Thursday, March 12, 2009

19-20. நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள்.19-20.

முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள்.இபுறாஹிம் (அலை ) முதல் இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.

வாசகர்கள் பலர் அறிந்திராத விஷய களஞ்சியம்.

மொத்தம் 100 பகுதிகள். இது தொடர்ந்து வரும் ஆதலால் வாசகர்கள் தாங்களுக்கு தெரிந்தவர்கள் , நன்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும், தாங்களின் பிள்ளைகளையும் படிக்க செய்யுங்கள்.

சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.

எழுத்துக்கள் பலவகை உண்டு.ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது.இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள்.

முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

*********************************************
19] யூதர்களுடன் ஓப்பந்தம்
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 19

மதினா என்கிற யத்ரிப் நகரில் அரேபியர்களும், அவர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிக அளவு யூதர்களும் வசித்துவந்தார்கள். இதில், அரேபியர்கள் என்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள். அதிகம் படித்தவர்களோ, பணக்காரர்களோ அல்லர். மெக்கா நகரின் குறைஷிகளைப் போலல்லாமல், முகம்மதுவை ஓர் இறைத்தூதராக ஏற்பதில் அவர்களுக்குப் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லை.

காரணம், முகம்மதுவை அவர்கள் தங்களில் ஒருவராகப் பார்க்க முடிந்ததுதான். அவர்களைப் போலவே முகம்மதுவும் படிப்பறிவில்லாதவர். அவர்களைப் போலவே எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொள்பவர். அவர்களைப் போலவே கனிவும் பரிவும் கொண்டவர். அவர்களைப் போலவே பாசாங்கற்றவர்.

ஆனால் அவர் உதிர்க்கிற ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்ட அழுத்தமும் தீர்மானமும் தீர்க்கதரிசனமும் மதினாவாசிகளுக்குப் பரவசமூட்டுபவையாக இருந்தன. பாமரர்தான்; ஆனால் இம்முறை இறைவன் அத்தகைய ஒருவரைத்தான் தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் விதத்தில் இருந்தன, அவருடைய பேச்சும் செயல்பாடுகளும்.

நூறு நூறு ஆண்டுகளாக வழிகாட்ட ஒரு ஜீவனில்லாமல், காட்டுச் செடிகள் போல் பிறந்து, வாழ்ந்து மடிந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் சேர்ப்பதற்காகவே இறைவன் முகம்மதைப் படைத்து அனுப்பிவைத்தான் என்று நம்பினார்கள் மதினாவாசிகள்.

இதனாலேயே, நம்ப முடியாத அளவுக்கு முகம்மதின் ஆதரவாளர்களும் இஸ்லாத்தில் இணைவோரும் அங்கே பெருகத் தொடங்கினார்கள்.

உருவமற்ற ஒரே பரம்பொருளின் பெருமைகளைத்தான் முகம்மது பேசினார். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் தமது இனக்குழுப் பகைகளை முன்னிட்டுத் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகாமல், ஒற்றுமையாக இருந்து பொது எதிரிகளான உருவ வழிபாட்டாளர்களைப் பண்படுத்த முயற்சி செய்யும்படி முகம்மது தொடர்ந்து வலியுறுத்தி வரத் தொடங்கினார்.

இவ்விஷயத்தில் அன்றைய மதினா நகரத்து யூதர்களையும் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தே இருந்தார்.

இதற்கான காரணங்கள் மிக நுட்பமானவை. யூதர்களும் உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்குபவர்கள் என்பது முதல் காரணம். தவிரவும் அவர்களில் படித்தவர்கள் அதிகம். அமைப்பு ரீதியில் வலுவாகக் காலூன்றிய அவர்களது மதகுருமார்களின் சபைகள், முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஓர் ஒழுங்கையும் நேர்த்தியையும் கடைப்பிடித்துவந்தன.

உருவ வழிபாட்டாளர்களுக்கு எதிரான சமயமாக இஸ்லாத்தை முன்னிறுத்துகையில், யூதர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றே முகம்மது அப்போது கருதினார். இரண்டும் சகோதர மதங்கள் என்பதை முன்வைத்து, இரு மதத்தினரும் சகோதரத்துவத்துடன் பழகவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னார். அப்படிச் செய்ய இயலுமானால், பொது எதிரியைச் சந்திக்க வலிமை கிட்டும். ஒரு யுத்தம் என்று வருமானால் ராணுவ பலம் அதிகரிக்கும். அரேபிய முஸ்லிம்களின் உடல் வலுவும் யூதர்களின் புத்திக்கூர்மையும் இணையுமானால் வெற்றிக்குப் பிரச்னை இராது.

வேறு வேறு நம்பிக்கைகள், வேறு வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களே என்றாலும் உருவமற்ற ஒரே இறைத் தத்துவத்தின் அடிப்படையில் இரு மதங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது பெரிய காரியமல்ல என்றே முகம்மது கருதினார்.

யூதர்களால் முதலில் முகம்மதை முழுமையாக ஏற்க முடியவில்லை. ஓர் இறைத்தூதர், காட்டான்களாகிய அரேபியர்களிடையே உதித்திருக்கிறார் என்பதை அவர்களது மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது.

அதே சமயம், உருவமற்ற ஒரே இறைவன் என்கிற கருத்தாக்கத்தை முகம்மது தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, அவரை நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில், அரேபியர்களிடையே வேறு யாருக்கும் அப்படிச் சிந்திக்கக்கூடத் தோன்றாது.மதக் காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமூகப் பாதுகாப்பு, அரசியல்ரீதியிலான பலம் போன்ற காரணங்களுக்காவது முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படலாம் என்று யூதகுருமார்களின் சபை அப்போது தீர்மானித்தது.

ஏனெனில், முகம்மதுவைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் நம்பமுடியாத அளவுக்கு அப்போது பெருகிக்கொண்டிருந்தது. ஜெருசலேத்திலிருந்து புறப்பட்ட நாளாக, அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு அவசியம் என்று பட்டது.

அவர்களிடம் ஓர் ஒழுங்கான மத நிர்வாக அமைப்பு இருந்ததே தவிர, ஒழுங்கான ராணுவம் கிடையாது. ஒரு தகராறு என்று வருமானால் எதிர்த்து நிற்க ஆள்பலம் போதாது.ஆனால் முகம்மதுவின் ஆராதகர்கள் உடல்வலுவும் மனபலமும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்தார்கள். மண்டியிட்டுத் தொழத் தெரிந்தவர்களாகவும் வாளேந்தி யுத்தம் புரியக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.

முகம்மது ஒரு சொல் சொன்னால் உயிரைத்தரவும் சித்தமாக இருந்தார்கள். அத்தகையவர்களுடன் நல்லுறவு கொள்வது யூதகுலம் யுத்தங்களில் மேலும் மடியாமல் இருக்க உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டது யூத மதகுருமார்களின் சபை.இந்தக் காரணங்களை மிக கவனமாகப் பார்க்கவேண்டும்.

முகம்மது, யூதர்களின் தோழமை முக்கியம் என்று கருதியதற்கு மதக் காரணங்கள்தான் உண்டு. யூதர்கள், இஸ்லாமியர்களின் தோழமையை விரும்பியமைக்கு ராணுவக் காரணங்களே பிரதானம். முகம்மதின் பிரச்னை, அவநம்பிக்கையாளர்கள் சம்பந்தப்பட்டது. யூதர்களின் பிரச்னை, சொந்த வாழ்க்கை தொடர்பானது. இரண்டும் வேறு வேறு எல்லைகளில் நிற்கிற பிரச்னைகள்.

ஆயினும் ஒரு நேர்கோட்டில் வந்து இணையவேண்டிய காலக்கட்டாயம் அப்போது ஏற்பட்டது.ஓர் உடன்பாடு செய்துகொண்டார்கள். இரு தரப்பினரும் பரஸ்பரம் வேண்டிய உதவிகள் செய்துகொள்ளவேண்டியது. யாருக்கு எந்தப் பிரச்னை என்றாலும் உடனே போய் உதவவேண்டியது முக்கியம்.

மெக்கா நகரின் குறைஷிகளால் மதினா முஸ்லிம்களுக்குப் பிரச்னை வருமானால் அங்குள்ள யூதர்கள் யுத்தத்தில் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அதேபோல், மதினாவாழ் யூதர்களுக்கு யாரால் எந்தப் பிரச்னை வந்தாலும் முகம்மதின் படை உதவப் போகும்.நம்புவது கொஞ்சம் சிரமம்தான்.

மதினாவுக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் முகம்மது அங்கே ஒரு சக்கரவர்த்தி போலக் கருதப்பட்டார். அவரது சொல்லுக்கு மாறாக ஓர் எதிர்க்குரல் அங்கே எழுந்துவிட முடியாது. மதினாவில் இருந்த அரேபியர்கள் சமூகம் முழுவதையும் தமது அன்பாலும் கனி வுமிக்க பேச்சாலும் கவர்ந்திழுத்த முகம்மது, குர் ஆனின் வசனங்களை ஓதி ஓதிக் காட்டி, அவர்களின் மனங்களைப் பண்பட வைத்தார்.

எந்த ஒரு மனிதப்பிறவியும் குறிப்பாக அரபுக் கவிஞர்கள் இத்தனை அர்த்தம் பொதிந்த, இனிய வரிகளைக் கற்பனையில் தயாரித்துவிடமுடியாது என்று எண்ணிய அரேபிய ஆதிவாசிகள், நிச்சயமாக முகம்மது ஓர் இறைத்தூதர்தான் என்று பார்த்த மாத்திரத்தில் நம்பி, அடிபணிந்தார்கள்.

முகம்மதே தங்கள் மன்னர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.சந்தேகமில்லாமல் அவர் ஒரு மன்னர்தான். ஆனால் நம்ப முடியாத அளவுக்கு எளிமையைக் கடைப்பிடித்த மன்னர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஒருகாலத்தில் பிணங்களை அடக்கம் செய்துகொண்டிருந்த ஓரிடத்தை விலைக்கு வாங்கி, அங்கே ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார் முகம்மது. பக்கத்திலேயே ஈச்ச ஓலைகள் வேய்ந்ததொரு பள்ளிவாசலையும் தாமே கட்டிக்கொண்டார்.

முஸ்லிம்கள் ஜெருசலேத்தை நோக்கித் தொழவேண்டும் என்பதுதான் ஆரம்பக் காலத்தில் முகம்மது வாயிலாக வெளிவந்த இறைக் கட்டளையாக இருந்தது. (பின்னால்தான் மெக்கா இருக்கும் திசை நோக்கித் தொழுகை நடத்தும்படி கட்டளை மாற்றப்பட்டது.)

எளிமையான, பாசாங்கில்லாத வாழ்க்கை, தனிவாழ்விலும் பொது வாழ்விலும் நேர்மையைக் கடைப்பிடிக்கச் சொன்னது, சகோதரத்துவ போதனைகள் போன்றவை, கேள்விகளற்று முகம்மதுவை ஏற்கும்படிச் செய்தன. யூதர்களுக்குக் கூட, முகம்மது தம் ஆதரவாளர்களை ஜெருசலேம் நோக்கித் தொழச் சொல்லியிருந்தது மிகுந்த சந்தோஷமளித்தது.

யூத மதமும் இஸ்லாமும் பல்வேறு வகையில் ஒனன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதுதானோ என்றும் அவர்கள் நம்ப ஆரம்பித்தார்கள். முஸ்லிம்கள் யூதப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்றுகூட அப்போது முகம்மது கூறியிருந்ததாகப் பல யூத சரித்திர ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள்.

திருமண உறவுகள் அரசியல் உறவை வலுப்படுத்தும் என்று இரு தரப்பினருமே கருதியிருக்கலாம்.அதே சமயம், இந்தச் சரித்திர ஆசிரியர்கள் சில கற்பனையான யூகங்களையும் செய்திகள் போலவே வெளியிட்டுவிடுவதையும் சொல்லவேண்டும்.

உதாரணமாக, மார்ட்டின் கில்பர்ட் என்கிற புகழ்பெற்ற யூத சரித்திர ஆய்வாளர், "யூதர்கள் தன்னை அவர்களது இறுதி இறைத்தூதர் என்று முழுமையாக ஏற்றுக் கொண்டு விடுகிற பட்சத்தில், முகம்மது தாமே ஒரு யூதராக மாறிவிடவும் தயாராக இருந்தார்" என்று சொல்கிறார்.

இதற்கு யூதர்கள் சம்மதிக்காததால்தான் இரு தரப்பாரிடையே உறவு முறியவேண்டியதானது என்று எழுதுகிறார்.குர் ஆனிலோ, முகம்மதின் வாழ்வையும் போதனைகளையும் சொல்லும் ஹதீஸ்களிலோ, முகம்மதின் உடனிருந்தவர்கள் வைத்துவிட்டுப் போன நினைவுக் குறிப்புகள் எது ஒன்றிலோ அல்லது மாற்று மதத்தவர் யாருடைய குறிப்புகளிலுமோ கூட இம்மாதிரியானதொரு அதிர்ச்சி தரத்தக்க விஷயம் காணப்படவில்லை.


இரண்டு வருடகாலத்துக்கு மேலாக மிகுந்த நல்லுறவுடன் வளர்ந்துவந்த முஸ்லிம் - யூத சகோதரத்துவம் மதினாவில் இற்றுப்போகத் தொடங்கியதற்கு உண்மையான காரணங்கள் வேறு.

முதலாவது, கொடுத்த வாக்குப்படி அவர்கள் முஸ்லிம்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் செய்வதில் தயக்கம் காட்டினார்கள். முஸ்லிம்கள் மட்டும் தமக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

இரண்டாவது காரணம், முஸ்லிம்களின் ஒத்துழைப்பு வேண்டும்; ஆனால் முகம்மதை முழு மனத்துடன் இறைத்தூதராக ஒப்புக்கொள்ள இயலாது என்று அவர்கள் விடாப்பிடியாக நின்றது.

இதை எந்த முஸ்லிமும் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார். "நீங்கள் இறைவனையும் எங்களையும் பழித்தால்கூட, சகித்துக்கொள்வோம். முகம்மது ஓர் இறைத்தூதர் என்று ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் எவ்வித உறவும் நமக்குள் இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டார்கள்.

மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், இயேசு செய்ததைப் போலவே முகம்மதும் யூதர்கள் தம் மதத்தின் ஆதி நம்பிக்கைகளுக்குப் புறம்பான புதிய மதப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டதையும் குருமார்களுக்கான ஆராதனைகள் பெருகுவதையும் விமர்சனம் செய்யத் தொடங்கினார்.

ஒரே இறைவன். அவனைத்தவிர வழிபாட்டுக்குரியவர்கள் வேறு யாருமில்லை என்பதுதான் ஆபிரஹாம் என்கிற இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் மேற்கொள்ளவேண்டிய உறுதி. இதற்கு மாறாக யூதர்கள் நடந்துகொள்ளத் தொடங்கியபோது, அவர்களது நடத்தையை முகம்மது தயங்காமல் விமர்சித்தது, யூதர்களுக்குப் பிடிக்கவில்லை.இந்தக் காரணங்களால்தான் யூதர்கள் முஸ்லிம்களிடையே முதல் முதலில் பிளவு உண்டானது.

கி.பி. 624-ம் வருடம் முகம்மது தமது மக்களிடம் இனி மெக்காவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அதுநாள்வரை ஜெருசலேம் நோக்கித் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் அப்போதிலிருந்து மெக்காவை நோக்கித் தொழ ஆரம்பித்தார்கள்.

இரண்டும் வேறு வேறு திசைகள். எதிரெதிரே தான் இருக்க முடியும்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 ஜனவரி, 2005

20] இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல.

ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும் அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.

முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்.

அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

முகம்மது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622-ம் ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630-ல் மெக்காவை வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார். (கி.பி.632)

இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம் நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம்.

அரேபியாவில் அல்ல; உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது.

ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

முகம்மதுவுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முகம்மது ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார்.

மதப்பிரசாரம் மட்டுமே அவரது பணியாக இருக்கவில்லை.

மாறாக, அவர் மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.

ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத் தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு முகம்மது நபியைச் சேர்ந்தது.

கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

அந்த மூன்று யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின் படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.)

ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள் வென்றாரர்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது. ஆனாலும் ஜெயித்தார்கள்.

இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹைத் யுத்தம். (அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முகம்மது ஓர் இறைத்தூதரே ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி, கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே அடைந்தார்கள்.

மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள் காரணமல்ல. மெக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின் என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள்.

குறிப்பாக மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.
பத்ரு போரில் குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது.

தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள். அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால் என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம் இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.

ஒரு முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.இந்த மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட யுத்தங்கள்.

இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக் யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம், ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.

சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது உண்மையே.
ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம் தவிர்க்கப் பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில் முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முகம்மது நபி ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை.
ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர் இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இருந்திருக்கிறது.

அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள், போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். (முகம்மது நபியின் காலத்துக்குப்பின் நடந்த யுத்தங்கள் பிறகு வரும்.)

இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில் நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முகம்மது ஓர் உபாயம் செய்தார். மெக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம் உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே எதிர்கொள்வார்ரகள்.

அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது.

ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும் யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.

"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை.
அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது.""முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.

முகம்மது நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும் பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ, சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை.

குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப் பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.

இந்த அறிக்கைக்குப் பிறகு, முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல் உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று தோன்றுகிறது.
வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.

ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில் முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில் முகம்மது நபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம் அப்படியே கடைப்பிடித்தார்கள்.

யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார்.

தங்களது சுதந்திரம் என்பது, தனியான யூத தேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

மாறாக, முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில் சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.

எப்போதும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 ஜனவரி, 2005
******************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.

(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: