Wednesday, April 1, 2009

85.86 யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது. பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்.பகுதி. 85-86

உண்மையிலேயே பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்கித் தருகிற எண்ணமெல்லாம், இஸ்ரேலுக்கு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
***********************************************************

85] யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 85.

பாலஸ்தீன் அரேபியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக, யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதற்கான அரசியல் காரணங்களை விளக்க அவசியமே இல்லை.

முன்பே பார்த்ததுபோல், அராஃபத்தும் சரி, அவரது இயக்கமும் சரி... மதத்தை முன்வைத்து யுத்தம் மேற்கொண்டதில்லை என்பது ஒன்று.

இரண்டாவது, ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இடைக்கால, தாற்காலிக ஒப்பந்தங்கள் செய்துகொள்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். உட்கார்ந்து பேசுவதற்கு, ஏதேனும் ஓர் உடன்படிக்கைக்கு ஒத்துவரக்கூடிய ஒரே நபர், அராஃபத்.

இதனால்தான் அவருடன் ஓஸ்லோ ஒப்பந்தம் செய்துகொண்டு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப்பொறுப்பேற்று, மேற்குக் கரையையும் காஸாவையும் நிர்வகிக்க அனுமதி அளித்தார்களே தவிர, உண்மையிலேயே பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்கித் தருகிற எண்ணமெல்லாம், இஸ்ரேலுக்கு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

அராஃபத்தின் சுதந்திர பாலஸ்தீன் பிரகடனமோ, அவரது தலைமையில் நடைபெற்ற ஆட்சியோ, பாலஸ்தீன் மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி எதையும் உண்டாக்கவில்லை.

இரண்டு நகரங்களின் ஆட்சி அதிகாரம் கைவசமிருப்பது, பாலஸ்தீன் விடுதலை என்கிற நீண்டதூர இலக்குக்கு, எந்த வகையிலும் வலு சேர்க்கப்போவதில்லை என்றே, அவர்கள் கருதினார்கள்.

முஸ்லிம் இனத்தவரின் இந்த அபிப்பிராயத்தை, இஸ்ரேல் அரசு மிகக் கவனமாக உற்று நோக்கிவந்தது.

பெரும்பாலான பாலஸ்தீன் முஸ்லிம்கள் அராஃபத்தைத்தான் தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்றபோதும், அவர்களுக்கும் ஓரெல்லை வரை அவர்மீது அதிருப்தி இருக்கவே செய்தது என்பதுதான், இஸ்ரேல் உளவுத் துறையின் தீர்மானம்.

இதற்காக, ஏராளமான கிராமத் தலைவர்கள், சமூக சேவகர்கள், பொது மருத்துவமனை டாக்டர்கள், பள்ளி ஆசிரியர்கள், வியாபாரிகள் ஆகிய தரப்பில் ரகசியமாக, விசாரிப்பது தெரியாமல் விசாரித்து, தகவல் சேகரித்து, மிகப்பெரிய அறிக்கையே தயாரித்தது மொஸாட்.

இஸ்ரேல் உளவுத் துறையின் முடிவு என்னவென்றால், அராஃபத் மீது அரபுகளுக்கும் அதிருப்திதான்.

ஆகவே, அவரைக் குறிவைத்துத் தாக்குதல் தொடங்கினாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், அராஃபத், பாலஸ்தீனின் மகாத்மாவாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது; அவரும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்; ஆகவே, அரசு என்னவிதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கத் தயங்கவேண்டாம்!

இதற்குப் பிறகுதான், ஆயுதக் கடத்தல் விவகாரங்களில் அராஃபத்தை சம்பந்தப்படுத்த முடிவு செய்தது இஸ்ரேல் அரசு.

காஸா துறைமுகத்துக்கு அருகே, பிடிக்கப்பட்ட ஆயுதக் கப்பல் விவகாரம், ஒரு பக்கம் சூடுபிடித்துக்கொண்டிருக்க, அதே போன்ற வேறொரு சம்பவமும் உடனடியாக அரங்கேறியது.

ஜனவரி, 2002-ம் ஆண்டு, ஈரானிலிருந்து ரகசியமாக பாலஸ்தீன் கடல் எல்லைக்குள் புகுந்த ஒரு பெரிய படகை, இஸ்ரேலிய கமாண்டோப் படைப் பிரிவான ஷி13 (Shayetet - 13. இஸ்ரேலின் மிக முக்கியமான மூன்று படைப்பிரிவுகளுள் முதன்மையானது இது.) வழிமறித்து, பரிசோதித்தது. அந்தப் படகின் பெயர் கரைன் ஏ. (Karine கி) படகில் இருந்தவர்களில் சிலர், கடலில் குதித்து தப்பித்துவிட, ஒன்றிரண்டு பேர் மட்டும் மாட்டிக்கொண்டனர்.

படகைப் பரிசோதித்ததில், ஏராளமான நவீன ஆயுதங்களும் வெடிமருந்து மூட்டைகளும் அதில் இருக்கக் கண்டனர். பெட்டிப் பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள், கைத்துப்பாக்கிகள், தானியங்கித் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்ச்சர்கள் என்று, அந்தப் படகு முழுவதும் ஆயுதங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

படகில் வந்தவர்களில், தப்பித்தவர்கள் போக மிஞ்சிய ஓரிருவரிடம் நடத்திய விசாரணையில், இரண்டு விஷயங்கள் தெரியவந்தன.

முதலாவது, ஈரானிலிருந்து கடத்திவரப்பட்ட அந்த ஆயுதங்கள் அனைத்தும், பாலஸ்தீன் விடுதலை இயக்கப் போராளிகளுக்குத்தான் போகின்றன.

இரண்டாவது, இந்தக் கடத்தல் நடவடிக்கையில், பாலஸ்தீன் அத்தாரிடி உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு, நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

படகில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இஸ்ரேல் அரசு ஓர் அறிக்கை தயாரித்தது. அதன் சாரம் இதுதான்:

'பாலஸ்தீன் அத்தாரிடி, ஓர் அதிகாரபூர்வ அரசியல் அமைப்பாக இருந்து, மேற்குக்கரையையும் காஸாவையும் ஆண்டுவந்தபோதிலும், தனது பழைய தீவிரவாத முகத்தை இன்னும் தொலைத்துவிடவில்லை.

கப்பல் கப்பலாக ஆயுதங்கள் கடத்திச் சேகரிக்கிறார்கள் என்றால், எப்படியும் பெரிய அளவில் ஒரு யுத்தத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

யாசர் அராஃபத்தின் தலைமையில் இயங்கும் ஒரு சிறு அமைப்பான பாலஸ்தீன் அத்தாரிடியின் மிக மூத்த உறுப்பினர்களே, இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்னும்போது, அராஃபத் மீது சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.''

தனது இந்த முடிவை இஸ்ரேல் அரசு, முதலில் அமெரிக்க அதிபருக்கு அனுப்பிவைத்தது. காரணம், ஓஸ்லோ ஒப்பந்தத்தை அராஃபத் மீறுகிறார் என்று, அமெரிக்க அதிபர் வாயால் முதலில் சொல்லவைக்க வேண்டுமென்பதுதான்.

ஏற்கெனவே, செப்டெம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், பெண்டகன் ராணுவத் தலைமையகம் மீதும், ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா இயக்கத்தினர் நிகழ்த்திய தாக்குதலில், நிலைகுலைந்து போயிருந்தது அமெரிக்கா.

தீவிரவாதத்துக்கு எதிரான, உலகளாவிய யுத்தத்தை ஆரம்பித்துவைத்து, ஆப்கன் மீதும் ஈராக் மீதும் கவனம் குவித்திருந்தது.

'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்கிற பிரயோகத்தை உருவாக்கி, எல்லாவிதமான தீவிரவாதச் செயல்களுக்கும் வலுக்கட்டாயமாக, ஒரு மத அடையாளத்தைச் சேர்த்து, அரசியல் ஆட்டம் ஆடத் தொடங்கியிருந்தது.

ஆகவே, தனது நட்பு நாடான இஸ்ரேல் விஷயத்தில் மட்டும் விட்டுக்கொடுக்க, அமெரிக்க அதிபர் புஷ் தயாராக இல்லை.

உடனடியாக இஸ்ரேலின் கருத்தைத் தாம் ஆமோதிப்பதாக அறிவித்தார். பாலஸ்தீனில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒடுக்கியே ஆகவேண்டும், ஒப்பந்தம் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று சொன்னார்.

முதல் நாள் வரை மதச்சார்பற்ற முன்னாள் போராளியாக, மதச்சார்பற்ற இந்நாள் அரசியல் தலைவராக வருணிக்கப்பட்டுக்கொண்டிருந்த யாசர் அராஃபத், அந்தக் கணம் முதலே 'இஸ்லாமியத் தீவிரவாதி'களின் தலைவர் ஆகிப்போனார்!

ஒரு புறம், அல் அக்ஸா இண்டிஃபதா சூடுபிடித்துக்கொண்டிருக்க, மறுபுறம், பாலஸ்தீன் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், முழு வீச்சில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களையும் தொடங்குவதற்கு, இதுவே இன்னொரு தொடக்கப் புள்ளியாகிப்போனது.

மார்ச் மாதம் 27-ம் தேதி நெதன்யா என்கிற இடத்தில், 'பார்க்' என்கிற ஓட்டலின் புல்வெளியில், சுமார் 250 பேர் கூடி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். Passover விருந்து என்று அதற்குப் பெயர்.

அன்று, ஒரு யூத விடுமுறை தினம். மதச் சடங்குகளோடு கலந்த கொண்டாட்டங்கள் நடக்கும்.அப்படியொரு விருந்துக் கூட்டத்துக்குள் ஒரு ஹமாஸ் போராளி, உடம்பெங்கும் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு போய் வெடிக்கச் செய்து, தானும் இறந்து, அங்கிருந்தவர்களுள் முப்பது பேரையும் கொன்றான்.

இதை ஒரு 'சிறந்த' தொடக்கமாகக் கருதிய அனைத்துப் போராளி இயக்கங்களும் தம் பங்குக்கு, ஆங்காங்கே குண்டு வெடிக்கத் தொடங்கிவிட, அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும், இஸ்ரேலில் ஏராளமான வெடிச் சம்பவங்கள் அரங்கேறின.

தினசரி, குறைந்தது பத்துப் பேராவது பலியானார்கள். எங்கு பார்த்தாலும் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அரசுக் கட்டடங்கள் திடீர் திடீரென்று தகர்க்கப்பட்டன. பள்ளிப் பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியோர் என்று வேறுபடுத்திப் பார்க்கவே இல்லை. கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், போராளிகள் தாக்குதல் நிகழ்த்தத் தவறவேயில்லை.

இதன் விளைவு, ஏப்ரலில் மட்டும் இஸ்ரேலில் மொத்தம் 130 சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள்.

ஏரியல் ஷரோன் யோசித்தார். கடுமையான நடவடிக்கை மூலம்தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று தீர்மானித்து, மேற்குக் கரைப் பகுதியில் முழு வேகத்தில், ராணுவ நடவடிக்கை ஆரம்பமாக உத்தரவிட்டார்.

Operation Defensive Shield என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை, பார்க் ஓட்டல் சம்பவம் நடந்து முடிந்த இருபத்து மூன்றாவது மணி நேரத்தில் ஆரம்பமானது. தேசமெங்கும், உடனடியாக அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு, இருபதாயிரம் ரிசர்வ் காவல் படையினர், மேற்குக் கரையில் கொண்டு குவிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன் சரித்திரத்தில், இத்தனை பெரிய படை மேற்குக் கரையில் இதற்கு முன்பு குவிக்கப்பட்டதில்லை.

1967-ம் ஆண்டு நடைபெற்ற ஆறுநாள் யுத்தத்தின்போது கூட, இந்த எண்ணிக்கை இல்லை.

ஒட்டுமொத்த பாலஸ்தீன் அரேபியர்களையும் ஒழித்துக்கட்டும் வேகத்துடன் யூதக் காவலர்களும், துணை ராணுவப் படைப் பிரிவினரும் அங்கே கூடி முற்றுகையிட்டு நின்றார்கள்.

முன்னதாக, ஏரியல் ஷரோன், 'நெஸட்'(Knesset - இஸ்ரேல் பாராளுமன்றம்) அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, மேற்குக் கரையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளுக்குத் தாம் அளித்துள்ள கட்டளைகள் குறித்து ஓர் உரையாற்றினார்.

1. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு, அடைக்கலம் தரும் அத்தனை நகரங்களையும் கிராமங்களையும், முற்றுகையிட வேண்டும்.

2. முடிந்தவரை தீவிரவாதிகளைக் கைது செய்யவேண்டும். தவிர்க்க முடியாமல் போனால், சுட்டுக்கொல்லலாம்.

3. தீவிரவாதிகளுக்குப் பண உதவி, ஆயுத உதவி, தங்குமிட உதவிகள் செய்வோரும் தீவிரவாதிகளாகவே கருதப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும்.

4. தீவிரவாதிகளின் ஆயுதக் கிடங்குகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும். ஆயுதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

5. பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு கூடாது என்று சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த பாலஸ்தீன் அரேபியர்களையுமே இஸ்ரேலிய அரசு, தீவிரவாதிகள் பட்டியலில்தான் சேர்த்திருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெத்லஹெம், ஜெனின், நப்லஸ், ரமல்லா. இந்த நான்கு நகரங்கள்தான் இஸ்ரேலியப் படையின் முதல் இலக்காக இருந்தது. ஹெப்ரான், ஜெரிக்கோ நகரங்களை என்ன காரணத்தினாலோ, அவர்கள் தவிர்த்திருந்தார்கள். (ஜெரிக்கோவில் இஸ்லாமிக் ஜிகாத் போராளி இயக்கத்தினருக்குப் பலமான வேர்கள் உண்டு.)

எல்லாம் தயார். எல்லாரும் தயார். யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது. உள்நாட்டு யுத்தம். இஸ்ரேலியத் தரப்பில் இது 'தீவிரவாத ஒழிப்பு' என்று மட்டுமே சொல்லப்பட்டது.

பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை இது, இன்னொரு சுதந்திரப் போர்.

அராஃபத் அப்போது ரமல்லாவில்தான் இருந்தார். தன்னால் இயன்றவரை அமைதிக்காகக் குரல் கொடுத்துப் பார்த்தார்.

இஸ்ரேலிய ராணுவத்தின் உண்மையான நோக்கம், தன்னைக் கைதுசெய்வதுதான் என்பது அவருக்குத் தெரியும்.

அவருக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று, வெளி நாட்டுக்குப் போய்விடுவது. அல்லது அங்கேயே இருந்து யுத்தம் செய்வது. மூன்றாவது, யுத்தம் செய்து மீண்டும் தன்னையொரு போராளியாக வெளிப்படுத்தாமல், அமைதி நடவடிக்கையின் தொடர்ச்சியாகத் தன்னைக் கைது செய்ய அனுமதிப்பது!

வெளிநாட்டுக்குப் போய்விடுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை.

தவிர, ஒரு போராளி இயக்கத் தலைவர் அப்படி வெளிநாட்டில் தங்கியிருந்து போராட்டத்தை நடத்துவதும் ஒன்றும் புதிய விஷயமல்ல.

அராஃபத்தே தன் வாழ்வின் பெரும்பகுதியை அப்படிக் கழித்தவர்தான். ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு முன்பு, சிரியாவிலும் லெபனானிலும் துனிஷியாவிலும் தான், அவர் பயிற்சி முகாம்கள் நடத்திக்கொண்டு, பாலஸ்தீன் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்.

ரமல்லாவிலேயே தங்கியிருந்து, போராளிகளுக்கு ஆதரவாக அவரும் துப்பாக்கி ஏந்தியிருந்தால், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் அவர் மீது கொண்டிருந்த கசப்புகளை மறந்துவிட்டு, அராஃபத்தை முழு மனத்துடன் ஆதரிக்க முன்வருவார்கள்.

இந்த இரண்டையும் செய்யாமல், பிரச்னையை அரசியல் ரீதியிலேயே அணுகுவது, அதாவது கைது செய்ய வந்தால், முரண்டு பிடிக்காமல் சம்மதிப்பது என்கிற முடிவை எடுத்தால் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே என்றாலும், இறுதிவரை, மேற்கொண்ட உறுதியை மீறாத ஒரு நேர்மையான அரசியல் தலைவராக அடையாளம் காணப்படலாம்.

மூன்று வழிகள். அராஃபத் யோசித்தார். அவர் யோசிக்கத் தொடங்கும்போதே, வெளியே இஸ்ரேலிய ராணுவத்தினர் வந்து குவிய ஆரம்பித்திருந்தார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22 செப்டம்பர், 2005

86] பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 86

யாசர் அராஃபத்தை, 'பாலஸ்தீனின் தந்தை' என்று தயங்காமல் சொல்ல முடியும்.

பாலஸ்தீன் விடுதலைக்காக அவர் எடுத்த முயற்சிகள், பட்ட சிரமங்கள், செய்துகொண்ட சமரசங்கள், விட்டுக்கொடுத்த சம்பவங்கள், கெஞ்சிக் கூத்தாடிய தருணங்கள், வெகுண்டெழுந்து தோள்தட்டிய உணர்ச்சி மயமான காட்சிகள் எல்லாம், கணக்கு வழக்கில்லாதவை.

ஆனால் நமக்குத் தெரிந்த 'தேசத்தந்தை' படிமத்துடன், அராஃபத்தை ஒப்பிடமுடியாது.

இதற்குப் பல நுணுக்கமான காரணங்கள் உண்டு. முதலில் காந்தியைப் போல், அராஃபத், ஓர் அஹிம்சைவாதி அல்ல.

அவர் ஆயுதப்போராளி. வயதான காலத்தில்தான், அவர் பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்டினார்.

இரண்டாவது, காந்தி பதவிகள் எதிலும் அமர்ந்தவரல்லர். சுதந்திரம் அடைந்த தினத்தில்கூட வங்காளக் கலவரங்களுக்கு நிவாரணம் தேடி, நவகாளி யாத்திரை போனாரே தவிர, டெல்லியில் கொடியேற்றி, மிட்டாய் சாப்பிட்ட வைபவங்களில், அவர் கலந்துகொள்ளவில்லை.

மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தது. நல்லது கெட்டது எதுவானாலும், ஊருக்குத் தெரிவித்துவிட்டுத்தான், அவர் தம் வீட்டுக்கே சொல்வார்.

அராஃபத்தின் வாழ்க்கை, ரகசியங்களாலானது. அவரது பல நடவடிக்கைகள் குறித்து, இன்றுவரை சரியான, ஆதாரபூர்வமான தகவல்கள் கிடையாது.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும், அவரும் தேசத்தந்தைதான். இன்னும் பிறக்காத, என்றோ ஒருநாள் பிறக்கப்போகிற, ஒரு தேசத்தின் தந்தை.
இந்த ஒப்பீடு இங்கே செய்யப்படுவதற்கு, ஒரு காரணம் உண்டு.

இரண்டாயிரமாவது ஆண்டு பிறந்தபிறகுதான் பாலஸ்தீன் பிரச்னை, ஒரு புதுப்பரிமாணம் எடுத்தது.

நிறைய உயிரிழப்புகளும், கலவரங்களும், தீவைப்புச் சம்பவங்களும், கல்வீச்சு வைபவங்களும் தினசரி நடக்கத் தொடங்கின.

2001 மார்ச் மாதம், 'பார்க்' ஓட்டலில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள், இஸ்ரேல் அரசு முழுவீச்சில் அரேபியர்களை அடக்குவதற்காக அனுப்பிய ராணுவத்தின் வெறித்தனமான வேட்டை, அப்போது கைதான ஏராளமான அரபுகளின் கோபம், அதன் விபரீத விளைவுகள் இவையெல்லாம், இதற்குமுன் உலக சரித்திரத்தில், வேறெங்குமே நடந்திராதவை.

அப்படியொரு களேபரம் நடந்துகொண்டிருந்தபோது, பாலஸ்தீன் அரேபியர்களின் ஒரே அரசியல் முகமான, அராஃபத்தின் நடவடிக்கைகள் எதுவுமே, வெளிப்படையாக இல்லை என்பது வருத்தமான உண்மை.

ஒரு பக்கம், அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருந்தார். மறுபக்கம், இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக மல்லுக் கட்டிக் கொண்டிருந்த பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்கும் தம்மாலான உதவிகளை, அவர் செய்துகொண்டே இருந்தார்.

இது, அனைவருக்குமே தெரியும் என்றபோதும், தொடர்ந்து அவர் தமது போராளி இயக்க ஆதரவு நிலை குறித்து, மறுப்புத் தெரிவித்து வந்தது, பொருந்தாமலேயே இருந்துவந்தது.

அவர் வெளிப்படையாகவே, இஸ்ரேலுக்கு எதிரான நேரடி யுத்தத்தைத் தலைமைதாங்கி நடத்தலாமே என்றுதான் அரபுலகம் கேட்டது. அராஃபத், அதற்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்ததற்கு, ஒரே ஒரு காரணம்தான்.

ஒருவேளை அமைதிப் பேச்சுக்கள் மூலம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்குமானால், அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது.

நல்லது நடக்க வேண்டும் என்பதுதான், அவரது நோக்கம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

ஆனால், அதற்கான வழி இதுதான் என்று தெளிவாக, தீர்மானமாக அவரால் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

இல்லாவிட்டால் ஓஸ்லோ ஒப்பந்தப்படி அமைதிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகப் பொறுப்பேற்று, மேற்குக் கரையையும் காஸாவையும் ஒரு பக்கம் ஆண்டு கொண்டு, இன்னொரு பக்கம், போராளி இயக்கங்களுக்கு உதவி செய்ய எப்படி முடியும்?

அவர், போராளி இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று, இஸ்ரேல்தானே குற்றம் சாட்டியது என்று கேட்கலாம்.

ஒரு சம்பவம் நடந்தது. அதுதான் எல்லாவற்றையும் வெட்டவெளிச்சமாக்கியது. ஆண்டு 2002. அந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே, அராஃபத்தின் 'அல் ஃபத்தா'வும், அல் ஃபத்தாவின் தற்கொலைப் படைப் பிரிவான 'அல் அக்ஸா மார்டைர்ஸ் பிரிகேடு'ம் மிகத்தீவிரமான ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கின.

கவனிக்கவும். ஹமாஸோ, இதர அமைப்புகளோ அல்ல. அராஃபத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போராளி இயக்கங்கள்.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களைக் காட்டிலும், அல் ஃபத்தாவின் தாக்குதல்கள் மிகத் தீவிரமானவை; கடும்பாதிப்புகளை ஏற்படுத்தவல்லவை.

இதற்கு, சரித்திரத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு. இந்த அமைப்புகளின் தாக்குதலில் தினசரி, குறைந்தது பத்திருபது இஸ்ரேலிய இலக்குகளாவது நாசமாகிக்கொண்டிருந்தன. ஒட்டுமொத்த பாலஸ்தீனும் வியப்புடன் பார்த்த சம்பவம் அது.

ஏனெனில், அராஃபத் அமைதி, அமைதி என்று பேச ஆரம்பித்திருந்ததில் சற்றே நம்பிக்கை இழந்து போயிருந்தனர், பாலஸ்தீனியர்கள். ஆனால் அல்ஃபத்தா இயக்கத்தவர்கள், மிகவும் வெளிப்படையாக, இஸ்ரேலிய ராணுவத்தினரைக் கண்ட இடத்திலெல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்ததைப் பார்த்ததும் அராஃபத், மீண்டும் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்றே பேச ஆரம்பித்தார்கள்.

அராஃபத் இதனை மறுத்து அறிக்கை வெளியிடவில்லை. அதேசமயம், 'ஆமாம், நான் மீண்டும் துப்பாக்கி ஏந்திவிட்டேன்' என்றும் சொல்லவில்லை.

இது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய குழப்பத்தை விளைவித்தது. அராஃபத்தின் நிலைப்பாடு என்ன என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

இந்தக் குழப்பத்துக்கு இன்னும் வலு சேர்க்கும்விதமாக, அதுவரை அராஃபத்தை மிகக் கடுமையாக விமரிசித்து வந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற பாலஸ்தீன் விடுதலை இயக்கங்கள், 2002-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, அராஃபத்தை வானளாவப் புகழ ஆரம்பித்தன.

அவர்தான் மீட்சி கொடுக்கப்போகிறார் என்றே ஹமாஸ் ஒருமுறை சொன்னது.

இப்போதும் மறுத்தோ, ஆமோதித்தோ அராஃபத் பதில் ஏதும் சொல்லவில்லை. ஒரு விஷயத்தில் அவர் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்.

நேரடியாகத் தானே துப்பாக்கி ஏந்தி யுத்தம் புரிவதில்லை. அதேசமயம், அரேபியர்களின் ஆடைகளுள் ஒன்றாகிவிட்ட துப்பாக்கியை, என்ன செய்தாலும் தன்னால் இறக்கி வைக்க முடியப்போவதில்லை என்பதால், போராளிகளுக்கு எதிராக ஏதும் செய்யாமல் இருந்துவிடுவது. முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யப் பார்ப்பது. முடியாதபோது, பேசாமல் இருந்துவிடுவது.

இதெல்லாம் அரசியலில் மிகவும் சாதாரணமான விஷயங்கள்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டம் என்கிற புனிதமான உணர்வில், இந்த அரசியல் வாசனை கலக்கும்போதுதான், ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இப்படியானதொரு குழப்பம் மிக்க பின்னணியுடன், அராஃபத் உலாவந்த காலத்தில்தான், ரமல்லா நகருக்குள் இஸ்ரேலிய ராணுவம் புகுந்தது. அப்போதும் அராஃபத், 'பேசலாம் வாருங்கள்' என்றுதான் சொன்னார்.

ஆனால், அவரது மாளிகைக்கு வெளியே, இஸ்ரேலிய ராணுவத்தினருடன் துப்பாக்கி யுத்தம் புரிந்துகொண்டிருந்தவர்களை, அவர் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடல் போல் பெருக்கெடுத்து வந்திருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு, ரமல்லாவில் அராஃபத் தங்கியிருந்த மாளிகையைக் காவல் காத்தவர்கள், வெறும் கொசுக்களாகத்தான் தெரிந்திருக்க வேண்டும்.

மிகச் சுலபத்தில் அவர்கள் மாளிகையையும் நகரையும் வசப்படுத்திவிட்டார்கள். அங்கிருந்த அத்தனை அரேபியப் போராளிகளையும் கைது செய்து அனுப்பிவிட்டு, நகரைச் சுற்றி, முதலில் பலத்த காவல் போட்டார்கள். அராஃபத்தின் மாளிகையைச் சுற்றி, தனியே ஒரு சுற்று ராணுவக் காவல் நிறுத்தப்பட்டது.

வீட்டைவிட்டு அவர் வெளியே வரமுடியாதபடியும், வெளியிலிருந்து ராணுவத்தினருக்குத் தெரியாதபடி யாரும் உள்ளே போகமுடியாதபடியும் கவனமாக ஏற்பாடு செய்துவிட்டு, அவரது மாளிகைக்குள் ராணுவம் நுழைந்தது.

சோதனை.
ஓர் இண்டு இடுக்கு விடாமல், அப்படியொரு சோதனை போட்டார்கள். அராஃபத்தின் வீட்டிலிருந்த அத்தனை ஆவணங்களையும், கடிதங்களையும், கணக்கு வழக்கு நோட்டுப்புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டு அராஃபத் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.

அவருக்கு மிக நெருக்கமான ஒன்றிரண்டு சகாக்கள் மட்டுமே அருகே இருக்க, அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசித் தொடர்புகள் மறுக்கப்பட்டன. தொலைக்காட்சி, வானொலி போன்ற சாதனங்கள் பயன்படுத்துவதையும் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

அராஃபத்தால் எதுவுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. என்னென்ன ஆவணங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள், எதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள், எது சாதாரணம் என்று கருதப்பட்டது? எதுவுமே அவருக்குத் தெரியாது.

ஓர் அறையில் அவர் இருக்க அனுமதிக்கப்பட்டார். அந்த அறைக்குள்ளேயே பாத்ரூம் இருந்ததால் வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்பட்டது. அப்படியே வருவதென்றாலும், கூடவே இரண்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி ஏந்தி வருவார்கள்.

அதிகபட்சம் தன்னுடைய வீட்டின் பிற அறைகளுக்கு அவரால் போக முடியும். அவ்வளவுதான். மொட்டை மாடிக்குக்கூடப் போகக்கூடாது என்று தடைவிதித்திருந்தார்கள்.

இதைத்தான் வீட்டுச்சிறை என்பார்கள்.

ஓர் அரசியல் தலைவருக்குத் தரவேண்டிய மரியாதையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், மரியாதை ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றும் சாதிக்க முடியாது என்கிற நிலைமை.

இந்தச் சோதனை, சில வாரங்கள் நீடித்தன. (மூன்று மாதங்கள் வரை சோதனை நடந்தது என்றும் சில கருத்துகள் இருக்கின்றன. கால அளவில் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை.)

சோதனையை முடித்துவிட்டு, கிடைத்த விவரங்களை அங்கிருந்தபடியே ராணுவத்தினர் டெல் அவிவுக்கு அனுப்பினார்கள். அதன் அடிப்படையில், 2002-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இஸ்ரேல் அரசு ஓர் அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், போராளி இயக்கங்களுக்குப் போதிய நிதி உதவி அளிக்க, அராஃபத் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த அனுமதிக் கடிதம் ஒன்று, சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதார நகலையும் இஸ்ரேல் அரசு வெளியிட்டது. இது தவிரவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இது, சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய அறிக்கை என்று கருதிய அரபு லீக், அவசர அவசரமாக ஓர் அமைதி ஒப்பந்தத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது.

ஆறுநாள் யுத்தத்தின் போது, கைது செய்த பாலஸ்தீன் முஸ்லிம்களை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும். அராஃபத்தின் பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்பை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். தொடர்ந்து அரேபியர்களின் ஆட்சி, மேற்குக் கரை மற்றும் காஸாவில் நடைபெறத் தடை சொல்லக்கூடாது. பதிலுக்கு அரபு லீக், இஸ்ரேல் என்னும் தேசத்தை, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும்.

இன்றுவரையிலுமே கூட இஸ்ரேலை, எந்த ஓர் அரபு தேசமும் அங்கீகரிக்கவில்லை என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

அன்றைய சூழ்நிலையில், அவர்களுக்கு அப்படியொரு நிர்ப்பந்தம் இருந்தது.

அராஃபத்தை ஒரு பொய்யர் என்று நிறுவுவதற்குத் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் இஸ்ரேல் எடுத்துக்கொண்டிருந்தது.

அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அறிவித்த ஆவணங்கள் கூட, இஸ்ரேலிய உளவு அமைப்பே உருவாக்கியிருக்கக்கூடிய போலி ஆவணங்கள்தான் என்றுகூடப் பேசினார்கள். என்னென்னவோ சொல்லிப்பார்த்தார்கள், செய்து பார்த்தார்கள்.

இஸ்ரேல் கேட்பதாகவே இல்லை. அராஃபத் தொடர்ந்து வீட்டுச்சிறையில்தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலைமை உருவானது.

அதேசமயம், அவர் அதுநாள் வரை இழந்திருந்த மக்கள் செல்வாக்கு என்னும் மதிப்புமிக்க பீடம், மீண்டும் அவருக்குக் கிடைக்கத் தொடங்கியது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 செப்டம்பர், 2005
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)

(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: