Wednesday, March 18, 2009

49.50 ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள். ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள். பகுதி 49-50.

49] ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 49.

ஹிட்லரின் யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம் எத்தகையது என்பதை எத்தனை பக்கங்கள் வருணித்தாலும், அதன் முழு வீரியத்துடன் புரிந்துகொள்வது கஷ்டம். ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அது புரியும். அதுகூட ஓரளவுக்குத்தான்.

ஹிட்லர் காலத்து ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டுமே தெரிந்த பேயாட்டம் அது. ஒரு யூதரை முதல் முறையாகப் பார்க்கும்போதே, அவர் பிணமாக இருந்தால் எப்படியிருப்பார் என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிற கூட்டமாக இருந்தது நாஜிக்கட்சி. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சாதனையாளர்கள் என்று எந்த விதமாகவும் அவர்கள் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. யூதர் என்கிற ஓர் அடையாளம் போதுமானதாக இருந்திருக்கிறது.

துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் அங்கம் அங்கமாக வெட்டியெடுத்துக் கொல்வது, ஆசை ஆசையாக பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்து வேடிக்கை பார்ப்பது, கொதிக்கும் வெந்நீர்த் தொட்டிகளில் போட்டு, உடல் பொசுங்கிப்போவதை ரசிப்பது, விஷவாயு அறைகளில் கூட்டம் கூட்டமாக நிர்வாணப்படுத்தி நிற்கவைத்து, மூச்சுத்திணறி ஒவ்வொருவராக விழுவதைப் பார்த்து மகிழ்வது, சிறு பிளேடு அல்லது ரம்பம் கொண்டு மேல் தோல் முழுவதையும் அறுத்து, உரித்தெடுப்பது என்று எத்தனை விதமான குரூரங்கள் சாத்தியமோ, அத்தனையையும் அவர்கள் யூதர்களின்மீது பிரயோகித்தார்கள்.

எதுவுமே பதிவாகாத கொலைகள். கொன்றது அனைத்தும் காவல்துறையினர் என்பதால் நீதிமன்றங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. அல்லது ‘இன்னார் காணவில்லை’ என்று காவல்துறையினர் ஒவ்வொரு யூதருக்கும் வழங்கும் இறுதிச் சான்றிதழுக்கு ஒப்புதல் தரும் வேலையை மட்டும் நீதிமன்றங்கள் செய்துவந்தன.

1939 செப்டம்பருக்கு முன்புவரை யூதப் படுகொலைகள் ஒரு சம்பிரதாயத்துக்காக, ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. அதாவது கைது செய்து சித்திரவதைக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். ‘ஆமாம், கொன்றோம், அதற்கென்ன?’ என்று நேரடியாகக் கேட்காமல், காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். (அப்போது பல யூதர்கள் திருட்டுத்தனமாக தேசத்தை விட்டு வெளியேறி, அகதிகளாகப் பல நாடுகளுக்குப் போய்க்கொண்டிருந்ததால், தாங்கள் கொல்லும் யூதர்களை சுலபமாக அப்படிக் காணாமல் போனவர்களின் பட்டியலில் நாஜிகளால் சேர்க்க முடிந்தது.)

ஆனால் எப்போது ஜெர்மனி, போலந்தின் மீது படையெடுத்ததோ (செப்டம்பர் 1939), அப்போதிலிருந்து இந்த வழக்கம் அடியோடு மாறிவிட்டது. எப்படியும் ஹிட்லர்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆளப்போகிறவர் என்கிற தீர்மானத்தில், செய்கிற கொலைகளை பகிரங்கமாகவே செய்யலாம் என்று ஜெர்மானிய காவல்துறை முடிவு செய்துவிட்டது.

இதன்பிறகு அவர்கள் விசாரணைக்கு என்று எந்த யூதரையும் தனியே அழைத்துச் செல்வதை விட்டுவிட்டார்கள். பொழுது விடிந்ததும் நேரே ஏதாவது ஒரு யூதக் காலனிக்குப் போவார்கள். அல்லது யூத தேவாலயத்துக்குச் செல்வார்கள். கண்ணில் தென்படும் நபர்களிடம் ‘நீங்கள் யூதர்தானே?’ என்று கேட்பார்கள்.

எந்த யூதரும் தன்னை ஒரு யூதரல்லர் என்று சொல்லமாட்டார். உயிரே போனாலும் அவர் வாயிலிருந்து அப்படியரு வார்த்தை வராது.
ஆகவே, அவர் தலையாட்டுவார். அவ்வளவுதான். அப்படியே போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டடி பின்னால் போய் சுட்டுச் சாய்த்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவார்கள்.

இதில் ஒரு சொல்கூட மிகையே இல்லை. இப்படித்தான் நடந்ததாக அத்தனை மேற்கத்திய சரித்திர ஆசிரியர்களும் வருணித்திருக்கிறார்கள். வீடுகள், தேவாலயங்கள், வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் என்று எங்கெல்லாம் யூதர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஹிட்லரின் கூலிப்படையினர் போல் செயல்பட்ட காவல்துறையினர் சென்று, கொத்துக்கொத்தாகக் கொன்று சாய்த்துக்கொண்டிருந்தார்கள்.

“என்னை ஏன் கொல்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறப்பதற்கு முன் பெர்லின் நகரத்து யூதர் ஒருவர் கேட்டதற்கு, ஹிட்லரின் காவலர் ஒருவர் சொன்ன பதில்:

“நீங்கள் கொலைக்குற்றவாளியாக இருந்தால் கூட மன்னித்துவிடலாம். யூதராக அல்லவா இருக்கிறீர்கள்! வேறு வழியே இல்லை. இறந்துவிடுங்கள்.’’

ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு நடந்துகொண்டிருந்த முதல் வாரத்தில் மட்டும் மொத்தம் பத்தாயிரம் யூதர்கள் ஜெர்மனியில் கொல்லப்பட்டார்கள். கொலை செய்யப்பட்ட அத்தனை பேரையும் ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் போல் குவித்துவைத்து மொத்தமாக எரித்துவிட்டது காவல்துறை.

இதில் சுமார் இரண்டாயிரம் பெண்களும் நானூற்றைம்பது குழந்தைகளும் அடக்கம்.

போலந்தை ஹிட்லர் தன்வசப்படுத்திவிட்ட செய்தி கிடைத்த மறுகணமே மேலும் முந்நூறு யூதர்கள் கொல்லப்பட்டார்கள். நம் ஊரில் ஏதாவது சந்தோஷமான காரியம் நடக்கிறதென்றால் பட்டாசு வெடிப்போம் அல்லவா? அந்த மாதிரி அங்கே மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றால் யூதர்களைக் கொல்லவேண்டும் என்பது ஒரு ‘கலாசாரமாக’ இருந்தது!

இத்தனைக்கும், உயிர்பிழைப்பதற்காக போலந்தின் மேற்கு எல்லையிலிருந்து (மேற்கு போலந்தைத்தான் அப்போது ஹிட்லர் வென்றிருந்தார்.) கிழக்கு எல்லைக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய யூதர்கள் அவர்கள். அவர்கள் ஓடிய பாதையெங்கும் இருந்த கட்டடங்களின் மாடிகளில் காத்திருந்த நாஜிப்படை, கிட்டே நெருங்கும்போது சுட்டு வீழ்த்தினார்கள்.

போலந்தின் சாலைகளெங்கும் ரத்தக் குளங்கள் ஆயின. வேகத்தடைகள் போல ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. நெருங்குவதற்கு பயந்துகொண்டு நாய்களும் நரிகளும் வல்லூறுகளும்கூட அந்தப் பிரதேசத்துக்குள் நுழையவில்லை என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.

எப்படியாவது சோவியத் யூனியனுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதுதான் அப்போது போலந்துவாழ் யூதர்களுக்கு இருந்த ஒரே லட்சியம். ஒவ்வொரு அடியாக ரகசியமாக எடுத்துவைத்து அவர்கள் சோவியத் யூனியனை நோக்கித்தான் அப்போது முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஹிட்லர், ரஷ்யாவுக்குள் காலெடுத்து வைப்பது கஷ்டம் என்பது அவர்களின் நம்பிக்கை.

அத்தனை சீக்கிரம் அவரால் ரஷ்யாவின் மீதெல்லாம் படையெடுக்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ரஷ்யாவின் காலநிலை, ராணுவபலம் உள்ளிட்ட பல காரணங்கள் அதற்கு இருந்தன. ஆனால் போலந்து யூதர்களை ரஷ்யா மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

சட்டவிரோதமாகவாவது ரஷ்ய எல்லையை அடைந்துவிட்டால் பிரச்னையில்லை; ரஷ்யச் சிறைச்சாலைகளில் எஞ்சிய காலத்தைக் கழிக்க நேர்ந்தாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்திருந்தால் போதும் என்று நினைத்தார்கள். எல்லையைக் கடக்க சில ஏஜெண்டுகளின் உதவியைக் கோரிவிட்டு வீடுகளுக்குள் பதுங்கியிருந்தார்கள் போலந்து யூதர்கள்.

இதையறிந்த ஹிட்லரின் படை, உடனடியாக போலந்து முழுவதும் ஆங்காங்கே தாற்காலிக சித்திரவதைக் கூடங்களை நிறுவி, உள்ளே விஷக் கிருமிகளையும் விஷ வாயுவையும் பரப்பி வைத்துவிட்டு, அனைத்து யூதக் குடியிருப்புகளின் மீதும் தாக்குதலைத் தொடங்கியது. உயிர்தப்பி ஓடிவருவோர் அனைவரையும், காத்திருக்கும் ஹிட்லரின் படையினர் கைதுசெய்து உடனடியாக அந்தத் தாற்காலிகக் கூடங்களுக்குள் அடைத்துவிடுவார்கள்.

நூற்றுக்கணக்கானோர் இப்படி பலியாகியிருக்கிறார்கள். சில ஆயிரம்பேர் வாழ்நாள் முழுவதும் தீராத சரும, இருதய, நுரையீரல் நோயாளிகளாக மாறி அவஸ்தைகளுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 1940-ல் ஹிட்லர், டென்மார்க்கையும் நார்வேவையும் கைப்பற்றினார். சரியாக ஒரு வருடத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்தை வசப்படுத்தினார். அதற்கடுத்த வருடம் கிரீஸையும் யூகோஸ்லாவியாவையும் விழுங்கினார்.

இப்படிக் கைப்பற்றப்பட்ட தேசங்களில் எல்லாம் ஹிட்லரின் பிரதிநிதிகள் உடனடியாக ஆளத் தொடங்கினார்கள். ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக அவர்கள் செய்தது, அந்தந்த தேசத்தில் இருந்த யூதர்கள் அத்தனைபேரையும் அள்ளிக்கொண்டுபோய் சித்திரவதைக் கூடங்களில் கொட்டுவது!

சித்திரவதைக் கூடங்களில், தமது ‘முறை’க்காகக் காத்திருக்கும் யூதர்களின் பாடுதான் மிகவும் பரிதாபம். விநாடிப் பொழுதில் கொன்று வீசிவிட்டால்கூட வலி இருக்காது. ஆனால், கொலைகார இயந்திரங்களின் எதிரே வரிசையில் தம் பெயரைச் சொல்லி அழைப்பதற்காக அவர்கள் பல வாரங்கள், மாதங்கள் காத்திருக்கவும் வேண்டியிருந்திருக்கிறது!

அப்படிக் காத்திருக்கும் தினங்களில் அவர்களுக்கு உணவு தரப்படமாட்டாது. குடிப்பதற்கு நீரும்கூட எப்போதாவது கிடைத்தால் உண்டு. இல்லாவிட்டால் அதுவும் இல்லை. முழு நிர்வாணமாக வாரக்கணக்கில் வரிசையில் நின்றுகொண்டே இருக்கவேண்டும். க்யூ நகர்ந்து படிப்படியாக முன்னேறி அவர்களின் முறை வரும்போது, இறப்பதை நினைத்து அவர்கள் ஓரளவு நிம்மதியே அடைவார்கள் அல்லவா!

எந்தக் காலத்திலும், எந்த விதத்திலும் நியாயமே சொல்லமுடியாத இனப்படுகொலை அது. ஒட்டுமொத்த மானுட குலத்தின் குரூரசுபாவம் விசுவரூபம் எடுத்து ஒன்றாகத் திரண்டு ஒரு உருவம் பெறுமானால், அந்த உருவத்துக்கு ஹிட்லர் என்று பெயர். இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்தானா என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

ஹிட்லரைப் பற்றியும், ஹிட்லர் காலத்துக் கொடுமைகள் குறித்தும் நாம் கேள்விப்படுகிற, நமக்குக் கிடைக்கிற தகவல்கள் அனைத்துமே ஓரெல்லைவரை குறைபாடுள்ளவைதான். இத்தனை லட்சம் படுகொலைகள் வெளியே தெரிந்திருக்கின்றனவென்றால், தெரியாத கொலைகள் இன்னும் உண்டு. அவர், ரகசியங்களின் பரமபிதா. வெறுப்பின் மூலக்கடவுள். குரூரத்தின் உச்சபட்சம்.

இன்றைக்குப் பத்து நாட்கள் முன்னர்கூட, ஹிட்லருக்குக் கடைசி தினங்களில், ரகசிய அறையில் மருத்துவம் பார்த்த நர்ஸ் என்று ஒரு தொண்ணூறு வயதுப் பெண்மணி முதல் முறையாக இப்போது வாய்திறந்திருப்பதைப் பார்த்தோம். புதைந்த நாகரிகம் மாதிரி, அது ஒரு புதைந்த அநாகரிகம். தோண்டத்தோண்ட வந்துகொண்டேதான் இருக்கும்.

இவை ஒரு புறம் இருக்க, 22 ஜூன் 1941-ம் ஆண்டு ஹிட்லரின் படை சோவியத் யூனியனுக்குள் நுழைந்தது. ராணுவம் ஒரு பக்கம் சோவியத் யூனியனுக்குள் நுழையும் போதே, யூதக் கொலைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்படையினர் ரஷ்யாவின் கிழக்குப் பக்கம் எல்லையோரம் இருந்த யூத முகாம்களுக்கும் காலனிகளுக்கும் படையெடுத்தன.

சரியாக மூன்று வாரங்கள். அந்த மூன்று வார காலத்துக்குள் மொத்தம் சுமார் ஐம்பத்தைந்தாயிரம் யூதர்களை அவர்கள் கொன்றுகுவித்தார்கள். அத்தனைபேரும் அகதிகளாக அங்கே வந்து தங்கியிருந்தவர்கள். உலக சரித்திரத்தில் ஏன், உலக யுத்தத்தில்கூட மூன்று வாரங்களில் இத்தனை பேரை ஒருபோதும் கொன்றதில்லை. யாரும் தப்பிக்க முடியாமல் சுற்றிவளைத்து, கண்ணை மூடிக்கொண்டு நாளெல்லாம் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று பார்க்கவேயில்லை. கண்ணை மூடிக்கொண்டு என்றால், நிஜமாகவே கண்ணை மூடிக்கொண்டு! ஒருநாளைக்குக் குறைந்தது ஐயாயிரம் பேரைக் கொல்வது என்று செயல்திட்டம் போட்டுக்கொண்டு கொன்றார்கள். கொன்று குவித்த பிணங்களின் மீதே ஏறி நின்று மேலும் சுட்டார்கள். அதுவும் போதாமல், வீடுகளிலிருந்து மக்களைத் தரதரவென்று இழுத்துவந்து ஒரு பெரிய குழி வெட்டி உள்ளே மொத்தமாகத் தள்ளி, சுற்றி மேலே நின்று சுட்டார்கள்.

வெறியடங்காமல், மலைப்பாறைகளை டிரக்குகளில் ஏற்றி வந்து அந்தக் குழிகளில் வீசியெறிந்தும் கொன்றார்கள். குழந்தைகள் தனியாகக் கிடைத்தால் அவர்களுக்குக் குதூகலமாகிவிடும். தூக்கி உயரே விசிறியெறிந்து, கீழே விழுவதற்குள் ஏழெட்டு முறை சுட்டார்கள்.

மூன்றுவாரப் படுகொலை என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கோர தாண்டவம் நடந்துமுடிந்து சரியாக எட்டு தினங்கள்தான் அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த ஒரு வாரத்தில் இன்னொரு ஒன்பதாயிரம் பேர்!

கொல்லக்கொல்ல யூதர்கள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்களே என்கிற கடுப்பு, ஜெர்மானிய காவல்துறையினருக்கு. ஒரு காவலர், ரஷ்ய எல்லையில் இருந்து, பெர்லினில் இருந்த தன் மகனுக்கு இப்படியரு கடிதம் எழுதியிருக்கிறார்:

‘மகனே, எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றாலும் யூதர்கள் குலத்தை முழுவதுமாக எங்களால் அழிக்கமுடியவில்லை. ஆகவே, ஜெர்மனியின் அடுத்த தலைமுறையினரின் ‘நலன்’ கருதி, யூதப் பெண்களை கவனிப்பதற்காக நமது மேதகு பிரசிடெண்ட் ஏதாவது சிறப்புத்திட்டம் அறிமுகப்படுத்தினால்தான் நல்லது.’

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 மே, 2005

50] ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 50

முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு, யூத ஒழிப்பு என்பது ஜெர்மானிய அரசின் தலையாய செயல்திட்டங்களுள் ஒன்றானபோது, பார்க்கும் இடங்களில் தென்படும் அத்தனை யூதர்களையும் கொன்றார்கள். ஒரு கட்டத்தில், ஹிட்லரின் சந்தோஷம், தேசிய செயல்திட்டம் என்பதையெல்லாம் தாண்டி, யூதர்களைக் கொல்வதென்பது, ஜெர்மானிய நாஜிகளுக்கு ஒரு நோய் போலவே ஆகிவிட்டது.

ரத்தத்தில் கலந்துவிட்ட தொற்றுநோய். பொழுது விடிந்து பொழுதுபோனால், இன்றைக்கு எத்தனை பேரைக் கொல்வது என்று கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிவிடுகிற அளவுக்குக் கொலைவெறி அவர்களைத் தின்றுகொண்டிருந்தது.

இந்த வெறியின் உச்சகட்ட வெளிப்பாடு, ஹிட்லரின் போலந்து படையெடுப்பைத் தொடர்ந்து தலைவிரித்து ஆடத்தொடங்கியது.
ஆங்காங்கே சில நூறு பேர், ஆயிரம் பேர் என்று நிற்கவைத்துச் சுட்டுக்கொல்வது, நாஜிகளுக்கு அலுத்துவிட்டது. கொல்லத்தான் போகிறோம்; ஏதாவது புதுமையாக யோசித்து அதையும் கலாபூர்வமாகச் செய்யலாமே என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

8 டிசம்பர், 1941-ம் ஆண்டு அது நடந்தது. ஜெர்மன் ராணுவம் கைப்பற்றிய போலந்தின் எல்லையோர கிராமம் ஒன்றில் இருந்த மக்களை வெளியேற்றிவிட்டு வீடுகளையெல்லாம் இடித்துத் தள்ளி, ஒரு பெரிய மரக் கூடாரத்தைக் கட்டினார்கள். ஒரே சமயத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வரை அந்த மர வீட்டில் வசிக்கலாம். அத்தனை பெரிய கட்டடம்.

கட்டுமானப்பணி நான்கு தினங்களுக்குள் நடந்துமுடிந்துவிட்டது. எல்லாம் தயார் என்று ஆனதும், சுற்றி இருந்த சுமார் எட்டு கிராமங்களுக்குப் போய் அங்கெல்லாம் வசித்துக்கொண்டிருந்த சுமார் நான்காயிரத்து ஐந்நூறு யூதர்களைக் கைது செய்து அழைத்து வந்து அந்த மர வீட்டினுள் அடைத்தார்கள்.

மூச்சுவிடக்கூட காற்று நுழையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த கொலைக்களம் அது. நான்கு புறங்களிலும் தலா ஒரே ஒரு வட்ட வடிவ ஓட்டை மட்டுமே இருந்தது. அந்த ஓட்டைகளின் வழியே பெரிய பைப்லைன் ஒன்று உள்ளே செல்லும்படி அமைக்கப்பட்டது. தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, அந்தக் குழாய்களின் வழியே விஷவாயுவை உள்ளே செலுத்தத் தொடங்கினார்கள்.

அத்தனை பெரிய கொலைக்களம் முழுவதும் இண்டு இடுக்கு விடாமல் விஷவாயு நிறைவதற்குச் சரியாக நான்கு தினங்கள் பிடித்தன.
உள்ளே குழுமியிருந்த நான்காயிரத்து ஐந்நூறு யூதர்களும் ஒவ்வொருவராக மூச்சுத் திணறி, ஓலக்குரல் எழுப்பி, செத்து விழுவதை வெளியிலிருந்து ரசித்துக் கேட்டபடி ஜெர்மானியக் காவல்துறையினர் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.

உள்ளே அடைக்கப்பட்டவர்களுள் ஒருவர்கூட உயிருடன் இல்லை என்பது தெரிந்தபிறகுதான் அவர்கள் கதவைத் திறந்தார்கள். (கதவு திறக்கப்பட்டபோது வெளியேறிய விஷப்புகையில் யூதரல்லாத சில போலந்து கிராமவாசிகளும் மடிந்துபோனார்கள்.)

இப்படி அடைத்துவைத்து அணு அணுவாகக் கொல்வது மிகவும் சுலபமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறதே என்று எண்ணிய ஜெர்மானிய காவல்துறையினர், இன்னும் நாலாயிரம் பேரைப் பிடித்துவா என்று ஒரு தனிப்படையை வேறு நான்கு கிராமங்களுக்கு உடனே அனுப்பினார்கள்.

அந்தக் கொலைக்கூடத்துக்கு செம்னோ (Chelmno) என்று பெயர். முதல் நாலாயிரம் பேர் அங்கே மரணமடைந்த ஒரு வார காலத்துக்குள் அடுத்து பத்தாயிரம் யூதர்கள் அதனுள்ளே அடைக்கப்பட்டு விஷப்புகைக்கு பலியானார்கள். ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் யூதர்களை இந்த முறையில் கொல்லமுடிகிறது என்கிற தகவலை, ஜெர்மனியின் அத்தனை காவல் அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு மாநாடு கூட்டினார்கள். பெர்லினில் நடைபெற்ற அந்த மாநாட்டின் இறுதியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எங்கெல்லாம் ஹிட்லரின் ராணுவம் வெற்றி வாகை சூடியபடி போய்க்கொண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் உடனடியாக ஒரு கேஸ் சேம்பர் கட்டிவிடுவது. புதுக்குடித்தனம் போவதற்குமுன் வீட்டைப் பெருக்கி, வெள்ளையடித்து சுத்தம் செய்வது போல, ஒவ்வொரு தேசத்திலும் உள்ள அத்தனை யூதர்களையும் அந்தக் கொலைக்களத்துக்குக் கொண்டுபோய் கொத்தாகக் கொன்றுவிடுவது.

இந்தத் திட்டம் மட்டும் ஒழுங்காக நடந்துவிடுகிற பட்சத்தில் ஓரிரு வருடங்களில் ஐரோப்பாவில் ஒரு யூதர்கூட உயிருடன் இருக்கமுடியாது என்று கணக்குப் போட்டு வேலையை ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால் ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் எத்தனை யூதர்கள் இருக்கிறார்கள், எந்தெந்தப் பகுதிகளில் அவர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற பட்டியல் வேண்டும் என்று காவல்துறை மேலிடம் கேட்டது.

இதற்கென்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, ரகசியமாக ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் வசிக்கும் யூதர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க அனுப்பினார்கள். குடியேற்றத்துறை, சுங்கத்துறை, நகரசபைகளில் ஆங்காங்கே ஆட்களைப் பிடித்து லஞ்சம் கொடுத்து, முன்னதாக அந்தந்த நாடு, நகரங்களில் வசிக்கும் யூதர்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன. நன்றாக கவனிக்க வேண்டும். இதெல்லாம் ஜெர்மனிக்குள் நடந்த விஷயங்கள் அல்ல. ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களிலும் ஆள் வைத்து தகவல் சேகரித்துக்கொண்டிருந்தது, ஜெர்மானியக் காவல்துறை.

‘யூதர்கள் விஷயத்தில் இறுதித்தீர்வு’ என்று ஒரு தலைப்பே இதற்கு வைத்து, தனியே ஒரு ஃபைல் போட்டு, கவனிப்பதற்கு அதிகாரிகளை நியமித்து ஒரு அரசாங்கத் திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டது. பிரிட்டன் உள்பட எந்த தேசத்தையும் ஹிட்லர் விட்டுவைக்க விரும்பவில்லை. கிழக்கே சோவியத் யூனியனிலிருந்து மேற்கே அமெரிக்கா வரை அத்தனை தேசங்களிலும் வசிக்கும் அத்தனை யூதர்களையும் கொன்றுவிட்டு, உலகம் முழுவதும் ஆரியக்கொடியை பறக்கவிடுவேன் என்று வீர சபதம் செய்திருந்தார் அவர்.

1942-ம் ஆண்டு போலந்தில் ஹிட்லரின் படை கட்டிய ‘செம்னோ’ கொலைக்களம் மேலும் விரிவு படுத்தப்பட்டது. ஒரு தாற்காலிகக் கூடாரமாக முன்னர் கட்டப்பட்ட அந்த கேஸ் சேம்பர், நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் உறுதிமிக்க கட்டடமாக, இன்னும் பெரிய அளவில் இன்னும் நிறைய வசதிகளுடன் (உள்ளே அனுப்பப்படுபவர்களுக்கல்ல; அனுப்புகிறவர்களுக்கு!) அதிநவீன கொலைக்களமாக திருத்திக் கட்டப்பட்டது. கூடவே மேலும் மூன்று கொலைக் களங்கள் மிக அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டன. (இவை, ஜெர்மனி - போலந்து எல்லைப் பகுதியில் உள்ள Belzec, Sobibor, Treblink ஆகிய நகரங்களில் கட்டப்பட்டன.)

உலகப்போரில் ஜெர்மன் ராணுவத்தினர் வெற்றி கண்டு, போகும் வழியெல்லாம் வசிக்கும் யூதர்களை உடனடியாகக் கைதுசெய்து மிகப்பெரிய டிரக்குகளிலும் கூட்ஸ் வண்டிகளிலும் ஏற்றி, இந்தக் கொலைக்களங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். வாகனங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது மாமிசங்களையும் கால்நடைகளையும் ஏற்றிப்போகும் கார்கோ பெட்டிகளில் அடைத்தும் கூட்ஸ் வண்டிகளில் இணைத்து அனுப்பிவிடுவார்கள். வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டால், அது அவர்களின் நல்லகாலம். இல்லாவிட்டால் விஷப்புகை மரணம். வேறு வழியே இல்லை.

இப்படிக்கூட நடக்குமா என்று நினைத்துப் பார்த்தாலே ரத்தக்கண்ணீர் வரத்தக்க கொடூரத்தின் விஸ்வரூபம் அது. செய்யும் கொலைகள் குறித்த குற்ற உணர்ச்சி ஹிட்லருக்கு வேண்டுமானால் இல்லாதிருந்திருக்கலாம். அவரது ஆட்கள் அத்தனை பேருமா ஈவிரக்கமற்றவர்களாக இருந்திருப்பார்கள்?

இதுவும் விசித்திரம்தான். ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் ஓரளவு நினைவிருக்கலாம். ஹிட்லரின் ராணுவத்தில் பணியாற்றிய ஷிண்ட்லர் என்கிற ஒரு தனிநபர், யூதர்கள் விஷயத்தில் சற்றே மனிதாபிமானமுடன் நடந்துகொண்டதைச் சித்திரித்து, ஆஸ்கர் விருது பெற்ற படம் அது. இன்னும் ஓரிரு ஷிண்ட்லர்கள் இருந்திருக்கக்கூடும்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வெறும் காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. முன்பே சொன்னதுபோல, இது ஒரு கடமை என்பதைத் தாண்டி ஒரு நோயாக அவர்கள் மனமெங்கும் பரவிவிட்டிருந்ததுதான் மிக முக்கியக் காரணமாகப் படுகிறது.

மார்ச் 1942-ம் வருடம் ஹிட்லர் தனது ஐந்தாவது கொலைக்களத்தைக் கட்டுவித்தார். இதற்கு ‘ஆஸ்விச்’ (Auschwitz) என்று பெயர்.
முந்தைய நான்கு கேஸ் சேம்பர்களுக்கும் இந்த ஆஸ்விச் சேம்பருக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் இங்கே அனுப்பப்படும் யூதர்கள் உடனடியாகக் கொல்லப்படமாட்டார்கள்.

மாறாக, சில காலம் அந்தச் சிறைக்கூடத்தில் தினசரி ஒரே ஒரு ரொட்டித்துண்டை உண்டு உயிர்வாழ அவர்களுக்கு அனுமதி உண்டு.
எதற்காக இந்தச் ‘சலுகை’ என்றால், இங்கே கொண்டுவரப்படும் யூதர்கள் அத்தனைபேரும் பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருப்பார்கள்.

நோயாளிகள், நோஞ்சான்களை மற்ற நான்கு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, திடகாத்திர யூதர்களை மட்டும் இங்கே கொண்டுவந்து தங்கவைத்து, அவர்களின் உடல் உறுதியைப் பரிசோதிப்பார்கள். உணவில்லாமல், நீரில்லாமல் அவர்களால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று பார்ப்பார்கள்.

பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரு மனிதன் அந்த ஒரே ஒரு ரொட்டித்துண்டை உண்டு, ஓரளவு ஆரோக்கியமாகவே இருந்துவிட்டால், அவனது உயிர் போகாது. மாறாக, ஜெர்மானிய அதிகாரிகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகப் பணியாற்றவேண்டும்.

யூதர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிடவேண்டும் என்று செயல்திட்டம் வகுத்துவிட்டு, அவர்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது எப்படி? இதற்கு ஒரு ஜெர்மானிய காவல்துறை அதிகாரி சொன்ன பதில் : “விநாடிப்பொழுதில் கொன்றுவிடலாம். ஆனால் துளித்துளியாக் கொல்வதில் உள்ள சுகம் அதில் இல்லை. அதனால்தான் அவர்களை அடிமைகளாக்குகிறோம்.”

இதனிடையில் ‘ஆஸ்விச்’ முகாமுக்கு அனுப்பப்படும் யூதர்களைக் கொல்வதில்லை என்கிற செய்தி ஏனைய அப்பாவி யூதர்களுக்குப் போய்ச்சேர்ந்திருந்தது. கைது செய்யப்படும் யூதர்கள், எப்படியாவது தங்களை ஆஸ்விச் முகாமுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக ஜெர்மானியக் காவல்துறையினருக்கு ஏராளமாக லஞ்சம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாக மரணமில்லை என்கிற உத்தரவாதமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது அப்போது!

இந்த வகையில் சில நூறு யூதப் பெண்கள், இரண்டாயிரத்தைந்நூறு குழந்தைகள், எண்பது கிழவர்கள் ஆகியோர் ஆஸ்விச்சுக்கு வந்து சேர்ந்தார்கள். இது நடந்தது 1942-ம் ஆண்டு மே மாதத்தில்.
முகாம் அதிகாரிகளுக்கு மிகவும் குழப்பமாகிப்போனது.

திடகாத்திரமானவர்களை மட்டும்தானே இங்கே அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்; எதற்காக பெண்களும் கிழவர்களும் குழந்தைகளும் வருகிறார்கள் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஒருவேளை மற்ற முகாம்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ; உடனடியாகக் கொன்று ‘இடத்தை காலியாக்கி’ வைத்துக்கொள்வதற்காக இப்படியரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து, அந்தக்கணமே அந்த முகாமுக்கு வருகிறவர்களுக்கு ஒரு ரொட்டி கொடுக்கிற வழக்கத்தை நிறுத்திவிட்டார்கள்.

மாறாக, அந்த பேட்சில் வந்த பெண்கள், குழந்தைகள், கிழவர்களை உள்ளே அனுப்பி, பழையபடி விஷப்புகையைப் பரவவிடத் தொடங்கிவிட்டார்கள்.
இறப்பதற்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்த அந்த அப்பாவி யூதர்கள் அந்தக் கணமே காலமாகிப்போனார்கள்!

இவர்கள் கொஞ்சகாலமாவது உயிர்பிழைத்திருப்பதற்காக லஞ்சம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்கிற தகவலோ, வருபவர்களை மேலதிகாரிகள் யாரும் பார்த்து அனுப்பிவைக்கவில்லை; திருட்டுத்தனமாக அங்கே வந்திருக்கிறார்கள் என்பதோ அடுத்த இரண்டு வருடங்கள் வரை அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெரியவே தெரியாது. யாரும் விசாரிக்கக்கூட இல்லை.

அடிமைகளை உருவாக்குவதற்காகவென்று கட்டப்பட்ட அந்த சிறைச்சாலை, மற்றவற்றைப் போலவே உடனடி கொலைக்களமாக மாறி, அடுத்த இரண்டு வருடங்களில் சுமார் பத்துலட்சம் பேருக்கு விஷவாயு மோட்சம் அளித்தது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 மே, 2005
************************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: