ்வின் மீது கவிந்து நின்றது.
மிகக்கூர்மையாக கவனிக்கவேண்டிய விஷயம் இது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட காலத்தில் ஜுதேயா யூதர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். லட்சத்தைக் கூடத் தொடவில்லை. ஆயிரங்களில்தான் இருந்தது அவர்களது எண்ணிக்கை.
இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுந்து விண்ணேறிய சம்பவத்தையும் அடுத்து, அதே ஜுதேயா யூதகுலம்தான் இரண்டாகப் பிரிகிறது. இயேசுவைப் பின்பற்றி, அவர் பேசிய மொழிகளின் அடியற்றி வாழ முடிவெடுத்தவர்கள், கிறிஸ்தவர்கள் எனப்பட்டார்கள். அவர்களேதான் மிச்சமுள்ள தமது பூர்வீகக் குலத்தவரை அப்படிப் பழிக்கவும் தொடங்கினார்கள். வேற்று இனத்தவர்கள் அல்லர். முக்கியமாக, அராபியர்கள் அல்லர்.
இந்தச் சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோது பாலஸ்தீன அராபியர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களது தேவதூதர் அப்போது பிறக்கவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகள் அவர்கள் காத்திருந்தே தீரவேண்டும்.
அதுவரை தமக்குத் தெரிந்த சிறுதெய்வங்களை (முக்கியமாக, கற்களை நட்டு வணங்கும் வழக்கம் அராபியர்களிடையே அதிகம்.) வணங்கிக்கொண்டு, உழுது பிழைத்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போதைய பிரச்னை, அராபியர்களுக்கும் யூதர்களுக்குமானதல்ல. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமானது. யூதர்களுக்கும் ரோமானியர்களுக்குமானது.
(ரோம் அப்போது கிறிஸ்தவத் தலைமையகமாக ஆகியிருக்கவில்லை. மன்னர் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகள்தாம் அங்கேயும்.) ரோமானிய ஏகாதிபத்தியம், கிறிஸ்தவத்தின் அசுரவேக வளர்ச்சி என்கிற இரண்டு காரணிகள்தாம் யூதர்களின் அன்றைய பிரதானமான பிரச்னைகள்.ஆகவே கோயிலில் இடிக்கப்பட்ட சுவரை அவர்கள் தம் மனங்களுக்குள் எழுப்பிக்கொண்டார்கள்.
யூதகுலம் என்பது இறைவனால் "தேர்ந்தெடுக்கப்பட்ட" ஓர் இனம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து, யூதர்களுக்கு இடையிலான ஒற்றுமையைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
தமக்குச் சவால்விடுகிற சக்திகள் அனைத்தையுமே அவர்கள் சாத்தானாகக் கருதத் தொடங்கினார்கள்.ரோமானியர்களுக்கு எதிராக முதல் கலகத்தை உண்டாக்கிய "ஸிலாட்" இயக்கம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. முன்னைவிட வலுவானதாக - முன்னைவிட ஆதரவாளர்கள் நிறைந்த ஓர் இயக்கமாக - முன்னைவிட திட்டமிட்டுச் செயல்படக்கூடிய அமைப்பாக!
அந்தக் காலத்தில் ரோமானியக் காலனிகளாக இருந்த எல்லா இடங்களிலும் "தாம் ரோமின் குடிமக்கள்" என்று சொல்லிக்கொள்வது ஒரு கௌரவமான விஷயமாகக் கருதப்பட்டது.
முதல் முதலில் கலாசாரச் செழுமை கொண்டதொரு சமூகமாக மேற்கில் ரோமானிய சாம்ராஜ்ஜியமே சொல்லப்பட்டது. இது ஓரளவு உண்மையும்கூட. அடிப்படைப் பொருளாதார வசதி, அடிப்படைக் கல்வி இரண்டிலும் அன்றைய ரோமானிய மன்னர்கள் தீவிர கவனம் செலுத்தியதே இதன் காரணம். கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த சமூகம், மேம்பட்ட சமூகமாக வருணிக்கப்படுவதில் வியப்பில்லை.
ஆனால் இதெல்லாம் ரோமில் மட்டும்தானே தவிர மத்தியக்கிழக்கில் பரவியிருந்த ரோமானியக் காலனிகள் அனைத்திலும் அல்ல.
பாலஸ்தீன் தவிர அன்று ரோமானியக் காலனிகளாக இருந்த பெர்சியா, பாபிலோன், (இன்றைய ஈரான், ஈராக்), எகிப்து போன்ற இடங்களிலும், பொருளாதாரமல்ல; வறுமையே தாண்டவமாடியது.
கல்வியெல்லாம் சிறுபான்மையோரின் ஆடம்பர விஷயமாக இருந்தது. வாய்வார்த்தைக்கு "ரோமானியக் குடிமக்கள்" என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, உண்மையில் அவர்கள் பரிதாபத்துக்குரிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். விளைச்சல் வருமானமெல்லாம் ரோமுக்குப் போய்க்கொண்டிருக்க, ஏழைமையும் குறுங்குழு மனப்பான்மையும் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்க்கையாக இருந்தது.
இந்நிலையில், ஜுதேயா (இஸ்ரேல்) யூதர்களின் ஸிலாட் இயக்கம் மீண்டும் புத்துருவம் கொண்டு சிலிர்த்து எழ ஆரம்பித்தபோது, பாலஸ்தீனுக்கு வெளியே வசித்துவந்த யூதர்களும் அவர்களை ஆதரிக்க முன்வந்தார்கள். தேச எல்லைகளால் தாங்கள் பிரிந்திருந்தாலும் "யூதர்கள்" என்கிற அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த ஒற்றுமை அவசியம் என்று கருதினார்கள்.
யூதர்களின் எழுச்சியில் இந்தச் சம்பவம் மிக மிக முக்கியமானதொன்று. உலகின் எந்த மூலையில் அவர்கள் பிரிந்து வசித்தாலும் ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்தே தீர்வது என்கிற முடிவை முதல் முதலில் எடுத்தது அப்போதுதான். இன்றைக்கும் உலகின் எந்த மூலையில் உள்ள எந்த ஒரு யூதருக்கு என்ன பிரச்னை என்றாலும் அந்த நாட்டு அரசல்ல; இஸ்ரேல் அரசுதான் முன்னால் வந்து நிற்கிறது!
அதேபோல் இஸ்ரேலின் பிரச்னை எதுவானாலும் அது தன் சொந்தப் பிரச்னை என்றே எந்த நாட்டில் வசிக்கும் யூதர்களும் நினைக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் அதாவது, பாலஸ்தீன மண்ணில் யூதர்களின் தனி நாட்டை உருவாக்கியே தீருவது என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை யூதர்களின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் ஆரம்பித்தபோது ஒரே ஓர் அழைப்பைத்தான் விடுத்தார்கள். அதுவும் மென்மையாக. மிகவும் ரகசியமாக. "யூதர்களே, இஸ்ரேலுக்குக வாருங்கள்!"அவ்வளவுதான்.
லட்சக்கணக்கான யூதர்கள், காலம் காலமாகத் தாங்கள் வசித்து வந்த நாடுகளை அந்தக் கணமே துறந்து, சொத்து, சுகங்கள், வீடு வாசல்களை அப்படியே போட்டுவிட்டு இஸ்ரேலுக்குக் கிளம்பிவிட்டார்கள். இஸ்ரேல் நிச்சயமாக உருவாக்கப்பட்டுவிடுமா என்று அவர்கள் கேட்கவில்லை.
புதிய இடத்தில் தாங்கள் வசிக்க சௌகரியங்கள் இருக்குமா என்று பார்க்கவில்லை. வேலை கிடைக்குமா, வீடு கிடைக்குமா, வாழ விடுவார்களா, யுத்தங்களைச் சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.ஒரு சொல். ஒரு கட்டளை. ஒரே முடிவு. யூதர்கள் என்கிற ஓர் அடையாள நிமித்தம் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கதையைப் பின்னால் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
இதற்கெல்லாம் ஆரம்பக் காரணியாக அமைந்த "ஸிலாட்" இயக்கத்தின் மறுபிறப்பை ஒட்டி நடந்த சம்பவங்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
ஜெருசலேம் நகர ஆலயத்தை ரோமானியர்கள் இடித்தது, கி.பி. 70-ம் ஆண்டில். அதன் தொடர்ச்சியாகச் சுமார் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் யூதர்களுக்கும் ரோமானியர்களுக்குமான யுத்தங்கள் விட்டுவிட்டு நடந்துகொண்டுதானிருந்தன. ஜெருசலேம் யூதர்களுக்கு, பாலஸ்தீனுக்கு வெளியே இருந்த யூதர்கள் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.
அடிபணியக்கூடாது என்பது மட்டும்தான் அவர்களது திடசித்தமாக இருந்தது. யூதர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். தாங்கள் வசிக்கும் நிலப்பரப்பைத் தாங்களே ஆளத் தகுதி படைத்தவர்கள்.
ரோமானியச் சக்கரவர்த்திக்கு அடிவருடிக்கொண்டிருக்க இனியும் அவர்கள் தயாராக இல்லை. ரோமானியச் சக்கரவர்த்திக்குப் பெரிய படை இருக்கலாம். ஆள் பலமும் பணபலமும் இருக்கலாம். ஆனால் யூதர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. யுத்தத்தில் வீரமரணம்தான் என்பது தெரிந்தே அவர்கள் துணிவுடன் இறங்கினார்கள். வெல்வதைக்காட்டிலும், தம் எதிர்ப்புணர்வைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டு இருக்கவே அவர்கள் அப்போது விரும்பினார்கள்.
ஏனெனில், ரோமானியப் படைகளை எதிர்த்து வெற்றி பெற இயலாது என்பதை அவர்கள் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள்.
கி.பி. 73-ம் வருடம் அது நடந்தது. சாக்கடல் ஓரத்தில் உள்ள மஸதா என்கிற இடத்தில் யூதர்கள் மீது ரோமானியர்கள் தாக்குதல் நிகழ்த்தினார்கள். யூத குல வரலாற்றில் அப்படியரு கோரசம்பவம் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.
யுத்தமும் மரணமும் வாழ்வின் ஓர் அங்கம் என்று முடிவு செய்துவிட்ட யூதர்கள் ஒருபுறம். ஒரு யூதக் கொசுவும் உயிருடன் இருக்கக்கூடாது என்கிற வெறியுடன் மோதிய ரோமானியப்படை மறுபுறம். ரோமானியர்களைப் பொறுத்தவரை, யூதர்கள் சுயராஜ்ஜியத்துக்காக நிகழ்த்தும் கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் அது ஒரு பகுதி.
யூதர்களுக்கோ, சுயராஜ்ஜியம் என்பது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது அவர்களின் சுயமரியாதை. காலனியாதிக்க ஒழிப்பை முன்னிட்ட சுய ஆஹுதி.மிகவும் கோரமான தாக்குதல் அது.
முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுடன் ஆரம்பமான யுத்தம். எப்படியும் ரோமானியர்கள்தான் வெல்லப்போகிறார்கள் என்பது தெரிந்தே யூதர்கள் தம் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள்.
ஆனால் ரோமானியர்கள் நேரடி யுத்தத்தைக் காட்டிலும் அந்த முறை கெரில்லா முறைத் தாக்குதலையே அதிகம் மேற்கொண்டார்கள். இரவில் கிராமம் கிராமமாகப் புகுந்து தீவைத்துவிட்டு, அலறியோடும் யூதர்களை வெட்டிக்கொன்றார்கள். குழந்தைகளை உயரே தூக்கிக் கழுத்தை நெரித்து அப்படியே கடலில் வீசினார்கள்.
கண்ணில் பட்ட யூதப்பெண்கள் அனைவரின் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது. யூதர்களின் கால்நடைகளை வெட்டி வீதிகளில் எறிந்தார்கள். வீடுகள் இடிக்கப்பட்டன. கல்விக்கூடங்கள், கோயில்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன.
ரோமானியர்களிடம் பிடிபடுவதை விரும்பாத பல யூதக்குடும்பங்கள், அகப்படுவதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொண்டுவிடுவது சிறந்தது என்று முடிவு செய்து, கொத்துக்கொத்தாக இறந்துபோனார்கள்.
குடும்பத் தலைவர்கள் தம் மனைவி, குழந்தைகளைக் கொன்று, தன்னையும் மாய்த்துக்கொண்டார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான யூதக்குடும்பங்கள் இப்படித் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன.
மரணத்தின் சகிக்கமுடியாத வாடை நிறைந்த சரித்திரத்தின் இந்தப்பக்கங்கள், இச்சம்பவம் நடந்ததற்குச் சுமார் 1,900 வருடங்கள் கழித்து மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன. 1960களில் பாலஸ்தீனப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள், மஸதா யுத்தத்தின் எச்சங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. ஒரு சிறு குகையினுள் சுமார் இருபத்தைந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டன.
கார்பன் பரிசோதனைகள், அந்த எலும்புக்கூடுகளின் வயதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ரோமானியர்களின் பிடியில் அகப்படுவதை விரும்பாத யூதக்குடும்பங்கள் மொத்தமாகத் தம்மை மாய்த்துக்கொண்ட பெருங்கதையின் ஏதோ ஓர் அத்தியாயம் அது!
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெருசலேம் யூதர்களைச் சமாளிப்பதற்கு ரோமானியர்கள் ஒரு புதிய வழியை யோசித்தார்கள். ஜெருசலேம் நகரின் தெய்வீகப் பெருமையும், அந்தக் கோயிலின் ஞாபகங்களும் இயல்பாகவே அந்த நகரில் வசிப்பவர்களின் மனத்தில் பொங்கும் பெருமித உணர்வும்தான் அவர்களை, சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டுகின்றன என்று கருதிய ரோமானியர்கள், யூதர்களைப் பிரித்து ஆளலாம் என்று முடிவு செய்தார்கள்.
அதன்படி, ஜெருசலேமில் எந்த ஒரு யூதரும் இருக்கக்கூடாது. ஜுதேயாவின் யூதர்கள் அனைவரும் கடற்கரையோர கிராமங்களுக்குப் போய்விடவேண்டியது. (இன்றைய காஸா, அதன் சுற்றுப்புறப்பகுதிகள்.)
இதை ஓர் உத்தரவாகவே ரோமானியப் பேரரசு ஜுதேயாவில் கொண்டுவந்தது.
கடற்கரையோர கிராமங்களில் கூட யூதர்கள் மொத்தமாக வசிக்கக்கூடாது என்று நினைத்தவர்கள், அங்கே ஏற்கெனவே இருந்த பிற அராபிய சமூகத்தினரிடையேதான் துண்டு துண்டாக யூதர்களைக் கொண்டுபோய்ச் சொருகினார்கள்.இப்படிப் பிரித்தாளுவதன்மூலம் யூதர்களின் கிளர்ச்சியை அடக்கலாம் என்று நினைத்தது ரோமானிய அரசு.
ரோமானியர்கள் எதிர்பார்த்தபடியே கிளர்ச்சி அடங்க ஆரம்பித்தது உண்மைதான். ஆனால் கடற்கரையோர கிராமங்களுக்குக் குடிபெயர்ந்த யூதர்கள் வேறொரு காரியத்தை மிகத்தீவிரமாக அப்போது ஆரம்பித்திருந்தார்கள். கிளர்ச்சியைக் காட்டிலும் பெரியதொரு புரட்சி அது.நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12 டிசம்பர், 2004
*******************
அடியில் பகுதிளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்யவும்
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)
(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)
(27-28. ) ( 29-30.. )
( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)
(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)
(55-56.) (57-58.) .(59-60.)
(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)
( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).
(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)
(97-98). (99.100.
No comments:
Post a Comment