Tuesday, March 24, 2009

75.76 ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின் யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா(Intifada).பகுதி 75-76.

உலகிலேயே முதல் முறையாக தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைப் புகுத்தியது ஹமாஸ்தான்.
---------------------------------------------------

75] ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 75

2004-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி தொழுகைக்காக அவர் ஒரு மசூதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தொழுகை முடித்து மசூதியை விட்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டு, அவர் அருகே சரியாக விழுந்து வெடித்து உயிரைக் குடித்தது.

அடுத்த வினாடி பாலஸ்தீன் பற்றி எரியத் தொடங்கியது. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின் கதை அத்துடன் முடிந்தது என்று அத்தனை பேரும் பேசிக்கொண்டார்கள். திட்டமிட்ட அந்தத் தாக்குதலை "சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை" என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும்.

வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர்.

ஷேக் அகமது யாசின், ஹமாஸின் தலைமைப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் தொடங்கவேண்டிய இந்த அத்தியாயத்தை, அவரது மரணத்தில் தொடங்க நேர்ந்தது தற்செயலானதல்ல. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் எந்தக் காலத்திலும் வெளியில் சொல்லாத போராளி அவர்.

யாசின் குறித்து இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் நான்கே நான்குதான். முதலாவது, அவர் அதிகம் பேசமாட்டார். சமயத்தில் பேசவே மாட்டார். இரண்டாவது, ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டியும் ஒரு தம்ளர் பாலும் மட்டும்தான் அவரது உணவாக இருந்தது என்பது. மூன்றாவது, இருட்டில் கூடக் குறிதவறாமல் சுடக்கூடியவர் என்கிற தகவல். நான்காவது தகவல், அவருக்குக் கடைசிக் காலத்தில் கண் பார்வை சரியில்லாமல் போய் மிகவும் அவஸ்தைப்பட்டார் என்பது. இதுதான். இவ்வளவுதான்.

யாசினுக்கு முன்பு ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும் இருந்தார்கள். இவர்தான் முதல் ராணுவத் தலைவர். ஹமாஸை ஒரு சக்திமிக்க தனியார் ராணுவம் போலவே வடிவமைத்ததில் பெரும்பங்கல்ல; முழுப் பங்கே இவருடையதுதான். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் யுத்தத்துக்கு ஒரு சரியான வடிவம் கொடுத்தவர் யாசின்தான்.

ஒரு மாதத்துக்கு இத்தனை இலக்குகள் என்று திட்டம் போட்டுக்கொண்டு, தாக்குதலை நடத்தக் கற்றுக்கொடுத்தவர் அவர். ஒரு குழு ஓரிடத்தில் தாக்குதல் நடத்தப் போனால், அடுத்த குழு அடுத்த இலக்கை நோக்கி அப்போதே பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கும்.

இவ்வாறு ஹமாஸின் அத்தனை போராளிகளையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, தேசமெங்கும் வேறு வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைத்து, தங்கவைத்துத் தயார் செய்ய ஆரம்பித்தார் யாசின்.

எந்தவிதமான சமரசங்களுக்கும் ஹமாஸ் தயாரானதல்ல என்பது முதன் முதலில் இஸ்ரேலிய அரசுக்குப் புரியவந்ததே ஷேக் அகமது யாசின் பொறுப்புக்கு வந்தபிறகுதான்.

ஹமாஸ், மிகத்தீவிரமாக இஸ்ரேலிய மக்களின்மீது தாக்குதல் ஆரம்பித்ததும் அவரது தலைமைக்குப் பிறகுதான்.

அதுவரை ராணுவ இலக்குகள், அரசாங்க இலக்குகள்தான் ஹமாஸின் பிரதான நோக்கமாக இருந்துவந்தது. அதனை மாற்றி, பொதுமக்களும் அரசின் கருத்தை ஏற்று நடந்துகொள்பவர்கள்தானே, ஆகவே இஸ்ரேலிய அரசின் அத்தனை குற்றங்களிலும் அவர்களுக்கும் பங்குண்டு என்று சொன்னவர் அவர்.

பொது இடங்களில் ஹமாஸ் வெடிகுண்டுகளைப் புழக்கத்தில் விடத் தொடங்கியது அப்போதுதான். பஸ்ஸில் வைப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கார் பார்க்கிங்கில் வைப்பார்கள். ரயில்களில் வைப்பார்கள். ஹோட்டல்கள், யூத தேவாலயங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்கள், அரசு விழாக்கள் நடக்கும் இடங்கள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்று எங்கெல்லாம் மக்கள் கூடுவார்களோ அங்கெல்லாம் குண்டுவைக்க ஆரம்பித்தார்கள்.

சித்தாந்தம் என்பது சௌகரியப்படி மாற்றி எழுதிக்கொள்ளத் தக்கது.

அதுவரை பாலஸ்தீன் விடுதலைக்காகப் போராடியபடி, பாலஸ்தீனிய அரேபியர்களின் நலனுக்காகவும் பாடுபட்டுக்கொண்டிருந்த ஹமாஸ், எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதையே தனது பிரதான மான நோக்கமாகக் கொள்ளத் தொடங்கியது.

இதனால்தான் பி.எல்.ஓ. ஓர் அரசியல் முகம் பெற்றதைப் போல ஹமாஸால் இறுதிவரை பெற முடியாமல் போய்விட்டது. எண்பதுகளிலேயே ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கமாக உலகம் பார்க்கத் தொடங்கி விட்டதென்ற போதும், அது அல் கொய்தாவைக் காட்டிலும் பயங்கரமான இயக்கம் என்று கருதப்பட்டது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான்.

உலகிலேயே முதல் முறையாக தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைப் புகுத்தியது ஹமாஸ்தான். இந்தத் திட்டம் ஷேக் அகமது யாசினின் எண்ணத்தில் உதித்தவற்றுள் ஒன்று.

கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்வது, மதத்துக்காக உயிர்த்தியாகம் செய்வது, விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்வது என்கிற புராதனமான சித்தாந்தத்துக்குப் புதுவடிவம் கொடுத்து, தானே ஓர் ஆயுதமாக மாறி எதிரியின் இலக்கைத் தாக்கி அழிப்பது என்கிற கருத்தாக்கத்தை முதன்முதலில் 1989-ல் முன்வைத்தது ஹமாஸ்.

ஹெப்ரான் (Hebron) என்கிற இடத்திலிருந்த இப்ராஹிம் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 29 பேர், ஈவிரக்கமின்றி பரூஷ் கோல்ட்ஸ்டெயின் (Baruch Goldstein) என்கிற வந்தேறி யூதரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க முடிவு செய்தது ஹமாஸ்.

திரும்ப அதேபோல துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்வது எந்தப் பலனும் அளிக்காது என்று ஹமாஸின் உயர்மட்டக் குழுவினர் கருதினார்கள். அப்போது வடிவம் பெற்றதுதான் இந்தத் தற்கொலைத் தாக்குதல் என்கிற உத்தி.

ஒரு தாக்குதல் நடத்த வேண்டும். அது உலகத்தையே குலுக்க வேண்டும்.

இஸ்ரேலிய அரசு பதறிக்கொண்டு அலறியோட வேண்டும். இப்படியும் செய்வார்களா என்று அச்சம் மேலோங்கவேண்டும்.


அதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் என்று தீர்மானித்த ஹமாஸ், திட்டமிட்டு ஒரு போராளியைத் தயார் செய்து அனுப்பியது. உடலெங்கும் வெடிபொருட்களைக் கட்டிக்கொண்டு போய் நட்டநடு வீதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு சுமார் ஐம்பது யூதர்களையும் கொன்றான் அவன்.

ஹமாஸ் எதிர்பார்த்தபடியே இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்தது.


அத்தனை நாட்டுத் தலைவர்களும் அலறினார்கள். இஸ்ரேல் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனது.

இப்படியுமா கொலைவெறி கொள்வார்கள் என்று பக்கம்பக்கமாக எழுதி மாய்ந்தார்கள். உடனடியாகப் பல்வேறு நாடுகள் ஹமாஸை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவித்தன.

இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு வெளிப்படையாகப் பல தேசங்களில் கிளைகளும் துணை அமைப்புகளும் பயிற்சி முகாம்களும் இருப்பதுபோல ஹமாஸுக்குக் கிடையவே கிடையாது. எங்கே யார் இருக்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது.

1989-லிருந்து 1991- வரை ஹமாஸ் இயக்கத்தினரைப் பற்றித் தகவல் சேகரிக்கவென்றே அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வில் தனியொரு பிரிவு செயல்பட்டது. இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாட்டுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் படாதபாடுபட்டும் அவர்களால் மொத்தம் பதினான்கு பேரைத் தவிர வேறு பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

எந்த ஒரு ஹமாஸ் தலைவரைப் பற்றிய தனி விவரங்களும் கிடைக்கவேயில்லை. "கஷ்டப்பட்டு" அவர்கள் சேகரித்து வெளி உலகுக்கு அறிவித்த அந்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்கள் இதோ:

ஷேக் அகமது யாசின் – மதத்தலைவர், ராணுவத்தலைவர். (இவர் மார்ச் 22, 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.)

டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸி (Dr. Abdul aziz al rantissi யாசின் மறைவுக்குப் பிறகு ஹமாஸின் தலைவரானவர். இவரும் இஸ்ரேல் ராணுவத்தினரால் அதே ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.)

இப்ராஹிம் அல் மகத்மெ (Ibrahim al Makadmeh 2003-ம் ஆண்டு மொஸாட் உளவாளிகளால் கொலை செய்யப்பட்டவர்.)

மெஹ்மூத் அல் ஸாஹர் (Mahmoud al Zahar அரசியல் பிரிவுத் தலைவர்)

இஸ்மாயில் ஹனியா (Ismail Haniya பெரும்பண்டிதர். அரசியல் ஆலோசகர்.)

சயீது அ'சியாம் (Said a' Siyam - அரசியல் பிரிவின் மூத்த செயலாளர்.)

ஸலா ஸாஹேத் (Salah Sahed ஹமாஸின் ராணுவத் தளபதி. 2002-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.)

மொஹம்மத் டெயிஃப் (Mohammed Deif – ராணுவத் தளபதி.)

அட்னல் அல் கௌல் (Adnal al Ghoul வெடிபொருள் நிபுணர். ராக்கெட் லாஞ்ச்சர் பிரயோகத்தில் விற்பன்னர்.)

மொஹம்மத் தாஹா (Mohammed Taha ஹமாஸைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். மார்க்க அறிஞர். 2003-ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றுவரை சிறையில் இருக்கிறார்.)

யாஹியா அயாஷ் (Yahya Ayyash வெடிகுண்டுகள் தயாரிக்கும் விஞ்ஞானி.)

காலித் மஷால் (Khaled Mashal டெமஸ்கஸில் வசிக்கும் ஹமாஸ் தலைவர். செப்டம்பர் 2004-க்குப் பிறகு ஈரானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.)

மூசா அபு மர்ஸுக் (Mousa Abu marzuk சிரியாவில் இருக்கிறார்.)

ஷேக் கலில் (Sheikh Khalil – 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இவர், மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்று வருணிக்கப்பட்டவர்.)

எந்த விவரமும் கண்டுபிடிக்க முடியாத இவர்களில் சிலரை இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கொன்றது என்பது மிக முக்கியமான விஷயம்.

ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் அந்த இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராகத்தான் இருப்பார். அவரது ராணுவத் தகுதிகளெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான்.

அப்படி சமய ஈடுபாடு மிக்க ஒருவர் மசூதிக்குப் போய் தொழுகை நடத்துவதிலிருந்து ஒரு நாளும் தவற மாட்டார்.

இதை கவனத்தில் கொண்ட இஸ்ரேல், காஸா பகுதியில் உள்ள அத்தனை மசூதிகளைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை எப்போதும் நிறுத்திவைக்கும். இந்த ஒற்றர்கள், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றப் பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை ஓரிடத்தில் பணியில் இருக்கும் ஒற்றர், அடுத்த ஒரு மாத காலத்துக்கு அந்த இடத்துக்கு வரமாட்டார். அத்தனை கவனம்!

இப்படிப் பணியில் நிறுத்தப்படும் ஒற்றருக்கு ஒரே ஒரு கட்டளைதான். ஹமாஸ் தலைவர் எப்போது எந்த மசூதிக்கு வருகிறார் என்று பார்த்துச் சொல்லவேண்டும். அவர் தினசரி வருகிறாரா, வாரம் ஒரு முறை வருகிறாரா, அல்லது ஏதாவது விசேஷ தினங்களில் மட்டும் வருகிறாரா என்று காத்திருந்து சரியாகப் பார்த்துச் சொல்லவேண்டும்.

தகவல் சரிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கியிருந்து ராக்கெட் வெடிகுண்டு மூலம் கொன்றுவிடலாம் என்று யோசனை சொன்னது மொஸாட்.

இப்படித்தான் ஷேக் அகமது யாசின் படுகொலை செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மசூதிக்கு வருபவர் அவர் என்பது, இஸ்ரேல் ராணுவத்துக்கு சௌகரியமாகப் போய்விட்டது. அவர் உள்ளே போகும் நேரம், வெளியே வந்து நாற்காலியிலிருந்து இறங்கி வண்டியில் ஏறுவதற்கு ஆகும் கால அவகாசம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கவனித்து, சரியாக அடித்தார்கள். யாசின் இறந்து போனார்.

யாசின் இறந்தபோது, கோபத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் முழுவதும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். எங்கு பார்த்தாலும் குண்டு வெடித்தது. பஸ்கள் எரிந்தன. மக்களின் அலறல் ஓசை பத்து நாட்கள் வரை ஓயவே இல்லை. புதிய தலைவரான டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸியின் வழிகாட்டுதலில், இயக்கம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்கள்.

உடனே மொஸாட் விழித்துக்கொண்டது. ஓஹோ, உங்கள் புதிய தலைவர் இவர்தானா என்று அவருக்கு அடுத்தபடியாகக் கட்டம் கட்டினார்கள். அதேபோல ஒளிந்திருந்து தாக்கி அவரையும் கொன்றார்கள். ஒரே வருடத்தில் இரண்டு தலைவர்களைப் பறிகொடுத்த ஹமாஸ், செய்வதறியாமல் திகைத்தது.

ஹமாஸ் தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தபோதுதான், விஷயத்தை மோப்பம் பிடித்த ஹமாஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சிரியாவில் வசிப்பவருமான காலித் மஷால், அவசர அவசரமாக "தலைவரை ரகசியமாகத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் யார் தலைவர் என்பதை வெளியே சொல்லாதீர்கள்" என்று இயக்கத்தினருக்கு ரகசியச் சுற்றறிக்கை அனுப்பினார்.

சற்றே நிதானத்துக்கு வந்த ஹமாஸ், அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தங்களது தலைவர் யாரென்பதை அறிவிப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டது.

ஆனாலும் சீனியாரிடி அடிப்படையில் மெஹ்மூத் அல் ஸாஹர்தான் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னது மொஸாட். துணைத்தலைவராக இஸ்மாயில் ஹனியாவும் அவருக்கு அடுத்தபடியாக சயீது அ'சியாமும் இருப்பார்கள் என்றும் சொல்லி, வைத்த குறிக்காக இன்னும் வலைவிரித்திருக்கிறார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 ஆகஸ்ட், 2005

76] யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா (Intifada)
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 76

ஷேக் அகமது யாசினின் தலைமையில் ஹமாஸ் தனது சமூகப் பணி முகத்தைக் கிட்டத்தட்ட கழற்றிவைத்துவிட்டு, முழுநேர குண்டுவெடிப்பு இயக்கமாக உருமாறத் தொடங்கிய அதே சமயத்தில், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பி.எல்.ஓவுடன் பொதுமக்களும் கைகோக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தயார் செய்துகொண்டிருந்தார்.

கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் செய்யும் திட்டம் ஏதும் அப்போது அவருக்கு இல்லை. மாறாக கத்திக்கு பதில் கல்லும் துப்பாக்கிக்குப் பதில் தீக்குச்சியும் ஆயுதமாகலாம் என்று முடிவு செய்தார்.

மேலோட்டமான பார்வையில் வெறும் மக்கள் எழுச்சி; நீதி கேட்டு நெடும்பயணம் என்பது போலத்தான் தெரியும்.

எப்படியும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குவதற்கு வரும். பதில் தாக்குதலுக்குத் துப்பாக்கி எடுக்காமல் கற்களைக்கொண்டு தற்காப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்.

இது மக்கள் மத்தியில் இன்னமும் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுத்தரக் கூடும். மேலும், பாலஸ்தீன் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கரத்தில் மட்டும் இல்லை என்று அராஃபத் நினைத்தார். இயக்கம் முன்னின்று போராடும். ஆனால், பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் திட்டம் வெற்றி யடையமுடியும் என்பது அவரது கருத்து.

இந்த எண்ணத்தின் விளைவாகப் பிறந்ததுதான் இண்டிஃபதா (Intifada). இந்த அரபுச் சொல்லுக்கு எழுச்சி, உலுக்கிப் பார்த்தல், பொங்கியெழுதல் என்று பலவிதமாகத் தமிழில் அர்த்தம் சொல்லலாம்.

இஸ்ரேல் அரசையும் ராணுவத்தையும் உலுக்குவதுதான் அராஃபத்தின் நோக்கம்.

பி.எல்.ஓ. அதனைச் செய்யாமல், பொதுமக்களை முன்னிறுத்திச் செய்யலாம் என்கிற யோசனைதான் முக்கியமானது. உலகம் முழுவதும் "இண்டிஃபதா, இண்டிஃபதா" என்று உச்சரிக்கும் விதத்தில் இந்த எழுச்சி மிகப்பெரிய வெற்றியை அவருக்குத் தேடித்தந்தது.

தோற்றத்தில் இது ஓர் அறப்போராட்டம் போல் இருந்ததால், அராஃபத்தின் எழுச்சி ஊர்வலங்களில் நடைபெறும் கலவரங்களும் கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சுகளும் தீவைப்புச் சம்பவங்களும் சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்குத்தான் அவப்பெயரைத் தேடித்தந்தன.

உண்மையில் அரேபியர்களும் இந்த இண்டிஃபதாவில் ஏராளமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலவரத்தை ஆரம்பித்துவைத்ததே அரேபியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது சமகால சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை.

அராஃபத்தின் எண்ணத்தில் உதித்த இண்டிஃபதா, முதன் முதலில் செயலுக்கு வந்த ஆண்டு 1987. இதற்கு ஒரு வலுவான பின்னணியும் இருந்தது.

அந்த வருடம் அக்டோபர் முதல் தேதி, காஸாவில் ஒரு சம்பவம் நடந்தது.

இஸ்ரேலிய ராணுவம் அன்றைய தினம், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்னும் அமைப்பைச் சேர்ந்த ஏழு போராளிகளைச் சுட்டுக் கொன்றது.

இந்தச் சம்பவத்தால் காஸா முழுவதும் யுத்தத்தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கிய சமயத்தில் ஒரு வந்தேறி யூதர், ஓர் அரபு பள்ளிச் சிறுமியின் பின்புறத்தில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி அவள். சற்றும் எதிர்பாராதவகையில் பின்புறமிருந்து ஒரு குண்டு பாய்ந்து வந்து அவளது இடுப்புப் பகுதியில் வெடிக்க, நடுச்சாலையில் அந்தக் குழந்தை விழுந்து கதறியதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து, நிலைகுலைந்து போய் நின்றார்கள்.

அந்த யூதர், துப்பாக்கியைத் துடைத்து எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு வந்த வழியே போய்விட்டார்.

இந்தச் சம்பவம் காஸாவில் மிகப்பெரிய கலவரத்துக்கான தூபத்தைப் போட்டது. மக்கள் கொதித்து எழுந்தார்கள். போராளிகளோ, கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். அனைத்து யூதக் கடைகள், அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. பேருந்துகள் நடுச்சாலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.

என்ன செய்வதென்று தெரியாமல் இஸ்ரேலிய அரசு விழித்து நின்றது. கலவரத்தை அடக்க, ராணுவத்தை அனுப்பிவைத்தது.

இது இன்னும் பிரச்னையாகிவிட்டது. ராணுவம் வந்துவிட்டது என்பது தெரிந்ததுமே காஸா பகுதியில் வசித்துவந்த மக்கள், கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். கண்மூடித்தனமாகச் சாலைகளை நாசப்படுத்தி, குடிநீர்க் குழாய்களை உடைத்து, சரக்கு லாரிகளின் டாங்குகளில் தீப்பந்தங்களைச் சொருகி, என்னென்ன வகைகளிலெல்லாம் பற்றி எரியச் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்.

காஸாவில் என்ன நடக்கிறது என்பதே சரியாக வெளியே தெரியவரவில்லை. அதனால், ஏராளமான வதந்திகள், புரளிகள் எழத் தொடங்கின. தினசரி பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள், எரிக்க வழியில்லாமல் கடலில் பிணங்கள் வீசப்படுகின்றன என்றெல்லாம் தகவல்கள் வெளிவரத் தொடங்க, சர்வதேச மீடியா பரபரப்படைந்தது.

கலவரம் நடந்தது உண்மை. இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் இருந்தது உண்மை. அதற்கு மேல் ஆயிரக்கணக்கில் படுகொலை என்று சொல்லப்பட்டது எல்லாம் பொய். ஆனால், வதந்திகள் தந்த கோபத்தில் மக்களின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போய் மிகப்பெரிய யுத்தமாக அது உருப்பெறத் தொடங்கியது.

அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் அராஃபத் பயன்படுத்திக்கொண்டார்.

போராட்டம். மக்கள் போராட்டம். அறப்போராட்டம். ஆயுதத்தாக்குதல் வந்தால் மட்டும் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்தலாம் என்று மக்களின் எழுச்சியை ஒருமுகப்படுத்தி, அதற்கு இண்டிஃபதா என்று ஒரு பெயரளித்தார்.

கஸ்டடி மரணங்கள், கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வது, வீடுகளை இடிப்பது, கொடூரமான முறையில் சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது உள்ளிட்ட இஸ்ரேலிய அரசின் அரபு விரோத நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, இவை அனைத்துக்கும் எதிரான போராட்டம் என்று சொல்லித்தான் முதல் இண்டிஃபதா ஆரம்பமானது.

ஆரம்பத்தில், இது அராஃபத்தின் யோசனையே அல்ல; மக்களின் இயல்பான எழுச்சியைத்தான் அராஃபத் தன்னுடைய திட்டம் போல் வடிவம் கொடுத்து நடைபெறச் செய்துவிட்டார் என்று கூடச் செய்திகள் வந்தன.

உண்மையில், மக்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவது பற்றி 1985-லிருந்தே அராஃபத் யோசித்து வந்திருக்கிறார். 1986-ம் வருடம் ஒரு பிரெஞ்சு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இது பற்றி மிக விரிவாகப் பேசவும் செய்திருக்கிறார்.

"பெயர் வாங்கிக்கொள்ளும் ஆர்வமோ, முன்னின்று நடத்துகிறோம் என்கிற கர்வமோ எங்களுக்கு இல்லை. வேண்டியது, பாலஸ்தீனின் விடுதலை. எங்கள் தாயக மக்களின் சுதந்திர சுவாசம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்தப் போராட்டத்தில் பாலஸ்தீனின் ஒவ்வொரு குடிமகனும் எங்களுடன் இணைந்து போராடவேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன்" என்று சொன்னார் அராஃபத்.

பி.எல்.ஓ. போராளிகள் முன்னின்று நடத்திய இந்த இண்டிஃபதாவுக்கு ஹமாஸும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பும் வெளியிலிருந்து ஆதரவு தந்தன.

அதாவது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டிய ஆயுதங்களை அவர்கள் சப்ளை செய்தார்கள். கல் வீச்சு என்னும் நடவடிக்கை ஹமாஸுக்குப் பிடிக்கவில்லை.

பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இயக்கத்தின் தலைவர்களோ, "அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டு வீசுகிறார்கள் என்றால் நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளையாவது வீசித்தான் ஆகவேண்டும்" என்று சொல்லி, கேட்டாலும் கேட்காவிட்டாலும் வீடுதோறும் தமது போராளிகளை அனுப்பி தினசரி ஒரு வீட்டுக்கு ஒரு நாட்டு வெடிகுண்டு என்று சப்ளை செய்துவிட்டு வர ஏற்பாடு செய்தார்கள்.

இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது. விளைவாக, இண்டிஃபதா என்பது ஒரு அறப்போராட்டமாக அல்லாமல், திட்டமிட்ட கலவரமாகப் பரிமாணம் பெற்றது.

இதையெல்லாம் கவனித்துச் சரி செய்யவோ, எது நியாயம், எது அநியாயம் என்றெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் ஆராய்ச்சி செய்யவோ யாருக்கும் விருப்பமோ, அவகாசமோ இருக்கவில்லை.

பொழுது விடிந்தால் குண்டு வெடிக்கும். கட்டடங்களும் பேருந்துகளும் பற்றி எரியும். ஒரு பக்கம் கொடி பிடித்து ஊர்வலம் போவார்கள். கோஷங்கள் விண்ணை முட்டும்.

இஸ்ரேலிய காவல்துறையோ, ராணுவமோ, துணை ராணுவப் படையோ தடுப்பதற்கு எதிரே வந்தால் உடனே கல்வீச்சு ஆரம்பமாகும். ஒரு டிராக்டரில் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஊர்வலத்தின் கூடவே ஓட்டிவருவார்கள். இஸ்ரேலிய போலீஸ் கண்ணில் பட்டவுடன் ஊர்வலம் கலவரமாகிவிடும். கற்கள் வானில் பறக்கும். பதிலுக்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பாயும். ரத்தமும் தண்ணீரும் சேறும் சகதியுமாக சில நிமிடங்களில் சாலையே ஒரு போர்க்களமாகக் காட்சியளிக்கும்.

இண்டிஃபதா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மக்களை ஒரே நோக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்பதுதான்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, சாதாரண மக்கள் அத்தனை பேரையும் ஆயுததாரியாக மாற்றும் விதத்தில் இந்த எழுச்சிப் போராட்டம் மாறிப் போய்விட்டது. ஒரு கட்டத்தில் இண்டிஃபதா ஊர்வலங்களின் முன் பகுதியில் குழந்தைகளை நிறுத்தி நடக்கச் சொல்லிவிட்டு மக்கள் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேலிய போலீஸ், தாக்குதல் நடத்தினால் முதலில் பலியாகக் கூடிய சாத்தியம் குழந்தைகளுக்கே இருந்தபடியால், அதனைக் கொண்டு சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு கெட்டபெயர் உண்டாக்கித் தரலாம் என்று போராளி இயக்கங்கள் யோசித்து முடிவு செய்த முட்டாள்தனமான முடிவு இது.

எத்தனையோ குழந்தைகள் இந்த எழுச்சிப் போராட்டக் காலத்தில் இறந்துபோனார்கள். ஆயிரக்கணக்கில் காயமடைந்தார்கள். இரு தரப்பிலும் ரத்தவெறி மேலோங்க, பாலஸ்தீன் முழுவதுமே பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

இதனிடையில் பாலஸ்தீனில் இருந்த மைனாரிடி கிறிஸ்தவர்கள் 1988-ம் ஆண்டு பிரத்தியேகமாக ஓர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். (இது நிஜமாகவே அமைதிப் போராட்டம்தான். ஆயுதங்கள் இல்லாமல் நடந்த போராட்டம்.)

குறிப்பாக, கிறிஸ்தவ வியாபாரிகள்.யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த தொடர் யுத்த நடவடிக்கைகளில் மைனாரிடிகளான கிறிஸ்தவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இஸ்ரேலிய அரசு, தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அத்தனை கிறிஸ்தவ வியாபாரிகளும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை "சிறப்பு வரியாக" அரசுக்குச் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. வழக்கமான வருமான வரி, சொத்துவரி, விற்பனை வரி உள்ளிட்ட அத்தனை வரிகளும் எப்போதும் போல் உண்டு. இது சிறப்பு வரி. எதற்காக? என்றால், அரேபியப் போராளி இயக்கங்களுக்கு எதிராக இஸ்ரேல் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக!

வெறுத்துப் போனார்கள் கிறிஸ்தவர்கள். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பாலஸ்தீனுக்காகவும் நடக்கும் யுத்தத்தில் அப்போது அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் ஜெருசலேம் புனித நகரம்தான். பக்கத்து ஊரான பெத்லஹேமில்தான் இயேசுபிரான் பிறந்திருக்கிறார். பாலஸ்தீனில் எங்கு தொட்டாலும் கிறிஸ்தவர்களுக்கும் ஆயிரம் புராணக் கதைகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இதென்ன அக்கிரமம்? வேறு இரண்டு இனங்கள் மோதிக் கொள்வதற்குத் தாங்கள் எதற்கு வரி செலுத்தி வசதி செய்துதர வேண்டும்?

அதனால்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள். போராட்டம். அறப்போராட்டம். அதாவது கோஷங்களுடன் ஊர்வலம். கோரிக்கைகளுடன் மனுக்கள். உண்ணாவிரதத்துடன் முழுநாள் கூட்டம். கடையடைப்புடன் சமநிலை குலைத்தல்.

ஒரு வகையில் கிறிஸ்தவர்களின் இந்தப் போராட்டம், முஸ்லிம்களின் இண்டிஃபதாவுக்கு ஓர் இலவச இணைப்பு போல் அமைந்துவிட்டது.

பருந்துப் பார்வையில் பாலஸ்தீன் முழுவதுமே ஏதோ ஒரு காரணத்துக்காகப் போராடிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருப்பது போல் தோற்றம் கிடைத்துவிடுகிறதல்லவா? அதுவும் கிறிஸ்தவர்கள் அங்கே மைனாரிடிகள். மைனாரிடிகளின் குரலுக்கு உரிய மதிப்புத் தராதவர்கள் எந்த தேசத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்ரேல் தவறு செய்தது. கிறிஸ்தவர்களின் குரலுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அந்தச் சிறப்பு வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்தது.

இது எரியும் கொள்ளியில் பேரல் பேரலாக பெட்ரோலை ஊற்றியது போலாகிவிட்டது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஆகஸ்ட், 2005

இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

2 comments:

anbarasan said...

MR.VANJOOR,

THESE ARTICLES ARE VERY GOOD.

THANKS FOR YOUR EFFORT

Anonymous said...

thanks for posting