Thursday, April 2, 2009

87.88 கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை . அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்.பகுதி.87-88.

87] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 87.

ஏரியல் ஷரோனுக்கு முன்பு, இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்குடன் யாசர் அராஃபத்துக்கு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள், சில தாற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்வி, ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைந்து, அரசியல் நாடகம் நிகழ்த்தியது ஆகியவைதான் இரண்டாவது இண்டிஃபதாவின் ஆரம்பம் என்பதைப் பார்த்தோம்.

யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது, இந்தப் போராட்டத்துக்கு உடனடியாக ஒரு சர்வதேச கவனம் அளித்தது. உலக அளவில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து, இஸ்ரேலுக்கு எதிரான கண்டன அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார்கள்.

மத்தியக் கிழக்கிலுள்ள அத்தனை அரபு தேசங்களும் நிலைமையின் தீவிரத்தைத் தணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே, சில்லறைத் தீவிரவாதங்கள் புரிந்துகொண்டிருந்த ஏராளமான அடிப்படைவாத இயக்கங்கள், தமது கவனத்தை உடனடியாகப் பாலஸ்தீன் மீது குவிக்க ஆரம்பித்தன.

யுத்தம்தான் என்று முடிவாகிவிட்டபிறகு, பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் யாருடைய கட்டளைக்காகவும் காத்திருக்காமல், மேற்குக்கரையிலும் காஸாவிலும் வந்து குவிந்திருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக, மிகத் தீவிரமாகப் போரிடத் தொடங்கின.

செப்டெம்பர் 2000_ல் இண்டிஃபதா ஆரம்பமான வினாடி தொடங்கி, யாசர் அராஃபத் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட தினம் வரை மொத்தம் 1100 முஸ்லிம்கள், மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். 20,000_க்கும் மேற்பட்டோர், தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்கள்.

இந்தத் தகவல்கள் எதுவும் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இஸ்ரேல் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

யுத்தபூமியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த மேற்குக் கரை நகரங்களில், கூடுமானவரை சர்வதேசப் பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் இருப்பதற்குத் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் ஷரோன் மேற்கொண்டார்.

குறிப்பாக, யாசர் அராஃபத் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரங்களில் மட்டும் (அதாவது மார்ச், ஏப்ரல் 2002_ம் ஆண்டு காலக் கட்டத்தில் மட்டும்), மொத்தம் ஐந்நூறு பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

தவிர, பாலஸ்தீன் அத்தாரிடி என்னும் ஆட்சி மையம், இனி எக்காலத்திலும் தலைதூக்கவே முடியாதவாறு, அவர்களது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த உள் கட்டுமானத்தை, முற்றிலுமாக உடைத்து வீசியிருந்தது இஸ்ரேல் ராணுவம்.

அராஃபத்தின் அல் ஃபத்தா அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு, டெல் அவிவுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

யார், யார் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்கிற விவரமே, மிகத் தாமதமாகத்தான் தெரியவந்தன.

அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு, மூன்றாந்தரக் கிரிமினல்கள்போல் விசாரிக்கப்பட்டு, ஏராளமான விவரங்கள் சேகரிக்கப்பட்டன; வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இஸ்ரேல் அரசைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இரண்டு விஷயங்களைத் தான் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. முதலாவது, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி அதிகாரங்களில் ஹமாஸுக்கும், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் சில முக்கியப் பொறுப்புகளை, ரகசியமாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக, அவர்கள் சந்தேகப்பட்டார்கள்.

அதாவது, தீவிரவாத இயக்கங்களின் உறுதுணையுடன் ஓர் ஆட்சி! இதற்கு அவர்கள் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது, ஹமாஸின் திடீர் அராஃபத் ஆதரவு நிலை.

ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பிறகு நடைபெற்ற சில அரசியல் காட்சிகளில் வெறுப்புற்று, ஓர் ஆட்சியாளராக அராஃபத்தை ஏற்க மறுத்திருந்த ஹமாஸ், திடீரென்று அவரை ஒரு மக்கள் தலைவராகவும், பாலஸ்தீன் விடுதலைக்குப் பாடுபடும் தன்னிகரற்றத் தியாகியாகவும் சித்திரித்து அறிக்கைகள் வெளியிட்ட விவகாரம், இஸ்ரேல் அரசை மிகவும் கலவரமூட்டியிருந்தது.

இரண்டாவதாக, இஸ்ரேல் உறுதிப்படுத்த விரும்பிய விஷயம், பாலஸ்தீன் அத்தாரிடி, அரசுப்பணத்தைத் தீவிரவாத இயக்கங்களுக்குக் கணிசமாக வழங்கிக்கொண்டிருக்கிறது என்பது.

இந்த இரு காரணங்களுக்காகவே, அல் ஃபத்தா மூத்த உறுப்பினர்கள் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அவர்களுள் மிக முக்கியமானவர்கள் நான்கு பேர். மார்வான் பார்கோவுதி, நாஸிர் அவிஸ், நாஸிர் அபுஹமீத் மற்றும் அஹமத் பார்கோவுதி ஆகியோர்.
இந்த நான்கு மூத்த அல்ஃபத்தா உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், 'இஸ்ரேலிய மக்களைத் தாக்குவதற்காக, பாலஸ்தீன் தீவிரவாத இயக்கங்களுக்கு அராஃபத் தலைமையிலான பாலஸ்தீன் அத்தாரிடி அரசு, தொடர்ந்தும் கணிசமாகவும் நிதியுதவி அளித்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக' ஏரியல் ஷரோன் அறிவித்தார்.

இதன் காரணமாகவே, அராஃபத்தை வீட்டுச்சிறையில் வைத்து விசாரிப்பது அவசியமாகிறது என்றும் சொன்னார்.

கொதித்துப் போய்விட்டார்கள், பாலஸ்தீனியர்கள். அல் ஃபத்தா உறுப்பினர்கள் ஒருபோதும் அத்தகைய வாக்குமூலங்களை அளிக்கமாட்டார்கள் என்பது, அவர்களின் ஆழமான நம்பிக்கை.

தவிரவும், பாலஸ்தீன் அத்தாரிடி, போராளி இயக்கங்களுக்கு உதவுவதற்கு அல்லாமல், வேறு என்ன ஆட்சி செய்து கிழித்துவிடப்போகிறது?

இப்படிச் சொல்வது, நமக்கு விநோதமாகவும் சிரிப்பூட்டக்கூடியதாகவும் இருக்கலாம்.

பாலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரை, இதுதான் அவர்களது நிரந்தர நியாயமாக இருக்கமுடியும். ஏனெனில், போராளி இயக்கங்கள் உயிருடன் இருக்கும் வரைதான், தம்மால் சுதந்திரக் கனவுகளையாவது சுதந்திரமுடன் கண்டுகொண்டிருக்க முடியும் என்று, அவர்கள் நினைத்தார்கள்... இயக்கங்களை இஸ்ரேல் அரசு நசுக்கி எறிந்துவிட்டால், அதன்பிறகு, பாலஸ்தீன் விடுதலைக்காகக் குரல்கொடுக்கக்கூட ஒரு நாதியில்லாமல் போய்விடும்.

ஏற்கெனவே, பல லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்கள், வாழ வழியில்லாமல், பல்வேறு அரபு தேசங்களில் அகதிகளாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனிலேயே வசிக்கும் அரேபியர்களோ, தினசரி இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி, உயிரையும் உடைமைகளையும் இழந்துகொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், அமைதி குறித்து உபயோகமில்லாமல் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஆயுதம் மூலம் ஏதாவது செய்ய மட்டுமே அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.

ஆகவேதான், அராஃபத்தை இஸ்ரேல் அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டவுடனேயே ஊர்வலம், போராட்டம் என்று இறங்கிவிட்டார்கள்.

ரமல்லா நகரில் ஒரு சுவரை, அவர்கள் மிச்சம் வைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் அராஃபத்தின் புகைப்படங்களுடனான போஸ்டர்கள். இஸ்ரேல் அரசின் அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வாசகங்கள். ஒரு மேடை கிடைத்தால், உடனடியாக ஒரு பொதுக்கூட்டம். கல்வீச்சுகளுடன் கூடிய கண்ணீர்க் காண்டம் அது.

அராஃபத் சிறைவைக்கப்பட்டு இருமாதங்கள் ஆகிவிட்டிருந்த நிலையில், நிலைமை மிக மோசமான கட்டத்தைத் தொடும்போலிருந்தது. போராளி இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, முழுநீளத் தாக்குதல் ஒன்றை நடத்த ஆலோசிக்க ஆரம்பித்தன.

இதற்கு வெளியிலிருந்தும் ஆதரவு திரட்டும் திட்டம், ஹமாஸுக்கு இருந்தது. அல் காயிதா, ஜமா இஸ்லாமியா போன்ற பாலஸ்தீனுக்குச் சம்பந்தமில்லாத இயக்கங்கள் சிலவற்றின் ஆதரவைப் பெற்று, ஒரு முழு அளவிலான யுத்தத்தைத் தொடங்கும் சாத்தியங்கள் இருப்பதாக, இஸ்ரேலிய உளவு அமைப்பு மொஸாட் ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியது.

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் கோஃபி அன்னன், இஸ்ரேலைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். கொஞ்சம் சாமர்த்தியமான அறிக்கை அது.

யாசர் அராஃபத்தை வீட்டுச்சிறையில் வைத்து இஸ்ரேல் விசாரித்துக் கொண்டிருந்தது பற்றி, அந்த அறிக்கையில் நேரடிக் கண்டனம் எதுவும் இல்லை.

மாறாக, 'யாசர் அராஃபத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தவேண்டும்; பாலஸ்தீன் அத்தாரிடியை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும்; இல்லாவிட்டால் பிரச்னை இன்னும் பெரிதாகத்தான் ஆகும்' என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.

இதே கோஃபி அன்னன், அறிக்கையாக அல்லாமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது மட்டும், 'அராஃபத்தை வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும்' என்று கோரிக்கை வைத்ததை இங்கே நினைவுகூரவேண்டும்.

எல்லோருக்குமே தயக்கமாகத்தான் இருந்தது. எல்லோருக்குமே பயமாகவும் இருந்தது. எல்லோருமே குழப்பத்தில்தான் இருந்தார்கள். அராஃபத் விஷயத்தில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது என்பதில் இருந்த குழப்பம், தயக்கம், பயம் மற்றும் படபடப்பு.

அராஃபத் தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்துவருகிறார் என்று, அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசு.

அதனால்தான் அவரை வெளியே போகமுடியாதபடி, வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாகவும், பாலஸ்தீன் நகரங்களில் தீவிரவாத இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்திவருவதாகவும், அவர்கள் சொன்னார்கள்.

இல்லை; அராஃபத் அப்படிச் செய்யக்கூடியவர் இல்லை; அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான அவர், ஒருபோதும் இயக்கங்களுக்குச் சார்பு நிலை எடுக்கமாட்டார் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள, யாருக்கும் மனம் வரவில்லை.

அராஃபத் என்கிற மனிதரின் இருவேறு முகங்கள் எப்போதும் உண்டாக்கிவந்த குழப்பத்தின் உச்சகட்டம் அது!

தோதாக, ஏரியல் ஷரோன் கோஃபி அன்னனுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகத்தான் இருந்து வந்திருக்கிறோம்.

ஆனால், இப்போதைய சூழ்நிலை, கூப்பிட்டு உட்காரவைத்து அமைதி குறித்துப் பேசும் விதமாக இல்லை. ஏழு நாள். வெறும் ஏழுநாள் இஸ்ரேலிய நகரம் எது ஒன்றிலும் குண்டுவெடிக்காமல் இருக்கட்டும் முதலில். அதன்பிறகு அவர்களோடு பேசுவது பற்றி முடிவு செய்யலாம்' என்று சொன்னார் அவர்.

அந்தளவுக்குப் போராளி இயக்கங்களும் அங்கே ரணகளப்படுத்திக் கொண்டிருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

2002_ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் முழுவதும் இதே கதைதான்.

மே மாத வாக்கில் அராஃபத்தின் வீட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த காவல், கொஞ்சம் விலக்கிக்கொள்ளப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டது.

அராஃபத் பால்கனிக்கு வந்து கையாட்டிய காட்சியை, உலகத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின. நிலைமை கொஞ்சம் சீராகும்போல்தான் தெரிந்தது.

இதற்குக் காரணம், மிக எளிமையானது. இஸ்ரேலுக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது. தனது ராணுவத்தை மீண்டும் திரட்டி, புத்துணர்ச்சியுடன் போரிட அனுப்ப நினைத்தார் ஷரோன். சில தினங்களாவது அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கருதினார்கள்.

அராஃபத்தை இஸ்ரேல் அரசு, வீட்டுச்சிறையில் வைத்திருக்கவில்லை என்பது தெரிந்தால், போராளிகள் கொஞ்சம் அமைதியடையலாம், பொதுமக்களும் கொஞ்சம் அமைதிகாப்பார்கள் என்று நினைத்துத்தான் இதனைச் செய்தார்கள்.

ஆனால், அதிக அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. ஜூன் மாதம் தொடங்கியதுமே இஸ்ரேலிய டாங்குகள், இரவோடு இரவாக, ரமல்லா நகருக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டன.

ராக்கெட்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேராக அராஃபத்தின் மாளிகையை நோக்கிச் செலுத்தப்பட்டன.

ஹமாஸின் அரசியல் தலைவர்கள் இரண்டுபேரை, இதே போன்ற ராக்கெட் தாக்குதல்கள் மூலம் கொன்றிருந்த இஸ்ரேல் அரசு, தமது அடுத்த குறி, அராஃபத் தான் என்று மிக வெளிப்படையாகவே சொன்னது. இனி அவருடன் ஒரு போதும் அமைதிப்பேச்சு என்பதே இல்லை என்று அடித்துச் சொன்னார், ஏரியல் ஷரோன்.

யாசர் அராஃபத், பதவி விலகவேண்டும். மம்மூத் அப்பாஸ் போன்ற ஓரளவு 'நியாயஸ்தர்கள்' யாராவது ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டும். அமெரிக்கா முன்னின்று வரைந்தளித்திருந்த 'ரோட் மேப்' குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, இந்தளவாவது ஆரம்பம் சரியாக இருந்தால்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்.

ஆனால் அராஃபத் பதவி விலகமாட்டார். ஆகவே, அவரைத் தாக்கி அழிப்பதைத் தவிர, தனக்கு வேறு வழியில்லை என்று ஷரோன் சொல்லிவிட்டார்.

ஜூன் 10_ம் தேதி திங்கள்கிழமை. ரமல்லா நகர் முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் குவிக்கப்பட்டுவிட்டது.

நள்ளிரவு நேரத்தில் மைக் வைத்து சாலைகளில் அறிவித்தபடி, ராணுவ ஜீப் ஒன்று ஓடியது. ''மறு உத்தரவு வரும்வரை, பொதுமக்கள் யாரும் வீதிக்கு வரவேண்டாம். வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்கவும்.''

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த மூன்றாவது நிமிடத்தில், காதைக் கிழிக்கும் சப்தம் ஒன்று கேட்டது. அராஃபத் தங்கியிருந்த மாளிகையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் சத்தம் அது.

பின்னாலேயே இன்னொரு சப்தமும் கேட்டது. எங்கிருந்தோ சீறிவந்து மாளிகையின் மேல் தளத்தில் மோதிய ஒரு ராக்கெட் குண்டின் சப்தம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29 செப்டம்பர், 2005

88] அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 88.

மனைவியும் குழந்தையும் பிரான்ஸில் இருந்தார்கள். எப்போதும் உடன் இருக்கும் மூத்த அல் ஃபத்தா உறுப்பினர்கள் நான்கைந்து பேர், தலைமறைவாகியிருந்தார்கள்.

பலர், கைது செய்யப்பட்டிருந்தார்கள். யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் வெளியே இருக்கிறார்கள் என்பதே தெரியாத சூழ்நிலையும் நிலவியது.

அராஃபத்தின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் அத்தனை பேரையும், ஆரம்பத்திலேயே கைது செய்து கொண்டு போய் விட்டார்கள். காவலுக்கு நின்ற வீரர்கள் ஒருத்தர் விடாமல், முன்னதாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க, தனது ரமல்லா மாளிகையில் அராஃபத் தனியொரு நபராக, வாய் திறந்து பேசுவதற்கு ஒரு சகா இல்லாமல், இருக்க வேண்டியதானது.

வெளியுலகுடன் அவர் தொடர்புகொள்வதற்கு, எந்த வழியும் இல்லாமல், மாளிகையின் தொலைத் தொடர்புகள் அத்தனையும் துண்டிக்கப்பட்டன. ஒரு துண்டுக்காகிதம், பென்சில் கூட இல்லாதவாறு கண்ணும் கருத்துமாகத் தேடித் துடைத்தெடுத்துவிட்டார்கள்.

இரண்டாவது முறையாக, அராஃபத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு, இத்தனை காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது.

ஆனால், இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இதற்கு அதிக அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. ஓர் இரவு. ஒரு பகல். அவ்வளவுதான்.

மேற்குக் கரைப் பகுதி நகரங்களிலேயே ரமல்லா, மிகவும் பாதுகாப்பானதொரு பிரதேசம். அராஃபத் அங்கே இருப்பது மட்டும் காரணமல்ல, பெரும்பாலான போராளி இயக்கங்களின் செயல் அலுவலகங்கள் அங்கேதான் இருந்தன.

பயமின்றி நடமாடும் சௌகரியம், அவர்களுக்கு அங்கே இருந்தது. பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள்தான் அங்கே பெரும்பான்மை என்பதால், போராளிகள் தயக்கமின்றி என்ன வேண்டுமானாலும் செய்யமுடிந்தது.

பதிலுக்கு நகரக் காவல் பணியில் அவர்களும், காவலர்களுக்குத் தம்மாலான அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார்கள்.

அராஃபத் இருக்கிறார்; ஆகவே கவலை இல்லை என்கிற நம்பிக்கையில், ரமல்லா நகரத்து மக்களும் எப்போதும் அச்சமின்றியே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அவரைச் சிறைப்படுத்துவது இஸ்ரேல் ராணுவத்துக்குப் பெரிய காரியம் இல்லை என்றபோதும், (வயதானவர், நோய்வாய்ப்பட்டிருந்தார், ஃபத்தா இயக்கத்துக்குள் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே ஓரளவு உரசல் இருந்தது போன்றவை இதற்கான காரணங்கள்.)

போராளிகளைச் சமாளித்தாகவேண்டியிருந்தது. எளிதில் விட்டுக் கொடுப்பவர்கள், இல்லை அவர்கள். ஒரு யுத்தம் என்று வரும்போது, தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அத்தனை இயக்கத்தவர்களும் ஒன்றுசேர்ந்து, அராஃபத்தைக் காப்பாற்ற நிற்கத் தயாராக இருந்தார்கள்.

நான்கு அடுக்குகளாக அவர்கள் அரண்போல், அராஃபத்தின் மாளிகையைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். இஸ்ரேல் ராணுவம் ஒவ்வொரு அரணையும் உடைத்துக்கொண்டு முன்னேற, எப்படியும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணிநேரமாவது ஆகும் என்று, கணக்கிடப்பட்டது. அத்தனைக் கட்டுக் காவல்களையும் தாண்டி, ராணுவம் அரண்மனையை நெருங்கினாலும், நேரடியாக உள்ளே நுழைந்துவிட முடியாதபடி, அரண்மனைக்கு வெளியிலும் கணிசமான போராளிகள், ஆயுதமேந்தித் தயாராக இருந்தார்கள்.

எப்படியாவது அராஃபத்தை ரமல்லாவிலிருந்து கிளப்பி, வேறெங்காவது கொண்டுபோய்விடவும் அவர்கள் ஆலோசித்தார்கள். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லாமல் இருந்தது. அராஃபத்துக்கே அந்த விருப்பம் இல்லை என்பது, இதற்கு முதல் காரணம்.

என்ன ஆனாலும் ஊரை விட்டு ஓடக்கூடாது என்றிருந்தார், அவர். அமைதிக்கான கதவுகளைத் தான் அடைத்ததாக ஒரு பேச்சு வந்துவிடக்கூடாது என்பதில், அவருக்கு அக்கறை இருந்தது.

நார்வேயின் முயற்சியின் விளைவாக ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம், அமெரிக்க அதிபரின் முயற்சியில் நடைபெற்ற கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை எதுவுமே, எதிர்பார்த்த பலன் அளிக்காததற்கு, நிச்சயமாக அரபுகள் காரணமில்லை என்று, அராஃபத் நம்பினார்.

இஸ்ரேல் எப்போதும் ஒரு தரப்பிலிருந்து மட்டுமே அமைதியையும் விட்டுக்கொடுப்பதையும் எதிர்பார்ப்பதாக, அவர் கருதினார்.

ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போது, எத்தனையோ கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு, பல படிகள் இறங்கிவந்தும், உபயோகமாக எதுவுமே நடக்கவில்லை என்கிற வருத்தமும், விமரிசனமும் அவருக்கு, இருந்தது.

பாலஸ்தீனியர்கள் எதிர்பார்ப்பது, தாற்காலிக அமைதி அல்ல. சுதந்திரம். பூரண சுதந்திரம்.

மேற்குக்கரைப் பகுதி, ஜெருசலேம், காஸா உள்ளிட்ட நகரங்களை இணைத்த ஒரு சுதந்திர பூமி. கஷ்டமோ, நஷ்டமோ தங்கள் மண்ணைத் தாங்களே ஆண்டுகொள்வதில்தான் அவர்களுக்கு விருப்பம்.

இஸ்ரேல் என்றொரு தேசத்தையே அங்கீகரிக்கவில்லை; ஒட்டுமொத்த பாலஸ்தீனிலிருந்தும் யூதர்களைத் துரத்தி அடித்துவிட்டு, முழுமையான இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்கிற தங்கள் கனவில், பெரும்பகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, மேற்சொன்ன மூன்று பிராந்தியங்கள் இணைந்ததொரு சுதந்திர தேசம், கிடைத்தால் போதும் என்றுதான், அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், அமைதிப்பேச்சுக்கு அழைக்கும் இஸ்ரேல், இந்த ஒரு விஷயம் தவிர, மற்ற அனைத்தைப் பற்றியும்தான் பேசுகிறது.

போராளி இயக்கங்கள், தம் செயல்பாடுகளை நிறுத்தவேண்டும்; யூதர்கள் வாழும் பகுதிகளில் இயக்கங்கள் தாக்குதல் நடத்தக்கூடாது; பாலஸ்தீன் அத்தாரிடி, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்தவேண்டும் என்று, பாடிய பாடலையேதான் திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்தது.

சுதந்திர பூமி கிடைத்துவிட்டால், இவை ஏன் நடக்கப்போகின்றன என்று, அராஃபத் கேட்டார்.

'நீங்கள் முதலில் அமைதியைக் கொண்டு வாருங்கள்; அப்புறம் உட்கார்ந்து பேசலாம்' என்று, அவர்கள் சொன்னார்கள்.

இரண்டுமே சரிதான் என்று மேலோட்டமான பார்வைக்குத் தோன்றலாம்.

உண்மையில், போராளி இயக்கங்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத எல்லைக்குச் சென்று, யுத்தம் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

அராஃபத் சொன்னால் கேட்பார்கள் என்கிற நிலைமையெல்லாம், காலாவதியாகிவிட்டிருந்தது என்பதுதான் உண்மை.

அராஃபத்துக்கு நிலைமை புரிந்ததால்தான் அவர் பேசாதிருந்தார். யார் குத்தியாவது அரிசி வெந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலையைத்தான், இஸ்ரேல் தனக்கு வேறுவிதமாக சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது.

'அராஃபத் சொன்னால் அவர்கள் கேட்கவில்லையா? ஆளை மாற்றுங்கள்' என்று, கோஷமிடத் தொடங்கினார் ஏரியல் ஷரோன்.

ஷரோனுக்கு ஆரம்பம் முதலே அராஃபத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ, அவரை பாலஸ்தீன் அத்தாரிடி தலைவராக ஏற்பதிலோ சற்றும் விருப்பம் இல்லை.

பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்பிலேயே உள்ள மிதவாதிகள் சிலருள், யாராவது ஒருவர் குறிப்பாக, மம்மூத் அப்பாஸ் தலைமைப் பொறுப்பேற்றால், அதற்கு அராஃபத் சம்மதித்து, தான் ஒதுங்கிக்கொண்டால், யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் அமரலாம் என்று, ஷரோன் பகிரங்கமாகவே அறிவித்தார்.

இதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது.

'அராஃபத்தை நீக்கிவிட்டு வேறு தலைவரைக் கொண்டுவாருங்கள்' என்று, பொதுவாக இஸ்ரேல் சொல்லியிருந்தால், எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை.

முடிந்தால் அதைச் செய்வது; முடியாவிட்டால் முடியாது என்று அறிவித்துவிடப் போகிறார்கள்.

குறிப்பாக, மம்மூத் அப்பாஸின் பேரை, ஏரியல் ஷரோன் சொன்னதில், அல் ஃபத்தா இயக்கத்துக்குள்ளும், பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்புக்குள்ளும் புகைச்சலைக் கிளப்பியது.

அப்பாஸ், இஸ்ரேலின் ஆளா? எதற்காக ஷரோன் அவரை சிபாரிசு செய்யவேண்டும்?

இஸ்ரேல் உருவான தினம் தொடங்கி, ஐம்பதாண்டு காலமாக, சோறு தண்ணி பார்க்காமல் சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு கட்டத்திலும் அரேபியர்களுக்கு நல்லது செய்யும்விதத்தில் இஸ்ரேல் நடந்துகொண்டதில்லை. அமைதிப்பேச்சு என்று அழைக்கும்போதெல்லாம், அதன்பின் என்ன சூழ்ச்சி இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்ப்பது வழக்கம்.

துளிகூட நம்பிக்கை கொள்வதற்கு சந்தர்ப்பமே தராததொரு அரசு, அல் ஃபத்தாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரைத் தலைமை தாங்க சிபாரிசு செய்வதென்றால் என்ன அர்த்தம்?

மம்மூத் அப்பாஸுக்கே இது மிகவும் சங்கடமாகிப்போனது.

போதாக்குறைக்கு 'ஒருவேளை தான் பதவி விலகவேண்டி வருமானால், தனக்கு அடுத்து அஹமத் குரே (Ahmed Qurei) ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் அராஃபத்தின் விருப்பம்' என்பதாக, பாலஸ்தீன் முழுவதும் ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது.

இது அப்பாஸுக்கும் அஹமத் குரேவுக்கும் இடையில், ஒருவிதமான இறுக்கத்தைவேறு உண்டாக்கிவிட்டிருந்தது.

மூத்த தலைவர்கள் அனைவரும், இவ்வாறான சங்கடங்களில் அகப்பட்டு, ஆளுக்கொரு மூலையில் இருந்த தருணத்தில்தான், அராஃபத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு இஸ்ரேல் தனது ராணுவத்தை அனுப்பியது.

அன்றுதான் பாலஸ்தீன் அத்தாரிடி பார்லிமெண்ட் கூடுவதாக இருந்தது. புதிய அமைச்சர்கள் பலர், பொறுப்பேற்க இருந்தார்கள். பழைய அமைச்சர்கள் சிலரின் பதவிகளும் மாற்றப்படவிருந்தன.

புதிய கேபினட்டின் முதல் கூட்டம்.
ஆனால் கூட்டம் நடக்குமா? அனைவருக்குமே சந்தேகமாகத்தான் இருந்தது.

அமைச்சர்கள் அத்தனைபேரும் இஸ்ரேலை சகட்டுமேனிக்குத் திட்டி அறிக்கைவிட ஆரம்பித்தார்கள்.

'பாலஸ்தீன் அத்தாரிடியை பலவீனப்படுத்துவதும், பாலஸ்தீன் மக்களை அச்சமூட்டிப் பார்ப்பதும்தான் இஸ்ரேலின் நோக்கம்.

அதற்காகத்தான், ரமல்லாவைக் குறிவைத்திருக்கிறார்கள்' என்றார், அராஃபத் அமைச்சரவையின் செயலாளர் யாசிர் அபெத் ரெபோ. (Yassir Abed Rebbo) நபில் ஷாத் (Nabil Shaath) என்கிற அமைச்சர் ஒருவர், 'அமைதிக்கான அத்தனை கதவுகளையும் அடைத்துவிட்டார்கள். இனி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை' என்று, கதறித் தீர்த்தார்.

ஒரு பக்கம், கேபினட் கூட்டம் தடைபடும் வருத்தத்தில் பாலஸ்தீன் அத்தாரிடியினர், இப்படி அறிக்கை விட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம், சத்தமில்லாமல் அத்தனை முக்கியஸ்தர்களையும் கைது செய்யும் பணியை இஸ்ரேல் ஆரம்பித்தது.

எந்தக் கைதும் வெளியே தெரியக்கூடாது என்று தீர்மானமாக, உத்தரவிட்டிருந்தார்கள். கைது செய்யப்படுபவர்கள், எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

அரசியல் தலைவர்களைக் கைது செய்வது ஒரு பக்கம் இருக்க, ரமல்லாவிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இருந்த அத்தனை போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் தேடிப்பிடித்துக் கைது செய்வது அல்லது கொன்று ஒழிப்பது என்று செயல்திட்டம் வகுத்து, இரவோடு இரவாக அடிக்க ஆரம்பித்தார்கள்.

ரமல்லா முழுவதும் ராணுவ டாங்குகள் ஓடின. எந்தக் கதவாவது திறந்திருந்தால், கண்ணைமூடிக்கொண்டு சுட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. போராளிகள் எங்குவேண்டுமானாலும் பதுங்கிக்கொண்டு தாக்குதல் நடத்தலாம் என்பதால், இஸ்ரேல் ராணுவத்தினர், குடியிருப்புப் பகுதிகளில்கூட எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்கள்.

எந்தத் தலை கண்ணில் பட்டாலும் சுட்டார்கள். குழந்தைகள், வயதானவர் என்றெல்லாம் கூடப் பார்க்கவில்லை.

ராக்கெட்டுகளால் அராஃபத்தின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியபடியே, புல்டோசர்களை மெல்ல நகர்த்திப்போய், எதிர்ப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் இடித்தபடியே அவரது மாளிகையின் பின்புறம் போய்ச் சேர்ந்தார்கள்.

இடையில் நடந்த தாக்குதலில், இருபுறத்திலும் ஏராளமானோர் இறந்துபோனது, ஒருவாரம் கழித்துப் பத்திரிகைச் செய்தியாக வந்தது.

போராளிகளிடம் வீரமும் கோபமும் இருந்த அளவுக்கு, போர் நேர்த்தி இல்லை என்பது, மிகப்பெரிய குறையாக இருந்தது.

பயிற்றுவிக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் பலத்துக்கு முன், அவர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

தவிரவும் ராணுவத்தினரிடம் இருந்த அளவுக்கு, நவீன ஆயுதங்களும் போராளிகளிடம் இல்லை.

ஏவுகணைத் தடுப்பு பீரங்கி இருந்தாலொழிய ரமல்லா மாளிகையைக் காக்கமுடியாது என்பது தெரிந்தவுடனேயே, போராளிகள் மத்தியில் சோர்வு உண்டாகிவிட்டது.

அவர்கள் யோசிப்பதற்குள்ளாக மாளிகை இடித்து நொறுக்கப்பட்டது. ஒரே ஒரு பகுதியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு, அராஃபத்தின் வீட்டின் பெரும்பாலான பகுதிகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர், இஸ்ரேலியர்கள்.

சுரங்கப் பாதை, ரகசிய வழி என்று எது இருந்தாலும் இருக்கலாம் என்பதே இதன் காரணம். தனிமைப் படுத்துவது என்று முடிவு செய்துவிட்டபடியால், அதை முழுமையாகச் செய்தாகவேண்டும் என்று, அவர்கள் விரும்பினார்கள். ஒரு ஈ, கொசு கூட அவரை நெருங்கமுடியாதபடி, சுற்றி வளைத்துக் காவல் நின்றார்கள்.

கண்டிப்பாக இம்முறை விபரீதம்தான் என்று ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் முடிவு செய்தார்கள்.

அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள் என்றே, அவர்கள் நினைத்தார்கள். எந்த முயற்சியும் எடுக்க வழியில்லாமல், கையேந்திப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 2 அக்டோபர், 2005

**********************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: