Friday, March 20, 2009

67.68 பாலஸ்தீன் விடுதலை இயக்கம் ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில். பகுதி 67-68.

67] பாலஸ்தீன் விடுதலை இயக்கம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 67

பாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது.

ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான் யாசர் அராஃபத் வேண்டிய அளவுக்குத் திருத்தி அமைத்து, போராட்டத்தைத் துரிதப்படுத்தினார்.

ஆகவே, இப்போது பி.எல்.ஓ. பி.எல்.ஓ. என்கிற அமைப்பு 1964-ம் வருடம் ஜூன் மாதம் 2-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.

பாலஸ்தீன் தேசிய கவுன்சில் (Palestinian National Council PNC) என்கிற அமைப்பின் அரசியல் பிரிவுதான் பி.எல்.ஓ. என்கிற பாலஸ்தீன் விடுதலை இயக்கம்.

இந்த பாலஸ்தீன் தேசிய கவுன்சில் என்கிற அமைப்பு, பாலஸ்தீனுக்கு வெளியே பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வந்த பாலஸ்தீனியர்களால் உருவாக்கப்பட்டது.

தங்களால் பாலஸ்தீனுக்குள் நுழைந்து போராட முடியாத காரணத்தால்தான் பி.எல்.ஓ.வை அவர்கள் தோற்றுவித்தார்கள்.

வாய்வார்த்தைக்கு 'அரசியல் பிரிவு' என்று சொல்லப்பட்டாலும், பி.எல்.ஓ. முழுக்கமுழுக்க ஒரு ராணுவ அமைப்புத்தான். பின்னால் இதற்கே தனியானதொரு அரசியல் பிரிவும் உண்டானது வேறு விஷயம்!

பாலஸ்தீன் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் மே மாதம் 1964-ம் ஆண்டு ஜெருசலேத்தில் நடைபெற்றது. கவுன்சிலில் அப்போது மொத்தம் 422 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஜோர்டான், வெஸ்ட் பேங்க், கத்தார், ஈராக், சிரியா, குவைத், எகிப்து, லிபியா, அல்ஜீரியா மற்றும் காஸா பகுதிகளிலிருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.

அத்தனை பேருமே அடிப்படையில் பாலஸ்தீனியர்கள். சந்தர்ப்பவசத்தால் வெளிநாடுகளில் அகதிகளாக வசிக்க நேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதே கூட்டத்தில்தான் பி.எல்.ஓ.வைத் தோற்றுவித்ததும், அகமது அல் ஷக்ரி (Ahmed al shuquiry) என்பவரை அதன் தலைவராக நியமித்ததும் நிகழ்ந்தது.

இந்த அகமது அல் ஷக்ரி, லெபனானைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு பாலஸ்தீனியர். தாய் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெருசலேம் நகரில் சட்டம் படித்துவிட்டு ஐக்கிய நாடுகளுக்கான சிரியாவின் பிரதிநிதியாக 1949-லிருந்து 51 வரை பணியாற்றியவர்.

பிறகு அரபு லீகின் துணைச் செயலாளராகச் சில காலம் பணிபுரிந்துவிட்டு, ஐ.நா.வுக்கான சவுதி அரேபியாவின் தூதராக 1957-லிருந்து 62 வரை வேலை பார்த்திருக்கிறார்.

பெரும்பாலான அரபு தேசங்கள், ஷக்ரி தங்களுக்காகப் பணியாற்ற மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு அக்காலத்தில் அரேபிய தேசங்களின் மதிப்புக்குரிய அரசியல் வல்லுநராக விளங்கியவர் இவர்.

ஆகவே, பி.எல்.ஓ. தொடங்கப்பட்டபோது, அதன் தலைவராக இருக்கச் சரியான நபர் ஷக்ரிதான் என்று தீர்மானித்து அவரைக் கொண்டு வந்தார்கள்.

ஷக்ரி, பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம், பி.எல்.ஓ.வுக்கான முந்நூறு பேர் கொண்ட முதல்நிலை ஆட்சிக்குழு ஒன்றை அமைத்ததுதான்.

பிறகு, பதினைந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அமைத்து, அதற்கு பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்தே ஆள்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். மேற்சொன்ன முந்நூறு பேரும் ஓட்டுப் போட்டு, தேசிய கவுன்சில் உறுப்பினர்களான 422 பேரிலிருந்து 15 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஏற்பாடு.

பி.எல்.ஓ.வே ஒரு நிழல் ராணுவ அமைப்புத்தான் என்றபோதும், நிழலுக்குள் வெளிச்சமாக பி.எல்.ஏ என்று தனக்கென ஒரு தனி ராணுவப் பிரிவையும் பி.எல்.ஓ. ஏற்படுத்திக் கொண்டது.

எப்படி பல்வேறு அரசியல் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்தார்களோ, அதேபோல, பல்வேறு போராளிக் குழுக்களை ஒருங்கிணைத்தே பி.எல்.ஏ. என்கிற Palestine Liberation Army தோற்றுவிக்கப்பட்டது.

அந்தந்தக் குழுக்களின் தனிப்பட்ட நோக்கமும் செயல்பாடுகளும் என்ன மாதிரியாக இருந்தாலும் 'அரபு தேசியம்' என்கிற கருத்தாக்கத்திலும் பாலஸ்தீனை விடுவிப்பது என்கிற நோக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனையாக இருந்தது.

பி.எல்.ஓ.வின் தோற்றமும் ஆரம்ப வேகமும் பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

எடுத்த உடனேயே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடவில்லை. மாறாக, இஸ்ரேலுக்கு வெளியே அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய மக்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

இழந்த பாலஸ்தீனைப் போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் போராட்டத்துக்கு மக்கள் எந்தெந்த வகையிலெல்லாம் பங்களிக்கலாம் என்பதையும் விளக்கிச் சொன்னார்கள்.

பி.எல்.ஓ.வின் இந்த மக்கள் சந்திப்பு ரகசியத் திட்டம், மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது.

பெரும்பாலான பாலஸ்தீனிய இளைஞர்கள், உடனடியாகத் தங்களை பி.எல்.ஓ.வுடன் இணைத்துக்கொண்டார்கள். ஆயுதப் பயிற்சி உள்ள அத்தனை பேரும் பி.எல்.ஓ.வின் ராணுவத்தில் சேரத் தொடங்கினார்கள். அடிப்படைப் பயிற்சி இருந்தாலே போதும் என்று பி.எல்.ஏ. நினைத்தது.

மேல் பயிற்சிகளைத் தாங்களே தர முடியும் என்று கருதி, துப்பாக்கி தூக்கத் தெரிந்த அத்தனை பேரையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படி இணைந்த இளைஞர்கள் அத்தனை பேரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எகிப்து, லெபனான், சிரியா போன்ற தேசங்களில் இருந்த பி.எல்.ஓ.வின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.

இந்தப் பயிற்சிகளுக்கு உலகெங்கிலுமிருந்து, பல்வேறு விடுதலை இயக்கங்களின் தலைவர்களே நேரில் வந்திருந்து வகுப்பெடுத்தார்கள்.

இதற்கெல்லாம் தேவையான நிதியைத் திரட்ட தனியே ஒரு குழு அமைக்கப்பட்டது. பாலஸ்தீன் மக்களின் துயர் துடைப்பதற்காக நிதி சேகரிக்கப் புறப்பட்ட அந்தக் குழுவினர், மத்திய ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி நிதி சேகரித்தார்கள்.

பல தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஏராளமான நிதி அளித்தார்கள் என்பது உண்மையே என்றபோதும் பொதுமக்கள் அளித்த நிதிதான் பி.எல்.ஓ.வினரால் மிக முக்கியமாகக் கருதப்பட்டது.

தீவிரமாக, மிகத் தீவிரமாக இந்தப் பணிகள் நடைபெறத் தொடங்கியதும் 1968-ம் ஆண்டு பாலஸ்தீன் தேசிய கவுன்சில் தன்னுடைய முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டது.

கிட்டத்தட்ட ஓர் அரசாங்க உத்தரவு போலவே காணப்பட்ட அந்த அறிக்கைதான், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்த முதல் தகவல் அறிக்கை என்று சொல்லலாம்.

மிக நீண்ட, விவரமான, ஏராளமான பின்னிணைப்புகள் கொண்ட நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள அந்த அறிக்கையின் பல பத்திகளில் 'இஸ்ரேல் ஓர் ஒழிக்கப்பட வேண்டிய தேசம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (பின்னால் 1993-ல் ஓஸ்லோ உடன்படிக்கை சமயத்தில் இந்தப் பத்திகளை வாபஸ் பெறுவதாக யாசர் அராஃபத் அறிவித்தது பிறகு வரும்.)

இதுதான் ஆரம்பம். இங்கிருந்துதான் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான பாலஸ்தீன் விடுதலைப் படையினரின் நேரடித் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன.

பி.எல்.ஓ.வுக்கு அப்போதெல்லாம் கெரில்லாத் தாக்குதல் முறை தெரியாது. பரிச்சயம் கிடையாது. எங்கோ தொலைதூர குவைத்தில் ரகசிய அறை எடுத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த யாசர் அராஃபத்துக்குத்தான் கெரில்லா தாக்குதல் தெரியும்.
அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைவரான பிறகுதான் அத்தனை பேருக்கும் ஒளிந்திருந்து தாக்கும் கலை பயிற்றுவிக்கப்பட்டது. அதுவரை, நேரடித் தாக்குதலில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

நேரடித் தாக்குதல் என்றால் என்ன?
முதலில் ஓர் இலக்கை நிர்ணயிப்பார்கள். உதாரணத்துக்கு, டெல் அவிவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன். இலக்கு முடிவானதும் ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அங்கே அனுப்புவார்கள்.

டெல் அவிவுக்கு அவர்கள் போய்ச் சேர்ந்ததும் 'நலமாக வந்து சேர்ந்தோம்' என்று யார் மூலமாகவாவது தகவல் அனுப்புவார்கள்.

இந்தத் தகவல் வந்ததும் இன்னொரு குழுவினர் மூலம் தாக்குதலுக்குப் போனவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் ரகசியமாக அனுப்பிவைக்கப்படும்.

பெரும்பாலும் சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். வாழைத் தார்கள், கோதுமை மூட்டைகளுக்கு அடியில் படுத்துக்கொண்டு துப்பாக்கிகள் தனியே பயணம் செய்து உரியவர்களிடம் வந்து சேரும்.

அதன்பிறகு ஒரு நேரம் குறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எதிரே பதுங்கி நின்றுகொண்டு சுட ஆரம்பிப்பார்கள். நான்கைந்து காவலர்கள் இறந்ததும் உள்ளே போவார்கள்.

தேவைப்பட்டால் அங்கும் தாக்குதல் தொடரும். இல்லாவிட்டால் அங்கிருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வண்டி ஏறிவிடுவார்கள்.

குண்டு வைப்பதென்றாலும் இதே நடைமுறைதான். முதல் நாள் இரவே குறிப்பிட்ட இடத்துக்குப் போய் வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு, விடிந்ததும் குண்டு வைத்துவிட்டு பஸ் பிடித்துவிடுவார்கள். (மனித வெடிகுண்டுகள் புழக்கத்துக்கு வராத காலம் அது.)

மறுநாள் செய்தித்தாளில் விஷயத்தைப் பார்த்து, உறுதி செய்துகொண்டபிறகு கொஞ்சம் போல் கொண்டாடி விட்டு, அடுத்த வேலையில் ஈடுபடத் தொடங்குவார்கள்.

இஸ்ரேல் ராணுவம், பாதுகாப்புப் படை இரண்டும்தான் பி.எல்.ஓ.வினரின் பிரதானமான தாக்குதல் களமாக இருந்தது. சில சமயங்களில் பொதுமக்கள் மீதும் வன்முறை ஏவப்பட்டிருக்கிறது.

1968-ம் ஆண்டு டிசம்பரில் காஸா பகுதியில் ஒரு பேருந்தில் வெடித்த குண்டுதான் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். (23 பேர் பலி.) அடுத்தடுத்து ஒரு நாள் தவறாமல் எங்காவது குண்டு வெடித்துக்கொண்டேதான் இருந்தது.

இஸ்ரேல் என்ன தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பி.எல்.ஓ.வினரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அது ஒரு நிரந்தரத் தலைவலி என்று ஆகிப்போனது.

ஆகவே, இஸ்ரேல் அரசு பி.எல்.ஓ.வை ஒரு தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தது. அதுவரை ஒரு விடுதலை இயக்கமாக மட்டுமே அறியப்பட்டு வந்த பி.எல்.ஓ., அமெரிக்க மீடியாவின் உதவியுடன் பயங்கரவாத அமைப்பாக, தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஒரு ராட்சஸத் தொழிற்சாலையாகச் சித்திரிக்கப்பட்டது.

இஸ்ரேலும் தன் பங்குக்கு பி.எல்.ஓ. செய்ததுடன் நிறைய புனைவுகள் சேர்த்து உலகெங்கும் அனுதாபம் தேடத் தொடங்கியது.

பி.எல்.ஓ. ஒருபோதும் தனது தீவிரவாத நடவடிக்கைகளை அக்காலத்தில் நியாயப்படுத்தியதில்லை. 'வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கியிருக்கிறோம். உங்களால் அமைதி வழியில் பாலஸ்தீனை மீட்டுத்தர முடியுமானால் செய்யுங்கள்' என்றுதான் பி.எல்.ஓ. சொன்னது.

அமைதிக்கான எந்த சாத்தியத்தையும் அப்போது இஸ்ரேல் விட்டுவைக்காத காரணத்தால் ஆயுதம்தான் தீர்வு என்று அனைவராலுமே நம்பப்பட்டது.

ஆனால், பி.எல்.ஓ.வின் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு மிகைப்படுத்தி மீடியாவுக்குத் தருகிறது என்று எடுத்துச் சொல்ல, பி.எல்.ஓ.வில் யாருக்கும் தெரியவில்லை. பிரசாரம் ஒரு வலுவான சாதனம். எதையும் திரும்பத்திரும்பச் சொல்லுவதன் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைத்துவிட முடியும்.

ஆகவே, இஸ்ரேலின் திட்டமிட்ட பிரசார உத்தி பி.எல்.ஓ.வுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நான்கு பேர் பலியானார்கள் என்பதை நானூறு பேர் பலி என்று சொன்னால் அதை இல்லை என்று மறுக்க வேண்டுமல்லவா?

அப்படி மறுத்து, மறு அறிக்கை விட பி.எல்.ஓ.வில் அன்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியே அவர்கள் எடுத்துச் சொன்னாலும் வெளியிடுவதற்கான ஊடக ஒத்துழைப்புகள் இல்லாமல் இஸ்ரேல் பார்த்துக்கொண்டது.

இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. போராட்டம் ஒழுங்காக நடந்தால் போதாது; நிர்வாகமும் சிறப்பாக இயங்கவேண்டும் என்று முதல் முதலில் அப்போது உணரப்பட்டது. ஒரு சரியான, திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த தலைவருக்காக பி.எல்.ஓ. ஏங்கியது.

1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி யாசர் அராஃபத் அந்தப் பொறுப்புக்கு வந்தார்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஜூலை, 2005

68] ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 68

1964-ல் தொடங்கப்பட்ட பி.எல்.ஓ.வுக்கு 69-ல்தான் யாசர் அராஃபத் தலைவராக வருகிறார். இடைப்பட்ட காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்னையை அரபு உலகம் சந்திக்க வேண்டியிருந்தது. அதனை முதலில் பார்த்துவிட்டு யாசர் அராஃபத்திடம் போவதுதான் சரியாக இருக்கும்.

ஆறு நாள் யுத்தம் (Six day war) என்று சரித்திரம் வருணிக்கும் இந்தப் போர், 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய தேசங்களுக்குமிடையே நடைபெற்றது.

யாருமே எதிர்பார்க்காத, சற்றும் முன்னறிவிப்பில்லாத, திடீரென்று தொடங்கப்பட்ட இந்த யுத்தத்தின் சூத்திரதாரி இஸ்ரேல்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும் கிடையாது.


திடீரென்று அடிக்க ஆரம்பித்தார்கள். மும்முனைத் தாக்குதல். இங்கே சினாய், அங்கே கோலன் குன்றுகள், மேற்கே வெஸ்ட்பேங்க், கிழக்கே காஸா என்று முந்தைய காலத்தில் இழந்த பகுதிகள் அத்தனையையும் அந்த ஆறு நாள் யுத்தத்தில் அள்ளிக்கொண்டுவிட்டது இஸ்ரேல்.

என்ன நடக்கிறது என்று சுதாரித்துக்கொள்ளும் முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டது.

இஸ்ரேல் என்பது எத்தனை அபாயகரமான தேசம் என்பது வெளிச்சமானது.

இஸ்ரேல் இந்த யுத்தத்தைத் தொடங்கியதற்கான காரணங்கள் மிகவும் நுணுக்கமானவை. 1956-ம் ஆண்டு நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போது இஸ்ரேல் தன் வசப்படுத்திய சினாய் பகுதியை அத்தேசம் மீண்டும் எகிப்துக்கே விட்டுத்தர வேண்டி வந்ததை முன்பே பார்த்தோம் அல்லவா? அதன் விரிவாக்கப்பட்ட தொடர்ச்சி என்று இதனைக் கொள்ளலாம்.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் சினாயை மீண்டும் எகிப்து வசம் அளித்தது இஸ்ரேல்.

என்னதான் ராணுவ ரீதியில் அந்த யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்திருந்த போதிலும், இஸ்ரேல் அந்தப் பகுதியைத் திருப்பிக் கொடுத்ததை உலகம் முற்றிலும் வேறு விதமாகவே பார்த்தது.

அதாவது, நாசரின் ராஜதந்திர வெற்றி அது என்பதாக ஒரு பிரசாரம் மிகத் தீவிரமாக நடந்தது!

இது இஸ்ரேலுக்குப் பெரிய தன்மானப் பிரச்னையாக இருந்தது. அமெரிக்க நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் நிச்சயமாக சினாயை விட்டுக்கொடுத்திருக்க மாட்டோம் என்று எங்காவது குன்றின் மீது ஏறி நின்று உரக்கக் கத்தலாம் போலிருந்தது அவர்களுக்கு.

ஆனால், அமெரிக்காவை அவர்களால் பகைத்துக்கொள்ள முடியாது.

அதற்கு அரசியலைத் தாண்டிய பொருளாதாரக் காரணங்களும் நிறைய இருந்தன. ஆகவே, வாகான ஒரு சந்தர்ப்பத்துக்காக இஸ்ரேல் காத்திருந்தது.

மறுபுறம், சூயஸ் யுத்தத்தைத் தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஒருமாதிரியான நேசம் வளர ஆரம்பித்திருந்தது.

ராணுவம் முதல் வர்த்தகம் வரை பல்வேறு விதங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொண்டும் ஒத்துழைத்துக்கொண்டும் நிஜமான சகோதரத்துவம் பேண ஆரம்பித்திருந்தார்கள்.

இஸ்ரேலுக்கு இது பெரிய ஆபத்தாகப் பட்டது. ஏனெனில், எகிப்து, சிரியா, ஜோர்டன் மூன்றுமே இஸ்ரேலின் மூன்று எல்லைப்புற தேசங்கள்.

மூன்றும் அரபு தேசங்களும் கூட. இந்த மூவர் கூட்டணியை வளரவிட்டால் எந்தச் சமயத்திலும் தனக்குப் பிரச்னை வரக்கூடும் என்று இஸ்ரேல் பயந்தது. தோதாக, இந்த மூன்று தேசங்களுமே சூயஸ் யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தன.

ஜோர்டனுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளுடனும் தனியே அப்போது நல்லுறவும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் இருந்தன.

ஏற்கெனவே எந்த அரபு தேசமும் இஸ்ரேலுக்கு எந்த வகையிலான ஒத்துழைப்பையும் தருவதில்லை என்று முடிவு செய்திருந்த நிலையில், இந்த மூன்று தேசங்களின் நேசக் கூட்டணி இஸ்ரேலுக்கு அச்சம் தந்தது இயல்பான விஷயமே.

தவிரவும் சோவியத் யூனியன் குறித்த நியாயமான பல அச்சங்களும் இஸ்ரேலுக்கு இருந்தன. சூயஸ் யுத்தத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் பிரிட்டனின் நாணய மதிப்பைக் குறைத்துவிடுவதாக அமெரிக்கா மிரட்டியதுபோலவே, சோவியத் யூனியனும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மீது அணு ஆயுத யுத்தம் தொடங்குவேன் என்று மிரட்டியது. (லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஏற்கெனவே சோவியத் யூனியன் அணுகுண்டுகளைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது என்று கூட ஒரு வதந்தி எழுந்தது!)

இதுபோன்ற மிரட்டல்களால்தான் பிரிட்டனும் பிரான்ஸும் சூயஸ் யுத்தத்தைக் கைவிட்டன.

இதே காரணத்தால்தான் இஸ்ரேலும் தன் நோக்கம் முழுவதும் நிறைவேறுவதற்கு முன்னதாகவே யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டிவந்தது.

அந்தக் கோபம் அடிமனத்தில் இருந்ததால்தான் பதினொரு வருடங்கள் காத்திருந்து 67-ல் அடிக்க ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியக் காரணமும் இந்த யுத்தத்துக்கு உண்டு.

சிரியாவிலிருந்து இஸ்ரேல் வழியாகப் போய் கலீலீ கடலில் கலந்துகொண்டிருந்த டான் மற்றும் பனியாஸ் நதி நீரை திசை திருப்பி, மேற்கே ஓடவிட்டு, ஜோர்டன் நதியில் கலக்கும்படியாக மாற்றியமைக்க, சிரியா ஒரு திட்டம் போட்டது.

இது அப்பட்டமாக, வயிற்றிலடிக்கும் காரியம்தான். சந்தேகமே இல்லை. இஸ்ரேலுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு வரவேண்டும் என்கிற 'பரந்த' நோக்கத்துடன் தீட்டப்பட்ட திட்டம்தான்.

கோடிக்கணக்கில் செலவழித்தாவது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிரியா மிகுந்த ஆர்வம் செலுத்தியதைக் கண்ட இஸ்ரேல், தன் கோபத்தைக் காட்ட ஒரு வழி தேடிக்கொண்டிருந்தது அப்போது.

அந்தக் கோபத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 1966-ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் ஒரு ராணுவ ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. இரு தேசங்களில் எந்த தேசத்தை யார் தாக்கினாலும் அடுத்தவர் உடனே உதவிக்கு ஓடி வரவேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

இதற்குமேல் இஸ்ரேலால் பொறுமை காக்க முடியவில்லை. 1967 ஏப்ரல் 7-ம் தேதி சிரியாவின் ஆளுகைக்குட்பட்ட கோலன் குன்றுப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 'வழக்கமான' எல்லை தாண்டும் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்கள்.

இரு பக்கங்களிலும் மெல்லிய துப்பாக்கிச் சூடுகளுடன் வழக்கமாக முடிந்துவிடும் வைபவம்தான் அது. அப்படித்தான் சிரியா நினைத்தது.

ஆனால் இஸ்ரேல் அந்தச் சிறு சம்பவத்தை அப்படியே ஊதிப் பெரிதாக்கி, பெரிய அளவில் ஒரு யுத்தமாக ஆக்கிவிட்டது.

சிரியாவின் ஏழு போர் விமானங்களை (அனைத்தும் MIG 21 ரக விமானங்கள்) ஒரேயடியாக அடித்து வீழ்த்தி, ஒட்டுமொத்த கோலன் பகுதியையும் சுற்றி வளைத்துக்கொண்டு விட்டது.

இது ஒட்டுமொத்த அரபு உலகத்தையும் கோபம் கொள்ளச் செய்தது.

அனைத்து தேச அரபுத் தலைவர்களும் அவசரமாகக் கூடிப் பேசினார்கள். இஸ்ரேலின் அராஜகங்களுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்பதே பேச்சின் சாரம். ஆனால் என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?

நாசர் தயாராக இருந்தார். ஏற்கெனவே சினாய் விவகாரத்தால் கடுப்பில் இருந்த அவர், இதை ஒரு காரணமாக வைத்து இஸ்ரேல் மீது யுத்தம் தொடுத்தால் எகிப்து முன்னின்று அதனை நடத்தத் தயார் என்று பகிரங்கமாகவே சொன்னார்.

போதாக்குறைக்கு, அப்படி எகிப்து யுத்தத்தை வழி நடத்துவதென்றால், தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்யத் தயார் என்று சோவியத் யூனியனும் ரகசியச் செய்தி அனுப்பியது. (சோவியத் யூனியனின் அப்போதைய அதிபர் அலெக்ஸி கோசிஜின்.)

ஆனால் பாதிக்கப்பட்ட தேசமான சிரியாதான் அடியெடுத்துக் கொடுத்தாக வேண்டும்.

பிரச்னை என்னவெனில் சிரியாவுக்கு அப்போது ஒரு யுத்தத்தில் பங்குபெறும் தெம்பு இல்லை. குறைந்தபட்சம் ஒரு படையை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஊடுருவ அனுப்பக்கூட முடியாது என்கிற சூழ்நிலை.

ஆகவே எகிப்து வேறு ஒரு வழியைப் பிடித்தது. இஸ்ரேலின் பிரதான கப்பல் போக்குவரத்து வழியாக இருந்த திரன் ஜலசந்தியை மூடிவிட்டது.

இஸ்ரேலின் எண்ணெய் வர்த்தக வழி என்பது அது ஒன்றுதான். ஒரு சொல்லில் விவரிப்பதென்றால் இதற்குப் பெயர்தான் அடிமடியில் கைவைப்பது.

இதெல்லாம் சேர்ந்துதான் இஸ்ரேலை உசுப்பிவிட்டன. முழு மூச்சில் அத்தேசம் யுத்தம் தொடங்க முடிவு செய்துவிட்டது. நாசரும் சொன்னார்: 'எங்களின் அடிப்படை நோக்கமும் இஸ்ரேலை ஒழிப்பதுதான். அத்தனை அரேபியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்''

மூன்று முனைகளிலும் இஸ்ரேல் தனது வீரர்களை நிறுத்தியது. மேற்கே ஜோர்டன் ராணுவத்துக்கு எதிராக மேற்குக்கரைப் பகுதியில் யுத்தம்.

தென் கிழக்கே எகிப்துக்கு எதிராக காஸா மற்றும் சினாய் பகுதிகளில். வடக்கே, சிரியா. கோலன் குன்றுகள்.
நாசர் சில விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்.

யுத்தத்தைத் தான் தொடங்கக்கூடாது என்பது அவற்றுள் முதன்மையானது. இஸ்ரேல்தான் ஆரம்பித்தது.

இரண்டாவது, இஸ்ரேலின் தாக்குதல் எத்தனை வலுவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அந்தக் காட்சிகளை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே தூக்கி சர்வதேச மீடியாவில் வெளியிட, அவர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.

உலகம் முழுவதும் இஸ்ரேலைத் திட்டித்தீர்க்க இந்த யுத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது அவரது திட்டம்.

யுத்தத்தை தான் முதலில் ஆரம்பிக்கக்கூடாது என்று நாசர் முடிவெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

யுத்தம் தொடங்கியதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னதாக அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து மாஸ்கோவில் இருந்த க்ரெம்ளின் மாளிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

பனிப்போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமெரிக்க அதிபர், சோவியத் அதிபரை அழைத்துப் பேசுவதாவது?

நம்ப முடியாத விஷயமாக இருப்பினும் இது நடக்கத்தான் செய்தது.

அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்தவர் லிண்டன் ஜான்சன். அவர்தான் கோசிஜினை அழைத்தார். 'நான் கேள்விப்பட்டது உண்மையா?'' என்று முதல் வரியில் விஷயத்தை ஆரம்பித்தார்.

'என்ன கேள்விப்பட்டீர்கள்?'

'மத்தியக் கிழக்கில் உங்கள் அடிப்பொடியாக இருக்கும் எகிப்து. இன்னும் 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஒரு பெரிய யுத்தத்தைத் தொடங்கவிருப்பதாக எங்களுடைய இஸ்ரேலிய உளவுத்துறை நண்பர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?''

உண்மையில் கோசிஜின் அப்படியொரு விஷயத்தை அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே சற்று அவகாசம் கேட்டார்.
'இதோ பாருங்கள். உலக அளவில் இன்னொரு பெரிய யுத்தத்துக்கு இது வழிவகுக்கக்கூடும். பின் விளைவுகளுக்கு அமெரிக்கா பொறுப்பில்லை' என்று எச்சரித்துவிட்டு போனை வைத்தார் ஜான்சன்.

அது மே 27-ம் தேதி 1967-ம் வருடம். நள்ளிரவு 12.48 மணி. சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்து எகிப்துக்கான சோவியத் தூதராக இருந்த டிமிட்ரி போஜிதேவ் (Dimitri Pojidaev), நாசரின் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.

'யுத்தத்தை எகிப்து ஆரம்பிப்பதை சோவியத் யூனியன் விரும்பவில்லை. அப்படி நீங்கள் தொடங்கினால், சோவியத்தின் உதவி கிடைக்காமல் போகலாம்' என்று கோசிஜின் சொல்லச் சொன்ன தகவலைத் தெரிவித்தார்.

நாசர் வெறுமனே தலையாட்டிவிட்டு அவரை அனுப்பிவைத்துவிட்டு, உடனே தன்னுடைய வெளி விவகாரத்துறை அமைச்சர் அப்துல் ஹக்கிம் அமீரை (Abdel Hakim Amer) அழைத்து, சோவியத் யூனியனில் உள்ள எகிப்து ஏஜெண்டுகளை அழைத்து கோசிஜின் அப்படித்தான் சொன்னாரா என்று உறுதிப்படுத்தச் சொல்லிக் கேட்டார்.

அவர் சொன்னது உண்மைதான் என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் உறுதியானது. ஆகவே நாசர், யுத்தத்தை இஸ்ரேலே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருக்கத் தீர்மானித்தார்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 ஜூலை, 2005.

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: