Wednesday, March 18, 2009

47.48 சிக்கலின் பெயர் ஹிட்லர் ஹிட்லரின் யூத வெறுப்பு. பகுதி 47-48.

47] சிக்கலின் பெயர் ஹிட்லர்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், யூதர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தபோதிலும் ஒரு நாடகம் அல்லது திரைப்படம் போல, அடுத்தடுத்து வெற்றி மேல் வெற்றியாக அவர்களுக்கு வந்து குவிந்துவிடவில்லை.

சாண் ஏறி முழம் சறுக்கும் விதமாகத்தான் விதி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.

பாலஸ்தீனில் எப்படியும் ஒரு யூத தேசம் உருவாகிவிடும் என்கிற நம்பிக்கையை முதல் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தினாலும், அப்படி உருவாகும் தேசத்தில் எத்தனை யூதர்கள் இருப்பார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

ஏனெனில் ஐரோப்பிய யூதர்களில் சுமார் எழுபத்தெட்டு சதவீதம் பேர் பாலஸ்தீனுக்கு வந்துசேர என்ன வழி என்று அப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தந்த தேசங்களின் சட்டதிட்டங்கள், அவரவர் பொருளாதார நிலைமை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணம். தவிர, மொத்தம் இத்தனை லட்சம்பேர் என்று ஒரு கணக்குச் சொல்லிவிடமுடியாதபடி ஐரோப்பாவெங்கும் நீக்கமற நிறைந்து பரவியிருந்தார்கள் அவர்கள்.

பாலஸ்தீனில் அமையவிருக்கும் யூத தேசத்தின் ‘கொள்ளளவு’ எவ்வளவு என்பதும் அப்போது துல்லியமாகத் தெரியாதல்லவா?

அந்த வகையில், என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று பால்ஃபர் பிரகடனம் அறிவிக்கப்பட்டவுடனேயே பாலஸ்தீனுக்குக் கிளம்பி வந்த யூதர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்லவேண்டும்.

வெறும் நம்பிக்கை ஒன்றை மட்டும் பற்றுக்கோலாகப் பிடித்துக்கொண்டு வந்தவர்கள் அவர்கள். புதிய தேசம், புதிய சூழ்நிலை, புதிய ஆட்சி என்றாலும் பழைய நம்பிக்கை ஒன்று அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்; அப்புறம் கிளம்பிப்போகலாம் என்று காத்திருந்த யூதர்களுக்குத்தான் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

சிக்கலின் பெயர் ஹிட்லர். ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொண்டுவிடவேண்டும். ஹிட்லரால் ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டும்தானே பிரச்னை ஏற்பட்டது என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றலாம்.

ஆனால் ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையின் விளைவாக, அவர் பதவிக்கு வந்த சூட்டில் அக்கம்பக்கத்து ஐரோப்பிய நாடுகள் அத்தனையையும் கபளீகரம் செய்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

முதலில் லேசாக ஆஸ்திரியா, செக்கஸ்லோவாக்கியா, போலந்து என்று ஆரம்பித்தவர் டென்மார்க், நார்வே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸில் கொஞ்சம், ருமேனியாவில் கொஞ்சம் என்று கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பாவை தன்வசப்படுத்திவிட்டிருந்தார்.

ஹிட்லருக்கு இரண்டு லட்சியங்கள் இருந்தன. முதலாவது ஐரோப்பா முழுவதையும் ஆளவேண்டும் என்பது. இரண்டாவது, தன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் மட்டுமாவது ஒரு யூதரும் இருக்கக் கூடாது என்பது.
ஹிட்லரின் யூத வெறுப்புக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதும் கிடையாது.

அவர் ஒரு சரியான ஆரிய மனோபாவம் கொண்டவர். ஆரிய மனோபாவம் என்றால், ஆரியர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்கிற மனோபாவம். அதுசரி, யார் ஆரியர்கள்?

ஹிட்லருக்கு இதில் சந்தேகமே இல்லை. அவர்தான் ஆரியர். ஜெர்மானியர்கள் அத்தனை பேரும் ஆரியர்கள். எனில் மற்றவர்கள் எல்லாம்?

ஆரியர்களுக்கு எதிரிகள். அவ்வளவுதான். தீர்ந்தது விஷயம்.

மிகச் சரியாகச் சொல்வதென்றால், 1933-ம் ஆண்டு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் கைப்பற்றியதிலிருந்தே ஐரோப்பிய யூதர்களுக்குச் சனிபிடித்தது.

அந்த வருடம் ஜனவரி 30-ம் தேதி ஹிட்லர், ஜெர்மனியின் தலையெழுத்தாக ஆனார். அந்த தினமே ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்தபின் திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியங்கள் என்று பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில், ஹிட்லர், ஜெர்மனியின் ஆட்சி பீடத்தில் அமர்வதற்குச் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, இதையெல்லாம் செய்யவேண்டும், இப்படியெல்லாம்தான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வரைபடமே தயாரித்து வைத்துவிட்டிருந்தார் மனத்துக்குள்.

தனது திட்டங்களின் ஒரு பகுதியைத் தன் வாழ்க்கை வரலாறான ‘மெயின் காம்ஃப்’பிலும் அவர் எழுதியிருக்கிறார்.

ஆகவே, பதவியேற்ற மறுகணமே யூதர்களை ஒழியுங்கள் என்று உத்தரவிடுவதில் அவருக்கு எந்தவிதமான மனச்சங்கடமும் ஏற்படவில்லை.

ஹிட்லரின் கட்சிக்கு ‘National socialist German workers party’ என்று பெயர். சுருக்கமாக இதனை நாஜி என்பார்கள். பெயரில் சோஷலிசம் உண்டே தவிர, யதார்த்தத்தில் ஹிட்லருக்கு அதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு சம்பிரதாயம் கருதி சோஷலிஸ்ட் என்று பெயரில் சேர்த்துக்கொண்டார் போலிருக்கிறது.

கட்சி என்கிறோம். ஆட்சி என்கிறோம். உண்மையில் ஹிட்லரின் நாஜிக்கட்சியில் இருந்த அத்தனை பேரும் ஆயுதம் தாங்குவோராகத்தான் இருந்தார்கள். கட்சியாக உருவெடுத்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே ஹிட்லருக்கு விசுவாசமாகப் பின்னால் வந்த அடியாள் படையின் பிரும்மாண்ட விஸ்தரிப்பு அது.

நியாய அநியாயங்கள், தர்மம், சட்டம் போன்றவற்றை அவர்கள் எப்போதும் ஒரு பொருட்டாகக் கருதியவர்கள் அல்லர். மாறாக, ஹிட்லர் ஓர் உத்தரவிட்டால் உடனடியாக அதைச் செயல்படுத்துவது ஒன்றுதான் அவர்களது பணி.

அத்தகைய நாஜிகள், ஹிட்லர் ‘யூதர்களை அழியுங்கள்’ என்று சொன்னதுமே அந்த முதல் நாளே வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் ஜெர்மானிய யூதர்கள், வந்தேறிகளாகவே இருந்தாலும் சுமார் 1600 வருடப் பாரம்பரியம் கொண்டவர்கள். யூதர்கள் ஐரோப்பாவுக்கு முதல் முதலில் இடம்பெயர்ந்து போன இடங்களுள் ஜெர்மனியும் ஒன்று. என்னதான் மனத்துக்குள் பாலஸ்தீன் தங்கள் சொந்தமண் என்கிற எண்ணம் இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக ஜெர்மனியிலேயே வாழ்ந்தவர்கள் அவர்கள்.

ஜெர்மன் கெய்சர் காலம் வரையிலுமே கூட பிரமாதமான பிரச்னைகள் ஏதுமின்றி அங்கே அவர்களால் வாழமுடிந்திருக்கிறது.

யூத எதிர்ப்பு என்பது எல்லா ஐரோப்பிய தேசங்களிலும் எல்லாக் காலங்களிலும் இருந்துவந்ததுதான். ஜெர்மனியிலும் அது இருக்கவே செய்தது என்றாலும் ஹிட்லர் காலத்தில் அது பெற்ற ‘பரிணாம வளர்ச்சி’ அதற்கு முன் வேறெங்கும் எப்போதும் நிகழ்ந்திராதது.

முதல் உலகப்போர் சமயம், ஜெர்மானிய ராணுவத்தில் யூதர்களுக்கான படைப்பிரிவே ஒன்று தனியாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஜெர்மானிய யூதர்கள் தம் தேசத்துக்காகப் போரில் பங்குபெற்றார்கள். அவர்களுள் சுமார் பன்னிரண்டாயிரம் யூதர்கள் யுத்தத்தில் இறந்துபோனவர்கள்.

இப்படியான பாரம்பரியம் கொண்ட ஜெர்மன் யூதர்கள், ஹிட்லரின் அதிரடி அறிவிப்பைக் கேட்டு மிகவும் பயந்துபோனார்கள். என்ன செய்யும் அரசு? சில ஆயிரம் பேரைக் கொல்லும். பல ஆயிரம் பேரை நாடு கடத்தும். இது ஒன்றும் புதிதல்ல. எத்தனையோ முறை சந்தித்த பிரச்னைதான் என்று இம்முறையும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.

காரணம், ஹிட்லர் தமது யூத எதிர்ப்புப் பிரசாரத்தைக் குழந்தைகளிடமிருந்து தொடங்கியிருந்தார்.

பள்ளி மாணவர்களிடையே யூதக் குழந்தைகளை அருகே சேர்க்காதீர்கள் என்னும் பிரசாரம் முதன்முதலில் தூண்டிவிடப்பட்டது. ஜெர்மானியக் குழந்தைகளின் உடம்பில் ஓடுவது புனிதமான ரத்தம். அது ஆரிய ரத்தம்.

ஆனால் யூதக் குழந்தைகளின் உடலில் ஓடுவது கிட்டத்தட்ட சாக்கடைக்குச் சமானமான ரத்தம் என்று தன் ஆலாபனையைத் தொடங்கினார் ஹிட்லர்.

ஒரு யூதக் குழந்தையின் அருகே அமரும் ஜெர்மானியக் குழந்தைக்கு வியாதிகள் பீடிக்கும் என்று ஆசிரியர்களால் சொல்லித்தரப்பட்டது.

ஒரு யூதக்குழந்தை கொண்டு வரும் உணவை ஜெர்மானியக் குழந்தை உண்ணுமானால் அதன் தேச விசுவாசம் கறைபடிந்துவிடும் என்று போதிக்கப்பட்டது.

பள்ளிகளில் யூதக்குழந்தைகளுக்கு தனி இருக்கைகள் போடப்பட்டன. அவர்களுக்கென்று தனியே ஒரு தண்ணீர் டிரம் வைக்கப்பட்டது. அந்த டிரம்மையோ, சங்கிலி போட்டுப் பிணைக்கப்பட்ட அந்தத் தம்ளரையோ, தவறியும் ஒரு ஜெர்மானியக் குழந்தை தொட்டுவிடக்கூடாது. தொட்டால் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும் என்று சொல்லப்பட்டது.

இதெல்லாம் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஒரு வார காலத்துக்குள் அமலுக்கு வந்த சட்டங்கள். தொடர்ந்து, ஜெர்மானியக் குழந்தைகள் வகுப்பை முடித்துவிட்டுச் சென்றபிறகுதான் யூதக்குழந்தைகளுக்குப் பாடங்கள் தொடங்கும் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பயிலும் ஜெர்மானியக் குழந்தைகள் தினசரி வீட்டுக்குப் போனதும் வாசலிலேயே தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு உள்ளே போனதும் வேறு ஆடை அணியவேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லும் அளவுக்குப் பிஞ்சு உள்ளங்களில் பிரிவினை மிக ஆழமாக ஊன்றப்பட்டது.

உலகில் மூன்று இடங்களில்தான் இம்மாதிரியான ஆதிக்க ஜாதியினரின் அட்டகாசங்கள் சரித்திரத்தில் தலைவிரித்து ஆடியிருக்கின்றன.

முதலாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை கருப்பர்களுக்கு எதிராக அமெரிக்கர்கள் நிகழ்த்திய கொடுமைகள். இரண்டாவது, இருபதாம் நூற்றாண்டிலும் தலித்துகளுக்கு எதிராக உயர்ஜாதி ஹிந்துக்கள் இந்தியாவில் நிகழ்த்திய காரியங்கள். மூன்றாவது ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் செய்தவை.

இவற்றுள் முதல் இரண்டு இடங்களிலும் படுகொலைகள் கிடையாது. அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகச் சொற்பம். ஜெர்மனியில் அது மிக அதிகம். அது ஒன்றுதான் வித்தியாசம்.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்களை ‘கவனிக்க’வென்றே இரண்டு சிறப்புப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, ‘Gestapo’ என்று அழைக்கப்பட்ட ரகசிய காவல்படை. இரண்டாவது, ‘SS’ என்று அழைக்கப்பட்ட, கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப்படையினர்.

இந்த இரண்டு படைகளுக்கும் ஹிட்லர் சில சுதந்திரங்கள் வழங்கியிருந்தார். அவர்கள் யாரை வேண்டுமானாலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம்.

விசாரணையில் ‘உண்மை வரவழைப்பதன்பொருட்டு’ எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இறுதியாக யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாமல், எந்த விசாரணைக் கைதியையும் கொலை செய்யலாம்.

இந்த இரு படையினருக்கும் இருந்த ஒரே ஒரு நிபந்தனை, அவர்கள் ஜெர்மானியர் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதுதான்!
ஹிட்லர் பதவிக்கு வந்து சரியாக ஐம்பத்தேழாவது நாள் இந்த இரு படைகளும் தம் பணியைத் தொடங்கின. கண்ணில் தென்பட்ட யூதர்கள் அத்தனை பேரையும் இவர்கள் கைது செய்ய ஆரம்பித்தார்கள்.

கைதுக்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம் கேட்டால், அந்த இடத்திலேயே நிற்கவைத்துச் சுட்டுவிடுவார்கள்.

விசாரணைக்குப் போனால் உயிர் இன்னும் சில தினங்கள் பிழைக்கலாம், அவ்வளவுதான்.

அன்றைக்கு ஜெர்மனியில் வசித்து வந்த யூதர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் பேர். (ஹிட்லர் பின்னால் படையெடுத்துச் சேர்க்கும் தேசங்களில் வசித்து வந்த யூதர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கோடியை நெருங்கும்.)

அவர்களுள் சுமார் ஐந்து லட்சம் பேர் எப்படியோ தப்பிப்பிழைத்து விட்டார்கள். ஹிட்லர் பதவிக்கு வந்த மிகச் சில தினங்களிலேயே புத்திசாலித்தனமாக, அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேசத்தை விட்டு அகதிகளாக வெளியேறி மற்ற பல நாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

மிச்சமிருந்த ஐந்துலட்சம் பேர்தான் மாட்டிக்கொண்டார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8 மே, 2005

48] ஹிட்லரின் யூத வெறுப்பு
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 48.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்குச் சரியாக ஆறு வருடங்கள் முன்பு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் பிடித்தார். (ஹிட்லரின் போலந்து படையெடுப்புதான் இரண்டாம் உலக யுத்தத்தின் தொடக்கம். இது நடந்தது செப்டம்பர் 1, 1939. ஹிட்லர் பதவிக்கு வந்தது 1933-ம் வருட இறுதியில்.)

அன்று முதல் உலகுக்குச் சனி பிடித்தது ஒரு பக்கம் என்றால், ஜெர்மானிய யூதர்களுக்கு அதன் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்தது. பதவிக்கு வந்த முதல் சில தினங்களிலேயே ஹிட்லரின் நோக்கமும் தீர்மானமும் என்ன என்பது ஓரளவு தெளிவாகவே தெரியவந்துவிட்டது என்றபோதும், அவரது திட்டங்களின் முழுப்பரிமாணம் யூதர்களுக்குப் புரிய ஆறு மாதங்கள் பிடித்தன.

அந்த ஆறாவது மாதம் அது நடந்தது. அதுவரை பள்ளிகளில் யூதக்குழந்தைகள் மீதான வெறுப்பு வளர்ப்பதை ஒரு செயல்திட்டமாகச் செய்துகொண்டிருந்த நாஜிகள், அப்போதிலிருந்து யூதக்குழந்தைகள் யாரும் பள்ளிகளுக்குச் சென்று படிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு தினங்களிலேயே இது கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று ஹிட்லர் அறிவித்தார்.

யூதர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விதியை நொந்துகொண்டு, வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்கள்.

அவர்கள் மூச்சு விடுவதற்குக்கூட ஹிட்லர் அவகாசம் கொடுக்கவில்லை. அடுத்த அறிவிப்பு உடனே வந்தது. ஜெர்மனியின் எந்த அரசு அலுவலகத்திலும் யூதர்களுக்கு இனி வேலை இல்லை. தவிர, யூத மருத்துவர்கள், யூத வழக்கறிஞர்கள், யூத பொறியியல் வல்லுநர்கள் யாரையும் யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது.

இது மட்டுமல்ல. பொது நல அமைப்புகள், சங்கங்கள், கமிட்டிகள் எதுவானாலும் யூத உறுப்பினர்கள் கூடவே கூடாது. யூனியன் என்று அவர்கள் சிந்திக்கக்கூடக் கூடாது. நாலு யூதர்கள் கூடி ஒரு டீக்கடையில் பேசினால் கூடக் கைது செய்துவிடுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை, ஜெர்மனியில் இயங்கிவந்த உடல் ஊனமுற்றோருக்கான அமைப்புகளை அன்று பெரும்பாலும் யூதர்கள்தான் நடத்தி வந்தார்கள்.

கண்பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடங்கள், வாய்பேசமுடியாத காது கேட்காதோருக்கான பள்ளிகள், போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் என்று ஏராளமான அமைப்புகளை நிறுவி சேவையாற்றி வந்தார்கள்.

காரணம் ஏதும் சொல்லாமல் இந்த அமைப்புகள் அனைத்திலிருந்தும் யூதர்கள் உடனடியாக விலகவேண்டும் என்று அறிவித்தது ஹிட்லரின் அரசு.
1935-ம் வருடம் யூதர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை சட்டபூர்வமாகவே அறிவித்துவிட்டார் ஹிட்லர்.

நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்று அழைக்கப்பட்ட அந்தச் சட்டப்பிரதிகள் சொல்லுவதையெல்லாம் ஒரு வரியில் சுருக்கிச் சொல்வதென்றால், ஜெர்மனியில் யூதராக இருப்போர் அத்தனைபேரும் இரண்டாந்தரக் குடிமக்களே. அவர்கள் எத்தனை தலைமுறைகளாக அங்கே வாழ்ந்துவருபவர்களாக இருந்தாலும் சரி, எந்தவிதமான உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. தீண்டத்தகாதவர்களாக மட்டுமே அவர்கள் நடத்தப்படுவார்கள்.

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், யார் யூதர் என்பதற்கும் ஹிட்லர் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். திடீரென்று கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிவிட்டவர்களையெல்லாம் அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. வம்சத்தில் யாராவது ஒரு கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா யூதராக இருந்தால் கூட, அவரது வழித்தோன்றல்கள் யூதராகத்தான் கருதப்படுவார்கள் என்று ஹிட்லர் சொன்னார்.

சட்ட வரைவுகளில் ஹிட்லர் தானே கையெழுத்திட்டார். காவல் துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. எந்த யூதரையும் காவலர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம். விசாரணைக்குப் பொறுமையில்லையா? கவலையே வேண்டாம். கொன்றுவிடலாம்.

கொலைகளுக்குக் கணக்குக் காட்டவேண்டுமென்கிற அவசியம் இல்லை. இறந்தவர்களை மட்டும் பத்திரமாக புதைத்து அல்லது எரித்துவிட வேண்டும். நாட்டில் அநாவசியமாக நோய்க்கிருமிகள் பரவிவிடக்கூடாது பாருங்கள்!

இப்படியொரு காட்டாட்சி ஆரம்பமானதும் ஜெர்மானியக் காவலர்கள் யோசித்தார்கள். ஹிட்லருக்கு சந்தோஷம் தரும்படி நடந்துகொள்வதென்றால், அவர் கவனத்துக்குப் போகும்விதத்தில் அவ்வப்போது யாராவது ஒரு முக்கியமான யூதரைக் கொன்றுவிடுவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார்கள்.

பத்து ரூபாய் அலவன்ஸுக்காகவும் ஒரு நாள் விடுப்புக்காகவும் இரண்டு மணி நேரம் பர்மிஷனுக்காகவும் கூட அவர்கள் யூதர்களைக் கொன்றிருக்கிறார்கள். அப்படிக் கொல்லும்போது, கேட்பது கிடைக்கிறது என்பதுதான் இதற்கான ஒரே காரணம்.

ஆரம்பத்தில் ஒன்று இரண்டாக, பத்து இருபதாக ஆரம்பித்த இந்தப் படுகொலைகள், நாள் போகப்போக நூற்றுக்கணக்கில் பெருகத் தொடங்கியதும் யூதர்களைச் சிறை வைப்பதற்காகவும் அவர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவுமென்றே யோசித்து சில பிரத்தியேகச் சிறைக்கூடங்களை ஹிட்லர் கட்டவைத்தார். இவற்றை concentration camps என்பார்கள்.

உலக சரித்திரத்தில் வேறு எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் நடந்திராத கொடுமைகள் யாவும் இந்தச் சிறைக்கூடங்களில் ஹிட்லர் காலத்தில் நடந்தேறின. கேள்விப்படும்போதே ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் கொடுமைகள் அவை.

முதலில் கம்யூனிஸ்டுகளை விசாரிப்பதற்காகக் கட்டப்பட்ட சிறைக்கூடங்கள் என்றுதான் இவை உலகுக்குத் தெரியவந்தன. ஹிட்லரின் கம்யூனிச வெறுப்பு அவரது யூத வெறுப்பைப் போன்றே பிரசித்தி பெற்றது. (கம்யூனிச ரஷ்யாவை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதுதான் அவரது வாழ்நாள் நோக்கமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக உலகப்போர் சமயம் அவர் ரஷ்யாவிலிருந்து பின்வாங்கவேண்டி வரவே, சோவியத் யூனியன் தப்பியது.)

ஆகவே ஜெர்மனியில் உள்ள கம்யூனிஸ்டுகள் அத்தனைபேரையும் ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் இந்த சிறப்புச் சிறைக்கூடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்று உலகம் நினைத்தது.

ஆனால் ஹிட்லர் யாரையெல்லாம் வெறுத்தாரோ, அவர்கள் அத்தனை பேரும் அந்தச் சிறைக்கூடங்களுக்கு வரவேண்டியிருந்தது. கம்யூனிஸ்டுகள், யூதர்கள், தொழிற்சங்கவாதிகள், சோஷலிஸ்டுகள், பாதிரியார்கள் என்று பார்த்துப்பார்த்து அங்கே கூட்டிக்கொண்டு போனார்கள்.

அந்தச் சிறப்புச் சிறைக்கூடங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். இருளைத்தவிர வேறொன்றுமில்லாத கான்க்ரீட் காடுகள் அவை. காற்று கிடையாது. தண்ணீர் கிடையாது. உணவு கிடையாது. விஷப் பூச்சிகளும் பூரான்களும் தேள்களும் பாம்புகளும் சுதந்திரமாக ஊர்ந்து செல்லும்.

விசாரணைக் கைதிகளைப் பெரும்பாலும் நிர்வாணமாகத்தான் வைத்திருப்பார்கள். கொதிக்கும் நீரில் தூக்கிப்போடுவது தொடங்கி, நிற்கவைத்துச் சுடுவது, உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டிப் போடுவது, ஊசி கொண்டு உடம்பெங்கும் குத்திக் குத்தி ரத்தம் சொட்டச்சொட்ட தீயில் இட்டு வாட்டுவது, விஷ ஊசிகள் போடுவது, மர்ம உறுப்புகளில் தாக்குவது, வன்புணர்ச்சி கொள்வது என்று குரூரத்தின் உச்சகட்ட வெளிப்பாடுகள் அரங்கேறிய பிராந்தியம் அது.

விசாரணைக் கைதிகளை வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாது. அவர்களை எப்போது நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதையும் சொல்லமாட்டார்கள். திடீரென்று ஒரு நபர் ஒரு நாளுக்கு மேல் வீடு திரும்பாதிருந்தால், மனத்தைத் தேற்றிக்கொண்டு அவருக்குக் காரியம் செய்துவிடவேண்டியதுதான் என்று ஜெர்மானிய யூதர்கள் முடிவுக்கு வரும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டிருந்தது.

ஹிட்லர் ஆட்சியின் முதல் ஐந்தாண்டுகளில் இந்தச் சித்திரவதைக்கூடங்களில் சுமார் எண்ணூறு யூதர்களும் ஆயிரத்தி நானூறு கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது.
ஆனால் 1938 மார்ச் மாதம் அவர் ஆஸ்திரியாவை அபகரித்துக்கொண்ட பிறகு, ஹிட்லரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் வசிக்கும் யூதர்களின் எண்ணிக்கை குப்பென்று ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரமாக உயர்ந்துவிடவே, இன்னும் ஏராளமான சித்திரவதைக்கூடங்களை எழுப்பி, இன்னும் ஆயிரக்கணக்கில் யூதர்களைக் கைது செய்யவேண்டிய ‘அவசியம்’ நாஜிக்களுக்கு உருவாகிவிட்டது.

ஹிட்லரின் ஆஸ்திரியப் படையெடுப்பு நடந்து முடிந்த இருபதாவது நாளில் மட்டும் ஆஸ்திரியாவில் சுமார் ஐந்நூறு யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரே நாளில் நடந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த யூதகுலத்தையும் குலைநடுங்கச் செய்துவிட்டது. யூத குலத்தை மட்டுமல்ல. பல்வேறு உலகநாடுகளும் ஹிட்லரைப் பார்த்து பயப்படத் தொடங்கியதன் ஆதாரக் காரணம் இதுதான்.

அவரது நாடு பிடிக்கும் வேட்கையைக் காட்டிலும் இந்த யூத வெறுப்பு மிகத் தீவிரமாக இருப்பதைக் கண்டு வெறுப்புற்ற முதல் தேசம் பிரிட்டன்.
பரிதாபத்தின் பேரில் பிரிட்டன் சுமார் நாற்பதாயிரம் ஜெர்மானிய யூதர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. மேலும் சுமார் இருபதாயிரம் ஆஸ்திரிய யூதர்களும் இதன் மூலம் பிரிட்டனுக்கு உயிர்தப்பிப் போகமுடிந்தது.

இந்த அறுபதாயிரம் யூதர்கள் தவிர, பத்தாயிரம் யூதக் குழந்தைகளையும் பிரத்தியேகமாக பிரிட்டன் தத்தெடுத்து, அவர்களின் எதிர்காலத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தது. (இப்படி அநாதைகளாக ஜெர்மனி - ஆஸ்திரியாவிலிருந்து பிரிட்டனுக்குப் போய்ச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யூதர்களுள் மார்க்கரெட் தாட்சரின் பெற்றோரும் அடக்கம். பின்னாளில் பிரிட்டனின் பிரதமராகவே ஆன தாட்சர்!)

இந்த இடப்பெயர்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர், தம் குழந்தைகளைப் பிரிந்து தனித்து வாழவேண்டியிருந்தது. குழந்தைகள் மட்டுமாவது பிழைக்கட்டுமே என்று அவர்களை பிரிட்டனுக்கு அனுப்பிய ஜெர்மானியப் பெற்றோர்களைப் பிறகு தனியே நாஜிகள் ‘கவனித்து’ அவர்களுக்கு மரணதண்டனை அளித்துவிட்டார்கள்!

ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த இந்த இனப்படுகொலைகள், ஹிட்லரின் கணக்கில் ஒவ்வொரு நாடாகச் சேரச்சேர, ஆயிரங்களையும் லட்சங்களையும் தொடத்தொடங்கியது. ஹிட்லர் ஒரு தேசத்தின் மீது படையெடுத்தார் என்றால், அங்குள்ள அரசல்ல; யூதர்கள்தான் முதலில் அலறினார்கள்.

எப்பாடுபட்டாவது ஹிட்லர் எட்டிப்பார்க்க முடியாத ஏதாவது ஓரிடத்துக்குப் போய்விடமாட்டோமா என்று ஏங்கிக் கதறினார்கள்.

தினசரி நூற்றுக்கணக்கான யூதர்கள் திருட்டுத்தனமாகத் தம் தேசத்தைவிட்டு எல்லை தாண்டி வெளியே போவது வழக்கமாகிவிட்டது. இது மற்றபிற தேசங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாகிப் போனது. அவர்களால், யூதர்களை வராதீர்கள் என்றும் சொல்லமுடியவில்லை; வருபவர்களை வைத்துக்கொண்டு பராமரிக்கவும் முடியவில்லை.

ஏனெனில் அத்தனை ஐரோப்பிய தேசங்களுமே அன்றைக்கு யுத்தத்தின் ஓர் அங்கமாக விளங்கின. எல்லோரும் எல்லோரையும் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஹிட்லர் கட்சி. இன்னொரு பக்கம் பிரிட்டன் கட்சி.

பிரிட்டனின் அணியில் இருந்த தேசங்கள்கூட யூதர்கள் விஷயத்தில் முடிவெடுக்க மிகவும் திணறிக்கொண்டிருந்தன. சரித்திரத்தின் பழைய பக்கங்களில், அவர்களும் யூதர்களைக் கொடுமைப்படுத்தியவர்களாகவே இருந்ததுதான் காரணம்.

பரிதாபப்பட்டு யூதர்களை உள்ளே விட்டால், நாளைக்கு அவர்களால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் வருமோ என்கிற அச்சம் அத்தனை ஐரோப்பிய தேசங்களுக்கும் இருந்தது.

எப்படியாவது தப்பித்து பாலஸ்தீனுக்கு ஓடிவிடவேண்டும் என்பதுதான் அத்தனை யூதர்களின் எண்ணமும்.

ஆனால் எப்படித் தப்பிப்பது?

அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதை முன்கூட்டியே ஹிட்லர் யோசித்துவைத்திருந்தார். ஆகவே அவர் ஒரு காரியம் செய்தார். எந்தெந்த தேசத்தைக் கைப்பற்றுகிறாரோ, அந்தந்த தேசங்களின் எல்லைகளை முதலில் மூடச் சொன்னார்.

ஜெர்மனியின் எல்லைகளும் மூடப்பட்டன. வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேசமெங்கும் செய்யப்பட்டது. யூதரல்ல; ஒரு கொசு கூட எல்லை தாண்டி வெளியே போகமுடியாதபடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திவிட்டு ஹிட்லர் சிரித்தார்.

அந்தச் சிரிப்புக்கு, கண்ணை மூடிக்கொண்டு கொல்லுங்கள் என்று அர்த்தம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12 மே, 2005
**********************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)

(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: