91] ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 91
ஜார்ஜ் புஷ்ஷின் 'ரோட் மேப்' வருணித்த முதல் கட்ட அமைதி முயற்சிகள் பற்றிப் பார்த்தோம். இதன் இரண்டாம் கட்டத் திட்டங்கள், அதிகாரபூர்வமாக பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்குவதற்கான, முதல்கட்ட நடவடிக்கைகள் பற்றிச் சொல்லுகின்றன.
இது விஷயத்தில் பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் பொறுப்புகள் இவை:வலுவான, கட்டுக்கோப்பு குலையாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
அசம்பாவிதங்கள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. இஸ்ரேல் அரசுடன் முழுமையான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும். இது சாத்தியமாகிற பட்சத்தில், பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரபு அமைப்புகள், கட்சிகள், அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒப்புதலுடன், புதிய ஜனநாயக அரசுக்கான அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஒழுங்கான, வலுமிக்க கேபினட் ஒன்று நிறுவப்படவேண்டும்.
தாற்காலிக எல்லைகளுடன் கூடிய, பாலஸ்தீன் குடியரசு இதன்பின் நிறுவப்படும்.இஸ்ரேல் அரசுக்கு உள்ள பொறுப்புகள்:அண்டை நாடாக அமையவிருக்கும் பாலஸ்தீனுடன், அதிகபட்ச நல்லுறவுக்காக, இதற்கு முன் வரையப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களையும் மதித்து நடக்க வேண்டும்.
பாலஸ்தீன் உருவாவதற்குத் தேவையான, அத்தனை முன் முயற்சிகளை எடுப்பதிலும் ஒத்துழைக்க வேண்டும்.பிற தேசங்களுக்கு உள்ள பொறுப்புகள்: தாற்காலிக எல்லைகளுடன் அமையவிருக்கும் புதிய தேசமான பாலஸ்தீனில், பொதுத்தேர்தல் நடைபெற்ற பிறகு, பாலஸ்தீன் விஷயமாகப் பேசுவதற்கென ஒரு சர்வதேச மாநாடு கூட்டப்படவேண்டும்.
அதில், புதிய தேசத்துக்கான நிதி ஆதாரங்களை வகுத்தளிக்க வேண்டும். அண்டை நாடுகள், பிற தேசங்கள் யாவும் பாலஸ்தீனுக்கு நிதியுதவி அளிக்க முன்வரவேண்டும்.
அரபு தேசங்கள் யாவும் இண்டிஃபதாவுக்கு முன்னர் இஸ்ரேலுடன் எத்தகைய உறவு வைத்திருந்தனவோ, அந்தப் பழைய உறவைத் தொடரவேண்டும்.குடிநீர், சுற்றுச்சூழல், பொருளாதார மேம்பாடு, அகதிகள் பிரச்னை, ஆயுதக் கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில், பல்வேறு அதிகார மட்டங்களில் (multilateral engagement) பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு காணப்பட வேண்டும்.
இந்த இரண்டு கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு, மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது கட்டம் – பாலஸ்தீனை நிரந்தரமாக அங்கீகரித்தல். இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு:.பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்புகள்:நிரந்தரத் தீர்வுக்குத் தன்னளவிலான ஆயத்தங்களை முழுமையாகச் செய்துவிட வேண்டும்.
மிக வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பாலஸ்தீன் அத்தாரிடி, இஸ்ரேல் அரசு இரண்டும் செய்யவேண்டியவை:கி.பி. 2005_ல் நிரந்தரத் தீர்வு என்கிற இலக்கை முன்வைத்து, பாலஸ்தீன் அகதிகள் விஷயத்தில், சாத்தியமுள்ள தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜெருசலேம் விஷயத்தில், அரசியல் மற்றும் சமய ரீதியில் சிக்கல்கள் ஏதும் வராமல், ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுக்க முன்வரவேண்டும்.இஸ்ரேல், பாலஸ்தீன் இரண்டும் பிரச்னையின்றி, யுத்தங்களின்றி அமைதியுடன் தத்தம் வழிகளைப் பார்த்துக்கொள்ள, உத்தரவாதம் வழங்கவேண்டும்.
சர்வதேசப் பங்களிப்பு:2004_ம் ஆண்டு இரண்டாவது கூட்டு மாநாடு நடத்தப்படும். தாற்காலிக எல்லைகளுடன் நிறுவப்படும் பாலஸ்தீன் குடியரசுக்கு, அப்போது அனைத்து தேசங்களும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
2005_ம் ஆண்டு நிரந்தர அமைதி என்கிற இலக்கை நோக்கி, அனைத்து தேசங்களும் தம்மாலான உதவிகளை வழங்கி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வழி செய்யவேண்டும்.இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், மத்தியக் கிழக்குத் தேசங்கள் அனைத்துக்கும் உவப்பானதாக, அங்குள்ள மற்ற பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு அமைவதாக இருக்க வேண்டும்.
அரபு தேசங்கள், முழு மனத்துடன் இஸ்ரேலை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.இதுதான் ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'பின் ஒரு வரிச் சுருக்கங்கள்.
இது, எந்த வகையில் இதற்கு முந்தைய அமைதித் திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது? அல்லது உண்மையிலேயே இது வேறுபட்டுத்தான் இருக்கிறதா?
1979_ல் கேம்ப் டேவிடில் ஒரு பேச்சுவார்த்தை நடந்து ஒரு திட்டம் தீட்டப்பட்டது.
பிறகு, 1991_ல் மேட்ரிடில் ஓர் அமைதி ஏற்பாடு. 1993_ல் ஓஸ்லோ உடன்படிக்கை. அதற்குப் பிறகு மிட்ஷல் ரிப்போர்ட். அதன்பின் டெனட் ப்ளான். அப்புறம் மீண்டும் கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை, க்ளிண்டன் முன்னின்று நடத்தியது.
இத்தனைக்குப் பிறகு வந்திருக்கும் இந்த ஜார்ஜ் புஷ்ஷின் திட்டத்தின் சிறப்பு என்ன?
முதலாவது, பாலஸ்தீன் என்கிற தனியொரு தேசம் அமைவது குறித்து, முதல் முதலில் ஆதரவும் அங்கீகாரமும் தெரிவித்து வரையப்பட்ட திட்டம் இதுதான்.
இதற்கு முன் வரையப்பட்ட எந்த ஒரு திட்டமும் ஓஸ்லோ உடன்படிக்கை உள்பட, சுதந்திர பாலஸ்தீன் குறித்துச் சிந்திக்கவே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்தது, பாலஸ்தீன் தரப்பில் தீவிரவாதத் தடுப்பு குறித்து வன்மையாக வலியுறுத்தும் அதே சமயம், இஸ்ரேல் ராணுவத்தினரின் அத்துமீறல்களையும் குறிப்பிட்டு, அவற்றையும் நிறுத்தச் சொல்வது; மார்ச் 2001_க்குப் பிறகான யூதக் குடியேற்றங்களை வாபஸ் பெறச் சொல்வது போன்ற அம்சங்கள் கவனிக்கத் தக்கவை.
இதற்கு முன் திட்டம் தீட்டிய அத்தனை பேரும், பாலஸ்தீனுக்குச் சில லாபங்கள் பிச்சையாகக் கிடைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் கவனமாயிருக்க, இந்த 'ரோட்மேப்' மட்டும்தான் பாலஸ்தீன், இஸ்ரேல் என்கிற இரு தேசங்களை சம அந்தஸ்தில் வைத்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், பிரச்னையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தன்னுடைய மத்தியஸ்தமாக மட்டும் அல்லாமல், சர்வதேச மாநாடுகள் நடத்தி, முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க அழைப்பதன் மூலம், அனைத்துத் தேசங்களுக்கும் இதில் பொறுப்பும் கவனமும் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும் இது அமைந்திருக்கிறது.
அதே சமயம், இதில் சில குறைகளும் இல்லாமல் இல்லை.
உதாரணமாக, குடியேற்றங்களை நீக்குவது, ராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற இஸ்ரேல் செய்யவேண்டிய காரியங்களாக, அமெரிக்கா முன்வைக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமான பிரச்னைகள்.
இவற்றை இஸ்ரேல் சரியாகச் செய்கிறதா அல்லது செய்யுமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. 'செய்யவேண்டும்' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சரியாகச் செய்கிறார்களா என்று கண்காணிக்க எந்த அமைப்புக்கோ, நிறுவனத்துக்கோ பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
சர்வதேச மாநாடுகள் கூட்டப்பட்டு விவாதிக்க வேண்டிய விஷயங்கள் என்று சுட்டிக்காட்டப்படுபவை அனைத்தும், பாலஸ்தீன் பிரச்னை தொடர்பானவை. இஸ்ரேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு மேற்பார்வை கிடையாது என்பது, மிகவும் அபாயகரமானது.
இது நிச்சயம் பாலஸ்தீன் அத்தாரிடியினருக்கு அதிருப்தி தரக்கூடியது.
இரண்டாவது பிரச்னை, ஜெருசலேம் தொடர்பானது. இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேரே ஜெருசலேமில்தான் இருக்கிறது. இருதரப்பு அரசியல் ஒரு பக்கம் இருக்க, அடிப்படையில் அது மக்களின் மத உணர்வு தொடர்பான விஷயம்.
அரேபியர்களும் சரி; யூதர்களும் சரி. தங்களது வழிபாட்டு உரிமைகளையோ, வழிபாட்டுத் தலம் தொடர்பான உரிமையையோ விட்டுக்கொடுக்க, ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை.
எப்படி அரேபியர்களுக்கு, பைத்துல் முகத்தஸ் வளாகம், முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒரு புனிதத் தலமோ, அதே போல, அந்த இடத்தில்தான் சாலமன் தேவாலயம் இருந்தது என்கிற பல நூற்றாண்டு நம்பிக்கையை, யூதர்களும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அகழ்வாராய்ச்சி, ஆதாரச் சேகரிப்பு, சரித்திர நியாயங்கள், சமகால நியாயங்கள் எல்லாமே முக்கியம்தான். ஆனால், மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் எந்தவிதமான நடவடிக்கையும், தோல்வியில்தான் முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் அது.
அப்படிப்பட்ட எரியும் பிரச்னையில், திடமான தீர்வு எதையும் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம் முன்வைக்கவில்லை.
மாறாக, இரு தேசங்களும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று சொல்வது, அர்த்தமே இல்லாத விஷயம்.
என்ன பேசினாலும், இரு தரப்பினரும் எதையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஒரே தேசத்தில் இருந்தபடி அடித்துக்கொள்பவர்கள், பாலஸ்தீன் உருவானபிறகு, அண்டை தேசச் சண்டையாக இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதுதான் உண்மை.
மூன்றாவது சிக்கல், தீவிரவாத ஒழிப்பு தொடர்பானது. இது ஒரு கற்பனைவாத அணுகுமுறை. குறைந்தபட்சம் பாலஸ்தீனைப் பொறுத்தவரையிலாவது. பாலஸ்தீன் அத்தாரிடிதான், பாலஸ்தீன் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் முகம் என்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டாலும் ஒரு ஹமாஸையோ, இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பையோ, அல் ஃபத்தாவையோ நிராகரித்துவிட்டு,
எந்தவிதமான அரசியல் தீர்வுகளையும் பாலஸ்தீனில் செயல்படுத்துவது சாத்தியமில்லை. முன்பே பார்த்தது போல, மேற்கத்திய நாடுகளின் பார்வையில், இவை தீவிரவாத இயக்கங்களாக இருப்பினும் பாலஸ்தீன் மக்களின் பார்வையில், இவை போராளி இயக்கங்கள் மட்டுமே. போராளி இயக்கத்துக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் பெயரளவில் தொடங்கி, சித்தாந்த அடிப்படை வரை நூற்றுக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு.
ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளும், பாலஸ்தீனின் விடுதலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றன. தற்போது, அரசியல் முகம் பெற்றுவிட்ட பாலஸ்தீன் அத்தாரிடியினரும் ஒரு காலத்தில் இவர்களுடன் இணைந்துதான் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.
பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் ஆதரவாளர்கள் அளவுக்கே அங்கே ஹமாஸூக்கும் ஆதரவாளர்கள் உண்டு.இப்படிப்பட்ட சூழலில், தீவிரவாத ஒழிப்பை, பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்பாகத் திணித்து, மேற்சொன்ன இயக்கங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்வதென்பது, மிகப்பெரிய விபரீதத்துக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தவிரவும், உண்மையைச் சொல்வதென்றால், ராணுவ ரீதியில் பாலஸ்தீன் அத்தாரிடியைக் காட்டிலும், இந்தப் போராளி இயக்கங்கள் வலுவானவை. பயிற்சிபெற்ற தரமான ராணுவம் இந்த அமைப்புகளுக்கு உண்டு.தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் பாலஸ்தீன் அத்தாரிடி, இவர்கள் மீது போர் தொடுக்குமானால், ஒரே இனத்தவர் தமக்குள் அடித்துக்கொண்டு மாள்வதாகப் போய் முடியும்.
இந்த விஷயத்தில், பாலஸ்தீன் அத்தாரிடிக்கு அமெரிக்காவோ அல்லது வேறு யாரோ, எந்த வகையில் உதவமுடியும் என்பது பற்றியும் புஷ்ஷின் திட்டத்தில் குறிப்புகள் ஏதுமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இதெல்லாம், இத்திட்டத்தின் வெளிப்படையான குறைகள். ஆனால், இதையெல்லாம் மீறியும் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம் உருப்படியான ஒன்றுதான். காரணம் மிக எளிமையானது.
முன்பே பார்த்ததுபோல், வேறு யாருமே முன்வைக்காத, சுதந்திர பாலஸ்தீன் என்கிற, நூற்றாண்டுகாலக் கனவுக்கு இது ஒரு கதவு திறக்கிறதல்லவா?நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 அக்டோபர், 2005
92] பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 92
இரு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட்டு, அமைதிக்கான முயற்சி மேற்கொள்வதில், சில எதிர்பாராத சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால், அதைப் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். ஒரே தேசத்துக்குள் இரு தரப்பினர் இடையே பிரச்னை என்று வரும்போது, மூன்றாமவர் தலையிடுவது, சிக்கலை அதிகமாக்கியே தீரும் என்பதற்குச் சரித்திரம் நெடுக ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
நமக்கு நன்கு தெரிந்த இலங்கையை ஒப்புநோக்கி இதை அணுகினால் எளிமையாகப் புரியும்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் தனி நாடு கேட்கிறார்கள். ஒரு காலத்தில் அங்கே தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். பின்னால் சிங்களப் பெரும்பான்மையினரின் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்க முடியாமல், தமிழர்கள் அடங்கிப்போக வேண்டிவந்தது.
அடக்குமுறை மிகவும் அதிகரித்தது. தமிழர் பகுதிகளில் குடியேற்றங்களை நிறுவி, அச்சமூட்டினார்கள். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன.
ஆகவே, அவர்கள் பொங்கி எழுந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள். முதலில் அமைதிப் போராட்டம்; பிறகு ஆயுதப் போராட்டம். இன்று வரை இது தொடர்கிறது.
போராட்டம், சமாளிக்க முடியாத நிலைக்குப் போகும்போது, போர் நிறுத்தத்துக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.
அமைதிப் பேச்சு என்கிறார்கள். கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு மீண்டும் போர் தொடங்கிவிடுகிறார்கள்.
இது, காலம் காலமாகத் தொடர்ந்து அங்கே நடந்து வருகிறது. இடையில் இரு தரப்புக்கும் உகந்த அமைதித்திட்டத்தை வகுத்தளிக்க, நார்வே முன்வந்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆனால் என்ன பிரயோஜனம்?
இப்போது பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இலங்கை அரசியல்வாதிகள், ஓட்டுக்காக அமைதி முயற்சிகளை வேரோடு பிடுங்கி எறியத் தயாராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களுக்குத் தனி நாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற அர்த்தத்தில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்.
நார்வே என்ன செய்யும்? தமிழர்கள்தான் என்ன செய்வார்கள்? ராஜபக்ஷேதான் அங்கே இப்போது ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளர். தேர்தலில் ஜெயிப்பது ஒன்றுதான் அவரது நோக்கம். தமிழர்களைப் பற்றி அவருக்கு என்ன கவலை?
அல்லது பிரச்னை உடனே தீர்ந்தாக வேண்டும் என்பதுதான் என்ன கட்டாயம்? எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் ஜெயிக்க வேண்டும். அவ்வளவுதான்.புரிகிறதல்லவா?
இதுதான் பாலஸ்தீன் விஷயத்திலும் நடந்தது. இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மை மக்கள்; தமிழர்கள் சிறுபான்மையினர். அவர்கள் உரிமைக்குப் போராடுகிறார்கள்.
பாலஸ்தீனில் இன்னும் மோசமான நிலைமை.
அங்கே பெரும்பான்மையினராக இருந்த அரேபியர்களை அடித்துத் துரத்தி, மத்தியக்கிழக்கு முழுவதும் அகதிகளாக அலையவிட்டு, யூதர்கள் நாட்டைக் கைப்பற்றி, இஸ்ரேல் என்று பெயரை மாற்றி, உலகெங்கிலும் வசிக்கும் யூதர்களை வரவழைத்து, தாங்கள் தான் பெரும்பான்மையினர் என்று கணக்குக் காட்டிவிட்டார்கள்.
இழந்த மண்ணைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் பாலஸ்தீன் முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், முஸ்லிம்களின் இடைவிடாத போராட்டத்துக்கு ஒரு தீர்வு கிடைப்பது போன்ற சூழ்நிலை உருவாவதை, இஸ்ரேல் மக்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?
அல்லது இஸ்ரேல் அரசியல்வாதிகளால்தான் எப்படிப் பிழைத்திருக்க முடியும்?பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும் என்கிற அர்த்தத்தில், அமெரிக்க அதிபர் புஷ் வகுத்த திட்டம், சந்தேகமில்லாமல் ஒரு மைல்கல்.
இதற்குமுன் யாரும் பாலஸ்தீனை ஒரு தனித் தேசமாகக் கருதிப் பேசியதே இல்லை.
தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்குத் தாற்காலிக சந்தோஷமாக, ஓரிரு நகரங்களைத் தந்து ஆளச் சொல்லலாம் என்கிற அளவுக்குத்தான், அவர்களால் சிந்திக்க முடிந்திருக்கிறதே தவிர, மேலை நாடுகள் எதுவும் பாலஸ்தீனைத் தனித் தேசமாக அங்கீகரித்ததில்லை.
அவர்களது வரைபடங்களில் பாலஸ்தீன் என்றொரு தேசம் இருக்கவே இருக்காது. (இந்தியா, பாலஸ்தீனை அங்கீகரித்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, பாலஸ்தீன் ஒரு தனி நாடுதான்.)
ஆகவே, அமெரிக்காவே முன்வைத்த திட்டம் என்றாலும் ஏற்பதற்கு யூதர்கள் முரண்டு பிடித்தார்கள்.
தவிரவும் ஜெருசலேம் ஒரு தீர்க்கப்படாத _ தீர்க்கமுடியாத பிரச்னையாக இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனின் சுயராஜ்ஜியத்தை அங்கீகரிப்பது மேலும் மேலும் யுத்தத்துக்குத்தான் வழி வகுக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.
இதன் விளைவு, அமைதிக்கான சாத்தியம் தென்பட்ட அந்த ஆகஸ்ட் மாத (2003) தொடக்கத்திலேயே வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.
ஆறாம்தேதி காலை அன்று செய்தி கேட்டவர்கள் கொஞ்சம் வியப்படைந்தார்கள்.
அமைதி முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக, இஸ்ரேல் சிறையில் வாடும் 300 அரேபியர்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக, ஏரியல் ஷரோன் அறிவித்தார்.
இதெல்லாம் வெறும் கதை; கண்துடைப்பு என்று உடனே போராளிகள் தரப்பில் 'பதில் மரியாதை' தெரிவிக்கப்பட, மேற்குக் கரைப் பகுதி நகரமான ஹெப்ரானில், ஒரு போராளி இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரை, இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றார்கள்.
ஆனாலும் பொறுமை காத்தார், பாலஸ்தீனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த மம்மூத் அப்பாஸ்.
இஸ்ரேல் தரப்பில் 300 கைதிகளை விடுவிப்பதாக அதிபர் தெரிவித்திருந்தார் அல்லவா? அதற்குப் பதிலாக, முன்னர் ஜெருசலேம் நகரில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை போராளிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இது நடந்தது ஆகஸ்ட் 20 அன்று.300 பேரை விடுதலை செய்ய ஷரோன் உத்தரவிட்டது, இஸ்ரேலியர்களுக்குப் பிடிக்கவில்லை; ஜெருசலேம் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட போராளிகளைக் கைது செய்ய அப்பாஸ் உத்தரவிட்டது, பாலஸ்தீனியர்களுக்குப் பிடிக்கவில்லை.
ஆக, இரு தரப்பிலும் மக்களுக்கு உவப்பில்லாத நடவடிக்கைகளைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டி வந்தது.
இந்த அமைதி முயற்சி நீடிக்க வாய்ப்பே இல்லை என்று, அத்தனை பேருமே உதட்டைப் பிதுக்கினார்கள்.
இத்தனைக்கும் அப்பாஸுக்கு உதவி செய்யும் வகையில் ஹமாஸும் அப்போது போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது (45 நாள் போர் நிறுத்தம்).
ஆனால், யார் என்ன முயற்சி செய்தாலும் பலனில்லை என்கிற நிலைமையை நோக்கி மிகத்தீவிரமாக முன்னேற ஆரம்பித்தது
விதி. 21_ம் தேதி ஒரு மூத்த ஹமாஸ் தலைவரை, இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றது.
உடனடியாக ஹமாஸ் அறிவித்திருந்த போர் நிறுத்தம் வாபஸ் பெறப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது.
இஸ்மாயில் அபூ ஷனப் என்கிற அந்த மூத்த தலைவரின் இறுதி ஊர்வலம், மறுநாள் காஸாவில் நடைபெற்றபோது சற்றும் நம்பமுடியாத வகையில், பத்தாயிரம் பேர் அதில் கலந்துகொள்ள வந்து குவிந்துவிட்டார்கள்.
இது இஸ்ரேல் அரசுக்கு மிகுந்த அச்சத்தை விளைவித்தது. போராளிகளுக்கான மக்கள் ஆதரவு சற்றும் குறைவுபடாத நிலையில், அப்பாஸ் அரசு என்ன முயற்சி எடுத்தாலும் அவர்களை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முடியப்போவதில்லை என்று ஏரியல் ஷரோன் நினைத்தார்.
இதை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதுபோல், அடுத்த சில தினங்களில் தேசம் முழுவதும் ஆங்காங்கே, திடீர்ப் படுகொலைகளும் தீவைப்புகளும் கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் நடக்க ஆரம்பித்தன.
அத்தனைக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று ஷரோன் சொன்னார். இஸ்ரேலியத் தரப்பில் ஓர் உயிர்க் கூடப் போயிருக்காத நிலையில், எப்படி நீங்கள் எங்களைக் குறை சொல்லலாம்?
கலவரத்தைத் தூண்டுவதும் தொடங்கிவைப்பதும் யூதர்கள்தான் என்று மம்மூத் அப்பாஸ் குற்றம் சாட்டினார்.
ஆக, மீண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில், அப்பாஸ் பதவி விலக வேண்டும் என்கிற கோஷமும் உடனடியாக எழ ஆரம்பித்துவிட்டது.
அராஃபத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கு அப்பாஸ் பிரதமராக இருப்பதில் துளிக்கூட விருப்பமில்லை.
தங்கள் தலைவரின் முழுச்சம்மதமில்லாமல், அமெரிக்க நிர்ப்பந்தத்தின்பேரில் பிரதமராக்கப்பட்ட ஒருவர், சக போராளி இயக்கத்தவர்களைக் கைது செய்யும் அளவுக்குப் போய்விட்டார் என்றால், அவரை இன்னும் ஆட்சியில் உட்கார வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று, மூலைக்கு மூலை மேடை அமைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அடிப்படையில், அப்பாஸ் கொஞ்சம் சாது. அவருக்கு அரசியல் தெரியுமே தவிர, ஆதரவாளர் பலமெல்லாம் கிடையாது. ஆளச்சொன்னால் ஆள்வார். வீட்டுக்குப் போகச்சொன்னால் போய்விடுவார். அவ்வளவுதான்.
யாசர் அராஃபத்துக்கு, மிகவும் தர்மசங்கடமான நிலைமை அது.
அப்பாஸ் மீது அவருக்குத் தனிப்பட்ட வெறுப்புகள் ஏதும் கிடையாது.
ஆனால், தமது மக்களின் விருப்பத்துக்கு முரணாக, அமெரிக்கா சுட்டிக்காட்டும் வழியில் அவர் ஆட்சி செய்வது, அவருக்குப் பிடிக்கவில்லை.
குறிப்பாக, போராளிகளைக் கைது செய்யும் விஷயத்தை அவர் மிகக் கடுமையாக எதிர்த்தார்.
வெளிப்படையாக அவரால் இதைப் பேசமுடியவில்லையே தவிர, அப்பாஸின் அமைதி நடவடிக்கைகள் நிச்சயம் விபரீத விளைவுகளைத் தான் உண்டாக்கும் என்று அவர் திடமாக நம்பினார்.
அதிபர் என்கிற முறையில், அவரால் அப்பாஸின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்தான். ஆனால், ஒப்பந்தத்தை மீறுவதாக ஆகிவிடும்.
அமெரிக்கத் திட்டம், இஸ்ரேலின் ஒத்துழைப்பை எத்தனை தூரம் நம்பலாம் என்று தெரியாத சூழ்நிலையில், தொடர்ந்து போராளி இயக்கங்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்டு, என்ன மாதிரியான அமைதியை உற்பத்தி செய்துவிடமுடியும் என்று அவர் நினைத்தார்.
ஆகவே, அப்பாஸைக் கூப்பிட்டுத் தமது அதிருப்தியை நாசூக்காகத் தெரிவித்தார்.
அப்பாஸுக்கும் தர்மசங்கடம்தான். பாலஸ்தீனியர்கள் அதுவரை ஒரு 'பிரதமரின்' ஆட்சியைப் பார்த்ததில்லை. அதிபர்தான். சர்வாதிகாரம்தான்.
அராஃபத்தின் ஒற்றை முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர்களுக்குப் பழக்கம். இந்த மாதிரி பிரதமர், அமைச்சர்கள், கேபினட் கூட்டம், வாக்கெடுப்பு வகையறாக்களெல்லாம் அவர்களுக்குப் பழக்கமில்லை.
தவிரவும், அராஃபத்தை ஓரம் கட்டி விட்டு, ஓர் ஆள் அது அப்பாஸாகவே இருக்கட்டும், முடிவுகள் எடுத்துச் செயல்படுத்துவதை மக்கள் முற்றிலும் விரும்பவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
ஆகவே, அராஃபத்தின் கீழே பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு, தாம் பதவி விலகுவதைத் தவிர, வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்தார்.
மாபெரும் தலைவரான அராஃபத்துடன் நிரந்தரக் கசப்புக்கு வழி தேடிக்கொள்ளாமல், நல்லவிதமாக ஒதுங்கிக் கொண்டுவிடுவதே தமக்கு நல்லது என்று நினைத்தார்.அடுத்தது யார்? என்ற கேள்வி வந்தபோது,
அராஃபத்தின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அகமது குரேவைக் கைகாட்டினார்கள்.
ஏற்கெனவே, அராஃபத்தால் தமது அரசியல் வாரிசாக மறைமுகமாக அறிவிக்கப்பட்டவர் அவர். ஆனால், அகமது குரேவை அமெரிக்கா ஏற்குமா என்பது சந்தேகம்.
அவர் அப்பாஸைப் போல மிதவாதி அல்லர். இஸ்ரேலுடன் சமரச முயற்சிகள் மேற்கொள்வதில் எப்போதும் சந்தேகம் உள்ளவர்.
அகமது குரேவுக்குப் பதவியை ஏற்பதில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தமக்கு முழு ஆதரவு அளிப்பதாகச் சொன்னால் மட்டுமே, தம்மால் பதவி ஏற்க முடியும் என்றும், இஸ்ரேல் தனது தொடர் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தினால் மட்டுமே, ஆட்சி செய்யமுடியுமென்றும் ஒரு பேச்சுக்குச் சொல்லிவிட்டு, செப்டம்பரில் பாலஸ்தீன் அத்தாரிட்டியின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவ்வளவுதான். இஸ்ரேல் பழையபடி தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.
மேற்குக் கரைப் பகுதியில் உள்ள தனது யூதக் குடியிருப்புகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, மேற்குக் கரையையே இரண்டாகப் பிரிக்கும் விதத்தில், ஒரு தடுப்புச் சுவர் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
சுவர் எழுப்பும் பணியை ஆரம்பித்த அதே நாள் (செப்டம்பர் 10) காஸாவில், ஒரு ஹமாஸ் தலைவரை ராக்கெட் தாக்குதல் நடத்திக் கொல்ல முயற்சி செய்து தோற்று, அந்த வெறுப்பில் பதினைந்து பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக்கொன்றார்கள்.
முஸ்லிம்கள் மீண்டும் இண்டிஃபதாவைத் தீவிரமாக்குவது பற்றி யோசிக்க ஆரம்பிக்க, ஏரியல் ஷரோன் அம்மாதம் பன்னிரண்டாம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டார்.
'யாசர் அராஃபத் இருக்கும் வரை இங்கே அமைதி சாத்தியமே இல்லை. அவரை நீக்க முடிவு செய்துவிட்டோம்!'' என்பதே அந்த அறிக்கையின் சாரம்.
நீக்குவது என்றால்? பாலஸ்தீனில் இருந்தா, உலகத்திலிருந்தேவா?
ஒட்டுமொத்த முஸ்லிம் உலகத்துக்கும் இந்தக் கேள்விதான் எழுந்தது.
ஏனெனில், இஸ்ரேல் அதன்பிறகு எடுக்க ஆரம்பித்த நடவடிக்கைகள் அப்படிப்பட்டவை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 அக்டோபர், 2005
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)
(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)
(27-28. ) ( 29-30.. )
( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)
(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)
(55-56.) (57-58.) .(59-60.)
(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)
( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).
(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)
(97-98). (99.100.)
No comments:
Post a Comment