Thursday, March 19, 2009

55.-56. இஸ்ரேல் உதயம்.பாலஸ்தீன் என்பது என்ன? அப்படியொரு தேசமே இல்லை என்று ஆனது இப்படித்தான்! பகுதி. 55-56.

55] இஸ்ரேல் உதயம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 55.

பாலஸ்தீன் அரேபியர்கள், யூதர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில், பிரிட்டன் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மே மாதம் 15-ம் தேதி (1948-ம் வருடம்), பாலஸ்தீனிலிருக்கும் தனது துருப்புகளை முழுவதுமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு.

அதாவது மே மாதம் 15-ம் தேதியுடன் பாலஸ்தீனுக்கும் பிரிட்டனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி பிரிட்டனின் காலனியாக இருந்துவரும் பாலஸ்தீன், அன்று முதல் சுதந்திர நாடு என்பதே இந்த அறிவிப்பின் பொருள்.

இந்த அறிவிப்பு வெளியானதும் அரேபியர்களின் கோபம் உச்சகட்டத்தைத் தொட்டுவிட்டது. கண்மண் தெரியாமல் அவர்கள் யூதர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் கடனுக்கு ஆயுதங்களை வாங்கிவந்து குவித்தார்கள். பழக்கமே இல்லாதவர்கள் கூட துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்டவர்களைச் சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள்.

இதற்கு ஆறு வாரங்கள் முன்னதாகவே, பாலஸ்தீனின் பிற பகுதிகளிலிருந்து யூதர்கள் யாரும் ஜெருசலேத்தை நெருங்க முடியாதபடி மிகக் கடுமையான பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்துவிட்டார்கள்.

ஜெருசலேத்திலிருந்து வெளியே யாரும் கடிதம் அனுப்பமுடியாது. யாரிடமாவது தகவல் சொல்லி அனுப்பலாம் என்றால் அதுவும் முடியாது. எப்படி வெளியிலிருந்து யாரும் உள்ளே போக முடியாதோ, அதேமாதிரி நகருக்கு உள்ளே இருக்கும் யாரும் வெளியே போகவும் முடியாது. மீறி யாராவது நகர எல்லையைத் தாண்டுவார்களேயானால் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.

என்னதான் பிரிட்டிஷ் காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தாலும் அரேபியர்கள் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்கான மறைவிடங்களைப் பாலைவனங்களிலும் முள்புதர்க் காடுகளிலும் அடர்ந்த மரங்களின் கிளைகளிலும், இடிந்த கட்டடங்களில் சுரங்கம் தோண்டியும் அமைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆங்காங்கே ஒற்றர்களை நிறுத்தி, யாராவது நகருக்குப் புதிதாக வருகிறார்களா, அல்லது நகரிலிருந்து யாராவது, எந்த வாகனமாவது வெளியேறுகிறதா என்று கவனித்து உடனடியாகப் போய்த் தாக்குவார்கள்.

தாக்கும் கணத்தில் மட்டும்தான் கண்ணில் படுவார்கள். அடுத்த வினாடி அவர்கள் எங்கே போனார்கள் என்பதே தெரியாது. அரேபியர்களின் மனத்தில் இருந்த கோபமும் வேகமும் அவர்களை அத்தனை விரைவாகச் செயல்படவைத்தது!

இத்தகைய காரியங்களைச் செய்தவர்கள் பாலஸ்தீனத்து அரேபியர்கள் மட்டும் அல்லர்; சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்கிய அக்கம்பக்கத்து நாடுகளைச் சேர்ந்த அரேபியர்களும் அவர்களின் உதவிக்கு அப்போது வந்திருந்தார்கள்.

குறிப்பாக, சிரியாவிலிருந்து சில ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். ஈராக்கிலிருந்து எழுநூறு பேர் கொண்ட ஒரு குழுவே தனியாக வந்திருந்தது. எகிப்திலிருந்தும் நூற்றைம்பது பேர் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்வதற்காக ஆயுதங்களுடன் வந்திருந்தார்கள்.

இஸ்ரேல் உருவாகும் தினம் நெருங்க நெருங்க, பாலஸ்தீன் முழுவதும் பதற்றம் அதிகரித்தது. மார்ச் இறுதி, ஏப்ரல் மாதங்களில் பாலஸ்தீனிலிருந்த ஒவ்வொரு யூத கிராமமும் முறை வைத்துக்கொண்டு தாக்கப்பட்டன.

அரேபியர்கள் முதலில் காவல் நிலையங்களைத்தான் தாக்குவார்கள். அங்குள்ள தொலைத்தொடர்பு சௌகரியங்களை அழித்துவிட்டு, காவலர்களைக் கட்டிப்போட்டுவிடுவார்கள். அதன்பின் கிராமத்துக்குள் நுழைந்து யூதர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள்.

இதுதான் அவர்கள் மேற்கொண்ட நடைமுறை.
ஏப்ரல் 13-ம் தேதி ஆன்ர் ஈஜன் (Kfaretzion) என்கிற யூத கிராமத்தை ஒரு அரபுப்படை சூழ்ந்துகொண்டது. பெத்லஹெமுக்குத் தெற்கே இருக்கும் கிராமம் இது. சுற்றி வளைத்த அரேபியக் கலகக்காரர்கள் மொத்தம் 400 பேர். ஆனாலும் கிராமத்துவாசிகள் தயாராக இருந்ததால், அவர்களை உடனே அடித்துத் துரத்திவிட்டார்கள்.

வன்மத்துடன் மீண்டும் மோதிய அரேபியர்கள் ஒரே இரவில் நூற்றுப்பத்து யூதர்களை அங்கே கொலை செய்தார்கள். தவிர, சரணடைந்த சுமார் நூறு யூதர்களையும் வரிசையில் நிற்கவைத்து இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்!

பொதுவாக, இம்மாதிரியான தாக்குதல்கள் வேகமடையும்போது, இருப்பிடத்தை விட்டு நகர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுவதுதான் யூதர்களின் இயல்பு. அதை மனத்தில் கொண்டுதான் அரபுகள், யூத கிராமங்களுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்தார்கள். எப்படியாவது பாலஸ்தீனிலிருந்து யூதர்களை ஓட்டிவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல்தானே ஐரோப்பாவிலிருந்து ஓடிவந்தார்கள்? அதே தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனில் இருந்தும் அவர்களை விரட்டிவிடலாம் என்று நினைத்தார்கள் அவர்கள்.

ஆனால் யூதர்கள் விஷயத்தில் இது மிகப்பெரிய தப்புக்கணக்கு என்பது அரேபியர்களுக்கு அப்போது புரியவில்லை. அவர்கள் எங்கிருந்து துரத்தினாலும் பாலஸ்தீனுக்கு ஓடிவருவார்களே தவிர, பாலஸ்தீனிலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுவதற்குத் தயாராக இல்லை!

அடித்தால் திருப்பி அடிப்பது. முடியாவிட்டால் தற்காத்துக்கொள்வது. அதுவும் முடியாவிட்டால் அடிபடுவது, உயிர் போகிறதா? அதுவும் பாலஸ்தீனிலேயே போகட்டும்.

அப்படியொரு மனப்பக்குவத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள். ஆயிரமாண்டு காலமாக ஓடிக் களைத்தவர்கள் அல்லவா? இன்னொரு ஓட்டத்துக்கு அவர்கள் தயாராக இல்லை. தவிர, அரேபியர்களின் தாக்குதல்களெல்லாம் தாற்காலிக எதிர்ப்புதான் என்று யூதர்கள் நினைத்தார்கள்.

காரணம், எப்படியிருந்தாலும் இன்னும் சில தினங்களில் சுதந்திரம் வந்துவிடப்போகிறது; இஸ்ரேல் என்கிற தனிநாடு உருவாகிவிடப் போகிறது. தனி அரசாங்கம், தனி ராணுவம், தனி போலீஸ் என்று சகல சௌகரியங்களுடன் வாழப்போகிறார்கள். அப்போது சேர்த்துவைத்து பதிலடி கொடுத்தால் போயிற்று என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.

தங்கள் தாக்குதலுக்கு அவர்கள் பயந்து ஓடவில்லை என்பதுதான் அரேபியர்களுக்கு விழுந்த முதல் அடி. அவர்களால் நம்பவே முடியவில்லை.

யூதர்களா எதிர்த்து நிற்கிறார்கள்? யூதர்களா அடிவாங்கிக்கொண்டு விழுகிறார்கள்? யூதர்களா ஓடாமல் இருக்கிறார்கள்? எனில், சரித்திரம் சுட்டிக்காட்டிய உண்மைகள் எல்லாம் பொய்யா? ஓடப்பிறந்தவர்கள் அல்லவா அவர்கள்? ஏன் ஓடாமல் இருக்கிறார்கள்?

அவர்களுக்குப் புரியவில்லை. ஆகவே, இன்னும் கோபம் தலைக்கேறி, இன்னும் உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். பல கிராமங்களில் இருந்த யூதர்களை விரட்டி விரட்டிக் கொன்றார்கள்.

அதேசமயம், தைபெரியஸ், ஹைஃபா, ஏக்ர், ஜாஃபா, ஸஃபேத் போன்ற அரேபியர்களின் கோட்டை போன்ற நகரங்களை யூதர்களும் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

நாள் நெருங்க நெருங்க அரேபியர்களின் ஜுரம் அதிகமானது. இன்னும் ஆள் பலம் வேண்டும் என்று கருதி, ஜெருசலேத்தைக் காப்பதற்காக நிறுத்தி வைத்திருந்த சில ஆயிரம் பேரையும் யூதர்களின் குடியிருப்புகளைத் தாக்கும் பணியில் இறக்கினார்கள்.

1947 நவம்பர் தொடங்கி, இஸ்ரேல் பிறந்த தினம் வரை மொத்தம் ஆறாயிரம் யூதர்கள் பாலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்டார்கள். இது மொத்த யூத மக்கள் தொகையில் (பாலஸ்தீனில் மட்டும்) ஒரு சதவிகிதம்!

மே மாதம் பிறந்தது. ஒட்டுமொத்த பாலஸ்தீனும் பதறிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம், பாலஸ்தீனை விட்டு நகர்வதற்காக பிரிட்டிஷ் துருப்புகள் தயாராகிக் கொண்டிருந்தன. மறுபக்கம், அவர்கள் எப்போது நகர்கிறார்களோ, உடனடியாக உள்ளே புகுந்து யூதர்களை கபளீகரம் செய்துவிடும் வெறியுடன் அரேபியர்களின் நட்புக்கு வந்த எகிப்து, டிரான்ஸ்ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய தேசங்களின் ராணுவங்கள் எல்லையில் அணிவகுத்து நின்றன.

அவர்களுக்கு உதவியாக, உள்ளூர் பாலஸ்தீனிய தனியார் ராணுவங்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.

பத்து நாள். ஒன்பது நாள். எட்டு நாள். ஏழுநாள். ஆறுநாள்.
திடீரென்று பிரிட்டன், தன் துருப்புகளை விலக்கிக்கொள்ளும் தினம் மே 15 அல்ல; மே மாதம் 14-ம் தேதியே வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டது.

முழு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகச் சுதந்திரம்! இஸ்ரேல் உதயமாகும் தினம் ஒரு நாள் முன்கூட்டியே வந்துவிடுகிறது!

அரேபியர்களின் அவல வாழ்க்கை ஒருநாள் முன்கூட்டியே ஆரம்பமாகிவிடுகிறது.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. சுதந்திரத்துக்கு என்று ஒரு நாள் குறித்துவிட்டு, அதை ஒருநாள் முன்னதாக மாற்றி அமைக்கும் வழக்கம் அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை.

பிரிட்டன் ஏன் அப்படியொரு முடிவை எடுத்தது; ஒருநாள் முன்னதாக அதனைச் செய்வதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தது என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

யூதர்களின் அரசியல் தலைவர்களும் ராணுவத் தளபதிகளும் அவசர அவசரமாகக் கூடிப் பேசினார்கள். இனியும் பிரிட்டனை நம்பிக்கொண்டோ, எதிர்பார்த்துக்கொண்டோ இருக்க முடியாது. சுதந்திர தேசம் கிடைத்துவிடும்.

அதில் சந்தேகமில்லை. ஆனால் இஸ்ரேல் யூதர்களின் பாதுகாப்புக்கு முதலில் வழி செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? எம்மாதிரியான வியூகம் வகுக்கலாம்?

இகேல் யாதின் (Yigael Yadin) என்பவர் அப்போது இஸ்ரேலிய ராணுவத்தின் முதன்மைத் தளபதியாக இருந்தார். அவர் பென்குரியனிடம் சொன்னார்: ‘இது சவால். நம்மிடம் போதிய ஆயுதபலம் கிடையாது. எதிரிப் படைகள் முழு பலத்துடன் இருக்கின்றன. நமது வீரர்கள் மனபலத்தை மட்டுமே வைத்துப் போரிட்டாக வேண்டும்.’

உண்மையில், மிகவும் உணர்ச்சிமயமான சூழ்நிலை அது. சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் ரோமானியப் படையை எதிர்த்து யூதத் தளபதி பார் கொச்பா நடத்திய யுத்தம்தான், அதற்கு முன் யூதர்கள் தம் தேசத்தைக் காப்பதற்காக நடத்திய யுத்தம். அத்தனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் யூதர்கள் தமது தேசம் என்கிற பெருமிதத்துடன், அதைக் காப்பதற்காக ஒரு யுத்தம் செய்யவிருந்தார்கள்!

மே மாதம் 13-ம் தேதி, 1948-ம் வருடம். பெரும்பாலான பிரிட்டிஷ் துருப்புகள் பாலஸ்தீனை விட்டுப் போய்விட்டிருந்தன. நகரங்கள் பேயடித்தமாதிரி அமைதியில் இருந்தன. பொழுது விடிந்தால் சுதந்திரம். பொழுது விடியும்போது இஸ்ரேலும் பிறக்கும்! அதே பொழுது விடியும்போது அரேபியர்கள் தாக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்!

இஸ்ரேல் பிறக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பதா? எதிர்வரும் யுத்தத்தை நினைத்துக் கவலைப்படுவதா? யுத்தத்தில் என்ன ஆகப்போகிறது. இஸ்ரேலிய ராணுவம் ஜெயிக்குமா? அல்லது நான்கு தேசங்களின் துணையுடன் தாக்கப்போகிற பாலஸ்தீனிய அரேபியர்கள் வெற்றி பெறுவார்களா?
யாருக்கும் தெரியாது. என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம்.

மே 14, 1948. விடிந்துவிட்டது அன்றைய தினம்.
முந்தைய நாள் இரவுடன் அத்தனை பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் போய்விட்டிருக்க, அன்று காலை கட்டக்கடைசியாக பாலஸ்தீனுக்கான பிரிட்டிஷ் ஹை கமிஷனர் மட்டும் ஜெருசலேத்தில் இருந்தார்.

தன் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு, ஒப்படைக்க வேண்டிய தஸ்தாவேஜ்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கடைசிக் கையெழுத்துகளைப் போட்டுவிட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு கையாட்டிவிட்டு வண்டியேறினார்.

பிரிட்டனின் முப்பது வருட ஆட்சி அந்த வினாடியுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இனி பாலஸ்தீன் என்று ஒரு தேசம் இல்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன் என்று இரு தேசங்கள். இந்தியா - பாகிஸ்தான் மாதிரி அவையும் அண்டை தேசங்களாக இருக்கும்.

உணர்ச்சி உடைந்து பெருக்கெடுக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த சமயம். ஹை கமிஷனரை வழியனுப்பிவிட்டு, அவசரஅவசரமாக டெல் அவிவ் நகருக்குப் போய்ச் சேர்ந்தார் இஸ்ரேலின் அரசியல் தலைவர் பென்குரியன்.
நேரம் பிற்பகல் ஒன்று ஆகியிருந்தது. அறிவிப்புக்கான சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது.

இறுதிக்கட்ட நடவடிக்கைகள் வேகமாக நடந்தன. குரியன் தன் சகாக்களுடன் கலந்து பேசினார். ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாரா?’ என்று ராணுவத் தளபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

எல்லாம் தயார் என்று ஆனதும் சர்வதேச மீடியாவுக்கும் பாலஸ்தீனின் யூதர்களுக்கும் அந்த அறிவிப்பை வெளியிட்டார்: "இன்று முதல் இஸ்ரேல் பிறக்கிறது. யூதர்களின் தேசம்."

அந்தக் கணத்துக்காகக் காத்திருந்த யூதர்கள், பரவசத்தில் ஓவென்று அழுது கண்ணீர் விட்டார்கள். குதித்து, ஆனந்தக் கூத்தாடினார்கள். ஒருவரையருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள்.

மறுபுறம் பாலஸ்தீனின் அனைத்து எல்லைகளிலிருந்தும் அரபுப் படைகள் உள்ளே நுழைய இறுதிக்கட்ட ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தன.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 ஜூன், 2005

56] யுத்தம்,
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 56

இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரபு தேசங்கள் என்று தனித்தனியே நாடுகள் கிடையாது. சுமார் 1350 வருடங்கள் ஒட்டாமான், துருக்கியப் பேரரசின் அங்கங்களாகவே இன்றைய அரபு தேசங்கள் அனைத்தும் இருந்தன.

அதாவது, அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம். பாலஸ்தீன், ஈராக், ஈரான், லெபனான், சிரியா என்று துண்டு தேசங்கள் உருவானதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்கும் பிரிட்டன் விடை பெற்றதற்கும் பிறகுதான். அதற்கு முன் ஒரே பேரரசு. அதன்கீழ் பல சிற்றரசுகள். அவ்வளவுதான்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களை ஒட்டி பல்வேறு அரேபிய தேசங்கள், ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சுதந்திர தேசங்களாயின.

பாலஸ்தீனும் அப்படியரு சுதந்திர தேசமாக ஆகியிருக்க வேண்டியதுதான். ஆகமுடியாமல் போனதன் காரணம், பிரிட்டன் உதவியுடன் யூதர்கள் அங்கே ஊடுருவி இடத்தை நிரப்பியதுதான்.

இந்தக் கோபம்தான் அரேபியர்களுக்கு. நியாயமான கோபமே என்றாலும் வேறு வழி இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் ஐ.நா அறிவித்த பாலஸ்தீன், இஸ்ரேல் எல்லைப் பிரிவு நடவடிக்கையை மனத்துக்குள் ஒருவாறு ஏற்றுக்கொள்ளத் தயாராகித்தான் இருந்தார்கள்.

தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய யுத்தத்தைத் தொடங்குவது, முடிவு எப்படியானாலும் ஐ.நா. பிரித்துக்கொடுத்த நிலம் எப்படியும் இருக்கத்தானே போகிறது என்று அப்பாவி அரேபியர்கள் நினைத்தார்கள்.

கவனிக்கவும். இவர்கள் புரட்சிக்காரர்கள் அல்லர். கலகக்காரர்கள் அல்லர். அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் துணையுடன் யுத்தத்தில் பங்குபெறக் களம் சென்றவர்கள் அல்லர்.

மாறாக, படிப்பறிவோ, அரசியல் எண்ணமோ, வாழ வழியோகூட இல்லாத அடித்தட்டு வர்க்கத்து அரேபியர்கள். இவர்கள்தான் பெரும்பான்மையினர்.

இவர்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவோ, வழிநடத்தவோ, அறிவுரைகள் கூறவோ அன்றைக்கு யாரும் இருக்கவில்லை.

அரபு இனத்தலைவர்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலர் யுத்தம் குறித்துச் சிந்திக்கப் போய்விட்டார்கள். இளையவர்கள் எல்லாரும் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு, ‘யூதர்களை ஒழிக்காமல் வரமாட்டேன்’ என்று டெல் அவிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டார்கள்.

நோயாளிகள், வயதானோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்தப் பெரும்பான்மை அரபுக்கள், தாம் வசித்து வந்த மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில் வீட்டுக்குள் பதுங்கியபடியே என்ன ஆகுமோ என்று தமக்குள் எண்ணியெண்ணிப் பயந்துகொண்டிருந்தார்கள்.

பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்னையின் நவீனகால வரலாறு என்பது இந்த இடத்தி¢ல்தான் தொடங்குகிறது.

ஒரு பக்கம் அரபுகள் என்னவாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், இதே அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இஸ்ரேல் யூதர்களும் இதே போலத்தான் அஞ்சிக்கொண்டிருந்தார்கள். என்ன ஆகுமோ?

பெரும்பான்மை மக்களின் இந்த அச்சத்துக்கும் சிறுபான்மை வீரர்கள் மற்றும் புரட்சிக்காரர்களின் கோபம் மற்றும் துவேஷத்துக்கும் நிறைய இடைவெளி இருந்தது.

எப்படி அரேபியப் புரட்சிக்காரர்கள், தமது பெரும்பான்மை மக்களின் மனநிலை என்ன என்பதைக் கேட்டறிந்துகொள்ள விரும்பவில்லையோ, அதே போலத்தான் பெரும்பான்மை யூத மக்களின் கருத்தையும் இஸ்ரேலிய அரசோ, இஸ்ரேல் ராணுவமோ அந்தத் தருணத்தில் பொருட்படுத்தவில்லை.
யுத்தம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

எகிப்து, லெபனான், ஜோர்டன், ஈராக் மற்றும் சிரியாவின் படைகள் ஒரு பக்கம் பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஆதரவாக நின்றன. எதிர்ப்பக்கம் இஸ்ரேல். அன்று பிறந்த இஸ்ரேல். அதற்கு முன் அவர்கள் தனியொரு தேசத்தைக் கண்டதில்லை. தனியொரு ராணுவத்தை வைத்துப் பயிற்சியளித்துப் பெரும் யுத்தங்களைச் சந்தித்ததுமில்லை. போர்க்கால நடவடிக்கைகள் என்றால் என்ன என்பதையே அந்தப் போரின் இறுதியில்தான் அவர்கள் அறியப்போகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். மே 14, 1948 அன்று இஸ்ரேல் பிறந்தது. மறுநாள் அதாவது மே 15-ம் தேதி இந்த யுத்தம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஒரு நாள், ஒருவார, ஒரு மாத கால யுத்தமல்ல. ஒரு முழு வருடத்தை விழுங்கப்போகிற யுத்தம்.

இத்தனை தேசங்கள் தம்மை ஆதரிப்பதால் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை, பாலஸ்தீன் போராளிகளுக்கு இருந்தது.

தமது குறைந்த போர்த்திறமை, சரியான தலைமை இல்லாமை, வியூகம் வகுக்கத் தெரியாதது போன்ற அத்தனை குறைகளுமே ஒரு பொருட்டில்லாமல் போகும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஒட்டுமொத்த அரபு சமுதாயமும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது நேற்று முளைத்த சுண்டைக்காய் தேசத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது இஸ்ரேலை யுத்தத்தில் தோற்கடிப்பது, ஒரு யூதர் விடாமல் அத்தனை பேரையும் பாலஸ்தீனை விட்டு ஓட ஓட விரட்டுவது. இதுதான் அரேபியர்களின் திட்டம்.

யூதர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தமது ஆண்டாண்டு காலக் கனவான தனிநாடு என்பதை அடைந்துவிட்டிருந்த மகிழ்ச்சி மேலோங்கியிருந்ததால், யுத்தம் குறித்த பயம் அவர்களிடையே பெரிதாக இல்லை. ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. தமது தேசம் தமக்கு உண்டு என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருந்தது. ஒருவேளை யுத்தத்தில் தோற்க நேரிட்டால் இஸ்ரேலின் சில பகுதிகளை இழக்க நேரிடலாம்.

இருக்கவே இருக்கிறது ஐ.நா. சபை. ‘நீங்கள் வகுத்தளித்த நிலத்தை அபகரித்துவிட்டார்கள்; திரும்ப வாங்கிக்கொடுங்கள்’ என்று கேட்கவும் அவர்கள் சித்தமாக இருந்தார்கள்.

இதென்ன குழந்தைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றலாம். உண்மை அதுதான். இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற டேவிட் பென் குரியனிடம் அவரது அமைச்சரவை சகா ஒருத்தர் இந்த மாதிரியே சொல்லியிருக்கிறார்.

ஆயிற்று. மே 15-ம் தேதி யுத்தம் தொடங்கிவிட்டது. முதல் குண்டு டெல் அவிவ் நகரில் வந்து விழும்போது மணி காலை 9.15. வீசியது ஒரு பாலஸ்தீனப் போராளி. எங்கிருந்து அவர்கள் ஊருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதே முதலில் இஸ்ரேல் ராணுவத்துக்குப் புரியவில்லை.

தெற்கிலிருந்து எகிப்துப் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தன. வடக்கிலிருந்து லெபனான் மற்றும் சிரியாவின் படைகள். மேற்கில் டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம். வடமேற்கிலிருந்து ஈராக் ராணுவம். கிழக்குப் பக்கம் பற்றிக் கவலையே இல்லை. மத்திய தரைக்கடலைக் காட்டிலும் எந்த ராணுவத்தின் பலம் அதிகமாக இருந்துவிட முடியும்?

இஸ்ரேல் முதலில் தற்காப்பு நடவடிக்கைகளாகத்தான் மேற்கொண்டது. முதலில் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தினார்கள். ராணுவத்தின் ஒரு பகுதியைப் பிரித்து எல்லைக் காவலுக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு பகுதியை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டார்கள். மூன்றாவதாக ஒரு பிரிவைத்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள்.

இந்த யுத்தத்தில் இஸ்ரேல் எப்படிச் செயல்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை, பிரான்ஸ் முதல் பெல்ஜியம் வரை அத்தனை தேசங்களும் அதைத்தான் கவனித்துக் கொண்டிருந்தன.

எந்தச் சமயத்திலும் யார் வேண்டுமானாலும் உதவிக்கு வரலாம் அல்லது மௌன சாமியாராகவே இறுதிவரை கூட இருந்துவிடலாம்.

ஆனால் இஸ்ரேல் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடுமானால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இஸ்ரேல் விஷயத்தில் சற்று அக்கறையுடன் நடந்து கொள்ளவேண்டிய சூழ்நிலை அவசியம் வரும்.

பொருட்படுத்தத்தக்க தேசமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள இந்த யுத்தம் ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்தார் பென் குரியன். இஸ்ரேல் ராணுவத்தின் வியூகம், அவரது இந்த எண்ணத்தைத்தான் பிரதிபலித்தது.

யுத்தம் சூடுபிடித்தது. இரு புறங்களிலும் மிகக் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா யுத்தம். ஆகவே தமக்கு ஓரளவு நன்கு தெரிந்த கெரில்லா போர்ப்பயிற்சி முறையையே அவர்கள் அதிகமாகக் கையாண்டார்கள்.

எதிர்பாராத நேரத்தில், இடத்தில் தாக்குதல் நடத்துவது. கையில் இருப்பது ஒரேயொரு நாட்டு வெடிகுண்டேயானாலும் குறைந்தது ஐம்பது பேரையாவது கொல்லும் வகையில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியுடன் இருந்தார்கள்.

உதவிக்கு வந்த படைகளைப் பொறுத்தவரை எகிப்தின் ராணுவம் இருந்தவற்றுக்குள்ளேயே சற்று கட்டுக்கோப்பான ராணுவம் என்று சொல்லவேண்டும். இஸ்ரேல் பயந்ததும் அதற்குத்தான்.

குண்டுகளை வீணாக்காமல் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் யுத்தம் செய்தார்கள். அரசுக் கட்டடங்களைத் தாக்குவது, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள், மருத்துவமனைகள் கண்ணில் பட்டால் உடனே அவற்றைத் தாக்கி அழிப்பது என்பதே எகிப்து ராணுவத்தின் முதல் இலக்காக இருந்தது.

ஈராக் படையினர் கண்மூடித்தனமாக முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயிற்சி பெற்ற ராணுவம் போல் அல்லாமல், கலவரக்காரர்கள் போல் அவர்கள் தாக்குதலில் ஈடுபட விரும்பினார்கள்.

சிரியா, லெபனான், ஜோர்டன் படைகள் எப்படியாவது டெல் அவிவ் நகருக்குள் புகுந்து கைப்பற்றிவிட மிகவும் விரும்பி, அதனை ஒட்டியே தமது வியூகத்தை வகுத்திருந்தன.

மறுபுறம், இஸ்ரேல் ராணுவத்தின் ஆள்பலம் குறைவாக இருந்தாலும் யுத்த நேர்த்தி அவர்களுக்கு மிக இயல்பாக வாய்த்திருந்தது. யுத்தங்களைக் கையாளும் முறை, வியூகம் வகுப்பது, ஒற்றறிதல் போன்றவற்றில் இஸ்ரேலியர்கள் இயல்பான திறமை பெற்றிருந்தார்கள். இழப்புகள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.

இதனைத் தற்காப்பு யுத்தம் என்று சொல்வார்கள். ஓரெல்லை வரை தற்காப்பு யுத்தம் செய்வது, சந்தர்ப்பம் கிடைக்குமானால் புகுந்து புறப்பட்டுவிடுவது.
வானம் புகை மண்டலமாகவும் பூமி செந்நிறமாகவும் ஆனது. யுத்தம் அதன் முழு உக்கிரத்தை அடைந்திருந்தது.

நடுக்கடலில் கப்பல்களை குண்டுவீசி அழித்தார்கள். போர் விமானங்கள் தாக்கி வீழ்த்தப்பட்டன. ராணுவ முகாம்களில் எறிகுண்டுகள் வீசி திகுதிகுவென்று எரியச் செய்தார்கள். கொலைவெறி ஒன்று மட்டுமே மேலோங்கியிருந்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேலுக்கு இருந்த பயம் விலகிவிட்டது. அவர்கள், தலைநகரை அரவணைத்து நின்று போரிடுவதை விட்டுவிட்டு வெளியேறி, முன்னேறி வந்து படைகளை அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த எல்லைக் கோடுகளெல்லாம் புழுதிக்கோடுகளாகி, மறைந்தே போயின. எங்கு பார்த்தாலும் குண்டுகள் வெடித்தன. எங்கு பார்த்தாலும் பீரங்கிகள் முழங்கின. எங்கெங்கும் மனிதர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.

இஸ்ரேலிடம் இத்தனை வீரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அரபு தேசங்கள் சற்று பயந்துபோயின என்றே சொல்லவேண்டும். எங்கிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வருகின்றன, யார் போர் யுக்திகளை வகுத்துத் தருகிறார்கள் என்பது புரியவில்லை. நேற்று உருவான இஸ்ரேலிய ராணுவத்துக்கே இத்தனை திறமை இயல்பாக இருக்கும் என்று யாரும் நம்பத்தயாராக இல்லை.

ஏதோ ஒரு பெரிய கை உதவுகிறது என்பது மட்டும் புரிந்தது. அது எந்தக் கை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

யுத்தம் அதன் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது ஐ.நா. தலையிட்டது. திரைப்படங்களின் இறுதியில், எல்லாம் முடிந்தபிறகு வரும் போலீஸ்காரர் மாதிரி. போர் நிறுத்தம். அமைதி ஒப்பந்தம். இத்தியாதிகள்.

அந்த அமைதி ஒப்பந்தத்தில்தான் இருக்கிறது விஷயம்.

போர் நிறுத்தம் சரி. ஆனால் எங்கே நிறுத்துவது? நவீன உலகில், எந்த தேசத்தில் எப்போது யுத்தம் நடந்தாலும் இந்த விஷயத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

போர் நிறுத்தம் என்று வந்து, அதை இரு தரப்பினரும் ஒப்புக் கொள்வார்களேயானால், அந்த வினாடி வரை அவர்கள் எதுவரை முன்னேறி வந்திருக்கிறார்களோ, அந்த இடம் வரை சம்பந்தப்பட்ட தேசத்துக்குச் சொந்தம் என்பதுதான் விதி.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் யுத்தத்தின்போது இதன் அடிப்படையில்தான் முஸஃபராபாத் உள்ளிட்ட கில்கிட்டைச் சுற்றிய வடபகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போனது. இன்றுவரை நாம் அதை பாகிஸ்தான் அபகரித்த காஷ்மீர் என்றும் அவர்கள் அதனை சுதந்திர காஷ்மீர் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே மாதிரிதான் அரபு - இஸ்ரேல் முதல் யுத்தத்தின் போதும் ஓர் ஏற்பாடு ஆனது. யுத்தத்தில் முன்னேறி வந்த எகிப்து, அப்போது காஸா பகுதியில் இருந்தது. ஆகவே, காஸா எகிப்துக்கு என்றானது.

டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம், மேற்குக் கரை முழுவதும் வியாபித்திருந்தது. ஆகவே வெஸ்ட்பேங்க் பகுதி ஜோர்டனுக்குச் சொந்தம்.

இஸ்ரேல் ராணுவமும் ஐ.நா. தனக்கு வகுத்தளித்த பூமிக்கு வெளியே பல இடங்களில் வியாபித்திருந்ததால், அந்தப் பகுதிகளெல்லாம் இஸ்ரேலுடையதாகிவிட்டது.

ஆக, காஸா போயிற்று. மேற்குக் கரையும் போயிற்று. மிச்சமிருந்த கொஞ்சநஞ்சப் பகுதிகளை இஸ்ரேல் விழுங்கிவிட்டது.

எனில், பாலஸ்தீன் என்பது என்ன?

அப்படியொரு தேசமே இல்லை என்று ஆனது இப்படித்தான்!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12 ஜூன், 2005
*********************************************
வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம். அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: